Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்த இயக்குனர் மகேந்திரன்

Featured Replies

எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்த இயக்குனர் மகேந்திரன்:

பொன்னியின் செல்வனுக்கு திரைக்கதை எழுதினார்

திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், பின்னர் டைரக்டராகவும் உயர்ந்து, "முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' முதலான அற்புத படங்களை உருவாக்கிய மகேந்திரன், எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்தவர்.

இயக்குனர் மகேந்திரனின் சொந்த ஊர் இளையான்குடி. தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர்.

இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார்.

29503.jpg

அப்பொழுது கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். தீபாவளிதோறும் அது வெளிவந்தது. கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.

எம்.ஜி.ஆர். முன்னால் பேசினார்

1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார்.

"நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் இவர் (எம்.ஜி.ஆரை காட்டி) சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது'' என்றார், மகேந்திரன்.

இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், "நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க'' என்று எழுதி கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார்.

29501.jpg

கல்லூரிப் படிப்பை முடித்த மகேந்திரன் தஞ்சையில் இருந்த அத்தை நேசமணி வீட்டுக்கு சென்றார். அப்போது, சட்டக் கல்லூரியில் படிக்க செல்லும்படியும், தான் பண உதவி செய்வதாகவும் மகேந்திரனிடம் அத்தை கூறினார். அதன் பேரில், மகேந்திரன் சென்னைக்குப் புறப்பட்டார். திருவல்லிக்கேணியில் உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு, சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், "மேற்கொண்டு பண உதவி செய்ய முடியாது'' என்று அத்தை கூறியதால், படிப்பை அப்படியே விட்டுவிட்டு இளையான்குடிக்கு புறப்பட தயாரானார், மகேந்திரன்.

அப்போது எதிர்பாராத விதமாக காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பனை மகேந்திரன் சந்திக்க நேர்ந்தது. தனது "இனமுழக்கம்'' பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலை தருவதாகவும், சினிமா விமர்சனம் எழுதுமாறும் மகேந்திரனிடம் கண்ணப்ப வள்ளியப்பன் கூறினார். அதற்கு மகேந்திரன் சம்மதித்தார்.

இந்த நிலையில் "இன்பக்கனவு'' நாடகத்தில் நடித்தபோது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்கப் போவது பற்றி அறிவிக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.

அந்தக் கூட்டத்துக்கு மகேந்திரன் சென்று இருந்தார். அவரைப்பார்த்த எம்.ஜி.ஆர், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானேப'' என்று கேட்டார். மகேந்திரன், "ஆமாம்'' என்றார்.

"நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

பொன்னியின் செல்வன்

மறுநாள் காலை மகேந்திரன், ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார்.

மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்தார், எம்.ஜி.ஆர். கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை எடுத்து வந்து, மகேந்திரனிடம் கொடுத்தார்.

"நான் இதைப் படமாக எடுக்கப்போகிறேன். நீங்கள் திரைக்கதை எழுதவேண்டும்'' என்று கூறினார்.

அந்த நாவலுக்கான திரைக்கதையை, 3 மாதத்தில் மகேந்திரன் எழுதி முடித்தார். "திருடாதே'' படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடம் திரைக்கதையை கொண்டு போய்க் கொடுத்தார்.

"இவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டீங்களாப'' என்று வியப்புடன் கேட்டார், எம்.ஜி.ஆர். பிறகு, "ஊரில் இருந்து ஒழுங்காக பணம் வருகிறதாப'' என்று கேட்டார்.

மகேந்திரன் தன் நிலைமையைக் கூறினார். உடனே எம்.ஜி.ஆர். நூறு ரூபாய் கொடுத்தார்.

நாடகம்

பொன்னியின் செல்வனை படமாக்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். தள்ளிப்போட்டார். தன் நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார்.

"அனாதைகள்'' என்ற நாடகத்தை மகேந்திரன் எழுதித் தந்தார்.

29502.jpg

நாடக ஒத்திகை எல்லாம் முடிந்து திருச்சியில் அரங்கேற்ற முடிவு செய்தார், எம்.ஜி.ஆர். ஆனால், புயல்-மழை காரணமாக அப்போது நாடகம் அரங்கேறவில்லை.

பின்னர் சென்னை வந்ததும், அந்த நாடகத்தை "வாழ்வே வா'' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்யப்பட்டது. இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி. மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், படத்தின் பைனான்சியர் இறந்ததால், படம் பாதியில் நின்றுவிட்டது.

உதவி இயக்குனர்

இந்த நிலையில் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "காஞ்சித் தலைவன்'' படத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்தார். இந்த படத்தின் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக மகேந்திரனை எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார்.

இதுபற்றி மகேந்திரன் கூறுகையில், "என்னுடைய சினிமா பிரவேசத்துக்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம.ë என் கலைப்பணிக்கு அவர் வித்திட்டார்; உரமிட்டார்; நீர் வார்த்து வளரவிட்டார் என்பதை நான் என்றுமே மறக்கமாட்டேன்'' என்றார்.

"முள்ளும் மலரும்'' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் மகேந்திரன்

சிவாஜிகணேசன் நடித்த "தங்கப்பதக்கம்'' படத்திற்கு கதை-வசனம் எழுதி புகழ் பெற்ற மகேந்திரன், "முள்ளும் மலரும்'' என்ற படத்தை இயக்கி பிரபலமானார்.

1966-ம் ஆண்டு பாலன் பிக்சர்சார் "நாம் மூவர்'' என்ற படத்தை எடுத்தனர். இந்தப்படத்திற்கு மகேந்திரன் கதை எழுதினார். படம் வெற்றி பெற்றது.

29601.jpg

தொடர்ந்து அதே தயாரிப்பில் வெளியான "சபாஷ் தம்பி'', "பணக்காரப்பிள்ளை'' ஆகிய படங்களுக்கு மகேந்திரன் கதை எழுதினார். சிவாஜிகணேசன் நடித்த "நிறைகுடம்'' படத்திற்கும் கதை எழுதினார்.

"துக்ளக்'' துணை ஆசிரியர்

"நிறைகுடம்'' படம் நிறைவடைந்ததும், மறுநாள் சொந்த ஊருக்குப் போகத் தயாரானார், மகேந்திரன். அப்போது அவரைப்பார்க்க நடிகர் "சோ'' விரும்பினார். அவர் அழைப்பை ஏற்று, மகேந்திரன் சென்று பார்த்தார்.

"துக்ளக்'' என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிக்க இருப்பதாகவும், அதில் "போஸ்ட் மார்டம்'' என்ற தலைப்பில் சினிமா விமர்சனம் எழுதவேண்டும் என்றும் மகேந்திரனிடம் "சோ'' கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட மகேந்திரன், கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் துக்ளக்கில் பணிபுரிந்தார்.

"துக்ளக்''கில் பணியாற்றிய அனுபவம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-

"துக்ளக்கில் நான் பணியாற்றிய காலகட்டத்தில், என் மகள் டிம்பிளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றோம். டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப்பிறகு குழந்தை குணம் அடைந்தது.

இதைத்தொடர்ந்து, ஆசிரியர் "சோ'', நான் மற்றும் சிலர் சேர்ந்து திருப்பதிக்கு சென்றோம்.

அப்போது "சோ''வுக்கு தலை நிறைய முடி இருந்தது. திடீரென்று மொட்டை போட்டுக்கொண்டு வந்தார். "என்ன சார் இதெல்லாம்ப'' என்றேன்.

அதற்கு "சோ'' என்னிடம், "மகேந்திரன்! அன்றைக்கு உங்கள் குழந்தைக்கு ரொம்ப முடியலைன்னு ஆஸ்பத்திரியிலிருந்து போன் வந்தபோது, என் மேஜையில் இருந்த வெங்கடாஜலபதி படத்தைப் பார்த்து குழந்தைக்கு குணமானதும் மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டேன். அதை நிறைவேற்றினேன்'' என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு என் விழிகள் நனைந்தன. எப்பேர்ப்பட்ட உள்ளம் அவருக்கு என்று வியந்தேன்.''

இவ்வாறு மகேந்திரன் கூறினார்.

தங்கப்பதக்கம்

ஒருநாள் "சோ''வை பார்க்க நடிகர் செந்தாமரையும், சிவாஜி நாடக மன்ற இயக்குனருமான எஸ்.ஏ.கண்ணனும் வந்தனர்.

நடிகர் செந்தாமரை மகேந்திரனிடம் ஒரு நாடகம் எழுதித்தரும்படி கேட்டார். மிகவும் கண்டிப்பான போலீஸ் அதிகாரிக்கு ஒரு அயோக்கியன் மகனாக இருக்கிறான் என்று தொடங்கி கதையை சொன்னார் மகேந்திரன். உடனே அதை நாடகமாக எழுதித்தரும்படி செந்தாமரை கேட்டுக்கொண்டார்.

29602.jpg

"இரண்டில் ஒன்று'' என்ற பெயரில் 5 நாட்களில் நாடகத்தை எழுதி முடித்தார், மகேந்திரன். அந்த நாடகம் அரங்கேற்றமானது. எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்தார்.

நாடகத்தை பார்க்க வந்த சிவாஜி, "சிவாஜி நாடக மன்றம் மூலம் இந்த நாடகத்தை நடத்தலாம், அதில் எஸ்.பி.சவுத்ரியாக நான் நடிக்கிறேன்'' என்று கூறினார்.

"இரண்டில் ஒன்று'' என்ற பெயர் "தங்கப்பதக்கம்'' என்று மாற்றப்பட்டது. சிவாஜிகணேசன், எஸ்.பி.சவுத்ரியாக நடிக்க, மிïசிக் அகாடமியில் நாடகம் அரங்கேற்றப்பட்டது.

தொடர்ந்து வெற்றி நடைபோட்டு, 100-வது நாளாக நாடகம் நடந்தபோது, மகேந்திரனுக்கு சிவாஜிகணேசன் மோதிரம் அணிவித்தார்.

"தங்கப்பதக்கம்'' நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக எடுத்தது. கதை-வசனம் மகேந்திரனுடையது. பி.மாதவன் டைரக்ட் செய்தார்.

எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் சிவாஜி வாழ்ந்து காட்டினார். படம் மகத்தான வெற்றி பெற்றது. இந்தப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.

அதனைத் தொடர்ந்து "திருடி'' என்ற படத்திற்கு கதையும், "மோகம் முப்பது வருஷம்'' படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதினார் மகேந்திரன்.

ஆடுபுலி ஆட்டம், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷிமூலம், தையல்காரன், காளி, அவளுக்கு ஆயிரம் கண்கள், சக்கரவர்த்தி, சொந்தமடி சொந்தம், நம்பிக்கை நட்சத்திரம் ஆகிய படங்களுக்கு கதை, வசனமும், நாங்கள், அழகிய பூவே ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனமும், பருவமழை, பகலில் ஒரு இரவு, கள்ளழகர், கங்கா, ஹிட்லர் உமாநாத், சேலஞ்ச் ராமு (தெலுங்கு), தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு கதையும் எழுதினார், மகேந்திரன்.

முள்ளும் மலரும்

இந்த நிலையில் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் ஒரு புதிய படத்தைத் தயாரிக்க திட்டமிட்டார். அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை மகேந்திரனுக்கு கொடுத்தார்.

அண்ணன், தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து, உமா சந்திரன் எழுதிய நாவல் "முள்ளும் மலரும்.'' அதன் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை மகேந்திரன் ஏற்றார்.

படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக ஷோபா நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இசை: இளையராஜா. ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா.

"முள்ளும் மலரும்'' அனைவரையும் கவர்ந்த மெகா ஹிட் படமாக அமைந்தது. கதை-வசன கர்த்தாவாக இருந்த மகேந்திரன், இந்த ஒரே படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குனர் என்று புகழ் பெற்றார். அந்தக் காலக்கட்டத்தை நினைவு கூர்ந்த மகேந்திரன் கூறியதாவது:-

"நான் கதை-வசன கர்த்தாவாக இருந்தபோது மலையாளத்தில் கமலஹாசன் நடித்த "மதனோத்சவம்'' என்ற படம் வெளிவந்தது. அதை "பருவமழை'' என்ற பெயரில் தமிழில் "டப்'' செய்தார்கள். தமிழ்ப்பதிப்புக்கு என்னை வசனம் எழுத வைத்தவர், கமல்.

அதன் பிறகு கமல் நடித்த "மோகம் முப்பது வருஷம்'' என்ற படத்திற்கு நான் திரைக்கதை - வசனம் எழுதினேன்.

"முள்ளும் மலரும்'' படம் எடுக்கப்பட்டபோது, தயாரிப்பாளருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்து வைத்து படம் வெளிவர காரணமாக இருந்தவர், கமல்தான். இன்றுமë எனது நலனில் அக்கறை கொண்டவர்.

29603.jpg

"முள்ளும் மலரும்'' படத்தின் கதாநாயகன் காளி வேடத்தில் ரஜினியைத்தான் போடவேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் முதலில் வேணு செட்டியார் அதை ஏற்கவில்லை. ஆனால் நான் பிடிவாதமாக இருந்து ரஜினியை நடிக்க வைத்தேன்.

அக்காலக்கட்டத்தில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் தனித்தன்மையுடன் நடித்துக் கொண்டிருந்தாலும், அவருக்குள்ளிருந்த அற்புதமான குணச்சித்திர நடிப்பாற்றலை நான் தெரிந்து வைத்திருந்தேன். காளி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து, எல்லோரையும் வியக்க வைத்தார் ரஜினி.''

இவ்வாறு மகேந்திரன் கூறினார்.

மகேந்திரன் டைரக்ஷனில் உருவான மிகச்சிறந்த கலைப்படைப்பு "உதிரிப்பூக்கள்''

மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய "உதிரிப் பூக்கள்'', மிகச்சிறந்த கலைப்படைப்பாக இன்றும் கருதப்படுகிறது.

"முள்ளும் மலரும்'' படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, தங்களுக்கு ஒரு படத்தை டைரக்ட் செய்து கொடுக்கும்படி கேட்டு மகேந்திரனை பட அதிபர்கள் மொய்த்தார்கள்.

ஆனால் மகேந்திரனோ, சினிமாத்தனம் இல்லாமல், யதார்த்தமான கதை ஒன்றை படமாக்க விரும்பினார். இதற்காக, தன் மகள் பெயரால் "டிம்பிள் கிரியேஷன்ஸ்'' என்ற படக்கம்பெனியை தொடங்கினார்.

புதுமைப்பித்தன்

மகேந்திரன் தனது மாணவ பருவத்திலேயே கல்கி, புதுமைப்பித்தன், த.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை விரும்பிப்படித்தவர்.

29701.jpg

"சிறுகதை மன்னர்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், அற்புதமான சிறுகதைகள் பலவற்றை எழுதியிருந்தபோதிலும், நாவல் எதையும் எழுதவில்லை. "சிற்றன்னை'' என்ற குறுநாவல் ஒன்றை மட்டுமே எழுதினார். ஆனால் அவருடைய சிறுகதைகள் அடைந்த வெற்றியை அந்த குறுநாவல் எட்டவில்லை.

ஆயினும், அந்த குறுநாவலில் வரும் ராஜா, குஞ்சு என்ற இரு குழந்தைகளும் மகேந்திரனின் மனதைக் கவர்ந்தனர். அவர்களை வைத்தே, புதிதாக ஒரு கதையை அவர் உருவாக்கினார். அதுதான் "உதிரிப்பூக்கள்.''

டிமëபிள் கிரியேஷனுக்காக, இந்தப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை தன் நண்பர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார்.

அஸ்வினி

உதிரிப்பூக்களின் கதாநாயகியாக நடிக்க மெலிந்த உடலும், அகன்ற விழிகளும், கூர்மையான நாசியும் உள்ள பெண்ணைத் தேடி பெங்களூர் சென்றார். அங்கு அஸ்வினி கிடைத்தார்.

அவருக்கு ஜோடியாக நடிக்க, முரட்டு மíசை கொண்ட விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மற்றும் சரத்பாபு, மதுமாலினி (முமëபை), சாருலதா, சிறுவன் ராஜா, சிறுமி அஞ்சு (அறிமுகம்), நடிகை மனோரமாவின் மகன் பூபதி ஆகியோர் இதில் நடித்தனர். கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அறிமுகமானார்.

"முள்ளும் மலரும்'' படத்துக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா மிகவும் `பிசி'யாகி விட்டதால், ஒளிப்பதிவாளராக அசோக்குமார் அமர்த்தப்பட்டார். இசை அமைப்பு: இளையராஜா. எடிட்டிங்: பி.லெனின் (டைரக்டர் பீம்சிங்கின் மகன்)

"படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன், புதுமைப்பித்தன் குடும்பத்தாரை சந்தித்து, மூலக்கதைக்காக ஒரு தொகையைக் கொடுங்கள்'' என்று பட அதிபரிடம் மகேந்திரன் கூறினார்.

பட அதிபர் தயங்கினார். "சிற்றன்னை கதைக்கும், உதிரிப்பூக்கள் கதைக்குமë எந்த சம்பந்தமும் இல்லையே! எதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும்'' என்று கேட்டார்.

29702.jpg

அதற்கு மகேந்திரன், "சிற்றன்னை கதையை நான் படிக்காமல் இருந்திருந்தால், இந்த உதிரிப்பூக்கள் கதையே உருவாகியிருக்காது. எனவே, புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு உரிய மரியாதையைச் செய்ய வேண்டும்'' என்றார்.

அதன்பின் பட அதிபரும், மகேந்திரனும் புதுமைப்பித்தன் குடும்பத்தாரை சந்தித்து, கதைக்கு உரிய தொகையை கொடுத்தனர்.

பாடல் பதிவு

கண்ணதாசன் எழுதிய "அழகிய கண்ணே, உறவுகள் நீயே'' பாடலை ஜானகி பாட, பாடல் பதிவுடன் பட பூஜை நடந்தது.

பூஜைக்கு வந்த திரை உலகத்தினர், அங்கு நின்று கொண்டிருந்த அஸ்வினியைப் பார்த்ததும், "போயும் போயும் இந்தப் பெண்ணா கதாநாயகி'' என்று நினைத்தார்கள். ஏனென்றால், சினிமா கதாநாயகிகளுக்கு உரிய எந்தக் கவர்ச்சியும் இல்லாத சாதாரண குடும்பப் பெண் போல அவர் இருந்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி, வெள்ளிப்பாளையம் கிராமங்களில் படப்பிடிப்பு நடந்தது.

பொதுவாக, இயற்கையாக - யதார்த்தமாக எடுக்கப்படும் கலைப்படங்கள் ("ஆர்ட் பிலிம்'') ஆமை வேகத்தில் நகர்வதும், வசூலில் தோல்வி அடைவதும் வழக்கம். படம் யதார்த்தமாக இருக்கவேண்டும்; அதே சமயம் அனைவரும் ரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார், மகேந்திரன்.

இந்த விஷப்பரீட்சையில் அவர் வெற்றி பெற்றார்.

"அற்புதமான கலைப்படைப்பு'' என்று பத்திரிகைகள் விமர்சனம் எழுதின.

"நான் பார்த்த உன்னதமான உலகத் திரைப்படங்களில் ஒன்று - உதிரிப்பூக்கள்'' என்றார், "வீணை'' எஸ்.பாலசந்தர்.

இவ்வாறு பாராட்டுகளை குவித்த "உதிரிப்பூக்கள்'', வசூலையும் அள்ளிக் குவித்தது. படம் 25 வாரங்கள் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.

19-10-1979-ல் வெளியான "உதிரிப்பூக்கள்'', இன்றளவும் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற படங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான தங்கர்பச்சான், "தமிழில் இதுவரை வெளியாகியுள்ள படங்களில் தலைசிறந்த படம் உதிரிப்பூக்கள்தான்'' என்று கூறியுள்ளார்.

30 நாட்களில் உருவான படம்

"உதிரிப்பூக்கள்'' படம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-

"என் ரசனைக்கேற்ற விதத்தில் ஒவ்வொரு காட்சியையும் வித, விதமாக எடுத்தேன். 30 நாட்களில் படத்தை எடுத்து முடித்தேன்.

29703.jpg

உதிரிப்பூக்கள் படத்தை எம்.ஜி.ஆர். பார்த்தார். என்னை அருகில் வைத்துக்கொண்டு படம் முடிந்ததும் என் தோளில் கை போட்டபடி காருக்குள் சென்று அமைதியாக உட்கார்ந்தார். நான் மனம் பொறுக்காமல், "படத்தைப்பற்றி எதுவும் சொல்லாமல் போகிறீர்களே'' என்றேன்.

அவரோ என் கரம் பற்றி தழுதழுத்த குரலில் "மகேந்திரன்! ரொம்ப வருஷங்களுக்குப்பிறகு இன்றுதான் நான் நிம்மதியாக தூங்கப் போகிறேன்'' என்றார்.

அவர் அப்படிச் சொன்னதன் பொருள் இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

உதிரிப்பூக்கள் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அந்தப்படத்தைப் பற்றி மறக்காமல் பாராட்டுகிறார்கள். இதைத்தான் உண்மையான வெற்றி என்று கருதுகிறேன். இதற்கெல்லாம் நான் நன்றி சொல்ல வேண்டியது, "சிற்றன்னை'' படைத்த அமரர் புதுமைப்பித்தன் அவர்களுக்கே.

எனினும், படம் வெளியானபோது நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு இலக்கிய வட்டம் என்னைப் பழித்துக் கடிதம் எழுதியது. "படத்தின் தொடக்கத்தில் - டைட்டிலில் மூலக்கதை அமரர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்று போட்டிருக்கிறாய்... அவர் பெயரை வைத்து வியாபாரம் நடத்திவிட்டாய்'' என்பதே அக்கடிதம்.

ஒரு நாவலை திரைக்கதையாக்கி படம் எடுப்பதில் - வெற்றி காண்பதில் வாழ்த்தும், வசவும் சேர்ந்துதான் வரும். நான் இரண்டையுமே ஒன்றாக ஏற்கிறேன்.

வெற்றி - தோல்வி ஏன்?

அகிலன் அவர்களின் நாவல் "பாவை விளக்கு'' படமாக்கப்பட்டு தோல்வி கண்டது. கல்கியின் "பார்த்திபன் கனவு'' தோற்றது. கல்கியின் "கள்வனின் காதலி'' படமாகி பெரிய வெற்றி காணவில்லை. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "தில்லானா மோகனாம்பாள்'' மாபெரும் வெற்றி கண்டது. "மலைக்கள்ளன்'' நாவல் படமாகி, இமாலய வெற்றி பெற்றது.

ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்'' பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் மிகச்சிறந்த படமாக வெற்றி கண்டது.

தோல்விக்கான காரணம் - நாவலை அப்படியே படமாக்கியது. வெற்றிக்கான காரணம் - நாவலை அப்படியே படமாக்காமல் சினிமாவுக்கு ஏற்றபடி பல மாற்றங்கள் செய்து, பொருத்தமான நடிகர் தேர்வுடன் படமாக்கியதே!

`படிக்கிற' ஊடகம் வேறு; `பார்க்கிற' ஊடகம் வேறு.

இவ்வாறு மகேந்திரன் குறிப்பிட்டார்.

(புதுமைப்பித்தன் எழுதாத கதையை அவர் பெயரில் படமாக்கினார் என்பது, மகேந்திரன் மீதான குற்றச்சாட்டு. அதே காலகட்டத்தில், மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு படம், தமிழில் "டப்'' செய்யப்பட்டு "சாவித்திரி'' என்ற பெயரில் வெளிவந்தது. கதாநாயகியாக மேனகா நடித்திருந்தார். புதுமைப்பித்தன் எழுதிய "கலியாணி'' என்ற நீண்ட சிறுகதையை அப்படியே தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் கதை புதுமைப்பித்தனுடையது என்று அறிவிக்கப்படவில்லை!)

மகேந்திரனின் "நெஞ்சத்தைக் கிள்ளாதே'': மோகன் -சுகாசினி அறிமுகம்

மகேந்திரன் இயக்கிய "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தில் நடிகர் மோகன், சுகாசினி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

பூட்டாத பூட்டுகள்

"உதிரிப்பூக்கள்'' படத்தைத் தொடர்ந்து, மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்த படம் "பூட்டாத பூட்டுக்கள்.''

கணவனை பிரிந்து காதலனோடு ஓடிய பெண், கர்ப்பமான நிலையில் காதலனை விட்டுவிட்டு மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ திரும்பி வருகிறாள். கணவன் அவளை ஏற்றுக்கொள்கிறான் என்பதுதான் கதை.

கதையை ரசிகர்கள் ஏற்காததால், படம் தோல்வியைத் தழுவியது.

நெஞ்சத்தைக் கிள்ளாதே

தேவி பிலிம்சுக்காக "நெஞ்சத்தை கிள்ளாதே'' என்ற படத்தை எழுதி, இயக்கினார், மகேந்திரன்.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் மோகன், நடிகை சுகாசினி ஆகியோர் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்கள்.

பாலுமகேந்திரா டைரக்ட் செய்த "கோகிலா'' என்ற கன்னடப்படத்தில், கமலஹாசனின் நண்பராக நடித்தவர், மோகன். பெங்களூருக்குச் சென்று அவரை அழைத்து வந்து நடிக்க வைத்தார், மகேந்திரன்.

29801.jpg

கதாநாயகியாக ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்த விரும்பினார், மகேந்திரன். ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் ஒளிப்பதிவாளருக்கான பயிற்சி பெற்று வந்த சுகாசினியை, கதாநாயகியாக்க முடிவு செய்தார்.

ஏற்கனவே, சுகாசினியின் தந்தை சாருஹாசன், "உதிரிப்பூக்கள்'' படத்தில் நடித்தபோது, அவரைப் பார்க்க சைக்கிளில் சுகாசினி வருவார். அப்போது அவரை மகேந்திரன் பார்த்திருக்கிறார். சுகாசினியின் பட பட பேச்சு, குறும்புத்தனம், சிரிப்பு, கிண்டல் எல்லாவற்றையும் மகேந்திரன் கவனித்திருக்கிறார். "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தின் கதாநாயகியாக நடிக்க அவரே பொருத்தமானவர் என்று தீர்மானித்தார்.

நடிக்க மறுப்பு

ஆனால், படத்தில் நடிக்க முடியாது என்று சுகாசினி மறுத்துவிட்டார். "எதிர்காலத்தில் பெரிய ஒளிப்பதிவாளராக வரவேண்டும் என்பதுதான் என் லட்சியம். என்னை விட்டு விடுங்கள்'' என்று கூறினார்.

ஆனால், மகேந்திரன் விடவில்லை. சாருஹாசனிடம் பேசினார். தொடர்ந்து வற்புறுத்தவே, "இந்த ஒரே படம்தான். அதுவும் படப்பிடிப்பு நடக்கும்போது, எனக்கு நடிக்க முடியாது என்று தோன்றினால் இடையிலேயே விலகிக்கொண்டு விடுவேன். அதற்கு ஒப்புக்கொண்டால், இந்த ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கிறேன்'' என்று சுகாசினி சம்மதித்தார்.

இளையராஜா இசை அமைக்க, அசோக்குமார் ஒளிப்பதிவு செய்ய, படப்பிடிப்பு தொடங்கியது.

அதிகாலை பனி மூட்டத்தில், "பருவமே புதிய ராகம் பாடு'' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, மோகனும், சுகாசினியும் "ஜாக்கிங்'' ஓடும் காட்சிதான் முதன் முதலாக படமாக்கப்பட்டது.

சுகாசினி விருப்பம் இல்லாமல் நடிக்க வந்தபோதிலும் சிறப்பாக நடித்தார். எல்லோரும் பாராட்டவே, உற்சாகத்துடன் நடித்தார்.

ஒரு வருடம் ஓடியது

12-12-1980-ல் வெளியான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. சென்னையில், தொடர்ந்து ஒரு வருடம் ஓடியது.

அந்த ஆண்டின் சிறந்த படங்களையும், கலைஞர்களையும் தேர்வு செய்யும் குழுவின் நடுவராக இருந்த பிரபல இயக்குனர் வி.சாந்தாராம், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தின் இறுதி காட்சியில் கதாநாயகி தனது தாலியை பிடித்துக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி ஓடும் ஓட்டத்தையும் படத்தின் முன் பகுதியில் வரும் சுகாசினியின் "ஜாக்கிங்'' ஓட்டத்தையும், "இண்டர்கட்'' முறையில் மாறி, மாறி காட்டி இருப்பதை பார்த்து பாராட்டினார்.

"நெஞ்சத்தைக் கிள்ளாதே'' 1980-ம் ஆண்டின் சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது "பிரசாத்'' ஸ்டூடியோ எஸ்.ராமநாதனுக்கும் கிடைத்தது.

29802.jpg

1982-ல் மாஸ்கோவில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் திரையிடப்பட்டது. ரஷியா அரசாங்கம் இந்த படத்தை வாங்கி அந்த நாட்டின் தியேட்டர்களில் திரையிட்டது.

நண்டு

தொடர்ந்து மெட்டி, நண்டு, கண்ணுக்கு மை எழுது, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து, கைகொடுக்கும் கை ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி அப்படங்களை டைரக்ட் செய்தார், மகேந்திரன்

இதில் "நண்டு'', சிவசங்கரி எழுதிய பிரபல நாவல். பொதுவாக, நாவலை திரைக்கதையாக மாற்றி அமைப்பதில் பெரிய வெற்றி கண்ட மகேந்திரன், "நண்டு'' விஷயத்தில் தோல்வி கண்டார். இதற்குக் காரணம், கதையின் பல காட்சிகள் உத்தரபிரதேசத்தில் நடப்பதாக இருந்ததால், இந்தி வசனங்கள் நிறைய இடம் பெற்று இருந்ததுதான். அஸ்வினி, சுரேஷ் நடித்த இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.

29803.jpg

இந்தப்படம் ரிலீஸ் ஆனபோது மகேந்திரன் டெல்லியில் இருந்தார். இந்தி வசனம் வந்த காட்சிகளின்போது, ரசிகர்கள் கூச்சல் போட்டனர். எனவே மகேந்திரனிடம் ஆலோசனை கேட்காமல் பட அதிபர் அவசரம் அவசரமாக இந்தி வசனங்களை தமிழில் `டப்' செய்தார். அப்படியும் படம் ஓடவில்லை.

ஆயினும், கடைசி நாளில் தியேட்டர்களில், படத்தைப் பார்க்க பெண்கள் கூட்டம் அலைமோதியது.

"சரியானபடி விளம்பரம் செய்திருந்தால், இந்தப்படம் வெற்றி அடைந்திருக்கும்'' என்பது மகேந்திரனின் கருத்து.

**********************

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி- ஸ்ரீதேவி போட்டி போட்டு நடித்த "ஜானி''

"முள்ளும் மலரும்'' படத்துக்குப் பிறகு மகேந்திரன் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடித்த படம் "ஜானி.''இதில் அவருக்கு இரட்டை வேடம். அவரும், ஸ்ரீதேவியும் சிறப்பாக நடித்தனர்.

ரஜினிகாந்த் பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்றாலும், "ஜானி''யில் மாறுபட்ட இரட்டை வேடம். ஒருவர் கதாநாயகன். மற்றொருவர் மகா கஞ்சனான முடிவெட்டும் தொழிலாளி.

ஸ்ரீதேவி

இந்தப் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார்.

அதில் அவர் பாடகியாக வருவார். அதனால் பல இனிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன. (இசை: இளையராஜா.)

ரஜினியும், ஸ்ரீதேவியும் போட்டி போட்டு சிறப்பாக நடித்தனர்.

29901.jpg

1980 ஆகஸ்டு 15-ந்தேதி வெளிவந்த "ஜானி'' வெற்றிப்படமாக அமைந்தது.

கை கொடுக்கும் கை

இதன் பிறகு மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் "கை கொடுக்கும் கை.''

பிரபல டைரக்டர் புட்டண்ணா, கன்னடத்தில் "கதா சங்கமம்'' என்ற படத்தைத் தயாரித்தார். ஒரே படத்தில் மூன்று கதைகள் இடம் பெற்றன.

மூன்றாவது கதை "முனித்தாய்'' என்பதாகும். கதாநாயகி பார்வை இல்லாதவள். கதாநாயகன் அவளை விரும்பி மணக்கிறான். பார்வை இல்லாத பெண்ணை, வில்லன் கற்பழித்து விடுகிறான்... இப்படிப்போகிறது கதை.

இந்தக் கதையை படமாக்க "ஸ்ரீராகவேந்திராஸ்'' பட நிறுவனம் முன்வந்தது.

கன்னடப் படத்தைப் பார்த்த மகேந்திரன், "இந்தக் கதையில் இரண்டு முக்கியமான மாறுதல்களை செய்ய வேண்டும். பார்வை இல்லாத கதாநாயகி குளிப்பதை ஒருவன் ஒளிந்திருந்து பார்க்கிறான். அதை நீக்கிவிடவேண்டும். கதாநாயகி கற்பழிக்கப்படுகிறாள் என்பதையும் மாற்ற வேண்டும். ரஜினிகாந்த் இப்போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். படத்தில் அவர் மனைவியாக நடிப்பவர் கற்பழிக்கப்படுவதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். இந்த மாறுதல்களை செய்ய நீங்கள் ஒப்புக்கொண்டால், நான் டைரக்ட் செய்கிறேன்'' என்றார்.

இதற்கு ரஜினிகாந்தும், பட அதிபரும் ஒப்புக்கொண்டனர்.

கடைசி நேர மாற்றம்

ஆனால் கடைசி நேரத்தில், "ஒரிஜினல் கதைப்படியே, கதாநாயகி கற்பழிக்கப்படுவதுபோல் காட்சியை எடுக்கவேண்டும்'' என்று பட அதிபர் வற்புறுத்தினார். ரஜினிகாந்தின் விருப்பமும் இதுதான் என்று ஒரு வெடிகுண்டை தூக்கிப்போட்டார்.

மகேந்திரன் வேறு வழியின்றி, பட அதிபர் சொன்னபடி படத்தை முடித்துக்கொடுக்க சம்மதித்தார். "இந்தப்படம் பெரிய தோல்வி அடையும். அந்த தோல்வியில் இருந்து நான் மீள்வதற்கு ரொம்ப காலம் ஆகும்'' என்று பட அதிபரிடம் மனம் நொந்து கூறினார்.

29902.jpg

பின்னர் ரஜினிகாந்திடம் மகேந்திரன் தனியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, "கன்னடப்படத்தில் உள்ளபடியே முடிவை வைக்கும்படி பட அதிபரிடம் கூறினீர்களா?'' என்று கேட்டார்.

"நான் அப்படிச் சொல்லவில்லையே!'' என்றார், ரஜினிகாந்த்.

பட அதிபர், தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, ரஜினிகாந்த் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பதை மகேந்திரன் தெரிந்து கொண்டார்.

"கை கொடுக்கும் கை'' 1984 ஜுன் 14-ந்தேதி வெளிவந்தது. மகேந்திரன் சொன்னதுபோலவே அப்படம் தோல்வி அடைந்தது.

சாசனம்

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் "சாசனம்'' என்ற படம், மகேந்திரனின் கதை, வசனம், டைரக்ஷனில் உருவாகியிருக்கிறது. செட்டிநாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது.

அரவிந்த்சாமி, கவுதமி, ரஞ்சிதா, `தலைவாசல்' விஜய் ஆகியோர் நடித்து உள்ளனர். 1997-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது.

ஆனால் இன்னும் படம் வெளியாகவில்லை. இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-

"நல்ல சினிமாவிற்கு என்னை அர்ப்பணிப்பதே என்றைக்கும் எனது சாசனமாக இருக்கும்

  • தொடங்கியவர்

இந்த சாசனம் படத்திற்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும். இதில் நடித்திருக்கும் அரவிந்த்சாமிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரஞ்சிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் நிச்சயம் கிடைக்கும்.''

இவ்வாறு மகேந்திரன் கூறினார்.

குட்பை, மிஸ்டர் சவுத்ரி

"தங்கப்பதக்கம்'' திரைப்படத்தின் தொடர்ச்சியாக மகேந்திரன் மற்றொரு கதையை எழுதினார். அதுதான் `குட்பை, மிஸ்டர் சவுத்ரி.''

ஓய்வு பெற்ற பின்பு எஸ்.பி.சவுத்ரி தனது பேரனை எப்படி ஆளாக்குகிறார், தன்னை விட மிகச்சிறந்த போலீஸ் அதிகாரியாக அவனை எப்படி உருவாக்குகிறார் என்பதுதான் கதை. இறுதியில் பேரன் அடையும் மகத்தான பெருமையை பார்த்த நிலையில் எஸ்.பி.சவுத்ரி எப்படி கம்பீரமாக உயிர் துறக்கிறார் என்பதுதான் உச்சகட்டம்.

இந்தக் கதையை திரைப்படமாக சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. பின்னர் கைவிடப்பட்டது.

குறும்படம்:

`1996' என்ற குறும்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் மகேந்திரன். 30 நிமிடங்கள் ஓடும் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்கிறது.

திரைப்பட அனுபவங்கள்

தனது திரைப்பட அனுபவம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-

நான் திட்டமிட்டு திரைப்படத் துறைக்கு வரவில்லை என்றாலும்கூட எனக்கு கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. அந்தக் கனவிலிருந்துதான் என் படங்கள் உருவாயின.

இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு, அப்படிப்பட்ட கனவா என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப் பார்த்துக் கொள்கிறேன்.''

மேற்கண்டவாறு கூறிய மகேந்திரன், திரை உலகில் தன்னைக் கவர்ந்த கலைஞர்கள் சிலர் பற்றி கூறியதாவது:-

சிவாஜிகணேசன்: உலக அதிசயங்களில் ஒன்றல்ல அவர்; எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட உலக அற்புதம். தமிழ் சினிமா தன் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ள அவதரித்த அற்புதக் கலைஞர். அந்த நடிப்புலக மாமேதை, நான் எழுதிய வசனத்தை பேசினார். என் போன்றவனுக்குத்தான் எத்தனை பாக்கியம், பெருமை!

சத்யஜித்ரே: தனது உன்னதமான திரைப்படங்கள் மூலம், உலக சினிமா வரலாற்றில் இந்தியாவுக்கு மிக உயர்ந்த அரியாசனத்தைத் தேடித்தந்தவர்.

டைரக்டர் ஸ்ரீதர்: இன்றைய இயக்குனர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த முன்னோடி. ஏராளமான புதுமைகளை தனது ஒவ்வொரு படத்திலும் அரங்கேற்றியவர்.

கே.பாலசந்தர்: தமிழ் சினிமாவில் இவர் சாதித்த சாதனைகள் அத்தனையும், அனைவருக்கும் பாடப்புத்தக்கள். ராசியான மோதிரக் கை கொண்ட இவரின் கண்பட்ட அத்தனை கலைஞர்களும் இன்று தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாரதிராஜா: பிற்காலத் தமிழ் சினிமாவில் புதிய களம் கண்டு மாபெரும் வெற்றி வாகை சூடிய ராஜா. அவர் தன் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய நதியை ஓடவைத்திட அந்த நதியில்தான் இன்று வரை எத்தனையோ டைரக்டர்கள் படகோட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவை, மண் வாசனையோடு தலைநிமிர வைத்தவர் பாரதிராஜாதான்.''

மேற்கண்டவாறு மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம்

மகேந்திரனின் மனைவி பெயர் ஜாஸ்மின்.

இவர்களது மகன் ஜான். விஜய் நடித்த "சச்சின்'' படத்தை இயக்கியவர் இவர்தான்.

டிம்பிள், அனுரீட்டா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

"மெட்டி'', "நண்டு'', "எனக்கு நானே எழுதிக்கொண்டது'' முதலான புத்தகங்களை மகேந்திரன் எழுதி உள்ளார். "உதிரிப்பூக்கள்'' திரைக்கதை-வசனம், புத்தகமாக வெளிவந்துள்ளது.

நன்றி: மாலை மலர்

ஆர்ப்பாட்டமில்லாத இயக்கம் அழகான வசனநடை யதார்த்தமான கதைப் போக்கு என்று தன்னை நிரூபித்து தமிழ் சினிமா வரலாற்றில் தனது பெயரையும் பொன்னெழுத்துக்களால் பதிய வைத்தவர் இயக்குனர் மகேந்திரன். அந்த அற்பதக் கலைஞனின் வாக்குமூலத்தை இங்கு இணைத்த அஜிவன் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.