Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்

Featured Replies

  • தொடங்கியவர்

Lord-Shiva-7301.jpg

  • Replies 53
  • Views 27.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

11. சிவாலய கைங்கரியவியல்

 


555035_378491988882568_1090078865_n.jpg

 

 

279. சிவாலயத்தின் பொருட்டுச் செயற்பாலனவாகிய திருத்தொண்டுகள் யாவை?

திருவலகிடுதல், திருமெழுக்குச் சாத்துதல், திரு நந்தனவனம் வைத்தல், பத்திரபுஷ்பமெடுத்தல், திருமாலைக் கட்டுதல், சுதந்த தூபமிடுதல், திருவிளக்கேற்றுதல், தோத்திரம் பாடல், ஆனந்தக் கூத்தாடல், பூசைத் திரவியங்கள் கொடுத்தல் என்பவைகளாம்.

 

 


திருவலகிடுதல்

 

 


280. திருவலகு எப்படி இடுதல் வேண்டும்?

சூரியன் உதிக்குமுன் ஸ்நானஞ் செய்து, சந்தியாவந்தனம் முடித்துக்கொண்டு, திருக்கோயிலுனுள்ளே புகுந்து, மெல்லிய துடைப்பத்தினாலே கிருமிகள் சாவாமல் மேற்பட அலகிட்டுக் குப்பையை வாரித், தூரத்தே கொண்டுபோய்க் குழியிலே கொட்டிவிடல் வேண்டும்.

 

 


திருமெழுக்குச் சாத்துதல்

 

 

281. திருமெழுக்கு எப்படிச் சாத்தல் வேண்டும்?

ஈன்றண்ணியதும் நோயை யுடையதும் அல்லாத பசுவினது சாணியைப், பூமியில் விழுமுன், இலையில் ஏந்தியாயினும், ஏந்தல் கூடாதபோது, சுத்தநிலத்தில் விழுந்த சாணியை மேல் கீழ் தள்ளி நடுப்பட எடுத்தாயினும், வாவி நதி முதலியவற்றில் வடித்தெடுத்து வந்த சலத்துடனே கூட்டிச், செங்கற்படுத்த நிலத்தையுஞ் சுண்ணாம்பு படுத்த நிலத்தையும் மண் படுத்த நிலத்தையும் மெழுகல் வேண்டும். கருங்கற் படுத்த நிலத்தைச் சலத்தினாலே கழுவி விடல் வேண்டும்; கருங்கல்லிலே சாணி படலாகாது.

  • தொடங்கியவர்

திருநந்தனவனம் வைத்தல்

 

282. திருநந்தனவனம் வைக்கற்பாலதாகிய தானம் யாது?

சண்டாளபூமிக்குஞ் சுடுகாட்டுக்கும் மலசல மோசன பூமிக்குஞ் சபீபத்தி னல்லாததாய், நான்கு பக்கத்துஞ் சுவரினாலேனும் வேலியினாலேனுஞ் சூழப்பட்டதாய்க், கீழே ஆழமாக வெட்டி எலும்பு முதலிய குற்றங்கள் அறப் பரிசோதிக்கப்பட்டதாய்ப், பசு நிரை கட்டப்பெற்றுக் கோசல கோமயத்தினாலே சுத்தி யடைந்ததாய் உள்ள நிலமேயாம்.

 


283. இப்படிப்பட்ட நிலத்திலே வைக்கற்பாலனவாகிய மரஞ்செடி கொடிகள் எவை?

மரங்கள்: வில்வம், பாதிரி, கோங்கு, பன்னீர், கொன்றை, புலிநகக்கொன்றை, பொன்னாவிரை, மந்தாரை, சண்பகம், குரா, குருந்து, மகிழ், புன்னை, சுரபுன்னை, வெட்சி, கடம்பு, ஆத்தி, செருந்தி, பவளமல்லிகை, வன்னி, பலாசு, மாவிலிங்கை, நுணா, விளா, முக்கிளுவை, நெல்லி, நாவல், இலந்தை, பலா, எலுமிச்சை, நாரத்தை, தமரத்தை, குளஞ்சி, மாதுளை, வாழை, செவ்விளநீர், சூரியகேளியிளநீர், சந்திரகேளியிளநீர் என்பவைகளாம். மரaங்களில் உண்டாகும் பூ, கோட்டுப்பூ எனப்படும்.

செடிகள்: அலரி, நந்தியாவர்த்தம், குடமல்லிகை, வெள்ளெருக்கு, செம்பரத்தை, கொக்கிறகு, மந்தாரை, துளசி, நொச்சி, செங்கீரை, பட்டி, நாயுருவி, கருவூமத்தை, பொன்னூமத்தை, கத்தரி, தகரை, செவ்வந்தி, தும்பை, வெட்டிவேர், இலாமச்சை, தருப்பை, மருக்கொழுந்து, சிவகரந்தை, விஷ்ணுகாந்தி, மாசிப்பச்சை, திருநீற்றுப்பச்சை, பொற்றலைக்கையாந்தகரை, எள்ளு, பூளை, அறுகு என்பவைகளாம். செடிகளில் உண்டாகும் பூ, நிலப்பூ எனப்படும்.

கொடிகள்: மல்லிகை, முல்லை, இருவாட்சி, பிச்சி, வெண்காக்கொன்றை, கருங்காக்கொன்றை, கருமுகை, தாளி, வெற்றிலை என்பவைகளாம். கொடிகளில் உண்டாகும் பூ, கொடிப்பூ எனப்படும்.

284. நீர்ப்பூக்கள் எவை?

செந்தாமரை, வெண்டாமரை, செங்கழுநீர், நீலோற்பவம், செவ்வாம்பல், வெள்ளாம்பல் என்பவைகளாம்.

285. திருநந்தனவனத்தை எப்படிப் பாதுகாத்தல் வேண்டும்?

 புறச்சமயிகள், தூரஸ்திரீகள், முதலாயினோர் உள்ளே புகாமலும், யாவராயினும் எச்சில் மூக்குநீர் மலசல முதலியவைகளால் அசுசிப்படுத்தாமலும், அங்குள்ள பத்திர புஷ்பங்களைக் கடவுட் பூசை முதலியவற்றிற் கன்றிப் பிறவற்றிற்கு உபயோகப்படுத்தாமலும், மோவாமலும், அங்குள்ள மரஞ் செடி கொடிகளிலே சலந் தெறிக்கும்படி வஸ்திரந் தோயாமலும், அவைகளிலே வஸ்திரத்தைப் போடாமலும் பாதுகாத்தல் வேண்டும்.

பத்திர புஷ்பமெடுத்தல்

286. கடவுட் பூசைக்குப் பத்திர புஷ்பங்கள் எடுக்க யோக்கியர் யாவர்?

நான்கு வருணத் துட்பட்டவராய்ச், சிவதீக்ஷை பெற்றவராய், நியமாசாரமுடையவராய் உள்ளவர்.

287. பத்திர புஷ்பம் எடுக்க யோக்கியர் ஆகாதவர் யாவர்?

அதீக்ஷிதர், ஆசெளச முடையவர், நித்திய கருமம் விடுத்தவர், ஸ்நானஞ் செய்யாதவர், தூர்த்தர் முதலானவர்.

288. கடவுட் பூசைக்கு ஆகாத பூக்கள் எவை?

எடுத்துவைத்தலர்ந்த பூவும், தானே விழுந்து கிடந்த பூவும், பழம் பூவும், உதிர்ந்த பூவும், அரும்பும், இரவில் எடுத்த பூவும், கைச் சீலை, எருக்கிலை, ஆமணக்கிலை என்பவற்றிற் கொண்டு வந்த பூவும், காற்றினடிப்பட்ட பூவும், புழுக்கடி, எச்சம், சிலந்தி நூல், மயிர் என்பவற்றோடு கூடிய பூவும், மோந்த பூவுமாம்.

திருக்கோயிலுள்ளும் அதன் சமீபத்தினும் உண்டாகிய பத்திர புஷ்பங்கள் ஆன்மார்த்த பூஜைக்கு ஆகாவாம்.

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

313933_394588800624975_1775761761_n.jpg

 

 

289. இன்ன இன்ன தேவருக்கு இன்ன இன்ன பத்திர புஷ்பம் ஆகா என்னும் நியமம் உண்டோ?

ஆம். விநாயகருக்குத் துளசியும், சிவபெருமானுக்குத் தாழம்பூவும், உமாதேவியாருக்கு அறுகும் நெல்லியும், வைரவருக்கு நந்தியாவர்த்தமும், சூரியனுக்கு வில்வமும், விஷ்ணுவுக்கு அக்ஷதையும், பிரம்மாவுக்குத் தும்பையும் ஆகாவாம்.

290. வில்வம் எடுக்கலாகாத காலங்கள் எவை?

திங்கட்கிழமை, சதுர்த்தி, அட்டமி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, மாசப் பிறப்பு என்பவைகளாம். இவையல்லாத மற்றைக் காலங்களிலே வில்வம் எடுத்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.

291. துளசி எடுக்கலாகாத காலங்கள் எவை?

ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க் கிழமை, வெள்ளிக்கிழமை, திருவோண நக்ஷத்திரம், சத்தமி, அட்டமி, துவாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, விதிபாதயோகம், மாசப்பிறப்பு, பிராதக்காலம், சாயங்காலம், இராத்திரி என்பவைகளாம். இவை யல்லாத மற்றைக் காலங்களிலே துளசி எடுத்து வைத்துக் கொள்ளல் வேண்டும். இரண்டிலை கீழே உள்ள துளசிக்கதிர் எப்போதும் எடுக்கலாம்.

292. இன்ன இன்ன பத்திர புஷ்பம் இவ்வளவு இவ்வளவு காலத்துக்கு வைத்துச் சாத்தலாம் என்னும் நியமம் உண்டோ?

ஆம். வில்வம் ஆறு மாசத்திற்கும், வெண்டுளசி ஒரு வருஷத்திற்கும், தாமரைப்பூ ஏழு நாளிற்கும், அலரிப்பூ மூன்று நாளிற்கும் வைத்துச் சாத்தலாம்.

293. பத்திர புஷ்பம் எப்படி எடுத்தல் வேண்டும்?

சூரியோதயத்துக்கு முன்னே ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துச், சந்தியா வந்தனம் முடித்து, இரண்டு கைகளையுங் கழுவித், திருப்பூங் கூடையை எடுத்து, ஒரு தண்டு நுனியிலே மாட்டி, உயரப் பிடித்துக் கொண்டாயினும், அரைக்கு மேலே கையிலே பிடித்துக் கொண்டாயினும் திருநந்தனவனத்திற் போய்ச் சிவபெருமானை மறவாத சிந்தையோடு பத்திர புஷ்பமெடுத்து, அவைகளைப் பத்திரத்தினாலே மூடிக் கொண்டு, திரும்பி வந்து, கால்களைக் கழுவிக்கொண்டு, உள்ளே புகுந்து, திருப்பூங் கூடையைத் தூக்கிவிடல் வேண்டும்.

294. பத்திர புஷ்பம் எடுக்கும்போது செய்யத் தகாத குற்றங்கள் எவை?

பேசுதல், சிரித்தல், சிவபெருமானுடைய திருவடிகளிலே யன்றிப் பிறவற்றிலே சிந்தை வைத்தல், கொம்புகள் கிளைகளை முறித்தல், கைகளை அரையின் கீழே தொங்கவிடுதல், கைகளினாலே உடம்பையேனும் வஸ்திரத்தையேனும் தீண்டுதல் என்பவைகளாம்.
திருமாலை கட்டுதல்

295. திருமாலை எப்படிக் கட்டல் வேண்டும்?

திருமாலைக் குறட்டைச் சலத்தினால் அலம்பி இடம் பண்ணித் திருப்பூங் கூடையிலுள்ள பத்திர புஷ்பங்களை எடுத்து அதில் வைத்துக்கொண்டு, மெளனியாய் இருந்து, சாவதானமாக ஆராய்ந்து, பழுதுள்ளவைகளை அகற்றிவிட்டு, இண்டை, தொடை, கண்ணி, பந்து, தண்டு முதலிய பல வகைப்பட்ட திருமாலைகளைக் கட்டல் வேண்டும்.



397758_576163185730758_1776541499_n.jpg

 

 

சுகந்த தூபமிடுதல்

296. சுகந்த தூபம் எப்படி இடுதல் வேண்டும்?

வாசனைத் திரவியங்கள் கலந்து இடிக்கப்பட்ட சாம்பிராணி கொண்டு சுகந்த தூபமிடல் வேண்டும்.

திருவிளக்கேற்றல்

297. திருவிளக்குக்கு என்ன நெய் கொள்ளத் தக்கது?

திருவிளக்குக் கபிலைநெய் உத்தமத்தின் உத்தமம்; மற்றைப் பசுநெய் உத்தமத்தின் மத்திமம்; ஆட்டு நெய், எருமை நெய் உத்தமத்தின் அதமம்; வெள்ளெள்ளினெய் மத்திமத்தின் உத்தமம்; மரக்கொட்டைகளினெய் அதமத்தின் அதமம்.
(கபிலை = கபில நிறமுடைய பசு; கபில நிறம் = சருமை சேர்ந்த பொன்னிறம்).

298. திருவிளக்குத் திரி என்ன நூல் கொண்டு எப்படிப் பண்ணல் வேண்டும்?

தாமரை நூல், வெள்ளெருக்கு நூல், பருத்தி நூல் என்பவைகளுள் இருபத்தோரிழையாலேனும் பதினாறிழையாலேனும், பதினான்கிழையாலேனும் ஏழிழை யாலேனுங் கர்ப்பூரப் பொடி கூட்டித் திரி பண்ணல் வேண்டும்.

299. மாவிளக்கு எப்படி இடுதல் வேண்டும்?

பகலிலே போசனஞ் செய்யாது, சனிப் பிரதோஷத்திலுஞ் சிவராத்திரியிலுஞ் செஞ்சம்பாவரிசி மாவினாலே அகல் பண்ணிக் கபிலநெய் மூன்று நாழியேனும் ஒன்றரை நாழியேனும் முக்கானாழியேனும் வார்த்துக் கைப் பெருவிரற் பருமையுடைய வெண்டாமரை நூற்றிரியிட்டுத் திருவிளக்கேற்றல் வேண்டும்.



305061_279017908882526_2113663186_n.jpg

 

 

 

தோத்திரம் பாடல்

300. எந்தத் தோத்திரங்களை எப்படிப் பாடல் வேண்டும்?

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்னும் அருட்பாக்களை மனங் கசிந்துருகக், கண்ணீர் வார, உரோமஞ் சிலிர்ப்பப், பண்ணோடு பாடல் வேண்டும்.
ஆனந்தக் கூத்தாடல்

301. ஆனந்தக் கூத்து எப்படி ஆடல் வேண்டும்?

உலகத்தார் நகைக்கினும் அதனைப் பாராது, நெஞ்சம் நெக்குருகக் கண்ணீர் பொழிய, மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கைகளைக் கொட்டித் தோத்திரங்களைப் பாடிக் கால்களைச் சதிபெற வைத்து, ஆனந்தக் கூத்தாடல் வேண்டும்.

பூசைத் திரவியங்கள்

302. திருமஞ்சனத்திலே போடற்பாலனவாகிய திரவியங்கள் எவை?

பாதிரிப்பூ, தாமரைப்பூ முதலிய சுகந்த புஷ்பங்களும் செங்கழுநீர்க்கோஷ்டம், ஏலம், இலாமச்சம்வேர், வெட்டிவேர், இலவங்கப்பட்டை, சந்தனம், கர்ப்பூரம் என்னும் பரிமளத் திரவியங்களுமாம்.

303. பாத்தியத் திரவியங்கள் எவை?

வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்குமாம். (பாத்தியம் = பாதபூசை)

304. ஆசமநீயத் திரவியங்கள் எவை?

சாதிக்காய், கிராம்பு, ஏலம், பூலாங்கிழங்கு, சண்பகப்பூ மொட்டு, பச்சைக்கர்ப்பூரம் என்னும் ஆறுமாம்.

305. அருக்கியத் திரவியங்கள் எவை?

(அருக்கியம் - மந்திரநீர் இறைத்தல்)

சலம், பால், தருப்பைநுனி, அக்ஷதை, எள், யவம், (கோதுமை) சம்பாநெல், வெண்கடுகு என்னும் எட்டுமாம்.

  • தொடங்கியவர்

306. அபிஷேகத் திரவியங்கள் எவை?

எண்ணெய்க்காப்பு, மாக்காப்பு, நெல்லிக்காப்பு, மஞ்சட்காப்பு, பஞ்சகவ்வியம், ரசபஞ்சாமிர்தம், பலபஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, கருப்பஞ்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, தமரத்தம் பழச்சாறு, குளஞ்சிப் பழச்சாறு, மாதுளம் பழச்சாறு, இளநீர், சந்தனக்குழம்பு என்பவைகளாம். தாமிரப் பாத்திரத்தில் விட்ட பாலும் வெண்கல பாத்திரத்தில் விட்ட இளநீருங் கள்ளுக்குச் சமம். இளநீர் முகிழைத் திறந்து, தனித்தனி அபிஷேகம் பண்ணல் வேண்டும். நெய்யபிஷேகஞ் செய்தவுடன், இள வெந்நீரபிஷேகஞ் செய்தல் வேண்டும். இளநீரபிஷேகத்துப் பின் எண்பத்தொரு பதமந்திரம் உச்சரித்துச் சகச்சிரதாரை கொண்டு சுத்தோதகத்தால் அபிஷேகஞ் செய்தல் வேண்டும். சந்தனக் குழம்புக்குப்பின் விதிப்படி தாபிக்கப்பட்ட நவகலசத்தினாலும் விசேஷார்க்கியத்தினாலும் அபிஷேகஞ் செய்தல் வேண்டும்.
(சகச்சிரம் - ஆயிரம், சந்தோதகம் - நன்னீர்)

307. அபிஷேகத்தின் பொருட்டு எண்ணெய் எப்படி ஆட்டல் வேண்டும்?

எள்ளை, வண்டு முதலிய பழுதறப் பதினாறு தரம் பார்த்து ஆராய்ந்து, உவர் முதலிய தீய சலங்களை விடாது நல்ல சலத்தைப் புதிய பாண்டத்தில் விட்டு, எள்ளைக் கருந்தோல் போமளவுங் காலினால் மிதியாது கையினாற் பிசைந்து கழுவி, காகம், கோழி, நாய், பன்றி முதலியன வாயிடல் மிதித்தல் செய்யாவண்ணம் உலர்த்தி, கல்லினாலேனும் புளியமரத்தினாலேனுஞ் செய்த, நாய் முதலியன வாயிடாத கைச்செக்கினால் ஆட்டல் வேண்டும். சந்தனாதிதைலம் முதலிய சுகந்தத்தைலஞ் செய்து அபிஷேகம் பண்ணுவித்தல் உத்தமோத்தமம். தம் வியாதி நீக்கத்தின் பொருட்டுச் சந்தனாதி முதலிய செய்வித்தவர் முதற்கட் சிறிது பாகஞ் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் பண்ணுவிக்கக் கடவர்.

  • தொடங்கியவர்

308. பஞ்சகவ்வியமென்பது என்னை?

விதிப்படி கூட்டி அமைக்கப்பட்ட பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்பவைகளினது தொகுதியாம்; இது பிரமகூர்ச்சம் எனவும் பெயர் பெறும். பால் ஐந்து பலமும், தயிர் மூன்று பலமும், நெய் இரண்டு பலமும், கோசலம் ஒரு பலமும், கோமயங் கைப்பெருவிரலிற் பாதியுங் கொள்க.

309. ரசபஞ்சாமிர்தமென்பது என்னை?

விதிப்படி கூட்டி அமைக்கப்பட்ட பால், தயிர், தேன், சர்க்கரை என்பவைகளினது தொகுதியாம்.

310. பலபஞ்சாமிர்தமென்பது என்னை?

முற்கூறிய ரசபஞ்சாமிர்தத்தோடு கூட்டி அமைக்கப்பட்ட வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் என்பவைகளினது தொகுதியாம்.

311. கவ்வியத்துக்கு உரிய பசுக்கள் எவை?

வியாதிப் பசு, கிழப் பசு, கன்று செத்த பசு, கன்று போட்டுப் பத்து நாட் சூதகமுடைய பசு, கிடாரிக் கன்றாகிய பசு, சினைப் பசு, மலட்டுப் பசு, மலத்தைத் தின்னும் பசு, என்னும் எண்வகைப் பசுக்களல்லாத மற்றைப் பசுக்களாம். பால் கறக்குமிடத்துப் பாத்திரத்தையும் கைகளையுங் கன்றூட்டிய முலையையுஞ் சலத்தினாற் கழுவிக் கொண்டே கறத்தல் வேண்டும். கறந்தபின் பாலைப் பரிவட்டத்தினால் வடித்துக் கொள்ளல் வேண்டும்.

312. சந்தனக் குழம்போடு சேரற்பாலனவாகிய திரவியங்கள் எவை?

குங்குமப்பூ, கோரோசனை, பச்சைக்கர்ப்பூரம், புழுகு, சவ்வாது, கஸ்தூரி என்பவைகளாம்.

  • தொடங்கியவர்

313. நைவேத்தியங்கள் எவை?

சுத்தான்னம், சித்திரான்ன வகைகள், நெய், காய்ச்சிய பால், தயிர், முப்பழம், தேங்காய்க்கீறு, சர்க்கரை, கறியமுதுகள், அபூப வகைகள், பானகம், பானீயம், வெற்றிலை, பாக்கு, முகவாசம் என்பவைகளாம்.
(அபூபம் = பணிகாரம்)

314. சித்திரான்ன வகைகள் எவை?

பருப்புப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மிளகோதனம், புளியோதனம், ததியோதனம், கருகோதனம், எள்ளோதனம், உழுந்தோதனம், பாயசம் என்பவைகளாம்.

315. பணிகார வகைகள் எவை?

மோதகம், பிட்டு, அப்பம், வடை, தேன்குழல், அதிரசம், தோசை, இட்டலி என்பவைகளாம்.

316. பானீயம் என்பது என்னை?

ஏலம், சந்தனம், பச்சைக்கர்ப்பூரம், பாதிரிப்பூ, செங்கழுநீர்ப்பூ என்பவைகள் இடம்பெற்ற சலம்.

317. முகவாசம் என்பது என்னை?

ஏலம், இலவங்கம், பச்சைக்கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்பவற்றின் பொடியைப் பனி நீரோடு கூட்டிச் செய்த குளிகை.

318. மேலே சொல்லப்பட்டவைகளன்றிச் சிவாலயப் பணிகள் இன்னும் உள்ளனவா?

உள்ளன. அவை, திருவீதியில் உள்ள புல்லைச் செதுக்குதல், திருக்கோபுரத்திலுந் திருமதில்களிலும் உண்டாகும் ஆல், அரசு முதலியவற்றை வேரொடு களைதல், திருக்கோயிலையுந் திருக்குளத்தையுந் திருவீதியையும் எச்சில், மலசலம் முதலியவைகளினால் அசுசியடையாவண்ணம் பாதுகாத்தல், திருக்கோயிலினுள்ளே புகத்தகாத இழிந்த சாதியாரும், புறச் சமயிகளும், ஆசாரம் இல்லாதவரும், வாயிலே வெற்றிலை பாக்கு உடையவரும், சட்டையிட்டுக் கொண்டவரும், போர்த்துக் கொண்டவரும், தலையில் வேட்டி கட்டிக்கொண்டவரும் உட்புகா வண்ணந் தடுத்தல், திருவிழாக் காலத்திலே திருவீதியெங்குந் திருவலகிட்டுச் சலந் தெளித்தல், வாகனந் தாங்கல், சாமரம் வீசுதல், குடை கொடி ஆலவட்டம் பிடித்தல் முதலியவைகளாம்.

 

திருச்சிற்றம்பலம்.

  • தொடங்கியவர்

[sIZE="4"]12. சிவாலய தரிசனவியல்[/sIZE]


 


319. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?


 

ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துச், சந்தியாவந்தனம் முதலியன முடித்துக் கொண்டு, தேங்காய், பழம் பாக்கு, வெற்றிலை, கர்ப்பூரம் முதலியன வைக்கப்பட்ட பாத்திரத்தைத் தாமே எடுத்துக் கொண்டேனும், பிறரால் எடுப்பித்துக் கொண்டேனும், வாகனாதிகளின்றி நடந்துபோதல் வேண்டும்.


 

320. திருக்கோயிலுக்குச் சமீபித்தவுடனே யாது செய்தல் வேண்டும்?


 

கால்களைக் கழுவி, ஆசமனஞ் செய்து, தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்துச், சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு உள்ளே போதல் வேண்டும்.


 

321. திருக்கோயிலுள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?


 

பலிபீடத்தையுந் துசத்தம்பத்தையும் இடப தேவரையுங் கும்பிட்டுப், பலிபீடத்துக்கு இப்பால், வடக்கு நோக்கிய சந்நிதியாயினும் மேற்கு நோக்கிய சந்நிதியாயினும் இடப்பக்கத்திலும், கிழக்கு நோக்கிய சந்நிதியாயினும் தெற்கு நோக்கிய சந்நிதியாயினும் வலப்பக்கத்திலும் நின்று, அபிஷேக சமயம் நிவேதன சமயமல்லாத சமயத்திலே, ஆடவர் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும், பன்னிரண்டு தரமாயினும் பண்ணல் வேண்டும். நமஸ்காரம் ஒரு தரம், இரு தரம் பண்ணல் குற்றம்.


 

322. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?


 

தலை, கை யிரண்டு, செவி யிரண்டு, மோவாய், புயங்களிரண்டு என்னும் எட்டவயமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.


 

323. இந்த நமஸ்காரம் எப்படிப் பண்ணல் வேண்டும்?


 

பூமியிலே சிரசை வைத்து, மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப், பின் அம்முறையே மடக்கி, வலப்புயமும், இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்க நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்ணிலே பொருந்தச் செய்தல் வேண்டும்.


 


324. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?


 

தலை, கை யிரண்டு, முழந்தா ளிரண்டு என்னும் ஐந்தவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

  • தொடங்கியவர்

325. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?


 

எழுந்து, இரண்டு கைகளையும் குவித்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து மூன்று தரமாயினும் ஐந்து தரமாயினும் ஏழு தரமாயினும் ஒன்பது தரமாயினும் பதினைந்து தரமாயினும் இருபத்தொரு தரமாயினும் பிரதக்ஷிணம் பண்ணி, மீட்டுஞ் சந்நிதானத்திலே நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.


 

326. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும்?


 

முன்பு துவாரபாலகரை வணங்கிப், பின்பு கணநாயகராகிய திருநந்திதேவரை வணங்கித் துதித்துப், "பகவானே, உம்முடைய திருவடிகளை அடைந்து, அடியேன் உள்ளே புகுந்து, சிவபெருமானைத் தரிசித்துப் பயன்பெறும் பொருட்டு அநுமதி செய்தருளும்" என்று பிரார்த்தித்துக் கொண்டு, உள்ளே போய், முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப்பெருமான் சந்நிதியையும் உமாதேவியார் சந்நிதியையும் அடைந்து, ஆதிசைவரைக் கொண்டு அருச்சனை செய்வித்துப் பழம், பாக்கு, வெற்றிலை முதலியனவற்றை நிவேதிப்பித்துக் கர்ப்பூராராத்திரிகம் பணிமாறப் பண்ணித், தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, அதன் பின் சபாபதி தக்ஷிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளையுஞ் சமய குரவர் நால்வரையுந் தரிசனஞ் செய்தல் வேண்டும்.


 

327. விக்கினேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?


 

முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.

  • தொடங்கியவர்

328. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?


பிரதக்ஷிணஞ் செய்து, சண்டேசுரர் சந்நிதியை அடைந்து, கும்பிட்டுத், தோத்திரஞ் செய்து, மூன்று முறை கைகொட்டிச், சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்து, வலமாக வந்து, இடபதேவருடைய இரண்டு கொம்பினடுவே சிவலிங்கப் பெருமானைத் தரிசித்துப், பலி பீடத்துக்கு இப்பால் மும்முறை நமஸ்கரித்து, எழுந்து, இருந்து, ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை நூறு தரமும் அகோர மந்திரத்தை நூறு தரமுஞ் செபித்துக் கொண்டு எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.


329. அம்மையார் திருக்கோயில் வேறாயிருக்கின் யாது செய்தல் வேண்டும்?


அம்மையார் திருக்கோயிலினுள்ளே போய், முன் சொல்லிய முறை பிறழாழற் பலிபீடத்துக்கு இப்பாலே நான்கு தரம் நமஸ்காரம் பண்ணி, எழுந்து, இரண்டு கைகளையுங் குவித்துக்கொண்டு, நான்கு தரம் முதலாக இரட்டுறு முறையிற் பிரதக்ஷிணஞ் செய்து, மீண்டுஞ் சந்நிதியை யடைந்து, நமஸ்காரம் பண்ணி, எழுந்து, துவாரபாலகிகளைக் கும்பிட்டு, அனுமதி பெற்று, உள்ளே புகுந்து, விக்கினேசுரரைத் தரிசித்துத், தேவியார் சந்நிதியை அடைந்து, அருச்சனை முதலியன செய்வித்துத், தரிசனஞ் செய்து, விபூதி முதலியன வாங்கித் தரித்துக்கொண்டு, மகேசுவரியையும் வாமை முதலிய சக்திகளையும், விக்கினேசுரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளையுந் தரிசித்துச் சண்டேசுவரி சந்நிதியை அடைந்து, கும்பிட்டு, மூன்று முறை கைகொட்டித், தேவி தரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்து, வலமாக வந்து சந்நிதியை அடைந்து, நான்கு தரம் நமஸ்கரித்து, எழுந்து இருந்து, தேவியாருடைய மூலமந்திரத்தை இயன்ற மட்டுஞ் செபித்துக்கொண்டு எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.

  • 3 months later...
  • தொடங்கியவர்

330. நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?

சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திரகிரகணம், சிவராத்திரி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி, கந்தசட்டி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ் செய்தல் வேண்டும்.

331. பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும்?

இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், இடமாகச் சென்று, சண்டேசுரரைத் தரிசித்துச் சென்று வழியே திரும்பி வந்து, மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், வலமாகச் சென்று வட திசையைச் சேர்ந்து, கோமுகையைக் கடவாது, முன் சென்ற வழியே திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றுந் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது, வலமாகச் சென்று, வடதிசையைச் சேர்ந்து அங்கு நின்றுந் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசியாது, இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்துத் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடு கூட ஹர ஹர என்று சொல்லிச், சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து, வணங்கல் வேண்டும்.

 



%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%

  • தொடங்கியவர்

332. பிரதோஷ காலத்திலே விதிப்படி மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்யிற் பயன் என்னை?

கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்; முத்தி சித்திக்கும்.

333. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?

ஆசாரமில்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சிலுமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், பாக்கு வெற்றிலையுண்டல், போசன பானம் பண்ணுதல், ஆசனந் திருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டிருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், சிரசிலே வஸ்திரந் தரித்துக் கொள்ளுதல், தோளிலே உத்தரீயம் இட்டுக் கொள்ளுதல், போர்த்துக் கொள்ளுதல் சட்டையிட்டுக் கொள்ளுதல், பாதரக்ஷையிட்டுக் கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம், பலிபீடம், இடபம், விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண்வார்த்தை பேசுதல், சிரித்தல், சண்டையிடுதல், விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் குறுக்கே போதல், ஒரு தரம் இரு தரம் நமஸ்கரித்தல், ஒரு தரம் இரு தரம் வலம் வருதல், ஓடி வலம் வருதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் இடையே நமஸ்கரித்தல், அகாலத்திலே தரிசிக்கப் போதல், திரை விட்ட பின் வணங்குதல், அபிஷேக காலத்திலும் நிவேதன காலத்திலும் வணங்குதல், முற்பக்கத்தும் பிற்பக்கத்தும் வணங்குதல், திருவிளக் கவியக் கண்டுந்தூண்டாதொழிதல், திருவிளக்கில்லாத பொழுது வணங்குதல், உற்சவங் கொண்டருளும் பொழுது அங்கேயின்றி உள்ளே போய் வணங்குதல் முதலியவைகளாம். இக்குற்றங்களுள் ஒன்றை யறியாது செய்தவர் அகோரமந்திரத்தில் ஆயிரம் உருச் செபிக்கின் அக்குற்றம் நீங்கும். இக்குற்றங்களை அறிந்து செய்தவர் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.


திருச்சிற்றம்பலம்.

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

13. குருசங்கம சேவையியல்

 

 

334. குரு என்றது யாரை?

தீஷாகுரு, வித்தியாகுரு, போதககுரு முதலாயினோர் குரு. ஆசாரியன், தேசிகன், பட்டாரகன் என்பன ஒரு பொருட் சொற்கள்.

335. சங்கமம் என்றது என்னை?

நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் முத்திறத்துச் சிவபத்தர்களை.

 

 

336. குருவையுஞ் சிவபத்தரையும் யாது செய்தல் வேண்டும்?

மனிதர் எனக் கருதாது, சிவபெருமானெனவே கருதி, மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுஞ் சிரத்தையோடு வழிபடல் வேண்டும். பிரதிட்டை செய்து பூசிக்கப்படும் சிவலிங்கத்தைச் சிலையென்று நினைந்து அவமதிப்பவரும், சிவதீக்ஷை பெற்று இயன்றமட்டும் விதிப்படி அநுட்டிக்குஞ் சிவபத்தரை மனிதர் என்று நினைந்தேனும் அவருடைய பூருவ சாதியை நினைந்தேனும் அவமதிப்பவருந் தப்பாது நரகத்தில் வீழ்வர்.

337. சிவபத்தர்கள் சிவபெருமான் எனக் கருதப்படுதற்குக் காரணம் என்ன?

 

சிவபெருமான் வேறற அதிட்டித்து நிற்கப்பெறுவன வாய்க் கண்டவுடனே சிவபெருமானை நினைப்பிப்பனவாய் உள்ள திருவேடங்களை யுடைமையும், நாடோறும் ஸ்ரீகண்டநியாசம், பிஞ்சப்பிரம ஷடங்கநியாசம், அஷ்டத்திரிம்சத்கலாநியாசங்கள் வாயிலாகச் செய்யுஞ் சிவோகம்பாவனையும், பிராசாதயோகஞ் செய்தலும், தம்மின் இரண்டற இயைந்த சிவத்தோடு கலந்து நிற்குந் தன்மையுமாம். சிவபத்தரைச் சிவமெனக் கண்டு வழிபடுதற்கு வேடம், பாவனை, செயல், தன்மை என்னும் இந்நான்கனுள் ஒன்றே யமையும்.

 

 

338. சிவனடியாரை வழிபடாது சிவலிங்கத்தை மாத்திரம் வழிபட லாகாதா?

ஒருவன் ஒரு பெண்ணினிடத்து அன்புடைமை அவளுடைய சுற்றத்தாரைக் கண்டபொழுது அவனுக்கு உண்டாகும் அன்பினளவு பற்றியே தெளியப்படும். அது போல, ஒருவன் சிவபெருமானிடத்து அன்புடைமை அவருடைய அடியாரைக் கண்ட பொழுது அவனுக்கு உண்டாகும் அன்பினளவு பற்றியே தெளியப்படும். ஆதலினாலே, சிவனடியாரிடத்து அன்பு செய்யாது அவமானஞ் செய்துவிட்டுச் சிவலிங்கப் பெருமானிடத்தே அன்புடையவர் போல் ஒழுகுதல், வயிறு வளர்ப்பின் பொருட்டும், இடம்பத்தின் பொருட்டும் நடித்துக் காட்டும் நாடகமாத்திரையேயன்றி வேறில்லை.

339. சிவபத்தர்களோடு இணங்குதலாற் பயன் என்னை?

காமப்பற்றுடையவருக்கு, அச்சம்பந்த முடையவருடைய இணக்கம் அக்காமத்தை வளர்த்தலால் அவ்விணக்கத்தில் விருப்பு மிகுதியும், அவரல்லாத பிறருடைய இணக்கம் அக்காமத்தைக் கெடுத்தலால் அவ்விணக்கத்தில் வெறுப்பு மிகுதியும் உண்டாகும். அது போலச் சிவபத்தி யுடையவருக்கு, அச்சம்பந்த முடையவருடைய இணக்கம் அச்சிவபத்தியை வளர்த்தலால் அவ்விணக்கத்தில் விருப்பு மிகுதியும், அவரல்லாத பிறருடைய இணக்கம் அச்சிவபத்தியைக் கெடுத்தலால் அவ்விணக்கத்த்ல் வெறுப்பு மிகுதியும் உண்டாகும்.

 

 

340. சமய தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர்?

ஆசாரியரையும், நிருவாண தீக்ஷிதரையும், விசேஷ தீக்ஷிதரையும், சமய தீக்ஷிதர்களுள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர்.

341. விசேஷ தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர்?

ஆசாரியரையுந், நிருவாண தீக்ஷிதரையும், விசேஷ தீக்ஷிதர்களுள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர்.

342. நிருவாண தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர்?

ஆசாரியரையும், நிருவாண தீக்ஷிதருள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர்.

343. ஆசாரியர் யாரை வணங்குதற்கு உரியர்?

ஆசாரியர்களுள்ளே தம்மின் மூத்தோரை வணங்குதற்கு உரியர்.

 

 

344. வருணத்தாலாவது ஆச்சிரமத்தாலாவது வருணம் ஆச்சிரமம் என்னும் இரண்டினாலுமாவது தம்மிற்றாழ்ந்தவர் தீக்ஷை முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை யாது செய்தல் வேண்டும்?

அவமதித்தலுஞ் செய்யாது, புறத்து வணங்குதலுஞ் செய்யாது, மனத்தால் வணங்கல் வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்தவர் தப்பாது நரகத்தில் வீழ்வர். சிவஞானிகளேயாயின், அவரை, வருணம், ஆச்சிரமம் முதலியவை சற்றுங் குறியாது, எல்லாரும் வணங்கல் வேண்டும். எல்லை கடந்து முறுகி வளரும் மெய்யன்பினால் விழுங்கப்பட்ட மனத்தையுடையவர், திருவேட மாத்திரமுடையவரைக் காணினும், வருணம் ஆச்சிரமம் முதலியன குறித்துக் கூசித் தடைப்படாது, உடனே அத்திருவேடத்தால் வசீகரிக்கப்பட்டு, அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்குவர்; அவ்வுண்மை திருத்தொண்டர் பெரியபுராணத்தினாலே தெளியப்படும்.

345. குருவையும் சிவனடியாரையும் எப்படிப் போய்த் தரிசித்தல் வேண்டும்?

வெறுங்கையுடனே போகாது, தம்மால் இயன்ற பதார்த்தத்தைக் கொண்டுபோய், அவர் சந்நிதியில் வைத்து, அவரை நமஸ்கரித்து, எழுந்து, கும்பிட்டு, விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு, மீட்டும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, அவர் "இரு" என்றபின் இருத்தல் வேண்டும்.

346. குருவாயினுஞ் சிவனடியாராயினுந் தம் வீட்டுக்கு வரின், யாது செய்தல் வேண்டும்?

விரைந்து எழுந்து, குவித்த கையோடு எதிர்கொண்டு, இன்சொற்களைச் சொல்லி, அழைத்துக் கொண்டு வந்து ஆசனத்திருத்தி, அவர் திருமுன்னே இயன்றது யாதாயினும் வைத்து, அவர் திருவடிகளைப் பத்திர புஷபங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு, மீட்டும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, அவர் "இரு" என்றபின் இருத்தல் வேண்டும். அவர் போம்பொழுது அவருக்குப்பின் பதினான்கடி போய் வழிவிடல் வேண்டும். இராக் காலத்திலும், பயமுள்ள இடத்திலும், அவருக்கு முன் போதல் வேண்டும்.

 

347. ஒருவர் தாம் பிறரை வணங்கும் வணக்கத்தை எப்படிப் புத்தி பண்ணல் வேண்டும்?

"இவ்வணக்கம்; இவருக்கன்று; இவரிடத்து வேறற நிற்குஞ் சிவபெருமானுக்கேயாம்" என்று புத்தி பண்ணல் வேண்டும். அப்படிச் செய்யாதவர் அவ்வணக்கத்தாலாகிய பயனை இழப்பர்.

348. ஒருவர் தம்மைப் பிறர் வணங்கும் வணக்கத்தை எப்படிப் புத்தி பண்ணல் வேண்டும்?

"இவ்வணக்கம் நமக்கன்று, நம்மிடத்து வேறற நிற்குஞ் சிவபெருமானுக்கேயாம்" என்று புத்தி பண்ணல் வேண்டும்; அப்படிச் செய்யாதவர் சிவத் திரவியத்தைக் கவர்ந்தவராவர்.

349. குருவுக்குஞ் சிவனடியாருக்குஞ் செய்யத் தகாத குற்றங்கள் யாவை?

கண்டவுடன் இருக்கைவிட்டெழாமை, அவர் எழும்பொழுது உடனெழாமை, அவர் திருமுன்னே உயர்ந்த ஆசனத்திருத்தல், காலை நீட்டிக்கொண்டிருத்தல், சயனித்துக் கொள்ளுதல், வெற்றிலை பாக்குப் புசித்தல், போர்த்துக் கொள்ளுதல், பாதுகையோடு செல்லல், சிரித்தல், வாகனமேறிச் செல்லல், அவராலே தரப்படுவதை ஒரு கையால் வாங்குதல், அவருக்குக் கொடுக்கப்படுவதை ஒரு கையாற் கொடுத்தல், அவருக்குப் புறங்காட்டல், அவர் பேசும்போது பராமுகஞ் செய்தல், அவர் கோபிக்கும்போது தாமுங் கோபித்தல், அவருடைய ஆசனம், சயனம், வஸ்திரம், குடை, பாதுகை முதலியவைகளைத் தாம் உபயோகித்தல், அவைகளைத் தங்காலினாலே தீண்டுதல், அவர் திருநாமத்தை மகிமைப் பொருள்படும் அடைமொழியின்றி வாளா சொல்லல், அவரை யாராயினும் நிந்திக்கும் பொழுது காதுகளைப் பொத்திக்கொண்டு அவ்விடத்தினின்று நீங்கிவிடாது கேட்டுக் கொண்டிருத்தல் முதலியவைகளாம்

 

350. குரு முன்னுஞ் சிவனடியார் முன்னும் எப்படி விண்ணப்பஞ் செய்தல் வேண்டும்?

வஸ்திரத்தை ஒதுக்கிச், சரீரத்தைச் சற்றே வளைத்து, வாய் புதைத்து நின்று, அவரை "சுவாமீ" என்பது முதலிய சொற்களினாலே உயர்த்தியும், தன்னை "அடியேன்" என்பது முதலிய சொற்களினாலே தாழ்த்தியும், மெல்ல விண்ணப்பஞ் செய்தல் வேண்டும்.

351. கடவுளையும் குருவையுஞ் சிவனடியாரையுந் தாய் தந்தை முதலாயினரையும் நமஸ்கரிக்கும்போது கால் நீட்டத் தக்க திக்குகள் யாவை?

மேற்குந் தெற்குமாம். கிழக்கினும் வடக்கினுங் கால் நீட்டி நமஸ்கரிக்க லாகாது.

 

352. குருவையுஞ் சிவனடியார் முதலாயினாரையும் நமஸ்கரிக்கலாகாத காலங்களும் உண்டா?

உண்டு, அவர் கிடக்கும் போதும், வழி நடக்கும் போதும், பத்திர புஷ்பம் எடுக்கும்போதும், வெற்றிலை பாக்கு உண்ணும்போதும், ஸ்நானம், சந்தியாவந்தனம், பூசை, ஓமம், சிரார்த்தம், போசனம் முதலியன பண்ணும் போதும், இராச சபையிலே போய் இருக்கும்போதும் அவரை நமஸ்கரிக்கலாகாது.

353. தீக்ஷாகுரு, வித்யாகுரு முதலாயினார் திருமுகம் விடுத்தருளின், அதை யாது செய்தல் வேண்டும்?

பீடத்தின் மீது எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து, இரண்டு கைகளாலும் எடுத்து, இரண்டு கண்களிலும் ஒற்றிச், சிரசின்மேல் வைத்துப், பின்பு திருக்காப்பு நீக்கி வாசித்தல் வேண்டும்.

 

354. தான் வழிபட்டு வந்த ஆசாரியன் பெரும் பாவங்களைச் செய்வானாயின் அவனை யாது செய்தல் வேண்டும்?

தானே பூசித்து வந்த சிவலிங்கம் அக்கினியினாலே பழுதுபடின், அதனை இகழாது மனம்நொந்து கைவிட்டு வேறொரு சிவலிங்கத்தைக் கைக்கொள்வது போலத், தான் வழிபட்டு வந்த் ஆசாரியன் சிவநிந்தை, சிவத்திரவியாபகாரம் முதலிய பெருங் கொடும் பாதகங்கள் செய்து கெடுவானாயின், அவனை இகழாது மனம் நொந்து கைவிட்டு வேறோராசாரியனை அடைந்து வழிபடல் வேண்டும்.

355. குருவினிடத்தே சிவசாத்திரம் எப்படிப் படித்தல் வேண்டும்?

நாடோறும் ஸ்நானம் முதலிய நியதிகளை முடித்துக் கொண்டு, கோமயத்தினாலே சுத்தி செய்யப்பட்ட தானத்திலே பீடத்தை வைத்து, அதன் மீது பட்டுப் பரிவட்டத்தை விரித்து, அதன் மீது சிவசாத்திரத் திருமுறையை எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்துப் பின்பு ஆசாரியருடைய திருவடிகளையும் அருச்சித்து, நமஸ்கரித்து, அவர் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருக்க, அவருக்கு எதிர்முகமாக இருந்து படித்தல் வேண்டும். படித்து முடிக்கும் பொழுதும் அப்படியே நமஸ்கரித்தல் வேண்டும். இப்படிச் செய்யாது படித்தவர், படித்ததனால் ஆகிய பயனை இழப்பர்; அம்மட்டோ! நரகத்திலும் விழுந்து வருந்துவர்.

 

356. சிவசாத்திரம் படிக்கலாகாத காலங்கள் எவை?

பிரதமை, அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, உத்தராயணம், தக்ஷிணாயனம், சித்திரை விஷு, ஐப்பசி விஷு, சந்தியா காலம், ஆசெளச காலம், மகோற்சவ காலம் என்பவைகளாம்.

357. எடுத்துக்கொண்ட சிவசாத்திரம் படித்து முடித்தபின் யாது செய்தல் வேண்டும்?

சிவலிங்கப் பெருமானுக்கும், சிவசாத்திரத் திருமுறைக்கும் வித்தியாகுருவுக்கும் விசேஷ பூசை செய்து அவர் திருமுன் இயன்ற தக்ஷிணை முதலியன வைத்து நமஸ்கரித்து அவரையுந் தீக்ஷா குருவையும் மாகேசுரர்களையும் குருடர், முடவர் முதலானவர்களையும் பூசித்து அமுது செய்வித்தல் வேண்டும்.

 

358. சிவசாத்திரத்தைக் கைம்மாறு கருதிப் படிப்பிக்கலாமா?

அச்சம், நண்பு, பொருளாசை என்பவை காரணமாகச் சிவசாத்திரத்தை ஒருவருக்கும் படிப்பிக்கலாகாது. நல்லொழுக்கமுங் குருலிங்கசங்கம பத்தியும் உடைய நன்மாணாக்கர்களுக்கு அவர்கள் உய்வது கருதிக் கருணையினாலே படிப்பித்தல் வேண்டும். அவர்கள் விரும்பித் தருந் தக்ஷிணையைத் தாஞ் செய்த உதவிக்கு கைம்மானெறக் கருதி ஆசையால் வாங்காது, அவர்கள் உய்யுந் திறங் கருதிக் கருணையால் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

359. மாணாக்கர்கள் தாங்கள் குருவுக்குக் கொடுக்குந் தக்ஷிணையை அவர் செய்த உதவிக்குக் கைம்மாறெனக் கருதலாமா?

தாங்கள் குருவுக்கு எத்துணைப் பொருள் கொடுப்பினும், தங்களை அவருக்கு அடிமையாக ஒப்பித்து விடுதல் ஒன்றையே யன்றி, அப்பொருளை கைம்மாறெனக் கருதிவிட லாகாது.

 

360. தீக்ஷா குரு, வித்தியா குரு முதலாயினார் சிவபதமடைந்து விடின், யாது செய்தல் வேண்டும்?

வருஷந்தோறுந் அவர் சிவபதமடைந்த மாச நக்ஷத்திரத்திலாயினும் திதியிலாயினும் அவரைக் குறித்துக் குருபூசை செய்துகொண்டு வரல் வேண்டும்.

361. இன்னும் எவ்வெவருக்குக் குருபூசை செய்வது ஆவசியகம்?

பல அற்புதங்களைச் செய்து தமிழ் வேதத்தைத் திருவாய் மலர்ந்தருளியுஞ் சைவ சமயத்தைத் தாபித்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய சமயக்குரவர் நால்வருக்கும்; அறுபத்து மூன்று நாயன்மாருடைய மெய்யன்பையும் அவ்வன்புக்கு எளிவந்தருளிய சிவபெருமானுடைய பேரருளையும் அறிவித்து அவரிடத்தே அன்புதிக்கச் செய்யும் பெரியபுராணத்தைத் திருவாய் மலர்ந்தருளிய சேக்கிழார் நாயனாருக்கும்; பதி, பசு, பாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் இலக்கணங்களை அறிவிக்குஞ் சைவ சித்தாந்த நூலுணர்ச்சியை வளர்த்தருளிய மெய்கண்டதேவர் முதலிய சந்தான குரவர் நால்வருக்கும்; தமிழ் வழங்கும் நிலமெங்கும் நல்லறிவுச்சுடர் கொளுத்தியருளிய தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாருக்கும் இயன்றமட்டுங் குருபூசை செய்து கொண்டே வருவது ஆவசியகம்.

 

362. இந்நாயன்மார்களுடைய குருபூசைத் தினங்கள் எவை?

1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்...............வைகாசி - மூலம்

2. திருநாவுக்கரசு நாயனார்.......................................சித்திரை - சதயம்

3. சுந்தரமூர்த்தி நாயனார்..........................................ஆடி - சுவாதி

4. மாணிக்கவாசகர் சுவாமிகள்..............................ஆனி - மகம்

5. சேக்கிழார் நாயனார்.................................................வைகாசி - பூசம்

6. மெய்கண்டதேவர்.....................................................ஐப்பசி - சுவாதி

7. அருணந்தி சிவாசாரியர்..................................... புரட்டாசி - பூரம்

8. மறைஞானசம்பந்த சிவாசாரியர்.................ஆவணி - உத்தரம்

9. உமாபதி சிவாசாரியர்..........................................சித்திரை - அத்தம்.

10. திருவள்ளுவ நாயனார்......................................மாசி - உத்திரம்.

363. குருபூசைக்குத் தக்க பொருளில்லாதவர்கள் யாது செய்தல் வேண்டும்?

குருபூசை செய்யப்படுந் தானத்திலே தங்கள் தங்களால் இயன்ற பதார்த்தங்கள் கொண்டுபோய்க் கொடுத்துத் தரிசனஞ் செய்தல் வேண்டும். அதுவும் இயலாதவர்கள் கறி திருத்துதல் முதலிய திருத்தொண்டுகளேனுஞ் செய்தல் வேண்டும்.

 

364. குருபூஜை எப்படிச் செய்தல் வேண்டும்?

திருக்கோயிலிலே சிவலிங்கப் பெருமானுக்கும், அந்நக்ஷத்திரத்திலே சிவபதம் அடைந்த நாயனார் திருவுருவம் உள்ளதாயின் அதற்கும் விசேஷ பூசை செய்வித்துத் தரிசனஞ் செய்துகொண்டு, தம்மிடத்துக்கு அழைக்கப்பட்டும், அழைக்கப்படாதும் எழுந்தருளி வந்த சிவபத்தர்களை அந்நாயனராகப் பாவித்துப் பூசித்துத் திருவமுது செய்வித்துச் சேஷம் புசித்தல் வேண்டும். (சேஷம் - எஞ்சியது)

365. சேஷம் எத்தனை வகைப்படும்?

பாத்திரசேஷம், பரிகலசேஷம் என இரண்டு வகைப்படும். (பரிகலம் - குருமார் உண்கலம்)

 

 

 

  • தொடங்கியவர்

14. மாகேசுர பூசையியல்

 

 

366. மாகேசுர பூசையாவது யாது?

ஆசாரியர், நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் நால்வகை மாகேசுரர்களையும் விதிப்படி பூசித்துத் திருவமுது செய்வித்தலாம் (மாகேசுரர் = மகேசுரனை வழிபடுவோர்)

367. மாகேசுர பூசையால் விளையும் பலம் ஏற்பவருடைய உயர்வு தாழ்வுகளினால் வேறுபடுமா?

ஆம். வைதிகப்பிராமணர் ஆயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமுஞ், சமய தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் பதினாயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், விசேஷ தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் லக்ஷம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், நிருவாண தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், சைவாசாரியர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.

368. மாகேசுர பூசைக்குப் பாகஞ் செய்பவர்கள் எப்படிப் பட்டவர்களாய் இருத்தல் வேண்டும்?

சம சாதியார்களாய்ச், சிவதீக்ஷை பெற்றவர்களாய், நித்தியகருமந் தவறாது முடிப்பவர்களாய், சுசியுடையர்களாய், மாகேசுர பூசைக்கு உபயோகப்படுமவைகளை மாகேசுர பூசை நிறைவேறுமுன் புசிக்க நினைத்தலுஞ் செய்யாதவர்களாய் இருத்தல் வேண்டும். இவ்வியல்பில்லாதவர்களாலே சமைக்கப்பட்டவை தேவப்பிரீதியாகா, இராக்ஷதப் பிரீதியாகும்.

369. மாகேசுர பூசைக்கு விலக்கப்பட்ட பதார்த்தங்கள் யாவை?

உள்ளி, வெள்ளுள்ளி, உருண்டைச் சுரைக்காய், கொம்மடிக்காய், செம்முருங்கைக்காய், தேற்றாங்காய், அத்திக்காய், வெண்கத்தரிக்காய், பசளை, வள்ளி, கொவ்வை என்பவைகளாம்.

 

370. மாகேசுர பூசை எப்படிச் செய்தல் வேண்டும்?

மாகேசுரர்களைத் தூரத்தே கண்டவுடனே, சிரசின் மீது அஞ்சலி செய்து, விரைந்தெதிர் கொண்டு அழைத்து வந்து, அவர்களுடைய திருவடிகளைத் தீர்த்தத்தினால் விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, அவர்களைப் பந்தியாக இருத்தி, ஓதுவார்கள் தேவாரம் பண்ணுடன் ஓத, அன்னங்கறி முதலியவற்றைப் படைத்து, பத்திரபுஷ்பங்களால் அருச்சனை செய்து, தூப தீபங் கொடுத்து, அவர்களெதிரே பூக்களைத் தூவி, நமஸ்காரம் பண்ணி, எழுந்து நின்று, ஆசிர்வாதம் முற்றிய பின் திருவமுது செய்வித்தல் வேண்டும். அவர்கள் திருவமுது செய்து கரசுத்தி செய்து கொண்டபின், அவர்களெதிரே இயன்ற தக்ஷிணை வைத்து நமஸ்காரஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, மீட்டும் நமஸ்காரஞ் செய்து, சேஷம் புசித்தல் வேண்டும்.

 

371. மாகேசுர பூசைப் பந்திக்கு யோக்கியரல்லாதவர் யாவர்?

சிவநிந்தகர், குருநித்தகர், சங்கமநிந்தகர், சிவசாத்திரநிந்தகர், சிவத்திரவியாபகாரிகள், அதீக்ஷிதர், நித்தியகருமம் விடுத்தவர் முதலாயினர்.

372. மாகேசுர பூசையிலே மாகேசுரரை யாராகப் பாவித்துப் பூசித்தல் வேண்டும்?

மாகேசுர பூசை எந்தத் தேவரைக் குறித்துச் செய்யப் படுகின்றதோ, அந்தத் தேவராகப் பாவித்துப் பூசித்தல் வேண்டும்.

373. பூசை செய்யப்படும்போது மாகேசுரர்கள் யாது செய்தல் வேண்டும்?

பூசிப்பவன் எத்தேவரைக் குறித்துப் பூசிக்கின்றானோ அத்தேவரைத் தாம் இடையறாது மெய்யன்போடு தியானித்துக் கொண்டிருந்து அப்பூசையை அவருக்கு ஒப்பித்தல் வேண்டும்.

 

 

374. பந்தி வஞ்சனை செய்து புசித்தவரும், படைத்தவரும் படைப்பித்தவரும் யாது பெறுவர்?

கண்டமாலையால் வருந்துவர்; ஊர்ப் பன்றிகளாய்ப் பிறந்து மலத்தைத் தின்பர்; நரகங்களில் விழுந்து நெடுங்காலம் வருந்துவர். ஆதலினால், வஞ்சனை ஒரு சிறிதும் இன்றி எல்லாருக்குஞ் சமமாகவே படைத்தல், படைப்பித்தல் வேண்டும். பந்தி வஞ்சனை செய்து படைக்கப்பட்டவைகள் பிசாசுகளுக்கும் இராக்ஷதர்களுக்கும் அசுரர்களுக்குமே பிரீதியாகும்; தேவப் பிரீதியாகா.

375. மாகேசுர பூசா காலத்திலே மாகேசுர ரல்லாதவரின், யாது செய்தல் வேண்டும்?

குருடர், முடவர், குழந்தைகள், வயோதிகர், வியாதியாளர், வறியவர் என்பவர்கள் வரின், அவர்களை விலக்காது, இன்சொற்களினாலே மிக மகிழ்வித்து, அவர்களுக்கும் அன்னங் கொடுத்தல் வேண்டும். வறியவருக்குக் கொடுத்தலே கொடை; செல்வருக்குக் கொடுத்தல் திரும்ப வாங்குதற் பொருட்டுக் கடன் கொடுத்தல் போலும்.

 

376. மாகேசுர பூசை ஆவசியமாக எவ்வெக் காலங்களிலே செய்தல் வேண்டும்?

தீக்ஷை பெற்றுக்கொண்ட பொழுதும், சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொண்ட பொழுதும், விரதம் அநுட்டிக்கும் பொழுதும், உபவாசஞ் செய்து பாரணம் பண்ணும் பொழுதும், சிவசாத்திர சிவபுராணங்கள் படிக்கத் தொடங்கிய பொழுதும், படித்து முடித்த பொழுதும், புண்ணிய ஸ்தல யாத்திரைக்குப் புறப்படும் பொழுதும் புண்ணியஸ்தலத்தை அடைந்த பொழுதும், யாத்திரை செய்து திரும்பி வீடு சேர்ந்த பொழுதும், திருக்கோயிலிலே பிரதிட்டை, சம்புரோக்ஷணம், மகோற்சவம் முதலியவை நடக்கும் பொழுதும், வியாதியினாலே பீடிக்கப்பட்டு மருந்து உட்கொள்ளத் தொடங்கும் பொழுதும், வியாதி நீங்கிய பொழுதும், மாகேசுர பூசை ஆவசியமாகச் செய்தல் வேண்டும். (பாரணம் - உபவாசத்துக்குப்பின் செய்யும் போசனம்)

377. அவ்விசேஷ தினங்களின் மாகேசுர பூசை செய்பவர்களும், மாகேசுர பூசையிலே அருச்சனையேற்று அமுது செய்யப்புகும் மாகேசுரர்களும் அத்தினத்திலே எப்படிப் பட்டவர்களாய் இருத்தல் வேண்டும்?

மாகேசுர பூசைக்கு முன்னே யாதொன்றும் புசிக்கலாகாது. அன்றிரவிலே பசித்ததாயின், அன்னம் புசியாது பால், பழம் முதலியவற்றுள் இயன்றது உட்கொண்டு சுத்தர்களாகிச் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டு நித்திரை செய்தல் வேண்டும். முதனாளி ராத்திரியும் அப்படியே செய்தல் வேண்டும்.

378. முன் செய்த பாவங்களினால் வந்த மகாரோகங்களினாலே பீடிக்கப்படுவோர் மாகேசுர பூசை எப்படிச் செய்தல் வேண்டும்?

ஒரு மண்டலமாயினும், பாதி மண்டலமாயினும், விதிப்படி சிரத்தையோடு புண்ணிய ஸ்தலத்திலே புண்ணிய தீர்த்தத்திலே ஸ்நானஞ் செய்து, சிவலிங்கப் பெருமானுக்கு விசேஷ பூசை செய்வித்து, மாகேசுர பூசை பண்ணிச் சேஷம் புசித்துக் கொண்டு வரல் வேண்டும். அதன் பின்னரே மருந்து உட்கொள்ளல் வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

 

 

 

  • தொடங்கியவர்

15.விரதவியல்


379. விரதமாவது யாது?

மனம் பொறி வழி போகாது நிற்றற்பொருட்டு உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுங் கடவுளை விதிப்படி மெய்யன்போடு விசேஷமாக வழிபடுதல்.

சிவ விரதம்

380. சிவ விரதம் எத்தனை?

சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாமகேசர விரதம், சிவராத்திரி விரதம், கேதார விரதம், கலியாணசுந்தர விரதம், சூல விரதம், இடப விரதம் என எட்டாம். பிரதோஷ விரதமுஞ் சிவ விரதம்.

381. சோமவார விரதமாவது யாது?

கார்த்திகை மாச முதற் சோமவாரத் தொடங்கிச் சோமவாரந்தோறுஞ் சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் ஒரு பொழுது இரவிலே போசனஞ் செய்யக்கடவர்; அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் போசனஞ் செய்யக் கடவர். இவ்விரதம் வாழ்நாளளவாயினும், பன்னிரண்டு வருஷ காலமாயினும், மூன்று வருஷ காலமாயினும், ஒரு வருஷ காலமாயினும், அநுட்டித்தல் வேண்டும். பன்னிரண்டு மாசத்திலும் அநுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாசத்தின் மாத்திரமேனும் அநுட்டிக்கக் கடவர். (உபவாசம் - உணவின்றியிருத்தல்).

382. திருவாதிரை விரதமாவது யாது?

மார்கழி மாசத்துத் திருவாதிரை நக்ஷத்திரத்திலே சபாநாயகரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசஞ் செய்தல் வேண்டும். இவ்விரதஞ் சிதம்பரத்தில் இருந்து அநுட்டிப்பது உத்தமோத்தமம்.




383. உமாமகேசுர விரதமாவது யாது?

கார்த்திகை மாசத்துப் பெளர்ணிமியிலே உமாமகேசுர மூர்த்தியைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்யக் கடவர்; இரவிலே பணிகாரம், பழம் உட்கொள்ளலாம்.

384. சிவராத்திரி விரதமாவது யாது?

மாசிமாசத்துக் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியிலே சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில், உபவாசஞ் செய்து, நான்கு யாமமும் நித்திரையின்றிச் சிவபூசை செய்தல் வேண்டும். நன்கு யாம பூசையும் அவ்வக் காலத்திற் செய்வது உத்தமம். ஒரு காலத்திற் சேர்த்துச் செய்வது மத்திமம். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும், சிவராத்திரி, நான்கு யாம பூசையிலே சூரிய தேவர் முதலிய பரிவாரங்களுக்குஞ் சோமாஸ் கந்தமூர்த்தி முதலிய மூர்த்திகளுக்கும் பூசை செய்ய வேண்டுவதில்லை. பரார்த்தத்திலே மகாலிங்கம் முதலிய மூலமூர்த்திகளுக்கும் ஆன்மார்த்தத்திலே மகாலிங்கத்துக்கும் மாத்திரம் பூசை செய்யக் கடவர். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும் விநாயகக் கடவுளுக்கு மாத்திரம் நான்கு யாமமும் பூசை செய்யலாம். சண்டேசுர பூசை நான்கு யாமமுஞ் செய்தல் வேண்டும். சிவ பூசையில்லாதவர், நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாக்ஷர செபமுஞ் சிவபுராண சிரவணமுஞ் செய்து, நான்கு யாமமுஞ் சிவாலய தரிசனம் பண்ணல் வேண்டும். இதில் உபவாசம் உத்தமம்; நீரேனும் பாலேனும் உண்பது மத்திமம்; பழம் உண்பது அதமம்; தோசை முதலிய பணிகாரம் உண்பது அதமாதமம். சிவராத்திரி தினத்திலே இராத்திரியிற் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் லிங்கோற்பவ காலம். நான்கு யாமமும் நித்திரை யொழிக்க இயலாதவர், இலிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் நித்திரை யொழித்தல் வேண்டும். இக்காலத்திலே சிவ தரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதஞ் சைவசமயிகள் யாவராலும் ஆவசியகம் அநுட்டிக்கத் தக்கது.

 

385. கேதார விரதமாவது யாது?

புரட்டாதி மாசத்திலே சுக்கிலபக்ஷ அட்டமி முதற் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி யீறாகிய இருபத்தொரு நாளாயினும், கிருஷ்ணபக்ஷப் பிரதமை முதற் சதுர்த்தசி யீறாகிய பதினான்கு நாளாயினும், கிருஷ்ண்பக்ஷ அட்டமி முதற் சதுர்த்தசி யீறாகிய ஏழு நாளாயினும், கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினுங் கேதாரநாதரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலுங் கட்டிக் கொண்டு, முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து, இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்ப ஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, உபவசித்தல் வேண்டும். உபவசிக்க இயலாதவர் கேதார நாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பணிகாரம் உட்கொள்ளக் கடவர்.



386. கலியாணசுந்தர விரதமாவது யாது?

பங்குனி மாசத்து உத்தர நக்ஷத்திரத்திலே கலியாண சுந்தரமூர்த்தியைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது இரவிலே பரமான்னமும் பழமும் உட்கொள்ளல் வேண்டும்.



387. சூல விரதமாவது யாது?

தை யமாவாசையிலே இச்சா ஞானக் கிரியா சத்தி வடிவாகிய சூலாயுதத்தைத் தரித்த சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்; இராத்திரியில் ஒன்றும் உட்கொள்ளலாகாது.

I.MysoreNandi.JPG

388. இடப விரதமாவது யாது?

வைகாசி மாசத்துச் சுக்கிலபக்ஷ அட்டமியிலே இடப வாகனாரூடராகிய சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்

 

 

 

  • தொடங்கியவர்

389.  பிரதோஷ விரதமாவது யாது?

சுக்கிலபக்ஷங் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டுபக்ஷத்தும் வருகின்ற திரியோதசி திதியிலே, சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாய் உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே, சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாசங்களுள் ஒன்றிலே, சனிப் பிரதோஷம் முதலாகத் தொடங்கி, அநுட்டித்தல் வேண்டும். பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்தானஞ் செய்து, சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு, பிரதோஷ காலங் கழிந்தபின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்திலே போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகன மேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டுஞ் செய்யலாகாது. பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின், கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையே சிவதரிசனத்துக்கு உத்தம காலம். (அவமிருந்து = அகாலமரணம்)

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
post-3961-0-23260300-1314361180_thumb.jp

 



தேவி விரதம்



390. தேவி விரதம் எத்தனை?

சுக்கிரவார விரதம், ஐப்பசி உத்திர விரதம், நவராத்திரி விரதம் என மூன்றாம்.

391. சுக்கிரவார விரதமாவது யாது?

சித்திரை மாசத்துச் சுக்கிலபக்ஷத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிரவாரந்தோறும் பார்வதி தேவியாரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

392. ஐப்பசி உத்திர விரதமாவது யாது?

ஐப்பசி மாசத்து உத்தர நக்ஷத்திரத்திலே பார்வதி தேவியாரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

393. நவராத்திரி விரதமாவது யாது?

புரட்டாசி மாசத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமை முதல் நவமி யீறாகிய ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலே முதலெட்டு நாளும் பணிகாரம், பழம் முதலியவை உட்கொண்டு, மகாநவமியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

 



விநாயக விரதம்

vinayagar.jpg

394. விநாயக விரதம் எத்தனை?

சுக்கிரவார விரதம், விநாயக சதுர்த்தி விரதம், விநாயக சட்டி விரதம் என மூன்றாம்.

395. சுக்கிரவார விரதமாவது யாது?

வைகாசி மாசத்துச் சுக்கிலபக்ஷத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிரவாரந்தோறும் விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலே பழம் முதலியன இரவில் உட்கொள்ளல் வேண்டும்.

396. விநாயக சதுர்த்தி விரதமாவது யாது?

ஆவணி மாசத்துச் சுக்கிலபக்ஷ சதுர்த்தியிலே விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்து, இரவிலே பழமேனும் பணிகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும். இத்தினத்திலே சந்திரனைப் பார்க்கலாகாது.

397. விநாயக சட்டி விரதமாவது யாது?

கார்த்திகை மாசத்துக் கிருஷ்ணபக்ஷப் பிரதமை முதல் மார்கழி மாசத்துச் சுக்கிலபக்ஷ சட்டியீறாகிய இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் இருபத்தோ ரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலுங் கட்டிக் கொண்டு, முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து, இறுதி நாளாகிய சட்டியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

 

  • தொடங்கியவர்

சுப்பிரமணிய விரதம்

tiruchendur-cover_700.jpg

398. சுப்பிரமணிய விரதம் எத்தனை?

சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசட்டி விரதம் என மூன்றாம்.

399. சுக்கிரவார விரதமாவது யாது?

ஐப்பசி மாசத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் இரவிலே பழம் முதலியன உட்கொள்ளக் கடவர். அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே போசனம் பண்ணக் கடவர். இவ்விரதம் மூன்று வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும்.

400. கார்த்திகை விரதமாவது யாது?

கார்த்திகை மாசத்துக் கார்த்திகை நக்ஷத்திரம் முதலாகத் தொடங்கிக் கார்த்திகை நக்ஷத்திரந் தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளக் கடவர். இவ்விரதம் பன்னிரண்டு வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும்.

401. கந்த சட்டி விரதமாவது யாது?

ஐப்பசி மாசத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமை முதற் சட்டியீறாகிய ஆறு நாளுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஆறு நாளும் உபவாசஞ் செய்வது உத்தமம். அது கூடாதவர் முதலைந்து நாளும் ஒவ்வொரு பொழுது உண்டு, சட்டியில் உபவாசஞ் செய்யக் கடவர். இவ்விரதம் ஆறு வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். மாசந்தோறுஞ் சுக்கிலபக்ஷ சட்டியிலே சுப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் இயன்றது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.

 

  • தொடங்கியவர்

வைரவ விரதம்

tnbhairavar1.jpg

402. வைரவ விரதம் எத்தனை?

மங்கலவார விரதம், சித்திரைப் பரணி விரதம், ஐப்பசிப் பரணி விரதம் என மூன்றாம்.

403. மங்கல வார விரதமாவது யாது?

தை மாசத்து முதற் செவ்வாய்க்கிழமை தொடங்கிச் செவ்வாய்க்கிழமைதோறும் வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பலகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.

404. சித்திரை பரணி விரதமாவது யாது?

சித்திரை மாசத்துப் பரணி நஷத்திரத்திலே வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலும் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பணிகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.

405. ஐப்பசிப் பரணி விரதமாவது யாது?

ஐப்பசி மாசத்துப் பரணி நக்ஷத்திரத்திலே வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலும் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பணிகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.

 

  • தொடங்கியவர்

வீரபத்திர விரதம்


406. வீரபத்திர விரதம் எத்தனை?

மங்கலவார விரதம் என ஒன்றேயாம்.

407. மங்கலவார விரதமாவது யாது?

செவ்வாய்க்கிழமைதோறும் வீரபத்திரக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

408. விரதம் அநுட்டிப்பவர் அவ்விரத தினத்தில் எவ்வெவைகளை நீக்கி எவ்வெவைகளைச் செய்தல் வேண்டும்?

காமங் கோபம் முதலிய குற்றங்களெல்லாவற்றையும் பற்றறக் களைதல் வேண்டும்; தவறாது வைகறையிலே நித்திரை விட்டெழுந்துவிடல் வேண்டும்; புண்ணிய தீர்த்தத்தை அடைந்து, விபூதி, வில்வத்தடி மண், தருப்பை, கோமயம், திலம் என்பவைகளைச் சிரசிலே வைத்துக் கையிலே பவித்திரஞ் சேர்த்துச், சங்கற்பஞ் சொல்லி, ஸ்தானஞ் செய்தல் வேண்டும். தியானம், செபம், பூசை, ஆலய தரிசனம், பிரதக்ஷிணம், புராண சிரவணம் முதலியன விசேஷமாகச் செய்தல் வேண்டும்; திருகோயிலிலே இயன்றமட்டும் நெய் விளக்கேற்றல் வேண்டும்; அபிஷேகத் திரவிய நைவேத்தியத் திரவியங்கள் கொடுத்தல் வேண்டும்; போசனம் பண்ணுமிடத்துச் சிவனடியர் ஒருவரோடாயினும் போசனம் பண்ணல் வேண்டும்; நித்திரை செய்யுமிடத்து, இரவிலே, கோமயத்தினாலே மெழுகப்பட்ட தரையிலே, தருப்பையின் மேலே, கடவுளைச் சிந்தித்துக் கொண்டு, அதிசுத்தராய் நித்திரை செய்து, வைகறையில் எழுந்துவிடல் வேண்டும்; உபவாச விரத தினத்துக்கு முதற்றினத்திலே ஒரு பொழுது அபாரணத்திலே போசனஞ் செய்தல் வேண்டும்; உபவாச விரத தினத்துக்கு மற்றை நாட் காலையிலே நித்திய கருமம் இரண்டும் முடித்துக் கொண்டு, மாகேசுர பூசை செய்து, ஆறு நாழிகையுள்ளே சுற்றத்தாரோடு பாரணம் பண்ணல் வேண்டும். பாரணம் பண்ணியபின் பகலிலே நித்திரை செய்யாது, சிவபுராணங்களைக் கேட்டுக் கொண்டிருத்தல் வேண்டும்; நித்திரை செய்தவர், சற்பிராமணர் நூற்றுவரைக் காரணமின்றிக் கொன்ற மகா பாதகத்தை அடைவர். (அபாரணம் - பிற்பகல்)

409. எவ்விதமாயினுஞ் சங்கற்பித்த காலவெல்லை வரையும் அநுட்டித்து முடித்த பின் யாது செய்தல் வேண்டும்?

விதிப்படி உத்தியாபனஞ் செய்தல் வேண்டும்; தொடங்கிய விரதத்தை இடையே விடுவோரும், உத்தியாபனஞ் செய்யாதோறும் விரத பலத்தை அடையார். (உத்தியாபனம் = நிறைவு செய்தல்.)

திருச்சிற்றம்பலம்.
 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

16. அன்பியல்


410. அன்பாவது யாது?

ஒருவருக்குத் தம்மொடு தொடர்புடையவராய்த் தமக்கு இனியவராய் உள்ளவரிடத்தே நிகழும் உள்ள நெகிழ்ச்சியாம்.

411. உள்ளபடி ஆராயுமிடத்து நம்மோடு தொடர்புடையவராய் நமக்கு இனியவராய் உள்ளவர் யாவர்?

அநாதியே மலத்தினாலே மறைக்கப்பட்டுள்ள அறிவுந் தொழிலும் உடையவர்களாய்த் தம்வயத்தரல்லாதவர்களாய் உள்ள பசுக்களாகிய நம்மோடு அநாதியே இரண்டறக் கலந்து நின்று, நமக்கெல்லாம் நித்தியானந்தப் பெருஞ் செல்வத்தைத் தந்தருள விரும்பி, தந்தொழில்களெல்லாந் தம் பயன் சிறிதுங் குறியாது, நம் பயன் குறித்த தொழில்களாகவே கொண்டு, பெத்தநிலையிலே தாம் நம்முள்ளே அடக்கித் தாம் நமக்கு முன்னாகியும், இப்படியே என்றும் உபகரிக்கும் இயல்புடைய பெருங்கருணைக் கடலாகிய பசுபதி, சிவபெருமான் ஒருவரே. ஆதலினால் அவரொருவரே நம்மோடு என்றுந் தொடர்புடையவராய், நமக்கு நம்மினும் இனியவராய் உள்ளவர்; அவருக்கே நாமெல்லாம் உடைமைப் பொருள்; அவருக்கே நாமெல்லாம் மீளா அடிமை. ஆதலினால் அவரிடத்திற்றானே நாமெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்.

  • தொடங்கியவர்

412. நாம் சிவபெருமானிடத்து எப்பொழுது அன்பு செய்தல் வேண்டும்?

இம்மனித சரீரம் பெறுதற்கு அரியதாதலாலும் இது இக்கணம் இருக்கும், இக்கணம் நீங்கும் என்று அறிதற்கு அரிதாகிய நிலையாமையுடையதாதலாலும் நாம் இடையறாது எக்காலமும் அன்பு செய்தல் வேண்டும்.

 

413. சிவபெருமான் இம்மனித சரீரத்தை எதன் பொருட்டுத் தந்தருளினார்?

தம்மை மனசினாலே சிந்திக்கவும், நாவினாலே துதிக்கவும், தம்மால் அதிட்டிக்கப்படுங் குருலிங்கசங்கமம் என்னும் மூவகைத் திருமேனியையுங் கண்களினாலே தரிசிக்கவும், கைகளினாலே பூசிக்கவுங் கும்பிடவும், தலையினாலே வணங்கவும், கால்களினாலே வலஞ்செய்யவும், தமது பெருமையையுஙந் தமது திருவடியார் பெருமையையுங் காதுகளினாலே கேட்கவுமே இம்மனித சரீரத்தைத் தந்தருளினார்.
  • தொடங்கியவர்

414. சிவபெருமானிடத்து அன்பு எப்படி விளையும்?

பசுக்களாகிய நம்முடைய இலக்கணங்களையும், நம்மைப் பந்தித்த பாசங்களின் இலக்கணங்களையும், பசுபதியாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும், எத்துணையும் பெரிய சிவபெருமான் எத்துணையுஞ் சிறிய நமக்கெல்லாம் இரங்கி, எளிவந்து, ஓயாது என்றும் உபகரிக்கும் பெருங்கருணையையும், இவ்வியல்பின் அநந்தகோடியில் ஒரு கூறாயினும் உடையவர் பிறரொருவரும் நமக்கில்லாமையையும் இடையறாது சிந்திக்கச் சிந்திக்க, நமக்கு அச்சிவபெருமானிடத்து அன்பு விளையும்.

 

415. சிவபெருமானிடத்தே அன்புடைமைக்கு அடையாளங்கள் யாவை?

அவருடைய உண்மையை நினைக்குந்தோறும், கேட்குந்தோறுங்ம் காணுந்தோறுந் தன்வசமழிதலும், மயிர்க்கால்தோறுந் திவலை உண்டாகப் புளகங்கொள்ளலும், ஆனந்தவருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரைதடுமாறலும் பிறவுமாம்.

  • தொடங்கியவர்

416. இல்வாழ்க்கை முதலியவைகளிற் புகுந்து அவ்வவைகளுக்கு வேண்டுந் தொழில்கள் செய்வோருக்கு இடையறாத வழிபாடு எப்படிக் கூடும்? அவர் யாது செய்வார்?

கழைக்கூத்தன் கூத்தாடும் பொழுதும் அவன் கருத்து உடற்காப்பிலே வைக்கப்பட்டிருத்தல் போல, நாம் லெளகிக கருமஞ் செய்யும் பொழுது நமது கருத்துச் சிவபெருமானிடத்தே வைக்கப் பட்டிருத்தல் வேண்டும்; இப்படிச் செய்யாதொழியின், மரண காலத்திலே சிவத்தியானஞ் சிந்திப்பது அரிதரிது.

 

417. சிவபெருமானை வழிபடுவோர் மரிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?

சுற்றத்தாரிடத்தும், பொருளினிடத்துங் சற்றாயினும் பற்று வையாது, சுற்றத்தாரைத் தூரத்தே இருத்தி விட்டுத், தாம் விபூதி தரித்து, மனங் கசிந்துருகக், கண்ணீர் பொழிய, உரோமஞ் சிலிர்ப்பச் சிவபெருமானைத் தியானித்து, வேத சிவாகமங்களையேனுந் தேவார திருவாசகங்களையேனுஞ் சிவ பக்தர்கள் ஓதக் கேட்டல் வேண்டும்.


தேவாரம்

உற்றா ராருளரோ உயிர்கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்மைக்
குற்றார் ஆருளரோ.


-திருநாவுக்கரசர்-திருமுறை-4
-திருஅங்கமாலை.

திருச்சிற்றம்பலம்.

சைவவினாவிடை இரண்டாம் புத்தகம்
முற்றுப்பெற்றது.

மெய்கண்ட தேவன் திருவடி வாழ்க!

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆறுமுக நாவலர் ஐயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.