Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கக் கவிதைகள் நாட்டுப்புறப்பாடல்களா?

Featured Replies

தமிழ் அறிவுலகில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரக்கூடிய சிந்தனைப்போக்குகள் என சில உண்டு.

1. சங்க இலக்கிய ஆராய்ச்சியும் ரசனையும்

2. கம்பராமாயண ஆராய்ச்சி

3. குறள் ஆய்வு

4. சித்தர் மரபு மீதான ஆய்வு

5. வள்ளலார் ஆய்வுகள்

6. பாரதி ஆய்வுகள்.

 

சைவ வைணவ இலக்கியங்களைப்பற்றிய ஆய்வுகள் உண்டென்றாலும் அவை மரபார்ந்த ஒரு பார்வையை மட்டுமே கொண்டவை. சீரான ஒரு வளர்ச்சிப்போக்கு அவற்றில் இல்லை.


மேலே சொன்ன ஆறு சரடுகளில் சங்க இலக்கிய ஆய்வுகளின் பொற்காலம் என்பது ஐம்பது அறுபதுகள்தான். மெல்ல மெல்ல சாராம்ச வல்லமை கொண்ட ஆய்வுகள் அருகி விட்டன. அதற்கான காரணங்கள் பல. முக்கியமானது, சங்க இலக்கியத்தில் தகவல்கள் சார்ந்து செய்யப்படவேண்டிய ஆய்வுகள் எல்லாமே செய்யப்பட்டுவிட்டன என்பதுதான். சங்க இலக்கியங்களை நுணுகி வாசித்து அதிலுள்ள தாவரங்கள், பூக்கள், ஊர்கள், வழக்காறுகள் சொற்கள் என விரிவாகவே அலசிப் பட்டியலிட்டு விட்டனர்.


மேற்கொண்டு செய்யப்படவேண்டிய ஆய்வுகள் இரண்டு தளங்களைச் சேர்ந்தவை. ஒன்று சங்க இலக்கியங்களை உலகின் பிற செவ்வியல் மரபுகளுடன் ஒப்பிட்டு அழகியலடிப்படையில் விரிவாக செய்யப்படும் ஆய்வுகள். ஆனால் இங்கே தமிழறிஞர்கள் பெரும்பாலும் தமிழல்லாமல் வேறு மொழி அறியாதவர்கள். ஆகவே அந்த வாசல் மூடிக்கிடக்கிறது
 

இன்னொன்று, சங்க இலக்கியங்கள் வழியாக நம்முடைய சமூகவரலாற்றை, பண்பாட்டு வரலாற்றை வாசித்தெடுப்பதும் முழுமை செய்வதும். ஆனால் அதற்கு சமூகவியலிலும் மானுடவியலிலும் பிற பண்பாட்டு அறிவியல்களிலும் அடிப்படைப்பயிற்சியும் அவற்றின் விதிகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயும் முறைமையும் தேவை .நம் தமிழ்த்துறைகளில் அத்தகைய திறன் கிடையாது. மேலும் முன்முடிவுகள் இல்லாமல் கறாரான ஆய்வுநோக்குடன் நம் பண்பாட்டை நோக்கும் அறிவியல் நோக்கைத் தமிழாய்வாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ’கல்தோன்றி மண்தோன்றா’ என்ற பிலாக்கணத்துடன் ஆராய்ச்சியை ஆரம்பிப்பவர்கள்.
 

ஆகவே சென்ற சில வருடங்களில் முக்கியமான சங்க இலக்கிய ஆய்வுகள் என எவையுமே வரவில்லை என்றே சொல்லவேண்டும். பெரிய அறிஞர்கள் என்று கல்வி வட்டாரத்தில் பேசப்படுபவர்கள் கூட ஆழமோ அழுத்தமோ இல்லாத கூறியதுகூறல்களையே முன்வைத்துக்கொண்டிருந்தனர். இச்சூழலில் துளசிராமசாமியின் இந்நூல் ஆச்சரியமளிக்கும் ஒரு பெருமுயற்சி. தன்னுடைய நோக்கை முன்வைப்பதில் மரபுப்புலங்களை அஞ்சாத துணிவும் அடிப்படையான அறிவியல்நோக்கும் தெளிவான முறைமையும் கொண்ட முக்கியமான நூல் இது.
 

சமணமுனிவர்கள் எழுதிய அறநூலே திருக்குறள் என வாதிடும் சிறியநூல் ஒன்றை ஆசிரியர் முன்னர்

எழுதியிருக்கிறார். அதற்கான வாசிப்புகள் வழியாக சங்க இலக்கியத்துக்குள் நுழைந்த அவர், தான் அடைந்த புரிதலை சில மேடைகளில் முன்வைத்திருக்கிறார். அந்தக் கருத்து உருவாக்கிய அதிர்வும் எதிர்ப்பும்தான் மேலும் நுணுக்கமாக சங்க இலக்கியங்களை ஆராய்ந்து விரிவான தரவுகளைத் திரட்ட அவரை தூண்டியிருக்கிறது. இந்நூல் அந்த விவாதத்தின் விளைவு.
 

880 பக்கங்கள் கொண்ட பெரிய நூல் இது. மிக விரிவான கட்டமைப்பு கொண்டது. அதற்கான தேவை உள்ளது. துளசி ராமசாமி தமிழ் அறிவுலகில் நம் இலக்கிய மரபு பற்றி இருக்கும் வழக்கமான மனவரைபடத்தை விரிவாக மாற்றி எழுதி அதில் சங்க காலத்தைப்பற்றிய தன்னுடைய சித்திரத்தைப் பொருத்திக்காட்டுகிறார். அதாவது நம் இலக்கிய வரலாற்றை முழுமையாகவே திருப்பி எழுதியிருக்கிறார். அந்த வரலாற்றின் ஒரு பகுதியாகவே சங்க இலக்கியங்கள் பற்றிய தன்னுடைய கொள்கையை சொல்கிறார்.
 

ஆய்வாளர்கள் அல்லாத தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரு மனமயக்கம் உண்டு. சங்கப்பாடல்கள் திணை துறை பகுப்புடன் எழுதப்பட்டவை. தலைவி, தலைவன்,செவிலித்தாய், பாங்கன், பரத்தை போன்ற கதைமாந்தர்களைக் கொண்டவை. எல்லாக் கவிதைகளுக்கும் அவற்றை இயற்றிய ஆசிரியர்கள் உண்டு. இந்நூல்கள் எழுதப்பட்ட காலத்திலோ கொஞ்சம் பின்னரோ தொகைநூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன- என்பவை அந்த எண்ணங்கள். அவை உண்மை அல்ல.
 

சங்கப்பாடல்களில் திணை துறை போன்றவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை. பெரும்பாலான பாடல்களைப் பாடல்வரிகளை மட்டும் வைத்து பார்த்தால் எந்தத் திணைக்குள்ளும் துறைக்குள்ளும் முழுமையாக நிறுத்திவிடமுடியாது. பாட்டில் உள்ள ஏதேனும் ஒரு அம்சத்தை எடுத்துக்கொண்டு அதனடிப்படையில் அப்பாடலை ஐந்து திணைகளில் ஏதேனும் ஒன்றில் சேர்த்திருக்கிறார்கள். திணை என்ற கருத்து உருவாக்கப்பட்டது சங்கப்பாடல்கள் உருவாகி வெகுகாலம் கழித்துதான். அந்தக் கருதுகோளுடன் சங்கப்பாடல்களை ஆராய்ந்தபோதே திணைமயக்கம் என்ற கருத்தை உருவாக்கி அதை ரத்தும் செய்துவிட்டார்கள்.
 

ஒரு கவிதை வாசகனாக நான் சங்கப்பாடல்களின் அடிக்குறிப்புகள் அவற்றின் கவித்துவத்தை மறைக்கின்றன என்றும், அவற்றை நீக்கிப் பாடல்வரிகளை மட்டுமே வாசித்தால் தான் கவிதையனுபவம் நிகழும் என்றும் எண்ணம் கொண்டிருந்தேன். அந்த எண்ணத்துடன் இருபதாண்டுகளுக்கு முன்னர் வாசித்தபோது சங்கப்பாடல்களின் அடிக்குறிப்புகள் எல்லாமே பிற்சேர்க்கைகள் என்று கண்டுகொண்டேன். அதைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறேன்
முனைவர் துளசி ராமசாமி , திணை துறை பாடியோர் பாடப்பட்டோர் போன்ற அடிக்குறிப்புகள் எல்லாமே பிற்கான சேர்மானம் என்று சொல்கிறார். அவரது கருத்துக்களை இப்படி தொகுத்துச் சொல்லலாம்.எழுத்து உருவாவதற்கு முன்னரே தமிழ் மரபில் வாய்மொழியாகப் புழக்கத்தில் இருந்த நாட்டுப்புறப்பாடல்கள்தான் சங்கப்பாடல்கள். அவை மிகமிகத் தொன்மையானவை. அவை உருவாகி நெடுங்காலம் கழித்து தென்னகத்தில் பரவிய சமணத்தின் முனிவர்கள் அப்பாடல்களை சேகரித்துத் தொகுத்தார்கள். அவர்களின் கல்விப்பணியின் ஒரு பகுதி அது. கல்விப்பணி அவர்களின் மதப்பரப்பல் நோக்கம் கொண்டது.

 

தொல்காப்பியம் முதலிய இலக்கணநூல்களை சமணமுனிவர்கள் எழுதக்காரணம் மொழியைப் புறவயமான விதிகளாக வகுத்து அனைவருக்கும் கற்பிக்கும் பொருட்டே. அந்நோக்கத்துடன் தான் அவர்கள் சங்கப்பாடல்களையும் தொகுத்தார்கள். சேகரித்த பாடல்களை அவர்கள் தங்களிடமிருந்த சில பொதுவான மொழியிலக்கணமுறைமைப்படி சற்று மாற்றி அமைத்திருக்கலாம். அப்படித்தான் நெகிழ்வான யாப்புவடிவமான ஆசிரியப்பா உருவானது
 

சமணர்கள் நான்குமுதல் எட்டு வரி கொண்ட பாடல்களை குறுந்தொகை என்றும் பன்னிரண்டு வரிகள் வரை கொண்டவற்றை நடுத்தொகை என்றும் முப்பத்தொன்று வரி வரை கொண்டவற்றை நெடுந்தொகை என்றும் மேலே செல்வனவற்றைப் புறந்தொகை என்றும் பகுத்து எழுதிவைத்தனர். நானூறு என்ற எண்ணிக்கைக் கணக்கு இவர்கள் போட்டதா அல்லது பின்னர் எஞ்சியவற்றில் இருந்து உருவானதா என்று சொல்லமுடியவில்லை. இறையனார் அகப்பொருள் எழுதப்பட்ட பிந்தைய காலகட்டத்தில் இப்பாடல்கள் நானூறு என்ற கணக்குக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம். இக்காலகட்டத்தில்தான்பிறகாலத்து வரலாற்றுக்குறிப்புகள் கொண்ட பாடல்கள் சேர்க்கப்பட்டன.

குறுந்தொகை,நற்றிணை, நெடுந்தொகை,புறநானூறு என்று நூல்கள் சொல்லப்பட்டன.
 

உருத்திரசன்மன்தான் நெடுந்தொகையை அகநானூறாக்கி அதற்கு களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்று தலைப்புகள் அளித்துத் தொகுத்தார் என்றும் அவரே திணை,துறைகள் வகுத்தார் என்றும் ரா.ராகைவயங்கார் 1918ல் வே.ராஜகோபாலையங்காரின் அகநாநூறு நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். குறுந்தொகைக்கு சவரிப்பெருமாள் அரங்கனும் நடுத்தொகைக்குப் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரும் திணை,துறை பகுத்தார்கள்.
 

சங்கப்பாடல்கள் அவற்றின் வரிகளைக்கொண்டு பார்க்கையில் தன்னுணர்ச்சி கொண்ட நேரடியான பாடல்களே என்று துளசி ராமசாமி கருதுகிறார். தலைவன் தலைவி தோழன் தோழி செவிலி போன்ற கதைமாந்தர்களெல்லாம் அடிக்குறிப்புகளால் உருவாக்கப்பட்டவை. கவிதைக்குள் வரும் தோழி என்ற குறிப்பு தன்னை, தன் நெஞ்சை நோக்கிச் சொல்வது மட்டுமே. அத்தகைய தன்னுணர்ச்சிப்பாடல்களில் வரும் வரலாற்றுக் குறிப்புகள் பொருந்தாதவையாக செருகப்பட்டவையாக உள்ளன.
 

சங்கப்பாடல்களில் முருகு முதலிய சிறுதெய்வங்களும் மூதாதை தெய்வங்களும் நடுகல் தெய்வங்களுமே பெரிதும் பாடப்படுகின்றன. அப்பாடல்கள் உருவான காலகட்டத்தில் பெருந்தெய்வ வழிபாடு இல்லை. ஆகவே சிவன் உள்ளிட்ட பெருந்தெய்வங்களைக் குறிப்பிடும் பாடல்களும் ராமாயணம் முதலிய இதிகாசக்குறிப்புகள் கொண்ட பாடல்களும் பிற்சேர்க்கைகள் அல்லது திருத்தல்கள்.
 

இவ்வாறு ஒரு சித்திரத்தை உருவாக்கியபின் அதை விரிவாக நிலைநாட்ட முயல்கிறார் துளசி ராமசாமி. இடைச்செருகல் அல்ல என அவர் நம்பும் சங்கப்பாடல்களை முழுக்க உரைநடைவடிவில் பொருட்சுருக்கமாக அளிக்கிறார். இந்நூலின் பாதிப்பங்கு இதற்கே செலவிடப்பட்டுள்ளது. அதன் பின் பழந்தமிழ் நூல்களின் முதற்பதிப்பு வரலாற்றை விரிவாக முன்வைக்கிறார். இந்நூலின் முக்கியமான பகுதி என நான் நினைப்பவற்றில் இது ஒன்று. பழந்தமிழ் நூல்கள் எந்தெந்த சுவடிகளில் இருந்து அச்சுக்குக் கொண்டுவரப்பட்டன? அச்சுவடிகள் எங்கே உள்ளன? அவற்றை சரிபார்த்த அறிஞர்கள் யார்? இக்கேள்விகளுக்குத் தெளிவான விடை இல்லாமல் இன்று கிடைக்கும் சங்கநூல்களை நாம் எந்த ஆய்வுக்கும் நம்பகமான மூல ஆதாரமாகக் கொள்ள முடியாதென்பதே உண்மை.
 

குறுந்தொகை சௌரிப்பெருமாள் அரங்கனால் 195ல் வெளியிடப்பட்டது. நடுத்தொகை பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் 1915ல் வெளியிடப்பட்டது. நெடுந்தொகை 1899ல் சி.வை.தாமோதரம்பிள்ளையால் பரிசோதிக்கப்பட்டு 300 பாடல்களுக்கு குறிப்புகள் எழுதப்பட்டாலும் வே.ராஜகோபாலையங்காரால் வெளியிடப்பட்டது. 1918ல் புறந்தொகையை 1894ல் உ.வே.சாமிநாதய்யர் வெளியிட்டிருக்கிறார்.
 

இந்த பதிப்பு வரலாற்றினூடாகச் செல்லும் ஆசிரியர் இந்நூல்கள் பெரும்பாலும் ஏட்டுச்சுவடிகளில் கண்டவற்றை பதவுரை பொருளுரையுடன் வெளியிடும் முயற்சிகளாகவே இருந்தன என்று சுட்டிக்காட்டுகிறார். திணைதுறை பகுப்பது போன்றவை செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஏட்டுச்சுவடிகளின் வரலாறு விரிவாக ஆராயப்படவில்லை. ஆகவே இடைச்செருகல்கள் மற்றும் திரிபுகளைக் கண்டறிவதற்கான வழிகளே இல்லை. அதாவது பத்தொன்பதாம்நூற்றாண்டில் முந்தைய தலைமுறைத் தமிழறிஞர்கள் ஏட்டில் எதை எழுதி வைத்தார்களோ அதைக்கொண்டே நம் சங்க இலக்கியம் கட்டமைக்கப்பட்டது.
 

ஆகவே நூல்களை எப்படி நம் மரபில் எழுதி வைத்தார்கள் என்று பார்ப்பது மிக அவசியமானதாகிறது. பழந்தமிழ் நூல்கள் எப்படி எழுத்துப்பண்பாட்டுக்குள் எப்படி வந்தன என்பதை ஆராயும் நான்காவது பகுதி இந்நூலை அடுத்தபடிக்குக் கொண்டுசெல்கிறது. ஐராவதம் மகாதேவன்,கா.ராஜன் ஆகியோரின் ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி தமிழகத்தில் கிமு 300க்கு முன்புவரை பிராமி லிபியே புழக்கத்தில் இருந்தது என ஆய்வாளர் நிறுவுகிறார். தமிழ்மொழி பிராமி எழுத்தில் எழுதப்பட்டிருப்பதை தமிழ்பிராமி என ஆய்வாளர் சொல்கிறார்கள். தமிழகத்தில் கிடைத்துள்ள தொன்மையான கல்வெட்டுகள் எல்லாமே தமிழ்பிராமியில் அமைந்தவை.
 

பிராமி லிபி இந்தியா முழுக்க சமண-பௌத்த கல்வெட்டுகளிலேயே அதிகம் காணப்படுகிறது. தமிழகத்திலும் பெரும்பாலும் அப்படித்தான். ஆகவே பிராமிலிபியைப் பரப்பியவர்கள் சமணர்களே என்று கொள்ளலாம். தமிழ் தொல்லிலக்கியங்களை சமணர்கள் எழுத்துக்குள் கொண்டுவரும்போது இருந்தது பிராமி லிபியே. சமணர்களுக்கு எழுத்தைப் பரப்புவதில் பெரும் ஆர்வம் இருந்தது. தொல்காப்பியத்திலேயே அவர்கள் எழுத்ததிகாரத்தில் நூல்மரபைத்தான் முதன்மையாக வைத்திருக்கிறார்கள்.வணிகம் மூலம் எழுத்து விரைவில் பரவியது.
 

சங்கப்பாடல்களை இக்காலகட்டத்தில் சமணமுனிவர்கள் எழுத்துவடிவுக்குள் கொண்டுவந்தார்கள் என்கிறார் துளசி ராமசாமி. சங்கப்பாடல்களில் உள்ள மன்னர்களைப்பாடும் பகுதிகளும் வைதிகமதிப்பீடுகள் கொண்ட பாடல்களும் இடைச்செருகல்கள் என்கிறார். சங்கப்பாடல்கள் வீரயுகப்பாடல்கள் என்று கைலாசபதி முதலிய ஆய்வாளர்கள் சொல்வதை விரிவாக மறுக்கிறார் ஆசிரியர். அடிக்குறிப்புகளைக்கொண்டே கைலாசபதி இம்முடிவுகளுக்கு வருகிறார் என்றும் அவை பிற்காலத்தியவை என்றும் சொல்கிறார். சங்கப்பாடல்கள் வீரர்களை மட்டும் பாடியவை அல்ல.
 

கடைசி அத்தியாயத்தில் சங்கப்பாடல்கள் சம்பந்தமான சில முடிவுகளை நோக்கிச் செல்கிறார் ஆசிரியர். ஒன்று சங்கப்பாடல்களில் உள்ள அகத்துறைப்பாடல்களைப் பாடியவர்கள் அல்ல புறத்துறை பாடல்களைப்பாடியவர்கள். அவை இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களை வெவ்வேறு பண்பாடுகளைக் காட்டுகின்றன. சங்கப்பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன என்றே அவை மீண்டும் மீண்டும் சொல்கின்றன, எழுதப்பட்டிருக்கின்றன என்று அப்பாடல்கள் சொல்லவில்லை. அவற்றைப் புலவர்கள் பாடவில்லை. பாணர்களும் விறலிகளும் பாடினார்கள். அவற்றை அவர்கள் இயற்றவில்லை, பாடமட்டுமே செய்தார்கள். அவை எழுதப்பட்டது நெடுங்காலம் கழித்து. ஆகவே அவை வாய்மொழி நாட்டுப்புறப்பாடல்களே.
 

சங்கப்பாடல்கள் எழுத்துரு தோன்றிய கிமு 300 வாக்கில் வாய்மொழி மரபில் இருந்து முதல்முறையாகத் தொகுக்கப்பட்டன என்கிறார் ஆசிரியர்.இறையனார் அகப்பொருள் காலகட்டத்தில் அவை மறுபடியும் தொகுக்கப்பட்டன. அவை மூலத்தில் நாட்டுப்புறப்பாடல்களே. அரசர்களைப்பற்றிய குறிப்புகள் வரலாற்றுக்குறிப்புகள் வைதிகக் குறிப்புகள் கொண்ட பாடல்களை நீக்கிவிட்டால் எஞ்சும் சங்கப்பாடல்கள் நாட்டார்பாடல்களே என்று ஆசிரியர் முடிக்கிறார்.
 

ஒரு விரிவான ஆய்வை முன்வைத்திருக்கும் இந்நூல் அவ்வகையில் முக்கியமானது. இது உருவாக்கும் விவாதம் நம் சங்க இலக்கிய ஆய்வை முன்னெடுக்கக்கூடியது. ஆனால் இதன் ஆய்வுமுறைமையில் எனக்கு சில மாற்றுக்கருத்துக்கள் உள்ளன.
 

ஒன்று, ஆய்வாளர் முதலில் தனக்கென ஒரு ஆடுகளத்தைத் தானே உருவாக்கிக் கொள்கிறார். அவரால் தன் கொள்கைக்குள் நின்று விளக்கமுடியாத பாடல்களை எல்லாம் இடைச்செருகல்கள் என வெளியேதள்ளிவிடுகிறார். அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
 

செவ்வியலோ நாட்டாரியலோ எந்த ஒரு இலக்கியமரபும் அறுபடாத ஒரு தொடர்ச்சியாகவே இருக்கும். துண்டுதுண்டாக அவற்றைப் பகுத்து வரலாற்றுக்காலகட்டங்களாக வகுத்துக்கொள்வது ஆய்வாளர்களின் வசதிக்காகவே ஒழிய அது இலக்கியத்தின் இயல்பல்ல. ஒவ்வொருமுறை புதுமையை ஏற்றுக்கொள்ளும்போதும் அதுவரை உருவாக்கப்பட்ட அனைத்தையும் திரட்டிக்கொண்டுதான் இலக்கியம் வளர்கிறது. எந்த ஓர் இலக்கியக் காலகட்டத்தை எடுத்துப்பார்த்தாலும் அதன் வேர் நெடுந்தொலைவில் இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியிலேயே இருப்பதைக் காணமுடியும்
ஆகவே பழந்தமிழ் இலக்கியத்தையும் அப்படியே பார்க்கமுடியும். சங்கப்பாடல்களில் ஒருபகுதி தொன்மையான நாட்டார்பாடல்களாக இருக்கலாம். அந்த நாட்டார்ப்பாடல்களை வாய்மொழிமரபு உருமாற்றி உருமாற்றித் தக்கவைத்துக்கொண்டே அடுத்தடுத்த காலகட்டம் நோக்கி வந்திருக்கலாம்.

 

சமகாலச் செய்திகள் அவற்றில் ஊடுருவியிருக்கலாம். அவை மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கலாம். அவற்றில் ஒரு பகுதி வேறு அழகியல் இயல்புகள் கொண்டவையாக இருக்கலாம். தொடக்கம் இப்படிப்பட்டது என வகுத்துக்கொண்டு பிறவற்றை எல்லாம் இடைச்செருகல் என வெட்டிவிடும் போக்கு சரியானதாகப் படவில்லை.
 

துளசி ராமசாமி தமிழ் மனதை ஆளும் சில எளிய அரசியல் முன்முடிவுகளைத் தானும் கொண்டிருக்கிறார். வைதிகம் தமிழகத்துக்கு வந்த நிகழ்வு மிகப் பிற்காலத்தையது என அவரே முடிவுசெய்கிறார். அதை நிறுவுவதற்குப் பதிலாக வைதிகக்குறிப்பு இருந்தால் அந்தப்பாடல் பிற்காலத்தைய இடைச்செருகல்தான் என அடுத்த படிக்குத் தாவிச்செல்கிறார். அந்தப்பாடல்களை இடைச்செருகல் என விலக்கிவிட்டால் அதன்பின் அவர் சொல்லும் கொள்கைக்கு மறுப்பே இல்லை. நாட்டார்பாடல்களில் எப்படி வைதிகக்குறிப்பு வந்தது என்று எவரும் கேட்கமுடியாது அல்லவா?
 

வைதிகம் சமணத்தை விடத் தொன்மையானது. இந்தியாவின் அனைத்து நிலப்பரப்புகளிலும் அது சமணம் பரவுவதற்கு முன்னரே பரவியும் விட்டது என்பதைப் புறவயமாக இந்தியப் பண்பாட்டு வரலாற்றை பார்க்கும் எவரும் உணரமுடியும். தொன்மையான சமணநூல்கள் அனைத்திலும் வலுவான பரபக்கமாக வைதிகமும் வேதாந்தமும் இருந்துகொண்டிருக்கின்றன. இந்தியத் தொல்லிலக்கியங்களிலும் நாட்டார் மரபுகளிலும் நேர்நிலையாகவும் எதிர்மறையாகவும் வைதிகத்தின் செல்வாக்கு அவற்றின் ஆரம்பகட்டத்திலேயே ஊடுருவிவிட்டிருப்பதையே இந்தியப்பண்பாட்டாய்வுகள் காட்டுகின்றன. அதனுடன் போராடியே சமணம் பரவ முடிந்தது.
 

சங்கப்பாடல்களை நாட்டார் இலக்கியத்தில் தொடங்கி தொடர்ந்த வள்ர்சிதைமாற்றம் மூலம் செவ்வியல் நோக்கி வந்தவை என்று வகுத்துக்கொள்வதே அவற்றின் வரலாற்றைப் புரிந்துகொள்ள மிகவும் உதவியான கோணமாக அமையும் என நான் நினைக்கிறேன்.
 

இரண்டு, துளசி ராமசாமி இந்த ஆய்வில் வேற்றுமொழிகளில் வாய்மொழி இலக்கியங்கள் எழுத்துவடிவுக்குள் கொண்டுவரப்பட்டபோது, செவ்வியலை சந்திக்கும்போது என்னென்ன மாற்றங்களை அடைந்தன என்பதை ஆராய்ந்திருக்கவேண்டும். அந்த மரபுகளில் செயல்பட்ட எந்தெந்த விதிகள் சங்க இலக்கியத்தில் செயல்பட்டுள்ளன என்பதை விளக்கியிருக்கவேண்டும்.
 

உதாரணமாக வேதங்கள் வாய்மொழி மரபு சார்ந்தவை . ரிக்வேதத்தின் பெரும்பகுதி நாட்டார் மரபில் இருந்து வந்தது என ஆய்வாளர் சொல்கிறார்கள். பிற்காலத்தில்தான் அவை சீராக்கி தொகுக்கப்பட்டு செவ்வியலாக்கம் நிகழ்ந்துள்ளது. ரிக்வேதத்தின் ஒருபகுதி நாட்டாரியலிலும் மறுபகுதி உயர்செவ்வியலிலும் இருந்துகொண்டிருக்கிறது.ஒரே நூலிலேயே மொழியமைப்பிலும் கவிதையமைப்பிலும் வேறுபாடு, அல்லது வளர்ச்சிப்போக்கு உள்ளது. அப்படி சங்க இலக்கியம் என்னும் நூல்தொகையிலும் ஏன் இருக்கக்கூடாது? அது ஏன் ‘தூய’ நாட்டார்பாடல்களாகவே இருந்தாகவேண்டும்?
 

மூன்றாவதாக, துளசி ராமசாமி அழகியலை கருத்தில்கொள்ளவே இல்லை. உலகமெங்கும் நாட்டாரியலுக்கென ஓர் அழகியல்பொதுமை உண்டு. நாட்டார்பாடல்கள் கவிஞன் என்ற ஆளுமை உருவாகாத தளத்தைச் சேர்ந்தவை. கவிதையை ரசிக்கும் தனிப்பயிற்சி உருவாகாத சூழலைச் சேர்ந்தவை. ஆகவே அவை நேரடியானவையாக,வெளிப்படையானவையாக இருக்கின்றன.

 

உட்குறிப்புகள் அச்சமூகத்தின் கூட்டுப்புரிதலைசேர்ந்தவையாக மட்டுமே இருக்கும். அந்தக் கவிஞன் உருவாக்கும் தனிப்பட்ட நுட்பங்களாக இருக்காது.
 

நாட்டார் பாடல்கள் சடங்குகலைகளுடனும் தொழில்களுடனும் அன்றாடக் கேளிக்கைகளுடனும் பிணைந்தவையாகவே இருக்கும். கவிதை என்ற தனித்த கலையாக அவை நிலைகொள்ளாது. தூயநிகழ்த்துகலைகளின் பகுதியாகவும் அவை இருப்பதில்லை. ஆகவே அவை நுட்பத்தை விட சரளத்தை முதன்மையான இயல்பாகக் கொண்டவை.
 

சங்கப்பாடல்களை அழகியல்நோக்கில் அணுகும் எவரும் அவற்றை நாட்டார் பாடல்கள் என்று சொல்லமுடியாது. அவற்றின் அழகியல் தேர்ந்த செவ்வியலுக்குரியது. அவை பெரும்பாலும் கவிஞன் என்னும் தனியாளுமை இல்லாத சாதாரண மனிதர்களால் பாடப்பட்டவை அல்ல. அத்தகைய பாடல்களும் சில உள்ளன. பெயர்கள் துல்லியமாக இல்லாமல் போகலாம். சுவடிகளில் பிழைகள் இருக்கலாம். ஆனால் கபிலர் ,பரணர், அவ்வையார் , பாலைபாடிய பெருங்கடுங்கோ போன்ற பல கவிஞர்களின் பெரும்பாலான பாடல்களில் அந்தக் கவிஞர்களின் தனித்த அழகியலடையாளம் துல்லியமாகவே உள்ளது. கபிலர் பெயரில் இருக்கும் உயர்தரச் செவ்வியல் பாடல்கள் நாட்டார்பாடல்கள் என்றால் கம்பராமாயணமும் நாட்டார்பாடலே.
 

சங்கப்பாடல்கள் நாட்டார்பாடல்களுக்குரிய சரளம், நேரடித்தன்மை போன்ற இயல்புகள் கொண்டவை அல்ல. அவை கவிதையைத் தன் கலையாகக் கொண்ட, அதைக் கற்றுத்தேர்ந்த கவிஞனால் பாடப்பட்டு கவிதையை ரசிக்கும் நுண்ணுணர்வும் பயிற்சியும் கொண்ட சுவைஞர்களுக்காக முன்வைக்கப்பட்டவை.

 

அக்கவிதைகளின் இயல்பே அதற்கான சான்று. அவ்வியல்பை கவனிக்காமல் வெறுமே வரலாற்று சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் அவற்றை நாட்டார்பாடல்கள் என தீர்ப்பு சொல்லமுடியாது.
செவ்வியலுக்கு உலகமெங்கும் ஒரு முக்கியமான சிறப்பியல்பு உண்டு. திரும்பத்திரும்பச் சொல்வதுதான் அது. ஒரு புனைவுத்தருணத்தை, ஒரு படிமத்தை , அல்லது ஓர் உணர்ச்சியை இலக்கியத்தின் மையப்புள்ளியாக பொதுமைப்படுத்தி எடுத்துக்கொண்டு அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே செல்வது அதன் வழக்கம். அதன்மூலம் அது மேலும் மேலும் நுண்மையைக் கண்டடைந்தபடியே செல்கிறது. இந்த நுண்மையாக்கம் [improvization] செவ்வியலின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. இன்றும் செவ்வியல்கலைகளில் இதைக் காணலாம்.நாட்டார் இலக்கியத்தில் இவ்வியல்பு இருப்பதில்லை. அது ஓர் சடங்காகவோ ஆசாரமாகவோதான் கலையின் சில அம்சங்களைத் திரும்பத்திரும்பச் செய்கிறது.

 

நுண்மையாக்கம் என்னும் இயல்பு சங்க இலக்கியத்தில் மிக முக்கியமாகக் காணப்படுகிறது. கைவளை கழல்தல், பசலை படர்தல் போன்றவற்றை சங்க இலக்கியம் கையாளும் விதம் உதாரணம். நாட்டார் பாடல்களைபோல ஒரேவகையில் திரும்பச்சொல்வதில்லை அது. ஒவ்வொருமுறையும் துல்லியமான ஒரு நுண்மையைத் தனக்கெனக் கண்டுகொள்கிறது.
 

நீண்ட நாட்டார்மரபிலிருந்து திரண்டுவந்த செவ்வியல் என்றே சங்க இலக்கியத்தைச் சொல்லமுடியும். நாட்டார்பாடல்களில் இருந்து உருவான அழகியல்கூறுகளை உள்வாங்கி எழுதும் பெருங்கவிஞர்கள் அதன் இறுதிப்பகுதியில் உருவாகியிருக்கலாம். அவர்களிடம் நாட்டார் மரபும் செவ்வியலும் முயங்கியிருக்கலாம். அந்தசெவ்வியல் உருவான பிறகு அவை ஏட்டில் எழுதப்பட்டிருக்கலாம்.

 

எழுதப்பட்ட பின் அச்செவ்வியலுக்கு இலக்கணம் அமைந்திருக்கலாம். அவ்விலக்கணப்படி அது மேலும் வளர்ந்து கலித்தொகையையும் பத்துப்பாட்டையும் எல்லாம் உருவாக்கியிருக்கலாம். காப்பியகாலகட்டம் அவரை அந்த இலக்கிய இயக்கம் நீடித்திருக்கலாம்.
 

ஏட்டில் எழுதப்படாதவை எல்லாம் நாட்டார் பாடல்கள் என்று பொருளில்லை. வாய்மொழி மரபிலேயே உயர்செவ்வியல் நீடிக்கமுடியும். வைதிகத்தின் பெரும்பாலான செவ்வியல்நூல்கள் வாய்மொழி மரபாகவே நீடித்தவைதான்
 

துளசி ராமசாமியின் நூல் தமிழ் செவ்வியலின் நாற்றங்காலான சங்கப்பாடல்களுக்கு நாட்டார் மரபுடன் உள்ள உறவை வலுவாக கவனப்படுத்தியிருக்கிறது. அதன் முக்கியத்துவம் அதுவே
 

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே -முனைவர் துளசி ராமசாமி,விழிகள் பதிப்பகம்.

 

http://www.jeyamohan.in/?p=33231

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.