Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராட்டினம்-சினிமா விமர்சனம்

Featured Replies

மெளனகுரு, வழக்கு எண் வரிசையில் தமிழ்ச் சினிமாவுக்கு பெருமை சேர்க்க வந்திருக்கும் படம் இது. காதலை அனுபவித்தவர்கள் அதன் சந்தோஷமான பக்கங்களை மட்டுமே நினைவு கூர்வார்கள். அதே சமயம் அக்காதலுக்குப் பின்புலத்தில் நடந்த எதிர்ப்புகளையும், அதன் வீச்சுக்களையும் காதலுக்குச் சம்பந்தப்படாதவர்களே பல காலம் மனதில் வைத்திருப்பார்கள். அப்படியொரு இழப்பினைச் சந்தித்த முதியவர் சிந்தும் கண்ணீர்க் கதைதான் இது..!

ஏதோ தூத்துக்குடி வட்டாரத்தையே சலித்து, துவைத்து தனது கேமிராவில் படமாக்கிய ஒரே காரணத்தினாலோ என்னவோ இப்படம் யதார்த்தவாத படமாகவோ, சிறந்த படமாகவோ எண்ணப்படவில்லை. இயக்கம்.. துளியும் யாரையும் நடிக்கவிடாமல் செய்து இயல்பாக இருப்பது போல நிறுத்தி வைத்து நம்மை கவர வைத்திருக்கிறாரே இயக்குநர்..! இதனால்தான்..!

ஜெயத்துக்கு தனத்தின் மீது காதல் வருவது சினிமாத்தனம். ஆனால் எப்படி இந்தக் காதல் ஏற்படுகிறது என்பதை இயக்குநர் காட்டியிருக்கும் விதம்தான் நம்பத் தகுந்தது..! யாரோ ஒருத்தி மீது மையல் கொண்டு அக்காதலுக்கு துணைக்கழைக்கும் நண்பனுக்கு உதவப் போய், அது திசை மாறி தனத்தின் மீதான காதல் ஜெயத்திற்கு ஏற்படுவதிலேயே சினிமாத்தனம் தோற்றுப் போய்விடுகிறது..!

raattinam.jpg

ஜெயத்திற்கு அரசியல்வாதியான அண்ணன், வார்டு கவுன்சிலரான அண்ணி.. கடையைக் கவனிக்கும் அப்பா.. தனம் பக்கம் இதற்கு நேரெதிரான கூட்டம். தூத்துக்குடி துறைமுகத்தின் சேர்மன் அப்பா. தாய் மாமா அரசு வழக்கறிஞர்.. செல்வாக்கும், சொல்வாக்கும் ஒரு சேர அமைந்த குடும்பம்.. இந்தக் காதலினால் இக்குடும்பங்களில் ஏற்படும் இழப்புகளை மட்டுமே நம் மனதைத் தொடும்விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!

ஐ.பி.எஸ். ஆகியே தீர வேண்டும் என்ற நினைவில் இருக்கும் தனத்தின் அண்ணனுக்கு அக்கனவு நிராசையாகிறது.. கட்சியில் தானும் பெரிய ஆளாகி தற்போதைய மாவட்டச் செயலாளரை அரசியலில் வெல்ல வேண்டும் என்று துடித்த ஜெயத்தின் அண்ணன் உயிர் துறக்கிறான்.. 1 வயது குழந்தையுடன் அண்ணி விதவையாகிறாள்.. கூட்டுக் குடும்பம். தலைப் பையன் தலையெடுத்து தன்னை தலை நிமிர நடக்க வைக்கிறான் என்ற பூரிப்பில் இருந்த ஜெயத்தின் அப்பா நிலைகுலைய.. ஜெயம்-தனத்தின் காதல் தற்காலிகமாக ஜெயிக்கிறது. ஆனால் இறுதியில்..?

எத்தனையோ காதல்கள்..? எத்தனையோ போராட்டங்கள்.. அடிதடிகள்.. வழக்குகள்.. இத்தனையையும் தாண்டி புதிய புதிய காதல்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஜெயித்த காதல்களை மட்டுமே நாம் பேசுகிறோம். தோல்வியில் முடிந்தவைகளைப் பற்றி நாம் யோசிப்பதில்லை.

“அப்பவே ஒரு பொண்ணை லவ் பண்ணிக்கிட்டிருந்தான். அப்புறம் அங்கிட்டு, இங்கிட்டு பேசி அந்தப் பொண்ணை வெட்டிவிட்டுட்டு நம்ம பக்கம் ஒரு பொண்ணை பார்த்து கட்டி வைச்சோம்.. நல்லாத்தான இருக்கான் பையன்..” - இப்படித்தான் ஒரு காதலின் வரலாறு மூன்று வரிகளில் முடிக்கப்பட்டுவிடுகிறது.. ஆனால் இதன் பின்னணியில் ஒரு சிலர் இழந்த உயிர்கள், நிம்மதி, குடும்பம், உறவுகள் இதைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை. நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.. பார்த்திருக்கிறோம். ஆனால் உணர்ந்ததில்லை. அந்த உணர்வை இப்படத்தின் இறுதியில் மிக நுணுக்கமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

இடைவேளையின்போது ஜெயமும், தனமும் திருச்செந்தூர் சென்றுவிட்டு திரும்பி வருகையில் போலீஸிடம் சிக்கி, அதன் விளைவாய் வெடிக்கும் பிரச்சினைகளுக்காக வைத்திருக்கும் டிவிஸ்ட் அந்த இடைவேளை உணர்வையே நீக்கிவிட்டது..! நட்ட நடுரோட்டில் படமாக்கப்பட்டிருக்கும் அக்காட்சி, நம் அடிவயிற்றிலும் அமிலத்தைக் கரைக்கத்தான் செய்தது..!

இதன் தொடர்ச்சியாய் எழப் போகும் போராட்டங்கள் எப்படி அந்த இரண்டு குடும்பங்களின் நிம்மதியையும் குலைத்துப் போடுகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும்விதத்தில் மிக அருமையாய் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்..!

படத்தின் மிகப் பெரிய பலமே கிளைமாக்ஸ்தான்.. அதில் இயக்குநர் வைத்திருக்கும் அந்த 2 டிவிஸ்ட்டுகள் அசர வைத்துவிட்டது..! அதுவரையிலுமான போராட்டத்தின் ஒரு சின்ன சுவடே தெரியாத அளவுக்கு இரு தரப்புமே தங்களது புதிய வாழ்க்கையில் திளைத்திருக்க.. தனது மூத்தப் பிள்ளைக்காக சொட்டு கண்ணீரை அப்படியே சிதறவிடும் அந்தப் பெரியவரின் தள்ளாடிய நடையும், உடல் குலுங்க முடியாத அடக்கத்துடனான கண்ணீரும்தான் படத்தின் முதுகெலும்பு.. மிக, மிக ரசித்தேன் இக்காட்சியை..!

ஜெயமாக லகுபரன்.. பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை போட்டு வைத்திருக்க.. அதனை பார்த்த மாத்திரத்தில் கிடைத்த வாய்ப்பு இது என்று இப்போதும் சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறார்..! அந்தந்த வயதில் இருப்பவர்களைத்தான் இதில் பயன்படுத்த வேண்டும் என்ற இயக்குநரின் ஆசையை இவரும் நிறைவேற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

பாடல்களின் மாண்டேஜ் காட்சிகள் முழுவதிலும் இவரது காதல் பீலிங்குகள் தூண்டிவிடுகின்றன..! காதலியைப் பார்க்க முடியாமல் இருக்கிறதே என்பதற்காக செல்போனில் பரவசத்துடன் பேசிவிட்டு அழுத்தமாக முத்தம் கொடுக்கும் காட்சியை திரும்பவும் ஒரு முறை பாருங்கள்..! அந்த வயது அப்படித்தான் என்று தோன்றும்..!

பிறந்தது தமிழகம் என்றாலும் வளர்ந்தது கேரளாவாம் ஹீரோயின் ஸ்வாதிக்கு..! பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த பொண்ணுதான் வேண்டும் என்ற இயக்குநரின் தேடுதல் வேட்டையில் சிக்கியிருக்கிறார். சன்னமான குரலில் “என்னை லவ் பண்றேன்னு சொல்றாண்டி..” என்று தோழியிடம் முனங்கிவிட்டு பின்பு அவனைப் பார்க்க வேண்டி பரபரப்புடன் தனது கண்களை உருட்டும் காட்சியிலேயே லவ் பண்ணத் தோன்றுகிறது..! சிறந்த செலக்சன்..! அம்மா எலிசபெத்திடம் ஜெயத்தைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவேன் என்று சண்டையிடும் காட்சியில் மட்டுமே குரலை உயர்த்தியிருக்கிறார். ஆனால் யதார்த்தம்..! ச்சே போய்த் தொலை என்று நமக்கே சொல்லத் தோன்றுகிறது..!

இவர்கள் இருவருக்கும் இடையில் மிகச் சொற்பமான காட்சியில் வந்தாலும் தனது இறுக்கமான நடிப்பால் கவர்கிறார் ஜெயத்தின் அண்ணனாக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி..! அந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு யாரை நடிக்க வைத்திருந்தாலும் அதில் அவர்கள் தனியே தெரிய வாய்ப்புண்டு என்பதால் இவரே நடித்திருக்கிறாராம்..! ஒரு பக்கம் கட்சி, மாவட்டச் செயலாளர்.. எதிர்ப்புகள்.. உள்குத்துகள்.. இன்னொரு பக்கம் அப்பா, தம்பி, மனைவி, கட்சி வேலைகள்.. என்ற பரபரப்பில் ஜெயத்தை அடிக்கும் காட்சியில் அப்படியொரு இயல்பு.. அவரது அப்பாவை பார்த்தவுடன் அடிப்பதை நிறுத்திவிட்டு செல்வதும், தலைகுனிந்த நிலையிலேயே அப்பாவிடம் பேசும் காட்சிகளும் ஒரு குடும்பக் கதையை கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறது..!

தூத்துக்குடியை துப்பரவாக தனது கேமிராவில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..! தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணம் திருவிழா காட்சிகள் என்று அனைத்தையும் படமாக்கியதில் இவருடைய பங்களிப்பு மிக அதிகம்..! நகரத் தெருக்களை சினிமாவுக்காக பாலீஷ் போடாமல் இருப்பதை வைத்தே படமாக்கியிருக்கிறார்..!

இன்னொரு பக்கம் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறார் இசையமைப்பாளர் மனுரமேசன்..! அசத்தும் அழகு பாடல் ஏற்கெனவே சூப்பர்ஹிட்டாகிவிட்டது..! கூடவே ஏ புள்ள.. என்ன புள்ள பாடலும், யாக்கை சுற்றும் பாடலும்கூட ஹிட்டாகிவிட்டன..! புதிய மெலடிகளை புது வடிவத்தில் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்..! காதல் படங்களில் பாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதனை இப்படம் நூறு சதவிகிதம் நிறைவேற்றியிருக்கிறது..!

இப்படத்தின் எடிட்டரான கோபிகிருஷ்ணா தமிழின் மிக முக்கியமான எடிட்டராக முன்னேறிக் கொண்டே வருகிறார். இதற்கு முன் வழக்கு எண் படத்திற்கும் இவர்தான் எடிட்டர்..! ஸாங் மாண்டேஜ் சீன்களில் இவரது கை வண்ணம் பளிச்சிடுகிறது..! அசத்தும் அழகு பாடலை படமாக்கியவிதத்தைக் காட்டிலும், படத்தொகுப்பில் கோபிகிருஷ்ணா கலக்கியிருக்கிறார்.. வாழ்த்துகள்..!

ஒரு காதலினால் எத்தனை கொலைகள்.. எத்தனை இழப்புகள்.. படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் 2 படுகொலைகளுக்குப் பின்னணி இதுதான் என்று இறுதியில் சொல்லப்படும் அந்த மெளனமான 5 நிமிட சாட்சியங்கள் தமிழகத்தின் எந்த ஊரிலும் நடந்தேறிய கதைதான்.. மறுக்கவே முடியாதது..!

தற்போது தமிழகத்தின் மத்தியப் பகுதி சரகத்தில் காவல்துறை ஐஜியாக இருக்கும் ஒருவரின் தம்பி மகள், ஒருவரை காதல் செய்து தொலைக்க.. அந்தக் காதலரின் குடும்பமே இந்த ஒரு காரணத்துக்காகவே சூறையாடப்பட்டது ஒரு காலத்தில் தமிழகப் பத்திரிகைகளை உலுக்கிய விஷயங்கள். காதலரின் குடும்பம் சிறைக்குள் போக.. காதலரின் மாமியார் போலீஸ் லாக்கப்பில் வைத்து சித்ரவதைப்படுத்தப்பட்டு மீடியாக்களின் பலத்த எதிர்ப்பினால் நடைப்பிணமாக வெளியில் கொண்டு வரப்பட்டார். ஆனால் அந்தக் காதலுக்கு அப்போதும் அந்த அம்மையார் ஆதரவளித்தார். கடைசியில் அது நீடிக்க முடியாமல் போனபோது, காதலரின் குடும்பமே சிதறியிருந்தது..!

கட்டிய தாலியை காதலன் கையாலேயே கழற்றி எறியும் அளவுக்கு டார்ச்சர் செய்து பிரிக்கப்பட்ட காதலர்களின் கதையும் நடந்தேறியிருக்கிறது..! காதலின் கையை மட்டும் தனியாக வெட்டி வீறாப்புடன் தெருவில் நடந்து வந்து போலீஸ் ஸ்டேஷனில் சரண்டரான காதலியின் அண்ணனையும் திருநெல்வேலியில் பார்க்க முடிந்திருக்கிறது..! இப்படி நாம் அன்றாடம் பார்த்து, பார்த்து பயத்தினால் சலித்துப் போயிருக்கும் இந்தக் காதலினால் இறுதியில் யாருக்குத்தான் என்ன பயன்..?

அவர் ஒரு பெரும் சினிமா தயாரிப்பாளர். அவரது மகள் தங்கள் வீட்டு கார் டிரைவரை காதலித்தார். குடும்பம் கோபப்பட்டது. டிரைவரை போலீஸில் சிக்க வைத்தது.. தனது தந்தையின் பண பலத்தை வைத்து காதலரை கொன்றுவிடுவார்களோ என்று பயந்த காதலி, காதலனை அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊருக்கு போய் தாலி கட்டிக் கொண்டார். கோபத்தின் உச்சிக்கே போன அந்தத் தயாரிப்பாளரின் மனைவி, அடியாட்களை வைத்து மகளது வீட்டிற்கு போய் நாலு வெட்டு, ஆறு குத்துக்களை வீசி மகளை கடத்திச் சென்றார்..!

சாதாரண சைக்கிள் கடை வைத்து இனிமேல் ராஜ வாழ்க்கை வாழலாம் என்று நினைத்த அந்த காதலர் இந்தத் தாக்குதலில் ஊனமானதுதான் மிச்சம். காதலி திரும்ப வரவில்லை. அவர் வேறொரு வாழ்க்கையில் நுழைந்து இப்போது நிம்மதியாக இருக்கிறார்.. காதலர் தனது வாழ்க்கையையும் தொலைத்து, குடும்பத்தாரின் ஆதரவையும் இழந்து தவித்துப் போயிருக்கிறார்..!

பள்ளி, மாணவ பருவக் காதல்களை உண்மைக் காதல் இல்லை என்கிறார்கள். அதுவொரு இனக்கவர்ச்சி.. பருவ ஈர்ப்பு என்று மட்டுமே சொல்கிறார்கள். அப்போதைய காதலர்களில் பலரும் பிற்காலத்தில் தங்களது காதலைத் துறந்து வெளியேறிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது இது சரிதானோ என்று தோன்றுகிறது..! ஆனாலும் இந்தக் காதல் தலைமுறை, தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது..!

சினிமாதான் எல்லாத்துக்கும் காரணம் என்று அனைவருமே குற்றம்சாட்டுவதை புறக்கணித்துவிட முடியாது. சினிமாவும் இதில் ஒரு காரணமாக இருக்கலாம்..! ஆனாலும் உண்மைக் காதல்களுக்கு தூண்டுதலாக அவர்களிடையே இருக்கும் புரிதல் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.. வழிமுறை வேண்டுமானால் சினிமா கற்றுக் கொடுத்தமையாக இருக்கலாம்..! இது போன்ற படங்களை அந்தப் பாவத்திற்கு பிராயச்சித்தமாக எடுத்துக் கொள்ளலாம்..!

உங்களது வாழ்விலும் இது போன்ற காதல்களை, காதலர்களை, இழப்புகளை நீங்கள் சந்தித்திருந்தால்.. கேட்டிருந்தால்.. பார்த்திருந்தால்.. இந்த படம் அவ்வளவு சீக்கிரம் உங்கள் மனதைவிட்டு நீங்காது.. ராட்டினமாக உங்களது மனதை சுற்ற வைக்கும் என்பது உறுதி..!

ராட்டினம்-அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

http://truetamilans.blogspot.com/2012/05/blog-post_20.html

Read more: http://truetamilans.blogspot.com/2012/05/blog-post_20.html#ixzz1vSynuaLg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.