Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசாத்தின் ஆட்டம் முடிவை நெருங்குகின்றதா? - விவேகன்

Featured Replies

வேண்டாப் பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பது போல சிரிய அதிபர் இப்போது எதனைச் செய்ய முயன்றாலும் அது குற்றமாகவே பார்க்கப்படும் நிலைமைக்குள் அவர் வந்துள்ளார். 42 ஆண்டுகள் லிபியாவை ஆண்ட கேணல் முவம்மர் கடாஃபியை ஒரு சில மாதப் போரின் மூலம் அகற்றிய மேற்குலக நாடுகளால், சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை அகற்றுவதென்பது அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை என்பது தெரிகின்றது.

எனினும், அகற்றியே ஆகவேண்டும் என்பதில் மேற்குலகம் உறுதியாக இருப்பதால் அவரின் ஆட்சி அதிகார நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்றே நம்பலாம். இலங்கையில் போர் தொடங்கியவுடன் அங்கிருந்து தனது பணியாளர்களை வெளியேற்றிய ஐ.நா, இனப்படு கொலையான தமிழர்களை கணக்கெடுத்துச் சொல்ல மாதங்கள் பலவற்றை எடுத்துக்கொண்ட ஐ.நா., சிரியாவில் போர் தொடங்கியதன் பின்னர் தனது பன்னாட்டு கண்காணிப்பாளர்கள் 300 பேரை அங்கு அனுப்பி தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதுடன், இதுவரை 19 ஆயிரத்து 106 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் அறைந்து கூறியிருக்கின்றது. இதில் 13,292 பேர் அப்பாவிப் பொதுமக்கள், 4,861 பேர் அரசுக்கு ஆதரவாகப் போரிட்ட இராணுவத்தினர்.

அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரம் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர ஆயிரக்கணக்கானோரின் நிலைமை என்ன ஆனது என்பதே தெரியவில்லை என்று சிரியாவில் நிலைகொண்டுள்ள சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பட்டியலிடுகின்றன.

கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு எதிரான போர் உள்நாட்டுப் போராக விரிவடைந்து, தலைநகர் உட்பட நாடு முழுவதும் போரின் தாக்கம் பரவியுள்ளது. சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் இரண்டு பாரிய நகரங்களான தலைநகர் டமஸ்கஸ் மற்றும் அலெப்போவில் இடம்பெறும் தொடர் மோதல்களினால் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலம்போன்று கட்டடங்கள் இடிந்துபோய் அலங்கோலமாக, மனித நடமாட்டமின்றிக் கிடக்கின்றன.

இலட்சக்கணக்கான மக்கள் இந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துவிட்டனர். இதில் பல ஆயிரக் கணக்காணவர்கள் அயல் நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அயல் நாடுகளான துருக்கி, ஈராக் பகுதிக்குள் அதிகளவானவர்கள் அகதிகளாக செல்கின்றார்கள். தற்போது துருக்கி நாட்டிற்கு 50 ஆயிரம் பேரும், ஜோர்டானுக்கு 30 ஆயிரம் பேரும், லெபனானுக்கு 34 ஆயிரம் பேரும், ஈராக்குக்கு 8 ஆயிரம் பேரும் என சுமார் 1.22 இலட்சம் பேர் சென்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சிரிய அகதிகளின் வருகை தமது நாட்டிற்குள் அதிகரித்த நிலையில் துருக்கி தனது எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே சுமார் 50 ஆயிரம் வரையான சிரிய அகதிகள் துருக்கிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், சிரியாவுடனான எல்லையின் அனைத்து சோதனைச் சாவடிககைளயும் தாங்கள் மூடியுள்ளதாக துருக்கியின் சுங்க மற்றும் வர்த்தக அமைச்சர் ஹயாட்டி யாஷிசி தெரிவித்துள்ளார். சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் அரசாங்கத்துக்கு எதிரான புதிய தடைகளின் ஒருபகுதியாக இந்த எல்லை நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளதாக துருக்கிய தொலைக்காட்சி ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

துருக்கிக்கும் சிரியாவுக்கும் இடையில் 900 கிலோ மீற்றர் நீளமான எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லைப்பகுதியில் 13 சோதனைச் சாவடிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தமது எல்லையில் பறந்த துருக்கியின் போர் விமானத்தை சிரியா இராணுவம் கடந்த மாதம் சுட்டு வீழ்த்தியது. இதனால் 2 நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தமது விமானத்தினை சிரியா சுட்டு வீழ்த்தியுள்ளமையானது பிராந்திய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலென ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் துருக்கி எச்சரிக்கை விடுத்திருந்தது. சிரியாவின் இந்த நடவடிக்கையைத் தண்டிக்காமல் விடக்கூடாதெனத் துருக்கிய பிரதிப் பிரதமர் தெரிவித்திருதார்.

எனினும், சிரியாவிற்கு எதிராக எச்சந்தர்ப்பத்திலும் இராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதில்லை எனவும் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால், சிரியா எல்லையில் துருக்கி தனது படைகளையும், ஆயுத தளவாடங்களையும் குவிக்கத் தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவிய நிலையில், இவ்விவகாரத்தை கையிலெடுத்த ரஷ்யா, தீவிரமாக முயன்று தற்போதைக்கு பதட்டத்தை தணித்துள்ளது. இந்த நிலையிலேயே துருக்கி சிரியாவுடனான தனது எல்லையை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, சிரியாவில் தவிக்கும் மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர வசதியாக ஈராக் தனது எல்லைப் பகுதிகளை திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இதனால் அகதிகளாக வெளியேறுவோர் எண்ணிக்கை விரைவில் 2 இலட்சத்தை தாண்டி விடும் என கருதப்படுகிறது. எனவே இந்த அகதிகளுக்கு பாதுகாப்பு, உணவு வசதிகளை மனிதாபிமான அடிப்படையில் வழங்க ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

சிரியாவில் வெடித்துள்ள உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவிய நிலையில் மீண்டும் மனித உயிர்கள் அங்கு இழக்கப்படத் தொடங்கியுள்ளன. அமைதி முயற்சியை ஏற்படுத்த முன்னாள் ஐ.நா. பொதுச் செயலரும் தற்போது சிரியாவுக்கான ஐ.நா.வின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டவருமான கோபி அனான் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவிய நிலையில் மீண்டும் ஒரு முயற்சியில் அவர் இறங்கியிருக்கின்றார்.

சிரியாவில் இடைக்கால அரசு ஒன்றை அமைக்க வேண்டும் என்பதே அவரது புதிய திட்டம். சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் பஷார் அல்-அசாத் ஆதரவாளர்கள், அதிபரை எதிர்ப்பவர்களின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட இடைக்கால அரசை விரைந்து அமைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஐ.நா.வுக்கு கோபி அனான் கொடுத்துள்ள வழிகாட்டுதலும் கொள்கைகளும்` என்ற ஆலோசனைப் படி, இடைக்கால அரசில் இப்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத் இடம்பெறமாட்டார். எதிர்ப்பாளர்களின் சில தலைவர்களும் இடம்பெற மாட்டார்கள் என்று தனது ஆலோசனை அறிக்கையில் கோஃபி அன்னான் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்கு ஐ.நா. பொதுச்சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும் இவ்வாறான ஒரு திட்டத்தைக்கூட செயற்படுத்த முடியாத நிலைமையை தொடர்ந்து இருந்து வருகின்றது. இருதரப்பிலும் கணிசமானளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. யுத்த டாங்கிகள் சகிதம் தரையில் அரச படையினர் போராளிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர். ஆங்காங்கே யுத்த டாங்கிகள் தகர்ந்துபோய்க்கிடக்கும் படங்களும் வெளியாகியுள்ளன. டமாஸ்கஸ் மற்றும் வரலாற்று புகழ்மிக்க நகரமான அலெப்பே ஆகிய நகரங்களின் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்தும் போராளிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அப்பகுதிகளை மீட்கவே அரச படைகள் மிகவும் உக்கிரமான தாக்குதல்களை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும், மேற்கத்தேய நாடுகளின் ஆதரவுடன் தலைநகர் டமாஸ்கஸை முற்றுகையிட்டு சிரிய விடுதலை இராணுவம் என்று வர்ணிக்கப்படும், ஆசாத்திற்கு எதிரான படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் பல ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்பே நகரில் அரச படைகள் மற்றும் எதிரணியினருக்கு இடையில் பாரிய மோதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலெப்பே நகரில் ஊடுருவியுள்ள எதிரணியினரை வெளியேற்ற ஆசாத்தின் படைகள் மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகவும் கடந்த சனிக்கிழமை (28) ஒரு தாக்குதல் நடவடிக்கையை ஆசாத்தின் படையினர் மேற்கொண்டதாகவும் தெரியவருகின்றது. சிரியாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் மோதலாக இங்கு நடைபெறவுள்ள போர் அமையவுள்ளதென எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

இம் மோதல் உக்கிரமடையும் பட்சத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சிரியப் படைகள் மிகப் பெரிய மனிதப்படுகொலைகளுக்குத் தயாராகி வருவதாக அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. இதேவேளை, ஆசாத்தின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று ஐ.நா. பார்வையாளர்களின் முன்னாள் தலைவர் ரொபர்ட் மூட் தெரிவித்துள்ளர். சிரியாவில் தனது பணிக்காலம் முடிந்து கடந்த வாரம் திரும்பிய அவர், நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நடந்த கருத்தரங்களில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

சிரியாவில் ஆசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தாலும், பெரிய அளவில் மாற்றம் வரப்போவதில்லை என்று கூறிய அவர், ஒருவேளை, இப்போது ஆட்சியலிருப்பவர்களே எதிர்காலத்திலும் தொடர்ந்தால் சிரியாவின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கும் என்றும் கூறினார். இராணுவத்திலிருந்து அதிக அளவிலான அதிகாரிகள் வெளியேறி அரசு எதிர்ப்புப் படையினருடன் இணைந்தால் ஆசாத்தின் ஆட்சி தூக்கியெறியப்படும். அப்படியே ஆசாத்தின் ஆட்சி நிறைவுக்கு வந்தாலும் சிரியாவில் நீண்ட நாள்களாக இருந்து வரும் பிரச்னைகள் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, லிபியாவில் அதிபர் முவம்மர் கடாஃபியை வெளியேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த ரஷ்யா ஒரு கட்டத்தில் கடாஃபியை கைவிட்டதுபோல், இப்போது சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்திற்கு வழங்கிவரும் ஆதரவையும் கைவிடும் முடிவுக்கு வந்துள்ளதைக் காணமுடிகின்றது. அதேநேரம், கடாஃபியைப் போன்று ஆசாத்தின் மரணம் நேர்ந்துவிடக்கூடாது என்பதிலும் ரஷ்யா கவனமாக இருப்பதாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில், சரியான ஏற்பாடுகளை செய்து பாதிப்பில்லாமல் விடை கொடுத்தால் ஆசாத் பதவி விலகுவதற்கு தயாராக இருப்பதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்தார்.

பிரான்சிற்கான ரஷ்யத் தூதர் அலக்சாண்டர் ஓர்லோவ் ரொய்டருக்கு வழங்கிய பேட்டியிலேயே இக்கருத்தை வெளியிட்டிருந்தார். எனினும், சிரிய தகவல் அமைச்சகம் ரஷ்ய தூதுவரின் கருத்து தப்பானது என்று மறுத்தது. மேலும் இவருடைய கருத்து தப்பாக பொருள் கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியது. எனினும், கோபி அனானின் திட்டத்துக்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கிவிட்டது ரஷ்யா. அதிபர் ஆசாத் வெளியேறுவதற்கான தருணம் வந்துவிட்டதாகவே ரஷ்யா கருதுகின்றது.

இந்த வெளியேற்றத்தில் தங்கள் நெருங்கிய நண்பனான ஆசாத்தின் உயிர் பறிபோய் விடக்கூடாது என்பதில் ரஷ்யாவின் கவனம் இருப்பதனாலேயே அவரைப் பாதுகாப்பாக ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு ரஷ்யா தற்போது முனைந்து வருவதாகவும், இதனை சிரிய அதிகாரிகள் புரிந்துகொள்ளவில்லை என்றும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கிடையே, சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை வெளிப்படையாக எச்சரித்திருந்த நிலையில், ஏற்கனவே செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என ரஷ்யா எச்சரிக்கையும் விடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, ரஷ்ய வெளியுறவுத்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘இரசாயன ஆயுதங்களுக்கு தடை விதிக்கிற ஜெனிவா பாதுகாப்பு உடன்படிக்கையில் 1968ம் ஆண்டு சிரியா கையெழுத்திட்டு சேர்ந்திருக்கிறது. இதன்படி, சிரியா நடந்து கொள்ள வேண்டும். இதை ரஷ்யா எதிர்பார்க்கிறது`` என கூறியுள்ளது.

இதற்கிடையே, சிரிய அதிபர் பதவியிலிருந்து இறங்குவதாக இருந்தால், அவர் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிப்பதாக அரபுக் கூட்டமைப்பு நாடுகள் கூறியுள்ளன. பஷார் அல் ஆசாத் பதவி விலக வேண்டுமென அரபுக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் ஒன்றிணைந்து கோரியுள்ளனர். அரபுக் கூட்டமைப்பு வெளிவிகார அமைச்சர்களின் அவசர கூட்டமொன்று கட்டாரில் கடந்த வாரம் நடைபெற்ற பின்னர் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசாத் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவரின் குடும்பத்தினர் சிரியாவை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தாம் உதவுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சிரிய விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்களும் எதிர்க்கட்சியினரும் இணைந்து இடைக்கால அரசு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வெளியிட்டிருந்த கூட்டறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆசாத் விரைவில் பதவியிலிருந்து இறங்க வேண்டியது அவசியம் என கட்டார் நாட்டுப் பிரதமர் ஷேக் ஹமாத் பின் காலிஃபா அல்-தானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை, ஆசாத்தை அப்பதவியிலிருந்து விலக்க வேண்டுமென அரபு நாடுகளின் தலைவர்களை அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது. ‘அஸாத் போக வேண்டும். பிராந்தியங்களினதும் நாட்டினதும் பிடியை அவர் இழக்கிறார் என்பதையும் இதை தீர்ப்பதற்கு வன்முறை ஒரு வழியல்ல என்பதையும் அவர் உணரவேண்டும். அவர் அதிகாரத்திலிருந்து தானாக விலக வேண்டும்’ என வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்காவின் பொதுமக்கள் விவகாரத்திற்கான உதவி இராஜாங்க செயலாளர் மைக் ஹம்மர் கூறினார்.

‘அவரை சுற்றியிருப்பவர்கள் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தயாராக இல்லாமல் தமது சொந்த மக்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் குற்றங்களை புரிகின்றனர். அவர்கள் அவரை கைவிட வேண்டும் என அவர் தெரிவித்தார். ஆசாத் இல்லாத சிரியாவுக்காகவும் பல்வேறு இனக்குழுக்களும் ஒன்றிணைந்து, சிரிய மக்களை பிரதிநிதித்

துவப்படுத்தும் அரசாங்கமொன்றை அமைக்கும் நாளுக்காகவும் எவ்வாறு தயாராவது என்பது குறித்து அமெரிக்காவும் ஏனைய பல நாடுகளும் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரத்தில், சிரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விரைவுபடுத்தியுள்ளது. மேலும், கப்பல்கள் மற்றும் விமானங்களைக் கண்காணிப்பதன் மூலம் சிரியப் படையினருக்கு ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

எல்லா வழிகளினூடாகவும் ஆசாத்திற்கான வாசல்கள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முவம்மர் கடாஃபி இல்லாத லிபியாவை, கோஸ்னி முபாரக் இல்லாத எகிப்தை விரும்பிய மேற்குலம் பஷார் அல் ஆசாத் இல்லாத சிரியாவையே விரும்புகின்றது. எனவே, எவ்வாறு முன்னையவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்களோ அதேபோன்று ஆசாத்தும் அகற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது மட்டும் உறுதி. ஆனால், அவர் எவ்வாறு ஆட்சியில் இருந்து அகலப்போகின்றார் என்பதே இங்குள்ள முக்கியமான கேள்வியாகும்.

நன்றி: ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.