Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கூடங்குளம் அணுமின் நிலையம்: மற்றுமொரு போபால் பேரழிவிற்கான சமிக்ஞையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய கூடங்குளம் அணுமின் நிலையம்: மற்றுமொரு போபால் பேரழிவிற்கான சமிக்ஞையா?
By Kavinthan Shanmugarajah 
2012-12-03 11:26:25
 
இந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையம் அண்மைக்காலமாக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் விடயங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. உலகின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பிய ஒரு காரணியாகவும் இதனைக் குறிப்பிடலாம்.
 
அதுமட்டுமன்றி பல சட்டச் சிக்கல்கள், போராட்டங்கள் என பல சர்ச்சைகளில் சிக்கியமையினாலும் இவ் அணு மின் நிலையம் பல வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
 
வல்லரசாகி ஆசியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், சீனாவை மிஞ்சும் கனவுகளுடன் துரித கதியில் அசுர வளர்ச்சி காணத் துடிக்கும் இந்தியாவின் மின் சக்தி தேவைக்கென நிர்மாணிக்கப்பட்டதே கூடங்குளம் அணு மின்நிலையமாகும்.
 
பலகோடி சனத்தொகையைக் கொண்ட இந்தியாவின் மின் சக்தி தேவையானது அசாதாரணமானது. இதற்கான தீர்வு அணு மின்னே என இந்தியா தெரிவிக்கின்றது. இதனாலேயே ஏற்கனவே 19 அணு மின் நிலையங்களைக் கொண்டுள்ள போதும் கூடங்குளம் அணு மின் நிலையத்தினை நிர்மாணித்துள்ளதுடன் இன்னும் பல அணு மின் நிலையங்களை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளது. 
 
மேலும் அணு மின்சக்தியானது மலிவானது, பாதுகாப்பானது எனப் பல காரணிகளை இந்தியா முன்வைத்துள்ள போதிலும் இதற்கான முக்கிய காரணியாகத் திகழ்வது தன்னை அணுசக்தி கொண்ட வல்லரசாக (nuclear superpower) மேம்படுத்திக் காட்டுவதற்கு இந்தியா முனைப்பு காட்டுவதே என அடித்துக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். 
 
மின்சாரம் தேவை என்று மக்களிடம் கூறி அணு ஆயுதத்திற்கான மூலப்பொருட்களை பெறுதல் என்பதே அவ்வணுவுலையின் உள்நோக்கம் என பிறிதொரு சாரார் கோஷமிடுகின்றனர்.
 
உலகம் இதற்கு முன்னரும் அணு சக்தி நிலையங்களால் ஏற்பட்ட பல விபத்துகளுக்கு முகங்கொடுத்துள்ளது. கனடாவில் வோக் ரிவர், ரஸ்யாவில் சேர்நோபைல், இறுதியாக ஜப்பானில் புகுஷிமா என்பவற்றை இதற்கு உதாரணங்களாக கூற முடியும்.
 
பல மேலைத்தேய நாடுகள் அணு உலைகளினால் ஏற்படும் அபாயத்தினை நன்கு அறிந்து வைத்துள்ளன. இதனாலேயே தமது அணு உலைகளை மூடிவிடும் முடிவுக்கு வந்துள்ளன.
ஆனால் தற்போது அணு உலைகளை நிர்மாணிக்கும் நாடுகளாக ஆசிய நாடுகளே உள்ளன. சீனா, தென்கொரியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
 
கூடங்குளம் அணு மின் நிலையம்
kudankulam_nuclear_plant_20120109.jpg
 
தமிழ் நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் ரஷ்ய நாட்டின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டதே கூடங்குளம் அணு மின் நிலையமாகும்.
 
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் பல்வேறு தடைகளையும் மீறி கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கியது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முற்றுபெறும் தறுவாயில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையமானது இந்தியாவில் மிக அதிக செயற்றிறன் கொண்ட அணுமின் நிலைங்களில் ஒன்றாக திகழ்கின்றது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு அணு உலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
 
இதேபோன்று மேலும் நான்கு அணு உலைகள் அமைக்கும் திட்டத்தையும் இந்தியா வைத்துள்ளது. ஒவ்வொறு 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணு உலைகளிலிருந்தும் சுமார் 500 பவுண்ட் புளூடோனியம் மற்றும் 30 மெட்றிக் டொன் அதி உயர் கதிர்வீச்சுக்கொண்ட கழிவுகளும் வெறியேற்றப்படும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும். 
 
அணு உலைகள் பொதுவாக ஆபத்து நிறைந்தவையாகவே கருதப்படுகின்றன. யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்தின் கதிர்வீச்சு , அணுக்கழிவுகள் என பல அபாயங்களைக் கொண்டவையே அணு உலைகளாகும்.
 
கூடங்குளம் அணு மின் நிலையத்தினூடாக சுமார் 2000 மெகாவாட்ஸ் மின் உற்பத்தியை மேற்கொள்ள இந்தியா எதிர்பார்த்துள்ளது. தொழிநுட்ப ரீதியில் அதி நவீனமானதும், விபத்து ஏற்படுமிடத்து பல்வேறு பாதுகாப்பு பொறிமுறைகளையும் கொண்டது என இந்தியா கூடங்குளம் அணு மின் நிலையத்தை வர்ணிக்கின்றது.
 
மேலும் இதனால் மக்களுக்கு எவ்வித ஆபத்துகளும் இல்லையெனவும், அதையும் மீறி விபத்துகள் நேர்ந்தால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல தன் கைவசமுள்ளதுடன் மக்களை காப்பாற்றும் முறையையும் தான் நன்கறிவதாக இந்தியா மார்தட்டிக்கொள்கின்றது.
 
எனினும் இத்திட்டத்திற்கு பல்வேறு மூலைகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. தமிழகத்தில் இதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் மிக உக்கிரமாக நடைபெற்றன. இவ்வணு மின் நிலையத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதன்போது பலர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
 
இந்திய மத்திய அரசிற்கு பெரும் தலையிடியாக அமைந்த திட்டங்களில் ஒன்றாக இதனை நாம் குறிப்பிடலாம். கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக பல சர்ச்சைக்குரிய விடயங்களை முன்வைக்கின்றனர் ஆர்ப்பாட்டக்காரார்கள். 
 
அணு உலை எதிப்பாளர்களின் கேள்விகள்
 
மக்கள் செறிந்து வாழும் இடத்தில் அணுமின் நிலையத்தினை செயற்படுத்துவானது அந்தச் சூழலில் வாழும் மக்கள் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பினை அதிகரிப்பதுடன் உளவியல் ரீதியில் சவால் விடுக்கும் ஒரு காரணியாக மாறிவிடும். குறித்த பகுதியில் வாழும் மக்களுக்கு இது தொடர்பில் போதிய அளவு விழிப்புணர்வை வழங்கவும் அப்பகுதியிலிருந்து மக்களை அப்புறப்படுத்தவும் இந்திய மத்திய அரசு தவறியுள்ளது. 
 
எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுமாயின் அப்பாவிப் பொதுமக்களே அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும். இதனால் பாதிக்கப்படப்போவது தமிழக மக்கள் மட்டுமல்ல. கன்னியாகுமரி மாவட்டம் தாண்டி கேரளத்துக் கொல்லம், இலங்கையின் வடமாகாணம் வரை இதன் பாதிப்புகள் இருக்கும் என சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இது தனியாக தமிழ்நாட்டுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. எனவே இதனால் ஏற்படும் விபத்தினை சாதாரணமாகக் கருதமுடியாது. அது பேரிடராகவே முடியும். 
 
அணுமின் நிலையத்தை சூழவுள்ள விவசாய நிலங்கள், பயிர்கள், அது சார்ந்த தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கை என அனைத்தும் கேள்விக்குறியாகும். இது பொருளாதார ரீதியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். மேலும் அணுமின் நிலையத்தில் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்ட போதிலும் அவை அனைத்தும் வெறும் வார்த்தையளவிலேயே உள்ளன.
 
பேச்சிப்பாறை அணைக்கட்டிலிருந்து அணு உலையின் தேவைக்கென நீர் எடுக்கப்படுமாயின் அது விவசாய நடவடிக்கைகளுக்கு குந்தகமாக அமையும்.
 
அணுமின் நிலையத்தின் கழிவுகள் எவ்வாறு அக்கற்றப்படப் போகின்றன? அணுக்கழிவுகள் உயர் கதிர்வீச்சு அபாயம் மிக்கவை. இவற்றை அவ்வளவு இலகுவாக அகற்றிவிடமுடியாது. இதற்கான உசிதமான கழிவகற்றல் திட்டத்தினை மத்திய அரசோ உரிய தரப்பினரோ கொண்டுள்ளனரா?அவ்வாறாயின் அது எங்கே கொட்டப்படப்போகின்றது?
 
ஜேர்மன், இத்தாலி போன்ற மேலைத்தேய நாடுகளே அணு உலைகளை மூடிவிடுவதென முடிவெடுத்துள்ள நிலையில் இந்தியா எவ்வகையில் புதிய அணுமின் நிலையங்களை நிர்மாணிப்பதனை நியாயப்படுத்தப் போகின்றது? ஜப்பானின் புகுஷிமா போன்றதொரு அனர்த்தம் ஏற்படுமாயின் நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படலாம்.
 
இந்திய அரசு 'போபால்' இரசாயன ஆலை பாதுகாப்பானது என் அடித்துக் கூறிய போதிலும் அதன் பின் ஏற்பட்ட பேரழிவினால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவ்விபத்தினால் சுமார் 20, 000 பேர்வரை கொல்லப்பட்டனர். இன்றளவும் அப்பகுதி மக்களுக்கு உடலியல் மற்றும் உளவியல் ரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தியதொரு சம்பவமாக இது திகழ்கின்றது.
 
சுமார் 450 மெகாவாட்ஸ் உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே புற்றுநோய் உள்ளிட்ட நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விட பல மடங்கு அதிகமான அதாவது 2000 மெகாவாட்ஸ் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுவுலை இயக்கப்பட்டால் அதன் மூலமான கதிர்வீச்சின் அளவு என்னவாக இருக்கும்?
 
அணுமின் நிலையத்தில் விபத்தொன்று ஏற்படுமாயின் அதனை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களை எவ்வாறு உடனே அகற்றப்போகின்றது? விபத்து நிகழுமானால் அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் எவை? என எண்ணிலடங்கா கேள்விகளை முன்வைக்கின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். 
 
ஆனாலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கேள்விக்கு சளைக்காமல் பதில் வழங்கி வருகின்றது இந்திய அரசு.
 
இந்திய அரசின் பதில்கள்
 
மின்சாரப் பற்றாக்குறையால் தமிழகம் உட்பட பலபகுதிகள் தடுமாறி வரும் நிலையில் அதற்கான சிறந்த தீர்வாக கூடங்குளம் அணுமின் நிலையம் அமையும். மக்கள் பயப்படுவது போல இது பாதுகாப்பற்றதல்ல. இது தொழிநுட்ப வசதியில் நன்கு மேற்பட்டது.
 
பூகம்பத்தினால் ஜப்பானின் புகுஷிமாவில் ஏற்பட்டது போன்றதொரு அழிவு ஏற்படும் சாத்தியம் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு இல்லை. அவ்வாறானதொரு தரைத்தோற்ற அம்சத்தில் இது அமைக்கப்படவில்லை.
 
கூடங்குளம் அணு மின் நிலையத்தில், சிறந்த, மிகவும் பாதுகாப்பான அணு உலை குளிர்விப்பு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நான்கு விதமான குளிர்விப்பு தொடர் முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வணுமின் நிலையம் அதி நவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதுடன் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், சுனாமி போன்ற இயற்கை அழிவுகள் ஏற்பட்டாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அடித்துக் கூறுகின்றது இந்தியா.
 
இவற்றையும் மீறி விபத்து ஏற்பட்டால் அதற்கான உடனடி பாதுகாப்பு வழிமுறைகளையும் தயாராக வைத்துள்ளதாக இந்தியா தெரிவிக்கின்றது.
 
இவ்வாறு அணு உலை எதிர்ப்பாளர்கள் தமது மக்களின் நலன் கருதி தம்பக்க நியாயத்தையும், இந்திய அரசு தமது அரசியல், பொருளாதார நலன்களைக் கருத்தில் கொண்டு தன் தரப்பு நியாயத்தையும் முன்வைக்கின்றது.
 
எனினும் இவை அனைத்துக்கும் அப்பால் இதற்கு சற்றும் தொடர்புபடாத ஒரு சாரார் இவ் அணு மின் நிலையத்தினால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகவுள்ளது.
 
அவர்கள் வேறு யாரும் அல்லர். எமது இலங்கையின் வடமாகாணத்தில் வசிக்கும் மக்களே. ஆம்! கூடங்குளம் அணு மின் நிலையத்தினால் இலங்கை மக்களுக்கும் பாதிப்புகள் சம அளவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
 
இவ்விடயம் தொடர்பில் ஆராயும் போது மக்கள் எவ்வளவு தூரத்திற்கு விழிப்புணர்வாக உள்ளனர், அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் உரிய தரப்பினர் இச்செய்தியை எவ்வளவு தூரத்திற்கு மக்களிடையே எடுத்துச் சென்றுள்ளனர் என அடுக்கடுக்கான கேள்விகள் எம்முள் எழுகின்றன.
 
இந்தியாவைப் போல இலங்கையிலும் பாதிப்புக்குளாகக்கூடிய மக்கள் இது தொடர்பில் அறிவூட்டப்பட்டுள்ளனரா என்பது சற்று சந்தேகத்துக்குரிய கேள்வியாகும்.
 
இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் 
 
இலங்கையின் வட மாகணத்திற்கும் கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதிக்குமான தூரம் சுமார் 225 கிலோமீற்றர்கள் மட்டுமேயாகும். இது அவ்வளவு பெரிய தூரத்தில் அமைந்திருக்கவில்லை என்பது இதன்மூலம் புலனாகின்றது. வங்காள விரிகுடாவை அண்டிய பிரதேசங்களில் கடுமையான காற்று வீசுவது வழமை என்பதால் விபத்து நேரிடின் அணுக்கசிவானது மிகவும் இலகுவாக இலங்கையை நோக்கிக் காவப்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக சூழலியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
இது தவிர மழையாலும் கதிர்வீச்சு இலங்கையை நோக்கிக் காவப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
அணு மின் நிலையத்தில் விபத்தொன்று ஏற்படுமானால் குறிப்பாக வட மாகாணத்தில் இதன் அழிவுகள் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என சூழலியல் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கினர். குறிப்பாக மன்னார் மாவட்டத்திற்கு இதனால் அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
 
கதிரியக்கக் கசிவினால் இலங்கை இலகுவாக தாக்கத்திற்குள்ளாகலாம் என சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.அத்தகையதொரு விபத்து ஏற்பட்டால் குறுகிய நேரத்திற்குள் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் ஆற்றலை இலங்கை கொண்டுள்ளதா என்றால் இல்லை என்பதே ஆய்வாளர்களின் பதிலாகும்.
 
மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் கதிர்த்தொழிற்பாட்டு மூலகங்களுடைய கழிவுகள் சமுத்திரத்தில் கொட்டப்படுமானால் அது கடவாழ் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைவதுடன் கடற்தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டு வாழும் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தினையே கேள்விக்குள்ளாக்கும்.
 
அணு உலைகளை குளிர்விப்பதற்கான நீரானது மன்னார் குடா பகுதியிலிருந்தே உறிஞ்சி எடுக்கப்படுமெனவும் பின்னர் அது அப்பகுதியிலேயே வெளியேற்றப்படுமெனவும் இதனால் சூழலுக்கு தீமை விளைவிக்கக்கூடிய வெளிப்பாய்வுகளினால் (கழிவு நீரால்) அக்கடற்பகுதியின் வெப்பநிலை அதிகரிப்பதுடன், உயிரினப் பரம்பல் பெரிதும் பாதிக்கப்படுமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
 
இக் கழிவுகள் நீர்ச்சூழல்களின் உணவுச் சங்கிலி வழியாக உயிரியல் உருப்பெருக்கம் அடைந்து உயர் போசனை மட்டத்திலுள்ள ஊனுண்ணிகளுக்கு நச்சுத்தன்மையாக அமைவதுடன் அவற்றை அழிவடையச் செய்யும். உதாரணமாக இதனால் பாதிக்கப்பட்ட மீன் போன்ற கடலுணவுகளை மனிதர்கள் உட்கொள்வார்களாயின் அவர்களும் பாதிப்புக்குள்ளாகுவர். 
 
இவை நீரில் ஒட்சிசனின் கரையும் தன்மையைக் குறைவடையச் செய்வதுடன் நீர்வாழ் அங்கிகளிற்குக் கிடைக்கும் ஒட்சிசனின் அளவைக் குறைக்க வழிகோலும். இவற்றால் நீர்வாழ் விலங்குகளின் சில விருத்திப் பருவநிலைகள், உயிரினங்களின் இனப்பெருக்க நிலையிடங்களும் பாதிப்புக்குள்ளாக்கும். இலங்கையின் பவளப்பாறைகளும் இதனால் பாதிப்புக்குள்ளாகும். இவை இயற்கைச் சூழலின் தரம் குன்றிப்போக (Degradation Environment) வழிசெய்கின்றன.
 
குறைந்த அளவிலான கதிர்வீச்சினால் அங்கிகளின் திசுக்கள், மரபணுக்கள் பாதிக்கப்படுவதுடன் , லூகேமியா, பிறப்புக் குறைபாடு, இனவிருத்தி பாதிப்படைதல், மரபணு விகாரம் என பல மோசமான பின்விளைவுகளும் ஏற்படும்.
 
இவற்றைத் தவிர நாம் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாத சில காரணிகளாலும் நாம் கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளாகலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இலங்கையை நோக்கிப் புலம்பெயரும் பறவைகள் கூடங்குளத்தை தாண்டியே இங்கு வருகின்றன. இத்தகைய பறவைகளின் எண்ணிக்கை பல கோடிகளாகும். எனவே இங்கு வரும் ஒவ்வொரு பறவையும் மிகச் சிறு அளவு கதிர்வீச்சு தாக்கத்திற்குள்ளாகியிருந்தால் கூட அது மிகப்பெரிய பாதிப்பை இலங்கைக்கு ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ளது.
 
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி கூடங்குளம் அணு மின்நிலையப் பகுதியையும் தாக்கியிருந்தது. எனினும் இதுபோன்றதொரு அனர்த்தம் மீண்டும் ஏற்பட்டால் பாரிய தாக்கம் ஏற்படக்கூடுமென்பதும் உண்மை. 
 
இது தவிர விபத்தொன்று ஏற்பட்டால் அதனால் இலங்கையின் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி ஸ்தம்பிதமடையும் சாத்தியக் கூறுகளும் 100% இருக்கின்றன.
 
மேலும் கதிர்வீச்சினால் உடனடிப் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத போதும் நீண்டகாலத்திற்கு இதனால் பல வகையான புற்றுநோய்கள் ஏற்படுமென இலங்கை அணுசக்தி அதிகார சபையின் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் அனில் ரஞ்சித் தெரிவிக்கின்றார்.
 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் விட முக்கியமான அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மை என்னவெனில் எத்தகைய பாதுகாப்பான அணு உலைகளிலிருந்தும் சிறிய அளவு கதிர்வீச்சு மூலகங்கள் எந்நேரமும் வெளியாகிய வண்ணமே இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த முடியாது. இது அனுமதிக்கப்பட்ட அளவாகும். 
 
இது அணு உலைகள் அமைந்துள்ள சுற்றுச் சூழலில் பல ஆண்டுகளுக்கு பரவிக்கிடக்குமெனவும் இவை பல சந்ததிகளைப் பாதித்த வண்ணமே இருக்குமெனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றினைக் கட்டுப்படுத்தமுடியாதென்பதுடன் இவை காற்றிலும் கலந்து விடுகின்றன. இதனைச் சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுமென்பதும் உண்மை.
 
இதற்கான ஒரேயொரு தீர்வு அச்சுற்றுச் சூழலினை விட்டு வெளியேறுவது மட்டுமே ஆகும். இது மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் மிகப் பாரியதொரு சவாலாகும்.
 
இலங்கை அரசின் தார்மீக பொறுப்பு
 
indian-subcontinent.jpg
 
பல்வேறு நெருக்கடிகளைத் தாண்டி வெகுவிரைவில் செயற்படத் தொடங்கவுள்ள கூடங்குளம் அணுமின் நிலையமானது இந்தியாவின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும். பலகோடிகளை முதலிட்டு நிர்மாணித்துள்ள இந்நிலையத்தினை வெறும் இலங்கை மக்களின் பாதுகாப்பைக் கருதி இந்தியா கைவிடும் என்பதைக் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாது.
 
தனது சொந்த மாநிலமான தமிழகத்தின் போராட்டங்கள், கெஞ்சல்களையே காதில் வாங்கிக்கொள்ளாத இந்திய மத்திய அரசு இலங்கை மக்கள் தொடர்பில் அக்கறை செலுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு சில கடந்தகால நிகழ்வுகளை உதாரணமாகக் காட்டலாம். 
 
இந்திய அரசின் நடவடிக்கை எதுவாக இருப்பினும் இலங்கை அரசாங்கம் அதன் மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் அக்கறைகொண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.
 
இந்தியாவுடன் வெறுமனே பேச்சுவார்த்தைகளை நடத்துவதாலோ அல்லது இது தொடர்பான உடன்படிக்கைகளை மேற்கொள்வதாலோ விபத்துகளைத் தடுத்து விட முடியாதென்பதுடன் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான காலமும் தற்போது ஏற்பட்டுள்ளது.
 
இந்தியாவானது அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் (Convention on Nuclear Safety) (1994), அணுசக்தி விபத்து தொடர்பாக உடனடியாக அறிவுறுத்துவது தொடர்பான ஒப்பந்தம் (Convention on Early Notification of a Nuclear Accident) (1986), அணுசக்தி விபத்து ஏற்படும்போது அல்லது கதிரியக்க அவசரநிலையில் உதவியளித்தல் (Convention on Assistance in the case of a Nuclear Accident or Radiological Emergency) தொடர்பான ஒப்பந்தம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கடப்பாடுகளுக்கு இணங்கி நடப்பதாகத் தெரிவிக்கின்றது.
 
ஆனால் அணு மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுக்களில் இலங்கையும் அங்கம் வகிக்க வேண்டுமென்ற இலங்கையின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளதாக ஊடகங்களின் வாயிலாகத் தெரிய வந்துள்ளது. எனவே இதற்கான பின்னணி தொடர்பிலும் ஆராய்வது இலங்கை அரசின் கடமையாகின்றது.
 
இதனூடாக இந்தியா எதையாவது மறைக்க முயல்கின்றதா என்ற சந்தேகமும் இங்கு எழுகின்றது. மேலும் அணுமின் நிலையம் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைய இந்தியா செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகின்றது.
 
கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றுக்கான முன்மொழிவுகளை அனுப்பிவைத்துள்ள போதிலும் இந்தியா இதுவரை அதில் கையெழுத்திடவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இவ்விடயம் தொடர்பில் சர்வதேச அணுசக்தி முகவராண்மையிடம் இணைந்து முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நிலைக்கு இலங்கை வந்துள்ளமை புலனாகின்றது. இந்தியாவின் இராஜதந்திர ரீதியான காய்நகர்த்தல்கள், இவ்விடயம் தொடர்பான அணுகுமுறைகள் தொடர்பில் இலங்கை விழிப்புணர்வுடன் செயற்படவேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளது.
 
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதில் அர்த்தமில்லை, அது போல வெள்ளம் வந்த பின்னர் அணையைக் கட்டுவதில் அர்த்தமும் இல்லை என்பதனை இலங்கை அரசும், அதிகாரிகளும் புரிந்துகொள்ளவேண்டும்.
 
இவ்விடயத்தில் அரசாங்கம் நெகிழ்ச்சிப்போக்கைக் கடைப்பிடிக்குமானால் பின்னாளில் பாரிய விலையினை கொடுக்கவேண்டியிருக்கும். வடமாகாணம் தமிழ் பேசும் சமூகம் அதிகம் வாழும் பகுதியென்பதால் அரசாங்கம் இவ்விடயத்தில் அசமந்தமாக இருக்கின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது.
 
அணுக்கசிவு ஏற்படுமானால் அது குறித்து முன்னெச்சரிக்கை வழங்கக்கூடிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கின்றது. ஆனாலும் இது போதுமானதா எனக் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 
மேலும் மக்களுக்கு இவ்விடயம் தொடர்பில் போதிய விழிப்புணர்வு அவசியமாகின்றது. அவசர நிலமையின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் மக்கள் அறிவுறுத்தப்படல் வேண்டும்.
 
கூடங்குளம் அணு மின்நிலையம் பாதுகாப்பானது என இந்தியா பல தடவைகள் உத்தரவாதம் அளித்துள்ள போதிலும் நீண்ட கால செயற்பாட்டின் மூலம் இதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை எவராலும் தடுக்கமுடியாதென்பது நிதர்சனமானது.
 
எனவே இவற்றுக்கு எதிராக மக்கள் குரல்கொடுக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
 
ஆரம்பத்தில் இது தொடர்பில் இலங்கை மக்கள் பரபரப்பாக பேசி வந்தபோதிலும் தற்போது மக்கள் இதனை மறந்து விட்டார்களா என எண்ணத்தோன்றுகிறது. வாழ்வாதாரப் பிரச்சினைகளே தலைக்கு மேல் ஏராளமானவை இருக்க இது தொடர்பில் எங்கு ஆராய்வது ? என நினைத்து விட்டார்களோ என்னவோ.
 
வடக்கில் நில அபகரிப்பு, அரசியல் திருத்தம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் தலைமைகளும் இவ்விடயம் தொடர்பில் செலுத்தும் அக்கறை குறைவாகவே உள்ளது. 
 
இந்தியா தனது வல்லரசுக் கனவு, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய அணு உலைத் திட்டங்கள் மூலமான வருவாய், அந்நிய முதலீடுகள், எனப் பல காரணிகளை முன்வைத்து இத்திட்டங்களை முன்னெடுப்பதனால் எவ்வித கூக்குரல்களுக்கும் அது செவிசாய்க்கப்போவதில்லை. மாறாக பின்விளைவுகளுக்கு நஷ்ட ஈடு செலுவத்தில் மட்டுமே முனைப்புக் காட்டும் என்பது நமக்கு தெரிந்த விடயம்.
 
எது எவ்வாறாக இருப்பினும் இந்தியாவினது அசுர பசிக்காக அதனோடு தொடர்பற்ற அப்பாவி மக்களின் வாழ்க்கை பணயம் வைக்கப்படுவது எவ்விதத்தில் நியாயமாகும் என்பதே தற்போது அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாகும்.
 
இது தொடர்பில் இலங்கை அரசு எடுக்கப்போகின்ற முடிவு என்ன என்பது தொடர்பிலும் முழு உலகமும் கவனித்து வருகின்றது.
 
இதேவேளை கூடங்குளம் அணு மின்நிலையங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள ரஸ்யாவினால் வழங்கப்பட்ட உபகரணங்கள் மிகவும் பழமையானதென தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனைத் தேடிப்பார்க்கவேண்டிய கடப்பாடும் இலங்கை அரசினையே சார்ந்தது.
 
- கவிந்தன் சண்முகராஜா

சிங்கள அரசோ இல்லை புதுதில்லியோ தமிழர்கள் அழியக்கூடும் என்பதில் அக்கறை கொள்ளாதவர்கள்.

 

எனவே தமிழக அரசையே நாம் அழுத்தம் தந்து நிற்பாட்ட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.