Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சினிமாவின் கற்பனை வறட்சியும் அக்கறைப் பஞ்சமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழ் சினிமாவின் கற்பனை வறட்சியும் அக்கறைப் பஞ்சமும்[/size]

அரவிந்த கிருஷ்ணா

ஏன் தமிழ் சினிமாவில் மாற்று முயற்சிகள் வருவதில்லை? வந்தாலும் அவை ஏன் நேர்த்தியான ஆக்கங்களாக இருப்பதில்லை? அப்படியே இருந்தாலும் அவை ஏன் ஓடுவதில்லை?

த்ரீ இடியட்ஸ், பீப்ளி லைவ், மை நேம் இஸ் கான் முதலான இந்திப் படங்கள் சமூக அக்கறையுடன் சில முக்கியமான பிரச்சினைகளைத் தொட்டுக் காட்டுகின்றன. பா, பிளாக், பர்ஃபி, தாரே ஜமீன் பர் முதலான சில படங்கள் தனி மனிதர்களின் அதிகம் கவனிக்கப்படாத சில உடல் நல மன நலப் பிரச்சினைகளைப் பற்றி அக்கறையுடன் பேசுகின்றன. இவை வணிக ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. மேலே சொன்ன அனைத்துப் படங்களிலும் ஒரு முன்னணி இயக்குநர், நட்சத்திர ஹீரோ, நட்சத்திர ஹீரோயின் ஆகியோர் பங்குபெற்றிருப்பார்கள். அல்லது ஒரு நட்சத்திர நடிகரின் சொந்தத் தயாரிப்பாக இதுபோன்ற படங்கள் இருக்கும்.

ஹிந்தியில் நாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் வெளியாகின்றன. உதாரணம்- இங்லிஷ் விங்லிஷ், ஹீரோயின், நோ ஒன் கில்ட் ஜெசிகா. ஆனால் தமிழில்? இங்கு கொடிகட்டிப் பறந்த சிலுக்கின் வாழ்க்கையைக்கூட நாம் ஹிந்திப் படத்தில்தான் பார்த்து ரசிக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளில் நாயகனுக்கிணையாக நாயகியின் பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளித்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் எதுவுமே இல்லை எனலாம். ஒரு பாலியல் தொழிலாளியின் கதையை சித்தரித்த தனம் என்ற படம் வந்துபோன சுவடே இல்லை

தெலுங்கிலும் காம்யம் முதலான சில படங்கள் ஆழ்ந்த சமூக அக்கறையை வெளிப்படுத்துகின்றன. தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றிப் பேசும் சந்தோஷ் சுப்ரமணியம் படமும் வருகிறது.

ஆனால் தமிழ் சினிமாவில் இத்தகைய படங்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் (உதாரணம்: தோனி) சினிமா என்ற விதத்தில் அவை சறுக்குகின்றன. சமூக அக்கறை, செய்நேர்த்தி, பொழுதுபோக்கு அம்சம் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்ப் படங்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. அப்படி அபூர்வமாக வந்தாலும் அது ஒன்று மறுஆக்கம் செய்யப்பட்டதாக இருக்கும் (நண்பன்) அல்லது சுட்ட பழமாக இருக்கும் (தெய்வத் திருமகள்).

ஏன் இந்த நிலை?

இது விலைபோகுமா என்னும் கேள்வி தமிழில் வெறித்தனமாகக் கேட்கப்படுகிறது. பொழுதுபோக்கு, வணிக வெற்றி ஆகியவற்றுக்கு இங்குள்ள படைப்புத் திறனும் சமூக அக்கறையும் பலியாகின்றன. இவை இரண்டும் இருந்தால் செய்நேர்த்தி இல்லாமல் ஆவணத்தன்மையுடன் திகட்டத் திகட்ட புத்தி சொல்லும் படமாக இருக்கின்றன. அலுப்பூட்டும் புத்திமதிகளாக, சலிப்பூட்டும் செண்டிமெண்டுகளாக இருக்கின்றன.

இதுபோன்ற படங்களில் நடிக்க இந்தியில் பெரிய நட்சத்திரங்கள் தயங்குவதில்லை. ஆனால் இங்கே எந்தப் பெரிய நட்சத்திரமும் இங்கே இதற்கெல்லாம் முன்வருவதில்லை. நண்பன்கூட ஷங்கர் போன்ற ஒரு இயக்குநர் எடுத்துக்கொண்டதால்தான் பெரிய நட்சத்திரங்கள் கிடைத்தார்கள்.

ஆனால் அதே ஷங்கர் தன் சொந்தக் கதையுடன் இயக்கிய மற்ற படங்களில் சொல்ல வந்த பிரச்சினையை விட வணிக ரீதியிலான வெற்றியை உறுதிப்படுத்தக்கூடிய விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

நண்பனில் நடித்த விஜய் மசாலாப் படங்களால் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர். கண்ணுக்குள் நிலவு என்ற படத்தில் மன நலம் குன்றியவராக அவர் நடித்து அது வெற்றிபெறவில்லை என்றதும் இது போன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபடப்போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். ஆனால் பகவதி, புதிய கீதை, சுறா ஆகிய படங்கள் தோல்வியடைந்தபோது இதுபோன்ற மசாலாப் படங்களில் நடிக்கப்போவதில்லை என்ற முடிவை ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

கண்ணுக்குள் நிலவு படத்திலும் விஜய் படங்களில் வழக்கமாக இருக்கும் ரசிக்கத்தக்க பாடல்கள், சண்டைக் காட்சிகள் ஆகியவை இருக்கவே செய்தன. அதில் அவர் மன நலம் குன்றியவராக நடித்தது மட்டுமே ஒரே வித்தியாசம்.

கண்ணுக்குள் நிலவுக்குப் பிறகு அவர் காதல், ஆக்ஷன் ஆகியவற்றிலிருந்து கொஞ்சம் விலகி நடித்த ஒரே படம் நண்பன். ஷங்கர் இயக்கியிருக்காவிட்டால் அந்தப் படத்திலும் அவர் நடித்திருப்பாரா என்பது சந்தேகமே.

விஜயின் போட்டியாளராகக் கருதப்படும் அஜீத், மாறுபட்ட சினிமா என்று எதிலாவது நடித்திருக்கிறாரா என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்றுதான் கூற வேண்டும். திரைவாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது ஷாருக் கான் நாயகனாக நடித்த ஹிந்திப் படமான ஸாம்ராட் அசோகாவில் வில்லனாகவும் அதே நேரத்தில் தமிழில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்தார் அவர். ஆனால் தான் கதாநாயகனாக நடிக்கும் படங்களில் பரிசோதனை முயற்சிகளை அவரும் எடுத்ததில்லை.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பரிசோதனை என்றால் கெட்-அப்பை மாற்றுவது அல்ல. சிட்டிசன் என்ற படத்தில் அஜித் பல விதமான தோற்றங்களில் வருவார். ஆனால் அந்தப் படம் வணிக மசாலா சட்டகத்துக்குட்பட்டதுதான். வில்லன் படத்தில் மனநலம் குன்றியவராகவும், வரலாறு படத்தில் பெண்தன்மை கொண்ட நாயகனாகவும் நடிக்க அவர் மேற்கொண்ட உழைப்பு பாராட்டத்தக்கதுதான். ஆனால் அவையும் மசாலாப் படங்களே எனபதை மறுக்க முடியாது.

சேது, காசி, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த விக்ரம் தன் நடிப்புத் திறமைக்காக புகழ் பெற்றதோடு, அந்தப் படங்களும் மாறுபட்ட படம் என்று சொல்லும் வகையில் இருந்தன. ஆனால் அவற்றுக்குப் பின் அவர் மசாலாப் பாதையிலேயே பயணித்தார்.

நீண்ட ஆண்டுகளுக்குப் பின் அவர் நடித்த தெய்வத் திருமகள் படம் அறிவு முதிர்ச்சியற்ற ஒருவரின் வாழ்க்கையை சிறப்பாகச் சித்தரித்தது என்று கூறலாம். அது ஐயம் சாம் என்ற வெளிநாட்டுப் படத்திலிருந்து தழுவப்பட்டதையும் பொறுத்துக்கொள்ளலாம். அந்தப் படம் வசூலையும் பெற்றுத் தந்தது.

ஆனால் அதில் நடித்த விக்ரம் அடுத்து நடித்த படம் ராஜபாட்டை. அழகர்சாமியின் குதிரை போல் ஒரு மாற்று சினிமாவுக்கு நிகரான முயற்சியை எடுத்த சுசீந்திரனுடன் அவர் இணைந்த படம் கமர்ஷியல் சினிமாவின் மோசமான எடுத்துக்காட்டாக இருந்தது.

சமீபத்தில் அவரும் தெய்வத் திருமகள் இயக்குநர் விஜயும் இணைந்து கொடுத்திருக்கும் 'தாண்டவம்' ஒரு மசாலாப் படம் என்ற அளவில் கூட நிறைவைத் தரவில்லை. தெய்வத் திருமகளின் வெற்றிக்குப் பிறகு அதே கூட்டணி இணையும்போது, ஏன் அதே போல் மற்றொரு பரீட்சார்த்தமான முயற்சியை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு இவர்களிடம் என்ன பதில் இருக்கும்?

விக்ரமுக்குப் பிறகு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதற்குப் புகழ் பெற்றவர் சூர்யா. பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு என்று இவரும் தன் நடிப்பளவில் பரீட்சார்த்தமான முயற்சிகளை எடுக்கிறாரே தவிர மாற்று சினிமாவுக்கான முயற்சிகளை ஊக்குவித்ததில்லை.

இவர்களைத் தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்தைப் பெறத் துடிக்கும் சிம்பு. தனுஷ், கார்த்தி, ஆர்யா, பரத், விஷால் போன்றவர்களும் இவர்களையே பின்பற்றுகிறார்கள்

இவர்களெல்லாம் பிறப்பதற்கு முன் சினிமாவில் நுழைந்து இன்று வரை நட்சத்திர ஹீரோக்களாகப் பவனி வரும் ரஜினிகாந்தும் கமல்ஹாஸனும் இரண்டாண்டுகளுக்கு ஒரு படம்தான் நடிக்கிறார்கள். ரஜினி கமர்ஷியல் படங்களில் நடிக்கத்தான் தனக்கு விருப்பம் என்று வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார்.

மாற்று சினிமாவுக்கான முயற்சிகளை ஓரளவுக்கேனும் எடுக்கத் துணியும் கமலும் அதுபோன்ற படங்களில் வியாபார வெற்றியை உறுதி செய்ய சில சமரசங்கள் செய்துகொள்கிறார். இடதுசாரி அரசியல் பேசும் அன்பே சிவம் என்னும் படத்தில் நடிக்கும்போதுகூட தன் நாயக அந்தஸ்தைப் பாதுகாக்கும் சண்டைக் காட்சியையும் இளமையான கதாநாயகியையும் விட அவருக்கு மனமில்லை.

தசாவதாரம் அவருக்குப் பத்து வேடங்களில் நடித்த என்ற பெருமையையும் வியாபார வெற்றியையும் வாரி வழங்கியது. ஆனால் அவர் அத்தனை உழைப்பைப் போட்டு எடுத்த படம் மாற்று சினிமாவுக்கான சிறிய முயற்சியாகக்கூட இல்லாமல் போனது ஏமாற்றமே. ஹேராம், உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களைத் தவிர அவரது மற்ற அனைத்துப் படங்களும் கமர்ஷியல் தன்மை அல்லது சமரசங்களுடன்தான் வெளியாயின. அதிலும் உன்னைப்போல் ஒருவன் அவரது சொந்தக் கதையில்லை.

இதுபோன்ற படங்களில் பெரிய இயக்குநர்கள் இருந்தால் மட்டுமே பெரிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்

இயக்குநர்களை எடுத்துக்கொண்டால் சீமான், தங்கர் பச்சான் போன்ற சிலர் வித்தியாசம் என்ற பெயரால் எக்கச்சக்கமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். வெகுஜன இதழ்களிலோ பொது மேடைகளிலோ எளிதாகப் பேசிவிட்டுப் போகக்கூடிய விஷயங்களுக்கு எதற்காக சினிமா என்னும் கலை வடிவத்தைக் கையில் எடுக்க வேண்டும்?

திரைப்படத்தின் வடிவத்தைச் சிதைக்காமல் நேர்த்தியான முறையில் பக்குவமாகச் செய்தி சொல்ல அலாதியான திறமை தேவை. அது இங்கே பலருக்கு இல்லை. பாலா, அமீர், வெற்றி மாறன் போன்ற நேர்த்தியான இயக்குநர்கள் வேறு தளங்களில் கவனம் செலுத்துகிறார்கள். சசி போன்றவர்களோ மிகையான காட்சிகளுடன் புத்திசொல்கிறார்கள் (சுப்பிரமணியபுரம் விதிவிலக்கு).

பசங்க பாண்டிராஜ் போன்ற சிலரும் விதிவிலக்கானவர்கள்தான். ஆனால் அவர்களும் அடுத்தடுத்த படங்களில் நேர்த்தியைத் தொலைத்துவிட்டு வெறும் போதனைகளுடன் அல்லது தட்டையான ஆவணத்தன்மையுடன் வெளிப்படுகிறார்கள். இந்தப் பின்னணியில் தோல்வி பெற்ற முயற்சி என்றாலும் சுசீந்திரனின் அழகர்சாமியின் குதிரை ஒரு முக்கியமான முயற்சி. பக்குவமான சினிமாவுக்கான அடையாளங்கள் குறைவாகவும் மிகு உணர்ச்சிச் சித்திரங்கள் கூடுதலாகவும் இருந்ததுதான் இந்தப் அப்படத்தின் சிக்கல்.

இவர்கள் அனைவருமே மாற்று சினிமாவுக்கான் முயற்சியை மேற்கொள்ள விரும்பினாலும் வியாபார வெற்றிக்கான சமரசங்களில் சிக்கிக்கொள்கிறார்கள்.

வில்லனாக அறிமுகமாகிப் பிரபலமான நட்சத்திரமாக உருவெடுத்த பிரகாஷ்ராஜ், தயாரிப்பாளர் என்ற முறையில் தொடர்ந்து பரிசோதனைகளில் ஈடுபடுகிறார். பெரிய நட்சத்திரங்களையோ முன்னணி இயக்குநர்களையோ பங்கேற்க வைக்கும் அளவுக்குப் பொருளாதாரச் சூழல் அவருக்கு இல்லை. அதனால் நாம், அழகிய தீயே போன்ற வித்தியாசமான முயற்சிகள் தோல்வியுற்றன. மொழி வெற்றிபெற்றது. அதற்குப் பின் அவர் தயாரித்த படங்களான் அபியும் நானும், இனிது இனிது, பயணம், தோனி போன்ற படங்கள் வித்தியாசமாக இருந்தாலும் ஒரு நேர்த்தியான திரை அனுபவத்தை வழங்கவில்லை. எனவே இவை அனைத்தும் தோல்வியுற்றன

முன்பெல்லாம் சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்களும் இத்தகைய படங்களில் நடிப்பார்கள். பாலசந்தர், மகேந்திரன் போன்றவர்கள் இத்தகைய படங்களைத் துணிந்து எடுப்பார்கள். பெரிய நிறுவனங்களும் தயங்காமல் எடுப்பார்கள். இப்போது எல்லாமே வணிகமாகிவிட்டது. சமூக அக்கறை கொண்ட படங்கள் சிறிய பட்ஜெட் படங்களாக மட்டுமே இருக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்தப் பிரச்சினை பல்வேறு முனைகளைக் கொண்டிருக்கிறது. வியாபார வெற்றிக்காகவே படங்கள் எடுக்கப்படுகின்றன. வியாபார வெற்றிக்கு உத்த்ரவாதமளிக்கும் படங்களையே பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விரும்புகின்றார்கள். எனவே மாறுபட்ட படங்களைத் தர இவர்கள் யாரும் முன்வருவதில்லை. அத்திபூத்தாற்போல் இவர்கள் யாரேனும் ஒருவர் ஒரு மாறுபட்ட படத்தைத் தந்தால் அந்தப் படம் தோல்வியுறுகிறது. வெற்றிபெற்றாலும் வழக்கமான படங்கள் தரும் வெற்றியை இவை பெற்றுத் தருவதில்லை. எனவே ஒரு வித்தியாசமான படம் வெற்றிபெற்றுவிட்டால் அதைச் சொல்லியே காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். அது தோல்வி அடைந்தால் தொடர்ந்து மசாலாப் படங்களில் நடிப்பதற்கான சாக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

மாற்று சினிமாவுக்கான முயற்சிகளை எடுக்க விரும்பும் இயக்குநர்களுக்கு படைப்புத் திறன் இல்லை. சின்ன தயாரிப்பாளர்களுக்குப் பண பலம் இல்லை. நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்தை எட்ட வேண்டுமானால் கமர்ஷியல் சினிமாவில் நடித்தால்தான் உண்டு என்ற நிலை உள்ளது. சேதுவும் பிதாமகனும் விருது வாங்கித்தரும். ஆனால் ஜெமினியும் சாமியும்தான் நட்சத்திர அந்தஸ்தும் கோடிகளில் சம்பளமும் பெற்றுத் தரும் என்பதே இன்றைய யதார்த்தம்.

தமிழ் சினிமாவுக்கும் ஹிந்தி சினிமாவுக்கும் ஏன் இத்தனை வேறுபாடுகள். இவை இரண்டையும் தொடர்ந்து கவனித்துவரும் அம்பரீஷ் சொல்கிறார்:

'இங்கு பெரிய கதாநாயகர்கள் மாறுபட்ட படங்களில் நடிக்க முன்வருவதில்லை. தெய்வத் திருமகள் போன்ற படங்களில் நடிக்க விக்ரம் முன்வந்தார். அந்தப் படம் ஓடியது என்றாலும் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. சன் டிவி போன்ற தயாரிப்பு நிறுவனம் அந்தப் படத்தை வெளியிட்டிருந்தால் அது கமர்ஷியல் படங்களுக்கு இணையான வெற்றியைப் பெற்றிருக்க முடியும். ஆனால் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வியாபார வெற்றியைப் பற்றி மட்டுமே யோசிக்கின்றன. தெய்வத்திருமகள் போன்ற படங்களை அவர்கள் சந்தேகத்தோடும் ஒதுக்கிவிடுகிறார்கள். நட்சத்திரங்களும் தயாரிப்பாளர்களும் நல்ல படங்களில் நம்பிக்கை வைத்தால் மட்டுமே தமிழ் சினிமாவின் தரம் உயரும்.' என்று கூறுகிறார்.

'தமிழ் சினிமாவுக்கு ஓரளவுக்குமேல் வெளிநாடுகளில் மதிப்பில்லை. அந்நாடுகளில் வாழும் தமிழர்கள் வேண்டுமானால் அங்கு வெளியாகும் தமிழ்ப் படங்களைப் பார்ப்பார்கள், ஹிந்தி சினிமாவின் மார்க்கெட் பெரியது. அவர்களுக்கு வெளிநாடுகளில் அவர்களின் படங்களைத் தான் அதிகம் பார்க்கிறார்கள். இந்தியப் படம் என்றாலே ஹிந்திப் படம் என்றுதான் வெளிநாட்டில் நினைக்கிறார்கள். எனவே அவர்கள் படம் வெற்றிபெறுவதற்கான சாத்தியம் அதிகம். எனவேதான் அவர்களுக்கு பர்ஃபி, தாரே ஜமீன் பர் போன்ற படங்களை எடுக்கத் துணிச்சல் வருகிறது' என்று ஹிந்தி சினிமாவில் மாற்று சினிமா வெற்றிபெறுவதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார் அவர்.

இலக்கியத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள இடைவெளிதான் இதற்கு முக்கியக் காரணம் என்று காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியரும் எழுத்தாளருமான தேவிபாரதி கருதுகிறார்.

'நாடகத்திலிருந்து உருவானதுதான் சினிமா. ஆனால் தமிழ் சினிமா தன்னை நாடகத் தன்மையிலிருந்து விடுவித்துக்கொள்ளவில்லை. இரண்டாவதாக சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உலக சினிமாவில் அழியாப் புகழ் பெற்ற படங்கள் அனைத்தும் நாவல்கள், சிறுகதைகள் ஆகியவற்றைத் தழுவி எடுக்கப்பட்டவையாக இருக்கும். அவை இலக்கியத்தால உந்தப்பட்டவையாக இருக்கும். ஆனால் இங்கு இலக்கியங்களைத் தழுவி எடுக்கப்பட்ட படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதற்குத் தேவையான வாசிப்புகூட நம் படைப்பாளிகளுக்கு இருப்பதில்லை' என்கிறார் அவர்.

'இலக்கியத்தில் விவாதங்கள் நடக்கின்றன. சினிமா என்ற கலை சம்பந்தமான விவாதங்கள் இல்லை. அதுபோன்ற விவாதங்கள் நடந்தால்தான் சினிமாவை செழுமைப்படுத்தமுடியும். பாலிவுட்டில் மாற்று சினிமா சாத்தியம். இந்தியாவில் 7 மாநிலங்களில் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இருக்கிறார்கள். அந்த மாநிலங்களில் இருக்கும் ஃபிலிம் சொஸைட்டிக்களில் அவர்களின் படம் பார்க்கப்பட்டாலே போதும். படம் வெற்றிபெற்றுவிடும். மாற்று சினிமாக்களைக் கொடுத்த மகேந்திரன், பாரதிராஜா போன்றவர்களின் படங்களில் நடித்து வெற்றிபெற்றவர்கள் ரஜினியும் கமலும். ஆனால் அவர்களும் கமர்ஷியல் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களையே அடுத்த தலைமுறை நடிகர்களும் பின்பற்றுகிறார்கள். மாற்று சினிமா கொடுக்க முயற்சிக்கும் இயக்குநர்கள் வியாபர வெற்றியை உறுதி செய்யும் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவுக்கான வெளி இல்லை' என்று வருத்தப்படும் தேவி பாரதி, 'சினிமாவை ஒரு கலையாகப் பார்க்காமல் ஒரு பொழுதுபோக்குக் கருவியாகவும், வியாபாரப் பொருளாகவும் பார்க்கும் வரை எதுவும் மாறாது' என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.

பெரிய நட்சத்திரங்கள், பெரிய இயக்குநர்கள், பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மனதுவைத்தால்தான் இந்த நிலை மாறும். கையைச் சுட்டுக்கொண்ட ஓரிரு நல்ல முயற்சிகளைப் பார்த்து சூடு கண்ட பூனையாகப் பதுங்காமல் தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போல மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால்தான் வெற்றி கைவசமாகும். இல்லையேல் படைப்புத் திறனும் சமூக அக்கறையும் கொண்ட அசலான படங்கள் தமிழில் வருவது சாத்தியமில்லாமலே போய்விடும். தாரே ஜமீன் பர், பர்ஃபி போன்ற படங்களை டப்பிங் செய்து சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=7b01b40b-0b40-4003-beaf-1f0ac65a744c

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.