Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!

Featured Replies

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-3.jpg

தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும், வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும், பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது. அரசு பொதுப் பள்ளியில் தாழ்த்தப்பட்டோர் சேர்க்கப்படுவதை மறுப்பதாக, தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவதைத் தடுப்பதாக, கலப்பு மணத்தை எதிர்ப்பதாக, தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை அவமதிப்பதாக, ஆதிக்க சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஊரை விட்டு ஒதுக்குவதாக, தீண்டாமைச் சுவராக, இரட்டை டம்ளராக, தாழ்த்தப்பட்டோர் படித்தும், உழைத்தும் சுயமரியாதையுடன் வாழ்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத பொறாமையாக இப்படிப் பல்வேறு வடிவங்களில் இந்த ஆதிக்க சாதித் திமிர் தலைவிரித்தாடி வருவதற்கு சமீப காலமாக நடந்துவரும் பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டலாம்.

* திருவண்ணாமலை நகருக்கு அருகே அமைந்துள்ள ஆடையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான குமார், அவ்வூரில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தனது இரண்டு மகன்களையும் அதே கிராமத்திலேயே செயல்பட்டுவரும் மற்றொரு அரசுப் பள்ளியான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் சேர்த்தார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர், அவ்விரண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து விலக்காவிடில், அவ்வூராட்சிப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மாட்டோம் என மிரட்டல் விடுத்தனர்.

அக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் தமது குழந்தைகளை ஆதிதிராவிடர் பள்ளியில்தான் சேர்த்து வரும் இந்த ஐம்பது ஆண்டு கால வழக்கத்தை குமார் மீறிவிட்டதாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெரும்பாலோர் பொருமி வருகின்றனர். அரசு அவ்விரண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஊராட்சி ஒன்றியப் பள்ளியிலிருந்து நீக்க மறுத்துவிட்டது; எனினும், ஆதிக்க சாதியினர் தமது பிள்ளைகளை வேறொரு பள்ளியில் சேர்க்கப் போவதாகக் கூறி, இந்த நவீன தீண்டாமையை நடைமுறைப்படுத்த முயன்றனர்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த கல்கேரி கிராமத்தில் அமைந்துள்ள கரகம்மாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் வழிபாடு செய்வதை மறுத்து, ஆதிக்க சாதியினர் தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்தனர். தாழ்த்தப்பட்டோர் இத்தீண்டாமையை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களை நடத்தியதையடுத்து, அக்கோவில்களில் 2009, ஜனவரி 1 முதல் தாழ்த்தப்பட்டோரும் நுழைந்து வழிபாடு நடத்தலாம் என்ற உரிமை நிலை நிறுத்தப்பட்டது.

ஆனால், ஆதிக்க சாதியினர் மிகுந்த தந்திரத்தோடு, அக்கோவில்களில் இருந்த மூல விக்கிரகங்களைத் திருடி, தமது பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கோவில்களில் வைத்துவிட்டு, இப்புதிய கோவில்கள் தமது சாதியினருக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறி, இக்கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்குத் தடைவிதித்து, ஆலயத் தீண்டாமையைப் புதிய வடிவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

* கடலூர் நகருக்கு அருகேயுள்ள நிறமணி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபட்டனர் என்பதற்காகவே, அக்கோவில் திருவிழாவையொட்டி நடைபெறவிருந்த தீமிதி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து உத்தரவிட்டான் ஆதிக்க சாதிவெறியனும் நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவனுமான மணிவேல். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த மாரியம்மன் கோவில் இருந்தாலும், அக்கோவில் ஊருக்குள் இருப்பதால், ஆதிக்க சாதியினர் இக்கோவிலைத் தமது கோவில் என்று சொந்தம் கொண்டாடுவதோடு, “காலனியில் தனிக்கோவில் இருக்கும்பொழுது தாழ்த்தப்பட்டோர் ஊருக்குள் இருக்கும் கோவிலுக்கு வழிபட வருவது ஏன்?” எனக் குதர்க்கமான கேள்வியை எழுப்பி, நவீன தீண்டாமையைப் புகுத்துகின்றனர்.

* கோவை மாவட்டம் பூவலப்பருத்தி கிராமத்தில் இன்றும் ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெரு வழியாகச் செல்லும் தாழ்த்தப்பட்டோர், தமது செருப்புகளைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்ற தீண்டாமை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது போல, தமிழகத்தின் தென் மற்றும் மேற்கு மாவட்டக் கிராமங்களில் தாழ்த்தப்பட்டோருக்குத் தேநீரை பிளாஸ்டிக் கப்புகளில் வழங்குவது; வெளிப்பார்வைக்கு ஒன்றாகத் தெரிந்தாலும், அடியில் பெயிண்ட் தடவப்பட்ட கிளாஸ்களில் தேநீர் தருவது போன்ற நவீன வடிவங்களில் இரட்டை டம்ளர் முறை தொடர்ந்து வருகிறது.

* தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள கிராமங்களில் தீண்டாமை எந்தளவிற்கு மூர்க்கமாகக் கோலோச்சி வருகிறது என்பதை பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காச்சியேந்தல் கிராம ஊராட்சித் தேர்தல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. கொட்டக்காச்சியேந்தல் ஊராட்சி மன்றத் தலைவரான கருப்பன், மன்றத் துணைத் தலைவரும் மற்ற உறுப்பினர்களும் தன்னைத் தரையில் அமர வைத்துத் தீண்டாமை பாராட்டுவதாக சமீபத்தில்கூடக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

இக்குற்றச்சாட்டை விசாரிக்க வந்த மாவட்ட ஆட்சியர், கருப்பன் அக்குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அறிவித்த கையோடு, ஊராட்சி பணத்தில் 1.16 இலட்ச ரூபாய் அளவிற்குக் கையாடல் நடந்திருப்பதாகவும், அப்பணத்தைப் பங்குபோட்டுக் கொள்ளுவதில் கருப்பனுக்கும் துணைத் தலைவர் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் இடையே பிரச்சினை வந்ததையடுத்துதான் கருப்பன் இக்குற்றச்சாட்டைக் கூறியதாகவும் விளக்கம் அளித்தார்.

தீண்டாமைக் குற்றச்சாட்டைத் தான் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பதை மறுத்துள்ள கருப்பன், ஆதிக்க சாதியைச் சேர்ந்த துணைத் தலைவரும் மன்ற உறுப்பினர்களும் தன்னை நிர்பந்தப்படுத்திக் காசோலைகளில் கையெழுத்து வாங்கி வருவதால், பணக் கையாடல் விவகாரத்தில் தனக்குச் சம்பந்தமில்லை எனக் கூறியிருக்கிறார். “புகார் அளித்த கருப்பன் மீதே பொருளாதாரக் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பதைப் பார்த்தால், சாதிப் பாகுபாட்டை மறைப்பதற்காகவே இந்த விசாரணை நாடகம் அரங்கேறியிருக்கலாம்” என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது, இந்தியா டுடே வார இதழ்.

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-2.jpg

பொள்ளாச்சி நகரையடுத்துள்ள பூவலப்பருத்தி கிரிஆமத்தில் ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் செருப்பு அணிந்து கொண்டு செல்லக்கூடாது என்ற தீண்டாமை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதன் சாட்சியம்

தீண்டாமையின் காரணமாகவும், சுயசாதிப் பெருமை, பற்றின் காரணமாகவும் கலப்பு மணம் புரிந்து கொள்ளத் துணியும் தம்பதியினரைக் கொன்று போடுவது சாதி சமூக அமைப்பில் புதிய விசயமல்ல. இப்படிபட்ட கௌரவக் கொலைகள் வட மாநிலங்களில்தான் நடைபெறும்; சுயமரியாதை போராட்டங்கள் நடந்த தமிழ்நாட்டில் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் அரங்கேறாது என்ற பொதுவான நம்பிக்கையை விருத்தாசலம் நகருக்கே அருகே 2003இல் நடந்த கண்ணகி முருகேசன் தம்பதியினரின் படுகொலை கலைத்துப் போட்டது. தமிழகத்தில் கௌரவக் கொலைகள் நடப்பது கண்ணகி முருகேசன் தம்பதியினரோடு தொடங்கவுமில்லை; அவர்களோடு முடிந்துவிடவுமில்லை.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யா; திருச்சியைச் சேர்ந்த ஜெயா; வேதாரண்யம் வட்டம், வண்டல் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா; பழனி அருகிலுள்ள க.கலையமுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா; தஞ்சை மாவட்டம் வடசேரியைச் சேர்ந்த சதுரா; இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 17 வயதான திருச்செல்வி; திண்டுக்கல் அருகேயுள்ள புள்ளக்காடுபட்டியைச் சேர்ந்த சங்கீதா; மானாமதுரை வட்டம் கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவக்குமார்; தண்டாரம்பட்டு வட்டம், ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான துரை; ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான இளங்கோ; கோவை மாவட்டத்திலுள்ள சோமனூரைச் சேர்ந்த அருந்ததியினரான சிற்றரசு; திருவாரூக்கு அருகேயுள்ள அரிதுவார்மங்கலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவாஜி இவர்கள் அனைவரும் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காகக் கொல்லப்பட்டவர்கள். கடந்த நான்காண்டுகளில் நடந்து பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ள கௌரவக் கொலைகளின் எண்ணிக்கையே இத்தனை இருக்கிறது என்றால், அம்பலத்துக்கு வராமலும், போலீசாரால் அமுக்கப்பட்டும் மறைக்கப்பட்ட கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை எத்துனை இருக்கக்கூடும்?

மிகவும் நேரடியாக, வெளிப்படையாக நடத்தப்படும் கௌரவக் கொலைகள் மட்டுமின்றி, சாதி மற்றும் குடும்ப கௌரவத்திற்காகத் தூண்டப்படும் கௌரவத் தற்கொலைகள், குறிப்பாக இளம் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தற்கொலைக்குத் தள்ளப்படுவதும் தமிழகத்தில் அதிகரித்த அளவில் நடந்து வருகிறது. ஜனவரி 2008 தொடங்கி ஜூன் 2010 முடிய தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 1,971. அகால மரணமடைந்த இப்பெண்களுள் ஏறத்தாழ 90 சதவீதத்தினர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 2010-இல் தமிழகத்தில் கொலை செய்யப்பட்ட 629 பெண்களுள், 18லிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 236. இவ்வழக்குகள் குறித்து முறையாகப் புலன் விசாரணை நடத்தினால், அவற்றுள் பல கௌரவத் தற்கொலைகளாகவும் கௌரவக் கொலைகளாகவும் இருக்கும் உண்மை அம்பலத்துக்கு வரக்கூடும்.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தீண்டாமை வக்கிர எண்ணமும், கலப்பு மணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அகமண சாதிப் பண்பாடும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மத்தியிலும் ஆதிக்கம் செலுத்துவதால், அவர்களும் இக்கொலைகளை நியாயமானதாகவே பார்க்கின்றனர். அதனால்தான், கிராமப்புறங்களில் கௌரவக் கொலைகள் பலரின் கண் முன்னாலேயே அல்லது ஊர்ப் பஞ்சாயத்தின் கட்டளைப்படியே நடத்தப்படுகின்றன.

பொறியியல் கல்லூரி மாணவியான கங்கவள்ளி, தமது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தனது காதலனை மணமுடிப்பதில் உறுதியாக இருந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் நகரில் பட்டப்பகலில் நடுரோட்டில் தனது தந்தையால் கத்தியால் குத்தப்பட்டுப் பின்னர் உயிர் பிழைத்துக் கொண்டார். இச்சம்பவம் படித்த, நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் மத்தியிலும் கலப்பு மணத்திற்கு எதிரான எண்ணம் ஊறிப் போயிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-1.jpg

சாதி மறுப்பு கலப்பு மணத்தை எதிர்ப்பதில் மட்டுமின்றி, தாழ்த்தப்பட்டோர் நடத்தும் கோவில் நுழைவுப் போராட்டங்கள் தொடங்கி இட ஒதுக்கீடு உள்ளிட்ட அவர்களின் ஒவ்வொரு சமூக உரிமையையும் எதிர்ப்பதிலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் முன்னணியில் நிற்பதை கண்டதேவி கோவில் தேரோட்டம் உள்ளிட்ட பல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் 7,000 கிராமங்களில் இன்றளவும் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் வெளிப்படையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில், அரசுதனியார் அலுவலகங்களில், நவீனமான ஐ.டி.துறையில் ஆதிக்க சாதிவெறி நுணுக்கமான வடிவங்களில் வெளிப்படுகிறது.

இச்சாதிவெறியைக் கொம்பு சீவிவிடும் வேலையில் ஆதிக்க சாதி சங்கங்கள் தற்பொழுது மும்மரமாக இறங்கியுள்ளன. பா.ம.க. கட்சியைச் சேர்ந்தவரும் வன்னியர் சங்கத் தலைவருமான குரு, சமீபத்தில் நடந்த வன்னியர் சாதி மாநாட்டில், “வன்னிய இனப் பெண்களைக் கலப்பு மணம் செய்பவர்களை வெட்டுங்கடா” எனச் சாதித் திமிரெடுத்துப் பேசியிருக்கிறார். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை சமீபத்தில் கலப்புத் திருமண எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தை நடத்தியிருக்கிறது. கலப்புத் திருமணத்தை எதிர்ப்பதற்குத் தமக்கு உரிமை உள்ளது எனப் பிரகடனம் செய்கிறது, தமிழ்நாடு பிராமணர் சங்கம்.

‘‘இப்பவெல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க” என ஆதிக்க சாதியினர் பேசிவருவது பகல் வேடம் என்பதை இந்த நிகழ்வுகள் ஒருசேர எடுத்துக் காட்டுகின்றன. காலனிய ஆட்சிக் காலம் தொடங்கி தற்பொழுது வரை இந்திய சமூகப் பொருளாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள நகரமயமாதல், தொழில்மயமாதல் போன்ற மாற்றங்கள், இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் மத்தியிலும் ஒரு சிலர் கல்விரீதியிலும் பொருளாதாரரீதியிலும் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, தனியார்மயம் தாராளமயத்தால் விவசாயம் சீரழிந்து போன பின்பு, வேலைவாய்ப்புக்காக நகரத்தை நோக்கிச் செல்லுமாறு தாழ்த்தப்பட்டோர் விசிறியடிக்கப்பட்டிருப்பது, இனியும் பொருளாதாரத்திற்காக ஆதிக்க சாதியினரைத் தாம் நம்பியிருக்கத் தேவையில்லை என்ற நிலையை தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

இம்மாற்றங்கள் தாழ்த்தப்பட்டோர் தமது சொந்த உழைப்பில் சம்பாதித்து நல்ல உடை உடுத்தவும், ஊருக்குள்ளேயே செருப்பணிந்து செல்லவும், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்லவும், ஊர்க் கோவிலில் நுழைந்து வழிபாடவும், சம மரியாதையோடு நடத்தப்படவும், தன் சொந்த விருப்பத்தின் பேரில் சாதி மாறி காதலிக்கவும், கலப்பு மணம் புரிந்துகொள்ளவும் அவர்களைப் போராட வைத்திருக்கிறது.

நகரமயமாதல், தொழில்மயமாதல், தனியார்மயம்தாராளமயம் உள்ளிட்ட இதே ‘வளர்ச்சி’ப் போக்கு அனைத்து ஆதிக்க சாதிகள் மத்தியிலும், குறிப்பாகக் கிராமப்புற ஆதிக்க சாதிகளான ‘பிற்படுத்தப்பட்டோர்’ மத்தியிலும் பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, அவர்களின் நியாயமான அரசியல் சமூக உரிமைக் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் ஜனநாயகப் பண்பாட்டினை அவர்களிடம் ஏற்படுத்தவில்லை. மாறாக, இப்பொருளாதார மாற்றங்களினால் பலன் அடைந்துள்ள ஆதிக்க சாதியினைச் சேர்ந்த நிலவுடமையாளர்கள், கந்துவட்டி பேர்வழிகள், தனியார் பள்ளி கல்லூரி முதலாளிகள் உள்ளிட்ட புதுப் பணக்கார கும்பல் ஓட்டுக்கட்சிகளில் உள்ளூர் தலைமையாகவோ, சாதிக் கட்சி/ சங்கத் தலைவர்களாகவோ உருவெடுக்கின்றனர்.

சாதியைத் தள்ளிவைத்துவிட்டு ஓட்டுப் பொறுக்க முடியாது என்றவாறு தேர்தல் அரசியல் சீரழிந்துவிட்ட நிலையில், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களை, சாதிக் கட்சிகளும், சாதி சங்கங்களும் தம் பக்கம் அணி திரட்டிக் கொள்வதும்; உழைக்கும் மக்களும் தமது சாதிக் கட்சிகள், சங்கங்களின் பின்னே கொடி பிடித்து ஓடுவதும் நடந்தேறி, இந்தக் கூட்டணி சுயசாதிப் பற்று, பெருமை, தீண்டாமை வெறிகொண்ட சாதி ஆதிக்கம், சாதிக் கலவரம் போன்ற பிற்போக்குத்தனங்களைப் புதிய தளத்திற்கு மூர்க்கமாக எடுத்துச் செல்லும் அபாயகரமான போக்கைத்தான் இப்பொழுது புரட்சிகர, ஜனநாயக சக்திகள் எதிர்கொள்ள நேரிடுகிறது.

__________________________________________

- புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

____________________________________________________

____________________________________________________

____________________________________________________

____________________________________________________

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.