Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

The way back ஆங்கில சினிமா (சுதந்திர வேட்கையுடன் நெடும் பயணம்...)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

The way back ஆங்கில சினிமா

The-Way-Back-2011.jpg

சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட.

Janusz (Jim Sturgess)

சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள்.

மறுபுறத்தில் விசாரணை செய்யும் இராணுவ அதிகாரியின் இறுகிய முகம்.

“உன் மனைவியே நீ அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினாய் என்கிறாள். இப்பொழுது நீ குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?”

“நீங்கள் அவளுக்கு என்ன செய்தீர்கள்” எனக் கேட்கிறான். விடை கேள்வியாக, இல்லை என மறுப்பது போலத் தலை ஆட்டிக்கொண்டே.

அவளாகச் சொன்ன சாட்சியம் அல்ல. அவனுக்கு எதிராகச் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறாள். ஜனநாயக மரபுகள் குழிதோண்டிப் புதைக்கபட்டு, ராணுவம் நீதி வழங்கும் சூழலில் இதுதான் நடந்திருக்கும் என்பது சொல்லாமலே புரிகிறது.

படம் இவ்வாறுதான் ஆரம்பித்திருந்தது.

1940ல் சைபீரியன் குலாக்கு

(gulag)

சிறைக்கு மனித மந்தைகளாக அனுப்பப்படுபவனில் அவனும் ஒருவனாகிறான். சைபீரியாச் சிறை என்ற பெயர் சொன்னாலே மரணம் வந்துவிடும் அக்காலத்தில். கட்டங்களில் அடைத்து வைக்க வேண்டிய சிறை அல்ல. திறந்தவெளிச் சிறை. 5 மில்லியன் சதுர வெளி கொண்ட பாரிய பிரதேசம். சைபருக்குக் கீழ் பல பாகைகள் என்றதான கடும் குளிரில் விறைத்தே பலர் மரணடைவார்கள். ஜீவிதத்திற்கும் மரணத்திற்குமான போட்டி நிறைந்த சூழலில், அதன் பனி படர்ந்த பெருவெளிகளைத் தாண்டி எவனும் தப்பிச் செல்வதை நினைக்கவே முடியாது.

ஆனால் அவனும் இன்னும் ஆறு பேரும் சேர்ந்து அதிலிருந்து தப்பிச் செல்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சியிலிருக்கும் ரஷ்யாவின் சைபீரியாச் சிறையிலிருந்து தப்பி மொங்கோலியா நாட்டைச் சென்றடைவதுதான் அவர்களது இலக்கு.

தங்களிடையே இரகசிமான தொடர்பாடல்கள், மிகத் துல்லிமான திட்டமிடல், நீண்ட பயணத்திற்கான துரித ஏற்பாடுகள் யாவும் செய்யப்படுகின்றன. ஒளி கொடுக்கும் ஜெனரேட்டரின் செயற்பாடு இவர்களால் நிற்பாட்டப்பட்டு, மாற்று ஒளி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் காவலாளிகளால் செய்யப்படுவதற்கு இடையில் கிடைக்கும் 10 நிமிட இடைவெளியில் இவர்கள் தப்பியாக வேண்டும். நம்ப முடியாததைச் செய்து முடிக்கிறார்கள்.

இதற்குப் பிறகும் கால்நடையான அவர்களது 4000 மைலுக்கு மேலான தப்பிக்கும் முயற்சியில் பல உயிராபத்து மிகுந்ததும், திகிலூட்டக் கூடியதுமான பல சவால்களை எதிர் கொள்கிறார்கள். சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மரண வாயில்களை துச்சமெனத் தாண்டிச் செல்லும் ஞானிகளின் முயற்சி போன்றது. வியக்கவைக்கும் காட்சிகள். ஆனால் அவை யதார்த்தமாகக் காட்சிப்படுத்தப்படுகிறன.

-the-way-back.jpg

ஆனால் இவர்களை அழிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் காத்திருக்கின்றன. மனிதனால் செய்யப்பட்ட சூழ்ச்சிகள் அல்ல. கொடூரமான சீதோசன நிலை. வடதுருவத்தை அண்டிய பிரதேசத்தின் பரந்த வெளியும், விறைக்க வைத்தே கொல்லும் அடர்ந்த பனியின் ஆவேசமும் இவர்களை எதிர்கொள்கின்றன. அவற்றை எதிர்கொள்கிறார்கள். தாண்டுகிறார்கள்.

இந்த அயரவும் அசரவும் வைக்கும் பயணத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் ஒத்த கருத்துள்ள ஒரே தன்மையானவர்கள் அல்ல. மாற்றுக் கருத்துகளும், கொள்கை முரண்பாடுகளும் அவர்களிடையே இருக்கின்றன. இதனால் ஒருவருடன் ஒருவர் முரண்படவும் செய்கிறார்கள். ஆனால் சுதந்திரம் என்ற ஒரே குறிக்கோளால் ஒன்றுபடுகிறார்கள். இந்தப் பயணம் அவர்களது உடலைப் பாதிப்பது போலவே மனத்தையும் பாதிக்கிறது.

இந்த உடல் உளப் பாதிப்புகளை திரையில் கொண்டுவருவது மிகவும் சிரமமானது. ஆயினும் பொருள் செறிந்த வசனங்களும், சிறந்த நடிப்பும் கைகொடுக்கின்றன. அவர்களது உடல்உள மாற்றங்களை புலன் காட்சிகளாக கொண்டு வருவதில் அற்புதமான ஒப்பனை உதவுகிறது. முக்கியமாக அவளது மரணக் காட்சி. கடும் அனல்காற்றால் துவண்ட அவர்களது முகங்கள் ஆகியவற்றை நம்பவைக்கும் விதமாக காட்சிப்படுத்துவதில் ஒப்பனை கைகொடுத்திருக்கிறது.

இவர்களில் ஒருவனான இரவுப் பார்வையற்றவன் வழியில் குளிரில் விறைத்து இறந்துவிடுகிறான். வழிதவறிய அவன் இவர்களைத் தேடியலையும்போது இது நடக்கிறது. இவர்கள் இருந்த இடத்திற்கு மிக அருகிலேயே அவன் மரணித்துக் கிடப்பதைக் காண்கிறோம். மரணத்திற்கும் வாழ்வுக்குமான இடைவெளி சில அடி தூரமாக அக்கணத்தில் இருந்தது. ஆனாலும் அவனால் இயற்கையை வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் இயற்கையின் ஆவேசங்களுக்கு எதிராகப் பல்லாயிரம் மைல் தூரத்தை தாண்டி சுதந்திரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டிருந்தார்கள்.

வழியில் இன்னொரு பெண்ணும் இவர்களோடு இணைகிறாள். பாலைவனத்து வெம்மை தாங்காது அவளும் வழியில் மரணிக்கிறாள்.

பயணத்திற்கு இடைஞ்சலாக இருந்தவை பனியும் வெயிலும் மட்டுமல்ல. பசியும் பட்டினியும் அவர்களைக் காவுகொள்ளத் துடிக்கின்றன. மீண்டும் அகப்படுவதிலிருந்து தப்புவதற்காக மனித சஞ்சாரமற்ற பிரதேசங்கள் ஊடாகப் பயணிப்பதால் உணவு கிடைப்பது பெரும்பாடாகிறது. ஊர்ந்து செல்லும் பாம்பையும் அவர்களது பசியின் கொடுமை விட்டு வைக்கவில்லை. நஞ்சுள்ள அதன் தலையை வெட்டி எறிந்துவிட்டு நெருப்பில் சுட்டு உண்கிறார்கள்.

மற்றொரு தருணம் சற்று அருவருப்பானது என்றால் கூட அவர்களுக்குச் சாத்தியமானது அந்நேரத்தில் அது ஒன்றுதான். ஓநாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு ஒதோ ஒரு மிருகத்தைப் புசித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் ஒன்று சேர்ந்து அவற்றை விரட்டியடித்துவிட்டு அந்த ஊனைத் தாங்கள் பங்கிட்டு பசி ஆறுகிறார்கள்.

இவ்வாறு நடக்க முடியுமா என நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவற்றை யாதார்த்தமான செயற்பாடுகள் ஊடாகத் திரையில் காட்டி எம்மை மலைக்கவும் திறந்த வாய் மூடாது பார்த்திருக்கவும் செய்த நெறியாளர்

Peter Weir

பாராட்டுக்குரியவர்.

"The Truman Show", "Dead Poets Society",

ஆகிய சினிமாக்கள் அவரது குறிப்பிடத்தக்க முன்னைய படைப்புகளாகும். சுமார் ஆறு வருடங்களுக்குப் பின்னான இப்படத்திலும் அவரது கைவண்ணம் பளிச்சிடுகிறது.

சோவியத் யூனியன், ஸ்டாலின், கொம்யூனிசம் ஆகியவற்றிக்கு எதிரான அரசியல் சினிமாதான் இது. அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை அவர்கள் செய்வதாகக் காட்டுகிறது. கோட்பாட்டு ரீதியாக நாம் அதை ஏற்று கொள்ள வேண்டியதில்லை. இன்றுள்ள உலக நடப்பில் இப்படத்தின் அரசியல் கூடச் செல்லாக் காசாகிவிட்டது. மேற்கு நாடுகளின் குள்ள நரித்தனமான அரசியலும் எமக்குத் தெரிந்ததுதானே.

ஆனால் இந்தச் சினிமா என்னைக் கவர்ந்ததற்குக் காரணம் மிக அற்புதமான இயற்கைக் காட்சிகளைக் கொண்ட படப்பிடிப்பும், யதார்த்தமான சித்தரிப்பும்தான். அதற்கு மேலாக அது கொண்டு வரும் மற்றொரு செய்தி முக்கியமானது. விடாமுயற்சியும் திடசங்கற்பமும் இருந்தால் செய்வற்கு அரியதையும் செய்து முடிக்கலாம் என்பதாகும். மனிதனால் முடியாதது எதுவுமில்லை.

இது ஒரு உண்மைக் கதை என்று சொல்லப்படுகிறது.

Slavomir Rawicz

முன்பு எழுதி வெளிவந்த சுயசரிதை நூலான

"The Long Walk”

இருந்துதான் இப்படத்திற்கான கதை எடுக்கப்பட்டது. ஆயினும் வேறு பலரின் அனுபவங்களும் கேட்டறியப்பட்டனவாம்.

பஞ்சு போலச் சொரிந்து கொண்டேயிருக்கும் பனித்துளிகள். மூடி நிற்கும் கனத்த வானம், பனி படர்ந்த வெறும் தரைகள். உறைந்து கிடக்கும் நதிகள். பனியால் ஆடை போர்த்தி இலையுதிர்த்தி உறைந்திருக்கும் நெடு மரங்கள்.

the+way+back.jpg

நீண்ட பயணத்தின் பின் சூழல் மாறுகிறது. வனப்புடைய இயற்கையான நிலப்பரப்புகள், மைல் கணக்கான தூரத்திற்கு நீரையே காண முடியாத வரண்ட வனாந்தரங்கள், மனிதனையே விழுங்கி ஏப்பமிடக் கூடிய மலைப் பாம்புகள் போன்ற மணற் புயல்கள். மலைகள், தேயிலைத் தோட்டங்கள். காணக்கிடைக்காத இயற்கையின் அற்புத கோலங்கள் எங்கள் முன் விரிகின்றன.

ஒருவாறு மொங்கோலிய எல்லையை எட்டிய மகிழ்ச்சியில் மூழ்கிய இவர்களுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. பாதையில் உள்ள வரவேற்பு வளைவில் ஸ்டாலினதும், மாவோவினதும் சித்திரங்கள். இனி அங்கு போக முடியாது. அங்கும் கம்யூனிச ஆட்சி. அரசியல் புகலிடம் பெறமுடியாது. எனவே இந்தியாவுக்குப் பயணமாக முடிவெடுக்கிறார்கள். பனியையும், பாவைவனத்தையும் தாண்டி சுதந்திரத்தை நெருங்கி வந்தவர்கள் எதிரே பெரும்தடையாக உயர்ந்து நிற்கிறது இமயமலை.

இறுதிக் காட்சி. அவன் தனது வீட்டிற்குத் திரும்புகிறான். அதே வீடு, அதே விட்டு வாசல். அதே கதவு எல்லாமே அவ்வாறுதான் இருக்கின்றன. உள்ளே செல்கிறான்.

ஆனால் அங்கே! ஒரு முதியவள் சோகம் அடர்ந்த முகத்தோடு அமைதியாக அமர்ந்திருக்கிறாள். யாரோ வரும் அசமந்தம் கேட்டு நிமிர்ந்த அவள் புரியாத முகத்தோடு அவனைப் பார்க்கிறாள். புன்னகைத்த அவன் முதியவனாக அவள் கைகள் மேல் தன் கை வைத்ததும் நேசமானதும் அவளுக்குப் பரிச்சமானதுமான அவனது ஸ்பரிசத்தில் அவள் முகம் மலர்கிறாள். பல தாசப்தங்களாக அவன் நினைவுகளை மட்டும் சுமந்து காத்திருந்த அவளுக்கு பலன் கிட்டிவிட்டது.

பொய் சொல்லியேனும் உயிரோடு இருந்ததால்தான் அது சாத்தியமானது.

உயிருக்காப் பொய் சொல்வது கோழைத்தனமானது அல்ல. அது ஒரு தந்திரோபாய முயற்சிதான். ஏனெனில் உயிரோடு இருந்தால் வெல்வதற்கான வாய்ப்பு மீண்டும் கிடைக்கலாம். மரணித்துவிட்டால் மீண்டும் வெல்வதாற்கான வாய்ப்பே இல்லாத இறுதித் தோல்வியாகும்.

எம்.கே.முருகானந்தன்

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.