Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!

Featured Replies

குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!

ர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள நந்தினி லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலப் பள்ளியின் நிர்வாகம், தனது பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் முதல் வகுப்பில் சேர்ந்திருந்த நான்கு குழந்தைகளின் உச்சந்தலைமுடியைக் கொத்தாக வெட்டி அவமானப்படுத்தியிருக்கிறது. இது வக்கிரம் நிறைந்த வன்முறை மட்டுமல்ல; ஆதிக்க சாதித் திமிரும், பணக் கொழுப்பும் இணைந்த நவீன தீண்டாமையாகும். இது ஏதோ தனிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்துவிட்ட அசம்பாவிதம் அல்ல; தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளி வர்க்கம், குழந்தைகளின் பாகுபாடற்ற சமத்துவக் கல்வி பெறும் உரிமைக்கு எதிராக விட்டுள்ள பகிரங்கச் சவாலாகும்.

‘‘தனியார் ஆங்கிலப் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்பொழுது 25 சதவீத இடங்களை, தங்கள் பள்ளியின் அருகாமையில் வசிக்கும் சமூகத்தில் பின்தங்கிய, நலிவுற்ற மாணவர்களுக்கு ஒதுக்கிச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; அப்படிச் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு, அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணம் அல்லது தனியார் பள்ளிகள் நிர்ணயித்துள்ள கட்டணம், இதில் எது குறைவோ அக்கட்டணத்தை அரசே செலுத்திவிடும்” என்கிறது இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.

அதாவது, இச்சட்டப்படி சேரும் மாணவர்களுக்குத் தனியார் பள்ளி முதலாளிகள் இலவசக் கல்வியெல்லாம் அளிக்கவில்லை; அம்மாணவனுக்குரிய கட்டணத்தை அரசிடமிருந்து கறந்துவிடுகிறார்கள் என்றபோதும் முதலாளிகள் இச்சட்டத்தைத் தம் மீது திணிக்கப்படும் அநீதியான சுமையாகவும், தமது வியாபாரத்தில் அத்து மீறி செய்யப்படும் தலையீடாகவும் கருதி எதிர்த்து வருகிறார்கள். இச்சட்டப்படி சேரும் மாணவர்களை ஓசிக் கிராக்கிகள் என்றே முத்திரை குத்துகிறார்கள். யாராக இருந்தாலும், காசு கொடுக்க வக்கிருப்பவனைத்தான் அனுமதிப்போமேயொழிய, மற்றபடி உரிமை என்று கூறிக்கொண்டு ஏழைகள், அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் தமது பள்ளிவாசலை மிதித்துவிடக் கூடாது என்பதில் இந்தக் கும்பல் குறியாக இருக்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொதுப்பாடத் திட்ட முறையை மட்டம் தட்டுவதற்குத் தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளிகள் எப்படியெல்லாம் புளுகினார்களோ, பார்ப்பன நஞ்சைக் கக்கினார்களோ, அதனைப் போன்றே இச்சட்டத்திற்கு எதிராகவும் கீழ்த்தரமான, குசும்புத்தனமான வேலைகளைச் செய்து வருகிறார்கள். சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசங்கரா மேநிலைப்பள்ளி மற்றும் லேடி ஆண்டாள் வேங்கட சுப்பாராவ் மேநிலைப்பள்ளி என்ற இரண்டு தனியார் பள்ளிகளும், “இச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டு குப்பத்துப் பசங்களை அனுமதித்தால், உங்கள் குழந்தைகளின் படிப்பும் பண்பாடும் கெட்டுவிடும்” எனத் தமது பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி, அவர்களை இச்சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதிக்கும்படித் தூண்டிவிட்டது.

‘‘நாங்கள் சந்தியாவந்தனம் பண்ணுவோம்; நாங்கள் அசைவ உணவுகளைப் பள்ளிக்கு எடுத்துவர மாட்டோம்; படிப்பில் பின்தங்கிய பசங்களோடு எங்கள் பிள்ளைகள் எப்படி ஒன்றாக உட்கார முடியும்?” என்றெல்லாம் தமது ஆசிரியர்களையும், மாணவர்களையும், மாணவர்களின் பெற்றோர்களையும் பார்ப்பன சாதிவெறியைக் கக்கிப் பேசவிட்டு (தி ஹிந்து, ஏப்ரல் 14, பக்.6), இச்சட்டத்திற்கு எதிரான கருத்தை நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் உருவாக்கிவிடத் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. தங்களின் எதிர்ப்பையும் மீறி, இச்சட்டப்படி ஏழை மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டால், அம்மாணவர்களின் கதி என்னவாகும் என எடுத்துக் காட்டியிருக்கிறது, பெங்களூரு ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலப் பள்ளி நிர்வாகம்.

அப்பள்ளி நிர்வாகம் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி முதல் வகுப்பில் சேர்ந்த அக்குழந்தைகளின் பெயர்களை வருகைப் பதிவேட்டில் சேர்க்காமல், அவர்களை வகுப்பறையில் தனியாக ஒதுக்கி, தீண்டத்தகாதவர்களாக நடத்திவந்திருக்கிறது. இறைவணக்கம் நடத்தப்படும்பொழுது, அச்சிறுவர்கள் மற்ற மாணவர்களோடு சேர்ந்து நிறுத்தப்படாமல், ஓசிக் கிராக்கிகள் எனக் காட்டுவதற்காகத் தனியாக நிறுத்தப்பட்டுள்ளனர். வகுப்பறையில் அக்குழந்தைகள் கடைசி பெஞ்சில் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்குழந்தைகள் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்னால், அவர்கள் என்ன உணவு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் டிபன் பாக்ஸைத் திறந்து சோதித்திருக்கிறது, பள்ளி நிர்வாகம். அக்குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கப்படுவதில்லை. அக்குழந்தைகளின் பெற்றோர்கள், பெற்றோர்கள் ஆசிரியர் கழகக் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதில்லை. இப்படி அக்குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஒதுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, அதன் உச்சமாக அக்குழந்தைகளின் தலை சொட்டையாகத் தெரியும்படி, உச்சந்தலை முடியைக் கொத்தாக வெட்டிப் போட்டுள்ளது, பள்ளி நிர்வாகம்.

கர்நாடகாவைச் சேர்ந்த தனியார் பள்ளி முதலாளிகளின் கூட்டமைப்பு இச்சட்டத்திற்கு எதிராக ஜூலை 16 முதல் ஒரு வார காலத்திற்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. அக்கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பள்ளியில் அந்த நான்கு குழந்தைகளும் அவமதிக்கப்பட்ட சம்பவமோ, அவ்வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாக. ஜூலை 13 அன்று நடந்திருக்கிறது. எனவே, இச்சட்டத்திற்கு எதிரான தமது எதிர்ப்பை வலுவாகவும் வக்கிரமாகவும் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த வன்முறை, நவீன தீண்டாமை அக்குழந்தைகளின் மீது ஏவிவிடப்பட்டுள்ளது.

அந்நான்கு குழந்தைகளையும் மற்ற மாணவர்களுக்குத் தெரியும்படிதான் ஒதுக்கி வைத்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள்; தலைமுடியைச் சிரைத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். இந்தக் கேடுகெட்ட வக்கிரத்திற்கு ஆசிரியர்களும் துணை நின்றிருக்கிறார்கள். ஏதுமறியாத இளம் குழந்தைகளை இப்படி அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தியிருக்கும் அப்பள்ளி நிர்வாகிகளையும் ஆசிரியர்களையும் நடுத்தெருவில் நிறுத்திச் சவுக்கால் அடிப்பதுதான் நியாயம்.

ஆனால், வல்லமை பொருந்திய மைய அரசும், மாநில அரசும் மயில் இறகால் தடவிவிடுவது போல், “அப்பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்; அந்த நோட்டீசுக்குப் பதில் அளிக்க பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறோம்; அந்நிர்வாகம் பதில் அளித்த பிறகு, அது பற்றி விசாரித்து, உண்மை இருந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம்” என அறிக்கை சவடால்தான் அடித்து வருகின்றன.

%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88.jpg

தலைமுடி வெட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட ஏழைக் குழந்தைகள்

காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டம், வன உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம் எனப் பல கவர்ச்சிகரமான சட்டங்களை அடுத்தடுத்து இயற்றியிருக்கிறது. அப்படிபட்ட ஏட்டுச் சுரைக்காய் சட்டங்களுள் ஒன்றுதான் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம். குழந்தைகளின் கல்வி உரிமை பற்றிப் பேசுவதாகப் பீற்றிக் கொள்ளப்படும் இச்சட்டமும், பல்வேறு உரிமைச் சட்டங்களைப் போலவே, பல்வேறு ஓட்டைகளுடன் அரைவேக்காட்டுத்தனமாகத்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டைகளை அடைத்துவிட்டு, இந்தச் சட்டத்தைக் கண்டிப்பாகவும், தனியார் பள்ளி முதலாளிகள் சட்டத்தை மீறிக் குழந்தைகளைத் துன்புறுத்தாத வண்ணமும் அமல்படுத்தினால்கூட, இச்சட்டம் குழந்தைகளின் கல்வி உரிமைக்கானதாக, அவ்வுரிமையை உத்தரவாதப்படுத்துவதாக அமைந்துவிடாது.

இந்தச் சட்டத்தின் உண்மையான நோக்கமே, அரசுப் பணத்தைத் தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு வாரிக் கொடுத்து, தனியார்மயத்தின் கீழ் புதுவிதமான அரசு உதவி பெறும் தனியார் ஆங்கிலப் பள்ளிகளை உருவாக்கிப் பராமரிப்பதுதான்; நரியைப் பரியாக்கியாக்கிக் காட்டுவது போல, கட்டணக் கொள்ளை நடத்தும் தனியார் பள்ளி முதலாளிகளை, சமூகப் பொறுப்புமிக்கவர்களாகக் காட்டுவதுதான். தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் மட்டும் இக்கட்டாயக் கல்வித் திட்டத்தை நிறைவேற்ற 141 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. இந்தப் பணத்தைக் கொண்டு அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு, தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஏழை மாணவர்களின் பெயரால் அரசுப் பணம் மடைமாற்றி விடப்படுகிறது.

தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை உருவாக்கியது; மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்குவது; குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துவது; தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் தாழ்த்தப்பட்டபழங்குடியின மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே வழங்குவது என அரசு பல வழிகளில் கல்வித்துறையில் நுழைந்துள்ள தனியார்மயத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை மாணவர்களின் பெயரால் எடுத்து வருகிறது. அதிலொன்றுதான் இக்கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும்.

இந்தச் சட்டத்தின் மூலம் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி, ஒரேவிதமான பள்ளிக் கல்வியைக் கட்டாயமாகவும் இலவசமாகவும் கொடுக்கும் பொறுப்பிலிருந்தும், கடமையிலிருந்தும் அரசு தந்திரமாக விலகிக் கொள்கிறது. கல்வி தனியார்மயமானலும்கூட, இது போன்ற கல்விச்சட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகளில் சேர்ந்து ஆங்கில வழிக் கல்வியைப் பெற்றுவிட முடியும் என்ற மயக்கத்தை ஏழை மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்துகிறது.

இக்கவர்ச்சிக்கு ஏழைக் குடும்பங்களைப் பலியாக்குவதன் மூலம், “கல்வியைத் தனியார்மயமாக்கதே!” என்ற கோரிக்கையை, போராட்டத்தைத் திசை திருப்புவதும், கல்வி என்பது காசுக்கு விற்கப்படும் கடைச்சரக்குதான் என்பதை நிலைநிறுத்துவதுமே அரசின் நோக்கம்.

__________________________________________________

- புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012

__________________________________________________

தொடர்புடைய பதிவுகள்:

Tags: RTE, ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளி, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம், கர்நாடகா, கல்வி பெறும் உரிமைச் சட்டம், கல்வியுரிமை, தகவல் அறியும் உரிமைச் சட்டம், தனியார் கல்வி, தனியார் பள்ளி, தீண்டாமை, பெங்களூரு, வன உரிமைச் சட்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.