Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி போட்டுடைத்த ‘இரகசியத்தின்‘ சூட்சுமம் - சேரமான்

Featured Replies

‘பிரபாகரன் தலைமையில் தமிழீழம் அமைய வேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பினார்’ என்று இதுவரை வெளிவராத ‘இரகசியம்’ ஒன்றை அண்மையில் கலைஞர் முத்துவேல் கருணாநிதி ‘போட்டுடைத்திருந்தார்’. ‘தமிழீழம் எனது நிறைவேறாத கனவு. நாளை தமிழீழம் மலராது போனாலும், நாளை மறுதினமாவது அது மலர்ந்தே தீரும்’ என்றெல்லாம் அண்மைக் காலமாக கருணாநிதி வெளியிட்டு வரும் ‘பிதற்றல்களின்’ தொடர்ச்சியாகவே ராஜீவ் காந்தி பற்றிய புதிய ‘இரகசியத்தை’ அவர் வெளியிட்டிருப்பதாக நாம் புறந்தள்ளிவிட முடியாது.

கருணாநிதி ‘போட்டுடைத்திருக்கும்’ இந்த ‘இரகசியத்தில்’ மிகப்பெரும் அரசியல் சூட்சுமம் ஒன்று அடங்கிக் கிடக்கின்றது: ஒரு வகையில் இதில் கருணாநிதி குடும்பத்தின் அதிகார அரசியலின் எதிர்காலமும் பொதிந்துள்ளது. அமைதிப் படையின் போர்வையில் தமிழீழத்திற்கு இந்திய ஆயுதப் படைகளை அனுப்பிப் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்களின் உயிர்களை நரபலிவேட்டையாடிய ‘பெருமகன்’ ராஜீவ் காந்தி.

அவரது கட்டளையின் பேரில் தமிழீழ மண்ணில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். பல்லாயிரம் கோடி பெறுமதியான ஈழத்தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும், சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் நாசம் செய்யப்பட்டன. ‘மீட்பர்களாக’ ஈழமண்ணில் இறங்கிய இந்தியப் படைகள் அரங்கேற்றிய அட்டூழியங்கள் ஏராளம். இதுபற்றி ‘சாத்தானின் படைகள்’ என்ற தலைப்பின் கீழ் 1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் நூல் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறு ஈழத்தமிழர்கள் மீது பெரும் கொடூரச் செயல்களை ஏவிவிட்ட ராஜீவ் காந்தி, தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் அமைய வேண்டும் என்று விரும்பினார் என்று இன்று கருணாநிதி கூறுவது ராஜீவ் இழைத்த போர்க்குற்றங்களையும், மானிடத்திற்கு எதிரான குற்றச்

செயல்களையும் நியாயப்படுத்தும் செய்கையேயன்றி வேறேதுமல்ல.

1987 ஒக்ரோபர் 10ஆம் நாளன்று இந்திய-புலிகள் போர் வெடிப்பதற்கு முன்னரே தலைவர் பிரபாகரன் அவர்களைக் கொலை செய்வதற்குக் கட்டளையிட்டவர் ராஜீவ் காந்தி. ஈகச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கிய நிலையில் இந்தியப் படை அதிகாரிகளுக்கும், தமிழீழ தேசியத் தலைவருக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு ஒன்றிலேயே இப்பாதகச் செயலை அரங்கேற்றுவதற்கான கட்டளையை ராஜீவ் காந்தி பிறப்பித்திருந்தார்.

இது பற்றி அக்காலப் பகுதியில் பலாலியில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான ஜெனரல் ஹக்கிரட் சிங் பின்நாளில் தான் எழுதிய நூல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

“1987 செப்ரம்பர் 14ஆம் நாள் இரவிற்கும், 15ஆம் நாள் அதிகாலைக்கும் இடைப்பட்ட வேளையில் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிக்சிட், சந்திப்பிற்கு பிரபாகரன் வந்தால் அவரைக் கைது செய்யுமாறு அல்லது சுட்டுக் கொல்லுமாறு கட்டளையிட்டார். இது பற்றி எனது மேலதிகாரியான லெப்.ஜெனரல் தீபேந்தர் சிங் அவர்களுடன் நான் கலந்துரையாடிய பொழுது, வெள்ளைக் கொடியுடன் பேச வருபவர்களை முதுகில் சுடுவது ஒரு மரபுவழி இராணுவத்தின் பண்பு அல்ல என்பதை டிக்சிட்டிடம் கூறுமாறு நான் பணிக்கப்பட்டேன்.

இதனையடுத்து டிக்சிட்டுடன் நான் தொடர்பு கொண்டு அவரது கட்டளையை நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்தேன். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாகப் பேசும் நிமித்தம் பிரபாகரனை இந்திய அமைதிப் படைகளே அழைத்திருப்பதாக நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன். இதற்குப் பதிலளித்த டிக்சிட், பிரபாகரனைக் கைது செய்வதற்கு அல்லது சுட்டுக் கொல்வதற்கான கட்டளையை தனக்கு ராஜீவ் காந்தியே பிறப்பித்ததாகக் குறிப்பிட்டதோடு, இதனை நிறைவேற்றத் தவறினால் அதன் விளைவுகளுக்கு நானும், இந்திய அமைதிப் படைகளுமே பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்தார்.”

ஜெனரல் ஹக்கிரட் சிங் அவர்களின் நூலைப் படித்துப் பார்க்காமல் ராஜீவ் காந்தி பற்றிய தனது புதிய ‘இரகசியத்தை’ கருணாநிதி ‘போட்டுடைத்தாரோ’ தெரியவில்லை. ஆனால் இப்பொழுதும் விற்பனையில் உள்ள ஹக்கிரட் சிங் அவர்களின் நூலை வேண்டுமானால் கருணாநிதி அவர்கள் வாங்கிப் படித்துப் பார்க்கலாம். அடுத்த இந்திய பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால், இந்நூலைப் படித்துப் பார்ப்பதற்கு கருணாநிதிக்கு நிறையவே அவகாசம் உண்டு.

தமிழீழ தேசியத் தலைவரை அழிப்பதில் ராஜீவ் காந்தி கங்கணம் கட்டி நின்றமை பற்றியும், அதற்கு மறைமுகமாக ஒத்தூதும் வகையில் கருணாநிதி நடந்து கொண்டமை பற்றியும் ‘போரும் சமாதானமும்’ என்ற தனது நூலில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார். வடமராட்சியில் இந்தியப் படைகளின் முற்றுகையிலிருந்து தப்பி பெங்களூரில் தான் தலைமறைவாகத் தங்கியிருந்த காலப்பகுதியில் கருணாநிதியுடன் நடைபெற்ற சந்திப்பொன்று பற்றிய தனது பதிவிலேயே பின்வருமாறு பாலா அண்ணை குறிப்பிடுகின்றார்:

“1988 ஏப்ரல் மாதம். யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தின் தேடி அழிப்பு வேட்டையிலிருந்து தப்பி, பங்களூரில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்த வேளையில், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடமிருந்து எனக்கு ஒரு அவசர தகவல் கிடைத்தது. உடனடியாகத் தன்னை சந்திக்குமாறு கேட்டிருந்தார். அப்பொழுது தமிழ் நாட்டில் தலைமறைவாக இயங்கி வந்த எமது போராளிகள் மூலமாக ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சேலத்தில் ஒரு விடுதியில் நள்ளிரவில் மிகவும் இரகசியமாக நிகழ்ந்த இச் சந்திப்பில் தி.மு.க தலைவருடன், அவரது மருமகன் முரசொலி மாறனும் கூடவே இருந்தார்.

தமிழீழத்தில் போர் நிலைமை படுமோசமாகி வருவதாகவும், விடுதலைப் புலிகளின் தலைமை எந்நேரத்திலும் அழிக்கப்படும் ஆபத்து தோன்றியிருப்பதாகவும், இதனால் தனக்கு கவலையும் ஆழ்ந்த வேதனையும் ஏற்பட்டிருப்பதாகவும் கூறித் தனது உரையாடலை ஆரம்பித்தார் கலைஞர் கருணாநிதி. மிகப் பிரமாண்டமான, எதிர்த்து நிற்க முடியாத இந்திய இராணுவத்துடன் மோதி அழிந்து போவதைவிட ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைவது புத்திசாலித்தனம் அல்லவா என்று கேட்டார் கலைஞர்.

இந்த சந்திப்பின் அந்தரங்க நோக்கம் என்னவென்பது எனக்கு நன்கு புரிந்துவிட்டது. விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த போரியல் மரபில் சரணாகதிக்கு இடமே இல்லை என்று சூடாகக் கலைஞருக்கு சுட்டிக் காட்டினேன். தலைவர் பிரபாகரனும் அவரது புலிப்படை வீரர்களும் ஒரு உன்னத இலட்சியத்திற்காக உயிரைத் துறக்கவும் தயாராக இருப்பார்களேயன்றி, எந்த சூழ்நிலையிலும் சரணடைந்து அவமானத்தை தேடிக் கொள்ளமாட்டார்கள் என்று விளக்கினேன்.

தமிழீழ சுதந்திரப் போராளிகள் அஞ்சா நெஞ்சம் படைத்த வீரர்கள், இலட்சிய உறுதிகொண்டவர்கள், எத்தகைய துன்பங்களையும் சுமந்து நின்று போராடும் திராணி படைத்தவர்கள். இந்திய இராணுவத்திற்கு எதிராக நீண்டகால, கெரில்லாப் போரை நடத்துவதற்கு அவர்கள் உறுதிபூண்டு நிற்கிறார்கள் என்று கூறினேன்.

போர்நிறுத்தம் செய்து, பேச்சுக்களை நடத்தி, இந்திய அரசுடன் ஒரு சமரச இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு எமது விடுதலை இயக்கம் தயாராக இருக்கிறது எனத் தமிழகத் தலைவர்களிடம் தெரிவித்தேன். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி டில்லியில் தலைவர் பிரபாகரனுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய, வடகிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக அரசு நிறுவப்பட்டால் நாம் எமது ஆயுதங்களை ஒப்படைத்து இந்தியாவுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்களுக்குக் கூறினேன்.

எமது நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்திக்கு தெரிவிப்பதாக கலைஞர் கருணாநிதியும், முரசொலி மாறனும் எனக்கு உறுதியளித்தார்கள். இந்தச் சந்திப்பால் திருப்பம் எதுவும் ஏற்படப்போவதில்லை என நினைத்தேன். நான் எண்ணியது சரியாகவே முடிந்தது. சேலத்தில் நிகழ்ந்த இரகசியச் சந்திப்பை அடுத்து முரசொலி மாறன் டில்லிக்கு சென்றுபிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்தார். போருக்கு ஓய்வு கொடுத்து, இந்தியாவுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக எமது நிலைப்பாட்டை அவர் இந்தியப் பிரதமருக்கு விளக்கியிருக்கிறார். ஆனால் ரஜீவ் காந்தி தனது கடும் போக்கிலிருந்து சிறிதேனும் post-9051-0-45544700-1338150852_thumb.jpதளர்ந்து கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமை இந்திய இராணுவத்திடம் மண்டியிடவேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்ததாக, பிறிதொரு தடவை என்னைச் சந்தித்த முரசொலி மாறன் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் அல்லாது போனால் இந்திய இராணுவத்தின் மூர்க்கமான தாக்குதலுக்கு பலியாக வேண்டிவரும் எனக் கடுமையாக எச்சரித்தாராம்.”

இவ்வாறு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிரைப் பறித்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேரோடு சாய்த்து, தமிழீழத் தனியரசு நிறுவப்படுவதை முளையில் கிள்ளியெறிவதில் கங்கணம் கட்டிநின்றவர் ராஜீவ் காந்தி. அதற்காக இந்தியப் படைகளை ஏவிவிட்டு ஈழத்தமிழர்கள் மீது எண்ணிலா போர்க்குற்றங்களையும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களையும் இழைத்த ‘பெருமகன்’ அவர்.

1948ஆம் ஆண்டிலிருந்து ஈழமண்ணில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள், போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பான பன்னாட்டு சுயாதீன விசாரணை ஒன்று எதிர்காலத்தில் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்களில் ஒருவராக ராஜீவ் காந்தியும் விளங்குவார் என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க முடியாது.

அவ்வாறான ஒரு ‘பெருமகன்’ தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் அமைய வேண்டும் என்று விரும்பினார் என்று கருணாநிதி இன்று கூறுவதை சிறுபிள்ளை கூட ஏற்றுக் கொள்ளாது: அவ்வளவு அபத்தம் கருணாநிதி ‘போட்டுடைத்த இரகசியத்தில்’ நிறைந்து கிடக்கின்றது. கருணாநிதியின் குடும்ப ஆட்சி இன்று நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.

தமிழகத்தின் அரியாசனத்தில் அமர்ந்திருந்தவாறு மறுலோகத்திற்கு செல்ல வேண்டும் என்று கருணாநிதி கண்ட கனவு இன்று கானல் நீராகி வருகின்றது. குறைந்தபட்சம் தனது வாரிசுகளையாவது அரியாசனத்தில் அமர்த்திவிட்டு மறுலோகம் செல்வதற்கு தன்னை இப்பொழுது கருணாநிதி தயார்படுத்தி வருகின்றார். முதலமைச்சர் ஆசனத்தில் உயிர் துறக்கும் தனது கனவு சாத்தியமாகது போனாலும்கூட, குறைந்தபட்சம் டில்லி ஆட்சிபீடத்தின் அமைச்சர்களாக தனது வாரிசுகளை அமர்த்தி விட்டே தனது உயிரைத் துறப்பது என்ற முடிவிற்கு கருணாநிதி வந்துவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இதன் விளைவுதான் திடீரென கருணாநிதிக்கு தமிழீழம் மீது பொங்கி வரும் பாசம். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக துருப்பிடித்துக் கிடந்த ‘டெசோ’ அமைப்பை திடீரென கருணாநிதி தூசிதட்டி மீண்டும் இயங்க வைக்க முற்படுவதன் நதிமூலமும், ரிக்ஷிமூலமும் இதில்தான் அடங்கியுள்ளது. ஒருபுறம் தமிழீழம் பற்றிப் பேசிப் பேசி தமிழக மக்களின் ஆதரவைக் கட்டியெழுப்புவது: மறுபுறம் ஈழத்தமிழினத்திற்கு கொடுஞ்செயல் புரிந்த ராஜீவ் காந்தியின் துதிபாடி சோனியா காந்தியின் அரவணைப்பைப் பெற்றுத் தனது வாரிசுகளை டில்லி அரியாசனத்தில் அமர்த்துவது. இவை இரண்டிலுமே இப்பொழுது கருணாநிதி ‘போட்டுடைத்திருக்கும்’ ராஜீவ் காந்தி பற்றிய ‘இரகசியத்தின்’ அரசியல் சூட்சுமம் பொதிந்துள்ளது.

சோனியா காந்தியின் ஆசீர்வாதத்துடன் வன்னிப் போரில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை சிங்களம் கொன்றுகுவித்த பொழுது பால்குடிக்கும் வேளையில் கண்மூடிய பூனையாக வாளாவிருந்தவர் கருணாநிதி. சோனியா காந்தியின் ஆட்சிபீடத்திற்கு அன்று ‘அச்சாணியாக’ விளங்கியவர் என்ற வகையில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களின் குருதி முத்துவேலர் ஈன்றெடுத்த மகனின் கரங்களிலும் படிந்துள்ளது.

இந்தக் களங்கத்தைத் துடைப்பதற்குக் கருணாநிதிக்கு ஒரேயரு வழிதான் உள்ளது. தனது கதைவசனத்தில் சோனியா காந்தியால் அழிக்கப்பட்ட தமிழீழ அரசை மீண்டும் நிறுவுவதற்கு இதயசுத்தியுடன் பாடுபடுவதுதான் அது. தமிழக அரசியலில் கருணாநிதியின் குடும்பம் மீண்டெழுவதற்கான இரகசியம் இதில்தான் அடங்கிக் கிடக்கின்றது. அதைவிடுத்து ராஜீவ் காந்தி என்ற ‘பெருமகனின்’ புதைகுழிக்கு பரிவட்டம் கட்டித் தமிழகத்தில் முகவரியில்லாமல் வேரோடு பிடுங்கியெறியப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு உயிர்கொடுக்கும் வித்தையை கருணாநிதி தொடருவரானால் அது அவரது குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்திற்கே ஈறாக அமைந்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.