Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பொறிக்குள் சிக்கும் அபாயம் - இதய சந்திரன்

Featured Replies

உலகளவில், 2011 ஆம் ஆண்டிற்கான படைத்துறைச் செலவீனம் தென் ஆசியப் பிராந்தியத்தில் மிக உயர்வாக இருப்பதாக ஸ்ரொக்கோம் அனைத்துலக சமாதான ஆய்வு மையம் (SIPRI) தெரிவிக்கிறது. அது பாகிஸ்தானில் மொத்த உள்ளூர் உற்பத்தியின் 2.8 சதவீதமாகவும், இந்தியாவில் 2.7 சதவீத இருக்கும் அதேவேளை, இலங்கையில் 3 சதவீதமாக உள்ளது.

ஆகவே, உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்தாலும் இலங்கையின் படைத்துறைச் செலவு அதிகரிப்பதையிட்டு உலக வங்கியோ அல்லது அனைத்துலக நாணய நிதியமோ கேள்வி கேட்பதில்லை.

ஆனாலும், இறுதிக் கொடுப்பனவான 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது அனைத்துலக நாணய நிதியம்.

இலங்கை ரூபாய் நாணயத்தின் பெறுமதியும் வீழ்ச்சியடைகிறது. அதேவேளை,அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தேயிலையின் விலை உலக சந்தையில் சரிவினை எதிர்கொள்கிறது.

2011இல் 48.9 பில்லியன் டொலர்களை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கிய இந்தியாவின் நகர்விற்கு, அண்டை நாடுகளுடனான முறுகல் நிலை முக்கிய காரணியாக இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், திறைசேரியில் இருக்கும் அந்திய செலாவணி, மூன்றரை மாதத்திற்கான இறக்குமதிக் கொடுப்பனவிற்கு போதுமானதாக இருக்கும் ஒரு நாட்டில், பாதுகாப்பிற்கு மொத்த உள்ளூர் உற்பத்தியில் 3 சதவீதத்தை ஒதுக்குவது பொருத்தமாகப்படவில்லை.

அத்தோடு அக்னி ஏவுகணையை விட மிகவும் சக்திவாய்ந்த "காப்ரால்' ஏவுகணையொன்று இலங்கையில் காணப்படுவதாகவும், அது நாட்டை அழிக்கும் சக்தி படைத்தது என்று மத்திய வங்கி ஆளுநரை குறிவைத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்து, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக் காட்டுவதாகப் பார்க்கலாம்.

உள்ளூரில் வேலை வாய்ப்பற்ற மக்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக, கொரிய மொழி, சீன மொழியை பாடவிதானத்தில் இணைக்கும் திருப்பணியும் நடைபெறப் போவதாக செய்திகள் கூறுகின்றன.

ஏற்கெனவே 23,000 இலங்கையர்கள், தென்கொரியாவில் பணிபுரிவதாக, வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பெருமைப் படுகின்றார்.

பொருளாதார வளர்ச்சி 8 வீதமாக இருக்கும் ஒரு தேசத்தில் வாழும் மக்கள், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பினைத் தேடிச் செல்வது ஆச்சரியமாகவிருக்கிறது.

நாட்டில் உட்கட்டுமானப்பணிகள் நடைபெறுகிறதோ, இல்லையோ புத்த விகாரைகள் கட்டும் பணி தடையின்றி முன்னெடுக்கப்படு கிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் இலங்கையானது இன்னுமொரு சிங்கப்பூராய் மாறுமென்று மகிழ்ச்சியடையும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனுக்கு நாடு எதிர்நோக்கும் பொருளாதார சிக்கல் குறித்து புரியவில்லை.

பள்ளிவாசல்களை உடைப்பது, புனித பிரதேசங்களில் ஏனைய தேசிய இனங்களின் மதச் சுதந்திரத்தை நிராகரிப்பது போன்று பெருந்தேசியவாத விரிவாக்கத்தின் ஊடாக தேசிய இன நல்லிணக்கத்தை உருவாக்க முடியாதென்பதை, இலங்கையை சிங்கப்பூராக்க விரும்பும் அரசியல்வாதிகள் புரிந்துகொள்வதில்லை. அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கு தனியான நிர்வாக அலகு வழங்கும் நடவடிக்கையை இடைநிறுத்தக்கூடாதென முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி அவர்கள் உரிமைக்குரல் எழுப்பும்போது, அதனை இனவாதமாகக் சித்தரிக்க சிலர் முயல்கின்றார்கள்.

மாகாணசபைக்கு காணி மற்றும் காவல்துறை உரிமைகள் வழங்குவது, பாரிய ஆபத்துகளை ஏற்படுத்துமென்று இதே நபர்கள் எச்சரிக்கின்றார்கள்.

ஆனாலும், உரிமை கோருவது ஆபத்தாக முடியுமென அங்கலாய்ப்பவர்கள், யாருடைய இறைமையைக் காப்பாற்ற முயற்சிக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. இவைதவிர, கலாசார இன அழிப்பு என்பது, ஒற்றையாட்சிக்குள் எவ்வாறு திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நோக்கினால், தம்புள்ள பள்ளிவாசல் சம்பவம் பொருத்தமான விளக்கத்தைத் தருமென நம்பலாம்.

கண்டலம சந்தியில் அமைந்துள்ள அப்பள்ளிவாசல் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டதென்றால் அதனைச் சட்ட பூர்வமாகச் சந்தித்திருக்கலாம். புத்த பிக்குகள் புடைசூழ ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் திரண்டு வந்து, 60 வருட கால பழைமைவாய்ந்த வழிபாட்டுத் தலமான பள்ளிவாசல் ஒன்றினை அகற்ற முயன்ற விவகாரம், பெருந்தேசிய இனவாத மேலாதிக்கம் எவ்வளவு தூரம் இலங்கையில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

பௌத்தர்களின் புனித நகரில் வேறெந்த மத வழிபாட்டுத் தலங்களும் இருக்கக்கூடாதென்கிற மேலாண்மைக் கருத்து நிலை, இவ்விவகாரத்தில் புதைந்து கிடப்பதைக் காணலாம்.

மாதகலில், புத்தரின் புனித வலயமொன்று உருவாக்கப்படுவதாகவும், அதன் நிர்மாணப் பணிக்காக கொழும்பிலிருந்து கட்டடக்காரர்கள் படையெடுப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. திருமலை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நீண்ட காலமாக இருக்கும் பிள்ளையாருக்கும் இடைத்தங்கல் முகாமொன்று தயாராவதாகச் சொல்லப்படுகிறது.

ஆயினும் எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய இனங்களின் கலாசார பண்பாட்டு அடையாளங்களை அழிக்க முனையும் பெருந்தேசியவாத சக்திகளை, நவதாராண்மைவாத உலக மயமாக்கிகளும் கண்டுகொள்வதில்லை.

அவர்களின் கவலை வேறு. 252 மில்லியன் டொலர் அணை (DAM) கட்டும் ஒப்பந்தம், தமக்குக் கிடைக்காமல் சைனோஹைட்ரோ (SINOHYDRO) என்கிற சீனக் கம்பனிக்கு கிடைத்துவிட்டதே என்கிற சோகம்.

1.5 பில்லியன் டொலர் துறைமுக கட்டுமான ஒப்பந்தமும், 100 மில்லியன் டொலர் பெறுமதியான வடக்கில் பாதை அமைக்கும் ஒப்பந்தமும் செஞ்சீனத்திற்கு சென்றதால் அதன் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கின்றதே என்கிற பெருங்கவலை.

ஹிந்தியைப் படிப்பிக்காமல் சீன, கொரிய மொழியைக் கற்பிக்கின்றார்களே என்றும் ஆதங்கப்படலாம்.

ஆனால், யுத்தம் முடிவடைந்த பின், சீனாவின் முதலீட்டு ஆதிக்கம் மட்டுமல்லாது பௌத்த, சிங்கள பேரினவாதத்தின் ஆதிக்கமும் சமாந்தரமாக காலூன்றுவதை அம்பாந்தோட்டையிலிருந்து தம்புள்ள வரை காணக்கூடியதாகவுள்ளது.

இங்கு சீனாவின் பொருளாதார ஆதிக்கம் என்கிற விடயம் பெரிதாகப் பேசப்பட்டாலும், இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகம் கூடுதலாக மேற்குலகில் தங்கியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.

மத்திய வங்கி வெளியிட்ட 2011ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இவை தெளிவாக புள்ளிவிபரங்களோடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கான ஆடை ஏற்றுமதி 2.019 பில்லியன் டொலர்களாகவும், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 1.574 பில்லியனாகவும், ஏனைய நாடுகளுக்கு 394 மில்லியன்களென்றும் உள்ளது. ஆக மொத்தம் மேற்குலக்கிற்கான ஆடை ஏற்றுமதி 3593 மில்லியன் டொலர்களாகும்.

ஏசியன் கிளியரிங் யூனியனில் உள்ள (Asian Clearing Union) பங்களாதேஷ், பூட்டான் , இந்தியா, ஈரான், மாலைதீவு, மியன்மார், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற பெரும்பான்மையான இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான கடந்த வருடமொத்த ஏற்றுமதி 877 மில்லியன் டொலர்களாகும்.

ஆனால், அமெரிக்காவிற்குமான மொத்த ஏற்றுமதி 2.145 பில்லியன் (2145 மில்லியன்) டொலர்களாவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மொத்த ஏற்றுமதி 3.576 பில்லியன் (3576 மில்லியன்) டொலர்களாக இருப்பதை நோக்கும்போது, ஏற்றுமதி வர்த்தகத்தில் மேற்குலகிலேயே இலங்கை பெரிதும் தங்கியிருப்பதைக் காணலாம்.

ஆகவே, என்னதான் அமெரிக்க ஏகாதிபத்திய கோஷங்களை சிங்கள மக்கள் முன் முழங்கித் தள்ளினாலும், திரைமறைவில் ஜி.எல்.பீரிஸ் போன்றோர் முரண்நிலையைத் தணிக்கும் வகையில், மேற்குலகோடு பேசுகின்றார்கள் என்பது பலருக்குத் தெரிவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியொன்றை உருவாக்க, பேரினவாதச் சிந்தனை கொண்ட எதிர்கட்சியினரை அறை கூவல் விடுத்து அரசு அழைப்பது, வாக்குவங்கி சரிந்து விடாமல் தடுப்பதற்கே அன்றி பிறிதொரு பின்னணியும் அதற்கில்லை என்பதே உண்மையாகும்.

இவைதவிர, சங்கரி-லா தொடக்கம் முஸ்தபா வரை, நட்சத்திர விடுதிகளை கட்டும் பின்புலத்தில், உல்லாசப் பயணிகளின் வருகை முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம்.

உல்லாசப் பயணிகள் குறைந்தளவு வருகை தரும் நாடுகளில் இந்தப் பன்னாட்டு கம்பனிகள் பல மில்லியன் டொலர்களை முதலிட முன்வராது.

ஆகவே, மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் உல்லாசத்துறை குறித்து வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களைப் பார்த்தால் அங்கும் மேற்குலகின் ஆதிக்கமே அதிகம் தென்படுகிறது. 2007இல் 494 ,008 ஆகிய இருந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 2011இல் 855,975 ஆக உயர்ந்துள்ளது.

இதில் மேற்கு ஐரோப்பாவிலிருந்து 315, 210 பேரும் (2011), கிழக்கு ஐரோப்பாவிலிருந்து 49,249 பேரும், கனடா (24,671), அமெரிக்கா (24,386), அவுஸ்திரேலியா (41,728), நியூஸிலாந்து (4,212) என்று நீண்டு செல்லும் பயணிகள் வருகைப் பட்டியலில் குறிப்பிடத்தக்கதொரு விடயமும் உண்டு.

அதாவது பிரித்தானியாவிலிருந்து மட்டும் கடந்த ஆண்டு 106,082 உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள். அதனை கோவில் திருவிழாக்களே உறுதிப்படுத்தும்.

அடுத்ததாக ஆசிய நாடுகளை நோக்கினால் வருகை தந்த 333,841 பேரில் 171,374 பேர் இந்தியாவிலிருந்து வந்துள்ளார்கள். இங்கு எல்லாமே "அந்த மாதிரி' இருக்கிறதென சுஸ்மா சுவராஜ் குழுவினர் இந்திய ஊடகங்களுக்கு சொன்ன பாராட்டுச் செய்தியால், 2012 இல் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.

மொத்தமாக 668,343 பேர் உல்லாசப் பயணம் மேற்கொண்ட அதேவேளை, 68,097 பேரளவில் வியாபாரம் நிமித்தம் பயணித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்நிய செலாவணியை அதிகளவில் ஈட்டித்தரும் மேற்குலகை, எழுந்தமானமாக இலங்கை புறக்கணிக்க முன்வருமாவென்று தெரியவில்லை. மேற்குலகால் வரும் வருவாயை பிரதியீடு செய்யக்கூடிய வகையில் இந்தியா -சீனாவின் பங்களிப்பு அமையுமாவென்கிற கேள்வியும் எழுகிறது.

ஏனெனில், இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்து செல்வதாக வரும் செய்திகள், அவற்றின் இறக்குமதி வலுவை குறைத்துவிடும் சாத்தியமுண்டு என்கிற விடயத்தையும் உணர்த்துகிறது.

இதைதவிர, ஆசியாவில் உருவாகி வரும் பாதுகாப்பு குறித்தான போட்டிகள், அந்நாடுகளில் படைத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கிறது.

2002இலிருந்து கடந்த ஆண்டு வரை தனது படைத்துறைக்கான செலவீனங்களை 66 தசவீதமாக அதிகரித்துள்ளது இந்தியா. அதேபோன்று, தென் சீனக் கடலில் உருவாகும் சீனாவுடனான முறுகல் நிலையால், 2003 இலிருந்து 2011 வரை தனது படைத்துறை நிதி ஒதுக்கீட்டினை 82 சதவீதமாக அதிகரித்துள்ளது வியட்னாம்.

ஆகவே, அடுத்துவரும் ஆண்டுகளில் ஆசிய வல்லரசுகள் யாவும், அதிகளவு நிதி ஒதுக்கீட்டினை படைத்துறை விரிவாக்கத்திற்கு ஒதுக்கினால் இலங்கை போன்ற சிறிய நாடுகளின் வெளியுறவுக் கொள்கை பெரும்பொறிக்குள் அல்லது சிக்கலிற்குள் தள்ளப்படலாம்.

நன்றி-வீரகேசரி

http://www.seithy.com/breifNews.php?newsID=59295&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.