Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது 30 வயது இளைஞன் சுரேஸ் கூறும் கதை-'சமூக சிற்பிகள்' அமைப்பு பதிவேற்றிய கதைகள் - 05

Featured Replies

முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது.

'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

[சுரேஸ் தனது முப்பதாவது வயதில் உள்ளார். இவர் தான் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த காலத்தில் பெற்றுக் கொண்ட திகிலூட்டும் அனுபவங்களைப் பகிர்வதில் அச்சத்துடன் உள்ளபோதிலும், மிக உறுதியாக, ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைக்கின்றார்.]

முதலில் நான் எனது குடும்பத்தவர்களுடன் ஒட்டுசுட்டானிலிருந்து முள்ளியவளைக்கும் பின்னர் புதுக்குடியிருப்புக்கும் நவம்பர் 2008 ல் இடம்பெயர்ந்தேன். நாம் பெறுமதி மிக்க சில உடைமைகளை மட்டும் எம்முடன் எடுத்துச் சென்றோம். அதன் பின்னர் குடிசை ஒன்ற அமைத்து அதில் தங்கினோம். வன்னி முழுவதையும் இராணுவம் கைப்பற்றும் என நாம் எதிர்பார்த்திருந்தோம். அந்த நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் புதுக்குடியிருப்பையும் கைப்பற்றிக் கொண்டனர். இதனால் அடுத்த நாம் எங்கு செல்வதென்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

சுதந்திரபுரத்தை 'பாதுகாப்பு வலயம்' என இராணுவத்தினர் பிரகடனப்படுத்தினர். இதனால் நாம் சுதந்திரபுரம் நோக்கி இடம்பெயர்ந்தோம். சுதந்திரபுரத்தில் இடம்பெயர்ந்த மக்கள் அதிகம் பேர் பாதுகாப்புத் தேடி கூடாரங்களை அமைத்து தங்கியிருந்ததால் அவ்விடம் மிக நெருக்கமாகக் காணப்பட்டது.

நாங்கள் சுதந்திரபுரத்தில் தங்கியிருந்த போது நாம் இருந்த திசை நோக்கி இராணுவத்தினர் எறிகணைகளை வீசத் தொடங்கினர். நாங்கள் பதுங்குகுழியை அமைத்ததன் பின்னர், இரவு பகல் முழுவதையும் நாம் அதிலேயே கழித்தோம். நாம் அங்கிருந்த சில நாட்களில் மக்களின் ஓலங்கள் கேட்டன. எறிகணைகள் பலரின் உயிரைக் குடித்ததால் மக்கள் பெரும் அல்லோல கல்லோலப் பட்டனர்.

இதன் பின்னர் சிறிலங்கா இராணுவத்தால் பொக்கணை, மாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் 'யுத்த வலயமற்ற பகுதிகள்' என அறிவிக்கப்பட்டன. புதுக்குடியிருப்பு வீதி ஆபத்து நிறைந்ததாகக் காணப்பட்டதால் அந்த வீதி மூடப்பட்டது. நாங்கள் இதனை மீறி அந்த வீதியைப் பயன்படுத்தினால் எறிகணைகள் பதம் பார்க்கும் நிலை காணப்பட்டது. இதனால் பொக்கணை நோக்கி செல்வதற்கு மண் வீதி ஒன்றைப் பயன்படுத்தினோம். மக்கள் நெரிசல் நிறைந்து காணப்பட்டதால் பத்து கிலோமீற்றர் தூரத்தை கடப்பதற்கு ஒரு நாள் தேவைப்பட்டது. வன்னியின் எல்லாப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் அந்த வீதியாலேயே பயணித்தனர்.

இராணுவத்தினர் எறிகணைகளை வீசத் தொடங்கினர். அங்கு உணவு இருக்கவில்லை. மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கினர். நாங்கள் சென்று கொண்டிருந்த வீதியெங்கும் மக்களின் இறந்த உடலங்கள் காணப்பட்டன. நாங்கள் இந்த உடலங்களின் மேலால் நடக்க வேண்டியிருந்தது. இறந்த உடலங்கள் எங்கும் பரந்து காணப்பட்டதால் இதை விட எமக்கு வேறு தெரிவு எதுவும் இருக்கவில்லை.

வீதியெங்கும் மக்கள் நிறைந்திருந்தனர். எறிகணைகள் கூவி வரும் சத்தத்தை கேட்கும் போது வழமையாக நாங்கள் எம்மைப் பாதுகாப்பதற்காக நிலத்தில் விழுந்து கிடப்போம். ஆனால் அந்த வீதியில் எறிகணைகள் கூவும் சத்தம் கேட்டு விழுந்து படுக்கக் கூட முடியவில்லை. மற்றையவர்களுக்கு உதவி செய்யக் கூட முடியவில்லை. நாங்கள் எங்களுடைய சொந்த குடும்பத்தவர்களை மட்டுமே கவனத்தில் கொள்ள முடிந்தது.

நாங்கள் இறுதியில் பொக்கணையை வந்தடைந்தோம். நாங்கள் அதற்கு முன்னர் அந்த இடத்துக்கு சென்றிருக்கவில்லை. அங்கே வயல் நிலம் ஒன்றில் கூடாரம் ஒன்றை அமைத்து தங்கினோம். அப்போது டிசம்பர் 2008. 15 நாட்கள் தொடர்ந்து எறிகணைகள் எதுவும் வீசப்படவில்லை. நாங்கள் கடற்கரையை அண்டி இருந்தோம். அங்கே மரக்கறிகள் எதுவும் இருக்கவில்லை. கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கு விடுதலைப் புலிகள் தடைவிதித்திருந்ததால் மீன் மீன்பிடிப்பதற்கு கூட செல்ல முடியவில்லை.

மக்கள் ஏற்கனவே படகுகளின் உதவியுடன் திருகோணமலைக்கு தப்பிச் சென்றதாலேயே புலிகள் இதற்கான அனுமதியை வழங்கவில்லை.

மக்கள் கடல், தரை ஆகிய இரு வழிகள் மூலம் தப்பிச் செல்ல முற்பட்டனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களைத் தடுத்தனர். புலிகள் மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு போன்ற சில நிவாரணப் பொருட்களை வழங்கினர். கறிகளை ஆக்குவதற்கு தேங்காய் இருக்கவில்லை.

இந்த நேரத்தில் புலிகள் பலாத்கார ஆட்சேர்ப்பில் ஈடுபட்டனர். சிறுவர்கள், இளையோர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் புலிகள் தமது அமைப்பில் இணைத்துக் கொண்டனர். ஏற்கனவே புலிகள் அமைப்பில் குடும்பத்து உறுப்பினர்கள் இணைந்திருந்த போதிலும் இவை எதுவும் கவனத்திற் கொள்ளப்படாது அனைவரும் பலாத்கார ஆட்சேர்ப்பில் இணைக்கப்பட்டனர். நாங்கள் பதுங்குகுழிக்குள் ஒழிந்திருந்தோம். நாங்கள் எமது முழுநாட்களையும் பதுங்குகுழிக்குள்ளேயே கழித்தோம். நாங்கள் இரவு பத்து மணிக்குப் பின்னரே சிறுநீர் கழிப்பதற்கு பதுங்குகுழியை விட்டு வெளியில் வருவோம். ஏனெனில் தற்செயலாகப் புலிகள் எம்மைப் பார்த்து விட்டால் அவர்கள் எம்மை பலாத்கார இணைப்பில் சண்டைக்கு கொண்டு சென்று விடுவார்கள் என அச்சமடைந்தோம்.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்கள் கடும் வெப்பமாக இருந்தன. ஆனால் நாம் தொடர்ந்தும் பதுங்குகுழிகளிலேயே தங்கியிருந்தோம். பதுங்குகுழிகளுக்குள் காற்று வருவதற்காக சிறிய துவாரம் விட்டிருந்தோம். நாம் வியர்வையில் நனைந்தோம். மழை பெய்யும் போது மழை நீர் பதுங்குகுழிக்குள் வந்துவிடும். நாங்கள் பதுங்குகுழிக்குள் வரும் மழைநீரை துணி மூலம் வடிகட்டி குடித்தோம். இவ்வாறான துன்பங்களை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. இதை மீறி நாம் வெளியில் வந்தால் இராணுவத்தின் எறிகணைகள் பதம் பார்க்கும் அல்லது புலிகள் எம்மை தமது படையில் இணைத்து விடுவார்கள் என்ற அச்சம் மேலோங்கியிருந்தது.

என்னை விட எனது பெற்றோர் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தனர். அவர்கள் புலிகள் என்னை பலாத்காரமாக கொண்டு சென்று விடுவார்களோ என பயந்தனர். இதனால் இவர்கள் பேயறைந்தது போல் காணப்பட்டனர். இவ்வாறான நிலையில் எனது பெற்றோரை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியவில்லை. இதனால் அங்கே தங்கியிருப்பதை விட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வது சிறந்தது என நான் நினைத்தேன். நூறு வரையான ஏனைய மக்களுடன் நந்திக்கடலைக் கடந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதென நாம் தீர்மானித்தோம்.

பத்து பத்து பேராக குழுவாக ஒன்று சேர்ந்த நாம் நந்திக் கடல் நீரேரியை நோக்கி சென்று கொண்டிருந்தோம். நாங்கள் நூறு மீற்றர் வரை நீருக்குள்ளால் கடந்து செல்ல வேண்டியிருந்தது. புலிகள் ஒருபக்கமும், இராணுவத்தினர் மறுபுறமும் நிற்க நாம் அவர்களைத் தாண்டி, அவர்களின் தாக்குதல்களைக் கடந்து சென்று கொண்டிருந்தோம். நாங்கள் நூறு பேர் வரையில் கடல்நீரேரியின் கரையை நள்ளிரவு சென்றடைந்த போது, எம்மை புலிகள் சுற்றி வளைத்துக் கொண்டனர்.

வான் ஒன்றில் வந்த புலிகள் நாம் இருந்த திசை நோக்கி வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அங்கிருந்த மக்கள் அனைவரும் பீதியடைந்தனர். திசை தெரியாது ஓடிச் சென்றனர். நான் எனது தாயாருடனும், எனது மூன்று சகோதரர்களுடனும், என்னிடம் காவிக் கொண்டு வருமாறு வேறொருவர் தந்த மூன்று வயது சிறுமி ஒருவருடனும் நின்றிருந்தேன்.

நாங்கள் எல்லோரும் ஓட முயற்சித்தோம். அத்துடன் நான் எனது ஒரு கையில் அந்தச் சிறுமியையும் மறு கையில் பை ஒன்றையும் வைத்திருந்தேன். இவ்வாறு ஓடிக் கொண்டிருந்த போது அந்தச் சிறுமி கை தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் சிறுமியைத் தூக்கிக் கொண்டு ஓடிய போது என்னிலிருந்து நூறு மீற்றர் தூரத்தில் புலிகள் நிற்பதைக் கண்டேன். எனக்கருகில் லொறி ஒன்று நிற்பதைக் கண்ட நான் அந்தச் சிறுமியுடன் லொறியின் கீழ் பதுங்கிக் கொண்டேன். லொறியைச் சுற்றி 'ரோச்' வெளிச்சத்தால் புலிகள் என்னைத் தேடினர். இத்துடன் எனது கதை முடிந்து விட்டது என நான் நினைத்தேன்.

கையிலிருந்த அந்தச் சிறுமி அழுதால் அவர்கள் நான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள் என நான் நினைத்தேன். எனது பெற்றோரை புலிகள் பிடித்திருப்பார்கள் என நினைத்த போது எனக்கு வேதனையாக இருந்தது. நான் எனது மார்புக்கு அருகில் அந்தச் சிறுமியைத் தூக்கி மெதுவாக அவளது காதுக்குள் அழாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டேன். அந்தச் சிறுமியின் இதயத்துடிப்பை என்னால் உணர முடிந்தது. அந்தச் சிறுமி என்னிடம் "எனது அம்மா எங்கே? நாங்கள் எங்கே போகின்றோம்?" என வினவினாள்.

அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டார்கள் என நான் அவளிடம் கூறினேன். "நாங்கள் வீட்டை போனவுடன் நீங்கள் சமைப்பீர்களா?" என அவள் என்னிடம் கேட்டாள். அந்த இடத்தில் தனது தாய் இல்லாததால் யார் தனக்கு உணவு தருவார்கள் என்பது தொடர்பில் மூன்று வயதேயான அந்தச் சிறுமி அறிந்திருந்தாள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

புலிகள் இந்த இடத்தை விட்டுச் சென்றதும், லொறியின் கீழிருந்த நான் மெதுவாக வெளியில் வந்தேன். நாங்கள் கடல்நீரேரியைக் கடப்பதற்கு முதல் எனது குடும்பத்தவர்களுடன் வாழ்ந்த இடத்துக்கே திரும்பிச் செல்வதென நான் தீர்மானித்துக் கொண்டேன். நான் முதலிருந்த இடத்துக்குச் சென்ற போது அங்கே ஒருவரையும் காணவில்லை. பின்னர் மெதுமெதுவாக எல்லோரும் அங்கே திரும்பிக் கொண்டிருந்தனர். அதில் நால்வர் மீளவும் திரும்பி வரவில்லை. மூன்று நாட்களின் பின்னர் அவர்களும் எமது இடத்துக்கு திரும்பி வந்தனர். இந்த நால்வரும் தப்பிச் செல்ல முற்பட்ட போது புலிகள் அவர்களை துன்புறுத்தியதால் அவர்களின் உடல்களில் காயங்கள் காணப்பட்டன.

இவ்வாறு பெப்ரவரி தொடக்கம் ஏப்ரல் வரை நாங்கள் ஐந்து தடவைகள் தப்பிச் செல்ல முற்பட்டோம். இவ்வாறான தொடர் முயற்சிகளின் பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது என்ற முடிவுக்கு நாம் வந்தோம். அத்துடன் நாம் விரைவில்; இறந்து விடுவோம் எனவும் நினைத்துக் கொண்டோம்.

நாங்கள் நான்கு மாதங்கள் வரை தொடர்ந்து பதுங்குகுழிக்குள் இருந்த போது, சின்னம்மை நோய் என்னை வாட்டியது. பதுங்குகுழிகளை விட்டு வெளியில் வர முடியாதிருந்ததால், மருத்துவ சிகிச்சையைக் கூட என்னால் பெறமுடியவில்லை. உடலிலிருந்த வெப்பத்தைப் போக்குவதற்கு வெங்காயம் சிறந்தது என சிலர் கூறினர். ஆகவே ஒரு கிலோ வெங்காயம் 1000 ரூபாவுக்கு வாங்கினோம். அந்தக் காலப்பகுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவ்வளவு துன்பங்களை அனுபவித்தேன். உண்மையில் தங்கிக் கொள்ள முடியாத துன்பங்களை, வேதனைகளை நான் தாங்கினேன்.

பதுங்குகுழிகள் அதிக வெப்பமாக இருந்ததால் சறம் மட்டுமே நாங்கள் அணிந்திருந்தோம். இராணுவத்தின் எறிகணைகள், துப்பாக்கி சன்னங்கள் என்பன எம்மை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தன. பதுங்குகுழிக்குள் கழித்த இறுதி மாதத்தில் எப்போதும் எறிகணைகளினதும், துப்பாக்கி வேட்டுக்களினதும் சத்தங்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. இந்த நிலையில் இருட்டாகிய ஒரு பொழுதில், சிங்களத்தில் உரையாடும் சத்தம் எம் காதுகளில் கேட்டது. இராணுவத்தினர் எமது இடத்துக்கு வந்து விட்டனர் என்பதை நாம் உணர்ந்து கொண்டு பதுங்குகுழிகளை விட்டு வெளியில் வந்தோம். இராணுவத்தை நோக்கி நாம் நகர்ந்தோம்.

ஆனால் நாங்கள் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் நின்றதால் குறுக்குச் சூட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோம். துப்பாக்கி ரவைகள் பதம் பார்த்தால் சிலர் கொல்லப்பட்டனர். இராணுவத்தினர் எங்களைக் கண்டனர். அவர்கள் எம்மைப் புலிகள் என எண்ணியதால் "நாங்கள் பொதுமக்கள்" என உரத்த குரலில் கத்தினோம்.

அப்போது ஏப்ரல் 20, 2009 காலை நான்கு மணி. இராணுவத்தினர் எம்மை ஒரு நிரலில் வரிசையாக வருமாறு கூறினர். நாங்கள் எமது கழுத்தளவு மட்டத்தில் நின்ற நீரைக் கடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது இரு திசைகளிலிருந்தும் எமது தலைகளுக்கு மேலால் துப்பாக்கி ரவைகள் செல்லும் சத்தம் கேட்டது. இந்நிலையில் நாங்கள் எம்முடன் வந்த நான்கு உறவினரை இழந்திருந்தோம். இராணுவத்தை நாம் நெருங்கிய பின்னர், இராணுவத்தினர் உடற் சோதனை செய்தனர். அதன் பின்னர் வெறும் தரை ஒன்றில் எம்மை உட்காருமாறு பணித்தார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவப் பகுதியை நோக்கி வருவதை நாம் அவதானித்தோம். நாங்கள் இரு நாட்களான உணவு சாப்பிட்டிருக்கவில்லை. நாங்கள் சறமும் சேட்டும் அணிந்திருந்தோம். ஆனால் மிக அழுக்காக காணப்பட்டோம். நாங்கள் தொடர்ந்தும் நடக்க முடியாது களைப்படைந்திருந்தோம். ஆனால் இராணுவத்தினர் எம்மை நடக்குமாறு பலவந்தப்படுத்தினர். இவ்வாறு இரணைப்பாலை வரை நடந்து சென்றோம்.

இரணைப்பாலையிலும் எம்மை சோதனை செய்து கொண்டனர். அதன் பின்னர் எமக்கு குளுக்கோஸ் வழங்கப்பட்டது. சிறார்களுக்கு பிஸ்கட்டுக்கள் வழங்கப்பட்டன. நாமும் பிஸ்கட் சாப்பிட்டோம். வறண்டு காணப்பட்ட எமது தொண்டைகளை ஈரப்படுத்திக் கொள்வதற்காக ஒரு பைக்கற் குளுக்கோசை நாங்கள் 50 பேர் வரை பகிர்ந்து கொண்டோம். இரணைப்பாலையிலிருந்து ஓமந்தை வரை பேரூந்துகளில் எம்மை ஏற்றிச் சென்றனர்.

ஓமந்தையைச் சென்றடையும் வரை எமக்கு உணவு வழங்கப்படவில்லை. அதன் பின்னர் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில எமக்கு உணவுப் பொதிகளை வழங்கின. ஆனால் அவை எமது பசியைப் போக்க போதியதாக இருக்கவில்லை. ஒரு உணவுப் பொதியை பத்து பேர் வரை பகிர்ந்து உண்டோம். நாங்கள் உணவை விழுங்கிய போது எமது தொண்டைகளில் வலி ஏற்பட்டது. ஓமந்தையில் பிஸ்கட்டுக்காக காத்திருந்த நீண்ட வரிசையில் நானும் காத்திருந்தேன். ஆனால் அந்த சன நெரிசலுக்குள் அடிபட்டு என்னால் ஒரு பிஸ்கட்டை மட்டுமே பெற முடிந்தது.

சிறிலங்கா காடுகளில் வாழும் ஆதிவாசியினரான வேடுவர்கள் போல் நாம் காணப்பட்டோம். நான்கு மாதங்களாக எடுக்கப்படாத தாடியுடனும், தலைமுடியுடனும் நாம் காணப்பட்டோம். எனது அம்மாவை எனது மனைவியா என சிலர் என்னிடம் கேட்டனர். அந்தளவுக்கு தாடி வளர்ந்திருந்ததால் நான் வயது முதிர்ந்த ஒருவர் போல் தென்பட்டேன்.

http://www.puthinappalakai.com/view.php?20120417106009

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.