Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்டவரின் எச்சங்கள் இறுதிப் பாகம் 13 .

Featured Replies

வணக்கம் கள உறவுகளே , வாசகர்களே ,

" ஆண்டவரின் எச்சங்களை " யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்றுடன் முடிவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தக் குறுந்தொடருக்கு கருத்துக்கள் வழங்கிய அனைத்து உறவுகளுக்கு எனது மனங்கனிந்த நன்றிகள் .

*******************************************************************************************************************************

யாழ்ப்பாணக் கோட்டை .

15022011historyL.jpg

யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் தற்போது சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.

யாழ்ப்பாண அரசு 1619 இல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு கோட்டையையும் கட்டினார்கள். 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629 இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன.

080420121631.jpg

போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம் கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.

யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22இல் கைப்பற்றிய அடுத்த நாள் ஜூன் 23 1658இல், மேற்படி கோட்டையை அவர்கள் கைப்பற்றி அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள்.

1984-1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன.

http://ta.wikipedia....்ப்பாணக்_கோட்டை

080420121639.jpg

கி.பி.1505 ஆம் ஆண்டு இலங்கை வந்த போர்த்துக்கேயர் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி 1619 ஆண்டில் யாழ்ப்பாண இராட்சியம் அவர்களால் கைப்பற்றப்பட்டது. தொடர்ச்சியாக இடம்பெற்ற போர்களில் யாழ்ப்பாண அரசர்கள் சமதரையிலே இவ்வாறு போர்த்திறமை உடையவர்கள் எனில் தமக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதைக் கண்டுகொண்ட ஒலிவேறா கோட்டை ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்க எண்ணினான். முஸ்லீம் வர்த்தக சாலைகள் இருந்த தற்போது கோட்டை அமைந்துள்ள இடம் அதன் அமைவிடத்தைப் பொறுத்து பலமான கோட்டை ஒன்றினை அமைப்பதற்கு மிக வாய்ப்பானதாக அமைந்தது. போக்குவரத்திற்கு வாய்ப்பான கடனீரேரி, அருகிலிருந்த கொழும்புத்துறை, அலுப்பாந்தித்துறை அகழிகளிற்கு நீர் தரக்கூடிய கடல், பகைவர்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு வழங்கக்கூடிய இடஅமைப்பு என்பன ஒலிவேறாவிற்கு திருப்தியைத் தந்தன. சைவத்தமிழர் வாழும் நல்லூரிலிருந்து விலகிப் பாதுகாப்பான அரண் ஒன்றினை அமைப்பதுடன் கத்தோலிக்கர் வாழும் புதிய ஒரு நகரினை உருவாக்க அவன் எண்ணம் கொண்டான். அதன்படி யாழ்ப்பாணத்தில் ஒரு கோட்டை அமைக்கப்பட்டது.

போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டை இன்று அழிந்துள்ள கோட்டை போன்று நட்சத்திர வடிவத்தினை அல்லது செங்கோண வடிவத்தினை உடையதன்று. அது ஒரு சதுரவடிவக் கோட்டையாகும். சதுர வடிவமான கோட்டை உயர்ந்த அரண் சுவர்களைக் கொண்டிருந்தது. நான்கு மூலைச்சுவர்களிலும் பலமான கொத்தளங்கள் அமைந்திருந்தன. அவற்றில் வடகிழக்குக் கொத்தளமும் தென்மேற்கு கொத்தளமும் வேலின் முனைப்பு வடிவிலும், தென்கிழக்குக் கொத்தளமும், வடமேற்குக் கொத்தளமும் முக்கால் வட்ட வடிவிலும் அமைந்திருந்தன. இக்கொத்தளங்களை இணைக்கும் அரண் சுவர்கள் அடித்தளத்தில் 40 அடிகள் அகலமானதாயும் மேற்புறத்தில் 20 அடிகளாக ஒடுங்கி 30 அடிகள் வரை அகழி மட்டத்திலிருந்து உயர்ந்து நின்றன.

080420121640.jpg

கிழக்குப் புறமே தரைப்புறமான கோட்டை வாயிலைக் கொண்டிருந்தது. கோட்டையைச் சுற்றி ஒருபுறம் கடலும் ஏனைய மூன்று பக்கங்களும் 20 அடி அகலமான அகழியைக் கொண்டிருந்தன. ஓர் இணைப்புப்பாலம் தேவைக்கேற்ப இறக்கி தூக்கக்கூடியவிதமாகக் கிழக்கு அகழிக்கும் கோட்டை வாயிலுக்கும் இடையிலிருந்தது. கிழக்கு அரண் சுவரில் காவல் கோபுரங்கள் ஆறு அமைக்கப்பட்டிருந்தன.

போர்த்துக்கேயரின் யாழ்ப்பாணக் கோட்டை 1625 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இவர்கள் யாழ்ப்பாணத்தில் கட்டிய கோட்டை போன்று வேறு பகுதிகளிலும் கோட்டைகளைக் கட்டியுள்ளனர். ஊர்காவற்றுறை, காங்கேசன்துறை, பருத்தித்துறை, வெற்றிலைக்கேணி, இயக்கச்சி, ஆனையிறவு முதலான பகுதிகளிலும் இவர்கள் கோட்டைகளை அமைத்தனர். ஆனால் இவை யாழ்ப்பாணக்கோட்டை போன்று பெரியவையல்ல. பிலிப்தே ஒலிவேறா நல்லூரை விட்டகன்று கோட்டை மாளிகைக்குள் தனது படையினரோடும் பரிவாரத்தோடும் குடியமர்ந்தான்.

080420121640.jpg

1658 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றினர். யாழ்ப்பாணக் கோட்டையையும் ஒல்லாந்தர் முற்றுகையிட்டனர். அவர்கள் கோட்டையைச் சுற்றித் தரைப்பக்கமாகப் பாசறை அமைத்துக்கொண்டனர். போர்த்துக்கேயரின் பலம்வாய்ந்த யாழ்ப்பாணக் கோட்டையின் நாலா பக்கங்களிலும் ஒல்லாந்தப்படை சூழ்ந்துகொண்டது.யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருந்த போர்த்துக்கேயர் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தனர். கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டன. போர்த்துக்கேயரின் கொடி இறக்கப்பட்டு ஒல்லாந்தரின் கொடி கோட்டையில் ஏற்றப்பட்டது.

080420121644.jpg

ஓல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கோட்டை கட்டமைப்பு மிக அற்புதமானதாகும். கீழைத்தேசத்திலுள்ள கோட்டைகள் யாவற்றிலும் யாழ்ப்பாணக் கோட்டை மிகப்பலமானதும், பாதுகாப்பானதும் என அனைத்து கட்டடக்கலை விற்பன்னர்களாலும் விதந்துரைக்கப்பட்டது. யாழ்ப்பாணக்கோட்டை அமைக்கப்பட்ட காலகட்டத்தில் இந்து சமுத்திர நாடுகள் பலவற்றிலும் பலமான கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் அவை எதுவும் யாழ்ப்பாணக் கோட்டையின் முழுமைக்கும், நிறைவுக்கும், தொழில்நுட்பத்திறனுக்கும் நிகராகாது எனப் பலரும் போற்றியுள்ளனர். யாழ்ப்பாணக் கடனீரேரியின் கரையில் கம்பீரமாக யாழ்ப்பாணக்கோட்டை அமைந்திருந்தது. ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையை மீளப்புதுப்பித்துக் கட்டியபோது ஐங்கோண வடிவில் வடிவமைத்தனர். முதலில் உள்கோட்டையின் ஐங்கோண வடிவம் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. இதனை அவர்கள் 1680 ஆம் ஆண்டு கட்டிமுடித்தனர் என்பது கோட்டை வாயிற் கதவில் பொறிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடுகின்றது. கோட்டையின் வெளியமைப்புச் சுற்றுக் கட்டமைப்புக்கள் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடக்கப்பட்டு 1792 ஆம் ஆண்டு நிறைவுற்றது என்பது கோட்டையின் வாசல் வளைவில் பொறிக்கப்பட்டிருக்கும் ஆண்டு குறித்து நிற்கின்றது. இதில் கவனிக்கவேண்டிய பரிதாபநிலை யாதெனில் ஒல்லாந்தர் இந்த ஐங்கோணக் கோட்டையை 1792 ஆம் ஆண்டில் அதாவது பிரித்தானியரிடம் கோட்டையைப் பறிகொடுப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே பூரணமாக்கப்பட்டது என்பதாகும்.

யாழ்ப்பாணக்கோட்டை ஐந்து கொத்தளங்களைக் கொண்டிருந்தது. கடனீரேரிப் பக்கமாக இரண்டு கொத்தளங்களையும், நிலப்புறமாக மூன்று கொத்தளங்களையும் கொண்டிருந்தது. இந்த ஐந்து கொத்தளங்களும் தெளிவாகப் பெயரிட்டிருந்தனர். கோட்டையின் வடபுறக்கொத்தளம் உற்றெச் என அழைக்கப்பட்ட.து. வடகிழக்குப்புறக் கொத்தளம் ஹெல்டர்லாந்து என்றும் தென்கிழக்குப் புறக்கொத்தளம் ஒல்லாந்து என்றும் தென்மேற்குப் புறக்கொத்தளம் சீலாந்து என்றும் வடமேற்குப்புறக் கொத்தளம் பிறிஸ்லாந்து என்றும் அழைக்கப்பட்டன. இந்த ஐந்து கொத்தளங்களும் நெடும் மதில்களினால் இணைக்கப்பட்டிருந்தன. கொத்தளங்களை இணைக்கின்ற மதில் ஒவ்வொன்றினதும் நீளம் ஏறத்தாழ 554 அடிகளாகும். கொத்தளங்களின் சுற்றளவைத் தவிர்த்து சுற்று மதிலின் மொத்த நீளம் 3960 அடிகளாகும்.

080420121641.jpg

யாழ்ப்பாணக்கோட்டை மதில் உச்சியில் இருபது அடி அகலமானது. ஆடித்தளத்திற்கு நாற்பது அடிவரை அகன்று விரிந்து செல்கிறது. மதிலின் வெளிப்பக்கம் ஏறத்தாழ ஆறுஅடி அகலத்தில் முருகைக்கற்களினால் கட்டப்பட்டது. உட்பக்கம் நான்கு அடி அகலக் கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. இவ்விரு கட்டுக்களுக்கும் இடைப்பட்ட எட்டடி அகலப்பரப்பு மண்ணால் நிரப்பப்பட்டுள்ளது. இம்மதில்கள் அகழி மட்டத்திலிருந்து ஏறத்தாழ 30 அடிகள் உயரமானவை. உட்கோட்டையைச் சுற்றி அமைந்திருக்கும் சுரியும் நீரும் கொண்ட அகழி அற்புதமான அழகும், பாதுகாப்பும் கொண்டது. கோட்டையின் வாயிற்கதவு ஆறு அங்குலங்களுக்கு மேற் தடிப்பான பாரிய மரக்கதவு ஆகும். அதில் போர் யானைகள் முட்டி மோதிப் பிளக்காதிருக்க வேண்டி கூரான ஈட்டி முனைகள் பொருத்தப்பட்டிருந்தன. வில்வளைவான வாயிற்கடவையில் இருந்து அகழியைக் கடப்பதற்கு தொங்குபாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இக்கதவில் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட ஆண்டாக 1680 குறிக்கப்பட்டிருந்தது.

கோட்டை இரண்டு வாயில்களைக் கொண்டிருந்தது. ஒன்று நீர்வழி மற்றையது நிலவழி கோட்டையின் தென்மதிற் சுவரில் நீர்வழி அமைந்திருந்தது. கடனீரேரியூடாக வரும் ஒருவர் கோட்டை மதிலினருகில் சிறு கலத்தை நிறுத்தி வைத்துவிட்டு நீர்வழியூடாக காவலர்கள் அனுமதித்தால் கோட்டைக்குள் நுழைய முடியும். நிலவழி தொங்கு பாலத்தினால் இணைக்கப்பட்ட பிரதான வாயிற்புறமாகும். ஓல்லாந்தர் அப்பாலத்தை உள்மதிலோடு தூக்கிப் பாதையைத் துண்டிக்கவும் தேவையான போது பாலத்தை இறக்கி இணைக்கவும் வசதிகளைக் கொண்டிருந்தனர். வாயிற் சுவரின் மேல் மணிக்கோபுரம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதில் பிணைக்கப்பட்டிருந்த காண்டாமணி தேவாலய வழிபாட்டு நேரத்தையும் கால நேரத்தையும் ஒலியெழுப்பி அறிவித்தது.

வெளிநாட்டுப் பயணிகள் பலர் யாழ்ப்பாணக் கோட்டைக்கு பயணிகளாக வந்துள்ளனர். 1790 ஆம் ஆண்டளவில் ஸ்ரெய்கர் என்பவரும் 1744 ஆம் ஆண்டளவில் கெயிற் என்பவரும் 1726 ஆம் ஆண்டளவில் வளன்ரையின் என்பவரும் கோட்டையைப் பார்வையிட்டு விபரமாக எழுதி உள்ளனர்.

1795 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 28 ஆம் திகதி யாழ்ப்பாணக் கோட்டை என்றுமில்லாத பரபரப்பிற்குள்ளாகியது. ஆங்கிலேயரின் முற்றுகைக்கு கோட்டை உள்ளானது. ஆயிரக்கணக்கான ஆங்கிலேயரின் படை முன்பு நூற்றுக்கணக்கான ஒல்லாந்தர் படைகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஓல்லாந்தர் கோட்டையை ஆங்கிலேயரிடம் யுத்தமின்றியே கையளித்துவிட்டு வெளியேற நேர்ந்தது. 1796 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி யாழ்ப்பாணக் கோட்டை ஆங்கிலேயர் வசமானது.

080420121635.jpg

ஓல்லாந்தரின் படை வீரர்கள் தங்கிய பாசறை வீடுகளை ஆங்கிலேயர் சிறைச்சாலைக்கான கட்டடங்களாக மாற்றியமைத்தனர். 1946 ஆம் ஆண்டு வரை கோட்டையின் அரண் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கிகள் நீக்கப்படாதிருந்தன. பின்னர் அவை அவ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட பீரங்கிகளும், பீரங்கிக் குண்டுகளும் காலகதியில் உருக்கப்பட்டன. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஆங்கிலேயரின் கொடி இலங்கை எங்கிலும் இறக்கப்பட்டது. அவ்வவ்விடங்களில் இலங்கையின் தேசியக்கொடி உயர்த்தப்பட்டது. தெளிவாகப் பிரிந்திருந்த தமிழரசையும், சிங்கள அரசையும் ஒன்றாக்கிவிட்டு ஆங்கிலேயர் இலங்கையைவிட்டு விலக விருப்பின்றி விலகிச் சென்றனர்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் யாழ்ப்பாணக் கோட்டையை இலங்கை பாதுகாப்புப் பிரிவினரின் குறிப்பாக 1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அவர்கள் வசமாகியது. காலத்திற்குக்காலம் நடைபெற்ற போர்களால் யாழ்ப்பாணக் கோட்டை தனது பொலிவை இழந்து வந்துள்ளது. இவ்வாறு இருந்த போதிலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையைத் தொடர்ந்து இலங்கையின் தென்பகுதியில் இருந்து வடபகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் முக்கிய ஒரு சுற்றுலா மையமாக யாழ்ப்பாணக் கோட்டை விளங்குகின்றது. யாழ்ப்பாணக் கோட்டையை அடுத்துள்ள முனியப்பர் கோயில் கடனீரேரி மற்றும் முக்கிய இடங்கள் யாவும் அவர்களின் பார்வைக்கு விருந்தளித்து வருகின்றன. இக்கோட்டை யாழ்ப்பாண மக்களினால் இராசவாசல் என அழைக்கப்பட்டது. இன்று யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதி புற்களாலும், புதர்களாலும் மூடப்பட்டிருந்தாலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணக் கோட்டையின் அமைப்பு முறை அனைவரையும் கவர்ந்துள்ள ஒரு விடயமாகும்.

Fort+of+Jaffna+-+entrance+view+from+the+wall.jpg

யாழ்ப்பாணக் கோட்டையானது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியராலும் பின்னர் ஏற்பட்ட படையினரின் யுத்த காலப்பகுதியிலும் ஒரு முக்கியமான மையமாக விளங்கியது. ஆரம்பத்திலே அமைக்கப்பட்டபோது அதன் அமைவிடத்தைப்பொறுத்து அது வர்த்தக ரீதியில் சிறப்புப்பெற்ற மையமாக இருந்தது. இன்று இப்பகுதியில் நடத்தப்படும் ஆய்வுகள் வரலாற்றுப் பெறுமதிமிக்க ஒரு பெட்டகமாக சுற்றுலாப் பயணிகளிற்கு அமைத்துத்தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடபகுதியில் காணப்படுகின்ற சுற்றுலா மையங்களில் முதலிடம் வகிப்பதும் யாழ்ப்பாணக் கோட்டையே என்றால் மிகையாகாது.

சுபாஜினி உதயராசா - சிரேஷ்ட விரிவுரையாளர்

புவியியற்றுறை - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் .

http://www.yarlmann....ngle.php?id=135

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் , உங்கள் தகவல் திரட்டலுக்கு பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

கோமகன் , உங்கள் தகவல் திரட்டலுக்கு பாராட்டுக்கள்.

ஆண்டவரின் எச்சங்களில் இந்தக் கோட்டையே எங்கள் மனதில் ஆறாவடுக்களை ஏற்படுத்தியது . சரித்திரத்தின் பல பக்கங்களையும் புரட்டி மற்றவர்களை எம்பக்கம் திருப்பியதும் இந்த எச்சமே . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு நுணாவிலான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.