Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோசமான திரைப்படத்திற்கான எதிர்மறை விமர்சனம் - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோசமான திரைப்படத்திற்கான எதிர்மறை விமர்சனம் - யமுனா ராஜேந்திரன்

film_CI.jpg

உலக வரலாற்றில் செப்டம்பர் 11 என்பது உலகின் அரசியல் வரைபடத்தை மாற்றிய ஒரு நாள். அன்றுதான் நியூயார்க்கின் இரட்டைக் கட்டிடங்கள் சரிந்து வீழ்ந்தன. ஈராக், ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து அரபு நாடுகளில் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வது எனும் திட்டம் அதன் பின்புதான் ஜோர்ஜ் புஸ்ஸினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அதே செப்டம்பர் 11 ஆம் திகதிதான், பணிரெண்டு ஆண்டுகளின் பின் எகிப்தில் அமெரிக்கத் தூரதகத்திற்கு முன்பாக சகோதரத்துவ இஸ்லாம் இயக்கம் தீர்க்கதரிசி முகமதுவுக்கு எதிரான இன்னசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் படத்திற்கு எதிரான கண்டன ஆரப்பாட்டத்தை நடத்தியது. அதே செப்டம்பர் 11 ஆம் திகதிதான் லிபியாவின் பென்காசியிலும் அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலில் கிறிஸ்தொபர் ஸ்டீவன்ஸ் எனும் அமெரிக்கத் தூதரும் பிற மூன்று பாதுகாப்பு அதிகாரிகளும் கொல்லப்பட்டார்கள்.

தொடர்ந்து துனீசியா, யேமான், ஈரான் போன்ற அரபு நாடுகளிலும் அமெரிக்காவுக்கு எதிரான கண்டனப் போராட்டங்கள் பரவின. அரபு நாடுகளில் எழுந்த இந்தப் போராட்ட அலைகள் மேற்கத்திய நாடுகளிலும் இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் பரவின. அது சென்னையில் அமெரிக்கத் தூதரகத்தின் முன்பான ஆர்ப்பாட்டமாகவும் விரிவடைந்தது. அனைத்துக்கும் மேலாக இதே செப்டம்பர் மாதத்தில்தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வெப்பக்காற்று அமெரிக்காவில் வீசிக்கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வாக்காளர்களிடம் தமது அமெரிக்க தேசபக்தியை மெய்ப்பிக்க வேண்டிய நேரம் இது.

இன்னெசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி என்று சொல்லப்படுவதன் பூர்வீகம் எது? பதினான்கு நிமிடமும் 30 நொடிகளும் வரும் இக்காட்சிகள் இரண்டரை மணி நேர முழுநீளப்படத்தின் சில காட்சிகள் எனச் சொல்லப்படுகிறது. சில தனிப்பட்ட திரையிடல்களாக முழுநீளப்படமும் ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இவை இரண்டுமே உறுதிப்படுத்திக் கொள்ளப்படமுடியாத தகவல்களாகவே உள்ளன. இத்திரைப்படத்தை இயக்கித் தயாரித்தவர் அமெரிக்காவில் வாழும் நகுலா பெசிலி நகுலா எனும் எகிப்திய காப்டிக் கிறித்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 2011 மார்ச் மாதம் கிறித்தவ தேவாலயமொன்றில் புனித குரானை எரித்த டெரி ஜோன்ஸ் எனும் கிறித்தவ அடிப்படைவாதப் பாதிரியார் இத்திரைப்படத்தின் உருவாக்கத்தில் பங்காற்றினார் என்பதும் வெளியாகி இருக்கிறது. இவரது குரான் எரிப்பின் பின்எழுந்த ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள. முன்னதாக தம்மை யூதர் என அடையாளப்படுததிய திரைப்பட இயக்குனர் பெசிலி, திரைப்படத்திற்கான நிதியுதவியை பல்வேறு யூத அமைப்புக்கள் செய்தன என அறிவித்தார். பிற்பாடு தனது மனைவி திரைப்படத்திற்கான செலவினத்தை வழங்கினார் என அறிவித்தார்.

பெசிலி வங்கிக் கணக்கு மோசடி ஒன்றில் 18 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றவர் எனவும், அவர் 2010-2011 ஆம் ஆண்டுகளில் சிறையில் இருந்த காலத்திலேய திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதினார் எனவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இன்னெசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் எனும் திரைப்படத்தின் முழுமையான திரைக்கதை இப்போது கிடைக்கிறது. திரைக்கதை த டெசர்ட் வாரியர்ஸ் - பாலைவன வீரர்கள் எனும் பெயரிலேயெ எழுதப்பட்டிருக்கிறது. திரைக்கதையின் பிரதானமான பாத்திரம் ஜோர்ஜ் எனவே இருக்கிறது. திரைக்கதையின்படி எகிப்தில் வாழும் ஒரு மருத்துவர் இஸ்லாமியர் ஒருவருடன் சமப்பாலுறவு கொண்டுவிட்டார் எனும் சந்தேகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் குழுவொன்று அவரது மருத்துவமனையை எரிக்கும் நிகழ்விலிருந்து கதை துவங்குகிறது. மருத்துவமனையைத் தகர்க்கவரும் கும்பல் எதிரில் தட்டுப்படும் கிறித்தவப் பெண்ணை வாளால் வெட்டிக்கொல்கிறது. இஸ்லாமிய மௌல்வி ஒருவர் அனைத்தையும் எரித்துப் பொசுக்கும்படி கும்பலுக்குக் கட்டளையிடுகிறார். சம்பவ இடத்துக்கு வரும் எகிப்திய போலீஸ் மருத்துவரைக் காப்பாற்றாமல் கலவரக்காரர்களைச் சூறையாட அனுமதிக்கிறது….

இந்த இடத்தில் இடையீடாக ஒன்றை நாம்தெளிவபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகையரின் நேர்காணல்களின்படி, படப்பிடிப்பின்போது பேசப்பட்ட அனைத்து வசனங்களும் நீக்கப்பட்டு முற்றிலும் வேறான வசனங்கள் பிற்பாடு டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. வெண்திரையின் பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்திலும் பிற்பாடு பாலைவனம் பின்னணிக் காட்சியாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஜோர்ஜின் கதை முழுமையாக இப்போது தீர்க்கதரிசி முகமதுவின் கதையாக மாற்றப்பட்டுவிடுகிறது. இது எதுவுமே தமக்குத் தெரியாமல் நிகழ்ந்திருக்கிறது என்பதனை திரைப்படத்தில் பங்குபற்றிய அனைத்துக் கலைஞர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.

….முதல் காட்சியை அடுத்த காட்சியில் மருத்துவரின் வீட்டில் அவர்களது வளர்ந்த மகள்கள், ஏன் இஸ்லாமியர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் எனக் கேட்கிறார்கள். அதற்குப் பதிலுரைக்கும் மருத்துவர் ஜோர்ஜ் என்பவரின் பாலைவனக் கதையைச் சொல்கிறார். அது தீர்க்கதரிசி முகமதுவின் வாழ்க்கைக் கதை. அடுத்தடுத்த காட்சிகளில் யூதர்களைக் கொல்லுமாறும், இஸ்லாமியர் அல்லாதவர்களைக் கொல்லுமாறும், குழந்தைகளைப் பெண்களை வெட்டிக் கொல்லுமாறும், சொத்துக்களைக் கொள்ளையிட்டுப் பகிர்ந்து கொள்ளுமாறும் தீர்க்கதரிசி முகமது தமது சீடர்களுக்கு ஆணையிடுகிறார். ஏழு வயதுச் சிறுமியுடன் அவர் பாலுறவு கொள்கிறார். அவரது சீடர்கள் தீர்க்கதரிசி முகமது சமப்பாலுறவாளர் எனவும் குழந்தையை வன்புணர்பவர் எனவும் தமக்குள் பேசிக்கொள்கிறார்கள். தீர்க்கதரிசி முகமதுவை இரு பெண்கள் தமது காலணிகளைக் கழற்றி துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள். மனைவியின் கைகளைக் கயிற்றால் பிணைத்துவிட்டு அவரது கண்ணnதிரில் தீர்க்கதரிசி முகமதுவின் எதிரியொருவர் நீண்ட வாளினால் குத்திக் கொலை செய்யப்படுகிறார். திரையெங்கும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பினுள், அழிவினுள் தீர்க்கதரிசி முகமதுவின் தலைதெரிய படம் முடிகிறது.

முற்றிலும் ஆத்திரமூட்டும் நோக்கில் உருவாக்கப்பட்ட, எந்தவிதமான கலை நேர்த்தியும் அற்ற, மோசடிகளால் நிரம்பிய படஉருவாக்கமும் திரைக்கதையும் கொண்டதாக இந்த 14 நிமிடம் 30 நொடிக் காட்சிகள் இருக்கின்றன. இஸ்லாமிய வெறுப்புக் கண்ணோட்டத்துடன், கிறித்தவ அடிப்படைவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் இது என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.

திரைப்படத்திற்கான எதிர்ப்பு என்பது அரபுபு புரட்சியின் அலைகள் சற்றே ஓய்ந்திருக்கிற எகிப்திலும், துனீசியாவிலும், லிபியாவிலும்தான் முதலில் தோன்றின. லிபிய அரசு பென்காசி நகரில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க தூதரின் மரணத்திற்கு அமெரிக்காவிடம் மன்னிப்புக்கோரியது. தமது தூரதகத்தைக் காக்க உடனடியாக தனது கடற்படைக் கப்பலொன்றை ஒபாமா பென்காசிக்கு அனுப்பினார். கொலையாiளிகளைத் தேடிக்கண்டுபிடித்துத் தண்டிப்போம், அமெரிக்காவிடம் விளையாட எவரையும் அனுமதிக்க மாட்டோம் என ஜோர்ஜ் புஸ் பாணியில் அவர் தேசபக்த அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார்.

எகிப்திய, துனீசிய அரசுகள் லிபியா போன்ற சம்பவங்கள் தமது நாடுகளில் நடைபெறாமல் தடுத்தன. அமெரிக்காவின் பரம்பரைக் கூட்டாளி நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், துருக்கி போன்றவற்றில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறாமல் அந்த அரசுகள் பார்த்துக் கொண்டன.

இதனை இஸ்லாமிய அறிவுஜீவிகள் எவ்வாறு பார்க்கிறார்கள?

அமெரிக்காவில் வாழும் ஈரானியக் கோட்பாட்டாளரான ஹமித் தபாசி இப்பிரச்சினையில் அரபு நாடுகளின் இஸ்லாமியத் தலைவர்களும் சரி, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும் சரி இரட்டை நிலைபாடுகளைக் கடைப்பிடிக்கின்றனர் என்கிறார். குறிப்பாக, லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவரும் ஷியா பிரிவினருமான நஸ்ரல்லா இத்திரைப்படத்தை எதிர்த்துப் பல்லாயிரம் மக்கள் பங்குகொண்ட ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இதே நஸ்ரல்லா ஷியா பிரிவினரின் ஆட்சி நடக்கும் சிரிய அரசின் ஒடுக்குமுறைகளையும் ஈரானிய அரசின் ஒடுக்குமுறைகளையும் ஆதரிக்கிறார் என்கிறார். சொந்த நாட்டில் பெண்களையும் திரைப்படக் கலைஞர்களையும் ஒடுக்கும் ஈரானிய அரசு இத்திரைப்படம் பற்றிப் பேசுவது இரட்டை நிலைபாடு என்கிறார்.

மேற்கத்திய அமெரிக்க அரசுகள் தமது மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் பேசுவதனைத் தடைசெய்துவிட்டு கார்ட்டூன்-திரைப்படம் என கருத்துச் சுதந்திரம் பேசுவது இரட்டை நிலைபாடு என்கிறார் அவர். ஓரு மோசமான திரைப்படத்திற்கான நேர்மையான எதிர்வினை என்பது ஒரு எதிர்மறை விமர்சனம்தான் என்கிறார் அவர். அரபு நாடுகளில் இந்த ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிடுகிறவர்கள் தத்தமது அரசியல் நலன்களுக்காகவே தூண்டிவிடுகிறார்கள் எனவும் அவர் சொல்கிறார். திரைப்படம் ஆத்திரமூட்டும் பண்பு கொண்ட, எந்தவிதக் கலைத்துவமும் அற்றது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை, அது ஒரு குப்பை என்பதனையும் அவர் பதிவு செய்கிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த இங்கிலாந்து இடதுசாரிக் கோட்பாட்டாளர் தாரிக் அலி இந்த ஆர்ப்பாட்டங்களின் இரண்டு பண்புகளைக் குறிப்பிடுகிறார்.

விக்கிரக வழிபாடு என்பது இஸ்லாமின் ஆன்மாவுக்கு எதிரானது. துரதிருஷ்டவசமாக இஸ்லாமின் இந்த ஆன்மாவுக்கு எதிராக தீர்க்கதரிசி முகமது குறித்த விக்கிரக வழிபாடு என்பது இன்றைய இஸ்லாமுக்குள் நிலைபெற்றுவிட்டிருக்கிறது என்கிறார். இம்மாதிரிப் பிரச்சினைகள் வரும்போது இஸ்லாமியர்கள் இதனைப் புறக்கணிப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் எனத் தான் முன்பு எழுதியிருப்பதாகச் சொல்லும் அவர், துரதிருஷ்டவசமாக அனைத்தும் குழும்பி இன்று நிலைமை கொதிநிலையில் இருக்கிறது என்கிறார்.

ஆத்திரமூட்டப்படுகிறார்கள், ஆகவே ஆத்திரமடைகிறார்கள் என்கிறார் அவர்.

இந்த ஆர்ப்பட்டங்களுக்கான பிறிதொரு காரணம், அரபு நாடுகளில் ஏதோ ஒரு வகையில் மேற்கத்திய-அமெரிக்க ஆக்கிரமிப்பு இருந்து வருகிறது. இஸ்ரேலின் பிரசன்னத்திற்கும் அதுவே காரணம். இவை எமது மதத்தையும் கலாச்சாரத்தையும் அங்கீகரிக்க மறுக்கின்றன எனும் மனநிலை அரபு மக்களின்-இஸ்லாமிய வெகுமக்களின் மனங்களில் ஆழவோடியிருக்கிறது என்கிறார் தாரிக் அலி. அடிப்படைவாதிகளுக்கான அடிப்படைவாதிகளின் எதிர்விணை என அவர் இதனைக் குறிப்பிடுகிறார்.

எகிப்து, லிபியா, துனீசியா போன்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் திரைப்படத்தினைக் கண்டித்தாலும் கூட அமெரிக்க அரசுக்கு இதில் தொடர்பில்லை எனும் நிலைபாட்டையே அவர்கள் வெளியிடுகிறார்கள். அமெரிக்காவைக் குறித்து எதுவும் சொல்லாத சவுதி அரேபியா யூடியூபைத் தனது நாட்டில் தடைசெய்யப் போவதாகச் சொல்லியிருக்கிறது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் திரைப்படம் இஸ்லாம் வெறுப்பை முன்வைப்பதாகக் கண்டித்திருக்கிறார். அமெரிக்க அரசுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். திரைப்படம் அமெரிக்கச் சட்டங்களுக்கு உட்பட்டிருப்பதால் அதனை நீக்க முடியாது என யூடியூப் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. யூடியூபின் நெறிமுறைகளை அரபு நாடுகளில் பலர் மீறியிருப்பதால் அந்நாடுகளில் படம் நீக்கப்பட்டிருக்கிறது என அறிவித்திருக்கிறது. மீறல்களில் பிரதானமானது படம் அரபி மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்பின்புதான் ஆர்ப்பாட்டங்கள் அரபு நாடுகளில் பரவின என்பதுதான்.

ஹிலாரி கிளின்டனது வாதம் அரபு நாடுகளில் எவரையும் திருப்திப்படுத்தப் போவதில்லை. பயங்கரவாதம் தொடர்பாக, குன்டனாமோ முகாம் தொடர்பாகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்த அமெரிக்கா இத்திரைப்படம் தொடர்பாக யூடியூபைத் தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர இயலாது இருப்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அமெரிக்க நிலைமையைப் பொறுத்து அது உடனடியில் சாத்தியமாகப் போவதில்லை. ஏனெனில் கிறித்தவ அடிப்படைவாதிகளின் ஆட்சேபனையையும் ஆர்ப்பட்டங்களையும் மீறி வெளியான மார்டின் ஸ்கோர்சிசேயின் இயேசு கிறிஸ்துவ வாழ்க்கை பற்றிய த லாஸ்ட் டெப்டேசன்ஸ் ஆப் கிறிஸ்ட் பட அனுபவமும் அவர்களுக்கு முன் இருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது நடந்து கொண்டிருக்கும் இந்நிகழ்வுகள் யதேச்சையானதா? செப்டம்பர் 11 ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டங்கள் தோன்றியிருப்பது யதேச்சையானதா? நிகுலா பெசிலி நிகுலாவின் தலைக்கு பாகிஸ்தான் அமைச்சர் அறிவித்திருக்கும் இலட்சம் டாலர் விலை யதேச்சையானதா? இந்த நிகழ்வுகளுக்காக அமெரிக்க அரசோ அல்லது ஆர்ப்பட்டக்காரர்களோ காத்திருந்தார்களா? இதற்கு எவரும் ஆம் அல்லது இல்லை எனத் திட்டவட்டமாகப் பதில் சொல்ல முடியாது.

கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதங்கள் இன்னும் ஆழப்படுவதற்கான வாய்ப்பை இந்த நிகழ்வுகள் உருவாக்கியிருக்கிறது. இஸ்ரேல் குறித்த அமெரிக்கக் கொள்கை குறித்த விமர்சனங்களை இந்நிகழ்வுகள் ஆழப்படுத்தியிருக்கிறது. அரபு நாடுகளில் இந்த ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்றவர்களின் நிலைபாடுகளை அரசுகள் ஏற்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. இப்பிரச்சினைகளின் பின்னும் மேற்கத்திய-அமெரிக்க ஆதரவு அரசுகள் அரபு நாடுகளில்- மத்தியக் கிழக்கில் இருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது. பென்காசியில் திரண்ட 30,000 வெகுமக்கள் அமெரிக்கத் தூதரகத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் எனக் கருதப்படுகிற அன்சார் அல் சாரியா எனும் ஆயுதக்குழுவினரை விரட்டியடித்திருக்கிறார்கள். அல்கைதாவினருக்கு இனி லிபியாவில் இடமில்லை என அவர்கள் கோஷமிட்டிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அனைத்து ஆயுதக்குழுக்களையும் லிபிய அரசு தடைசெய்து ஆணை பிறப்பித்திருக்கிறது. அனைத்துக்குழக்களும் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அது ஆணையிட்டிருக்கிறது.

தாரிக் அலி சொல்வது போல, 'ஆத்திரமூட்டப்படுகிறார்கள், ஆகவே ஆத்திரமடைகிறார்கள்'. அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடும் நோக்குகளும் உலகமெங்கும் ஒருபடித்தானவை இல்லை. நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் உரிய தனித்தனிக் குணங்கள் கொண்டதாக, அங்கங்கு இயங்கும் அரசியல் அமைப்புக்களின் நோக்கங்கள், நலன்களுக்கு இயைபாகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ஒத்திசைவான உலகு தழுவிய இஸ்லாமிய அரசியல் என ஏதும் இல்லை. ஹமித் தபாசி சொல்கிறபடி, 'ஓரு மோசமான திரைப்படத்திற்கான நேர்மையான எதிர்வினை என்பது ஒரு எதிர்மறை விமர்சனம்தான்'.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.