Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவன் ~ யானைப்பாகன் (நட்சத்திரன் செவ்விந்தியன்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவன்

 

~யானைப்பாகன் (நட்சத்திரன் செவ்விந்தியன்)

“இண்டைக்கெப்பிடியும் சைக்கிள் பழகிப் போடோணும்”

 

இப்படி நினைத்துக் கொண்டு தான் இவன் போனான். எண்ணெய் வைத்து உரசிய தலைமயிரை, கையால் பின்னால் கோதியவாறு போனான். கையிலும் எண்ணெய் இருந்திருக்க வேண்டும். காலில் குனிந்து தடவினான்.

இவன் பழகுகின்ற சைக்கிள் வேலியில் சாத்திக் கிடந்தது இவன் அப்பா காலத்துச்சைக்கிள். இப்போது பழசாகிவிட்டது 'பிறேக்கோ' பின் சில்லு மட்காட்டோ, இல்லாத சைக்கிள். சைக்கிள் என்று சொல்வதற்கு வேண்டிய ஆகக் குறைந்த சாமான்கள் மட்டும் தான்.

பனி இன்னமும் முற்றாக அகலவில்லை தூரத்தில் மென்நீலப் புகைமாதிரி... அநேகமாக இப்போது ஏழு மணியாக இருக்கலாம். அல்லது நேற்றைய நேரமாக இருக்கலாம்.

மீண்டும் ஒரு தடவை கையால் தலையைக் கோதியவாறு சைக்கிளை எடுத்தான். வழமையைப் போல தெத்தித் தெத்தி...... நேற்றைக்குக் கொஞ்சம் முன்னேற்றம். இவனுக்கு இன்றையில் நம்பிக்கை இருக்கிறது.

“எப்படியும் பழகிடலாம்”

நேற்றைக்குப் பின்னேரம் தேத்தண்ணி குடித்து விட்டுப் பழகினான். பெடலில் தெத்தித் தெத்தி சரிவில் வரும் போது சற்றுக் காலைத்தூக்கி... கொஞ்சம் கொஞ்சம் பலன்ஸ் வந்த மாதிரி சிறிது உற்சாகம் என்றாலும் இன்னமும் காலைத்தூக்கிப் போட முடியவில்லை.

இவனைவிடச்சிறிய மிகவும் சிறிய பெட்டைகள் எல்லாம் சைக்கிள் ஓடுகிறபோது...... இவனுக்கு ஏக்கமாக இருக்கும் அவ்வப்போது முயற்சி எடுத்துத் தான் வந்திருக்கிறான் என்றாலும், இயலாமல் ஆறப்போட்டு......

இவனுக்குச் சோகமும் ஆறப்போடுகிற இன்பமும்

பழைய நினைவுகள் வந்தன.

 

அப்போது இவன் ஜந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். தினமும் பாடசாலை முடிந்து வந்ததும் 2 மைல் தொலைவிலிருக்கிற ரியூசன்.

பாடசாலையால் வந்து அதே சேட் காற்சட்டையோடு முகத்தை மட்டும் கழுவிவிட்டு விரைவுவிரைவாகச்சாப்பிட்டுப் போக...... அதற்குமுதலே இவன் வகுப்புப் பொடியன்கள் எல்லாம் போய் விடுவார்கள். இவன் அந்த இரண்டு மணிநேரத்தில் கொதிக்கின்ற வெய்யிலில் ஒரு வெள்ளைத் தொப்பியோடும் சேட்டோடும் தனியாகத்தான் செல்வான். பொடியன்களோடு சேர்ந்து போக இவனுக்கு விருப்பமில்லை. அவர்களோடு போனால் 'வெள்ளனச்' சென்று கதைத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

இவன் வியர்க்க வியர்க்கச் செல்வான். முடிவில் ரியூசன் ஒழுங்கை வளைவில் வியர்வையைத் துடைத்தவாறு, விரைவாகக் காற்சட்டை 'ஸிப்பைக்' கழற்றி சிறுநீர் கழிப்பான். பொடியன்களோ மனுசன்களோ வந்தாலும் இவன் தொடர்ந்து சிறுநீர் கழிப்பான். இவன் வகுப்புப் பெட்டைகள் வந்தால் மட்டுந்தான்..... தார் கொதிக்கிற வெய்யிலில் யார்தான் வரப்போகிறார்கள்?

இந்தச் சிறுநீர் இதை ஏதோ ஆஊஊ என்று சொல்லுவான். வரும் போது மூன்று இடத்தில் ஆஊஊ கழிப்பான். வீட்டைவிட்டு வெளிக்கிட்டதும் முன்னால் இருக்கிற பூவரச மரத்தில் பிறகு ஒரு மைல் தூரத்தில் இருக்கிற பாலத்தில் இறங்கி..... முடிவில் இந்த ரீயுசன் ஒழுங்கை வளைவில்.

அநேகமாக இவன் போகவும் ரியூசன் தொடங்கவும் சரியாக இருக்கும். ரீச்சர் கூட அடிக்கடி சொல்லுவாவே!

“என்னடா வேணு கம்பி முள்ளு வந்து ரண்டிலை நிக்கத்தான் வாறனியோ?”

ரீச்சர் கணிதத்தையும் தமிழையும் தான் அதிக நேரம் படிப்பிப்பார். அதிலும் கணிதம் கொஞ்சம் கூட. இவன் கணக்குகள் எல்லாம் செய்து முதல் காட்டுகிற மூன்று கொப்பிகளுக்குள் காட்டுவான். ஆனாலும் இவனுக்கு கணக்கு விருப்பமில்லை. ஆங்கிலமும் சுகாதாரமும் சமயமும் ஒழுங்காக 'ரைம்ரேபி'ளில் போட்டிருந்தாலும், அதிக நேரம் கணிதமும் தமிழுந்தான்.

ரியூசன் முடிய நாலு நாலரை செல்லும். வரும்போது பொடியன்களுடன் சேர்ந்து வருவான். வேய்யில் குறைந்து தார் வீதி குளிர ஆரம்பிக்கும். தோள்களிலே கைகளைப் பொட்டுக் கொண்டு பையப் பைய.....

வழியிலே சிலநேரம் சண்டை பிடிப்பார்கள். மாரிகாலமாக இருந்தால், பூமரங்கேட்டு வாங்குவார்கள்: அல்லது களவெடுப்பார்கள்.

இந்தப்பூமரங்கள்!

அநேகமாக எல்லாப் பொடியன்களும் பூத்தோட்டமொன்று வைத்திருப்பார்கள். மாரிகாலம் முடிகுறதோடு இந்தப்பூமரங்களும் முடிந்துபோகும். இவனுடையது கோடையிலும் இருந்தது.

வீட்டை வந்ததும் பூமரங்களுக்குத் தண்ணீர் விடுவான். பிறகு பின்னேரம் இனிய தேநீர்.

 

அண்ணா வீட்டை வர ஏழரை எட்டு ஆகும். அவர் பஸ்சில்தான் பள்ளிக்கூடத்துக்குப்போவார். ரீயூசனிற்கு நேரம் போனால் அப்படியே போவார். வரும்போதெல்லாம் களைத்து வியர்வை உப்புக்கள் காய்ந்து படிந்து போயிருக்கிற முகங்களுடனும், லோன்றிக்குக் கொடுத்த வெள்ளைச் சேட்டின் மணம் மணக்க...... அந்த நாட்களில் அவரால் அதிகநேரம் படிக்கமுடியாது.

மாரிக்காலத்தில் தாத்தா 'வேளைக்கே' பிட்டு அவித்துவிடுவார். பிட்டோடு மத்தியானத்துக் குளம்பு அல்லது வாழைப்பழம் அல்லது சீனி. ஏழு மணிக்கெல்லாம் இராச்சாப்பாடு முடிந்து விடும். அதுவும் “வடிவா அவியேல்லை” என்ற அண்ணாவின் குற்றச்சாட்டோடும் தாத்தாவின் மறுப்போடும்...... மிஞ்சியிருக்குற சோற்றை கறிச்சட்டிக்குள் போட்டுப் பிரட்டி நாய்க்கு வைத்த பிறகு.......

'பயங்கரமாகக்' குளிரும். மண்ணுக்குள்ளை இருக்கிற வண்டுகளின் “ங்ங்ங்ங்ங்" என்ற இரைச்சல்கள் விட்டு விட்டுத் தொடர்ந்து கொண்டிருக்கும், வீட்டுக்குப் பின்னாலிருக்கிற குளத்திலிருந்து “கொறக்கட்டாக்” கொறக்கட்டாக்" என்ற தவளைகளினதும். “குர்ம்ம்ம்’ என்ற வேறு ஜந்துகளினதும் சத்தம் தொடரும்.

 

இவன் சாரத்தைத் தூக்கிப் போர்த்திக்கொண்டு சிமினி விளக்கின் முன் கதிரையிலிருந்த கொஞ்ச நேரத்தின் பின், ஈசல்கள் வரத்தொடங்கும். பிறகு இவன் தலை, விரித்துப் படித்துக்கொண்டிருக்கிற புத்தகம் எல்லாம் ஊரத்தொடங்கி...... சில விளக்குக்குள்ளும் விழுந்து அணைத்துச் சாகும்.

காலையில் எழும்பி பள்ளிக்கூடம் போக நேரம் சரியாக இருக்கும். எப்போதும் பாண் அல்லது கடையில் வாங்கிய தோசை.

பள்ளிக்கூடத்தில் தேவாரம் படிப்பார்கள். காலை வெயிலில் நிற்கவைத்து முதலில் “நமோ நமோ தாயே’ சொல்லி, பிறகு பஞ்ச புராணம். அப்போதெல்லாம் இவனுக்கு சேட் நனைய நனைய வேர்க்கும். அடிக்கடி கைகளால் முகத்தைத் துடைத்துக் கொள்வான்.

ஒரு நாள் தேவாரம் படித்துக் கொண்டிருக்கின்ற போது பாலு வாத்தியார் கேட்டார்:

“ இனிமேல் உந்தத் தேசிய கீதத்தைப் படிக்காம விட்டாலென்ன?’

அதிபரும் ஆசிரியரும் கூடி கதைத்தார்கள். பிறகு தேசிய கீதம் படிப்பதில்லை.

பள்ளிக்கூடத்திலும் அதிக நேரம் தமிழும் கணிதமுந் தான். புரட்டாதியில் புலமைப் பரிசிற் பரீட்சை. இவன் ‘கொலசிப்’ என்று சொல்லுவான்.

ஒவ்வொருமுறையும் போகிற போது அன்ரா சொல்லுவா “விளையாடாமல் படியடா. செப்ரம்பரில, சோதனையல்லே”

இவனுக்கு ஒரு மாதிரி இருக்கும். சுதந்திரம் பறிக்கப்படுகின்ற மாதிரி, கவலை கவலையாய்......

இருபது நிமிட 'இன்ரேவலுக்கு' இவனும் பொடியங்களும் விளையாடுவார்கள். இந்த விளையாட்டு, கொட்டன்களும் ஊமல் கொட்டைகளும் பயன்படுத்துகிற (கொட்டன்களுக்கு கூடுதல் மதிப்பு) விளையாட்டு. ‘பழங்காலத்து' கள்ளன் பொலிஸ் மாதிரி பள்ளிக்கூடத்துக்கு வெளியாலையும் போய் விளையாடுவார்கள். பக்கத்தில் இருக்கின்ற நாலுபக்கமும் வேலியடைத்த, அடர்ந்து வளர்ந்த பனம் வடலிகளுக்குள் பொட்டு வைத்து உள்ளே போய், அதன் முடிவில் இருக்கிற பிள்ளையார் கோவிலில் எல்லாம் விளையாடுவார்கள்.

சரணாலயங்கள் போலிருக்கிற வடலிக்காணிகள்!

புல் எல்லாம் எரிந்து மணல் மட்டும் தெரிகிற பிள்ளையார் கோவில் வீதி. மிகவும் விறுவிறுப்பாயிருக்கும்.

விளையாடுவதற்கு முதல் தண்ணீர் குடிப்பார்கள். சில நாட்களில் மட்டும் ஐஸ் பழம் அல்லது கறுவா.

மணி அடித்ததும் இவர்களுக்குக் கவலையாயிருக்கும். ‘இன்ரேவலுக்குப்’ பிறகு தான் மற்றப் பாடங்கள். ஆங்கிலமும் சுற்றாடலும் சமயமும்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வடலிகளுக்குள் விளையாட முடியாது போனது. சிலபேர் நிஜமாகவே விளையாடினார்கள். கடற்கரைகளிலிருந்து ஊருக்குள் அடிக்கடி கனரக வாகனங்கள் வந்து போயின. இவன் பயந்து பயந்து போய் வந்தான்.

முதன் முதலில் ஊருக்குள் கனரக வாகனங்கள் வந்தபோது இவன் வீட்டில்தான் நின்றான். கேள்விப்பட்ட போது இவன் நம்பவில்லை. முன்னர் தாத்தாதான் கூறியிருந்தாரே.

“ஊருக்குள்ள ஏன்ரா வாறாங்கள்?’

இவன் ஆட்டுக் கொட்டிலுக்குள் இருந்து பார்த்தான். பின்பக்கத்துக் குளத்தங்கரையாலை-இவன் வீட்டு முள்ளுக்கம்பி வேலியருகே போனார்கள். எல்லாரும் லோங்சை மறைக்கும் சப்பாத்துக்களுடன், ‘கருங்குழலேந்தி” கனமான தொப்பிகளுடன் பச்சை பச்சையாய்......

மற்ற நாட்களில் எல்லாம் இவன் பள்ளிக்கூடத்துக்குப் போகிற போதுதான் கனமான வாகனங்களில் வந்து குதித்தார்கள்.

இவன் பள்ளிக்கூடம் போகும்போதே வந்துவிட்டார்கள். இவன் வீட்டையும் செக்கிங்குக்குப் போனார்களாம். தாத்தாவும் தங்கச்சியும்தான் வீட்டையிருந்தார்கள். மாமரத்திலை மாங்காய் ஆஞ்சு சப்பினார்கள் இளநீர் விசாரித்தார்கள். ‘பெரிய வீட்டை’ மட்டும் திறந்து அலமாரி,சூட்கேஸ் எல்லாம் பார்த்தார்களாம்.

அன்றைக்குத்தான் இதுவும் நடந்திருக்க வேண்டும். ‘கன’ நாளைக்குப் பிறகு அன்ரா வந்த பிறகு தான் தெரிய வந்தது.

“கமெராவைக் காணேல்லை.”

தாத்தா ஏசினார்.

“அண்டைக்குப் போகேக்குள்ள பெரியவன் சொன்னவன்தான், உங்கட சாமான் எல்லாம் இருக்கோண்டு பார்க்கச்சொல்லி. எனக்குத் தெரியுமே கமரா இருக்கெண்டு”

அண்ணாவும் சொன்னார்:

“பருத்துறேல்லை எங்கட பள்ளிக்குப் பக்கத்திலை களவெடுத்தவனுக்கு கொமாண்டர் உரிஞ்சுபோட்டு அடிச்சவனாம். அடுத்தநாள் வந்து, வீட்டுக்காரனுக்கு வேறை குறூப் அடிச்சதாம்”

இவனுக்குத் தெரியும் அண்ணா சொல்லுகிறதெல்லாம் நம்ப முடியாது. சிலவேளை 'புளுகு' ஆகவும் இருக்கும்.

முன்னாலை இருக்கிற மண்வீட்டையும் அன்றைக்குத்தான் எரித்தார்கள். குப்பைக்குள்ளே இரண்டு குண்டும் துவக்கும் இருந்தது. ஏழெட்டுப் பொடியன்கள் இரவில் படுத்த வீடு.

பிறகு எப்போதும் இப்படியே இருந்தது. அண்ணா ஒவ்வொரு நாளும் இன்ரறெஸ்ரான செய்திகளுடன் வந்தார். ஒரு நாள் நூலகம் எரித்த செய்தி. பிறகு அண்ணா பள்ளிக்கூடம் போகவேயில்லை.

ஊருக்குள் அடிக்கடி ஹெலிக்கொப்பர்கள் ஏறி இறங்கின. இரவுகளில் சிவப்பு லைற் மட்டும் போட்ட 'சீப்பிளேன்கள்' தாழப்பறந்தன.

எல்லோரும் அண்ணாந்து பார்த்ததோ என்னவோ ‘கன’ பேருக்கு மூக்குக் கண்ணாடி தேவைப்பட்டது.

மாரிகாலத்தில் இவன் ஐந்தாவது சேட் போடுவான். அதுவும் அந்த சிவப்புக் கோடன் ரீசேட்......

அது போட்டுக் கழட்டுகிற காலையில் ஆமிக்காரர்கள் வருவார்களாம். மூன்று முறை நினைத்தது நடந்தது.

பிறகு அவன் அதைப் போடவேயில்லை.

ஒரு ‘பறுவ” நாள் ஸ்கொலசிப் சோதனை. முதல் நாள் இவன் ரியூசனுக்குப் போய்வர நன்றாக இருண்டு விட்டது. ரீச்சர் கெட்டிக் காரப் பொடியன்களுக்குச் சந்தேகம் எல்லாம் தெளிவித்து விட......

இவன் பிறகு பால் வேண்டப் போய் வர சந்திரன் பனைக்கு மேலே வந்துவிட்டது தாத்தா வெகு சுமையாகச் சொன்னார்.

“இண்டைக்குப் படிக்க வேண்டாம், சாப்பிட்டுவிட்டு வேளைக்குப் படு”

இவனுக்கு ஏக்கமாகவும் பயமாகவும் இருந்தது.

ஜந்து மணிக்கெல்லாம் எழும்பி விட்டான். குளித்துச் சாப்பிட்டு, ‘பைல்’ எல்லாம் எடுத்து பென்சில் தீட்டி, அண்ணாவின் கொம்பாசும் வேண்ட ஏழுமணி. அன்ரா முட்டைக் கோப்பி அடிச்சுத் தந்தா.

இவன் ஒரே மிடரில் குடித்தான். அடியில் கொஞ்ச மண்டி இருக்க அன்ராவிடம் கிளாசைக் கொடுத்தான்.

“பறுவ நாளேடா ஊத்தேலாது முழுதேம் குடியடா?’

‘பிறகு வந்து குடிக்கிறன்”

இவன் கேற்றடிக்குப்போக பொடியன்கள் சிலபேர் கேற்றைக்கடந்து போய்க்கொண்டிருந்தார்கள் அவர்களோடு போக வேகமாக ஓடி வெளியே வரும்போதுதான் பார்த்தான்.

வெறுங்குடம்!

இவனுக்கு அழுகைவருமாப் போலிருந்தது.

“திரும்புவமோ உவங்களோடை போவமோ?’

செருப்புச் சத்தம் “டக் டக்'' என்று கேட்க ஓடினான். மதியனும், மற்றப் பொடியன்களும் போய்க்கொண்டிருந்தார்கள். இவன் மூக்கை உறிஞ்சுக் கொண்டு சொன்னான்.

‘உந்த முழிவியளம் எல்லாம் நம்பேலாதெடா.”

வழியில் வைரவர் கோயில் வந்தது. பொக்கற்றுக்குள்ளை இருந்த ஜம்பது சதக்குற்றியை எடுத்துக் கொண்டு, வைரவர் கோயில் “கேற்றைத்” தள்ளினான்.

பூட்டு!

முண்டபத்தில் விழத்தக்கதாக காசை வீசி எறிந்தான். காசு விழுந்து, உருண்டு, சத்தம் அடங்கிய போது மீண்டும் நடக்கத்தொடங்கினான்.

இவன் பால்வாங்கப் போகிற பொதும் வைரவர் கோவில், கட்டடம் இல்லாத காளிகோயில், முடிவில் இருக்கிற ஓலைக்கொட்டில் சூலம் எல்லாம் வழியில் வரும்.

போத்தலைக் கால்களுக்குள் வைத்துக்கொண்டு கைகளைக் கூப்பிக் கண்ணை மூடிப் பிரார்த்திப்பான்.

‘நான் கொலசிப் பாஸ் பண்ணவேணும்”

“நான் சைக்கிள் ஓடப் பழகோணும்’

“ எல்லாம் நடந்தால் கற்பூரமும் தேங்காயெண்ணையும் வேண்டித்தருவன்”.

இவன் அண்ணா!

அவருக்கு உதில் எல்லாம் நம்பிக்கையில்லை. என்றாலும் அடிக்கடி சொல்லிக்கொள்வார்.

‘நான் ஒரு நம்பிக்கைவாதி."

பக்கத்து வீட்டுப் பொடியனோடு பந்தயத்துக்காக சூலத்துக்குச் சலம் பெய்தவரல்லவா! அதற்குப் பிறகு அவருக்கு ஒன்றும் வரவில்லை. வழமையாக வருகிற தடிமன் வந்தது. தடிமனைக் காரணஞ்சொல்லி பந்தயப் பணந்தர பக்கத்து வீட்டுப் பொடியன் மறுத்துவிட்டானாம்.

பள்ளிக்கூடத்துக்கு இவனும் பையனும் போன போது, அப்போது தான் சுட்டிலக்கம் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

பரீட்சையில் இவனுக்குக் கணிதம் கொஞ்சம் கஸ்ரமாக இருந்தது. தமிழ் சுகமாக, மிக மிகச் சுகமாக......

வெளியால் வந்தபிறகும் எல்லாரும் சொன்னார்களே!

‘'கணக்குக் கொஞ்சம் கஸ்ரந்தான்.’'

வீட்டை அடைகிற போது மிகவும் சந்தோசமாக இருந்தது. வீட்டை எல்லோரும் கேட்டார்கள், “எப்படிச் சோதனை? நல்லாய்ச் செய்தனியே?’'

பின்னேரம் ரியூசனுக்குப் போனபோது, ரியூசன் தொடங்கி நடந்துகொண்டிருந்தது. ரீச்சர் ஐந்தாம் கணக்குச் செய்துகொண்டிருந்தார்.

நேற்று ரீச்சர் ஒரு ஏற்பாடு செய்திருந்தார். ஒவ்வொரு கணக்கையும் ஒவ்வொரு பொடியன் எழுதிக் கொண்டு வரவேண்டும். இவனுக்கு ஐந்தாம் கணக்கு.

ரியூசன் முடிந்ததும் ரீச்சர் சொன்னார்:

“கணிதத்துக்கு அறுவதுக்கு மேலை எடுத்தால் கட்டாயம் பாஸ் பண்ணலாம்”

இவனுக்கு நம்பிக்கையில்லை.

நேரே பெரியம்மா வீட்டுக்குப் போனான். அண்ணாவும் தயாஅண்ணாவும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அம்மம்மா மிகவும் கரிசனையாகக் கேட்டா, “ ஏன் மோனை கன நாளாக் காணேல்லை”

“சோதினை இண்டைக்குத் தான் முடிஞ்சது அதுதான்”

“ எப்படி ராசா நல்லாய்ச் செய்தியே?”

இவன் தலையாட்டிச் சிரித்தான்.

தயாண்ணாவும் கேட்டார் “சோதினை எப்படியடா?’'

'‘கணிதம் கொஞ்சங் கஸ்ரம். தமிழ் சுகம்’'

இவன் “கன” நாளுக்குப் பிறகு தான் வந்தான். முன்பெல்லாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் வருவான், 'Gemini man' பார்ப்பதற்கு. அதுவும் முடிய சோதனையும் கிட்டக் கிட்ட......

ஐந்து மணிக்கு ரீ.வி. போட்டார்கள். காட்டூன் முடிய தமிழ்ச் செய்தி நடந்தது. பிறகு தான் Time tunnel ஆரம்பமானது .

பெரியம்மா தட்டை வடையும் தேத்தண்ணியும் கொணர்ந்து கொடுத்தார்.

ஒளியின் வேகத்திலும் பல மடங்கு வேகமாகச் சென்று, காலத்தையே வென்று, வரலாற்று நிகழ்வுகளை நேரடியாகக் காணும் கற்பனைச் சித்திரம் அது. அன்றைக்கு, ஹெலன் அழகி கடத்தப்பட்டு, பின்னால் பிரமாண்டமான குதிரைக்குள்ளிருந்து வெளியேறிய வீரர்கள் தந்திரத்தால் மீட்டகதை.

முடிந்ததும் பெரியம்மா சாப்பிடக் கூப்பிட்டார். இவனும் அண்ணாவும் மறுத்து விட்டு வெளிக்கிட்டார்கள்.

ஆங்காங்கு இருக்கிற வீதி விளக்குகளைத் தவிர அநேகமாய் இருட்டு.

 

... ... ... ..000.. ... ... ... ...

இன்னும் இவனால் காலைத்தூக்கி பாரில் போடமுடியவில்லை. அதே சரிவில் சைக்கிள் போகிற போது இவனால் தூக்கிப் போட முடியும். இவனுக்குப் பயமாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் தெத்தித் தெத்திக் கொண்டேயிருக்கிறான்.

சோதனை முடிந்த பிறகு இவனுக்குப் படிப்பதற்க்கு எதுவும் இல்லை. படிக்காமல் இருக்கவும் தாத்தா விடமாட்டார். இனிப்பும் கசப்பும் கலந்த அந்த இரவுகளில், சிமினி விளக்குச் சிந்துகிற வெளிச்சத்தில் எப்போதும் சுற்றாடல் புத்தகத்தைப் பார்த்தபடியே......

இவன் ஒரு கோழிப்பண்ணை வைத்திருப்பவனாகவோ,

ஒரு கடை முதலாளியாகவோ-கடுமையான மழை பெய்கிற மழைக்காலத்தில் இவன் காசை வாங்கி மிச்சக் காசைக் கொடுத்துக் கொண்டிருக்கிற மாதிரியோ......

கற்பனைகள்! பலவிதமான கற்பனைகள்!

இன்பமாகத்தான் இருந்தது. எல்லாம் முடிந்தபிறகுதான்...

‘கொலசிப்” முடிவு வந்த அன்றுதான் எவ்வளவு இன்பம்! அன்றைக்கும் மழைநாளாகத்தான் இருக்கவேண்டும். ஆங்கிலப் போட்டியும் அன்றைக்குத்தான். இவன் உடுப்புப் போட்டுச் சப்பாத்துப் போட்டுக் கொண்டு குடையோடு வீட்டால் ஒழுங்கைக்குள் இறங்கினால், முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரையும் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. சப்பாத்துக்குள் எல்லாம் தண்ணீர் போனது.

இவன் பாடசாலைக்குப் போகும் போதே ஏக்கமும் இன்பமும் கலந்த உணர்வினனானான். நேற்றைக்கே அதிபர் சொன்னாரே “இண்டைக்கெப்பிடியும் முடிவு வந்திடும்.”

இவன் பாடசாலையை அடைந்த போது அதிபரும் ஆங்கிலப் போட்டிக்கு போகிற மூன்று பெட்டைகளும்......

கிருபா இன்னமும் வரவில்லை.

போட்டி முடிந்து யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பிறகு, அதிபர் பெட்டைகளை அனுப்பி விட்டு, இவனையும் கிருபாகரனையும் மாத்திரம் கூட்டிக்கொண்டு போனார் முடிவு பார்ப்பதற்கு.

ஒரு பிறிஸ்ரல் போட்டில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. சில பெயர்கள் பொன பிறகு இவன் பெயர். அடுத்ததாக கிருபாகரன். பிறகு இப்போது ஆங்கிலப் போட்டிக்கு வந்த பெட்டைகளினுடையதல்லாத வேறு பெயர்கள்.

அதிபர் சொல்லிவிட்டார்: “வழியிலை பெட்டைகளைக் கண்டால் அதுகள் பாஸ் பண்ணயில்லையெண்டு சொல்லாதேங்கோடா, கவலைப்படுவாளவை.”

வரும்போது இவனும் கிருபாகரனும் 'பபிள்கம்' வாங்கினார்கள்; இவன் ஒரு சித்திரக் கதைப் புத்தகம் வாங்கினான்.

பரீட்சைக்குப் பிறகு இவன், இவனுக்குள் ஒரு சபதம். “தான் இனிம சித்திரக் கதைப்புத்தகம் வாசிக்கிறேல்லை.”

இந்த ‘அமர்க்களத்தில்’ அதையெல்லாம் மறந்தே போனான். வழமையாகத் தார் கொதிக்கிற வீதி மப்பாகவும் அமைதியாகவும் இருந்தது. இவனும் கிருபாவும் பபிள்கம் சப்பியபடி...... வீதி முழுக்க இனித்தது.

வீட்டில் முதலே தெரிந்திருந்தது. இவன் வீட்டை அடைந்த போது தாத்தா சொன்னார்.

‘இனிம லீவுக்குள்ளை சைக்கிளையும் பழகீட்டா, பிறகு காட்லிக்குப் போகலாம்.”

இவனுக்கு மீண்டும் ஏக்கமும் கலக்கமும் வந்தன. ரீச்சர் கூட ஒரு நாள் கேட்டாவே

“வேணு சைக்கிள் ஓடுவியே?’

‘இல்லை”

இவனுக்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும். பிறகு தான் சொன்னான்: “ஆனா கவுட்டுக்குள்ளாலை ஓடுவன்.”

பொடியன்கள்!

பெட்டைகள்!

ரீச்சர்!

எல்லாரும் சிரித்தார்கள்.

பள்ளிக்கூடத்தில் இவன் வகுப்புப் பொடியன்கள் சைக்கிளில் வருகிற போதும் கிருபா தான் வாங்கப் போகிற புதுச் சைக்கிளைப் பற்றி அடிக்கடி சொல்லுகிற போதும் இவனுக்கு ஏக்கமாகவும் துன்பமாகவும்......

இவன் சைக்கிள் தெத்துவதை விட்டு மூச்சு எடுக்கிற மாதிரி நின்று யோசித்தான்.

Oh! girls!

Ever smiling girls!

“ ஏன் நாங்கள் girls உடன் கதைக்காமல் விட்டோம்? கடைசி நாளாவது அல்லது அந்த இனிய ஆங்கிலப் போட்டியன்றாவது...... “

நாலாம் வகுப்புவரை இவர்கள் பெட்டைகளுடன் கதைத்தார்கள்தான்.

பிறகு......!

இவனால் சரியாக யோசிக்க முடியவில்லை எப்போதிலிருந்து கதைக்காமல் விட்டார்களென்று.

“இனிமேல் எப்போது சந்திக்கப் போகிறோம். இனிமேல் போகின்ற கனமான பள்ளிக் கூடங்களில்......”

Only boys!

Only girls!

தனியாக மிகவும் தனியாக... சந்தோசம் இல்லாத சிரிப்புக்களுடன்......

ஒரு வேளை ரியூசன்களில் சந்திக்கலாம்.

நட்புறவுக்கு அப்பாற்பட்ட உறவுகளை எதிர்பார்ப்பதால் எல்லாம் சிதைந்துகூடப் போகலாம்.

பெரு மூச்சோடு மீண்டும் ஏதோ யோசித்தான்.

இந்தப் பனிக்காலத்து விடியல்கள்தான் எவ்வளவு இனிமையானவை!

அநேகமாக எல்லாச் சோதனைகளும் முடிந்த நிம்மதியோடு, கொஞ்சநேரத்துக்குப் பிறகு குடிக்கப்போகிற சூடான தேநீரை நினைத்துக்கொண்டோ, இன்னும் காயாமல் இருக்கிற ஈரமான புற்றரைகளை நிதைத்துக் கொண்டோ, மத்தியானத்து நீச்சல்களை நினைத்துக் கொண்டோ, பின்நேரத்து விளையாட்டுகளை நினைத்துக் கொண்டோ எழும்புகிறபோது ஏற்படுகிற சந்தோஷம்.

காலையில் இவன் மேய்ச்சலுக்கு மாடுகளைக் கொண்டு போவான். ஆங்காங்கே இருக்கிற மேய்ச்சல் நிலத்து விளா மரங்களில் ஆய்ந்து கொண்டு வரும் போது வழியில் இருக்கிற, ஊரிலை இவன் மிகவும் நேசிக்கிற வாசிகசாலையில் விளாங்காய்களைக் கொறித்துக் கொண்டு கோகுலமோ, ரத்னபாலாவோ வாசிப்பான்.

இவன் மத்தியானத்தில் அத்துளுக் குளத்தில் குளிக்கிற போது கட்டிலை நின்று தூண்டில் போடுவார்கள். இவனுக்கும் தூண்டில் போட ஆசையாய் இருக்கும். அவனே அடங்கிப் போவான்.

“சே! பாக்கிறார்கள் என்ன நினைப்பினம்!”

மீண்டும் தெத்தத் தொடங்கினான், சரிவில் வரும் போது காலைத் தூக்கி பாரில் போட்டு விட்டு...... திடீரென்று வெளியே எடுத்து விட்டான். இவனுக்கு நம்பிக்கையாய் இருந்தது.

“இண்டைக்கெப்படியும் பழகீடலாம்.”

 

0

இந்தக் கதை, 20-4-90 இல் திசையில் யானைப்பாகன் என்ற பெயரில் வெளியாகியது .

 

http://nache.blogspot.com.au/2005/01/blog-post_27.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.