Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமக்குத் தெரியாத மனச்சாட்சி.

Featured Replies

 

ஒரு வழக்கறிஞர் என்ற ரீதியில் நீதிமன்றத்தின் கௌரவம் குறித்தும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் சட்டத்தின் ஆதிபத்தியம் குறித்தும் தமது மனச்சாட்சிக்குத் தாம் பொறுப்புக் கூற வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்து விசாரணை மேற்கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த அவர் முடிவு செய்தமை இதனாலேயே ஆகும். ஒரு நாட்டின் தலைவரது செயற்பாடுகள் மட்டுமே அவரது கருணையை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டுமேயல்லாது, அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. 

 
அதேசமயம் ஒரு சாதாரண பொதுமகனது மனதில் உருவாகும் கருணை போன்றல்லாது, ஓர் அரச தலைவரது நெஞ்சத்தில் உருவாகும் கருணை, நாடு மற்றும் நாட்டு மக்கள் குறித்து அவரது மனதில் ஏற்பட வேண்டிய வேதனையாக அமைய வேண்டுமேயன்றி, தமது குடும்பத்தவர் மற்றும் தமக்கு நெருங்கியவர்கள் மீதான ஈர்ப்பாக அது அமையலாகாது என்பதை அவர் மறந்துவிடலாகாது.
 
இத்தகைய பண்புகள் கொண்ட இரு அரச தலைவர்கள் குறித்த அண்மைக்கால வரலாறுகள் உள்ளன. அவர்களில் ஒருவர் இலங்கை ஊடகங்களால் பெரிதும் பிரபல்யப்படுத்தப்பட்ட உருகுவே நாட்டின்  ஜனாதிபதி ஹோ சே முஜிகா ஆவார்.
 
அவர் குறித்த தகவல்கள் தற்போதும் எமது ஞாபகத்தில் இருப்பதால்,  சில காலத்துக்கு முன்னர் ஆபிரிக்காவில் இருந்த மற்றொரு அரச தலைவரான தோமஸ் சங்கார என்பவர் குறித்து மட்டுமே இங்கு குறிப்பிடுதல் போதுமானது. 
 
முன்னைய கால கட்டத்தில் வடசோல்டாவ என்று அழைக்கப்பட்டதும், தற்போது பூர்கினா போசோ என்ற பெயரால் அடையாளப்படுத்தப்படும் நாட்டின் ஜனாதிபதியாகச் சேவையாற்றியவரே அவர்.
thomes%20tk%2001.jpg
 
நெடுஞ்சாலைகள் நிர்மாணப் பணியை மேற்கொள்ளும் பொறியியலாளர் ஒருவர் பெறும் சம்பளத் தொகை, அந்தத் தெருக்களைக் கூட்டிச் சுத்தம் செய்யும் ஒரு தொழிலாளிக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அவர். 
 
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சமயம், வெறும் பிரசார தந்திரமாக அந்தக் கொள்கை நிலைப்பாட்டை அவர் முன்வைத்தாரில்லை. ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே அத்தகைய கருத்தை முன்வைத்ததுடன் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார். 
 
தமது ஜனாதிபதிப் பதவிக்காக அவர் பெற்ற வேதனம், அந்த நாட்டின் கனிஷ்ட தர எழுதுவினைஞரொருவர் பெற்ற வேதனத்துக்கு நிகரான சிறு தொகையொன்று மட்டுமே. தமது ஜனாதிபதிப் பதவியின் நான்காவது ஆண்டு சேவையின் நடுவில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யினால் அவர் படுகொலை செய்யப்பட்டார். 
 
அவர் மரணமடைந்த வேளையில் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் நூறு டொலர்களுக்குக் குறைந்த பணத்தொகையே மீதமாக இருந்தது. அதுதவிர வேறெந்த தனிப்பட்ட சொத்தும் அவரது பெயரில் இருந்ததில்லை.
 
ஒரு நாட்டின் தலைவரொருவரது சிறப்பியல்பு முன்னுதாரணம் என்ற ரீதியில் அந்தத் தலைவரது நடைமுறைச் செயற்பாடுகளை உயர் தரத்தில் வைத்து நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எமது நாட்டின் தலைவர்களது நடைமுறைப்போக்குகள் சிறப்பியல்புமிக்க உதாரணமொன்றுக்கு முற்றிலும் மாறுபட்ட விதமாகவே எப்போதும் அமைந்து காணப்படுகிறது. 
 
நாட்டின் தலைவரொருவர் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பாக நெஞ்சை உருக வைக்கும் விதத்தில் கருத்தொன்றை வெளியிட்டபோது, அந்தக் கருத்தை அந்த இடத்தில் வைத்துப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. அது அவரது நடைமுறைப் போக்குக்கு மாறுபட்டதொன்றாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
 
வேறெந்தக் காரணத்தாலும் அல்லாது, மஹிந்த என்ற பெயரை நிலைநிறுத்தும் நோக்குடன் மட்டும் நாட்டின் நிதியை விரயம் செய்யும் மிஹின் லங்கா என்ற விமான சேவை நடத்தப்பட்டது. அதன் தலைவராகச் செயற்பட்டவர் உறவு முறையில் ஜனாதிபதிக்கு மைத்துனர் முறையானவர். குறிப்பிட்ட இந்த மிஹின் லங்கா விமான சேவை 2007/2008 நிதியாண்டில் 3356 மில்லியன் ரூபா நட்டம் ஈட்டியிருந்தது. 
 
அத்தகைய நட்டம் 2008/2009 ஆம் நிதியாண்டில் 4657 மில்லியன் ரூபாவாக உயர்ந்திருந்தது. அது 2009/2010 ஆம் நிதியாண்டில் 5722 மில்லியன் ரூபா நட்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. 
 
அதேசமயம் நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவராகவும் ஜனாதிபதியின் அந்த மைத்துனர் முறையான பிரமுகரே செயற்படுகிறார். 
 
2010/2011 ஆம் நிதியாண்டில் அரசுக்கு 176 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய அந்த நிறுவனம் 2011/2012 ஆம் நிதியாண் டிலும் மிகப் பெரும் தொகை நட்டத்தை ஈட்ட நேர்ந்துள்ளது. 
 
நிலைமை இவ்விதமிருக்க, இவ்விரு நிறுவனங்களில் வகித்த தலைமைப் பதவிக்காக மாதமொன்றுக்கு பத்து லட்சம் ரூபாவை படியாக பொதுமக்களது வரிப்பணத்திலிருந்து அந்தப் பிரமுகருக்குச் செலுத்தப்படுகிறது. 
 
நாட்டின் நிதி மற்றும் வளங்களை இவ்விதம் நியாயமற்ற விதத்தில் விரயம் செய்யும் குறைபாடுகளைச் சுட் டிக்காட்டிய கோப் குழுவின் இரு அறிக்கைகள், ஜனாதிபதியின் அலுமாரியில் கறையான்களுக்கு இரையாகும் விதத்தில் நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளமை, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காவும் உருகும் நெஞ்சுக்கு உதாரணம் காட்டப்படத்தக்கதொன்று.
 
அண்மையில் கொழும்பு மாநகரில் பெரிய எடுப்பில் காரோட்டப் பந்தயமொன்று நடத்தப்பட்டது. குறிப்பிட்ட அந்த நிகழ்வுக்கு ஜனாதிபதியின் மகன்மாரில் ஒருவரான நாமல் ராஜபக்ஷவின் "கார்ல்டன் விளையாட்டுக் கழகமே அனுசரணை வழங்கியிருந்தது. 
 
ஓர் இறாத்தல் பருப்பைக் கொள்வனவு செய் யும் சிரமம் முதல், நாட்டின் பொதுமக்களது சட்டைப் பைகளை வெறுமையாக்கும் விதத்திலான கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இத்தகைய மோட்டார் பந்தயக் கார்களை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதித் தீர்வையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
 
பொதுமக்களுக்குப் பயன்படத்தக்க அந்த இறக்குமதித் தீர்வை மூலம் கிட்டத்தட்ட 200 மில்லியன் ரூபா வரிப்பணத்தை குறிப்பிட்ட "கார்ல்டன் விளையாட்டுக்கழகத்துக்குப் பயன்படும் வகையில் திசை திருப்பப்பட்ட தகவல், "கோப்' குழுவின் விசாரணை அறிக்கை மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
 
நாட்டின் பொதுமக்களது நலன்குறித்த ஜனாதிபதியின் அக்கறை மற்றும் வேதனையை விட தமது குடும்ப உறுப்பினர்களது தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் இணங்கிச் செயற்படும் அவரது போக்கைச் சுட்டிக்காட்ட இவ்விரு சம்பவங்களை உதாரணங்களாகக் கொள்ள முடிகிறது.
 
ஆபிரிக்காவின் பூர்கினா போசோவின் ஜனாதிபதியாகவிருந்த தோமஸ் சங்காரவின் செயற்பாடுகள் குறித்து மேலும் ஆராய்ந்து பார்ப்போமானால், அவர் அந்த நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த நான்கு ஆண்டுகள் கால இடைவெளியில் அவர் தமது பிறந்த ஊரில் சொந்தக் கிராமத்தில் தொடர்ச்சியாக மரக்கறித் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வந்திருந்தார் என்ற செய்தியை நாம் மனதில் இருத்தியாக வேண்டியுள்ளது.
 
அதேவேளை எமது நாட்டிலோ, தமது குடும்பத்தவர்களுக்கு மேலதிகமாக தமக்கு மிக வேண்டப்பட்டவர்கள் மீதும் ஜனாதிபதி மனது உருகிச் செயற்பட்டுள்ளார். இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த அரசின் அமைச்சரொருவரின் மனைவி, குறிப்பிட்ட வழக்கில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் இனங்காணப்பட்ட போதிலும் ஜனாதிபதியின் தலையீட்டால் அவர் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது. 
 
அதேபோன்று வேறு பல சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜனாதிபதிக்கு நெருக்கமான பலர், நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்ட போதிலும் தத்தமது குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்திருக்கிறது.
 
பிரதம நீதியரசரின் கணவர் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராகப் பதவி வகித்த வேளையில், உயர்மட்ட அறிவுறுத்தலுக்கமைய த பினான்ஸ் நிறுவனத்தின் பங்குகளைத் தவறான விதத்தில் கொள்வனவு செய்ய முயற்சித்தார். அவரது அந்த முயற்சி சாதகமாக முடிந்திருக்குமானால் நாட்டுக்கு 390 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருந்திருக்கும். 
 
அந்த முயற்சி கைகூடவில்லை. இது அரச வளத்தை விரயம் செய்யும் விடங்களின் ஒழுங்கு நிரலில்  பின்தள்ளப்பட்டிருந்ததோடு, அவருக்கெதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவ்வேளையில் அழுத்தங்கள் உருவாகியிருக்கவில்லை. 
 
அந்தச் சம்பவம் ஜனாதிபதிக்கு கோபத்தை ஏற்படுத்தியதான தோற்றமெதுவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் பிரதம நீதியரசருடனான பிணக்கின் பின்னர் தற்போது பிரதம நீதியரசருக்கு வெளிநாட்டுப் பணம் கிடைத்தமை குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு தனியான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. 
 
அதேசமயம் சில மாதங்களுக்கு முன்னர் மேலே குறிப்பிடப்பட்ட ஜனாதிபதியின் மைத்துனர் உறவு முறையான அந்தப் பிரமுகர் வசம் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட பல்லாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பண நோட்டுக்கள் நாட்டுக்குள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன என்பது குறித்து இந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு எத்தகைய சட்டபூர்வ நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாக தெரியவில்லை.
 
அண்மையில் பெற்றோலின் விலையில் மீண்டுமொருமுறை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு இரு வாரங்களுக்கு முன்னர், 60மில்லியன் டொலர் மற்றும் அதற்குரிய வட்டியையும் பிரசித்தமான ஹெஜின் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசு, டொயிஸ் வங்கிக்கு செலுத்த வேண்டுமென வெளிநாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. 
 
அதற்கு முன்னரும் இதேவிதத்தில் இதே விடயம் தொடர்பாக "ஸ்ரான்டேர்ட் சார்ட்டெட் வங்கிக்கு 160 மில்லியன் டொலரை இலங்கை அரசு செலுத்த வேண்டுமென மற்றொரு வெளிநாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. 
 
இத்தகைய சகல கொடுக்கல் வாங்கல்களையும் கட்டமைத்தவர் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் உயர் பதவியொன்றை வகித்ததொரு பிரமுகராவார். அவர் மீது இந்தத் தவறுகள் குறித்து சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. 
 
கிறீஸ் நாடு தற்போது பெரும் பொருளாதார பின்னடைவினால் சிரமமுற்று வருகிறது. இத்தகைய நிலையில் அந்த நாட்டின் பெறுமதி சரிந்து போகும் பிணை முறிகளை கொள்வனவு செய்யும் இலங்கை மத்திய வங்கியின் தன்னிச்சையான செயற்பாடு நாட்டுக்கு 15.5 மில்லியன் டொலர் நட்டத்தை ஏற்படுத்தக் காரணமாகியுள்ளது. 
 
ஆயினும் இது குறித்து சட்ட நடவடிக்கை எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்பட வில்லை. இப்போது மீண்டும் ஜனாதிபதி தோமஸ் சங்கார மீது கவனத்தைத் திருப்புவோம். 
 
ஒரு சந்தர்ப்பத்தில் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் நிலவிய மேலதிகப் பற்றுத் தொகையை, அவர் மீதான மதிப்பு, கௌரவம் என்பவை காரணமாக அந்த வங்கியின் முகாமையாளர் மேலதிக பற்றுக்கான விதிவிலக்கு வழங்கியிருந்தார். 
 
ஆனால் அதுபற்றித் தெரிந்து கொண்டதும் ஜனாதிபதி தோமஸ் சங்கார உடனடியாகவே அந்த வங்கி முகாமையாளரைப் பதவியிலிருந்து விலக்கி விட்டிருந்தார். அந்தவகையில் எமது நாட்டில் அவ்விதம் நீதி நேர்மையுடன் செயற்பட்ட, செயற்படத்தக்க கனவான்கள் எவரும் இருந்ததில்லை. 
 
இப்போதும் இல்லை. ஆகவே மனச்சாட்சிக்கு மதிப்பளித்துச் செயற்படுவதற்குப் பதிலாக, சட்டம் முறைப்படி நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதுவே போதுமானதாகும்.
 
www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.