Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியிருந்த கோயில் திரைப்படத்தில் புத்தரின் சிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடியிருந்த கோயில் திரைப்படத்தில் புத்தரின் சிலை ஆட்டம் கண்டதால் அந்த காட்சியை தணிக்கை செய்தனராம் இலங்கையில் ...

மேலதிக விபரங்களுக்கு.....

நன்றிகள் எழுத்தாளர் முருகபூபதி....

நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா

காட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்த இராமபிரான்

முருகபூபதி

இந்துசமயமும் வைணவசமயமும் புராணக்கதைகளினாலும் உபகதைகளினாலும் ஐதீகங்களினாலும் மற்றும் அற்புதங்கள் நிறைந்ததுமான சுதந்திரமான சமயங்கள் என்பதனால் இலக்கியப்படைப்பாளிகளிடத்தில் அவரவர் கற்பனா சக்திக்கு ஏற்ப மறுவாசிப்புக்குட்பட்டுவருவதை அவதானிக்க முடிகிறது.

சிறுவயதில் நாம் படித்த பாடப்புத்தகத்தில் சத்தி-முத்தி புலவர்கள் பற்றிய கதையொன்று படித்திருக்கிறோம்.

ஒரு குளந்தங்கரையில் அரசமரநிழலில் எழுந்தருளியிருந்த ஒரு பிள்ளையார் சிலைக்கு அருகில் தமது உடைகளை வைத்துவிட்டு இரட்டையர்களான சத்தி - முத்துப்புலவர்கள் குளத்திலிறங்கி நீராடிவிட்டு கரைக்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த அவர்களது உடைகள் மாயமாக மறைந்துவிட்டிருந்தன.

அரசமரப்பிள்ளையாருக்குத்தெரியாமல் அவை திருட்டுப்போயிருக்கமாட்டாது என நம்பிய அந்தப்புலவர்கள் உடனே இப்படிப்பாடினார்களாம்.

தம்பியோ பெண் திருடி

தயாருடன் பிறந்த வம்பனோ

நெய்திருடும் மாமாயன்....

இதெல்லாம் கோத்திரத்துக்குள்ள குணம்.

இவ்வாறு சத்தி முத்துப்புலவர்களினால் எள்ளிநகையாடப்பட்ட பிள்ளையாரை கவியரசு கண்ணதாசனும் விட்டுவைக்கவில்லை.

பாகப்பிரிவினை திரைப்படத்தில் ஊனமுற்ற கண்ணையன் (;சிவாஜிகணேசன்) பாடுவதாக ஒரு பாடல் (டி.எம்.எஸ்ஸின் பின்னணிக்குரல்)

ஆனை முகனே,

ஆதி முதலானவனே

பானை வயிற்றோனே பக்தர்களை காப்பவனே...

பிள்ளையாரின் வயிற்றை பானைவயிறு என்று வர்ணித்திருப்பார் கவிஞர்.

இதனையெல்லாம் பொறுத்துக்கொண்ட இந்துத்துவாக்கள் தற்போது ஆண்டாள் பற்றிய ஒரு சிறுகதையை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளனர். ஏற்கனவே புதுமைப்பித்தனும் சிதம்பர ரகுநாதனும் இராமயணத்திலிருந்தும் மகாபாரதத்திலிருந்தும் சில காட்சிகளை புனைந்து படைப்பிலக்கியமாக்கியிருக்கிறார்கள். அவை இலக்கிய உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை.

அவை பற்றி பின்னர் குறிப்பிடுவதற்கு முன்னர் ஆண்டாள் குறித்து எழுந்துள்ள சர்ச்சை பற்றி பார்ப்போம். அண்மையில் லண்டன் பி.பி.ஸி. தமிழோசை வானொலியில் ஒலிபரப்பான ஒரு தகவலே இந்தப்பத்தியை எழுதத்தூண்டியது.

தமிழ்நாட்டில் பிரபலமான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாண்டு தமிழ்ப்பாடத்திட்டத்தில் வைணவத்தின் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் பிறப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைச்சொல்லும் நோன்பு என்ற சிறுகதை இடம்பெற்றுள்ள சிறுகதைத்தொகுப்பு பற்றிய செய்தியும் இந்து முன்னணியின் ஆட்சேபமும்தான் பி.பி.ஸி. வானொலியில் ஒலிபரப்பாகியது.

திருப்பாவை இயற்றிய ஆண்டாளின் கதையை நாம் ஏ.பி.நாகராஜனின் திருவருட்செல்வர் படத்திலும் பார்த்திருக்கிறோம். ஆண்டாளுக்கு மறுபெயர் சூடீக்கொடுத்த சுடர்க்கொடி. சிறுமி ஆண்டாளாக பேபி பத்மினியும் குமரி ஆண்டாளாக கே.ஆர்.விஜயாவும் ஆண்டாளை ஒரு குழந்தையாக துளசிச்செடி அருகே கண்டெடுத்து வளர்த்த பெரியாழ்வாராக சிவாஜிகணேசனும் நடித்தார்கள்.

வைணவ புராணம் எமக்குச்சொல்லித்தந்த கதையையே ஏ.பி.என். படமாக்கியிருந்தார். ஆனால் நோன்பு என்ற சிறுகதையை எழுதியிருக்கும் செல்வராஜ் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனிப்புக்குள்ளான படைப்பாளி;. ஏற்கனவே அவரது சில படைப்புகள் சிலாகித்துப்பேசப்பட்டவை.

ஆண்டாளின் பிறப்புகுறித்து மறுவாசிப்பு செல்வராஜின் சிறுகதையில் சித்திரிக்கப்பட்டுவிட்டதுதான் இந்து முன்னணியின் கோபம். துளசிச்செடி அருகே கண்டெடுக்கப்பட்ட ஆண்டாள் ஒரு தாசிக்குப்பிறந்ததாக அச்சிறுகதை சொல்வதனாலேயே இந்து முன்னணி, அதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து மற்றும் வைணவ சமய பொதுமக்களிடம் கையொப்பம் சேகரித்து மனுவொன்றை குறிப்பிட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிருவாகத்திடம் வழங்கியுள்ளது. அத்துடன் அச்சிறுகதை இடம்பெற்றுள்ள கதைக்கோவையை தடைசெய்யவேண்டும் என்று மாநில அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளது.

இந்து சமயமும் வைணவ சமயமும் புனைவுகளையும் அற்புதங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக்கொண்டு மக்களிடம் பரவியவை. கூத்துக்கள், மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் (சிரியல்கள்) திரைப்படங்கள் முதலானவற்றில் மட்டுமன்றி புனைவிலக்கியத்திலும் இடம்பெற்றுவருபவை. தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து கமல்ஹாசன் வரையில் சமயப்புராணங்களை ஐதீகங்களை கற்பனையும் கலந்து திரைப்படமாக்கும் மரபு ஒருவகை வணிகக்கலாசாரமாகியிருக்கிறது.

இலங்கையில், எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்தகோயில் திரையிடப்படுமுன்னர் அங்கு தணிக்கைக்குட்பட்டபோது, ஒரு காட்சி ஆட்சேபத்துக்குரியதாக கருதப்பட்டு நீக்கப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டுக்காயத்துடன் துடிதுடிக்க வரும் எம்.ஜி.ஆர் பண்டரிபாயிடம் வந்து வசனம்பேசுவார். ஒரு கட்டத்தில் அங்கிருந்த ஷோகேஸின் மீது கோபத்தில் ஓங்கி அடிப்பார். அந்த அதிர்வினால் அருகிலிருந்த சிறிய புத்தர்சிலை சற்று ஆடும். இலங்கை பௌத்தர்கள் வாழும் நாடு, அந்தக்காட்சி பௌத்தர்களை புண்படுத்தும் எனச்சொல்லிக்கொண்டு அந்தக்காட்சி நீக்கப்பட்டது.

இப்படி பல கதைகளை சம்பவங்களை பட்டியலிட்டுக்கொண்டு போகலாம்.

இந்தப்பத்தியில் ஏற்கனவே சொல்லப்பட்ட இரண்டு முக்கிய முன்னணி படைப்பாளிகளின் இரண்டு சிறுகதைகளுக்கு இனி வருவோம்.

புதுமைப்பித்தன் தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி. அவரது புகழ்பெற்ற படைப்பு சாபவிமோசனம்.

கணவன் கோதம முனிவனின் சாபத்தினால் கல்லாகிப்போனவள் அகழிகை. இந்திரனிடம் தெரியாமல் மயங்கி சோரம்போனதனால் அவளுக்கு கிடைத்த தண்டனை கல்லாகிவிடும் சாபம்தான். சிறிதுகாலத்தின் பின்னர் அந்தப்பக்கமாக வந்த இராமனின் கால் பட்டு அகழ்யை மீண்டு உயிர்ப்பிக்கிறாள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் சீதையுடன் உரையாடும் அகழ்யை, பதினான்கு வருடம் வனவாசமிருந்து திரும்பும்போது அயோத்தி மக்களுக்கு சீதை புனிதமானவள் என்று காண்பிப்பதற்காக இராமனின் கட்டளைப்படி சீதை தீக்குளித்ததை அறிந்து வெகுண்டு ‘ என்னை உயிர்ப்பித்த இராமனா இப்பிடிச்செய்தான்’ என்று வேதனையுற்று மீண்டும் கல்லாகிப்போனாள். இதுதான் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதை. இன்றளவும் இலக்கிய உலகில் பேசப்படும் உன்னதமான சிறுகதை. எத்தனையோ தடவை மறுபிரசுரம் கண்டுள்ள சிறுகதை.

இச்சிறுகதையின் தொடக்கத்தில் புதுமைப்பித்தன் இரத்தினச்சுருக்கமாக இப்படி ஒரு முன்னுரை தருகிறார்.

“ ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக்கதை பிடிபடாமல் (பிடிக்காமல்கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.”

தனது கதைக்கு இந்துத்துவாக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்று புதுமைப்பித்தன் எதிர்;பார்த்திருந்தமையாலேயே குறிப்பிட்ட வரிகளுடன் தனது சாபவிமோசனத்தை பிரசுரத்துக்கு அனுப்பினார்.

தீக்குளித்து மீண்டு அயோத்தியில் இராமனின் பட்டாபிசேகத்திலும் இடம்பெறும் சீதை ஒரு துணிவெளுக்கும் வண்ணானின் கூற்றினால் மீண்டும் இராமனால் காட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவது வால்மீகி இராமாயணத்தில் தொடர்கிறது. கைகேயியின் ஆணைப்படி முதலில் இராமனுடன் காட்டுக்குச்சென்றவள் பின்னர் இராமனின் ஆணைப்படி மீண்டும் காட்டுக்குச்சென்று துன்;பப்பட்டவள் சீதை. அவளது வாழ்வு கானகத்திலேயே பெரும்பாலும் கழிந்துவிட்டது. அத்துடன் அசோகவனத்திலும் இராவணனால் சிறைவைக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய பாத்திரம் சீதை. வால்மீகியின் கதையையும் கேட்காமலேயே மீண்டும் கல்லாகிப்போனாள் ஆகழ்யை. கேட்டிருந்தால்... தன்னைக்கல்லாக்கிக்கொள்ளாமல் இராமனையே சுட்டெரித்திருப்பாளோ தெரியாது. பெண்மையின் தார்மீகக் கோபத்தை இந்த வால்மீகி இராமயணத்தை தவிர்த்து புனைவிலக்கியமாக்கியிருந்தார் புதுமைப்பித்தன்.

புதுமைப்பித்தனின் நேரடி வாரிசு என்று தமிழ்நாட்டில் சொல்லப்படும் சிதம்பர ரகுநாதன் (இவர் புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். புதுமைப்பித்தனின் மறைவுக்குப்பின்னர் புதுமைப்பித்தன் வரலாறு மற்றும் புதுமைப்பித்தன் கதைகள்- சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் வரலாற்றியல்பூர்வமான ஆய்வு)ஆகிய நூல்களையும் எழுதியிருப்பவர்)

ரகுநாதனின் ‘வென்றிலன் என்றபோதும்...’ என்னும் சிறுகதையும் இலக்கிய உலகில் சிலாகித்துப்பேசப்பட்ட ஒரு மகாபாரதக்கதை. திரௌபதியைப்பற்றிய கதை.

“ ஐவருக்கும் நான் பத்தினியானேன். ஏனக்கு வாய்ந்த ஐந்து கணவர்களும் என்னிடம் நடந்துகொண்ட விதம்தான் என்னைக் கர்ணனைப்பற்றிய சிந்தனைக்கு மீண்டும் இழுத்துச்சென்றது. இந்த ஐவருக்கும் மேலாக கர்ணனிடம்தான் எனக்கு மனசு ஒட்டக்கூடிய பாசம் இருந்தது.

தருமபுத்திரன் ஒரு ரிஷிப்பிறவி. அவருக்கு மனைவியென்றாள் சதி என்ற தெய்வீகப்பொருள். அவர் பள்ளியறையில் வைத்துக்கொண்டுகூட, திடீரென்று நீதி சாஸ்திரம் போதிக்க ஆரம்பித்துவிடுவார். பீமரோ, காதலுக்கோ சல்லாபத்துக்கோ ஏற்றவரில்லை. இடும்பைதான் அவருக்கு சரியான மனைவி. வில்லை முறித்து என்னை மனந்த அர்ஜூனனுக்கு நான் பலரில் ஒருத்தி. அவருக்கு சமயத்தில் ஒருத்தி வேண்டும். அது திரௌபதியானாலும் சுபத்திரையானாலும் ஒன்றுதான். நகுல சகாதேவர்கள் என் கண்ணுக்கு கணவர்களாகவே தோன்றவில்லை. மதினியின் அன்பு அரவணைப்பில் ஒதுங்க எண்ணும் மைத்துனக்குஞ்சுகளாகத்தான் தோன்றினர்.

இதனால்தான் இந்த ஐவரில் எவர் மேலும் அன்பு செலுத்த முடியவில்லை. உலகமும், அவர்களும் என்பரிவையும் பச்சாதாபத்தையும் எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளட்டும். எனினும், எனக்கு கர்ணன் மேல்தான் நேர்மையான அன்பு படர்ந்திருக்கிறது. கர்ணன் நினைவுதான் என் இளமையைக்கூடக் கட்டுக்குலைக்காமல் காத்து வந்தது. இன்று கர்ணன் மடிந்தார். அப்படியானால் ஒட்டிக்கொண்டிருந்த என் வாழ்க்கைக் கனவும் இன்றோடு உதிர்ந்தது என்றுதான் கொள்ளவேண்டுமா? “ – என்று கேட்கிறாள் திரௌபதி.

இவ்வாறு ஒரு மகாபாரதக்கதையின் முக்கியமான பாத்திரம்பற்றி மறுவாசிப்பு செய்கிறார் ரகுநாதன். இவ்வாறு எழுதுவதற்கு துணிச்சல் வேண்டும்.

குருஷேத்திர போர்க்களத்தில் எத்தகைய சதிகளின் பின்னணியில் கர்ணன், அர்ஜூனனால் கொல்லப்படுகிறான் என்பதை மகாபாரதக்கதை படித்து தெரிந்துகொள்ளலாம். அல்லது பந்துலுவின் இயக்கத்தில் சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படம் பார்த்து அறிந்துகொள்ளலாம்.

போர்க்களத்தில் ‘வென்றிலன் என்றபோதும்’ திரௌபதியின் மனதில் குடியிருந்தவன் கர்ணன்தான் என்று அச்சிறுகதையை முடிக்கிறார் ரகுநாதன். திரௌபதியின் உள்ளத்தை இவ்வாறு சித்திரித்த ரகுநாதன் பின்னர் பாரதியின் பாஞ்சாலி சபதத்தை முன்வைத்து பாரதி நூற்றாண்டு காலத்தில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் ‘பாஞ்சாலி சபதம்: உறைபொருளும் மறைபெருளும்’ என்ற தலைப்பில் விரிவான சொற்பொழிவாற்றினார். இது தற்போது தனிநூலாகவும் கிடைக்கிறது.

படைப்பிலக்கியவாதிகள் இவ்வாறு புராண மற்றும் இதிகாசக்கதை மாந்தர்களை காலத்துக்குக்காலம் மறுவாசிப்புக்குள்ளாக்கி வந்திருக்கிறார்கள்.

சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் பற்றிய ஒரு மறுவாசிப்புக்கதையை சுமார் 50 வருடங்களின் முன்னர் கல்கியில் படித்திருக்கின்றேன். ஆனால் அதன் தலைப்பு தற்போது நினைவில் இல்லை.

இளங்கோவடிகள் துறவறம் மேற்கொண்டதற்கு மாதவியும் ஒரு காரணம் என்று அந்தக்கதை சித்திரிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது கல்கி ஆசிரியர் அச்சிறுகதைக்கு முன்னுரையாக ‘இப்படியும் சிந்திக்கலாம்’ என்னும் பொருளுணர்த்தி சிறு முன்னுரையை இரத்தினச்சுருக்கமாக பதிவுசெய்திருந்தது நினைவு.

இந்தப்பின்னணிகளுடன் தற்போது சர்ச்சைக்கு வந்துள்ள செல்வராஜின் நோன்பு சிறுகதையை பார்க்க முடிகிறது.

ஆண்டாள் பாசுரம் இலக்கியத்தில் பேசுபொருள். ஆண்டாளின் பிறப்பின் இரகசியம் புனைவுகள் சார்ந்திருப்பது. ஐதீகம் சொன்னதையே நம்பியவாறு வாழ்வதும் தொழுவதும் எம்மவர் மரபு. அதிலிருந்து விலகி வேறுவிதமாகச்சிந்தித்தால், கற்பனை செய்து புனைவிலக்கியம் படைத்தால் எதிர்வினைகளும் தவிர்க்கமுடியாதவைதான்.

இவ்வாறு இந்து மற்றும் வைணவ மதங்கள் தவிர்ந்து ஏனைய மதங்கள் பற்றி எழுதவோ பேசவோ முடியாது. மத அவமதிப்புச்சட்டம் குறுக்கே வந்துவிடும். அல்லது சல்மன் ரூஷ்டிக்கு நேர்ந்ததுபோல் அஞ்சாதவாசத்திற்கு தயாராகவேண்டும்.

நாடும் வேண்டாம் மணிமுடியும் வேண்டாம் என்று வனவாசம் சென்ற இராமனின் அயோத்திக்காக எத்தனை உயிர்கள் பலி எடுக்கப்பட்டன என்பதும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் வரலாறு. இராம பூமி எனச்சொல்லப்படும் அயோத்தியும் இராமர் பாலமும் நிதிமன்றங்களை சந்தித்தன.

காட்டுக்குப்போன இராமன் தற்காலத்தில் கோர்ட்டுக்குப்போய்;க்கொண்டிருக்கிறான்.

பாவம் ஆண்டாள், அந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடியும் தற்போது கோர்ட்டுக்கு செல்லப்போகிறாள்.

http://www.tamilmurasuaustralia.com/2012/07/blog-post_2195.html#more

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.