Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமாவின் வெற்றி - மிச்சமிருக்கும் நம்பிக்கையின் அடையாளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவின் வெற்றி - மிச்சமிருக்கும் நம்பிக்கையின் அடையாளம்

அரவிந்த கிருஷ்ணா

மீண்டும் அமெரிக்க அதிபராகிவிட்டார் பாரக் ஹுசேன் ஒபாமா. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அவருக்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான மிட் ரோம்னிக்கும் பலத்த போட்டி இருந்தது. கருத்துக் கணிப்புகளில் ஒருவரை ஒருவர் முந்தி ஓடிக்கொண்டிருந்தனர். யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்ற பரபரப்புக்கு ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை உயிர் இருந்தது. ஆனால் பல மாகாணங்களில் ரோம்னியை விட அதிக வாக்குகளைப் பெற்று வசதியான வெற்றியைப் பெற்றுள்ளார் ஒபாமா. தேர்தல் பரபரப்பு முடிந்த நிலையில் அவரது அடுத்த ஆட்சிக் காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அமெரிக்காவை மட்டும் பாதிப்பதில்லை, உலக நாடுகள் அனைத்தையுமே பாதிக்கிறது. பனிப் போர் முடிந்த பிறகு அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஒற்றை மைய உலக அதிகார அமைப்பு உருவாகிவிட்ட நிலையில் அமெரிக்காவின் நிலை உலகைப் பாதிக்கும் என்பதால் அமெரிக்க விவகாரம் எதுவாக இருந்தாலும் அது உலக நாடுகளின் கவலைக்கும் கவனத்துக்கும் உரியதாவது தவிர்க்க முடியாததாகிறது.

உலக நாடுகளில் நடக்கும் விஷயங்களில் அமெரிக்கா சம்மன் இல்லாமல் ஆஜராவதும் பல சர்வதேசப் பிரச்சினைகளில் உலக நாடுகளின் போக்கையும் - ஏன், ஐக்கிய நாடுகள் சபையின் அணுகுமுறையையும்கூட - அமெரிக்காவே தீர்மானிக்கும் நிலை இருப்பதும் இந்தப் பின்னணியில் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய விஷயங்கள். இஸ்லாமிய நாடுகளைத் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு தன் படைகளைப் பல திசைகளுக்கும் அனுப்புவதும் தன் தளங்களைப் பல நாடுகளிலும் நிறுவுவதும் அமெரிக்காவின் அன்றாட அலுவல்களாகிவிட்டதும் இந்தப் பின்னணியால்தான் சாத்தியமாகிறது. பல அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கோர வரலாறும் அமெரிக்க அரசுக்கு இருக்கிறது.

பனிப் போர் காலத்தில் ரஷ்ய - அமெரிக்கப் போட்டி உலக விவகாரங்களைப் பெருமளவில் தீர்மானித்தது என்றால் இப்போது அமெரிக்காவின் நிலைப்பாடு தீர்மானிக்கிறது. உலக நாடுகள் அனைத்துமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது அமெரிக்காவுக்கு எதிர் நிலையிலிருந்து சிந்திக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. வேறொரு சமயத்தில் அமெரிக்காவின் தரப்பில் நின்றும் யோசிக்க வேண்டிய நிலை இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் ஒபாமா ஆட்சியைப் பற்றிய விமர்சனமும் அமைய முடியும். எனவே, அவரது ஆட்சி அமெரிக்கர்களுக்கு எப்படி இருந்திருக்கிறது என்பதோடு, இஸ்லாமிய நாடுகளில் அதன் தாக்கம் எப்படி இருந்திருக்கிறது, ஏனைய உலக நாடுகளில் எப்படி இருந்திருக்கிறது என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.

ஒபாமா 2008இல் வென்றபோது அவர் ஒரு கறுப்பினத்தவர் என்பதால் அவர் அதிபர் நாற்காலியில் அமர்ந்ததை உலக நாடுகளில் தமிழர்கள் உட்படப் பலர் கொண்டாடினார்கள். இஸ்லாமிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் அமெரிக்க வாழ் சிறுபான்மையினர் ஊக்கமடைந்தார்கள். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிந்தைய சூழலில் அமெரிக்காவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் கசந்துவிட்ட நிலையில் இந்தத் தேர்வு அந்தக் கசப்பைச் சற்றேனும் குறைக்கும் என்று கருதப்பட்டது. 2008 தேர்தலில் அவர் பயன்படுத்திய 'நம்மால் முடியும்' (Yes we can!) என்ற மந்திர வாசகம் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை மந்திரமாக அமைந்தது.

ஒபாமா ஆட்சியைத் துவங்கியபோது அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலை உச்சத்தில் இருந்தது. புகழ்பெற்ற பல நிறுவனங்களும் வங்கிகளும் திவாலாயின. அதன் தாக்கம் இன்றுவரை இருந்தாலும் அதலபாதாளத்தில் இருந்த அமெரிக்கப் பொருளாதாரத்தை ஓரளவேனும் மீட்டதில் ஒபாமா பரவலான பாராட்டுக்களைப் பெற்றார். 'அரசு கஜானா அவ்வளவு வளமாக இல்லை என்றாலும் அமெரிக்காவின் முக்கிய வங்கியான சிட்டி பாங்கை கடன் சுமையிலிருந்து மீட்டெடுத்த பெருமை ஒபாமாவையே சாரும்' என்கிறார் அமெரிக்க அரசியலைத் தொடர்ந்து கவனித்துவருபவரும் பன்னாட்டு மென்பொருள் நிறுவன ஊழியருமான எம். அம்பரீஷ்.

அமெரிககர்கள் வேலைவாய்ப்பின்மையால் தத்தளித்துக்கொண்டிருந்ததால் உள்நாட்டில் வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக இந்தியா போன்ற நாடுகளுக்குப் பணிகளை அயலாக்கம் செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஒபாமா மேற்கொண்டார். இது இந்தியா போன்ற நாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. அயலாக்கப் பணிகள் குறைந்ததற்காக வெளிநாடுகள் ஒபாமாவை விமர்சிக்கலாம். ஆனால் அந்த நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஒபாமாவின் கடமை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இது எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை. செயல்முறை அயலாக்கம் என்பது முதலீட்டாளர்களுக்குச் செலவு குறைவான ஒரு வழிமுறை என்பதுதான் இதற்குக் காரணம். முதலீட்டாளர்கள் உள்நாட்டு வேலைவாய்ப்புகளைக் காட்டிலும் தங்களது லாப விகிதங்களையே பெரிதாக நினைப்பார்கள். ஆனால் அமெரிக்காவின் சாதாரண மக்களின் மனநிலை வேறு. எனவேதான் உள்நாட்டு வேலைவாய்ப்புகளைக் குறைக்கக்கூடிய செயல்முறை அயலாக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டாலும் ஒபாமாவை அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது அடுத்த ஆட்சியில் அவர் அதைப் பெருமளவு குறைப்பார் என்று அவர்கள் நம்புவதையே காட்டுகிறது. ரோம்னி வியாபாரப் பின்னணியைக் கொண்டிருப்பதால் அவர் வியாபாரிகளுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் லாபம் பெற்றுத்தரும் செயல்முறை அயலாக்கத்தை கட்டுப்படுத்துவார் என்று சாதாரண அமெரிக்க மக்கள் நம்பாததில் ஆச்சரியமில்லை.

கல்வி, சுய வேலை வாய்ப்பு ஆகியவற்றிலும் ஒபாமாவின் பணிகள் பாராட்டப்படுகின்றன. 'அமெரிக்காவில் பலர் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறார்கள். இதைத் தடுப்பதற்காகக் கல்வித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்கிறார் ஒபாமா. இதன் மூலம் சொந்தத் தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பும் பெருகும்' என்று கூறுகிறார் அம்பரீஷ்.

பொருளாதார ரீதியில் ஒபாமா ஆட்சேபத்துக்குரிய நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார். தனியார் நிறுவனங்களின் வரிச் சுமையை அவர் அதிகரித்தார். அரசின் வருமானத்தைப் பெருக்குவதற்கான இந்த நடவடிக்கை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. 'அமெரிக்க நிறுவனமான ஜிஎல் மோட்டார்ஸ் அமெரிக்காவில் தனது வியாபாரத்தை கணிசமாகக் குறைத்துக்கொண்டு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிளைகளை அதிகரித்துள்ளது. லாபத்தை மட்டுமே நோக்கமாகக்கொண்ட முதலாளித்துவ நிறுவனங்கள் தேச நலனை முன்னிறுத்திச் சிந்திப்பதில்லை. எனவே பெரு முதலாளிகளைப் பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் போதிய ஆதரவைப் பெறாது என்பதே அமெரிக்க யதார்த்தம். தவிர, தொழில் துறை வளர்ச்சிக்கான எந்த வலிமையான நடவடிக்கையையும் ஒபாமா எடுக்கவில்லை என்பது அவர் ஆட்சியின் முக்கியமான குறை என்ற கருத்து அமெரிக்காவில் உள்ளது' என்பதை அம்பரீஷ் சுட்டிக் காட்டுகிறார்.

என்றாலும் அமெரிக்க வெகு மக்கள் ஆதரவு ஒபாமாவுக்குக் கிடைத்திருக்கிறது. பெரு முதலாளிகளை மட்டும் நம்பி அமெரிக்க அரசியல் நடக்கவில்லை என்பதன் அடையாளமாக இதைப் பார்க்கலாம். ஒபாமாவின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் அமெரிக்காவின் சாமானிய மக்களுக்கு நன்மை தரும் என்ற நம்பிக்கையின் அடையாளமாகவும் அவரது அண்மைய வெற்றியைப் பார்க்கலாம்.

சமூக அளவில் பார்த்தால் பெண்கள், தொழிலாளிகள், சிறுபான்மையினர் ஆகியோர் இப்போதும் ஒபாமாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். சமுதாய அவலங்களாகப் பார்க்கப்பட்ட பாலினச் சிறுபான்மையினரின் உரிமைகளை மீட்டுத்தர வல்லவராகவும் அவரை நம்புகிறார்கள். இவற்றின் மூலம் அமெரிக்காவை அதன் பிற்போக்குத்தனங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கும் முற்போக்காளராக அவர் பார்க்கப்படுகிறார். இவ்விஷயங்களில் ஒபாமா புரட்சிகரமான மாற்றங்கள் எதையும் செய்துவிடவில்லை என்றாலும் அவர் ஏற்படுத்தியுள்ள சலனங்கள் வேறொருவரால் சாத்தியப்பட்டிருக்காது என்ற எண்ணம் நிலவுகிறது.

அமெரிக்கா என்றுமே ஜனநாயகம் என்னும் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் நாடு. தனிநபர் சுதந்திரம் மிக முக்கியமாகக் கருதப்படும் சூழல் அங்கு நிலவுகிறது. மனித உரிமை சார்ந்த குரல்களும் ஓங்கியே ஒலிக்கும். ஆனால் தங்களுக்கு எதிரி என்று அமெரிக்கா கருதும் நாடுகள் அல்லது மக்கள் பிரிவினரின் மனித உரிமை மற்றும் சுதந்திரம் பற்றி அலட்டிக்கொள்ளும் பழக்கம் அமெரிக்காவுக்கு இல்லை. இங்குதான் ஜார்ஜ் புஷ் அல்லது மிட் ரோம்னி போன்றவர்களைக் காட்டிலும் ஒபாமா போன்ற ஒருவரின் தலைமை குறியீட்டு முக்கியத்துவம் பெறுகிறது. அனைவருக்குமான மனித உரிமைகள், சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை அர்த்தபூர்வமாக முன்னெடுப்பதற்கான வாய்ப்பு உருவாகும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியவராக ஒபாமா இருக்கிறார். இதற்காகப் போராடுபவர்கள் பிறரைக் காட்டிலும் ஒபாமாவின் மீது கூடுதலான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. அமைதி விஷயத்தில் அவர் எதைச் சாதித்தார் என்ற கேள்வி அவரது விமர்சகர்களால் எழுப்பப்பட்டது. செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் பல இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரை ஊடுருவச் செய்து எண்ணற்ற தாக்குதல்களை நடத்தியதால் 'அமெரிக்கா இஸ்லாமியர்களின்' எதிரி என்ற கூற்று வலுப்பெற்றது. இந்த அவப்பெயரிலிருந்து அமெரிக்காவை விடுவிக்க ஒமாமா ஓரளவாவது நடவடிக்கை எடுத்திருப்பதாகப் பரவலான கருத்து நிலவுகிறது. ஈராக், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்கப் படைகளைக் குறைத்துவருவது, 2014க்குள் ஒட்டுமொத்த்மாக ஆஃப்கானிஸ்தானிலுள்ள படைகளை திரும்பப் பெற்ப்போவதாக அறிவித்திருப்பது ஆகிய நடவடிக்கைகள் சர்வதேச அரங்கில் ஒபாமாவின் அமைதி விரும்பி என்னும் படிமத்தைக் கூட்ட உதவியிருக்கின்றன. சிரியா, லிபியா போன்ற நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர், ஈரானின் அணு ஆயுதக் கொள்கை போன்ற பல விஷயங்களில் அமெரிக்கா நிதானம் காட்டியிருப்பதையும் ஒபாமா விளைவு என்றே சொல்ல வேண்டும். ஜார்ஜ் புஷ் காலத்துச் சர்வதேச அரசியலிலிருந்து விலகிய அணுகுமுறையான இது பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. 'ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தினால்அதன் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பேன்' என்று தேர்தல் பிரச்சாரத்தில் ரோம்னி பேசியது இங்கே நினைவுகூரத்தக்கது.

அதே சமயத்தில் பயங்கரவாதத்தைத் தான் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் ஒபாமா காட்டிவருகிறார். அமெரிக்காவின் மிகப் பெரிய எதிரியாகப் பார்க்கப்பட்ட ஒசாமா பின் லேடன் இஸ்லாமிய நாடுகளுக்கும் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினார். அவர் மறைந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவரைக் கொன்றது ஒபாமா ஆட்சிக் காலத்தின் மாபெரும் சாதனையாக அமெரிக்கர்களால் கருதப்படுகிறது. 'பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த நிதி உதவியைக் குறைத்த அவர், தாலிபான்ளை ஒடுக்குவதற்கான போர் உபகரணங்களை அதிகமாக வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார். பாகிஸ்தானில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக்குவதற்கும் முயற்சித்து வருகிறார்' என்று கூறுகிறார் அம்பரீஷ். ஆனால் ஈழ விவகாரத்தில் ஒபாமாவின் செயல்பாடு பாராட்டத்தக்க விதத்தில் இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது. இறுதிப் போரில் இல்ங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறலகளை விசாரிக்க ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டுவந்ததற்காகத் தமிழீழ ஆதரவாளர்கள் ஒபாமாவைப் பாராட்டினாலும் இலங்கையில் நடந்த மாபெரும் படுகொலைகளைத் தடுக்கத் தவறியதற்காக விமர்சிக்கிறார்கள்.

இறுதிப் போர் நடந்துகொண்டிருந்தபோது ஒபாமா அரசு அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. கார்கில் போர் நடந்தபோது அதை நிறுத்த அமெரிக்கா மிகுந்த முனைப்புடன் செயல்பட்டதை இங்கு நினைவுகூர வேண்டும். கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டுமல்ல, இலங்கை ராணுவத்துக்கு மறைமுகமாக உதவியது என்றும் குற்றம் சுமத்தப்படுகிறது. அதிபர்கள் மாறினாலும் ஈழ விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறுவதாகத் தெரியவில்லை.

உலக நாடுகளின் மீதான அமெரிக்க அரசின் அணுகுமுறை பெரிதளவில் மாறிவிடவில்லை என்கிறார் பத்திரிகையாளரும் எழுத்தளருமான நீதிராஜன். 'அமெரிக்கா உலகை ஆள நினைக்கிறது என்று கூறுவது தவறு. அமெரிக்கா உலகை ஆண்டுகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுமே அமெரிக்காவின் காலனி நாடாகத்தான் செயல்பட்டுவருகின்றன. 'அண்டர் அச்சீவர்' (Underachiever) என்றும், ஊழல் ஆட்சிக்குத் தலமை தாங்குகிறார் என்று அமெரிக்காவின் டைம் பத்திரிகை விமர்சித்த சில நாட்களில் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவைக் கொண்டுவருகிறார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். இதைவிட வேறென்ன நிரூபணம் வேண்டியிருக்கிறது?' என்று நீதிராஜன் கேட்கிறார்.

'சீனா அமெரிக்காவுக்கு நிகரான சக்தியாக வளர்ந்துவருவதைச் சிலர் சுட்டிக்காட்டலாம். ஆனால் சீனாவும் அமெரிக்காவின் நேச நாடு போலத்தான் செயல்பட்டுவருகிறது. சோவியத் இருந்த வரை, உலகுக்கு அமெரிக்கா, சோவியத் ஆகிய இரு தலைமையிடங்கள் இருந்தன. சோவியத் உடைந்த பின் அனைத்து நாடுகளும் அமெரிக்கக் குடையின் கீழ் வந்துவிட்டது. மேலும் அமெரிக்கா நினைத்தால் ஒரு குற்றவாளியைக் கொடூரமான சிறைகளில் அடைத்து அவரை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கொடுமைப்படுத்த முடியும். எந்த சர்வதேச அமைப்பும் இதைத் தட்டிக்கேட்க முடியாது. அமெரிக்க அதிகாரிகளைத் தவிர வேறெந்த சர்வதேச அமைப்பினரும் நுழைய முடியாத சிறைகளும் அமெரிக்காவில் இருக்கின்றன. அமெரிக்காதான் உலகத்தின் சர்வாதிகாரி என்று சொல்ல இவை போதாதா?' என்று வினவுகிறார் நீதிராஜன்.

ஒபாமா போன்ற தனிநபர்கள் எவ்வளவுதான் வித்தியாசமாகச் சிந்தித்துச் செயல்பட நினைத்தாலும் அமெரிக்காவின் அடிப்படைக் குணத்தையும் அதன் சட்டாம்பிள்ளைத்தனத்தையும் மாற்ற முடியாது என்பதே நீதிராஜனின் பார்வை. ஆனால், அமைதி, சமத்துவம் ஆகியவற்றில் நம்பிக்கை அற்ற ஒரு அமெரிக்கருக்கும் ஒபாமா போன்ற ஒருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் அமெரிக்காவின் செயல்பாடுகளில் சிறிதளவேனும் பிரதிபலிக்கும் என்பதை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது. 'ஆட்சி அதிகாரத்தில் பெண்களின் பங்கை அதிகரித்திருப்பது, அடித்தட்டு மக்களின் நலனுக்காக சில நடவடிக்கைகளை எடுத்திருப்பது ஆகியவற்றால் அமெரிக்கவாழ் மக்கள் அவரை ஒரு முற்போக்காளராகப் பார்ப்பதில் நியாயமிருக்கிறது. அமெரிக்க உள் விவிகாரங்களில் அவர் ஒரு முற்போக்காளராகச் செயல்படுவதில எந்தத் தடையும் இருக்காது' என்பதை நீதிராஜன் ஒப்புக்கொள்கிறார். இந்த வித்தியாசம்தான் அமெரிக்காவின் சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்களின் பார்வையில் ரோம்னியை விட அவரை மேலானவராகக் காட்டியிருக்கிறது. இந்த வித்தியாசத்தில்தான் ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கான விதையும் இருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமா பதவி ஏற்றபோது இருந்த நம்பிக்கையின் பேரொளியும் உற்சாக அலையெழுச்சியும் இப்போது இல்லை. அதே சமயம் மக்கள் ஒபாமாவின் மீதான நம்பிக்கையை முற்றாக இழந்துவிடவும் இல்லை. அவர் பெற்ற வெற்றி மகத்தானதல்ல என்றாலும் பலவீனமானதும் அல்ல. மாற்று சக்திகளின் மீதான நம்பிக்கையின்மையும் ஒபாமாவின் வெற்றிக்கு ஒரு காரணம். ஒபாமா பெற்றிருக்கும் இரண்டாவது வாய்ப்பை மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகக் காண முடியவில்லை. இன்னமும் மிச்சமிருக்கும் நம்பிக்கையின் அடையாளமாகவே காண முடிகிறது. பொருளாதாரம், சுற்றுச்சூழல், உலகில் நிலவும் ஏழ்மை, உலக அமைதி, பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போராட்டங்கள் என நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சவால்கள் பெருமளவு இப்போதும் அப்படியேதான் இருக்கின்றன. இவற்றில் எல்லாம் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த ஒபாமாவுக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

ஒபாமாவுக்கு இது இரண்டாவது வாய்ப்பு மட்டுமல்ல. இதுவே கடைசி வாய்ப்புமாகும். அமெரிக்காவின் ஆதிக்கப் போக்கையும் முதலாளித்துவ சுயநலங்களையும் மீறி அமெரிக்காவிலும் உலகிலும் ஆக்கரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முனைப்புகளை அவர் மேற்கொண்டால் வரலாற்று நாயகனாக அவர் சரித்திரத்தில் இடம்பெறலாம். அதை அவரால் செய்ய முடியாமல் போனால் பத்தோடு ஒன்றாகப் பட்டியலில் சேர்ந்துகொள்ளலாம்.

காலம் மாற்றத்தை வேண்டி அவரை அறைகூவி அழைக்கிறது. அவர் என்ன செய்யப்போகிறார்?

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=8&contentid=8425ca89-4d2b-4247-a0eb-43e66e6dc7d1

[size=4]

இறுதிப் போர் நடந்துகொண்டிருந்தபோது ஒபாமா அரசு அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
[/size]

[size=4]அவர் பதவி ஏற்றது தை மாதத்தில். பிரச்சனை உக்கிரம் அடையத்தொடங்கிய காலத்தில் பதவி ஏற்ற அவரால் சித்திரை மாதம் அறிக்கையை தவிர வேறு ஏதும் செய்ய முடியவில்லை. [/size]

[size=4]

ஒபாமா போன்ற தனிநபர்கள் எவ்வளவுதான் வித்தியாசமாகச் சிந்தித்துச் செயல்பட நினைத்தாலும் அமெரிக்காவின் அடிப்படைக் குணத்தையும் அதன் சட்டாம்பிள்ளைத்தனத்தையும் மாற்ற முடியாது என்பதே நீதிராஜனின் பார்வை.
[/size]

[size=4]உண்மை. ஆனால் ஒரு சீன வல்லரசின் கீழ் வாழ்வதை விட மேற்குலக வல்லரசின் கீழ் வாழ்வதை பெரும்பாலான உலக மக்கள் விரும்புகின்றனர், சீன மக்கள் உட்பட.[/size]

[size=4]

காலம் மாற்றத்தை வேண்டி அவரை அறைகூவி அழைக்கிறது. அவர் என்ன செய்யப்போகிறார்?
[/size]

[size=4]ஈரான் மீது யுத்தத்தை ஆரம்பிக்காமல் (இஸ்ரேலுக்கு செவி சாய்க்காமல்) செயல்பட்டாலே பெரிய நன்மை உலகிற்கு. [/size]

[size=1][size=4]வரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்தால்..... ஆறுதல் ![/size][/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.