Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேட்டையன்– சித்தாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டையன்– சித்தாந்தன்

ved-head1.jpg

ஆத்மார்த்தனுக்கு அன்றைய பொழுது எரிச்சலுடனேயே விடிந்தது. அறையின் மூலைக்குள் இருந்து தவளை ஒன்று கத்துவதைப்போல அவன் மனைவியின் குரல் ஒலித்தது. ‘எழும்புங்கோ உங்களை யாரோ தேடி வந்திருக்கிறார்’

இந்தக் காலை வேளையில் தன்னை யார் தேடி வந்திருப்பார்கள்? அதுவும் இன்று விடுமுறை நாள். மிக்க அலுப்பும் சோர்வும் படர கட்டிலிலிருந்து எழுந்து கொண்டான். நீண்டதோர் பெருமூச்சு.

காலை எழுந்தவுடனேயே வாயலம்பாமல் தேநீர் பருகும் பழக்கத்தைக் கொண்டவன் ஆத்மார்த்தன். ஆனால் சில நேரங்களில் இந்த வழக்கத்தை மறுதலிப்பது போலவும் அமைந்து விடுவதுண்டு. இரவு முழுக்கவும் தன்னுடைய பண்ணையின் கணக்குகளைப் பார்த்து முடித்துவிட்டுத் தாமதமாகத்தான் படுத்தான். இரண்டோ அல்லது மூன்றோ மணித்தியாலங்கள்தான் நித்திரை கொண்டிருப்பான். அதையும் யாரோ வந்து கெடுத்துவிட்டார்களே!

எரிச்சல் தலைக்கேறியது அவனுக்கு.

அவனுக்கு மனைவிமீதுதான் கோபம் மேலிட்டது. ‘தான் அந்தக் காலையிலேயே எங்கோ வெளிக்கிட்டுப் போயிட்டன் என்று ஏதாவது பொய் சொல்லி வந்திருப்பவரை அனுப்பியிருக்கலாம். இப்ப நித்திரைகொள்ள விடாமல் கெடுத்திட்டாளே’

‘என்னப்பா செய்யிறியள்? சாமி காத்துக்கொண்டிருக்கிறார்’ என மனைவி மீண்டும் வந்துஅறிவித்தாள்.

‘சாமியா?’

இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘என்னைத் தேடி எந்தச் சாமி ஏன் வர வேணும்? இவளுக்கு விசர் போல. ஆரோ பிச்சைக்காரனாக்கும், சாமி என்று சொல்லிக் கொண்டு, காசு பறிக்க வந்திருக்கிறாங்களாக்கும்’ என்று நினைத்துக் கொண்டான்.

முன்பும் ஒரு முறை சாமி என்று சொல்லிக் கொண்டு, ஒரு ஆசாமி வந்திருந்தான். அப்ப இவள் மூத்தவனை வயிற்றில் சுமந்திருந்தாள். வந்த ஆசாமி அதைப் புரிஞ்சு கொண்டு, எடுத்த எடுப்பிலேயே ‘உங்களுக்குச் சிங்கக் குட்டி பிறக்கப்போகிறான்’ என்றான். இவளும் வியந்து போய், பக்திப் பரவசமாகி நின்றாள். இதைப் புரிஞ்சு கொண்ட ஆசாமி, ‘ஆனாலும் சின்னக்குறையிருக்கு. நாகபூசினி அம்மாளுக்குக் காணிக்கை செய்யவேணும். எல்லாம் நிவர்த்தியாகும். அம்மாள் நிச்சயமாக் கைவிடமாட்டாள்’ என்றான்.

இவள் மனம் பதறிப்போய், பண்ணையில் நின்ற ஆத்மார்த்தனுக்குப் போன் பண்ணி, ‘உடன வாங்கோ, அவசரம்’ என்றிருக்கிறாள். ஆத்மார்த்தனும் ஏதோ என்னவோ என்று பதறியடித்துக் கொண்டு வந்தான்.

வீட்டு வாசலில் காவி உடையோட ஒருவர் அமர்ந்திருக்க அவருக்கு முன்னால் இவள் நின்றிருந்து குருபதேசம் கேட்டவளாய் இருந்தாள்.

‘சாமி இவர் வந்திட்டார்’ என்று பவ்வியமாய்க் கூறவும், சாமி, ‘வாங்கோ தம்பி’ என்று அழைத்தார். இவனும் மனைவிக்கு அருகே போய் நின்றான்.

‘பாருங்க தம்பி, உங்களுக்கு சிங்கக் குட்டி பிறக்கப்போகிறது. சந்தோசம் பாருங்கோ. ஆனாலும் அம்மனுக்குக் காணிக்கை செலுத்தி தோஷ நிவர்த்தி செய்யுங்கோ’ என்றார்.

இவனுக்கு சாமியின் இலக்கு என்னவென்பது புரிந்து விட்டது.

‘ஓம் சாமி, அடுத்த கிழமை போய்ச் செய்யிறம்’ என்றான்.

‘நீங்கள் வரவேணுமெண்டில்லை. நான் இண்டையோட என்ரை யாத்திரையை முடிச்சுக் கொண்டு நாளை விடிய அங்க போறன். நீங்கள் பூசைக்குரிய பணத்தைத் தந்தால், நான் செய்திட்டுப்பிரசாதத்தை தபாலில் அனுப்புவன்’ என்றார்.

ஆத்மார்த்தன் சாமி பணத்தைப் பறிப்பதில் காட்டும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டான். ஆனால், மனைவியோ, ‘நான் இந்த நிலைமையில இயலாது. நீங்களும் எப்பிடிப் போறது? பண்ணை வேலையெல்லாம் அப்பிடியே நின்றிடும். சாமியிட்டக் காசைக் குடுப்போம்’ என்றாள்.

மனைவி சாமியின் வார்த்தைகளில் பயந்து போயிருப்பதை இவன் புரிந்து கொண்டான். மனைவியைப் பதட்டப்படுத்தக் கூடாது என்பதற்காக ஐநூறு ரூபாய்த் தாளை; ஒன்றை எடுத்து சாமியிடம் நீட்டினான். சாமி, ‘இது பூசைச் சாமானுக்கே போதாது. இன்னும் ஆயிரம் ரூபாய் எண்டாலும் வேணும்’ என்றார்.

மனைவி, வீட்டினுள்ளே சென்று தன்னிடமிருந்த ஆயிரம் ரூபாவை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள்.

சாமி இவர்களின் முகவரியை வாங்கிக் குறித்துக் கொண்டு போய் விட்டார்.

போன சாமியிடமிருந்து வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தும் விபூதி பிரசாதம் வந்து சேரவில்லை. ஒரு வேளை போற வழியில சாமி சமாதி அடைஞ்சிட்டாராக்கும் என்று இவன் நினைத்தான்.

அப்படியொரு சாமிதான் இப்பவும் வந்திருக்கிறார் என்று வெறுப்போடு முகத்தைத் தண்ணீரால் துடைத்து விட்டு சாமி முன்னாலே போய் நின்றான்.

சாமியின் தோற்றம் இவனுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அழுக்கான வேட்டி உடுத்திருந்தார். மேலாடை இல்லை. தலைமயிரும் புலுண்டிப்போன புல்வெளியைப்போல செம்படை தட்டிக் கிடந்தது. கையில் ஒரு கறுப்புப் பை. இவரைச் சாமி என எப்பிடி நம்புவது என இவனுக்குச் சங்கடமாக இருந்தது.

‘வா. ஆத்மார்த்தா’ என்று தனக்கு அருகே அமரும்படி கையால் நிலத்தைத் தட்டிக் காட்டினார் சாமி. இவன் ஒரு கணம் அதிர்ந்து விட்டான். ஆனாலும் பேசாமற்போய் அவரின் அருகில் அமர்ந்தான்.

பண்ணையிலோ வீட்டிலோ ஊரிலோ யாரும் இவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லை. இந்தாள் கூப்பிடுதே என்ற கோபம் மனதுக்குள் எழுந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவரின் அருகில் உட்கார்ந்தான்.

‘மகனே நீ சாதாரணவனில்லை. இந்த ஊரையே ஆளப்பிறந்தவன்’ என்று சாமி பேச்சைத் தொடர்ந்தார். இவனுக்குத் தலைகால் பிடிபடவில்லை. தன்னை ஒருவர் வீட்டுக்குத் தேடி வந்து இப்படிச் சொல்வது, இவனுக்கு வியப்பை அளித்தது. அதே நேரம் காசு கீசு கேட்கத்தான் இப்படி அதிர்ச்சியான வார்த்தைகளைச் சொல்கிறாரோ என்ற சந்தேசமும் இவனுக்கு வந்தது.

‘தம்பி நான் உன்னட்ட காசு எதையும் எதிர்பார்த்து வரேல்ல. உனக்கு ஒளியைக் காட்டவே வந்திருக்கிறேன்’ என்றார் சாமி.

இவன் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து விட்டான். சாமி, ஆசாமியில்லை.

உண்மையான சாமிதான் என நினைத்தான். தான் நினைப்பதையெல்லாம் அப்படியே சொல்கிறாரே!

இவன் தன்னையறியாமலே அவருடைய கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்;கொண்டான். அவரையே கூர்ந்து பார்த்து எதையே வேண்டிக் காத்திருப்பவன்போலானான்.

சாமி தொடர்ந்தார்.

‘மகனே, கேள். நான் சொல்லப்போகும் வழி உனக்கு இந்த ஊரிலேயே மதிப்பைத் தேடித்தரும். ஆதலால், நீ அதைப் பின்பற்ற வேண்டும். கடவுளின் கிருபையால் நீ சூழப்பட்டிருக்கிறாய். உன்னைத் துன்பம் சூழாது. எப்பவும் இன்பமே பெருகும். நீ உனது பயணத்துக்குத் தயாராக வேணும். பாதை கரடு முரடானது. நாட்களும் உனக்கு அதிகம் தேவைப்படும். பசி, தாகம் உன்னை வாட்டும். ஆனாலும் நீ சோர்ந்து போய் விடக்கூடாது.

இவன் சாமியின் சீடனாகி அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். மனதில் உள்ளுரக் கிளர்ச்சி பெருகியது. கண்களில் பரவசத்தின் ஈரத்துளிகள் பெருக்கெடுத்தன. தன்னை மறந்து நிஷ்டையிலிருக்கும் சாமி போன்ற பாவனை தனக்குக் கூடிவருவதாய் நினைத்துக் கொண்டான்.

சாமியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இறைவாக்காய் காதுகளில் ஒலித்தன.

sithanthan1-867x1024.jpg

‘மகனே இன்றிரவே நீ பயணத்தைத் தொடங்கு. இரவு வேளை மட்டுமே நீ பயணம் செய்ய வேண்டும். பகலில் நகரவே கூடாது. மனிதர்களின் கண்களுக்கு படுவாயாக இருந்தால், நீ பயணத்தை அத்தோடு முடித்து விட்டு, மீண்டும் வீடு வந்து திரும்பவும் பயணத்தைத் தொடங்க வேண்டும்.

நீ இன்றிரவே உன் ஊரை அடுத்துள்ள ஆற்றைக் கடக்க வேண்டும். பயணத்தின் மூன்றாவது நாள், ஒரு புல்வெளியை அடைவாய். அந்தப் புல்வெளியை அடர்ந்து மூடியுள்ள இருளில் நீ ஒரு ஜோகியைக் காண்பாய். அந்த ஜோதியின் அருகே சென்று பார். அதில் ஒரு மந்திரக் கல் இருக்கும். அதுவே உனக்கு மீதி வழியைக் காட்டும். நீ யாராலும் அடைய முடியாத பெரும் பேற்றைப் பெறுவாய். நீ இந்த ஊரின் மகா மனிதனாவாய்.

இவனுக்கு மந்திரக்கல், அது வழிகாட்டும் என்றெல்லாம் சாமி சொன்னபோது இவர் ஏதோ கதை விடுகிறார் என்றே தோன்றியது. இதெல்லாம் இந்தக் காலத்தில் சாத்தியமா, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

‘சந்தேகப் படாதே! இன்றே வெளிக்கிடு’ என்று சாமி சொன்னதும் இவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. இவன் ஒரு பொம்மை போலாகித் தலையை ஆட்டினான்.

மனைவி சாமிக்குத் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். சாமி அதை மறுத்து விட்டார். ஆத்மார்த்தன் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய பின் தானே வருவதாகக் கூறிவிட்டு அவர் எழுந்து சென்றார்.

ஆத்மார்த்தன் அன்று பண்ணைக்குப் போகவில்லை. தன் உதவியாளனை பண்ணையைக் கவனிக்கும் படியும் தான் வெளியூர் செல்வதால் பத்து நாட்களின் பின்னே, ஊர் திரும்புவதாகவும் அன்றைக்குமான கணக்குகளை அன்றன்றே பூர்த்தி செய்து மனைவியிடம் ஒப்படைக்கும் படியும் தொலைபேசியில் தெரிவித்தான்.

சாமி சொன்ன பெரும்பேறு எதுவாக இருக்கும் என அறிய அவனிற்கு ஆவலாக இருந்தது. மனைவியும் அந்தப் பதகளிப்பிலேயே இருப்பதை அவன் புரிந்து கொண்டான்.

பயணத்தின் பின் தனக்கு இந்த ஊரிலிருக்கும் செல்வாக்கு இன்னும் பன் மடங்காகும் என நினைத்துக் கொண்டான். ஊரில் செல்வாக்கு உயர்ந்தால், இப்ப இருக்கிற காரை விற்றுப் புதிய கார் ஒன்றை வாங்க வேண்டும் எனவும் நினைத்தான். பயணம் தனித்தது என்றபோதும் தன்னால் அந்த இலக்கு அடையப்பட வேண்டும் என்பதில் அவன் குறியாக இருந்தான்.

வேதாளம் சொன்ன கதை என்ற தலைப்பில் அம்புலிமாமா புத்தகத்தில் படித்த விக்கரமாதித்தனை விடவா தான் சாகஸங்கள், தடைகளைச் சந்திக்கப்போகிறேன் என நினைத்தான்.

பயண ஒழுங்குகளை எல்லாம் செய்தாயிற்று. மனைவி பல்வேறு உணவுகளையும் பொதியாகக் கட்டிக் கொடுத்தாள். தண்ணீர்ப் போத்தலிரண்டு. மாற்றுத்துணிகள், எல்லாமே பயணப் பையினுள் ஒழுங்கு படுத்தப்பட்டன.

யாருக்கும் இந்த விடயங்களைப் பற்றிக் கூறவேண்டாம் என மனைவியிடம் சொல்லி வைத்தான்.

பொழுது மங்கிக்கொண்டே வந்தது. சரியாகப் பத்து மணிக்குப் பயணத்தைச் செய்வது என ஏற்கனவே தீர்மானித்திருந்தான். இவன் மகனை ஒரு தடவை தூக்கி முத்தமிட்டான். இளையவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். மனைவியிடம் பிள்ளைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விடைபெற்றான்.

ஊர் அடங்கிப் போய்க் கிடந்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்தே ஆற்றங்கரையை அடைய வேண்டும். நடையைத் துரிதப்படுத்தினான். மனதில் பெருகிய ஆர்வமிகுதி இவனின் களைப்பைப் போக்கியது. ஆற்றங்கரையை அடைந்தான்.

ஆறு ஓசையற்று ஓடிக் கொண்டிருந்தது. காற்று உறைந்து போய் மரங்களினடியில் கிடப்பதாய் நினைத்தான். இலைகளின் அசைவுகள் இல்லை. அருகே இருந்த மரத்தில் இடையிடையே பறவையொன்றின் சிறபடிப்பு மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

ஆற்று நீரின் அளவு குறைந்து விட்டதால், ஆற்றை நடந்தே கடக்க முடியும் என்பது ஆறுதலளித்தது. ஆற்றில் இறங்கினான். முழங்கால் அளவில் நீர். பயணப்பை நனைந்து விடாமல் தலையில் எடுத்து வைத்தான். நடக்கத் தொடங்கினான்.

பாதங்களில் கற்கள் உறுத்தின. சில இடங்களில் மணலில் கால்கள் புதைந்து கொண்டன. பாதங்களைக் கவனமாக எடுத்து வைத்தான். கரை அண்மித்ததை நீரின் அளவு குறைந்து உறுதிப்படுத்தியது.

சிறிது நேரம் ஆற்றின் கரையில் அமர்ந்திருந்தான். சற்றுத் தொலைவில் மனிதர்கள் சிலர் உரையாடும் ஒலி கேட்டது. சிறு சிறு நெருப்புப் பொட்டல்களும் தென்பட்டன. அவர்கள் புகை பிடிக்கிறார்கள் எனப் பட்டது. இந்த இடத்தில் தொடர்ந்திருப்பது பொருத்தமில்லை என நினைத்தவன், கரையை அடுத்துள்ள காட்டுப் பாதையில் நடக்கத் தொடங்கினான். கையில் டோச்சை எடுத்துக் கொண்டான். பற்றைக் காடு முன்னரே நடந்து பழக்கப்பட்ட வழிகள்தான் என்றபோது இந்த நடு இரவில் நடப்பது, அதுவும் தனியாக மனதுக்குப் பயமும் பதட்டமும் ஏற்பட்டாலும் நடந்தான்.

அன்றைய பொழுது விடிந்தது. பற்றைக் காட்டைக் கடந்திருந்தான். அப்பால் அடர்ந்த காடு தென்பட்டது. அன்றைய பகற் பொழுதைப் பற்றைக் காட்டினுள் கழிப்பதாக முடிவெடுத்தான். உயர்ந்து வளர்ந்த மரமொன்றின் கீழ் தன் இருப்பிடத்தைத் தீர்மானித்தான்.

தண்ணீர்ப் போத்தலை எடுத்துக் குடித்தான். முகத்தையும் தண்ணீரால் துடைத்துக் கொண்டான். மனமும் உடலும் அசதி கண்டன. கால்கள் வலித்தன. மரத்தில் சாய்ந்து உடலை நிமிர்த்தி உழைவெடுத்தான்.

சூரியன் வானில் ஏற ஏற மனதுக்குள் சந்தோசம் ஏற்பட்டது. இன்னும் இரண்டு நாட்கள் நடக்க வேண்டும். அந்தக் கல் கிடைத்து விட்டால்…. போதும். இலகுவாக எல்லாவற்றையும் அடைந்து விடலாம். மனைவி தந்து விட்ட உணவுப்பொதியை அவிழ்த் சாப்பிட்டான். தண்ணீரை அளவுடன் பருகி மீதியைச் சேமித்துக் கொண்டான்.

பொழுது இருட்டத்தொடங்கியது. மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான். காட்டு வழியில் பயணம் தொடங்கியது. இரவை குழப்பாமல் அதன் நிசப்தத்திற்கு ஏற்றவாறு நடந்தான். சருகுகளை மிதிக்கும்போது எழும் ஓசைகளும் மிருகளின் காலடி ஓசை கேட்டு எழுந்தோடும் ஒலிகளும் அவனைத் திகிலுறச் செய்தன.

இடையுறாது நடந்தான். அடுத்து வந்த இரண்டு இரவுகளுமே திகில் நிறைந்தவையாகவே இருந்தன. பொழுது விடியத் தொடங்கியபோது காட்டின் மறுகரையை அடைந்திருந்தான். அடுத்து விரிந்து கிடந்தது புல்வெளி. சாமியின் கணக்குத் தப்பவில்லை. மூன்று இரவுகளின் பின் அவன் புல்வெளியை அடைந்தான். அன்றைய பொழுதையும் காட்டிலேயே கழித்தான்.

மனம் முழுமையாகச் சாமியாரின் நினைவிலேயே உறைந்து கிடந்தது. அவர் மகா ஞானிதான் என எண்ணினான். புல்வெளியைக் கூர்ந்து பார்த்தான். பசுமை இவனை ஈர்த்துக் கொண்டது. மரங்களிடையே மறைந்திருந்து, ரசிக்க வேண்டியிருக்கிறதே இதை என்ற ஏக்கம் மனதை வதைத்தது. வெளியையும் கடந்து பார்வையை விரித்தான். தொலைவில் மரங்கள்தான் தெரிந்தன. மனிதர்கள் யாரேனும் வந்து விடக்கூடாது என கடவுளைப் பிரார்த்தித்தான்.

யாரேனும் கண்டு விட்டால்…? திரும்பி நடக்க வேண்டிய தூரத்தையும் திரும்பவும் பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் நினைத்து அவதானந்தான் இந்த இடத்தில் முக்கியமென்பதைப் புரிந்து கொண்டான்.

பொழுது உலர்ந்து கருமை படரத்தொடங்கியது. புல்வெளியின் மீது இரவு படுக்கத் தொடங்கியது போல இருந்தது. வானத்தை அண்ணாந்து பார்த்தான். நட்சத்திரங்களும் பாதி தேய்ந்த நிலாவும் ஒளிர்ந்தபடியிருந்தன.

புல்வெளியைப்பார்த்தான். சாமி சொன்ன ஜோதி தென்படவில்லை. புல்வெளியில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

சிறிது தூரந்தான் சென்றிருந்தான். ஜோதி கண்ணிற் பட்டது. மனம் குதூகலத்திற் துள்ளியது. பொங்கிப் பெருகிய பரவசம் அவனை அதை நோக்கித் துரத்தியது. நடந்தான். ஓடினான். ஜோதியின் அருகடைந்தான். யார் இந்த ஜோதியை ஏற்றிச் சென்றிருப்பார்கள்? வானத்திலிருந்து தவறி வீழ்ந்த சூரியக் குஞ்சாய், அது ஜொலித்தது. அருகே சென்றான். அதனருகே படிகக் கல் ஒன்றிருந்தது. அதனைக் கைகளில் எடுத்துக் கொண்டான். கைகள் கூசின. அவன் தன்னிலை மறந்தான். அது அவனை வழி நடத்தியது.

காற்றில் அலையும் ஒரு இறகைப்போல தான் மிதப்பதாய், உணர்ந்தான். சில நாழிகைகள்தான் கடந்திருக்கும். இவன் ஒரு ஆசிரமத்தின் முன்னே வந்து நின்றான்.

புராணக் கதைகளில் வரும் வர்ணனைகள் யாவும் பொருந்தியிருந்தது அந்த ஆசிரமத்தில். சதா பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. சற்றுத் தொலைவில் ஆறு ஒன்றின் சலசலப்புக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆசிரமத்தைச் சூழவும் பூமரங்கள் வளர்ந்திருந்தன. அந்தச் சூழலின் ரம்மியத்தில் சில கணங்கள் திளைத்துப்போனான்.

மகனே, வந்து விட்டாயா? என்ற குரலுடன் ஆசிரமத்தின் உள்ளேயிருந்து ஒருவர் வந்தார். பரிசுத்தமான ஆடையுடன், நீண்ட தாடியுடன் அவர் காணப்பட்டார்.

துறவி சாரங்க புத்திரர் உன் வரவை எனக்கு உணர்த்தியிருந்தார். சரியாகக் களைத்து விட்டாய். இந்த மரக்குற்றியில் அமர் என இவனை அவர் அமரச் செய்தார். இவனால் எதையும் தீர்மானிக்க முடியவில்லை. தன்னை அனுப்பிய சாமியின் பெயர் சாரங்க புத்திரர் என்பதை இப்போதுதான் இவன் அறிந்து கொண்டான். அவர்களுக்கிடையில் எப்படி செய்திகள் பரிமாறப்படுகின்றன என்பதெல்லாம் இவனுக்கு ஆச்சரியமளித்தது. இந்த் துறவி தன் வரவை எதிர்பார்த்திருந்தது போலவே ‘மகனே வந்து விட்டாயா?’ எனக் கேட்கிறார். எல்லாமே அற்புதங்கள் தான் என எண்ணினான்.

சாமி அவனுக்காக ஒரு குவளையில் ஏதோ பருகுவதற்குக் கொடுத்தார். இதை உனக்காகத்தான் தயாரித்தேன். தாகமாறப் பருகு என்றார். இவன் எதுவும் பேசாமல் பருகினான். அமிர்தமாக அது சுவைத்தது. அவனில் படிந்திருந்த களைப்பு நீங்கிப் போனது.

‘மகனே நீ பாக்கியசாலி. சாரங்கனால் அனுப்பப்பட்டிருக்கிறாய். அவர் என் சீடன். நானே உன்னிடம் அவரை அனுப்பினேன்.

இவனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. சாமி என் என்னை அழைக்க வேண்டும் என்பதில் குழம்பிப்போனான்.

‘சாமி, ஏன் என்னை அழைத்தீர்கள்?’ எனத் தயங்கியவாறு கேட்டான்.

‘அதற்கான விடையைத்தான் தேடி வந்திருக்கிறாய். அதை நீயே உணர்வாய்’ என்று கூறியவாறு தன் சுடடு விரலால் மேற்குத் திசையைச் சுட்டிக்காட்டி, ‘அங்கே பார்’ என்றார்.

அத்திசையில் இரண்டு குதிரைக் குட்டிகள் தொலைவில் மேய்ந்து கொண்டிருப்பதைப் போலிருந்தன.

‘அங்கே என்ன தெரிகிறது?’ என்றார் துறவி.

‘குதிரைகள்’

‘அவை குதிரைகள் அல்ல. நாய்கள்’

‘நாய்களா?’

இவனால் நம்ப முடியவில்லை. நாய்கள் இந்த அளவுக்கு வளருமா? இவன் வீட்டில் வளர்க்கும் வெளிநாட்டு வகை அல்ஷேஸனே அதிக உயரமான நாய் என்று நினைத்திருந்தான். இவற்றின் உயரம்?

சாமி இவனைத் தன்னோடு வரும்படி அழைத்தவாறு நடந்தார். இவனும் தொடர்ந்தான்.

அவற்றின் அருகே வந்த பின்தான் அவதானித்தான். அவை புல் மேய்ந்தபடியிருந்தன. முகங்களைக் கூர்ந்து பார்த்தான். நாயின் முகங்கள். நாய்கள் புல் மேயுமா?

துறவி சொன்னார். ‘மகனே, உனக்காகவே இவற்றைச் சிருஷ்டித்தேன். இவை தாவர உண்ணிகள். மாமிசம் தின்பதில்லை. இவற்றை நீ கூட்டிச் செல்லலாம். குருதியின் மொச்சை இவற்றின் மீது கவியாது. வளர்த்துக் கொள். நீ பெருமை பெறும் காலம் கனிந்து விட்டது. உனக்கு ஏற்பட்டிருக்கும் புதிரின் முகத்தை நீயே அவிழ்ப்பாய்’.

இவன் எதுவும் பேசவில்லை. ஆச்சரியத்துள் புதைந்து போனான். துறவியின் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.

‘எல்லா நன்மைகளும் உனக்குண்டாகட்டும்’ என ஆசீர்வதித்தார்.

‘மகனே, இப்போதே பயணத்தைத் தொடங்கு. பகல் பொழுதில மட்டுமே பயணம் செய். இரவை ஓரளவுக்குப் பயன்படுத்து. புல்வெளிகளில் இவற்றை மேயவிட்டு ஓய் வெடு. மறந்தும் இரவில் பயணம் செய்யாதே’

துறவி சொல்பவற்றை மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டான். அவரிடமிருந்து விடைபெற்றான். இவனுக்காகவே காத்திருந்தவை போல நாய்களும் அவனைப் பின் தொடர்ந்தன.

பயணம் தொடங்கியது. கொழுத்தும் பகல்களின் மீதான பயணம். புல்வெளிகளைக் காணும் போதெல்லாம் நாய்களை மேய விட்டான். நீர் நிலைகள் காணும் போதெல்லாம் நீர் பருக விட்டான். நாங்கள் இவனின் காற்தடங்களைத் தொடர்ந்த வாறிருந்தன. இவனின் சைகைகளுக்கும் வார்த்தைகளுக்கும் கட்டுண்டன.

இவனால் தன்னைச் சூழ நடக்கும் ஆச்சரியங்களையும் புதுமைகளையும் விளங்க முடியவில்லை. துறவி சொன்னதைப்போல நானே இந்தப் புதிரை அவிழ்த்து விடுவேனா?’ அப்படி என்ன புதிர் இருக்க முடியும்? இவனது சிந்தனைகள் முழுதும் துயவியின் வார்த்தைகள் மீதே கவிந்திருந்தன.

இரண்டு இரவுகளை காட்டிலேயே கழித்தவன், காலையிலேயே ஊர் எல்லையை அடைந்து விட்டான்.

ஊருக்குள் இறங்குவதற்கு முன், தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவித் துடைத்தான். நாய்களைத் தடவிக் கொடுத்தான். தெருவில் இறங்கி நடந்தான் சூரியன் மேலே எழுந்தபடியிருந்தது. வீதியில் சன நடமாட்டம் மெல்ல மெல்ல அதிகரித்தது.

எல்லோரும் குதிரைகளையே ஆத்மார்த்தன் கூட்டிச் செல்வதாயே நம்பினர். இவன் காண்பவ்களுக்கெல்லாம் தலையை அசைத்துப் புன்னகை செய்தான். சிறுவர்கள் தெருவுக்கு வந்து குதிரைகள் குதிரைகள் என ஆரவாரம் செய்தன.

தெருவின் இரு பக்கமும் சனங்கள் கூடினர். இவன் போர் முடிந்து ஊர் திரும்பும் சரித்திர காலத்தின் வீரத்தளபதியாக பாவனை செய்தவாறு நடந்தபடியிருந்தான்.

வீட்டை நெருங்கியதும் வீட்டு வாயிலில் மனைவியும் பிள்ளைகளும் காத்திருந்தனர். குதிரை குதிரை எனச் சொல்லிப் பிள்ளைகள் குதுகலித்தனர்.

ஆத்மார்த்தன் தன் பயண அனுபவங்களையும் தான் சந்தித்த துறவி பற்றியும் மனைவியுடன் பகிர்ந்து கொண்டான்.

தான்கொண்டு வந்திருப்பது குதிரையல்ல எனத் தெரிவித்தான். மனைவியால் நம்ப முடியவில்லை. குதிரையின் வடிவை ஒத்த வாம் மிடுக்கும் கொண்ட அந்த நாய்களை அவள் நன்றாகக் கவனித்தாள்.

ஆத்மார்த்தன் கொண்டு வந்திருப்பது குதிரைகளல்ல, நாய்கள் என்ற கதை ஊரெல்லாம் பரவியது. சனங்கள் வீட்டினை மொய்த்தனர். எல்லோரிடமும் தான் ஒரு வெளிநாட்டவரிடம் விலைகொடுத்து அவற்றை வாங்கியதாக இவன் சொன்னான்.

நாய்கள் புற்களைத் தின்னும் அதிசயத்தைக் கண்டு சனங்கள் வியந்தனர்.

ஆத்மார்த்தனுக்கு விலையுயர்ந்த நாய்களை வைத்திருப்பவன் என்ற பெயர் கிடைத்தது. மாலை நேரங்களை நாய்களுடனேயே செலவிட்டான். தன்னுடைய பண்ணைக்கு வடக்குப் புறமாக இருந்த காணியை வாங்கி அதில் புல்வெளியை உருவாக்கினான். வெளிநாட்டுப் புல்லினங்களை அதிலே வளர்த்தான்.

இவனுக்குப் பண்ணையிலும் வருமானம் பெருகியது. அயல் ஊர்களிலும் நிலங்களை வாங்கிவிட்டான். குறிப்பாக, தன் ஊரின் வடக்குக் கிழக்குப் பகுதிகளின் பெருவாரியான நிலங்களை வாங்கினான். தான் விரும்பும் நிலங்களை தரமறுத்தவர்களிடம் வன்முறை வழிமுறைக் கையாண்டு அபகரித்தான். ஒரு குறுநில மன்னன் போல எங்கும் உலாவந்தான்.

வெளியூர்களில் வசித்த தன் தம்பிகள் கோட்டை ராஜனையும் பட்ஷிராஜனையும் அழைத்து வடக்கிலும் கிழக்கிலுமுள்ள வயல் நிலங்களில் புற்களை நாட்டும்படி செய்தான்.

நாளுக்கு நாள் புல்வெளிகளை உருவாக்கும் திட்டம் பெருகிக் கொண்டே போனது. நாய்களுக்காகவே எல்லாவற்றையும் செய்தான். அவையே அவனது உலகாக மாறின.

மாலைவேளைகளில் தன் இரண்டு பிள்ளைகளையும் நாய்களின் மேல் இருத்தி வீதிகளில் உலாவந்தான். வரத்தொடங்கிய நாட்களில் அவனுக்கு ஊருக்குள் வேட்டையன் என்ற பெயரும் உருவாகி விட்டிருந்தது.

பெயர் மாற்றம் ஏற்பட்ட பின்னர், தன் கையெழுத்தையும் வேட்டையன் என இடுவதை வழக்கமாக்கினான்.

மறந்தும் கூட வீட்டில் நாய்களுக்கு அண்மையில் வைத்து மீன் வெட்டுவதையோ கோழியை அறுப்பதையோ இவன் மனைவி செய்ததில்லை. இவன் வீடு திரும்பி 28 ஆவது நாள், சாமி சங்கரபுத்தன் வீட்டுக்கு வந்தார். இவன் ஓடிச் சென்று அவரின் கால்களில் வீழ்ந்தான்.

அவர் இவனை ஆசீர்வதித்து, ‘மகனே, உன் வாழ்வு இனி வழமாகும். என் குருதேவர் உனக்கிட்ட அறிவுறுத்தர்களைப் பின்பற்று’ என்றார்.

மனைவி தேநீருடன் வந்து குருதேவரின் பாதங்களை வணங்கி, பருகக் கொடுத்தாள். அதை அவர் பருகினார்.

வேட்டையன் மகிழ்வில் திளைத்தான். குருதேவர் தான் புறப்படப் போவதாயும் இனி இரண்டாவது வருடம் இரண்டாவது மாதம் இரண்டாவது கிழமை வருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

வேட்டையன் தன் வாழ்வு புதிர்களால் கட்டப்படுவதை உணர்ந்தான். புதிர்களை அவிழ்த்துத் தன் வாழ்வின் இலட்சியத்தை அடைவதையே குறிக்கோளாக்கினான்.

ஊரில் அதிகாலை வேளைகளில் கூவும் சேவல் ஒலியில் தன் நாய்கள் உறக்கம் கலைந்து எழுவதைக் கண்டான். அதனால் ஊரில் சேவல் வளர்ப்பவர்களை அழைத்து சேவல்களின் வாய்களைக் கட்டி வைக்கும்படியும் அவ்வாறில்லை எனில் அவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு அந்தச் சேவல்கள் தன் வீட்டுச் சட்டியில் குழம்பாகும் என்று எச்சரித்தான்.

சேவல்கள் கூவினால் அந்த ஊருக்குப் பெரும் அழிவு சேரும் என்ற கதையத் தன் முகவர்கள் மூலமாக உலாவவிட்டான். அவர்கள் அந்தக் கதையை ஊரெல்லாம் பரப்பினார்கள். பதிலாக தன் நாய்களுக்குச் சாமத்திலும் அதிகாலையிலும் ஊளையிடுவதற்குப் பயிற்சிகளை வழங்கினான். பின்னெல்லாம் நாய்களின் ஊளையோடே பொழுதுகள் விடிந்தன.

விதியை மீறிக் கூவிய கோழிகள் வேட்டையனின் வீட்டு சட்டியில் கொதித்தன. மனைவியும் இரண்டு பிள்ளைகளும் கொழுத்தனர். இவனின் மனைவி நடப்பதற்கே சிரமப்பட்டாள்.

சேவல்களை இழந்தவர்கள் சங்கம் திரட்டி பல அமைப்புகளிடம் முறையிட்ட போதும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நள்ளிரவில் ஊளையிடும் நாய்களினால் குழந்தைகள் வெருண்டு போயின. ஊர் வறண்டு போவதைக சனங்கள் உணரத் தொடங்கினர். வேட்டையனோ புதிய புல்வெளிகளால் ஊரே அழகில் பொலிவதாய் எண்ணினான்.

நாட்கள் செல்லச் செல்ல நாங்களின் மீதான காதல் பெரும் வெறியாக மாறத் தொடங்கியது. வீட்டைம றந்து நாய்க்கூட்டிலேயே உறங்கவும் தொடங்கினான் அவன்.

தன் செல்ல நாய்களின் வனப்பிலும் சாகஸங்களிலும் மிதந்தான். மனைவி, பிள்ளைகளுடன் கழிக்கும் பொழுதுகளையும் மறந்தான். அவர்களும் இவனிடம் இருந்து அந்நியப்படுவதாய் உணர்ந்தான்.

தீடீரென ஒருநாள் தன் பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்களை அழைத்து இனிப் பண்ணையில் வேலை செய்யத்தேவையில்லை. புல்வெளிகளைப் பராமரித்தால் மட்டுமே போதும் எனக்கூறி, புல்வெளிகளுக்கு அனுப்பினான்.

பண்ணைகளிலுள்ள கோழிகளும் மாடுகளும் பட்டினியால் இறந்தன. ஊரே துர்நாற்றத்தில் ஆழ்ந்தது.

வேட்டையன் நாய்க்கூடுகளை நறுமணப் புகையினால் நிறைத்தான். தனக்கு ஊரில் மேலும் மேலும் செல்வாக்கு உயர்வதான பிரமை அவனிடம் வளர்ந்து கொண்டே போனது.

ஒருநாள் வேட்டையனின் கனவில் அவனது நாய்கள் வீதியில் சென்று கொண்டிருந்த பெண் நாய் ஒன்றினைத் துரத்தித் துரத்தி வன்புணர்ச்சியில் ஈடுபடுவதைக் கண்டான். அவற்றின் புணர்ச்சி வெறியும் அவையிடும் ஒலியும் இவனைத் திகிலடையச் செய்தன. இரண்டு நாய்களுமே அந்தப் பெண்நாயைக் கொடூரமாகப் புணர்ந்தன. அதன் பெண்ணுறுப்பிலிருந்து பெருகிய இரத்தத்தை நக்கி நக்கிக் குடித்தவாறு கொடூரமாக ஊளையிட்டன. இவன் மிகவும் பயந்து போய் கனவிலிருந்து திடுக்கிட்டு எழுந்தான். நெஞ்சு பயத்தினால் இடித்தது. பயம் தலைக்கேறி நடுங்கினான். குரு தேவன் சொன்ன மகா வாக்கியங்களை ஒரு தடவை நினைத்துப் பார்த்தான். இரத்த வெடில் இரத்த வெடில் என்று மீளவும் மீளவும் சொல்லிக் கொண்டான்.

தன் சுய நிலையை அடைந்த சிறு கணங்களின் பின் நாய்கள் உறங்கும் பக்கமாக தன் பார்வையைத் திருப்பினான். அவை மிகச் சாதுவான பிராணிகளாய் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தன. மனம் ஆசுவாசப்பட்டது.

பொழுது விடிந்தும் கனவினால் விளைந்த படப்படப்பு நீங்கவில்லை. யாரோடும் கனவு பற்றி அவன் மனம் பேசி ஆறுதலடைய விரும்பவில்லை. நாய்களையே பார்த்தபடியிருந்தான். இவை இரத்தம் குடிக்குமா? இரத்தம் குடிக்கத் தொடங்கினால், என்ன நடக்கும்? போன்றதான கேள்விகள் இவனைச் சூழ்ந்து கொண்டன.

பிறகு எழுந்து அவற்றை கூட்டிக்கொண்டு கிணற்றடிக்குச் சென்றவன் அவற்றை நன்றாக நீராட்டினான். அவற்றின் வாய்களிலிருந்து இரத்த வெடில் அடிக்கின்றதா என மோந்து பார்த்தான். இவை ஒரு போதும் குருதி சுவைக்காது என மனதை தேற்றிக் கொண்டான். நாய்களின் ஈரத்தை உலர்த்திவிட்டு புல்வெளியில் மேயவிட்டு அவற்றின் மினுங்கும் உடலைப் பார்த்துப் பார்த்து மனங்குளிர்ந்தான்.

அன்றைய காலை உணவுக்காக வீட்டுக்குச் சென்றான். மனைவி றொட்டியுடன் இறைச்சிக் குழம்பையும் இரத்த வறையையும் கொண்டு வந்து வைத்தாள்.

இரத்த வறையைக் கண்டவனுக்கு ஏதோ செய்வது போலிருந்தது. அடி வயிற்றிலிருந்து குடல் பிடுங்கப்பட்டு தொண்டைக் குழியை அடைத்துக் கொள்வதாய் உணர்ந்தான்.

தனக்கு பிடித்த இரத்தவறை இன்று தன் வயிற்றைக் குமட்டுவதை இவனால் ஜீரணிக்க முடியவில்லை. கண்களை மூடிக்கொண்டு தன் மனதை ஒரு நிலைப்படுத்தினான். பிறகு கவளம் கவளமாக அள்ளி அள்ளி இரத்த வறையை உண்டான். அதன் மீதான தாகம் அவனுக்கு அதிகரித்தது. கோப்பை காலியாகும்படி உண்டான். அவனுக்குப் போதவில்லை. மேலும் மனைவியை கொண்டு வருமாறு கூறி உண்டான். இரத்தவறை தீர்ந்தபின்னும் அவன் பசி அடங்கவில்லை. எழுந்து நாய்க்கூட்டுக்குச் சென்றான்.

தன் படுக்கையில் படுத்தவாறு யோசிக்கத் தொடங்கினான். தனது நாய்கள் புணர்ச்சியல் விருப்பம் கொண்டவையாக இருக்குமா? கனவில் கண்டது போலவே வெறி கொண்டு புணருமா? என அடுக்கடுக்காய் கேள்விகள் முளைத்தன. கேள்விகளின் முடிவில் அவனுக்கு விசித்திரமான எண்ணம் தோன்றயது ஒரு பெண் நாயை கூட்டில் விட்டுப் பார்த்தால் என்ன? கனவை ஆராயும் இவனின் வேகம் குருதேவா சொன்ற மகா வாக்கியங்களை விஞ்சி நின்றன.

தன் வேலையாட்களில் ஒருவனை அழைத்து பெண் நாய் ஒன்றினை எங்காவது பிடித்துவருமாறு அனுப்பினான்;. பிறகு தன் இரண்டு நாய்களையும் கூட்டுக்கு கொண்டுவந்து விட்டான்.

சிறிது நேரத்தில் வேலையாள் பெண்நாயுடன் வந்தான். அவனை அனுப்பிவிட்டு இவன் கூட்;டைத்திறந்து மெதுவாக நாயை உள்ளே விட்டான்.

பெண் நாய் அந்த இரண்டு நாய்களையும் பார்த்து வெருண்டு போய் மூலைக்குள் ஒதுங்கியது. நாய்கள் இரண்டும் சாதுவான பிராணிகளாய் தம் பாட்டில் படுத்திருந்தன. கனவில் கண்டது ஒரு போதும் சாத்தியமில்லை. முனிவர் பெண் வாடையின்றியே நாய்களை வளர்ந்திருப்பார் என இவன் நினைத்தான். பெண் நாயைக் கூட்டிலிருந்து வெளியேற்றுவதுதான் நல்லது என நினைத்தான். ஆனாலும் தன் நாய்கள் அதைப் புணருவதை காண வேண்டும் என்ற விருப்பு இவனின் செயலூக்கத்தை பின்தள்ளியது.

காத்திருந்தான். தன் நாய்களில் மாற்றங்கள் ஏதும் நிகழுகிறதா என்று. சற்று நேரம் சென்றதும் நாய்களில் ஒன்று எழுந்து பெண் நாயின் அருகே சென்றது. அது பயந்து மூலைக்குள் ஒதுங்கியது. நாய் அதன் முகத்தை முகர்ந்து. பின் உடலை பிறகு குறியை. அதன் கண்களில் சிவப்பேறியது. உரோமங்கள் குத்திட்டன. பெண் நாயை தன் கால்களால் அமர்த்தி அதைப் புணரத் தொடங்கியது. சாதுவாய்க் கிடந்த மற்ற நாயும் புணர்ச்சி வெறியேற பாய்ந்து வந்தது. இரண்டும் மாறிமாறி அதைப் புணர்ந்தன. பெண் நாயின் ஓலம் எங்கும் எதிரொலித்தது. நாய்கள் இரண்டும் புணர்ச்சியின் உச்சத்தில் அதன் குரல்வளையைக் கடித்தன. அதன் குறியிலிருந்து இரத்தம் பெருகியது. அவை இரத்தத்தை நக்கி நக்கிக் குடித்து விட்டு பெரும் ஊளையிட்டன. பிறகு சாதுவான பிராணிகளாகி தங்கள் இடங்களில் போய் படுத்துக் கொண்டன.

இந்த காட்சி இவனுக்கு மனதுள் பெரும் பீதியை ஏற்படுத்தியபோதும் அவற்றின் கொடூரமான புணர்ச்சி இவனுக்கு ஒரு விதமான ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.

புணர்ச்சியின் பின் நாய்கள் இரண்டும் சாதுவாக போய் தங்களின் இடத்தில் படுத்துக்கொண்டதில் ஒரு வித ஆறுதலும் ஏற்பட்டது. தன் நாய்களிடமிருந்த புணர்ச்சியின் வேகத்திலும் அவற்றின் ஓர்மத்திலும் தன்னிலை இடிந்து போன வேட்டையன் சடுதியாக ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.

தன் பண்ணையில் வேலை செய்யும் ஐந்து பேரை வரவழைத்து ஊர் ஊராகச் சென்று நல்ல பெண் நாய்களை பிடித்து வருமாறு கட்டளையிட்டான் அவர்களுக்கு தன் புதிய வாகனத்தையும் கொடுத்தான்.

நாய் பிடிகாரர்கள் இரவுகளை சாதகமாக்கி வீட்டு வளவுகளுக்குள் இறங்கி தினமும் பெண் நாய்களைப் பிடித்தனர். வேட்டையன் இரவுகளில் பெண்நாய்களை கூட்டுக்குள் தனித்தனியாகவும் கூட்டாயும் அனுப்பி தன் நாய்களின் காமத்துக்கு இரையாக்கினான்.

தன் நாய்கள் புணரும் விதமே தனியானது எனப் பெருமை கொண்டான். ஊரில் பெண் நாய்கள் குறைந்து கொண்டு போயின. வேட்டையனின் வீட்டில் இரவில் நாய்களின் அவல ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. சனங்கள் பயந்து போயினர்.

ஊரை அண்டிக் கிடந்த ஆற்றங்கரையில் பெண் நாய்களின் உடலங்கள் ஒதுங்கின. ஆற்றங்கரையின் பிணநெடி ஊர்வரை அடித்தது. சனங்கள் மூக்கை மூடி துணிகளைக் கட்டிக்கொண்டே திரிந்தனர்.

வேட்டையன் தன் செல்வாக்கு ஊரில் பன்மடங்கு பெருகியதாய் நினைத்துக் கொண்டான். நாய்கள் பெண் நாய்களைப் புணரத் தொடங்கிய பிறகு அவற்றின் கொடூரப்பசியை புல்வெளிகளால் ஈடுசெய்ய முடியவில்லை. அதனால் அவற்றுக்கு மாமிசம் உண்ணப் பழக்க வேண்டும் என முடிவெடுத்தான்.

தன் பண்ணையில் இருந்த கோழிகள் இறந்து போனதால் தன் நாய் பிடிகாரரை ஊருக்குள் இறக்கி கோழிகளைப் பிடிக்கச் செய்தான். கோழிக்கறியை விதம் விதமாகச் சமைத்து தன் நாய்களுக்கு கோழிகளை உண்ணும் சடங்கினை முதன்முதலில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்தான்.

ஊரில் சில பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இருந்தபோதும் அந்த விழா பிரமாண்டமாக நடந்தது. நாய்களை நன்றாக அலங்கரித்து மாலை சூட்டி வீதி வழியே ஊர்வலமாக அழைத்துச் சென்று விசேடமாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் கோழி உணவைப் படைத்து உண்ண விட்டான்.

முதன்முதலில் கோழியை உண்பதால் அவற்றுக்கு குமட்டல் கொடுக்குமோ என நினைத்தான். ஆனால் அவை பூக்களைச் சாப்பிடுவதைப் போலவே அவை கோழிக்கறிகளையும் உண்டு கழித்தன.

தினமும் இரவுகளில் கோழிபிடிகாரர்கள் வீடுகளுக்குள் புகுந்து கோழிகளைப் பிடித்தனர். இரகசியமாகப் பிடிக்கமுடியாத சந்தர்ப்பங்களில் உடமையாளர்களுடன் முரண்ட வேண்டியேற்பட்டது. முரண்பட்டவர்களை வேட்டையன் தன் நாய்களுக்கு இரையாக்கி விடுவான் என அச்சுறுத்தினர். இதனால் உடமையாளர்கள் தங்கள் கோழிகளையும் பெண் நாய்களையும் ஆற்றைக்கடந்து அனுப்பினர்.

வேட்டையனின் பெண்நாய் கூடுகளில் நாய்களின் எண்ணிக்கை குறைந்து போனது. இதனால் நாளுக்கு நாள் நாய்களின் புணர்ச்சி வெறி அதிகரித்தது.

வேட்டையன் தன் நாய்கள் புணரும் காட்சிகளைப் பார்ப்பதிலேயே பொழுதுகளைக் கழித்தான். தன் மனைவியை அழைத்து அந்தக் காட்சிகளைப் பார்க்கும்படி செய்தான். அவளோ இவனிடம் பெருகும் கொடூரவெறியைக் கண்டு அருவெறுத்தவளாய் அவ்விடத்தில் இருந்து அகன்றாள். இவனது நாய்களைப் போலவே கொடூர வெறியோடு தன்னையும் புணர்ந்து கொன்றுவிடுவானோ என்ற பயம் அவளது தூக்கத்தைத் துரத்தியடித்தது. தனியே தன் அறையில் உறறங்குவதைத் தவிர்த்தாள். பிள்ளைகளின் துணையுடன் இரவுகளில் உறங்கினாள். இப்படியாக நாட்கள் ஓடின.

ஊரில் பெண் நாய்கள் எதுவுமே இல்லாமல் போயின. வேட்டையனின் பெண் நாய்களின் கூடுகளும் வெறுமையாகின. இவனது நாய்களின் வெறி மேலும் மேலும் அதிகரித்தது. அவை இரவுகளில் தாமே கூட்டைத்திறந்து வெளியேறி பெண் நாய்களைத் தேடி அலையத் தொடங்கின. இரவுகளில் சனங்கள் பயந்துபோய் முடங்கினர். ஊரே ஓலத்தினால் நிறைந்தது. இவனது நாய்களின் ஊளைகளால் இரவுகள் நடுங்கின.

பகலில் நாய்கள் சாதுவாகி கூட்டுக்குள் கிடக்கும். இரவு ஆக ஆக அவற்றின் கண்களில் தோன்றும் தீப்பந்தம் போன்ற காம நெருப்பை அவன் கண்ணுற்றான். இவனது மனதில் அப்போதெல்லாம் ஆனந்தம் தாண்டவமாடியது. பகல்களில் நாய்களைப் பார்ப்பதை விரும்பாதவனானான்.

அவற்றுக்கான பகல் உணவுகளை வேலையாட்கள் மூலமே வைத்தான். நாய்கள் அனுமதி இல்லாமல் இரவுகளில் வெளியேறுவதை உணர்ந்தும் இவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சாதுவான அவற்றின் தோற்றமும் மினுமினுக்கும் உடலும் அவனை ஈர்ர்த்து வைத்திருந்தன. நாய்கள் தன்னோடு இருப்பதாலேயே தனக்குப் பேரும் புகழும் என நினைத்தான். தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து அந்நியப்பபட்டாலும் அந்தக் குறையை நீக்குபவை நாய்கள் தான் என அவன் நம்பினான். அந்த நாய்கள் இல்லாத உலகத்தை இவனால் கற்பனை கூடசெய்யமுடியாமல் இருந்தது.

நாய்கள் தன்னை நீங்கிய ஊரில் தனக்கிருக்கும் செல்வாக்கு யாவும் நீங்கி தானொரு நடைப்பிணமாக அலைய நேரிடும் எனப் பயந்தான்.

அன்றைய இரவும் நாய்களுக்கு உணவை தன் கைகளாலேயே ஊட்டிவிட்டான். அவற்றின் இடங்களில் உறங்கச் செய்துவிட்டு தானும் தன் படுக்கையில் படுத்தான். நள்ளிரவில் இரண்டு நாய்களும் எழுந்து கூட்டின் கதவைத் திறந்து வெளியேறின. அவை வெளியேறிச் சென்ற சில நிமிடங்களில் எல்லாம் ஊரில் ஓலமும் அதனைத் தொடர்ந்து இவனது நாய்களின் ஊளையும் கேட்டன.

காலை எழுந்து வழமைபோல தன் நாய்களை நீராட்டச் செல்ல எண்ணி அவறறின் அருகே சென்றான். அவை முன்னால் ஆண் குறி ஒன்று கிடந்தது. இவன் வெருண்டு போனான். நாய்கள் தங்கள் வெறித்தனத்தை ஆண்கள் மீதும் காட்டத்தொடங்கி விட்டதை உணர்ந்தான். நாய்களின் உடலிலும் வாயிலும் குருதி உறைந்து போயிருந்தது. பதற்றத்துடன் அவற்றை நீராட்ட அழைத்துச் சென்றான்

நாய்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆண்குறி வெறியால் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற பயம் இவனைச் சூழ்ந்தது. நாய்களை நீராட்டி விட்டுவிட்டு இன்றே குருதேவரிடம் செல்ல வேண்டும் என நினைத்தான். அவரின் மகா வாக்கியங்களை மறந்து போனதால் தான் தனக்கு இத்தகைய நிலை வந்தது என உணரத் தலைப்பட்டான். குருதேவரிடம் ஏதாவது பரிகாரம் இருக்கக்கூடும். அவரால் தான் நாய்களை மீளவும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும் எனக் கருதினான்.

கிணற்றடியில் நாய்களைப் படுக்கும்படி செய்துவிட்டு அவற்றின் மேல் நீரை அள்ளி அள்ளி ஊற்றினான். திடீரென்று நாய்கள் இரண்டும் எழுந்து நின்றன. அவற்றின் கண்கள் இரண்டும் தீப்பந்தம் போல சிவந்து எரிந்தன. அவற்றில் ஒன்று பாய்ந்து அவனது அரையில் கட்டியிருந்த ஆடையை இழுத்து உரிந்தது. மற்றையது பாய்ந்து அவனது குறியைக் கடித்து எடுத்தது. பிறகு இரண்டும் அவ்விடத்தில் இருந்து நீங்கி ஊரின் எல்லை நோக்கி ஓடின.

இவன் துடிதுடித்தான். இரத்தம் பீறிட்டது. கைகளால் கவட்டைப் பொத்தியவாறாக வீட்டை நோக்கி ஓடினான். இவனின் ஓலம் ஊரெங்கும் எதிரொலித்தது. வீட்டின் முன் விழுந்து கிடந்து கதறினான். மனைவியும் பிள்ளைகளும் ஓடிவந்தனர். இரத்த வெள்ளத்தில் கிடக்கும் இவனைப் பார்த்து அலறினர்.

இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் இரண்டு கிழமைகள் கழித்து சாமி வீட்டு வளவினுள் நுழைந்தார். இவன் குறியற்று வீட்டின் முன் புரண்டு அலறுவதைப் பார்த்தார். அவரின் உதடுகளில் லேசான புன்னகை மலர்ந்தது. அவர் எதுவுமே பேசவில்லை. வீதியை நோக்கித் திரும்பி நடக்கத் தொடங்கினார்.

௦௦௦

http://eathuvarai.net/?p=2156

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.