Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் குரலாக ஒலிக்க முற்பட்டுள்ள சர்வதேசத்தை எமது பிரச்சினையினை கையிலெடுக்க வைப்பது உலகத்தமிழரின் ஒன்றுபட்ட பேரெழுச்சியால்தான் சாத்தியமாகும்.ஈழ அதிர்வுகள்

Featured Replies

karunasjeyaa%201.jpg

சேடம் இழுத்த அமெரிக்கத் தீர்மானம்…

தீர்மானத்திற்கு ஆதரவிற்கும் எதிர்ப்பிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஒன்றுதான் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் புலம்புவதிலும் அர்த்தமில்லாமல் இல்லை.

உலகவல்லரசான அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் எப்படியும் வெற்றி பெறும் என்ற நிலையிலும் அபரிமிதமான வெற்றிக்காக அமெரிக்கா பெரும் பிரயத்தனம் செய்து தோற்றுப் போயுள்ளது என்பதுதான் உண்மைநிலையாகும்.

ஏற்கனவே 22நாடுகள் ஆதரவாக ஒப்பமிட்டுக் கொடுத்த நிலையில் நூறிற்கு மேற்பட்ட அதிகாரிகளையும் வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிங்டனையும் முன்னால் அதிபர் ஒருவரையும் களத்தில் இறக்கி தனது வல்லமையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிலைநாட்டுவதற்கு எடுத்த முயற்சிக்கு பெரும் பயன் விளையவில்லை.

இந்தியா ஆதரித்தாலும் அது தான் நினைத்ததை சாதித்து தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்து ஒருகல்லில் தமிழகத்தை திருப்த்திப்படுத்துதல் அமெரிக்காவின் நட்பை வலுப்படுத்துதல் என்ற இரண்டு மாங்காய்களை வீழ்த்தியுள்ளது.

உலக வல்லரசாக வலம்வரும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு 24 நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும் சீனாவின் பின்னால் நின்று தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட 15நாடுகள் எதிர்த்தும் ஆதரிப்பேன் என கடைசிவரை வாக்குறுதி கொடுத்திருந்த மலேசியா உள்ளிட்ட எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்துள்ளது.

அமரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்த நாடுகள் 24 என்றால் தீர்மானத்திற்கு எதிர் நிலைப்பாடு எடுத்த நாடுகள் 23. ஆக உலக வல்லரசு அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் சேடம் இழுத்துள்ளது என்றால் மிகையில்லை.

கருணாநிதியின் புதுப்புழுகும்… ஜெயலலிதாவின் தமிழர் விரோத நிலைப்பாடும்…

karunasjeyaa%202.jpg

சிறிலங்காவிற்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தின் வண்டவாளம் இப்படி இருக்கையில் தங்களால்தான் இந்தியா ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாக கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமிழ்நாடு காங்கிரசு பெருச்சாலிகளும் ஆளாலுக்கு தம்பட்டமடித்துவருகின்றனர்.

ஆளும் அ.தி.மு.க. மீண்டும் ஆளத்துடிக்கும் தி.மு.க. எப்படியும் மீண்டும் தமிழகத்தில் ஒரு சக்தியாக உருவெடுக்க நப்பாசை கொண்டுள்ள காங்கிரசு இவையனைத்தும் தேர்தல் முதலீடாகவே தமிழனத்தின் விடுதலைப் போராட்டத்தையும் இரத்தம்சிந்திய எமது மக்களின் தியாகத்தையும் கருதிவருகின்றதன் வெளிப்பாடுதான் இந்த உரிமைகோரலாகும்.

தமிழினத் துரோகி கருணாநிதி புதுக்கதை புனைந்து புதுக்களம் காண வருகின்றார். தமிழீழம் தனது நிறைவேறாத கனவு… பிரபாகரனது ஆயுதப்போராட்டம் பிழையானது எனச் சொல்வதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை… என பச்சைத் துரோகி கருணாநிதி நீட்டி முழங்கியிருக்கின்றார்.

அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என காத்திருந்த காருணாநிதி உலகத்தமிழினத்தின் தலைவனாக தன்னை நிலைநிறுத்தவே இந்த புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

2009 இல் யுத்த மேகங்கள் வன்னியை சூழ்ந்து நிற்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் என்றோ ஈழத்தமிழர் என்றோ தெரிவிக்காது போரில் ஈடுபடும் மறுதரப்பு என்றும் இலங்கைத் தமிழர் என்றும் வார்த்தைஜால விளையாட்டு காட்டிய கருணாநிதியின் உதடுகள் இன்று தமிழீழம் தனது நிறைவேறாத கனவு என்றும் பிரபாகரனது ஆயதப் போராட்டம் தவறில்லை என்றும் கூறுவது மாபெரும் அயோக்கித்தனமாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இனத்தின் இறுதி வெற்றியினை பெறுவதற்காக நிறைவாகும் வரை மறைவாக இருக்க முடிவெடுத்து மூன்று வருடங்கள் நிறைவடையப் போகும் சூழலில் இன்றுவரை நேரடியான தகவல்கள் எதுவும் உலகிற்கு கிடைக்காது இருப்பதால் தானாக ஒருமுடிவுக்கு வந்த கருணாநிதி தமிழினத் தலைவன் என்ற தனது வாழ்நாள் இலட்சியத்தை நிறைவேற்ற துணிந்துவிட்டதன் வெளிப்பாபடுதான் இந்த புதிய அவதாரம்.

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரப் போவதாக பூச்சாண்டிகாட்டிய அமெரிக்காவும் சரி தமிழினத்தை அழித்தொழித்துவிட்டு நீதி கிடைக்கவும் பெருந்தடையாக இருந்துவரும் இந்தியாவும் தமிழினம் அழியும் போது பதவிகேட்டு டெல்லிக்கு காவடி தூக்கிய கருணாநிதியும் தமிழர்களை கிள்ளுக்கீரையாக கருதிச் செயற்பட்டுவருகையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் அந்த வரிசையில் அணிவகுத்துள்ளமை துர்ப்பாக்கியமாகும்.

இந்திய அரசை ஆளும் காங்கிரசு கட்சியுடன் இணக்கமாக இல்லாது தமிழகத்தை ஆண்டுவரும் ஜெயலலிதாவிற்கு மின்வெட்டு என்ற பூதத்தை ஏவிவிட்டு நெருக்கடிகளை சோனியா அரசு ஏற்படுத்தி வருகையில் அதனை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி மக்களுடன் நிற்கத்தவறி மத்திய அரசின் நெருக்குதலிற்கு பலியாகியுள்ள ஜெயலலிதா தமிழக மக்களின் மனஉணர்வுகளை ஏறிமித்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்கால நலனிற்காக கூடங்குளம் பகுதி மக்கள் உதயகுமார் என்ற மக்கள் போராளியின் தலைமையில் மாபெரும் யாகம் நடாத்தி வரும்நிலையில் மத்திய அரசின் பிரதிநிதி போல் இன்னும் இரண்டு மாதத்தில் கூடங்குளம் அணுஉலை தனது இயக்கத்தை ஆரம்பிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ள ஜெயலலிதாவின் நடவடிக்கையானது கருணாநிதியின் துரோகத்திற்கு சற்றும் குறைவில்லாததாகும்.

முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழியும்போது தனது ஆட்சி அதிகாரத்தை பணயம் வைத்து காக்கத்தவறி கருணாநிதி எவ்வாறு வரலாற்றுத் தவறு இழைத்தாரோ அவ்வாறே தற்போது கூடங்குளம் விடையத்தில் ஜெயலலிதா எடுத்துள்ள முடிவும் இனத்திற்கு எதிரானதாகும்.

அன்று கருணாநிதி அந்தத்தவறை செய்யாது இருந்திருந்தால் இன்று ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் வாய்ப்பே கிடைத்திருக்காது. வாழ்நாள் முதல்வர் என்ற நீங்கா புகழை கருணாநிதிக்கு தமிழினம் வழங்கி கௌரவித்திருக்குமே!

அதேபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் தமிழக மக்களின் நலனிற்காக அறவழியில் போரடிவரும் கூடங்குளம் மக்களிற்கு துணையாக இருந்து செயற்படுவதனைவிடுத்து நெருக்கடி கொடுக்கும் மத்திய அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் இராசதந்திரம் என்று அடித்தட்டு மக்களிற்கு விளங்காத வியாக்கியானங்களை முன்வைத்து செயலாற்றிவரும் செயலலிதாவின் நடவடிக்கை மக்கள்விரோத நிலைப்பாடாகவே அமைந்துள்ளது.

ஆறாவது தடவையாக கருணாநிதிதான் தமிழகத்தின் முதலமைச்சர் என்ற நிலைப்பாடு தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை உறுதியாக இருக்கும்வகையில் அதீத பராக்கிரமத்துடன் ஆட்சி பீடத்தில் வீற்றிருந்த கருணாநிதியையே நிரந்தர ஓய்விற்கு அனுப்பியவர்கள் தமிழக வாக்காளர்கள் என்பதை இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

இனத்துரோகம் உள்ளிட்ட மக்கள் விரோத நிலைப்பாட்டில் ஆட்சிசெய்த கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதாவை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டளவிற்கு ஜெயலலிதாவிற்கு மாற்றாக மீண்டும் கருணாநிதியை அரியனை ஏற்றுவதற்கு தமிழக மக்கள் தயாராக இல்லை என்பதன் வெளிப்பாடுதான் நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள் சுட்டிநிற்கின்றன.

கடந்த ஆட்சிக்காலங்களில் மக்கள் நலன்களை முன்னிறுத்தி நீண்டகால நோக்கில் வளர்ச்சித்திட்டங்களை செயற்படுத்தத் தவறிய கருணாநிதி தலைமையிலான தி.மு.க. இன்றைய முதல்வராக இருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆகிய இரு அரசுகளின் பொறுப்பற்ற ஆட்சியின் பயனாக தமிழ்நாடு என்றுமில்லாத அளவிற்கு நெருக்கடிகளை சந்தித்துவருகின்றது.

இதற்கான பலாபலனை ஆட்சிபீடம் ஏறிய ஜெயலலிதாவிற்கு மக்கள் உடனடியாக வழங்க மறுப்பது மீண்டும் கருணாநிதியின் கையில் நாட்டைக் கொடுத்து சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ள விரும்பாமை என்ற கடந்தகால பட்டறிவே தவிர ஜெயலலிதாவின் மீதான நம்பிக்கை கிடையாது. தொடர்ந்தும் இவ்வாறு இரண்டு திராவிடக்கட்சிகளின் பின்னாலும் தமிழர்கள் அடிமைகளாக அலைந்து திரியமாட்டார்கள்.

“உங்களிற்கு(ஈழத்தமிழர்களிற்கு) அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… இது போன்ற கையறு காலங்கள்தான் தலைவர்களை உருவாக்குகின்றது. தமிழகத்தில் இருந்து அப்படி ஒருவர் இந்தக்காலத்தில் உருவாகலாம்… உங்கள் மத்தியல் இருந்து தலைவர்களை உருவாக்குங்கள்… என நெருப்புத் தமிழன் முத்துக்குமார் எண்ணியது ஈடேறும்காலம் விரைவில் வரும். அப்போது உங்கள் திராவிட மாளிகை உடைபடும். அப்போது தமிழர்களிற்கான தமிழர்களது நலனைப்பற்றி சிந்திக்கும் அரசை அரியனை ஏற்றி தமிழக மக்கள் அழகு சேர்பார்கள். அதுவரைதான் உங்கள் ஆட்டம் எல்லாம்.

உலகத்தமிழினத்தின் ஒன்றுபட்ட பலத்திற்கு கிடைத்த முதல் வெற்றி.

என்னதான் இருந்தாலும் உலகத்தமிழினம் ஒற்றுமையாக நின்றதால் சர்வதேச அரங்கில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரது இருப்புத் தொடர்பான வாதப்பிரதிவாதங்களை அடிப்படையாக வைத்து பிளவுபட்டிருந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமிழினத்தை அழித்த சிங்களத்தை சர்வதேச மன்றத்தில் ஏற்றி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஒற்றைப்புள்ளியில் வேறுபாடுகளை தூரவீசி எறிந்துவிட்டு களமாடி முதல்வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இதுவரை பல்வேறுபட்ட நெருக்குதல்களையும் அடக்குமுறைகளையும் நேரிடையாக தாம் வாழ்ந்துவரும் அரசிடம் இருந்து சந்தித்துவந்த மலேசிய வாழ் தமிழர்கள் முதல்முறையாக கிளர்ந்தெழுந்து அரசின் கொள்கை முடிவை தடம்புரள வைத்து சாதனை படைத்துள்ளனர்.

இருபது இலட்சத்திற்கு அதிகமாக வாழ்ந்துவரும் தமிழர்களது வாக்கு என்பது மலேசிய அரசியலில் மிகமுக்கிய பாத்திரத்தை வகித்துவருகின்றது என்பதையும் அதனை வைத்து அரசிற்கு அச்சத்தை ஏற்படுத்தியதையும் முன்னர் பார்த்திருந்தோம்.

அந்தவகையில் இறுதி நிமிடம்வரை சிங்களத்திற்கு ஆதரவாக இருப்போம் என்று கூறிவந்த மலேசிய அரசாங்கத்தை நடுநிலை வகிக்கும் அளவிற்கு நிலைமாற்றம் அடையச்செய்தது அங்குள்ள தமிழர்களதும் தமிழ் அமைப்புகளினதும் உறுதிமிக்க போராட்டத்தால் கிடைத்த வெற்றியாகும்.

இதுவரை எண்ணற்ற கொடுமைகளிற்கு மலேசியவாழ் தமிழர்கள் உள்ளாகி வந்தபோதிலும் இன்று ஈழத்தில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர இனஅழிப்பிற்கு நீதிகிடைக்க வேண்டும் என்ற இலட்சியத்திற்காகவே தமது வாக்கு என்னும் ஆயுதத்தை பணயமாக வைத்துப் போராடி புதுசரித்திரம் படைத்துள்ளார்கள்.

இவ்வாறே அரசியல் காரணங்கள் இருப்பினும் தமிழகம் வரலாறுகாணாத வகையில் ஒன்றுபட்டு நின்றதால் சோனியா தலைமையிலான இந்திய அரசும் வரலாற்றில் முதல்முறையாக சிங்களத்தை எதிர்த்து வாக்களிக்கும் நிலைக்குத்தள்ள முடிந்தது.

புலம்பெயர் தமிழர்களும் அமைப்புகளும் மலேசியவாழ் தமிழர்களும் அமைப்புகளும் கட்சிகளும் தமிழக மக்களும் கட்சிகளும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழர்களாக ஒன்றுபட்டுப் போராடியதால் சர்வதேச அரங்கில் முதல்முறையாக தமிழர்களின் பிரச்சினையினை கொண்டுசென்று சட்டரீதியாக பதிவுசெய்யும் அரிய வாய்ப்பினை படைக்க முடிந்துள்ளது.

ஆங்காங்கே தமிழர்கள் ஒன்றுபட்டதற்கே இந்தளவு முன்னேற்றம் என்றால் ஒட்டுமொத்த தமிழுலகமும் ஆர்பரித்து நின்றால் தமிழீழத் தனியரசு தன்பாட்டிலே சாத்தியமாகிவிடும். ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட குறைந்தபட்சத் தீர்மானத்தையாவது சிங்கள இனவெறி அரசு ஒருபோதும் நிறைவேற்ற முன்வரப்போவதில்லை.

மாறாக தீவிர சிங்கள இனவாத கட்சிகளையும் இயக்கங்களையும் களத்தில் இறக்கிவிட்டு மேற்குலகத்தை அவமதிக்கும் செயலில் ஏற்கனவே ராசபக்சே அரசு பச்சைக்கொடி காட்டி ஆரம்பித்து விட்டது. வரும் நாட்களில் அது தீவிரம் பெற்று மேலும் சிக்கலுக்குள் சிங்களத்தை தள்ளப்போவது திண்ணம்.

மேற்குலகத்தை எதிர்க்கத் துணிந்த சிங்களம் நேரிடையாக தமது பக்கம் நிற்கத் தவறிய இந்தியாவையும் மிரட்ட ஆரம்பித்துள்ளது. முறையாக சிறிலங்கா மீது பொருளாதாரத்தடையினை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கொண்டுவர வேண்டிய நிலையில் தானே இந்தியப் பொருட்களிற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளது சிறிலங்கா.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு அதிகளவான வரியை விதித்துள்ள சிங்கள அரசு இந்திய அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை இரத்துச் செய்து விரட்டியடிப்பதற்கு சட்ட ஆலோசனைகளை முடுக்கிவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அத்துடன் இந்தியாவில் இருந்து சிறிலங்காவிற்குள் வரும் பயணிகளையும் வியாபாரிகளையும் பரிசோதனை செய்வதற்கு தனியான விசேட பிரிவொன்றை அமைத்து தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டுவந்துள்ளது. மிகின்லங்கா விமானம் மூலம் இந்தியாவில் இருந்து சிறிலங்காவிற்கு வருபவர்கள் மேலதிகமாக எடுத்துச் செல்லும் பொருட்களிற்கான கட்டணத்தை 75 இந்திய ரூபாயில் இருந்து 225 இந்திய ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து எடுத்து வரப்படும் பொருட்களை மட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கின்றது.

உலகத்தலையீட்டின் பின்னரும் தொடரும் தமிழர்களிற்கு எதிரான இனஒடுக்குமுறைத் தாக்குதல்கள்.

உலகத்தால் பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட ஜெனீவா மாநாட்டில் சிறிலங்காவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னரும் சிறிலங்காவில் தமிழர்களிற்கு எதிரான இனவன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

நெடுங்கேணியில் படிப்பு முடித்து திரும்பிக் கொண்டிருந்த 17வயது தமிழ்ச் சிறுமி சிங்கள இராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது முதல் இராணுவ வாகனத்தால் வெவ்வேறு சம்பவத்தில் இரண்டு தமிழர்கள் அடித்துக் கொல்லப்பட்டமை வெள்ளைவான் கும்பலால் சிலர் கடத்தப்பட்டமை வரை தமிழின வன்முறைச் சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றது.

சிங்களர்களான குணரட்ன மற்றும் ஆட்டிகல ஆகியவர்களும் கடத்தப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலிய அரசு தனது தூதரகம் மூலமாக கொடுத்த நெருக்குதல்களை அடுத்து தாம் கைதுசெய்யவில்லை என்று சிறிலங்கா அரசதரப்பினர் சாதித்துவந்த நிலையில் இருவரும் விடுதலை செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றதால் அந்த நாட்டின் தலையீட்டால் கொலைக்கரங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பினை பெற்றுள்ளார்கள். இல்லை என்றால் வாவிகளிலோ குளங்களிலோ பினமாக வீசப்பட்டிருப்பார்கள். சிங்களர்களுக்கே இந்த நிலை என்றால் தமிழர்களது நிலை….!?

மட்டக்களப்பில் மகாத்மா காந்தி பேடன் பவல் ஆகியோரின் சிலைகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியதன் மூலம் இந்திய ஐரோப்பிய நாடுகள் மீதான தமது எதிர்ப்பை சிங்கள இனவெறியர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

வல்லரசுகள் தமது நலன்களின் பின்னால் ஒழிந்து நின்று கொண்டுவரும் தீர்மானங்களும் தலையீடுகளும் சிங்களத்தை மிரட்ட வேண்டுமானால் பயன்படுமே அன்றி தமிழர்களிற்கு எதுவித தீர்வையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பதனையே தொடரும் தமிழர்களிற்கு எதிரான இன ஒடுக்குமுறைச் சம்பவங்கள் நிரூபித்து நிற்கின்றன.

மகிந்த ராசபக்சேவின் இன்றைய இனவெறி அரசானது வலையில் மாட்டிய மீனின் நிலையில் உள்ளது. வலையில் இருந்து தப்பித்துக் கொள்வதாக நினைத்து மேலும் மேலும் வலைக்குள் சிக்குப்படும் மீனின் நிலைக்கு சிங்களம் விரைவில் தள்ளப்படும்.

அவ்வாறான நிலை ஏற்படும் போது தமிழர் தரப்பை சர்வதேசம் விரும்பியோ விரும்பாமலோ முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை சல்யூட் அடித்து வரவேற்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன் என்றால் சிங்களத்தின் மேற்குலகத்திற்கு எதிரான பதிலடி வரும்நாட்களில் மிகக்கொடூரமானதாகவே இருக்கப்போகின்றது.

இந்நிலையில் ஜெனீவாவில் விட்டதை பிடிப்பதற்கோ என்வோ தெரியவில்லை அமெரிக்கா சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் ஒன்றினை செனற்சபையில் சமர்ப்பித்துள்ளது. சரணடைந்த புலிகள் கொல்லப்பட்டது தொடர்பாகவும் பாதுகாப்பு வலையங்களிலும் வைத்திய சாலைகளிலும் இருந்த தமிழ்மக்கள் மீது கனரக ஆயுதங்களையும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தி படுகொலை செய்தமை பற்றியும் தமிழர்கள் வலிந்து காணாமல் போகச்செய்யப்படுகின்றமை தொடர்பாகவும் சிறிலங்கா அரசு சுதந்திரமான விசாரணை பொறிமுறை ஒன்றினை உருவாக்க வலியுறுத்தும் விதமாகவே இந்த தீர்மானம் அமைந்துள்ளது.

சர்வதேசத்தால் இன்று சிங்களத்தின் மீது பிரயோகிக்கப்படும் குற்றச்சாட்டுகள் இதுவரை தமிழர்தரப்பு சிங்களத்தின் மீது சுமத்திவந்த குற்றச்சாட்டுகளாகும். தற்போதுதான் தமிழர்களின் குரலாக சர்வதேசம் ஒலிக்கும் நிலைக்கு வந்துள்ளது.

இந்த அதியுச்ச நிலைக்கு சுதந்திர தமிழீழத்திற்காக வீரச்சாவடைந்த நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது ஒப்பற்ற தியாகமும் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்களது சரித்திரமாகிவிட்ட சாவுமே காரணமாகும். உன்னதமான நோக்கத்திற்காக நாம் சிந்திய இரத்தமும் ஈடுஇணையற்ற தியாகங்களும் வீண்போகாது. நிச்சயமாக அவை சுதந்திர தமிழீழத்தை வென்றுதரும்.

உலகத் தமிழர்கள் ஒரு குடையின்கீழ் ஒன்றுபட்டு ஒற்றைக் குரலாக ஒலிக்கும் போது தமிழர்களது பிரச்சினைகளை சர்வதேசம் தமிழர்கள் சார்பில் முன்வைத்து நிரந்தர தீர்வைப்பெற்றுத்தர முயற்சிக்கும். ஆகவே ஓய்வு உறக்கமின்றி களமாட உலகத்தமிழர்கள் முன்வரவேண்டும்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் :- ம.செந்தமிழ் (11-04-2012)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.