Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி எதிர்ப்பும் கூட்டமைப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் போர்க்கொடியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]புலி எதிர்ப்பும் கூட்டமைப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் போர்க்கொடியும் - தயாளன்[/size]

கூட்டமைப்பிற்குள் இடம்பெற்றுவரும் அதிகார அரசியலில் சுரேஷ் பிரேமசந்திரனை குற்றஞ்சாட்டும் இக்கட்டுரையை ஆழமான விவாதங்களின் பின்னரே வெளியிடுவதெனத் தீர்மானித்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் ஜனநாயகப்படுதலின் அவசியம் பற்றி கடந்த காலங்களில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம். இக்கட்டுரையின் ஊடாக கூட்டமைப்பை பலவீனப்படுத்துவது எமது நோக்கமல்ல. கூட்டமைப்பு தொடர்பான விவாதத்தின் ஒரு பகுதியாகவே இக்கட்டுரையைக் கருதுகிறோம். இது தொடர்பான மாற்றுக் கருத்துகளுக்கு நிச்சயம் பொங்குதமிழ் இடம்தரும்

அன்னை திரேசாவின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வு இது. இவர் யுவதியாக இருந்தபோது இவரின் நண்பிகளில் ஒருவர் நடத்தை சரியில்லாதவராக இருந்தார். இதனை அவதானித்த திரேசாவின் தாயார் வாயால் சொல்வதைவிட செயலால் விளக்கத் தீர்மானித்தார். ஒரு கூடையில் சில அப்பிள் பழங்களை வைத்து திரேசாவிடம் கொடுத்தார். அவற்றின் நடுவே பழுதான பழம் ஒன்றையும் வைத்தார். அதற்கு திரேசா காரணம் கேட்ட போது, 'பிறகு சொல்கிறேன். இப்போது இப்படியே வை' எனப் பதிலளித்தார். ஓரிரு நாட்களில் அக்கூடையில் இருந்த சகல பழங்களும் அழுகியிருப்பதைக் காண்பித்த அவர், 'நடத்தை சரியில்லாத ஒருவர் நண்பர் கூட்டத்தில் இருந்தால் நல்ல அப்பிள் பழங்களுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும்' என விளக்கினார்.

அந்த அழுகிய அப்பிள் பழத்தை ஒத்த ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கியதன் விளைவை தமிழினம் இன்று அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும்போது யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட மாணவர் குழுவொன்று திரு. சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்தது. முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் திருச்செல்வத்தின் ஒரே மகன் அகிலன் மற்றும் திரு. சிவஞானசுந்தரம் உள்ளடங்கலாக மண்டையன் குழு என அக்காலத்தில் அழைக்கப்பட்ட குழுவினரால் படுகொலை செய்யப்பட்போரில் 60 பேரின் விபரங்கள் அவர்களால் கையளிக்கப்பட்டன. வேட்பாளர் பட்டியலில் இக்குழுவின் தலைவரின் பெயர் விபரங்கள் இடம்பெறக் கூடாது என அக்குழுவினர் மன்றாடினர். இன்று திரு. சம்பந்தன் ஐயா எதிர்கொள்ளும் நெருக்கடி அன்று திரு. சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு ஏற்பட்டது. ஆயினும் அன்றைய காலகட்டத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய தேவையிருப்பதாக அக்குழுவினருக்கு பக்குவமாக எடுத்துரைத்த திரு.தமிழ்ச்செல்வன் இந்த வேண்டுகோளை ஏற்க முடியாதிருப்பதாக தெரிவித்தார்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சீர்திருத்தம் வேண்டி திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் போர்க்கொடி தூக்குவதாக செய்திகள் வெளியாகின்றன. வெளிப்படையாக பார்த்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது போன்ற அவரது கோரிக்கைகளில் நியாயம் இருப்பது போன்ற தோற்றம் உள்ளது. ஆனால் அடிப்படையான அவரது பிரச்சினைகள் வேறு.

முதலாவது பிரச்சினை, காலம் காலமாக அவருள் மண்டிப்போயிருக்கும் புலி எதிர்ப்புக் கொள்கை. புலிகள் இயக்கத்தின் அனுதாபிகள், விசுவாசிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் போனோரின் குடும்பத்தினர், அரசியல் கைதிகளின் குடும்பத்தினரின் வாக்குகள் மட்டும் வேண்டும். ஆனால் அரசியலில் புலிகள் சார்பானவர்கள் மட்டும் வந்துவிடக் கூடாது என்பதே அவரின் தீர்க்கமான நிலைப்பாடு.

கடந்த பொதுத்தேர்தலின் போது முன்னாள் பா.உக்கள் சிலர் புறக்கணிக்கப்பட்டமை பற்றி பி.பி.சிக்கு அவர் அளித்த பேட்டியில், அரசுக்கு ஆதரவானோர், வெளிநாடுகளில் இருந்தோர் தவிர்ந்த ஏனையோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். செல்வி தங்கேஸ்வரி, திருவாளர்கள் ச.கனகரத்தினம், சி.கிஷோர் ஆகியோர் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்காதமை சரியானதே. ஜனாதிபதிக் கனவில் சுயேட்சையாகப் போட்டியிட்ட திரு.சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவாகவும் தலைமைக்கு எதிராகவும் செயற்பட்ட திரு.ந.சிறிகாந்தா ஆகியோரைப் புறந்தள்ளியமையும் ஏற்கக்கூடியதே.

இவரது குற்றுப்படி வெளிநாட்டில் இருந்தோர் என்ற குற்றச்சாட்டில் ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் வேட்பாளராக தகுதியில்லாதவர்கள். யுத்தம் மீண்டும் தொடங்கும்போது மேற்குறிப்பிட்ட மூவரும் தமது மாவட்டத்தில் தமது மக்களுடன் தானே இருந்தனர். சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ் மாவட்டத்துக்கு வந்து போகின்றவராகத் தானே இருந்தார். சரி, யுத்தம் தொடங்கிய பின்னர் சுரேஸ் தனது மாவட்டத்தில் பணிமனை அமைத்து மக்கள் மத்தியில் பணிபுரிந்தாரா? மேற்குறிப்பிட்ட மூவரையும்விட யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவான ஒரேயொரு கத்தோலிக்க பா.உ சொலமன் சிறில் எந்த நாட்டுக்குமே போகவில்லையே. புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்பதைத் தவிர இந்த நால்வரையும் நிராகரித்தமைக்கு எந்தக் காரணமும் இல்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்திலும் இவரின் இரட்டை வேடம் தொடர்கின்றது. 'இவங்கள் கொஞ்சக் காலம் உள்ளுக்குள்ளேயே இருக்கட்டும். வெளியில வந்தால் அரசியலைக் குழப்பிப் போடுவான்கள்' என்று இவர் திருவாய் மொழிந்ததை நேரடியாகக் கேட்டவர்கள் உள்ளனர். 'புலிகள் இயக்கத்தினரை விடுதலை செய்ய வேண்டாம் என தமிழ்த் தரப்பு என்னைக் கேட்டிருந்தது. அவர்களின் பெயரைச் சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது' என்ற ஜனாதிபதி மகிந்தவின் கூற்று யாரைக் குறித்தது என்பதற்கு வேறு விளக்கம் தேவையில்லை. பிச்சைக்காரனின் புண் போன்றே தமிழ் அரசியல் கைதிகளின் விடயமும் உள்ளது.

அடுத்தது வீட்டுச் சின்னம் பற்றியது. இச்சின்னத்தை தந்தை செல்வா அறிமுகப்படுத்தினாலும், 1977இல் காசி ஆனந்தன் பயன்படுத்திய பின்னர் இச்சின்னம் பயன்படுத்தப்படவில்லை. Federal Party என அழைக்கப்பட்ட இக்கட்சியின் பெயரை இலங்கைத் தமிழரசுக் கட்சி என ஆங்கிலத்தில் அழைக்க ஏற்பாடு செய்ததுடன் அதையே தமிழரின் சின்னமாக மீள் அறிமுகம் செய்தது மட்டுமல்லாது பொன்னம்பலத்தின் பேரனையும் அக்கட்சியிலேயே போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தவர் பிரபாகரனே.

விடுதலைப் புலிகள் தேர்தல்கள் குறித்து கவனம் செலுத்துவதற்கு முன்னர் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் வவுனியா நகரசபை, பச்சிளைப்பள்ளி பிரதேசசபை போன்றவற்றை புளொட்டும், யாழ் மாநகர சபை, வலி. வடக்கு பிரதேச சபை என்பனவற்றில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், வல்வெட்டித்துறை நகரசபையில் ரெலோவும் வெற்றி பெற்றிருந்தன. ஈ.பி.ஆர்.எல்.எப் இனரால் ஒரு பிரதேச சபையைக் கூட கைப்பற்ற முடியவில்லை. இந்திய இராணுவம் இருந்த காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான பின் ஈ.பி.ஆர்.எல்.எப் இனரால் நாடாளுமன்றத்துக்கு செல்ல முடியவில்லை. புலிகளின் தலைமையை ஏற்பதாகக் கூறிய பின்னரே இவர்களால் நாடாளுமன்றத்துக்கு செல்ல முடிந்தது. இன்றோ பிரபாகரனால் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டுச் சின்னத்தை தீட்டாகப் பார்க்கின்றார் சுரேஸ். இங்கு பிரச்சினை சின்னமல்ல. அவரின் சிந்தனையே.

மூன்றாவது விடயம் நிதி சம்பந்தப்பட்டது. தமிழரசுக்கட்சி என்றால் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டோர் நிதி வழங்குவார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் என்றால் 'ஓட்டகக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்ற நிலை தான். எங்களது மக்களுக்கு உதவவேண்டும் என்பதே தலையாய கடமை என நினைத்தால், சிறிதரன் போன்றோர் கேட்டவுடன் நிதி வழங்குகின்றார்களே என மனம் புழுங்கத் தேவையில்லை.

தமிழரசுக் கட்சி விட்டுக் கொடுக்காத மனோபாவம் கொண்டது எனவும் காட்ட முனைகின்றார் இவர். அறப்போர் வீரர் அரியநாயகம், மாமனிதர் சந்திரநேரு வழியில் வந்த முன்னாள் பா.உ சந்திரகாந்தனைத்தான் முதலில் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளராக கடந்த மாகாணசபைத் தேர்தலில் நியமிக்கவிருந்தது கட்சித் தலைமை. கூட்டணிக் கட்சிகளைக் கருத்திற் கொண்டே கல்முனை நகரசபைத் தேர்தலில் வெல்ல முடியாத திரு.ஹென்றி மகேந்திரனை நியமித்தது. ஆனால் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. திரு.சந்திரகாந்தனை தலைமை வேட்பாளராக நியமித்திருந்தால் தம்பிலுவில், திருக்கோயில் உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் இன்னும் அதிகமாக வாக்களித்திருப்பார்கள். கிழக்கு மாகாண ஆட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர வேறு எவரையும் கேட்டிருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது.

இவர் இறுதியாக பொங்கியெழுந்தது கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைமை விடயத்தில். தான் பரிந்துரைத்த இரா.துரைரெட்னத்துக்கு எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்படாததால் மாகாணசபை உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்விலும் இவர் கலந்து கொள்ளவில்லை. திரு.தண்டாயுதபாணி ஒரு கல்விமான். சிறந்த நிர்வாகி. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக விளங்கியவர். ஆனால் இவர் பரிந்துரைத்த இரா.துரைரெத்தினம் யார்? இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் வணசிங்கா, பிரஜைகள் குழுத் தலைவர் சந்திரா பாதர் ஆகியேரைச் சுட்டுக் கொன்றதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தார் என்ற சந்தேகத்தில் ஒரு முஸ்லிம் யுவதியைக் கைது செய்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்தவர். இச்சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சிகளும் உள்ளனர்.

திருவாளர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், இரா.துரைரெத்தினம் ஆகியோர் செய்தவற்றை தமிழ் மக்கள் தேசியத்தின் பேரால் மன்னிக்கலாம். ஆனால் மறக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பூதக் கண்ணாடியின் ஊடாகவே இந்தப் பூனைகள் யானைகள் போல் தெரிகின்றார்களே ஒழிய, இவர்களுக்கு தும்பிக்கைகளும் முளைக்கவில்லை. இவர்கள் யானைகளாவும் முடியாது. இன்றைய சூழலில் தமிழ் சிவில் சமூகம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டுமல்லாது ஜனநாயக மக்கள் முன்னணியையும் சேர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் பலமாக வேண்டுமே ஒழிய, தலைமைக்கு எதிராக ஆள்சேர்ப்பது அல்ல.

இலங்கைத் தமிழ் மக்கள் (குறிப்பாக வடக்குக் கிழக்கு மக்கள்) வித்தியாசமானவர்கள். இவர்கள் இந்தியர்களைப் போல் நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என்றோ - சிங்களவர்களைப் போல் பண்டாரநாயக்க, சிறிமா, சந்திரிகா, அனுரா என்றோ - டி.ஏ.ராஜபக்ச, மகிந்த, நாமல் என்றோ கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிப்பவர்கள் அல்லர். அவர்களைப் பொறுத்தவரை பரம்பரை, சாதி, சமயம், பிறப்பிடம் கல்வித் தகமை எதுவும் முக்கியமல்ல. அர்ப்பணிப்பையும், செயற்பாட்டையும் கொண்டே அந்தந்தக் காலத்தில் தமது தலைமை குறித்த அவர்கள் முடிவெடுக்கிறார்கள்.

முதலில் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம் ஆகியோரை தமது தலைவர்களாக ஏற்றுக் கொண்டார்கள். அடுத்து அவர்களின் குடும்பத்தினரை எதிர்பார்க்கவில்லை. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை ஏற்றார்கள். அதற்குப் பின் அவரின் மகனான குமார் பொன்னம்பலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மலேசியாவில் பிறந்த கிறிஸ்தவரான தந்தை செல்வநாயகத்தை ஏற்றார்கள். அவருக்குப் பின் அவரது மகனான சந்திரகாசனை எதிர்பார்க்கவில்லை. திரு. அமிர்தலிங்கத்தை ஏற்ற மக்கள், அதற்குப் பின்னர் ஆயுதப் போராட்டம் தலையெடுத்த பின்னர் அப்போதிருந்த 36 இயக்கங்களுள் ஒன்றான தமிழ் தேசிய இராணுவத்துக்கு தலைமை தாங்கிய பகிரதனை (அமிரின் மகன்) ஏற்கவில்லை. பிரபாகரனை ஏற்றார்கள். இறுதிப் போரில் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் உயிர் பிழைத்திருந்தாலும், அவரை தமது தலைவராக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது தலைமையை திரு.சம்பந்தன் ஐயாவிடம் வழங்கியிருக்கிறார்கள். இத்தனை வருட கால அரசியலில் (ஒரு மாமாங்கத்துக்கு மேல்) இப்போது தான் கிழக்கு மாகாணத்திடம் தமிழரின் அரசியல் தலைமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தன் ஐயாவுக்குப் பின்னர் யார் என்பதற்கு இப்போதே அவசரப்பட வேண்டாம். அவர் நீண்ட காலம் வாழட்டும். தலைமை தாங்கட்டும். அண்ணன் எப்போது சாவான் - திண்ணை எப்போது காலியாகும் என எதிர்பார்ப்பதைவிட தமிழ் மக்களின் நலன்களுக்காக எம்மால் எந்தளவுக்கு உழைக்க முடியுமோ அந்தளவுக்கு உழைப்போம். இலங்கைத் தமிழர்களிடம் யாரும் தலைமையைத் திணிக்க முடியாது. போருக்குப் பின் யாழ் நூலகத்தில் நடந்த வைபவத்தில், 'உங்களுக்குத் தலைவர் கலைஞர் தான்' என தி.மு.க. எம்.பி டி.ஆர்.பாலு கூறியபோது மக்கள் சினமடைந்தார்கள். ஏன் சுமந்திரனைத் திணித்தால்கூட அவரை மக்கள் தலைவராக ஏற்கமாட்டார்கள். ஏனெனில் அவர் இந்தப் போராட்டத்தில் அடி வாங்கியவருமல்ல. அடித்தவருமல்ல. எமது மக்கள் மத்தியில் வாழ்ந்தவருமல்ல. மக்களால் தெரிவு செய்யப்பட்டவருமல்ல. கோப்பாய் துயிலுமில்லத்தையோ, விசுவமடு துயிலுமில்லத்தையோ விளையாட்டு மைதானம் ஆக்கினால் இந்த விளையாட்டு வீரர் எவருடனும் சேர்ந்து விளையாடத் தயங்க மாட்டார் என்பது எமது மக்களுக்குத் தெரியும். அவர்களே எல்லாவற்றையும் தீர்மானிப்பார்கள். ஏனெனில் புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்ட பேராசிரியர் சிவச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்ட போதும் அவரை நிராகரித்தவர்கள் எமது மக்கள்.

இன்று வடக்குக் கிழக்கு மக்களின் ஐக்கியமே முதல் தேவை. இதற்கு இன்னும் இரு தசாப்தங்களுக்கு கிழக்கில் இருந்தே தலைமைகள் உருவாவதே நல்லது. அது தமிழ்த் தேசிய உணர்வை நாடி நரம்புகளில் ஊட்டிய திரு. காசி ஆனந்தனோ, திருமதி சுகுணம் பரராஜசிங்கமோ, திரு.தண்டாயுதபாணியோ அல்லது திரு. கலையரசனோ - யாராவது இருந்துவிட்டுப் போகட்டும். இப்போது திரு.சம்பந்தன் ஐயாவே வாழும் வரை தலைமை தாங்கட்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முதல் அடியை எடுத்து வைத்த திரு.செல்வம் அடைக்கலநாதன் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படுவது இன்றைய காலத்தின் தேவை. சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்றோரால் அவருக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்கள் இந்த விடயத்தில் அவரை நிதானிக்க வைக்கும் என நம்புவோம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=11021828-9546-4d4c-a0eb-9e8da8f2c61b

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.