Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏப் 22 :தோழர் லெனின் பிறந்த நாள்

Featured Replies

1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்

lenin3.jpg 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன.

அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன.

சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

embalmedlenin.jpg உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது. சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?

நன்றி - புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

2. வறுமையை ஒழித்த லெனின்

lenin.jpg எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள். அதுபோலவே ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால், 100 பேர் ஏழைகள். இந்த ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். உழைக்கும் மக்கள் மேலும் மேலும் வறுமையில் வாடிக்கிடப்பார்கள். ரசியாவிலும் ஒரு காலத்தில் மக்கள் அப்படித்தான் துன்பத்தில் உழன்றனர்.

இந்த அநியாயத்தை ஒழித்துக் கட்டியவர்தான் லெனின். அவருடைய தலைமையில் 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற புரட்சியினால் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. உலகில் முதன்முறையாக தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அந்த தொழிலாளர்களின் ஆட்சிதான் உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது. மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. அவை அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும், வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. சமத்துவச் சமூகம் படைக்கப்பட்டது.

இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடந்தது. இதன் மூலம் தன்னுடைய நாட்டில் வறுமையை ஒழித்துக் கட்டினார். மற்ற நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களின் கவனம் சோவியத் ரசியாவை நோக்கித் திரும்பியது. லெனினுடைய வழியைப் பின்பற்றினால் மட்டுமே தங்களின் வறுமை ஒழியும் என்று அவர்கள் நம்பினர். தங்களின் நல்வாழ்விற்காக போராடத் தயாராக இருந்த உலகத் தொழிலாளர்களுக்கு லெனின் சரியான வழி காட்டினார். ஆனால் ரசிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி உலகத்திலுள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கு முன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.

இதனால்தான் அவருடைய மரணத்துக்கு உலகமே அழுதது. உலகின் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற நன்றியும், மீதி நிலப்பரப்பில் அதை நிறைவேற்றும் முன்னரே இறந்து விட்டாரே என்ற துக்கமும்தான் உலகத் தொழிலாளர்களை கண்ணீர் சிந்த வைத்தது.

3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்

child-lenin-with-sister.jpg லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாக பணி புரிந்தார். நேர்மையான மனிதர். தாயார் மரியா உல்யானவ் அன்பே வடிவானவர். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதிரிகள் லெனினுடைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும், பண்புடையவர்களாகவும் வளர்த்தனர். மேலும் தங்கள் சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான தங்கள் தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள் பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையான கதைகளைச் சொல்வார்.

சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களை விரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடைய குறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.

young-lenin.jpg அவர்தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகம். சகோதரர்கள் இருவரும், உலகம் எப்படி தோன்றியது? உயிர் எப்படி தோன்றியது? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க விவாதிப்பார்கள். நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமான விசயங்கள் தெரிந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும் அறிவாளியாக வேண்டுமென்று லெனின் தீர்மானித்துக் கொண்டார். அதற்காக கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தார்.

இப்படி மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்வில் முதல் இடி விழுந்தது. திடீரென ஒருநாள் தந்தை இறந்து போனார். அந்த அடியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த இடி தாக்கியது. ரசியாவில் கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனைக் கொல்ல முயற்சி செய்ததற்காக அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த செய்தியால் குடும்பம் நிலைகுலைந்து போனது.

அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப் பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமான துக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்ற மனவலிமைக்கு ஒரு சான்று.

4. வக்கீல் உருவில் ஒரு போராளி!

lenin-law-student.jpg லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகரின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராக மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். ஜார் தேசத்தின் வளங்களை சூறையாடி ஆடம்பரமாக செலவு செய்தான். மக்களையோ வறுமையில் தள்ளினான். அவர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தான். மன்னன் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக ஆட்சி நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை.

மாணவர்களின் போராட்டத்தை வன்முறையால் ஒடுக்கினான் ஜார். மாணவர்கள் குற்றவாளிகளைப் போல கண்காணிக்கப்பட்டனர். கசான் பல்கலைக்கழகம் சிறைச்சாலை போல மாற்றப்பட்டது. மாணவர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. தன்மானமுள்ள மாணவர்கள் இதை எதிர்க்கத் தீர்மானித்தனர். ஒட்டு மொத்தமாக பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறினர். லெனினும் வெளியேறினார்.

பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய லெனின், ஜார் ஆட்சியின் கொடுமைகளை அனுபவத்தின் மூலம் புரிந்துகொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடத் தீர்மானித்தார். வழக்கறிஞர் தொழிலின் மூலம் அதை செய்யத் திட்டமிட்டார். எனினும் சட்டக்கல்லூரியில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தனர். லெனின் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். வீட்டில் இருந்தே படித்தார். நான்கு வருட சட்டக்கல்வியை ஒன்றரை ஆண்டில் படித்து முடித்துப் பட்டம் பெற்றார். அதிலும் மாநிலத்தில் முதலாவதாக.

அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு துக்க செய்தி அவரது தங்கை ஓல்கா நோயினால் மரணமடைந்தார். லெனினுடைய தாயார் மனமுடைந்து போனார். லெனின் பெத்ரோகிராடு நகரில் வழக்கறிஞர் தொழில் மேற்கொள்ள சென்றார். அவருடைய குடும்பம் மாஸ்கோ நகரில் குடியேறியது.

5. லெனின் தேர்வு செய்த பாதை

லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே நடத்தினரர். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. ஏனெனில் தொழிலாளர்கள் மிக வறியச் சூழலில் வாழ்ந்தனர். ஜார் ஆட்சிக்கு முடிவு கட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை உணர்ந்து கொண்டார் லெனின். அது குறித்து தீவிரமாகச் சிந்தித்தார். ஏராளமாகப் படித்தார். அப்படித் தான் அவர் காரல்மார்க்ஸ் என்பவர் எழுதிய மூலதனம் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. லெனினை அந்தப் புத்தகம் வெகுவாக ஈர்த்தது.

karlmarx.jpg மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு பொருளின் மூலமே நிறைவேறுகின்றது. இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப் பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம். மனிதர்கள் உழைப்பதனால்தான் செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்த செல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர். உழைப்பாளிகளுக்கோ கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவே வறுமைக்குக் காரணம். உழைக்கும் மக்கள் இதை புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடினால், அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம், சிறைச்சாலை, சட்டம் போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர். இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக்கானது. வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம்.

உழைக்கும் மக்கள் ஒரு புரட்சியின் மூலம் பழைய அரசையும், அநீதியான சட்டங்களையும் வீழ்த்த வேண்டும். அந்த இடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கான புதிய அரசையும், சமத்துவத்திற்கான சட்டங்களையும் இயற்ற வேண்டும்.

இதுதான் அந்தப் புத்தகத்தின் சாரம். இந்தக் கருத்துக்கள் கம்யூனிச தத்துவம் என அழைக்கப்படுகிறது. அடுத்ததாக காரல் மார்க்கம் அவருடைய நண்பர் எங்கெல்சும் எழுதிய அனைத்து நூல்களையும் படித்து முடித்தார். அதிலிருந்து ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட தொழிலாளர்களின் புரட்சி ஒன்றுதான் வழி என்று தீர்மானித்தார். அந்தப் புரட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதிலிருந்து கம்யூனிஸ்டாக மாறினார்.

6. போராட்டமே வாழ்க்கையாக...!

leninsecretlabourmeetings.jpg லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணத்தை விளக்கினார். அதை ஒரு புரட்சியின் மூலம் மாற்றும் சக்தி தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு என்றார். இக்கூட்டங்கள் அனைத்தும் இரகசியமாகவே நடந்தன. ஏனெனில் வெளிப்படையாக கூட்டம் நடத்தினால் ஜாரின் போலீசு அனைவரையும் சிறையில் தள்ளிவிடும்.

லெனினுடைய பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருந்தது. அவருடைய கருத்துக்கள் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்கள் அனைவரையும் சென்று அடைந்தன. தொழிலாளர்கள் மெதுவாக விழிப்புணர்வு பெற்றனர். தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் 16 மணிநேரம் முதலாளிகளுக்கு உழைத்துக் கொட்ட வேண்டியிருந்தது. கூலியோ மிகமிகக் குறைவு. இதற்கெதிராகப் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.

இந்த போராட்டங்களை வழிநடத்தும் தலைவர் யார் என்று தெரிந்து கொள்ள இயலாமல் ஜார் அரசு மண்டையைச் குடைந்து கொண்டிருந்தது. லெனின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை கையும் களவுமாகப் பிடிக்க ஏராளமான உளவாளிகள் அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.

லெனின் அவர்களை ஏமாற்றிவிட்டு ரகசிய கூட்டங்கள் நடக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார். வலிமையான உடற்கட்டும் புத்திக் கூர்மையும் இதற்கு உதவின. ரயிலில் செல்லும்போது அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிடும். ரயில் நிற்கும். ஆனால் அவர் இறங்கமாட்டார். கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஆழ்ந்து படிப்பது போல் இருப்பார். ரயில் கிளம்பி வேகமெடுக்கும். அப்போது அவர் மிக விரைவாக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிப்பார். ஒரு கணநேரத்தில் மாயாஜால வித்தை போல தங்கள் கண்ணெதிரே லெனின் தப்பி ஓடுவதைக் கண்டு உளவாளிகள் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள். இதுபோல் பலமுறை உளவாளிகள் ஏமாந்து போனதுண்டு.

7. சைபீரியச் சிறைவாசம்

1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்கு ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீரியாவிற்கு அனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீரியா என்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும். எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும். ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி விடும். அங்கே அவர்கள் குளிரில் விறைத்து இறந்து போவார்கள்.

ஆனால் சைபீரியக் குளிரை லெனின் தோற்கடித்தார். அவருடைய உறுதியான உடற்கட்டையை உருக்குலைக்க சைபீரியப் பனிப் பிரதேசத்தால் இயலவில்லை. அதுமட்டுமல்ல லெனின் தான் காதலித்த கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத் திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீரியாவிற்கு நாடு கடத்தியிருந்தது ஜார் அரசு.

lenin-reading-newspaper.jpg சைபீரியாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள் எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும் புத்தகங்கள். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்திரிக்கை அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்த முடியாது. அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிக்கையை வெளியிட முடிவு செய்தார். பத்திரிக்கையின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில் கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புரட்சியை வழி நடத்தமுடியாது.

1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். இஸ்கரா என்ற முதல் கம்யூனிச பத்திரிகை வெளிவந்தது.

8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்

லெனினுடைய கருத்துக்களை ஆதரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்திரிக்கையை நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்தனர் தொழிலாளர்கள். லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி காட்டியது. அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.

அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன. கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது.

தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினார்..

blacksunday.jpg 1905-ஆம் ஆண்டு ஜாரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வறுமை நிலையை ஜாரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயாரித்தனர். அதை ஜாரிடம் கொடுக்க பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினர். ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள் அதிர்ந்தன. பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போரிட தொழிலாளர்கள் துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது. வெளிநாட்டில் இருந்த லெனின் புரட்சிக்குத் தலைமை ஏற்க பெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார். இருந்ததும் முதல் ரசியப் புரட்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர வில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப்படுத்தினார். தோல்வியில் இருந்து பாடம் கற்போம். தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே என்றார்.

புரட்சியை ஒடுக்கிய ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன் படைகளுக்கு உத்தரவிட்டான். அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டை விட்டுத் தலைமறைவாக வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அது மிகவும் ஆபத்தான வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல் வழியாக பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார். அது குளிர் காலமாதலால் கடலின் மேற்பரப்பு பனிக்கட்டி பாளமாக மாறியிருந்தது. கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்த நேரத்தில்தான் லெனின் துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீது நடந்து செல்வதே அம்முடிவு.

அது மிகமிக அபாயகரமான திட்டம் பனிப்பாளம் பல இடங்களில் மிக மெல்லியதாக இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளே நடுக்கடலில் விழுந்தால் மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, அச்சுமூட்டும் பனிப்புயலும் வீசிக் கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாது கடல் மீது நடக்கத் தொடங்கினார்.

அவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச் கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பாதிதூரம் கடந்துவிட்டனர்.

அப்போதுதான் அந்த விபத்து நடந்தது. லெனின் கால் வைத்த இடத்தில் இருந்த பனிப்பாளம் உடைந்தது. அவர் தொப்பென கடலுக்குள் விழுந்தார். உள்ளே எலும்பை உறைய வைக்கும் குளிர். உடையின் பாரம் கீழ் நோக்கி இழுத்தது. லெனினுடைய உறுதியான உடல் போராடியது. இறுதியாக உடைந்த பனிப்பாளத்தின் விளிம்பை பிடித்தார். மேலே நின்று கொண்டிருந்த மூன்று தோழர்களும் கை கொடுத்து தூக்கி விட்டனர். லெனினுடைய மன உறுதிக்கு இது மேலும் ஒரு சான்று.

9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்

1905-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோதனையான கால கட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர்; சித்திரவதை செய்யப்பட்டனர். லெனினுடைய குடும்பமும் சித்திரவதைக்கு உள்ளானது. இந்தத் தாக்குதல்கள் கம்யூனிஸ்ட் கட்சியை கலைக்கும்படி கூறினர்.

leninlives.jpg இந்தக் கோழைக்களுக்கு லெனின் சரியான பதிலடி கொடுத்தார். புரட்சியில் தொழிலாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே அதற்கு வழிகாட்ட முடியும் என்றும் சான்றுகளுடன் நிரூபித்தார். தொழிலாளர்களின் மனக்கலக்கத்தைப் போக்கினார். மீண்டும் அவர்களை அணிதிரட்டினார்.

இதே நேரத்தில் ஏகாதிபத்திய நாடுகள் உலகப்போருக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தன. பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா முதலிய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைத் தம் அடிமையாக (காலனியாக) வைத்திருந்தன. இந்த நாடு பிடிக்கும் போட்டியில் தாமதமாக குதித்தன ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, துருக்கி முதலிய நாடுகள். இவை பழைய ஏகாதிபத்தியங்களிடம் உலகைப் பிரித்து தமது பங்கைக் கொடுக்குமாறு கேட்டன. இக்கோரிக்கை மறுக்கப்பட்டது உலகை ஏற்கெனவே கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிரிட்டன், அமெரிக்கா, பிரான்சு ஒருபுறமும், புதிதாக கொள்ளையடிக்கப் புறப்பட்ட ஜெர்மனி முதலான நாடுகள் மறுபுறமாக 1914-ஆம் வருடம் போரில் ஈடுபட்டன. இதுவே முதல் உலகப் போரானது. இதில் ரசியா, பிரிட்டனை ஆதரித்து ஜெர்மனிக்கு எதிராகப் போரில் குதித்தது.

10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி

லெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர் என்றனர். ஏழை நாடுகளை அடிமையாக்குவதன் மூலம் அவற்றைச் சுரண்டி பணக்கார நாடுகளின் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள். தொழிலாளர்களுக்கு இதில் நன்மை ஏதுமில்லை. மேலும் அதற்கான போரில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் வீணாக உயிரை இழக்க நேரிடும். இதற்கு பதிலாகத் தங்களை இதுவரை சுரண்டிக் கொழுத்துள்ள சொந்த நாட்டு முதலாளிகளுடன் போரிட்டால், தொழிலாளர் வாழ்வில் விடியல் பிறக்கும் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் ஒரே மாதிரிதான் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒன்றுபட வேண்டும். புரட்சி செய்ய வேண்டும் என்று லெனின் கூறினர்.

ஆனால் போர் வெறி யூட்டப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் காதுகளில் இது ஏறவே இல்லை. போர் மேலும் மேலும் உக்கிரமடைந்த போதுதான் அவர்களுக்கு இது உறைத்தது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சம் தலைவிரித்தாடியது. எங்கும் பசி பட்டினி, தொழிலாளர்கள் ஜாருக்காக சண்டையிட்டு மடிந்து கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தனர். இந்தக் கஷ்டம் தொழிலாளர்களுக்குத் தான் முதலாளிகளோ போரைப் பயன்படுத்தி எல்லா பொருட்களுக்கும் விலை ஏற்றினர். கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.

லெனினுடைய வார்த்தைகள் எவ்வளவு சரியானவை என்ற மக்கள் புரிந்து கொண்டனர். இந்தக் கொள்ளைக்காரப் போரை நிறுத்தும்படி படைவீரர்களும், தொழிலாளர்களும் கொடுத்த மனுக்கள் குப்பையில் வீசப்பட்டன. மக்களின் கோபம் எல்லை மீறியது. 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரட்சி வெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தை முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த லெனின் ரசியாவிற்கு விரைந்து வந்தார். பெத்ரோகிராடு ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் முன்னே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நின்றனர். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அவர்கள் ஓடோடி வந்திருந்தனர்.

11. சதியை முறியடித்த லெனின்

ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு லெனின் பேசத் தொடங்கினார். தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் ஜாரை வீழ்த்திவிட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடையவில்லை. ஜாரின் அதிகாரத்தை முதலாளிகளும், பண்ணையார்களும் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைக்களைச் சுரண்டுவதையே இவர்கள் ஆதரிப்பார்கள். பிற நாடுகளைக் கொள்ளையடிக்க போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு. தொடர்ந்து முன்னேறுங்கள் என்று அறைகூவினார்.

லெனினுடைய வார்த்தைகளை நம்பிய தொழிலாளர்கள் சிறுபான்மையினராகவே இருந்தனர். பெரும்பாலானவர்கள் முதலாளிகளுடைய நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது. புதிய அரசு போரில் உழைக்கும் மக்கள் வீணாக சாவதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. ஏழைகள் பட்டினியால் மாண்டனர். பணக்காரர்கள் தேசத்தின் செல்வத்தை உறிஞ்சிக் கொழுத்தனர். நாடாளுமன்றத்தில் அடிதடியும் ரகளையும் தான் நடந்தது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்தனர். லெனினுடைய கருத்துக்களே சரியானவை என ஏற்கத் தொடங்கினர்.

மக்களை ஒடுக்குவதற்காக புதிய அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. லெனினைக் கொலை செய்யும்படி படைகளுக்கு கட்டளையிடப்பட்டது. மீண்டும் ஒரு முறை லெனின் தலைமறைவாக செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இந்தமுறை அவர் பெத்ரோகிராடை விட்டு வெகுதூரம் செல்லவில்லை. எப்படியும் புரட்சி வெடிக்கும் என்று நம்பினார். அதனால் பெத்ரோகிடின் அருகிலேயே தங்கினார்.

lenin-in-disguise1917.jpg புல் அறுப்பவராக, கூலி விவசாயியாக, என்ஜின் டிரைவராக மாறுவேடம் பூண்டு வெவ்வேறு இடங்களில் தங்கினார். ஹெல்சிங்கி நகரில் லெனின் தங்கியிருப்பதாக அரசு சந்தேகப்பட்டது. அந்தநகரின் மூலைமுடுக்குகளெல்லாம் வலைவீசித் தேடியது. ஒரு இளம் காவல் துறை அதிகாரியிடம் லெனினைப் பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், அந்த அதிகாரியின் வீட்டில் லெனின் பாதுகாப்பாகத் தங்கியிருந்தார். ஒரு தொழிலாளியின் மகனான அந்த இளம் காவல் அதிகாரி கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார்.

மக்களின் கோரிக்கைகளான போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம் போன்றவற்றை கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே செயல்படுத்த முடியும் என மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினர். ரசியாவெங்கும் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. புரட்சிக்கான காலகட்டம் நெருங்கிவிட்டது. என லெனின் உணர்ந்து கொண்டார். உடனடியாக தொழிலாளர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் கட்சி அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் அவர் கூறியதைக் கட்சியின் மையக் குழு ஏற்றுக் கொண்டது.

ஆனால் மைக்குழுவில் இருந்த பயந்தாங்கொள்ளிகள் இத்திட்டத்தை எதிர்த்தனர். அதுமட்டுமல்ல, மிக இரகசிமான இந்த திட்டத்தை பத்திரிகைகளுக்கு வெளிப்படுத்தி துரோகம் செய்தனர். ஆகவே திட்டத்தில் குறிப்பிட்டிருந்த நாளுக்கு முன்பாகவே நவம்பர் 7-ம் தேதி புரட்சியைத் தொடங்க முடிவு செய்தார் லெனின். இத்தகவல் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்களுக்கு ரகிசயமாக கொண்டு செல்லப்பட்டன.

12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி

hammer-sickle.jpg 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது. அந்த நாளில் தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது. அந்த நாளில்தான். அன்றுதான் உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.

அன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.

ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும், வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தை நடத்தின. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழவும் தேர்ந்தெடுக்கப்படும். நிர்வாகக் குழ உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம் நடைபெறும். அதில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படும். திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஊழல் புகார் எழுந்தாலும் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். அதுமட்டுமல்ல நீதிமன்றங்களாக செயல்படும் அதிகாரமும் சோவியத்துகளுக்கு இருந்தது.

மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமல்படுத்தி, மக்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சி முறை. லெனினால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி முறைதான் உண்மையான, ஜனநாயகம். இதில் மக்களே சர்வ அதிகாரம் படைத்தவர்கள்.

தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. இதுவரை தனிப்பட்ட முதலாளிகளின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. புரட்சிக்குப் பின்னர் மக்களுக்கு எவ்வளவு பொருட்கள் தேவையோ அவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொருக்கும் திறமைக்கேற்ற வேலை வழங்கப்பட்டது. வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் நொடியில் மறைந்தது.

நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில். இதை மனதில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளில் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாட கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அறிவு மற்றும் திறமைகளின் வளரச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரசியா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழுவிடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார்.

தொழிற்சாலை உற்பத்தி, விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது. அப்போதுதான் அந்தக் கொடுமை நடந்தது. ஒரு இளம் குழந்தையைக் குத்திக் குதற 22 கழுகுகள் பாய்ந்தன. சோவியத் யூனியன் மீது 21 பணக்காரநாடுகள் படையெடுத்தன.

13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்

ரசியப் புரட்சியால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் போன்று ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் பயந்து நடுங்கினர். அவர்கள் தங்களுடைய நாடுகளில் ஏழைகளைக் கடுமையாகச் சுரண்டினார்கள். சோவியத் யூனியனைப் பார்த்து தங்கள் நாட்டு மக்களும் புரட்சி செய்வார்கள் என்று பயந்தனர். இப்படிப்பட்ட சூழலில் சோவியத் யூனியனே, இவர்கள் இந்தியா போன்ற நாடுகளை அடிமையாக (காலனி) வைத்து கொள்ளையடித்ததை எதிர்த்தது. ஆகவே அதை ஒழித்துக் கட்ட முடிவு செய்தனர்.

எதிரிகளின் படைகள் சோவியத் யூனியனை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டன. தலைநகரத்தை நோக்கி வேகமாக முன்னேறின. பிடிபட்ட இடங்களில் எல்லாம் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன. ஏழை உழவர்களும், தொழிலாளர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டது. குழந்தைகள் கூட ஈவு இரக்கமின்றி சுடப்பட்டனர். உழவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவை பழைய பண்ணையார்களிடம் ஒப்படைக்ககப்பட்டது. அதே போல் தொழிற்சாலைகளில் முதலாளிகளின் சுரண்டல் மீண்டும் தொடங்கியது.

விரைவில் தலைநகரை கைப்பற்றி லெனினைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர், எதிரிகள். அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் ரசியாவை பங்கு போட்டுத் கொள்வதைப் பற்றி பகிரங்கமாக பேரங்கள் நடத்திக் கொண்டு இருந்தன. உலகின் முதல் சோசலிச நாடு அழிந்து விடுமோ என்ற அச்சம் உலக மக்களைக் கவ்விக்கொண்டது.

இந்த அபாயகரமான சூழலில் லெனினுடைய முழக்கம் கணீரென எழுந்தது. சோசலிச தாய்நாடு ஆபத்தில் இருக்கிறது. தொழிலாளர்களே, விவசாயிகளே நாட்டைப் பாதுகாக்க படையில் சேருங்கள்.

எதிரிகள் வெற்றி பெற்றால் சோசலிசப் புரட்சி அளித்திருந்த உரிமைகள் அனைத்தும் பறிபோகும் என்று ரசிய உழைக்கும் மக்கள் புரிந்துக் கொண்டனர். அவர்கள் மீண்டும் பழையபடி வறுமையில் வாட விரும்பவில்லை. தங்களின் விடுதலையைப் பாதுகாக்க உழைக்கும் மக்களின் படையில் சேர்ந்தனர். அது செம்படை என்று அழைக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் படையில் சேர்ந்தனர்.

உக்கிரமான போர் தொடங்கியது. செம்படையை விட எதிரிகளிடம் பெரிய படை இருந்தது. நவீனமான ஆயுதங்கள் இருந்தன. ஏகாதிபத்தியங்கள் போரில் வெற்றி பெற பணத்தை வாரி இறைத்தன. எதிரிகள் டாங்குகள், பெரிய பீரங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் தூப்பாக்கிகள், போர்விமானங்கள் போர்க்கப்பல்கள் முதலியவற்றைக் கொண்டு தாக்கினர். செம்படையிடமோ பழங்காலத்து துப்பாக்கிகளும் கத்திகளும் தான் இருந்தன. ஆனால் அவர்கள் மன உறுதியுடனும், வீரத்துடனும் போரிட்டனர். அந்த மன உறுதியை மக்களுக்கு ஊட்டியவர் தோழர் லெனின்.

14. எதிரிகளை வீழ்த்திய செம்படை

லெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப்படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

ஒருநாள் லெனின் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசி முடித்தப் பின் அரகங்த்தை விட்டு வெளியேறி வந்தார். திடீரென துப்பாக்கி சத்தம் பேரிடி போல் ஒலித்தது. கணநேரம் தான், மூன்று குண்டுகள் லெனினுடைய உடலைத் துளைத்தன. சுட்ட துரோகியை மக்கள் வளைத்துப் பிடித்தனர். ஆனால், லெனினுடைய நிலைத்தான் மிகமோசகமாக இருந்தது. கழுத்தில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ஏராளமான இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப் போனார்கள். லெனின் பதறவில்லை. உண்மையான வீரனுக்குரிய துணிவோடு தானே நடந்து சென்று காரில் உட்கார்ந்தார். கார் மருத்துவமனைக்கு பறந்தது.

அவருடைய உடல்நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்வது அவசியம். ஆனால் அறுவையின் போது உயிர் போய்விட்டால்? மருத்துவர்கள் பயந்தார்கள். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த லெனின் மருத்துவர்களுக்கு தைரியம் கூறினார். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு உள்ளேயே தங்கிவிட்டன.

have_you_volunteered_for_the_red_ar.jpg தங்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திய சோசலித்தை வீழ்த்தவே லெனின் சுடப்பட்டார் என்ற உண்மை மக்களுக்குப் புரிந்தது. லெனின் மீதான தாக்குதலுக்கு பழி வாங்க மக்கள் சபதம் ஏற்றனர். சோசலிசத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் எதிரிகளை பழிவாங்க முடியும். ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டியப் பொருட்களை ஆறு மாதத்தில் உற்பத்தி செய்யப் போவதாக தொழிலாளர்கள் உறுதி பூண்டனர். எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பிறகு மேலும் நான்கு மணி நேரம் இலவசமாக, சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர்.

எதிரிப் படைகளை முறியடிக்க செம்படை உறுதி பூண்டது. மேலும் அதிக வீரத்துடன் போரிட்டது. லெனின் சுடப்பட்ட அடுத்த நாள் அவருடைய சொந்த ஊரான சிம்பிர்ஸ்க் நகரம் மீட்கப்பட்டது. செம்படையின் வெற்றி துவக்கியது.

15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்

> <img align=

போரினால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தலைநகரில் உணவு தானியம் மிக அரிதாகவே கிடைத்தது. உணவுப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க லெனின் அமைச்சரவையைக் கூட்டினார். அந்த கூட்டம் நடந்து கொண்டு இருந்த போதே உணவுத்துறை அமைச்சர் மயங்கி விழுந்தார். காரணம் அவர் கடந்த எட்டு நாட்களாக ஒரு வாய் உணவு கூட அருந்தவில்லை. தன் கட்டுபாட்டில் இருந்த உணவை குழந்தைகள், நோயாளிகள், பெண்கள், முதியவர் ஆகியோருக்கு விநியோகித்தார். நாட்டு மக்கள் வயிறார சாப்பிடும் போதுதான் தானும் வயிறார சாப்பிடப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார். சோசலிச சோவியத் யூனியனில் மந்திரிகள் அப்படித்தான் இருந்தனர்.

அந்த தோழர் மட்டும் அல்ல லெனினும் பலநாள் பட்டினி தான். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை. சோசலிசத்தைப் பாதுகாக்க இரவு பகலாக உழைத்தார். அவர் இராணுவத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. உணவுப் பிரச்சினையை தீர்க்க வேண்டியிருந்தது. கல்வி, தொழில் வளர்ச்சிக்கான திட்டம் இடுதலை நிறைவேற்ற வேண்டியிருந்தது. பொதுவுடைமைச் சமுதாயத்தை நோக்கி நாட்டை வழி நடத்த வேண்டியிருந்தது. உள்ளுக்குள் இருந்து சதி செய்த சதிகாரங்களை களையெடக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் தோன்றின. அனைத்தையும் லெனினே முன்னின்று தீர்க்க வேண்டியிருந்தது.

தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் லெனினைத் தேடி வந்தனர். உழைக்கும் மக்களின் மன்றமான சோவியத்தை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி நடத்துவது என்று அவரிடம் கேட்டு அறிந்தனர். அவர் ஒரு நாளைக்கு இருபத்திரண்டு மணி நேரம் உழைத்தார். இந்தக் கடினமான உழைப்பினாலும், உணவுப் பற்றாக்குறையாலும் லெனினுடைய உடல்நிலை மோசமடைந்தது.

16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்

லெனின் பட்டினி கிடப்பது கிராமங்களில் இருந்த மக்களுக்கு தெரிய வந்தது. அதேநேரத்தில் அவருடைய பிறந்த நாளும் நெருங்கியது. லெனினுக்கு உழவர்கள் பரிசளிக்க தங்களால் இயன்ற உணவுப் பொருட்களைத் திரட்டினார்கள். ஆனால் தலைநகர் எதிரிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. உழவர்களின் பிரதிநிதிகள் காட்டு வழியே நடந்தனர். எதிரியின் வளையத்தை தந்திரமாக உடைத்துக் கொண்டு தலைநகரை அடைந்தனர்.

ஏராளமான உணவுப் பொருட்கள் அவர் வீட்டின் முன் குவிந்தது. லெனின் உழவர்களுக்கு நன்றி சொன்னார். ஆனால் உணவுப் பொருட்களைத் தொடவில்லை. பள்ளியில் பயிலும் குழந்தைக்களுக்கு அவற்றை விநியோகிக்கும்படி உத்தரவிட்டார். தான் எப்போதும் சாப்பிடுவதும் போல கால் வயிறு கூட நிரம்பாத அளவுக்கு உப்புசப்பற்ற கஞ்சி குடித்தார்.

லெனினுக்கு பரிசாக வந்த உணவுப் பொருட்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காத்தது. அனைத்தையும் விட குழந்தைகளின் நலனே முக்கியமானது என்ற லெனின் அடிக்கடி கூறுவார் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சி செய்ததும், அதை பாதுகாக்க போர் செய்வதும், எதிர்காலத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்பதற்காகத்தான் என்பதை அடிக்கடி நினைவுபடுத்துவார்.

கடும் பஞ்சத்திலும், போருக்கும் நடுவே ஆயிரக்கணக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டன. குழந்தைகள் அறிவாளிகளாக வளர்க்கப்பட்டனர். கல்விமுறை ஜனநாயகப்படுத்தப்பட்டது. மனப்பாடக் கல்வி ஒழிந்தது. மாணவர்களின் திறன்களை வளர்க்கும் கல்வி மலர்ந்தது. வளமான வருங்காலத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.

கடின காலம் மெதுவாக அகலத் தொடங்கியது. விவசாய உற்பத்தியும், தொழில் உற்பத்தியும் பெருகியது. இதே நேரத்தில் போர் முனையில் இருந்து வெற்றிச் செய்திகள் குவியத் தொடங்கின உழைக்கும் மக்கள் காட்டிய வீரத்தின் முன் எதிரிகள் கூலிப்படை தோற்று ஓடியது. 21 நாடுகளின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் பிரான்சும் வாலைச் சுருட்டிக் கொண்டு ஒடுங்கின.

ஆனால், இந்த வெற்றி சாதாரணமாக கிடைக்கவில்லை. நான்கு வருடங்கள் போர் நடந்தது. முப்பது லட்சம் செம்படை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.

17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை

போருக்கு பிறகு பூமியில் சொர்க்த்தை படைக்கும் முயற்சி தொடங்கியது ஆம் சோசலிசம் என்பது பூமியில் சொர்க்கத்தை ஏற்படுத்தும் முயற்சிதான். இதற்கு லெனின் திட்டம் தீட்டினார். நாடு முழுவதும் தொழிற்சாலைகள் தோன்றின. புதிய நகரங்கள் எழுந்தன. உற்பத்தி பல மடங்கு பெருகியது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. பட்டினி, வறுமை என்பவை பழைய வசயங்களாகி விட்டன. ஏழைகளே இல்லாத ஒரே நாடாக சோவியத் யூனியன் விளங்கியது.

இந்த நேரத்தில்தான் அந்த பேரிடி இறங்கியது. லெனின் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் படுத்த படுக்கை ஆனார். ஓய்வறியாத உழைப்பே இதற்கு காரணம். அவர் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது, வேலை செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. தான் இதுவரை செய்த வேலையை இனி யார் செய்வார் எனக் கவலைப்படத்தொடங்கினார்.

lenin-and-stalin.jpg ஆனால் அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. லெனினுடைய நெருங்கிய தோழரான ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். லெனினுடைய திட்டங்களை முறையாக அமல்படுத்தினார். லெனினைப் போலவே உழைக்கும் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்தார். விரைவிலேயே உலகின் முதல் வளர்ச்சி அடைந்த நாடாக சோவியத் யூனியனை மாற்றினார்.

ஸ்டாலினுடைய வேலைகள் லெனினுக்கு மன நிம்மதியைக் கொடுத்தன. ஆனால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமானது. கை, கால்கள் செயலிழந்து விட்டன. ஒவ்வொரு உறுப்பாக வேலை செய்வதை நிறுத்தியது. அவருடைய உடல்நிலை சீரடையும் என்று மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் லெனின் மரணம் அடைந்தார். அவருடைய உடல் முதல்முறையாக ஓய்வு கொண்டது. இறுதியாக அவரது உடலைக் காண பல இலட்சம் மக்கள் திரண்டனர். உலக நாடுகளின் தொழிலாளர்களும் ஏராளமாக வந்தனர்.

சோவியத் மக்கள் ஒரு முடிவு எடுத்தனர். உலகின் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்திய லெனினது உடலை அழியவிடக்கூடாது. சோவியத் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விவாதித்தனர். இரசாயனங்களின் உதவியுடன் ஒரு கண்ணாடி பேழையில் அவரது உடலைப் பாதுகாக்க முடிவு செய்தனர். நீண்ட நாட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த அவரது உடல் சமீபத்தில் தான் அகற்றப்பட்டது. வியர்வை சிந்தி உழைக்கும் கடைசி மனிதன் இருக்கும் வரை லெனினது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

lenin-among-children-salute_1918may.jpg உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளாகிய நாம் மார்க்கிய ஆசான் லெனின் வழியை பின்பற்றுவோம். பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் அணி திரள்வோம் மார்க்சிய -லெனினிய - மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! நம் நாட்டிலும் ஒரு புரட்சியை நடத்தி முடிப்போம். சமூக மாற்றத்தை நிகழ்த்தி காட்டுவோம்! நவம்பர் -7 புரட்சி தினத்தில் உறுதியேற்போம்.

நன்றி - புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

Posted by சுனா பானா

http://longlivelenin.blogspot.in/

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.