Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களது உயிர்களை கொத்துக் கொத்தாக பறித்தெடுத்த பொன்சேகா பறக்கும் முத்தங்களுடன் விடுதலையாகியுள்ளமை சிறிலங்கா அரசியலில் புதிய பாதையைத் திறந்துள்ளது. ம.செந்தமிழ்.-ஈழ அதிர்வுகள்

Featured Replies

fonseka.jpgதமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தி முடிக்கப்பட்ட யுத்தத்தை தலைமைதாங்கி நடாத்திய சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகா முப்பது மாதங்கள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையாகியுள்ளமை சிறிலங்கா அரசியல் களத்தில் புதிய பாதையொன்றை திறந்துள்ளது.

தமிழர்களை கொத்துக் கொத்தாக உயிர்ப்பறிப்புச் செய்த சிங்கள இராணுவத்தளபதி சரத்பொன்சேகா பறக்கும் முத்தங்களை வெளிப்படுத்தியவாறு வெண்புறாவொன்றையும் பறக்கவிட்டவாறு சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளமையும் அதன் பின்னர் வெளியிட்டுவரும் கருத்துக்களும் மற்றுமொரு சிங்கள இனவாதத் தலைமையாக அவரை வெளிச்சம் போட்டுக் காட்டிவருகின்றது.

தமிழர்களிற்கு எதிரான இனவாதப் போரை தலைமையேற்று நடத்தியதற்காக சிங்கள தேசத்தால் உச்சபட்ச மதிப்புக் கொடுத்து சிறப்பிக்கப்பட வேண்டிய பொன்சேகா முப்பது மாதங்கள் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தமை அவரது துரதிஸ்டமாக இல்லாது அழிக்கப்பட்ட தமிழர்களது ஆத்மாக்களின் வல்லமையும் எமது இனத்தின் இரத்தயம் சிந்திய தியாகமுமே அடிப்படையாக அமைந்திருந்தது.

அமெரிக்காவின் தீவிர அழுத்தத்தினாலேயே வேறு வழியின்றி பொசேகா விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொன்சேகாவின் விடுதலைக்கு அமெரிக்காவின் அழுத்தம் எதுவும் பிரயோகிக்கப்படவில்லை என்பதை சிறிலங்கா அரசுதரப்பினர் தொடர்ந்து கூறிவந்தாலும் அதுதான் உண்மை என்பதனை அவர்களே வெளிப்படுத்தி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

தீவிர சிங்கள இனவாதியான ஜே.வி.பி. தலைவரும் மகிந்தவின் வலுவான பக்கதுணையுமான விமல் வீரவன்ச வழக்கமான தனது பாணியினை மாற்றி பொன்சேகா விடையத்தில் கருத்துரைத்திருப்பது இதனை உறுதிப்படுத்துகின்றது.

சரத்பொன்சேகாவை யாருக்கும் பயந்து விடுதலை செய்யவில்லை என கடந்த புதன் அன்று(23ம் திகதி) பத்தரமுல்லையில் கருத்துத் தெரிவத்துள்ள விமல்லீரவன்ச சரத்பொன்சேகாவிடம் நாங்கள் தயவுகூர்ந்து கேட்பது யாதெனில் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய விடையங்களைப் பேசவேண்டாம் என்பதேயாகும்.

சர்வதேசத்திற்கு தேவையான சூழலையும் கருத்துக்களையும் சரத்பொன்சேகா வெளியிட்டு வருகின்றார். எனவே இறுதி யுத்தக் காலம் தொடர்பாக சரத்பொன்சேகா தொடர்ந்தும் பேசுவது ஆபத்தான விடையமாகும் என மகிந்த அரசிற்கு ஏற்பட்டுள்ள திரிசங்கு நிலையினை விமல்வீரவன்ச வெளிப்படுத்தியுள்ளார்.

யார் தொடர்பான எந்தக் கருத்துக்களையும் அஞ்சாமல் நேரடியாக வெளிப்படுத்தும் விமல்வீரவன்ச சரத்திடம் கெஞ்சாத குறையாக மன்றாடுவது சரத்தின் பின்னால் உள்ள அமெரிகாவைப் பார்த்துத்தான் என்பது உண்மையாகும்.

அடுத்து சிறிலங்காவின் பாதுகாப்புத்துறைச் செயலரும் மகிந்தரின் சகோதரருமான கோத்தபாய தெரிவித்துள்ள கருத்தும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள பொன்சேகாவை இராணுவ நீதிமன்ற வழக்குகளில் இருந்து முழுமையாக விடுவிக்கக்கூடாது என ராசபக்சேவிற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

சரத்பொன்சேகா சிறையில் இருந்த காலப்பகுதியில் அவரிற்கு எதிராக செயற்பட்ட கருத்துக்களை தெரிவித்த இராணுவ அதிகாரிகளிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் முழுமையாக விடுதலை செய்வது நாட்டின் நலனிற்கு ஏற்புடையது அல்ல எனவும் இதன்போது கோத்தபாய தெரிவித்துள்ளார்.

விமல்வீரவன்ச கோத்தபாய ராசபக்சே உள்ளிட்ட அரசதரப்பின் பலர் சரத்பொன்சேகாவின் விடுதலையினையும் விடுதலைக்குப் பின்னரான செயற்பாடுகளையும் பெரும் அச்சத்தோடு எதிர்நோக்கி கருத்துக்களைத் தெரிவத்து வருவதானது சரத் விடையத்தில் சிறிலங்கா அரசின் கையாகாலத்தனத்தையே காட்டி நிற்கின்றது.

நாட்டிற்கும் தமது அரசிற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவார் என உணர்ந்து கொண்டதன் பின்னணியில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக இத்தனை நாள் சிறையில் வைத்திருந்த இவர்கள் இன்று தவிர்க்க முடியாது வெளியில் விட்டுவிட்டு புலம்பிக் கொண்டுள்ளனர்.

நாட்டிற்கும் தமது அரசிற்கும் ஏற்படுத்தும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும்விட அமெரிக்காவின் அழுத்தம் வலிமையானதாக இருந்த காரணத்தினால்தான் சரத்பொன்சேகா விடுதலை சாத்தியமாகியுள்ளது.

அரசியல் பழிவாங்கல் காரணமாக சிறை சென்ற என்னை பத்து வருடங்கள் தடுத்து வைத்திருந்தாலும் நான் தைரியம் இழந்திருக்க மாட்டேன் என்று சிறைவாசலில் உறுதியுடன் கருத்துரைத்த பொன்சேகா நான் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப என்னால் முடியும் என அடுத்தடுத்த நாட்களில் சொல்கின்றார் என்றால் அவரிற்கு பின்னால் அமெரிக்காவின் ஆதரவு வலுவாக இருக்கும் தைரியத்தினால்தான்.

சர்வதேச விசாரணைக்கு சிறிலங்கா அரசு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனச் சொன்னகையோடு வடக்கில் இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டியது அவசியம் எனவும் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தலையீடுகள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தலையீடு கூடாது என்றும் இராணுவம் இராணுவத்தின் வேலையினை மட்டும் பார்க்க வேண்டும் என்று சரவெடியாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான விடையங்களை பேசிவருகின்றார்.

சரத்பொன்சேகாவின் இந்த கருத்துக்கள் சிறிலங்கா அரசிற்கு பாரிய நெருக்கடிகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தும் என்பது உண்மைநிலையாகும். சிறிலங்கா அரசு மறுத்துரைக்கும் விடையங்கள் தொடர்பாக சரத்தின் பேச்சுக்கள் அரசிற்கு பெரும் தர்மசங்கடத்தையே எற்படுத்தியுள்ளது.

இராணுவத்திலும் அரசிலும் பிளவை உண்டுபண்ணப்போகும் சரத்தின் விடுதலை.

சரத்பொன்சேகா கைது செய்யப்பட்ட போதே இராணுவத்தில் பெரும் ஆரவாரங்கள் ஏற்பட்டிருந்தது. கோத்தபாயவின் இரும்புப்பிடிக்குள் அவை அடக்கப்பட்டிருந்தாலும் நீறுபூத்த நெருப்பாக சிறிலங்கா இராணுவத்தில் இரு பிரிவுகள் காணப்பட்டே வந்துள்ளது. அதன் வெளிப்பாடாக அவ்வப்போது இராணுவத்திற்குள் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுவந்துள்ளது.

பொன்சேகா அணி கோத்தா அணி என சிங்கள இராணுவம் பிளவுபட்டிருந்த நிலையில் சரத்தின் விடுதலையினால் இன்னும் பிளவு நிலை வலுவடையும் விதமாகவே சில செயற்பாடுகள் நடந்தேறியுள்ளன. பொன்சேகா விடுதலை ஆனதை கொண்டாடும் முகமாக சிறிலங்கா இராணுவத்தினர் ஆங்காங்கே நாட்டின் பலபாகங்களில் வெடி வெடித்து கொண்டாடியுள்ளதையடுத்து கோத்தபாயவின் உத்தரவிற்கமைய இரகசிய புலனாய்வு அணியினர் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றமை இராணுவத்திற்குள் முறுகலை தீவிரப்படுத்தக்கூடும்.

தற்போது ஆன்மீக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் சரத் இராணுவ ரீதியிலான பயணங்களையோ சந்திப்புக்களையோ ஆரம்பித்தால் நிலமை இன்னும் மோசமாகலாம்.

சரத்தை கடந்த சனாதிபதித்தேர்தலில் களத்தில் இறக்கி ஆழம்பார்த்த பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சி தற்போதைய நிலையில் நிதானத்தை கடைப்பிடிப்பதாக தெரிந்தாலும் சரத்தை இணைத்து செயற்பட வேண்டும் என கட்சியின் பலதலைவர்களும் தொண்டர்களும் விரும்புவதால் வரும்நாட்களில் அதற்கான முயற்சியில் ரணில் ஈடுபடக்கூடும்.

மகிந்த அரசால் அரசியல் பழிவாங்கப்பட்ட சரத் நாட்டை சுத்தப்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்திற்கும் ஆதரவளிக்கவும் தயார் என அறிவித்து தேர்ந்த அரசியல்வாதியாக தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். நாட்டை சுத்தப்படுத்துவதற்கு இந்த அரசு உண்மையான நோக்கத்துடன் ஒத்துழைப்பு வழங்கினால் இந்த அரசிற்கு ஆதரவளிக்கத்தயார் எனக் கூறியுள்ள சரத் நல்லாட்சியை ஏற்படுத்தும் எந்த அரசாக இருந்தாலும் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

முக்கியமாக ஜனாதிபதி யார் பிரதமர் யார் என்பதை நான் பார்க்க மாட்டேன் நாட்டை சுத்தப்படுத்துவதற்கு யார் முயன்றாலும் எனது ஆதரவு உண்டு என்று சொன்னதன் மூலம் மகிந்த அரசிற்குள்ளேயும் தனது தூண்டிலை போட்டுள்ளார் சரத்பொன்சேகா.

தமிழர்களிற்கு எதிராக கடைசிக்கட்ட போரில் நிகழ்த்தப்பட்ட போர்குற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துவருவதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சிறிலங்கா அரசிற்கும் அரச தலைமைக்கும் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் சரத்தின் விடுதலையானது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை திசைதிருப்ப உதவும் என சிறிலங்கா அரசுதரப்பு நம்புகின்றது.

சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி வரலாறுகாணாத விதத்தில் வீழ்ச்சியடைந்து வருவதால் தாறுமாறாக அதிகரித்துள்ள விலைஉயர்வு மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் உள்நாட்டில் அரசிற்கு எதிரான அதிருப்த்தி நிலவுவதால் சரத்தின் விடுதலை விடையத்தில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு சிங்கள அரசை அடிபணிய வைத்துள்ளது எனலாம்.

சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்த திரைமறைவில் காய்நகர்த்திய மேற்குலகின் திட்டம் சரத்தின் விடுதலை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மகிந்த ராசபக்சே பதவிஏற்ற காலம் தொட்டு அவ்வப்போது மேற்குலக சக்திகள் சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தீவிரமாக முயன்று வருவதாக இன்றுவரை அவலக்குரலெழுப்பி வருகின்றமை உண்மைநிலையாகும்.

இராசதந்திர தளத்தில் நெகிழ்வுப் போக்கின்றி முரட்டுப்பாதையில் பயணிக்கும் ராசபக்சே அரசு மேற்குலகின் அபிலாசைகளை நிறைவேற்ற உகந்ததாக இல்லாமையால் அதற்கு மாற்றான அரசை ஆட்சியில் அமர்த்த மேற்குலகம் பரிசீலனையில் இருந்தது என்னவோ உண்மைதான். இந்தியா கூட மனதிற்குள் எண்ணியிருந்தாலும் செயற்படுத்த திராணியற்று இருந்தது.

மகிந்தவின் இந்த ஆணவப்போக்கும் சீனாவை மட்டும் நம்பி ஆட்சியை முன்னெடுத்து வருவதும் அவர்களது கருத்துப்படி நாற்பதாண்டுகளிற்கு மேலாக நீடித்துவந்த போரை முடிவுக்குக் கொண்டுவர உதவியிருக்கலாமே தவிர நீடித்து நிலைத்த அரசை நடாத்துவதற்கு துளியும் உதவவில்லை என்பதுடன் அதுவே ஆபத்தாகவும் உருவெடுத்துள்ளது.

தன்னந்தனியே சீனாவிற்கான கதவுகளை எவ்வித கேள்வியும் இன்றி சிறிலங்காவின் அனைத்து தளங்களிலும் திறந்துவிட்டுள்ளமையானது இந்தியா உள்ளிட்ட மேற்குலகநாடுகளை பரிசீலனையில் இருந்த ஆட்சிமாற்றத் திட்டத்தை செயற்படுத்தத் தூண்டியுள்ளது. அல்லது இராசதந்திர பொருளியல் அழுத்தங்களை நேரடியாக பயண்படுத்தும் நிலையினை உருவாக்கியுள்ளது.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனது கடல் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் சீனாவின் திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிய ராசபக்சே அரசு அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுகம் ஒன்றினை நிறுவுவதற்கு அனுமதியைக் கொடுத்து நிறைவேற்றியும் விட்டது.

இங்குதான் சிக்கல் ஆரம்பித்துள்ளது. அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுகத்தை அமைத்துள்ள சீனா அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பலை அங்கு நிலைநிறுத்த உள்ளதாக வெளியாகியுள்ள இரகசியத் தகவலையடுத்தே இந்தியவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும் எச்சரிக்கையடைந்துள்ளார்கள்.

அண்மையில் செனீவாவில் சிறிலங்கா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் இந்திய ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை இந்தப்பின்னணியில் நிகழ்ந்ததாகவே நோக்கப்படுகின்றது. தீர்மானம் ஒன்றும் இல்லாத விடையமாக இருந்தாலும் அடுத்த ஒருவருடத்திற்கு இதனை சாக்காக வைத்து சிறிலங்காவை இராசதந்திர பொருளியல் வழிமுறைகளில் நெருக்கடிகளை ஏற்படுத்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பது மட்டும் உண்மை.

ஜெனீவா தீர்மானம் இந்தளவில் இருக்க கமுக்கமாக தீவர இனவாதசக்திகளை மகிந்த அரசிற்கு எதிராக களமிறக்க மேற்குலகமும் சந்தர்ப்பம் வாய்க்குமானால் எதிர்க்கட்சி தலைவர் ரணில் முன்னால் அதிபர் சந்திரிக்கா ஆகியோரைப் பயண்படுத்த இந்தியாவும் காய்நகர்தி வருகின்றமை நடைபெற்றுவரும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவிற்கு வந்த இரு இடதுசாரித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்டமை சாதாரண நிகழ்வாக அமைந்துவிடவில்லை. அப்படி யாரையும் தமது இராணுவத்தினரோ காவல்துறையினரோ கைது செய்யவில்லை எனவும் அந்தப் பெயர்வழியில் யாரும் நாட்டிற்குள் பிரவேசிக்கவில்லை எனவும் பாதுகாப்புத்துறைச் செயலர் சாதித்து நிற்க அவுஸ்திரேலிய குடிவரவுத்துறையின் பதில் நடவடிக்கையே இதன் பின்னணியில் பாரிய சதித்திட்டம் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது.

குறித்த இரு சிங்களத் தலைவர்களும் தமது சொந்தப்பெயரில் நாட்டிற்குள் வரவில்லை எனவும் போலிப்பெயரில் நாட்டிற்குள் வந்துள்ளதை ஆதாரத்துடன் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை வெளியிட்டபின்னரே வேறு வழியின்றி மர்மமான முறையில் விடுவிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டிருந்தார்கள்.

போலியான பெயரில் குறித்த சிங்கள தலைவர்கள் சிறிலங்கா சென்றது அவுஸ்திரேலிய குடிவரவுத்துறைக்கும் அரசிற்கு ஆபத்தானவர்கள் நாட்டிற்குள் வருகின்றார்கள் என்ற தகவல் கோத்தபாயவிற்கும் தெரிந்துள்ளமை இருதரப்பிலும் தெரிந்தே அனைத்தும் இந்த விடையத்தில் நடந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றது.

தீவிர சிங்கள இடதுசாரித் தலைவர்களுடனான கலந்துரையாடல் மேற்கொள்ள இரகசியமாக சென்றவர்கள் அமரிக்காவின் திட்டப்படியே சென்றுள்ளார்கள். மகிந்த ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு ஏதாவது திட்டங்களை இவர்கள் எடுத்துச் சென்றிருந்தமையால்தான் கோத்தபாயவால் கடத்தப்பட்டிருந்தார்கள்.

ஆபிரிக்க வளைகுடா நாடுகளில் தமது நலன்சார்ந்த செயற்பாடுகளிற்கு ஒத்துழைக்க மறுத்த அரசுகளை மக்கள் புரட்சி என்ற வழிமுறையில் அமெரிக்கா எப்படி தூக்கிவீசியது என்பது அனைவரிற்கும் தெரிந்தவிடையமாகும்.

துனுசியா எகிப்து போன்ற நாடுகளில் உள்ள அதிருப்திக் குழுக்களை சில வருடங்களிற்கு முன்னர் ஒருங்கிணைத்து கமுக்கமாக புரட்சியின் மூலம் ஆட்சியை எப்படி கவிழ்க்க முடியும் என்பதற்கு பயிற்சிகளை கொடுத்து தயார்நிலையில் வைத்திருந்தமையும் சிறு தீப்பொறி போன்ற சம்பவம் வாய்ப்பாக அமைந்துவிட அதனைப் பயண்படுத்தி மக்கள் புரட்சி வடிவத்தில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி தான் நினைத்ததை சாதித்துக் கொண்டுள்ளது அமெரிக்கா.

இவ்வாறே 42ஆண்டுகள் லிபியாவின் முடிசூடா மன்னனாக ஆட்சிசெய்து வந்த கடாபியை வீழ்த்தியதும் இன்றும் சிரியாவில் கலவரங்களும் உயிர்பலிகளும் உயிர்ப்புடன் தொடர்வதும் அமெரிக்காவின் கைவண்ணமாகும்.

ஆதரவான அரசாக இருந்தாலும் இணக்கமில்லாத அரசுகளானாலும் ஏதாவது பிரச்சினையினை உள்நாட்டில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தி அதன் பின்னணியில் தலையிட்டு தமது பேரங்களை நிறைவேற்றிக் கொள்வது அமெரிக்காவின் உத்தியாகும். அதனையே இந்த நாடுகளிலும் பயண்படுத்தி தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த போரில் தமிழர்களிற்கு எதிராக சிறிலங்காப் படைகள் நிகழ்த்திய போர்குற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விடையத்தை கையிலெடுத்துள்ள அமெரிக்கா அதனை துரும்புச்சீட்டாகப் பயண்படுத்தி சிங்களத்தின் சீனாவின் மீதான கண்மூடித்தனமான காதலின் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றது.

அனைத்துலக இராசதந்திர தளத்தில் அந்தவிடையம் ஒருபக்கம் இருக்க சரத்தின் விடுதலை மூலம் உள்நாட்டில் ஏதாவது அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சியை ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் நகர்வுகள் இவ்வாறு இருக்க அண்மையில் சந்திரிக்காவின் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆண்டுநிறைவு நிகழ்வை டெல்லியில் நடாத்த அனுமதித்ததோடு மட்டுமல்லாது அதில் ரணிலையும் பங்கேற்க வைத்ததன் மூலம் இந்தியாவும் தமது ஆட்சிமாற்ற விருப்பை ராசபக்சேவிற்கு உணர்த்தியுள்ளது.

இங்கு அலசப்பட்ட விடையங்களில் இருந்து ஒன்று தெளிவாகத் தெரிகின்றது. அது இந்தியாவாக இருந்தாலும் அமெரிக்காவாக இருந்தாலும் தத்தமது அரசின் நலன்களை மையமாக வைத்தே சிறிலங்கா விடையத்தில் தலையிட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவர்களிற்கு துரும்புச் சீட்டாக பயண்படுவது தமிழர் தரப்பேயாகும். தமது நலன்களிற்காக தமிழர் தரப்பை கையிலெடுத்துள்ள பிராந்திய உலக வல்லாதிக்க சக்திகளிற்கு தமிழர்களது விடையத்தை ஊறுகாயாக இல்லாது தொண்டையில் சிக்கிய முள்ளாக மாற்றி எமது விடுதலை என்ற இறுதி இலட்சியத்தை நோக்கி நகர்த்துவதற்கு நாம் ஒருகுடைக்கீழ் தமிழர்களாக ஒன்றிணைவது அவசியமாகும்.

சரத்பொன்சேகா இரட்டை வேடம்தரித்து எடுத்துள்ள நிலையானது மகிந்தவின் பாணிக்கு நேர்மாறனதாகும்.

முன்னர் குறிப்பிட்டதுபோல் உதயன் சுடரொலி பத்திரிகைகளிற்கு பேட்டி கொடுக்கும் போது வடக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பரம்பலை குறைக்க வேண்டும் எனக் கருத்துக் கூறிய பொன்சேகா இந்தப்பத்தி எழுதிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தமிழக பத்திரிகையான தினமணிக்கு கொழும்பில் வைத்து வழங்கிய பேட்டியில் முற்றிலும் முரணான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழர்களிற்கு தற்போது அதிகாரப் பகிர்வு கொடுக்க முடியாதாம். சிங்களவர்கள் தமிழர்களை நம்பத்தயாராக இல்லையாம். அத்துடன் வடக்கில் இராணுவத்தை எக்காரணம் கொண்டும் விலக்க முடியாது என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இருநூறு தீவிரவாதிகள்(தமிழர்கள்) ஒன்று சேர்ந்தால் தற்போது இருக்கும் நிலைமையினை தலைகீழாக மாற்றிவிடுவார்கள். இந்த நிலையில் இராணுவத்தை வடக்கில் இருந்து எடுக்க முடியாது என உறுதியாக சரத் கூறியுள்ளார். வெறும் இருநூறு தமிழர்கள் ஒத்த சிந்தனையுடன் செயலில் இறங்கிவிட்டால் சிறிலங்கா நாட்டின் தலைவிதியை மாற்றிவிடலாம் என்பது சரத்திற்கு தெரிந்து என்ன பிரியோசனம் புரிய வேண்டிய எமது மக்களிற்கு புரியவில்லையே!

புணர்வாழ்வழிக்கப்பட்டு விடுவிக்கப்படும் போராளிகள் மீண்டும் இராணுவத்தால் கைது செய்யப்படுவதையும் இந்தப் பேட்டியில் நியாயப்படுத்தியுள்ளார். இவ்வாறு நாட்டிற்குள் தமிழர்கள் மத்தியில் ஒரு கருத்தையும் சிங்களவர்கள் மத்தியில் இன்னொரு கருத்தையும் வெளியிட்டு சரத்பொன்சேகா இரட்டை வேடம் போட்டு அரசியல் அரங்கில் தனது வரவை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

இந்தவிடையத்தில் மகிந்தராசபக்சே பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரிற்கும் ஒரே பதில். முடியாது என்றால் முடியாதுதான். அது தமிழர் தரப்பாக இருக்கட்டும் இந்தியாவாக இருக்கட்டும் ஏன் அமெரிக்காவாக இருக்கட்டும் எல்லோரும் ஒன்றுதான். இல்லை என்றால் பிரீசிடம் வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கிலாரிகிளிங்டன் வலியுறுத்தி இரண்டு மணிநேரத்தில் போர் வெற்றிவிழாவில் எந்தக்காலத்திலும் வடக்கில் இருந்து இராணுவம் விலக்கப்படாது என இடித்துரைத்திருக்க முடியுமா?

தயவு தாட்சன்யமின்றி கொலைவெறியோடு தமிழர்களிற்கு எதிரான போரை தலைமையேற்று நடத்திய பொன்சேகா தனது அரசியல் தளத்தை உறுதிப்படுத்த தேர்ந்த அரசியல்வாதியாக மாறி தமிழர்களிடம் ஒரு கருத்தையும் சிங்களவர்களிடம் இன்னொரு கருத்தையும் வெளிப்படுத்தி தானும் இன்னொரு சிங்கள இனவாத தலைவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழர்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் எமது மூலாதாரக் கொள்கையினை வலியுறுத்திப் போராடுங்கள். காலம் வரும் அப்போது ஒன்றிணைந்து போராடுவோம்.

மகிந்தவிற்கு மாற்றாக பொன்சேகா கிடைத்துவிட்டார் என்பதற்காக விழுந்தடித்து அவரை ஆதரிக்க தமிழர் தரப்பு முற்படுவது மீண்டும் எமது விடுதலைப் போராட்டத்தை பாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்பதை தமிழர்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

தற்போது தமிழர் தரப்பில் தாயகத்தில் தலைமை ஏற்று இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றாலும்சரி புலத்தில் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்துவரும் ஈழத்தமிழர் பேரவை மக்களவை உலகத்தமிழர் பேரமைப்பு அனைத்துலக இளையோர் அமைப்பு ஒருங்கிணைப்புக்குழு நாடுகடந்த தமிழீழ அரசு என யாராக இருந்தாலும் முதலில் தெளிவாக தமிழர்களது தீர்வுத்திட்டத்தை முன்வைத்து போராடவேண்டியது அவசியமாகும்.

தமிழர்களை தாயகத்திலும் புலத்திலும் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அமைப்பாக குழுவாக இருந்தாலும் வரலாற்று வழியாக தமிழர்கள் ஆண்டு அனுபவித்துவந்த தாயக பூமியான சதந்திர தமிழீழக் குடியரசின் அடிப்படையில் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகிய மூலாதாரக் கோரிக்கைகளை உள்ளடக்கிய தீர்வுத்திட்டங்களை உருவாக்கி அவரவர் தளங்களில் நின்று போராடுங்கள்.

காலம் வரும். களத்தை சூழ்ந்துள்ள இருள் நிச்சயம் அகலும். உலகத்தமிழினத்தின் பகலவன் காரிருள் கிழித்து தமிழுலகிற்கு விடுதலை வெளிச்சம் பரப்புவான். அப்போது எல்லோர் கைகளும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைக்காக களமாடுவோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் :- ம.செந்தமிழ்(29-05-2012)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.