Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோஸ்மேன் பாலத்தின் நான்கு நாட்கள் : The Bridges of Madison County

Featured Replies

The old dreams were good dreams; they didn't work out, but glad I had them.

#Robert from The Bridges of Madison County

ஒரு வறண்ட மதிய வேளையில், அமெரிக்காவில் மேடிசன் கவுண்ட்டில் உள்ள ஐவா எனும் கிராமத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில், ப்ரான்செஸ்கா இறந்த ஓரிரு நாட்களில், அவளுடைய காப்புப்பெட்டகத்தை, அவளின் பிள்ளைகளிடம் (மகன் மைக்கேல் மற்றும் மகள் கரோலின்) கொடுத்துச் செல்கின்றனர், வங்கியாளர்கள்.அதில் சில கடிதங்களும், புகைப்படங்களும் இருக்கின்றன. தங்களது குடும்ப வழக்கிலேயே இல்லாத முறையான, இறந்தபின் உடலை புதைக்காமல் எரிக்கச் சொல்லி வேண்டும் அந்த கடிதத்தைப் படிக்கின்றனர். என் உடலை எரித்து அதன் சாம்பலை, ரோஸ்மேன் பாலத்தின் மீது தூவுங்கள். இது என் கடைசி ஆசை என்று தொடங்கும் அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வரிகளும் அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான விஷயங்களாக இருக்கிறது.

இரண்டு பெரிய பண்ணைகளைக் கொண்ட நம் குடும்பத்தில் தன் சாம்பலைத் தூவ நம் அம்மாவிற்கு வேறு இடமா கிடைக்கவில்லை? என்கிற கேள்வியும், குறிப்பாக ரோஸ்மேன் பாலத்தில் சாம்பலைத் தூவச்சொல்ல என்ன காரணமாக இருக்கும்? என்கிற ஆர்வமும், அம்மா, உயிரோடிருந்த பொழுது சொல்லாத இதை கடிதம் மூலமாக இறந்தபின் சொல்வது ஏன் என்கிற சந்தேகமும் இருவருக்கும் வருகிறது. கடிதத்தைத் தொடர்ந்து படிக்கின்றனர்.

நேஷனல் ஜீயோகிராபிக் சானலில் புகைப்படப்பிரிவில் பணியாற்றிய ராபர்ட் என்பவருடைய சாம்பலும் அங்கே தூவப்பட்டிருப்பதையும், அவர்மீதான காதலையும் இருவரும் பரிமாறிக்கொண்ட கடிதங்களின் வாயிலாக பிரான்செஸ்காவின் பிள்ளைகள் அறிந்து கொள்கிறார்கள். ஒரு சொல்லமுடியாத துயரம் அவர்களை பீடிக்கிறது. தந்தை மீது பரிதாபமும், தாயின் மீது அவமரியாதையும், ராபர்ட்டின் மீது கடுங்கோபமும் கொள்கின்றனர்.

என்னால் இதை என்னோடே புதைத்துக்கொள்ள முடியும் இருந்தாலும் மிகவும் நேசித்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளாத எந்த ஒரு விஷயமும் மனதை அழுத்திக்கொண்டேதான் இருக்கும். நான் இங்கே இறக்கி வைக்கவேண்டியது அவசியமாகிறது. இந்தக் கடிதத்தைப் படிக்கும்பொழுது என்மீதும் ராபர்ட்டின் மீதும் உங்களுக்கு அளவில்லாத கோவம் வரும் என்பது புரிகிறது. ஆனால் இது எப்படி நடந்தது? என்பதை அறியும் போதோ, என்னுடைய மூன்று நாட்குறிப்புகளையும் படிக்க்கும் போதோ உங்களுக்கு புரியக்கூடும். ஒருவேளை ராபர்ட்டின் மீது மரியாதையும் வரக்கூடும், என்னைப்போலவே….” இத்துடன் கடிதம் முடிகிறது.

the-bridges-of-madison-county2-credit-amblin-malpaso-the-kobal-collection-regan-ken.jpg

அப்பா உயிரோடு இருந்த பொழுதே, அம்மா வேறொரு மனிதரிடம் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதும், அந்த நான்கு நாள் உறவு படுக்கை வரை போயிருக்கிறது என்பதையும் அம்மாவே கைப்பட எழுதிவைத்த கடிதத்தின் மூலமாக அறிந்துகொள்ளும் பிள்ளைகளின் நிலை என்னவாக இருக்கும்? அதுவும் மகனும், மகளுமாய் அமர்ந்து இந்த கடிதத்தைப் படித்தால்? மகன் தாயின் மீது கடுமையான அவமரியாதை கொள்கிறான். ச்சீ, இதற்கு மேல் இந்த கருமத்தைப் படிக்காதே, எனக்கு அருவருப்பாக இருக்கிறது. அப்பா உயிரோடு இருந்தப்பவே... இப்படி…. ச்சே அம்மா ஒரு சரியான …… ” என்று திட்டுகிறான். அப்போது மகள் வேண்டாம்ண்ணா அந்த வார்த்தையை சொல்லாதே என்கிறாள்.

பின் அவன் ஆற்றாமையோடு “அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது, அந்த போட்டோகிராபர்தான் அம்மாவை போட்டோ எடுக்கிறேன் அப்படி இப்படின்னு எதாவது சொல்லி ஏமாத்தியிருப்பான் அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவன் செத்தான்” என்று கத்துகிறான் மைக்கேல் மேலும் “என்னால் இதற்கு மேல் கேட்க முடியாது, நான் கொஞ்சம் வெளிய போறேன், எனக்கு மூச்சுவிடவே சிரமமா இருக்கு” என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான். மைக்கேல் என்ன இருந்தாலும் ஒரு ஆண், அவனால் இதை ஜீரணிக்க முடியவில்லை, ப்ரான்செஸ்கா தாயாகவே இருந்தாலும் அவள் ஒரு பெண். ஒருவேளை தன் தந்தை இப்படி செய்திருந்தால், அவன் மனம் இவ்வளவு சஞ்சலப்பட்டிருக்காமல் இருந்திருக்கலாம். அவனுக்குத் தன் தாய் இன்னொருவனை விரும்பியிருக்கிறாள், அதுவும் தன் தந்தை உயிரோடு இருக்கும்போதே என்னும் காரணமே போதுமானதாயிருக்கிறது.

ஆனால் கரோலின் பொறுமையாக “அதற்கு அவசியமேயில்லை, ராபர்ட் ஏற்கனவே இறந்துவிட்டார், அவருடைய அஸ்தியும் ரோஸ்மேன் பாலத்தின் மீதுதான் தூவப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட்டு தொடர்ந்து படிக்கிறாள். அம்மா ஏன் இன்னொருவனை நேசித்தார் என்பதை மைக்கேலை விட கரோலினால் பொறுமையாக ஆராயமுடியும். காரணம், ஒரு பெண்ணின் உணர்வுகளையும், நியாயங்களையும் ஒரு பெண்ணாக நின்று பார்த்தால் மட்டுமே உணர முடியும். ஆக மைக்கேல் அங்கிருந்து போன பின்னரும் கரோலின் நிதானமாக தன் அம்மாவின் வலி நிறைந்த, பாரம் மிகுந்த பக்கங்களாலான டைரியை படிக்க ஆரம்பிக்கிறாள்.

நாட்குறிப்பின் வாயிலாக விரிகிறது ராபர்ட் & ப்ரான்செஸ்கா வின் அந்த நான்கு நாட்கள்.

1995-bridges-dvdcvr2-60.jpg

இத்தாலியின் ஒரு அழகிய கிராமத்துப் பெண்ணான ப்ரான்செஸ்கா, திருமணத்திற்கு பிறகு தன் கணவனின் விருப்பத்திற்கேற்ப, தன் விருப்பமான ஆசிரியர் தொழிலையும், மிகவும் நேசிக்கும் சொந்த ஊரையும் விட்டு அமெரிக்காவின் மேடிசன் என்ற பகுதியிலுள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு வருகிறாள். தன் கணவனுக்கு உதவியாக பண்ணையிலும் விவசாயத்திலும், தன் குழந்தைகளின் வளர்ச்சியிலும், தன்னை அர்பணித்துக் கொள்கிறாள். ஒரு நாள் மகளின் பள்ளியில் நடக்கும் ஒரு விழாவின் காரணமாக, தன் குழந்தைகளோடு கணவனும் நான்கு நாட்கள் வெளியூர் செல்கின்றனர். தனக்குப் பிடித்த ஐஸ் டீயோடு தனிமையை கடத்திக்கொண்டிருக்கையில், அந்த ஊரில் உள்ள மூடிய பாலங்களை தன் பத்திரிக்கைக்காக புகைப்படமெடுக்க வரும் ராபர்ட் கின்காய்ட், அருகிலுள்ள ரோஸ்மேன் பாலத்திற்கான வழி கேட்டு வருகிறார். சற்று குழப்பமான வழி என்பதால் தானே வழி காட்ட ராபர்ட்டோடு காரில் செல்கிறாள். சிறிய அறிமுகத்தோடு தொடங்கும் அவர்களின் உரையாடல், வெகு இயல்பாக தொடர்கிறது.

பேசிக்கொண்டிருக்கும்போதே ராபர்ட் விவாகரத்தானவன் என்பதை அறிகிறாள். தனது தொழில் காரணமாய் அவன் தேசாந்திரியாக அலைந்து திரிவது அவளை வசீகரிக்கிறது. மேலும் ராபர்ட்டின் முதிர்ந்த பேச்சும் தொடர்ந்து அவர்களின் உரையாடலுக்கு காரணமாக இருக்கிறது. அவர்களின் உரையாடல் எப்படியெனில் : பேச்சினூடே உன்னுடைய சொந்த ஊர் எது? என்று கேட்கிறாள். இத்தாலியில் உள்ள ஃபாரி என் ஊர், ஆனால் இங்கே யாருக்கும் அதைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் ஃபாரி ஒரு அழகான ஊர் என்கிறாள். அதற்கு ராபர்ட் “ எனக்குத் தெரியும், நான் அங்கே சிலகாலம் தங்கியிருக்கிறேன், வேலை விஷயமாக இத்தாலியில் சுற்றிக்கொண்டிருந்த பொழுது அந்த ஊரின் வழியாக செல்ல நேர்ந்தது, அந்த ஊரின் அழகைப் பார்த்து சில நாட்கள் அங்கேயே தங்க முடிவு செய்து, தங்கியுமிருந்தேன்” என்கிறார். ஃப்ரான்செஸ்கா ஆச்சர்யம் தாங்காமல், “உண்மையாகவா? யாரையுமே தெரியாத ஊரில், ஊர் அழகு பிடித்துப்போனதற்காக தங்கினீர்களா? உண்மையாகவா? என்று வியப்பு மேலிட கேட்டுக்கொண்டேயிருக்கிறாள்.

இப்படி வேறெந்த காரணமுமின்றி ஒரு ஊரின் அழகை ரசிப்பதற்காக மட்டும் அங்கே தங்கியிருப்பவனை அவளால் நம்பவே முடியவில்லை. அதன்பின் ராபர்ட்டின் மீது அவளையும் அறியாமலொரு அன்பு பிறக்கிறது. பாலங்களை புகைப்படமெடுக்கும் ராபர்ட்டை ரசித்துப் பார்த்துக்கொண்டேயிருக்கிறாள். இந்த நிகழ்வை தன் நாட்குறிப்பில் “அந்த ஒரு நொடி, நான் என்னைப் பற்றி நினைத்திருந்த எல்லா பெருமைகளும் மறைந்துவிட்டது, நான் என்னை மிகவும் சாதாரணமான ஒரு பெண்ணாகவே உணர்ந்தேன், ஆனாலும் நான் இப்பொழுதுதான் முழுமையடைகிறேன்” (And in that moment, everything I knew to be true about myself up until then was gone. I was acting like another woman, yet I was more myself than ever before) என அழகாக எழுதியிருக்கிறாள்.

புகைப்படமெடுத்துவிட்டு திரும்பும்பொழுது தன் வீட்டிற்கு ராபர்ட்டை அழைக்கிறாள். மீண்டும் அவர்களின் உரையாடல் தொடங்குகிறது. திருமணம் என்ற பந்தத்திலிருந்து மனைவியின் விருப்பத்திற்காக விவாகரத்து செய்துவிட்டு, மனம்போன போக்கில் அலைந்து திரியும் அவனது சுயஆளுமையும், விரும்பிய படி வாழும் அவரது கட்டுப்பாடற்ற மனநிலையும் பிரான்செஸ்காவை பெரிதும் ஈர்க்கிறது. போலவே, தனக்குப் பிடித்தமான ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு குடும்பத்திற்குள் தொலைந்துபோய் தன் சுய முகத்தை இழந்ததை, இதுவரை எவரிடமும் பகிர்ந்துகொள்ளாத தன் தனிமையை, ஆனாலும் புகாரற்ற அவளது வாழ்வை இயல்பாக ராபர்ட்டிடம் பகிர்ந்துகொள்ளும் ஃப்ரான்செஸ்க்காவின் மீது ராபர்ட்டிற்கும், ஒரு ஈர்ப்பு உருவாகிறது.

ஃப்ரான்செஸ்க்கா இதுவரை அவ்வளவு சந்தோசமாக உணர்ந்ததில்லை, ராபர்ட்டோடு இருக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கிறாள். அதுவரை ஒரு சாதாரணமான பெண்ணாக இருந்த அவளுக்கு, எந்த ஒரு நொடியும் அவளை அடைத்துவைக்காமல், அவளது சுய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒருவனை முதல்முறையாக சந்திக்கிறாள். பொண்ணுங்க வேணும்ன்னா வேணாம்ன்னு அர்த்தம் என்று விளையாட்டாக சொல்வதுண்டு, அந்த அளவிற்கு பெண்களின் மொழி அறிவது கடினம். மாறாக அவளது அக உணர்வுகளை ராபர்ட்டின் வார்த்தைகள் பிரதிபலிக்கிறது. ஃப்ரான்செஸ்காவின் மனது விரும்புவதை உணர்ந்து பேசுகிறார் ராபர்ட். இதனால், ராபர்ட்டை சந்திக்கும் அந்த நாள் வரை அவள் யாரிடமும் அப்படி பேசுவதில்லை, அவனிடம் பேசும்பொழுது மட்டுமே மனம் லேசாகி, புன்னகைத்தபடியே பேசுகிறாள். இருவரும் அறியாத நிலையில் மெல்ல காதல் துளிர்க்கிறது.

இருவரும் எதிர்பாராத ஒரு சூழலில் ராபர்ட், அவளை முத்தமிடுகிறார். இருவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும்போது, தவறை உணர்ந்து ராபர்ட் விலகுகிறார். உனக்கு விருப்பமில்லையென்றால் நாம் நல்ல நண்பர்களாகவே இருப்போம், இன்றிரவு நான் இங்கே தங்குவது சரியாக இருக்காது என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறார். ஆனால் ஃப்ரான்செஸ்கா அவரை சந்திக்க விரும்புகிறாள். ராபர்ட்டிற்கு போன் செய்து நீ இங்கேயே இரு என்று வெட்கத்தை விட்டு சொல்கிறாள். (குறிப்பு: இதைப்படிப்பவர்களுக்கு இது தவறாகத் தெரிந்தால், நான் சரியாக் சொல்லவில்லை என்றே அர்த்தம்). வெறும் உடல்கிளர்ச்சி என்ற விஷயத்தில் அடங்கிவிடாமல், ஒரு பெண்ணின் மனப்போராட்டமாக இதைப் பார்க்கவேண்டும், சொல்லப்போனால் இருவருக்குமே.

இருவருமே மெல்ல மெல்ல, ஒருவரிடம் ஒருவன் தன்னை இழப்பதை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கின்றனர். இது படுக்கைவரை தொடர்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் ராபர்ட் இந்த ஊரிலிருந்து சென்று விடுவார் என்கிற ஏக்கமே ராபர்ட்டின் மீது ஒரு கோபத்தை உருவாக்குகிறது. “நீ இங்கிருந்து சென்ற பின் நீ சந்தித்த பத்தோடு பதினோராவது பெண்ணாக நான் மாறிவிடுவேன், இல்லையா? இன்னும் இரண்டு நாட்களில் நீ போய்விடுவாய். நானோ, எப்படி வாழ்வேண்டுமென்று நீ கற்றுக்கொடுத்த இந்தக்காதலை சுமந்துகொண்டு காலம் முழுவதும் புழுங்கிக்கிடக்கவேண்டும், இல்லையா?” என்று கத்துகிறாள். மீண்டும் இந்த காதலில்லாத, ஒரு சராசரியான குடும்பத்தலைவியாக, தன் சுயமிழந்த ஒரு முகமூடியுடன் இனித் தொடரப்போகும் அந்த வாழ்க்கை, அதைப்பற்றிய நினைவுமே அவளை அலைக்கழிக்கிறது.

ராபர்ட்டிற்கும் அதைப்போலவே ஒரு நிலைமை. ஆனால் ராபர்ட் கிளம்பும் நேரம் வருகிறது மிகுந்த யோசனைக்குப்பின் ராபர்ட், ஃப்ரான்செஸ்காவை தன்னுடனே வந்துவிடும்படி அழைக்கிறார். முதலில் சம்மதித்தாலும் பின் யோசிக்கிறாள். இனி அமையப்போகும் அந்த புதிய வாழ்க்கைக்காக, இத்தனை வருடங்கள் வாழ்ந்த அந்த வாழ்க்கையை புறக்கணித்து விட்டு வருவது இயலாது என உணர்கிறாள். “நான் இப்பொழுது உன்னோடு வந்துவிட்டால், இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை பொய் என்று ஆகிவிடும். போலவே, ஒருவேளை நாளை என் மகள்கூட காதல் வயப்படலாம், அப்படி அவள் காதலிக்கும் நிலையில் காதல் என்ற வார்த்தை என்ன அர்த்தம் கொள்ள முடியும்? எனவே வேண்டாம் ராபர்ட் நான் உன்னோடு வர இயலாது, ஆனால் இந்த நான்கு நாட்களை என் வாழ்வின் கடைசி கணம் வரை மனதில் வைத்திருப்பேன்.இதிலிருந்து என் சந்தோசத்தை மீட்டெடுத்துக்கொள்வேன் (I want to keep it forever. I want to love you the way I do now the rest of my life. Don't you understand... we'll lose it if we leave. I can't make an entire life disappear to start a new one. All I can do is try to hold onto to both. Help me. Help me not lose loving you)” என்று யதார்த்தமாக ராபர்ட்டிற்கு புரியவைக்கவும் செய்கிறாள். ராபர்ட் கிளம்புகிறான். கண்ணீர் ததும்ப அவனை அனுப்பிவிட்டு குடும்பத்திற்காக காத்திருக்கிறாள்.

பின்னொரு நாள், ராபர்ட்டை மீண்டும் சாலையில் சந்திக்க நேர்கிறது. கணவனோடு இருக்கும் ஃப்ரான்செஸ்காவின் காரின் முன், சிக்னலில் ராபர்ட்டின் கார் நிற்கிறது. ராபர்ட், ஃப்ரான்செஸ்கா கொடுத்த செயினை காரின் கண்ணாடியில் மாட்டிவைத்து விட்டு கண்ணாடி வழியாக அவளையே பார்த்துக்கொண்டு நிற்கிறார். சிக்னலில் பச்சை விழுகிறது, ராபர்ட்டின் கார் நகர மறுக்கிறது, ஃப்ரான்செஸ்காவின் கணவன் ஹாரனை அழுத்துகிறார். ஃப்ரான்செஸ்கா அழத்தொடங்குகிறாள். கணவனிமிருந்து மறைத்துக்கொண்டு கண்ணீரை துடைத்துக்கொள்கிறாள்.மீண்டும் ஃப்ரான்செஸ்காவின் கணவன் ஹாரனை அழுத்துகிறார். சில வினாடிகளுக்குப் பிறகு ராபர்ட்டின் கார் மெல்ல நகர்கிறது. இவர்களின் பாதையிலிருந்து விலகி புள்ளியாய் மறைகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு, கணவன் இறந்து தனியாக வாழும் ஃப்ரான்செஸ்காவிற்கு ஒரு பார்சல் தபாலில் வருகிறது. அதில் ராபர்ட் இறந்துவிட்டார் என்கிற செய்தியும், அவளை எடுத்த புகைப்படங்களும், கேமிராவும் இருக்கிறது. ஃப்ரான்செஸ்காவை பிரிந்து ராபர்ட் வாழ்ந்த வாழ்க்கைய அந்த கடிதம் சொல்கிறது, மேலும் என் சந்தோச நாட்களை பரிசளித்த ரோஸ்மேன் பாலத்தின் இதை தூவுங்கள் என்கிற ராபர்டின் அஸ்தியும் இருக்கிறது.

மூன்று நாட்குறிப்புகளும் படித்து முடிக்கப்பட்டுவிட்டன. கனத்த மனதுடன் மைக்கேலும் , கரோலினும் அம்மாவின் அஸ்தியை கையில் வைத்துக்கொண்டும் நிற்கின்றனர். பின் எங்கு தன் சுய அடையாளத்தை ஃப்ரான்செஸ்கா மீட்டெடுத்தாளோ, எங்கு தன் வாழ்வின் அற்புதமான, சந்தோச நாட்களைக் கண்டடைந்தாளோ, அதே ரோஸ்மேன் பாலத்திலிருந்து அவளது சாம்பல் ”நான் என் வாழ்நாள் முழுவதும் என் குடும்பத்திற்காகவே வாழ்ந்தேன், இறந்தபின் எஞ்சும் என் சாம்பலையாவது ராபர்ட்டிற்கு கொடுக்க விரும்புகிறேன்” எனும் அவளது விருப்பப்படியே தூவப்படுகிறது. காற்றில் சாம்பல் மெல்ல கரைகிறது, அழகான இசையோடு படம் நிறைவடைகிறது.

The_Bridges_of_Madison_County_by_cinoworus.jpg

ராபர்ட்டாக க்ளிண்ட் ஈஸ்வுட், (வெஸ்டர்ன் மூவிகளின் ஆல் டைம் பேவரைட் கெளபாய்) ஃப்ரான்செஸ்காவாக, ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான மெரில் ஸ்ட்ரீப். (இந்த வருடம் ஐயர்ன் லேடியாக நடித்தமைக்காக ஆஸ்கார் வாங்கியிருக்கிறார்.) நடித்திருக்கின்றனர். இந்தப்படத்தில் மெரில் நடித்தார் என்று சொன்னால் உண்மையில் நான் ஒரு நல்ல சினிமாவின் ரசிகனாக இருக்கமுடியாது. மெரில் சிரிக்கும்போது சிரிக்கவும், அழும்போது அழவும், குழம்பும்போது மருகவும் நம்மால் முடிகிறது என்றால், அவர் ஃப்ரான்செஸ்காவாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதானே அர்த்தம்.

படத்தை இயக்கியிருப்பதும் ஈஸ்வுட்டேதான். இதே பெயரில் வெளியாகிய நாவலைப் படித்து அதன் சாரம் பிடித்துப்போய் தானே தயாரித்து, இயக்கவும் செய்திருக்கிறார். காதல், வயது சம்பந்தப்பட்டதல்ல, அப்படி நினைப்பவர்களுக்கு காதல் வருவதுமில்லை. நாற்பதுகளில் வருகிற அந்த காதலை, இவ்வளவு அழுத்தமாகவும், தீர்க்கமாகவும், புகார்களின்றியும் வேறெந்தப் படங்களும் சொன்னதில்லை.

பொறுப்பான கணவன், அழகான அறிவான குழந்தைகள் கொண்ட ஃப்ரான்செஸ்கா, ஏன் இன்னொருவனை விரும்பவேண்டும். “நமக்கு வெளியில ஆயிரம் சிரமங்கள் இருக்கலாம், அலைந்து திரியலாம், ஆனால் வீட்டிற்குள் நுழையும்பொழுது அவற்றை கழற்றி வைத்துவிட வேண்டியது அவசியமாகிறது. மனைவிக்கு அது தேவையற்றது. வீட்டிற்கு சென்றதும் வாஞ்சையோடு அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டுவதைத்தான் அவர்கள் விரும்புவார்கள்” என்று நண்பர் அடிக்கடி சொல்வார், நமக்காக தன் சுய அடையாளத்தை இழந்து, கனவுகளை கலைத்துக்கொண்டு, இயல்பற்ற ஒரு நிலையில் வாழும் மனைவிகளை, பெரும்பான்மையான கணவர்கள் புரிந்து கொள்ள முயற்சிப்பதேயில்லை, அவர்களின் தேவைகளை அனுமதிப்பதேயில்லை.அப்படியான ஒரு மனைவிதான், ஃப்ரான்செஸ்கா, எல்லாம் இருந்தும் கட்டுப்பாடற்ற அன்பு இல்லாமல் ஏங்கும் பெரும்பான்மையான இல்லத்தரசிகளில் மொத்த உருவமாக, ஃப்ரான்செஸ்கா. When a woman makes the choice to marry, to have children; in one way her life begins but in another way it stops.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் நம்மை புதிய உறவுகளோடு பிணைத்துக்கொண்டே செல்கிறோம். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை சொந்தம், கடைசி வரை யாரோ? என்ற கண்ணதாசன் வரிகளைப்போல எந்த உறவு நம்மை கடைசி வரை மகிழ்ச்சியோடு இட்டுச்செல்லும் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை அது தெரியாததால்தான் வாழ்க்கை சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கிறதோ, என்னவோ? பெண் / மாப்பிள்ளை பார்க்கும் அந்த குறைந்த நேரத்தில், நமக்கு கொஞ்சமும் முன்னறிமுகமில்லாத ஒருவருடன், வெகு சொற்பமான உரையாடல்களோடு, நம் வாழ்வை இணைத்துக் கொண்டு வாழத்தொடங்கும் இந்த திருமணங்கள் திருமணம், மிகவும் சிக்கலான ஒரு அமைப்பு. பின் பிடிக்கிறதோ இல்லையோ, தனக்கான துணையுடன் முடிந்தவரை மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்வதுதான் இன்றைய மனித சமூகம். இதில் சில முரண்கள் இருக்கலாம்.

இப்படி ஒருவரோடுதான், இப்படித்தான் என் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்குமே ஒரு கனவு இருக்கும் ஆனால் எல்லா திருமணங்களும் அப்படி இருந்துவிடுவதில்லை. அப்படி அமைந்து விட்ட வாழ்க்கையிலும் பரஸ்பரம் புரிதலும், சிறுசிறு தியாயங்கள் செய்து கொளவதன் மூலமும் அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர். எந்த ஒரு தனி மனிதனும் அன்பிற்கு ஏங்குபவனாகவே இருக்கிறான். தன்னை சரியாக புரிந்து கொண்டுவிடமாட்டார்களா? என்று ஏங்கி ஏங்கியே சாகிறான். உலகம் முழுவதும் இப்படியான மனிதர்களால்தான் நிரம்பியிருக்கிறது. பரஸ்பரம் இந்த புரிதலும், அன்பும் கிடைக்கப் பெற்றவர்கள், வரம் வாங்கியவர்கள். ஆதலினால் அன்பு செய்வீர், உலகத்தீரே

http://eniyoruvithiseivom.blogspot.com/search?updated-max=2012-03-12T11:59:00%2B05:30&max-results=3

Eastwood எடுத்த படங்கள் ரொம்ப பிடிக்கு. இது இன்னும் பாக்கல பார்க்கவேணும் !!!. இவருடைய படத்தில ஒரு மெல்லிய மனிதநேயத்தோட கதையோடும் Million Dollar Baby , Gran Torino Invictus பார்த்திருக்கிறேன் !!!

  • தொடங்கியவர்

youtube ல தேடி பார்த்தன் கிடைக்கல down load லிங்க் இருந்தால் இதில் இணைச்சு விடுங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.