Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பந்தயம்

Featured Replies

"மறுபடியும் இந்தத் தடவை யாரைக் கெடுக்கிறாய்?"

தோளின் பின்னாலிருந்து சுவாமிநாதனின் குரல் கேட்டதும், விசு பேனாவை மேஜை மீது வைத்துவிட்டான். இனி அவன் இருக்கும் வரை எழுத ஓடாது.

"புதுப் பறவையா?" சுவாமிநாதன் கேட்டான்.

விசு சிரித்தான். சுவாமிநாதனைப் பார்த்தால் அவனுக்குச் சிரிப்பு வரும். இயலாமையை நல்லதனம் என்று நினைத்துக் கொண்டு திருப்திப் பட்டுக்கொள்பவர்கள்.

சுவாமிநாதன் நல்லவன். சிகரெட் பிடிக்கமாட்டான். சீட்டாட மாட்டான். முதல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு பாடத்தை சிரத்தையாகக் கேட்பான். பெண்களின் நிழல் கூடப் பிடிக்காது. அவனைக் கண்டால் விசுவுக்கு பாவமாக இருக்கும். வேடிக்கை என்னவென்றால் விசு என்றால் சுவாமி நாதனுக்கும் இரக்கம்தான்.

"

பெண்களுக்கே இல்லாத கொள்கைகளை நாம் கடைபிடித்து, மடியாக இருப்பதால் லாபம் என்ன?" என்பது விசுவின் வாதம்.

"அப்படியாவது அது போன்ற சுகங்களை அனுபவிக்க வேண்டுமா?"

"நீ இல்லாவிட்டால் மற்றொருவர் அந்த இடத்தை அடைவது நிச்சயம் எனும் போது நீயே ஏன் அனுபவிக்கக் கூடாது?"

"அது ஒரு கண நேர சுகம்." சுவாமிநாதன் சொல்வான்.

"இல்லை. த்ரில்!" என்பான் விசு.

"உணர்ச்சிகள் வேறு. அது காதலில் கிடைக்கலாம். ஆனால் த்ரில்லுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை."

இந்த வாக்குவாதம் எப்போதும் முடியாது. வாழ்க்கையைப் பற்றி இருவருக்கும் ஸ்திரமான அபிப்பிராயம் இருக்கிறது. அதனால் அங்கே பொறாமைக்கு இடமில்லை. இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், இரவு வேளையில் எந்தப் பெண்ணாவது வந்து கதவைத் தட்டினால், அவளை கௌரவமாக உள்ளே அழைத்துவிட்டு சுவாமிநாதன் இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போய்விடுவான். மறுநாள் காலையில் விசுவிடம் எப்போதும் போல் பேசுவான். அதனால்தான் அவர்களின் நட்பு மூன்று வருடங்களாக எந்த இடையூரும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

******

கடைசி வருடத்தில் இருக்கும் போது சுவாமிநாதன் மாறிவிட்டான். இந்த மாறுதல் விசுவுக்கு சீக்கிரமே தெரிந்துவிட்டது, ரூம் மேட் ஆகையால்.

இதற்குமுன் தன்னுடைய தோற்றத்தைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாதவன், இப்பொழுது கண்ணாடி முன் ஐந்து நிமிடம் நிற்கிறான். காரணம் முதலில் புரியவில்லை. ஆனால் விரைவிலேயே தெரிந்து போய் விட்டது. சுவாமிநாதன் காதலில் ........ விழுந்து

விட்டான் என்று.

விசு ரொம்ப வற்புறுத்தி கேட்ட பிறகு சுவாமி சொன்னான்.

"அந்தப் பெண்ணின் பெயர் ஸ்வப்னா."

"பெயர் நன்றாக இருக்கு. கல்லூரியில் படிக்கிறாளா?"

"பி.ஏ. கடைசி வருஷம்."

விசு ஒரு நிமிடம் நிதானித்துவிட்டு பிறகு கேட்டான். "எவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கு உங்களுயை அறிமுகம்?"

"நேற்று பேசினேன்."

விசு சிரிப்பை அடக்கிக் கொண்டான். "இதென்ன காதல்?"

சுவாமியின் முகம் சுண்டிவிட்டது. "அனுபவம் இல்லையே?" என்றான்.

விசுவுக்கு சவுக்கால் அடித்தாற்போல் இருந்தது. ஆனால் இந்த மாதிரி சிறிய விஷயங்களுக்குக் கெடும் நட்பு இல்லை அவர்களுடையது.

"அந்தப் பெண்ணின் பொழுது போக்குகள் என்ன?" விசு கேட்டான்.

"வீணை கற்றுக்கொள்கிறாள். அங்கேதான் அறிமுகம் ஏற்பட்டது."

பொறாமைப் படாமல் விசு புன்முறுவல் செய்தான். "எக்ஸ்லெண்ட்! அப்போ கல்யாணம்?"

"அதற்குள்ளேயா? அந்தப் பெண்ணிடம் இன்னும் என் காதலைப் பற்றி சொல்லவே இல்லையே?"

"அந்தப் பெண்ணின் அபிப்பிராயம் இருக்கட்டும். நீ உன்னைப் பற்றிச் சொல்லு."

சுவாமிநாதன் விசுவை வியப்புடன் பார்த்துவிட்டு "கல்யாணம் செய்து கொள்ளும் உத்தேசம் இல்லாவிட்டால் காதலிப்பது மட்டும் எதற்கு?" என்றான்.

******

"எனக்கு இந்தக் காதலில் நம்பிக்கை இல்லை சுவாமீ! அதற்கும் ஈரப்புக்கும் வித்தியாசம் இல்லை. கொஞ்சம் முயற்சி செய்தால் எந்தப் பெண்ணையும் சுலபமாக வீழ்த்தி விடமுடியும். இதற்கு காதல் என்று பெயர் சூட்டுவது பேதமை."

சுவாமிநாதன் பேசவில்லை. தொலைவில் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். பார்க்கிற்கு வெளியே சாலையில் மக்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

"உனக்கு ஏற்பட்ட அனுபவங்களினாலும், மட்டமான சிநேகங்களினாலும் நீ இந்த அபிப்பிராயத்திற்கு வந்தால், நான் ஒன்றும் சொல்ல முடியாது" என்றான் சுவாமிநாதன். "நீ முழு மனதுடன் காதலிப்பதற்கு தயாரான நிலையில்தான் எதிராளியிடமிருந்து நீ காதலை எதிர்பார்க்கலாம். நீ மட்டும் சிநேகத்தை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு, அந்தப் பெண்ணை மட்டும் உண்மையாக காதலிக்கச் சொன்னால் எப்படி?"

"எனக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை."

"அது உன் தலையெழுத்து. உனக்கு அறிமுகமான பெண்கள் எல்லோரும் அப்படிப்பட்டவர்கள்."

"உலகத்தில் எல்லாப் பெண்களுமே அப்படிப்பட்டவர்கள்தான்."

"அப்படி என்றால் உனக்கு ஏதேனும் ஒரு பெண்ணைக் காண்பித்தால் அவளைக் காதலிக்காமல் அனுபவிக்கு முடியுமா?"

"இரண்டு நிமிட வேலை." விசு சிரித்தான்.

அந்த நேரத்தில் அவ்வழியாக போய்க் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காண்பித்து, "அதோ! அந்தப் பெண்ணை எடுத்துக் கொள்வோம். அவளை எத்தனை நாட்களில் உன்னால் காதலில் இறக்க முடியும்?" சுவாமிநாதன் கேட்டான்.

ரொம்ப சாதாரணமாக இருந்தாள் அந்தப் பெண், லோயர் மிடில்

கிளாசுக்கும் கொஞ்சம் தாழ்வான நிலையில். பாவாடை தாவணி அணிந்திருந்தாள். பாவாடை பழசாக இருந்தது. தாவணியில் கொஞ்சம் கிழிசல்.

"இந்தப் பெண்ணை ட்ராப் செய்ய எனக்கு பத்து நாட்கள் போதும்." விசு அழுத்தமான குரலில் சொன்னான்.

"அப்படியென்றால் சரி." சுவாமி எழுந்தான். "லீவ் முடிந்து நான் திரும்பி வரும்போது, அதாவது ஒரு மாதத்தில் அவளை ட்ராப் செய் பார்ப்போம்."

"பெட்?"

"பெட்!"

******

அந்தப் பெண்ணின் பெயர் சுப்பலக்ஷ்மி என்று பிறகு தெரிந்தது. அதற்குக் கொஞ்சம் கூட முயற்சி தேவைப் படவில்லை.

சுவாமியை பார்க்கிலேயே விட்டு விட்டு அவன் அவளைப் பின் தொடர்ந்தபோது, கையில் இருந்த புத்தகம் பக்கம் பார்த்ததில் பெயர் தெரிந்து விட்டது. எஸ் ...யு ...பி ... பி பிறகு எல் ....

அன்று அவளுடைய வீட்டைப் பார்த்து வைத்துக் கொண்டு, மறுநாள் மாலை அந்தத் தெரு முனையில் நின்று கொண்டான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாண்டியும் அவள் கண்ணிலேயே படவில்லை. இருட்டி விட்டது. அவள் வீட்டிலிருந்து வெளியில் வரவில்லை. ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்தான்.

மறுநாளும் இப்படியே நடந்தது.

அவனுக்கு சந்தேகம் வந்தது, அந்த வீடுதானோ இல்லையோ என்று. சிறிய ஓட்டு வீடு அது. எந்தக் கணமும் கூரை இடிந்து விழும் நிலையில் இருந்தது. அவனுக்கு தன் மீதே எரிச்சல் வந்தது. இப்படி தெரு முனையில் நிற்பது அவனுக்குப் புதிது. அதுவும் இல்லாமல் ஒரு சாதாரண பெண்ணிற்காக இவ்வளவு நேரத்தை வீணாக்குவதாவது?

அவன் ஸ்கூட்டர் சீட்டின் மீது உட்கார்ந்துகொண்டே சட்டைப் பையிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். அந்தத் தெருவைச் சேர்ந்த ஹீரோக்கள் போலும், இவனையே ஜாடையாக் பார்த்துக் கொண்டு நான்கைந்து முறை நடந்தார்கள். அவனுக்குச் சிரிப்பு வந்தது. கொஞ்சம் அப்பாவியாக தென்பட்டால் போதும். அவர்கள் இவனை மடக்கிவிடுவார்கள். அவனுக்கு இதெல்லாம் த்ரில்லாக இருந்தாலும், இன்னொரு பக்கம் நேரத்தைப் பற்றி கவலையாக இருந்தது. இன்னும் இருபத்தி ஏழு நாட்கள்தான் இருந்தன, பந்தயம் முடிய.

சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான். திண்ணைகளுக்கு நடுவில் இருந்த படிகளில் அவள் இறங்கிக் கொண்டிருந்தாள். எங்கேயோ வெளியே போவதற்கு தயாராக இருந்தாள். அவன் அவளை வண்டியிலேயே நிதானமாக தொடர்ந்தான். கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடந்த பிறகு அவள் கடைத்தெருவுக்கு வந்தாள். குனிந்த தலை நிமிராமல், அக்கம் பக்கம் பார்க்காமல் நேராக நடந்து போய்க் கொண்டிருந்தாள். ஜவுளிக்கடை ஒன்றில் நுழைந்தாள். விசு தன் சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக் கொண்டான். ஐநூறு ரூபாய் இருந்தது. உள்ளே போனான்.

கடையில் அவள் பக்கத்திலிருந்து போகும் போது கவனமாகப் பார்த்தான். ஒட்டிய கன்னங்கள், கையில் கண்ணாடி வளையல்கள். அவன் வாழ்க்கையில் இதுவரையில் இப்படிபட்ட ஒரு பெண்ணிற்காக ஒரு மாதம் வீணாக்கியதில்லை. ஆனால் இந்தப் பெண்ணின் கண்களில் இனம் தெரியாத ஈர்ப்பு ஏதோ இருந்தது.

சேல்ஸ் பையன் நாலடி தொலைவில் அவளுக்காக துணியை அளந்து கொண்டிருந்தான். அவள் அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எக்ஸ்க்யூஸ் மி" என்றான் விசு, அருகில் சென்று.

அவளின் தடுமாற்றம் பளிச்சென்று தெரிந்தது. சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

"இவற்றில் எனக்கு எதை செலக்ட் செய்வது என்று புரியவில்லை. கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா ப்ளீஸ்!"

அவள் ஒரு நிமிடம் தயங்கி, அவனுடன் வந்தாள். பத்து புடவைகளை எடுத்து அவன் அவள் முன்னால் போட்டான். சிறிது நேரம் அவள் அவற்றை கவனமாக பார்த்துவிட்டு "அவங்க எந்த நிறத்தில் இருப்பாங்க?" என்று கேட்டாள்.

"கிட்டத்தட்ட உங்களைப் போலவே, தொட்டால் கன்றிப் போகும் அளவுக்கு சிவப்பாக."

அவள் ஒரு நிமிடம் அவனை நிதானமாகப் பார்த்தாள். குற்ற உணர்வு அவனை துளைத்தது. தேவைக்கு அதிகமான அந்தப் புகழ்ச்சியை அவள் கண்டு கொண்டு விட்டாள் என்று புரிந்துவிட்டது.

ஐந்து நிமிடங்களில் அவளின் செலக்ஷன் முடிந்துவிட்டது. அந்த ஐந்து நிமிடமும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தலையை உயர்த்தி "இது எப்படி இருக்கு?" என்று கேட்டாள். அவன் பேசவில்லை. அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து தலையைக் குனிந்து கொண்டாள். அப்படி உணரவேண்டும் என்பதுதான் அவனுடைய எண்ணமும்.

"பிடிக்கவில்லையா?"

ரோஜா நிறம். உண்மையிலேயே நன்றாக இருந்தது. அதையே சொன்னான்.

"எவ்வளவு?" அவள் சேல்ஸ் பையனிடம் கேட்டாள்.

"முன்னூறு."

அவள் விசுவைப் பார்த்து. "அவ்வளவு பெறாது. இருநூற்றைபது கொடுக்கலாம்" என்றாள்.

அவளின் அந்த குணம் அவனுக்குப் பிடித்திருந்தது. பேரம் பேசுவது தம்முடைய கௌரவத்திற்குக் குறைவு என்று எண்ணும் இந்தக் காலத்தில் முன் பின் தெரியாதவனுக்காக அவள் அப்படி பேரம் பேசுவது அவனுக்கு சந்தோஷமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

கடைசியில் இருநூற்றி எழுபத்தைந்துக்கு செட்டில் ஆனது. புடவை பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வெளியே வருகையில் அவன் "வாங்க. காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம்" என்றான்.

அவள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாள். "வேண்டாம் வேண்டாம்" என்றாள் தடுமாறியபடி.

அவன் விடவில்லை. "இன்னிக்கி நீங்க எனக்கு இருபத்தைந்து ரூபாய் மிச்சப் படுத்தியிருக்கீங்க. கட்டாயம் வரணும்" என்றான்.

கொஞ்சம் வற்புறுத்திய பிறகு அவள் லேசாக தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தாள்.

ஹோட்டலில் உட்கார்ந்த பிறகு கேட்டான். "உங்கள் பெயர்?"

"சுப்புலு."

"சுப்பலக்ஷ்மியா?"

"இல்லை. சுப்புலுதான்." அவளுக்குத் தன் பெயரை சொல்லிக் கொள்வதில் ஹீனமொன்றும் தெரியவில்லை.

"என்ன படிக்கிறீங்க?"

"எட்டாவது பாஸ் செய்திருக்கிறேன். தையல் கற்று வருகிறேன். நீங்க?" என்றாள்.

தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ளும் அவளின் அந்த ஆர்வம் அவனுக்குப் பிடித்திருந்தது. சொன்னான். அந்தப் புடவை தன் தங்கைக்கு என்றும் சொன்னான்.

காபி குடித்து முடிந்த பிறகு அவள் படியிறங்கிக் கொண்டிருந்த போது "அட! பஸ் வந்து விட்டது" என்று அவனைப் பார்த்து "வருகிறேன்" என்றாள்.

"எப்போ? எங்கே?"

அவள் சீரியஸாக பார்க்க நினைத்து, சிரித்துவிட்டாள். "போய் வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே பஸ்ஸை நோக்கிப் போய் விட்டாள்.

அவன் அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான். போதும். இன்று சாதித்தது ஒன்றும் குறைச்சல் இல்லை என்று நினைத்துக் கொண்டான்.

உண்மைதான். அவன் சாதித்தது குறைச்சல் ஒன்றும் இல்லை. மறுநாள், தையல் செண்டரில் அவளைச் சந்தித்தது யதேச்சையாக நிகழ்ந்தது இல்லை. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அவளைப் பார்த்த போது, அவனுடைய பிறந்தநாள் அன்றே வந்ததும் விசித்திரம் இல்லை.

அவன் ரொம்ப வற்புறுத்திய பிறகு அவள் டின்னருக்கு ஒப்புக்

கொண்டாள்.

"நீங்க சலம் எழுத்துக்களைப் படித்திருக்கீங்களா?" சாப்பிடும்போது அவன் கேட்டான்.

அவளுடன் ஹோட்டலுக்கு வருவது அவனுக்கு சங்கடமாகத்தான் இருந்தது. அதாவது பெண்ணுடன் சுற்றுவதை யாரேனும் பார்த்து விடுவார்களோ என்பதால் இல்லை. இதுபோல் எட்டாம் கிளாஸ் படித்த பெண்ணுடன் சுற்றுவதை தன்னுடைய நண்பர்கள் யாரேனும் பார்த்தால் தன்மானப் பிரச்னை என்ற பயம்.

"யாரு?" என்றாள்.

தன் மனதில் இருக்கும் விருப்பத்தைப் பற்றிச் சொல்ல அந்த எழுத்தாளரின் பெயரை பயன்படுத்துவது, அவருடைய உயர்ந்த இலக்கியத்தை இது போல் தாழ்வான வழியில் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்க நிலைமை.

அவள் நிமிர்ந்து பார்த்தாள். "ரொம்ப வருடங்களுக்கு முன் சலம் இலக்கியத்தை படித்தேன். சரியாக புரியவில்லை. அதாவது என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை."

"உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?"

"ஹெர்மிங் ஹேஸ்ஸின் மொழிபெயர்ப்புகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். சித்தார்த்தா, அரபிந்தோ..." அவள் சொல்லிக் கொண்டே போனாள். அவன் அவளையே பார்த்தான். ரொம்ப சாதாரணமாக தென்படும் இந்தப் பெண்ணின் பின்னால் ....

அவன் எண்ணங்களை கட்டுப்படுத்திக் கொண்டே "நாளை பிக்னிக் போவோம்" என்றான். அவள் தலையை உயர்த்திவிட்டு "தேவலையே" என்றாள் முறுவலுடன்.

"ஏன்?"

"அதெல்லாம் வேண்டாம்."

அவன் வற்புறுத்தவில்லை. இன்னும் இருபத்தி நான்கு நாட்கள் இருந்தன. அவசரம் இல்லை.

இந்த இருபத்தி நான்கு நாட்களில் அவர்கள் மேலும் நெருங்கி விட்டார்கள். ஆனால் அவையெல்லாம் வழக்கமாக பெண்களை ஈரக்க அவன் பயன் படுத்தும் யுக்திகள். பெண்களைச் சிலிர்க்க வைக்கும் தந்திரங்கள். இனிமையான பேச்சுக்கள். எல்லாம் கலந்த ஒரு நெருக்கம்.

******

மறுநாள் சுவாமிநாதன் வரப் போகிறான். அந்த விஷயம் அவனுக்கு நினைவு இருக்கவில்லை. பேச்சுவாக்கில் அவள்தான் சொன்னாள்.

"நாளை முதல் தேதி இல்லையா?"

அப்பொழுதுதான் அவனுக்கு நினைவு வந்தது. இன்னும் ஒரு நாள்தான். மறுநாள் சுவாமிநாதன் வந்துவிடுவான்.

"இன்று மாலை எங்கள் தோட்டத்திற்குப் போவோம்" என்றான்.

"சரி" என்றாள்.

அவன் உற்சாகமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினான். நண்பனிடம் கேட்டு கார் கொண்டு வந்தான். பழங்கள், பிளாஸ்கில் காபி மற்ற பொருட்களை எல்லாவற்றையும் காரில் எடுத்து வைத்தான்.

கார் தோட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த போது சொன்னான்.

"இரவு அங்கேயே தங்கி விடுவோம்."

"அய்யோ!"

"ஏன்? என்னவாம்?"

"எனக்கு விருப்பம் இல்லை" என்றாள் அவள். "இப்படி வருவது கூட எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் மாட்டேன் என்று சொன்னால் நீங்க வருத்தப் படுவீங்களே என்றுதான் வந்தேன்."

கார் தோட்டத்து கெஸ்ட் ஹவுஸ் முன்னால் நின்றது. பழக்கூடை, பிளாஸ்க் முதலியவற்றை வேலைக்காரன் கொண்டு போய் உள்ளே வைத்தான். சிகரெட் வாங்கி வரச்சொல்லி பணம் கொடுத்து வேலைக்காரனை வெளியில் அனுப்பிவிட்டான்.

மாமரத்திலிருந்து வீசிய காற்று மனதிற்கு இதமாக இருந்தது. எங்கேயோ குயில் ஒன்று கூவியது.

அவன் அவளை நெருங்கி தோள்களில் கைகளை வைத்து முத்தமிடப் போனான்.

"வேண்டாம்."

"ஏன்?"

"கல்யாணமான பிறகு அனுபவிக்க வேண்டிதெல்லாம் இப்பொழு§து முடித்துவிட்டால், பிறகு பாக்கி என்ன இருக்கும் நமக்கு?"

பளீரென்று அறைந்தாற் போல் இருந்தது அவனுக்கு.

"நாம் ..... கல்யாணமா?" என்றான் தெளிவில்லாமல்.

அவள் முகம் வெளிறிவிட்டதை அவனும் பார்த்துவிட்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பே "இல்லாவிட்டால் இதெல்லாம் எதற்காக?" என்றாள்.

ஒரு நிமிடம், ஒரே நிமிடம் யோசித்தான் அவன். ஸ்ப்ளிட் செகண்ட் [split second]. ஒரு நிமிடத்தில் ஆயிரம் எண்ணங்கள் அவனைச் சூழ்ந்துகொண்டன. ஹெர்மிங் ஹேஸ் நாவல் சித்தார்த், தன்னுடைய பட்டிக்காட்டுப் பெயரை சொல்லுவதை தாழ்வாகக் கருதாத மனப்பான்மை, அவளின் பேதமை, கிழிந்த தாவணியை மறைக்க முயற்சி எதுவும் எடுக்காதது.

தலையை சிலிர்த்துக் கொண்டான். அவளுக்கு தன் மீது இருக்கும் அபிப்பிராயம் புரிந்துவிட்டது. தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறவனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய உலகத்தில் திருமணத்திற்கு முன் காதலிப்பது, குறைந்த பட்சம் சிநேகமாக இருப்பது போன்ற நினைப்புகளுக்குக் கூட இடம் இல்லை. அந்த லோயர் மிடில் கிளாஸ் பெண்ணை தான் ஒரு காகிதப் பூவாக எண்ணி வி¨ளாட நினைத்துவிட்டான். அந்தப் பெண்ணிற்கு எந்த விதமான யோசனைகளும் இருக்காது என்றும், அனுபவங்களை ஜாலியாக எடுத்துக் கொள்வாள் என்றும் எண்ணிவிட்டான். இங்கு பிரச்னை கிளாஸ் கான்ஃ ப்ளிக்ட் இல்லை. அரிஸ்டோகிரஸி அவனுக்குக் கற்றுக் கொடுத்த அகங்காரம் கரைந்து போகும் நேரம்.

ஒரு நிமிடம் முடிந்துவிட்டது.

அவன் எழுந்துகொண்டு "கிளம்பு" என்றான், அவள் தன் உணர்வுக்கு வரும் முன்பே காரில் வந்து உட்கார்ந்து கொண்டான். ஒரு நிமிடம் கழித்து அவள் வந்தாள்.

கார் ஊரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. ஐந்து நிமிடங்கள் கழித்து பக்கத்து இருக்கையிலிருந்து சத்தம் கேட்டது. ஸ்டியரிங் மேலிருந்த பார்வையைத் திருப்பினான். அவள் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதுக் கொண்டிருந்தாள்.

"சாரி" என்றான்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அவள் அழுகையை நிறுத்தினாள். கண்களைத் துடைத்துக் கொண்டு "தவறு என்னுடையதுதான். நீங்க எதைப் பார்த்து என்னுடன் நட்பு வைத்துக் கொண்டீர்கள் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. கல்யாணம் வரையிலும் போய் விட்டது என்னுடைய யோசனை" என்று சொல்லிவிட்டு துயரம் கலந்த முறுவலை உதிர்த்தாள். "நீங்க கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக அப்பொழுதே சொல்லியிருந்தால் எதற்கும் ஒப்புக்கொண்டு இருப்பேனோ என்னவோ. அவ்வளவு முட்டாள்தனமாக நம்பிவிட்டேன். தாங்க்ஸ், என்னைக் காப்பாற்றியதற்கு" என்றாள்.

அவன் வருந்தியபடி "சாரி" என்றான். "நான் கெட்டவன்தான். ஆனால் கயவன் இல்லை."

காரை தெரு முனையிலேயே நிறுத்திவிட்டான். "மறுபடியும் நாம் சந்திக்க முடியாமல் போகலாம். ஆனால் இந்த மாதிரி அறிமுகத்தை என்னால் மறக்க முடியாது. குட் பை மை ·பிரண்ட் ·பர் எவர்."

******

மறுநாள் ரயில் நிலையத்திற்கு அதே காரில் சென்றான், சுவாமியை ரிசீவ் செய்து கொள்வதற்காக.

விசுவநாதன் பழைய விசு போலவே இருந்தான். பிரிண்டட் ஷர்ட் போட்டிருந்தான். மெல்லிய குரலில் ஆங்கில பாடலை ஹம் செய்து கொண்டிருந்தான்.

ரயிலை விட்டு இறங்கும் போதே சுவாமி கேட்ட முதல் கேள்வி

"அந்தப் பெண்ணை ஜெயித்து விட்டாயா?"

"காரில் ஏறு. சொல்கிறேன்" என்றான் விசு.

காரில் ஏறிய பிறகு மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டான். சுவாமியின் முகத்தின் ஒரு அவசரம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாகத் தென்பட்டது.

விசுவின் இதழ்களில் புன்முறுவல் மலர்ந்தது. "நான் தோற்றுப் போவது என்பதே இல்லை பிரதர்!"

"நிஜமாகவா?"

"சத்தியமாக. வேண்டுமென்றால் பின்னால் திரும்பிப் பார். அந்த சீட்டில் இருக்கிற கசங்கிய மல்லிகைச் சரத்தின் மீது ஆணை!"

சுவாமியின் முகம் வெளிறிவிட்டது. உதடுகள் ஆவேசத்தில் நடுங்கின. "நீ .... நீ ஒரு ராக்ஷசன் " என்றான்.

திடீரென்று சுவாமியின் குரலில் ஏற்பட்ட மாறுதலுக்கு வியந்து போன விசு, தன்னையும் அறியாமல் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான்.

"என்ன சொல்கிறாய் நீ?" என்றான்.

சுவாமிநாதன் காரின் கதவைத் திறந்து கொண்டு கீ§ழு இறங்கினான். "என்னைக் கொஞ்சம் தனியாக இருக்க விடு."

"எதற்கு?"

"பெண்களின் மீது எனக்கு இருந்த அபிப்பிராயம் தூள் தூளாக போனதற்கு."

"அப்படி என்றால்?"

"அந்தப் பெண்தான் ஸ்வப்னா என்பதால்."

விசுவிற்கு ஷாக் அடித்தாற்போல் இருந்தது. "அந்தப் பெண்ணின் பெயர் சுப்புலு" என்றான் வியப்புடன். "பின்னே ஏன் என்னிடம் முன்னாடியே சொல்லவில்லை?"

"என்னவென்று? நான் காதலித்த பெண்ணின் பெயர் சுப்புலு என்றும், எட்டாவது வரையில் படித்துவிட்டு தையல் கற்று வருகிறாள் என்றும் சொல்லச் சொல்கிறாயா?"

கற்சிலையாக நின்ற விசு சுய உணர்வை பெற்றவனாய், "ஆனால்... உண்மையில் நடந்தது என்னவென்றால்.." என்று ஏதோ சொல்லப் போனான்.

"இனிமேல் ஒன்றும் சொல்லாதே." சுவாமிநாதன் கார் கதவைச் சாத்தினான். அவனுடைய முகம் எல்லாவற்றையும் இழந்தாற்போல் தென்பட்டடது. பேண்ட் ஜேபியில் கைகளை நுழைத்துக் கொண்டு இருளில் கலந்து விட்டான்.

விசுவநாதன் அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான். இனி என்ன சொன்னாலும் பிரயோஜனம் இருக்காது என்று அவனுக்குத் தெரியும்!.

******

தெலுங்கு மூலம்: எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழில் கௌரிகிருபானந்தன்

"தி பெஸ்ட் ஆ·ப் எண்டமூரி வீரேந்திரநாத்"

சிறுகதைத் தொகுப்பில் இருந்து

http://suvasikkapporenga.blogspot.com

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.