Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோன் ஹெரியின் வருகை, இலங்கையின் மீதான அமெரிக்க அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன் ஹெரியின் வருகை, இலங்கையின் மீதான அமெரிக்க அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? - யதீந்திரா

 

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது இரண்டாவது தவணைக்கான வெளிவிவகாரச் செயலராக (Secretary of State) ஜோன் ஹெரியை நியமித்திருக்கின்றார். ஒபாமாவின் முதலாவது தவணைக் காலத்தில் வெளிவிவகாரச் செயலராகவிருந்த கிலாரி கிளின்ரன் அப்பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதை விரும்பாத நிலையிலேயே, அவரது இடத்தை நிரப்பும் பொறுப்பு தற்போது ஜோன் ஹெரிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒபாமாவின் முதலாவது தெரிவு ஹெரி அல்ல. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுர் சூசன் ரைஸே (Ms. Susan Rice) இப்பொறுப்பிற்கு நியமிக்கப்படுவாரென்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த செப்டம்பர் பெங்காசியில் அமெரிக்க தூதுவராலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ரைஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை ஏற்படுத்திய விமர்சனங்களால் அவருக்கான ஆதரவு அமெரிக்க குடியரசு கட்சியினர் மத்தியில் குறைவடைந்தது. இதனைத் தொடர்ந்தே ஜோன் ஹெரி இப்பதவிக்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 

அமெரிக்க ஜனநாயக கட்சியின் செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவரான ஹெரி 2004ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய அமெரிக்க அதிபராகவிருந்த புஷ்ஷை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் ஆவார். ஒபாமாவின் முதலாவது தவணைக் காலத்தில், அமெரிக்க வெளிவிவகாரக் குழுவின் தலைவராக செயலாற்றிய ஜோன் ஹெரி, ஒபாமாவின் இரண்டாவது தவணைக் காலத்தில், அமெரிக்க வெளிவிவகார உறவுகளை கையாளப் போகும் முக்கிய நபராக இருக்கப் போகின்றார். பொதுவாகவே அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட பதவிநிலை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்க வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றங்களை எதிர்பார்க்கும் போக்கு இலங்கைச் சூழலில் காணப்படுவதுண்டு. இவ்வகை எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்துவதில் சிங்கள, தமிழ் ஆகிய இருதரப்புக் கருத்துருவாக்க பிரிவினரும் தயக்கம் காட்டுவதில்லை.

 

தற்போது ஜோன் ஹெரியின் நியமன அறிவிப்பைத் தொடர்ந்தும் அவ்வாறான அபிப்பிராயங்களே வெளிவந்திருக்கின்றன. ஹெரி இலங்கை அரசின் மீது இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க மாட்டார் என்றவாறான அபிப்பிராயம் அரசசார்பு கருத்துருவாக்கப் பிரிவினர் மத்தில் காணப்படுவதாக தெரிகிறது. இது பற்றி ஏசியன் ரிபியூன் (Asian tribune) இணையத்தளத்தில் எழுதியிருக்கும் தயா கமகே, ஹெரி இலங்கை தொடர்பான முழு அவதானத்துடன், நட்புணர்வுடன் கூடிய அணுகுமுறையைக் கைக்கொள்வார் - அது இலங்கை தொடர்பில், சில அமெரிக்க அதிகாரிகள் கடந்த காலத்தில் நடந்து கொண்டதற்கு மாறான ஒன்றாகவே அமைந்திருக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். கொழும்பின் வெளிவிவகார அவதானிப்பாளர்கள் மத்தியில் இத்தகையதொரு பார்வை மேலோங்கியிருப்பதையே தயா கமகேவின் கருத்து கோடிகாட்டுகின்றது. இத்தகையதொரு பார்வைக்கு சிலர் வருவதற்கு வலுவானதொரு காரணம் உண்டு.

 

விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான யுத்தம் 2009 மே 19ல் முடிவுக்கு வந்தது. இலங்கை அரசின் உத்தியோகபூர்வமான வெற்றி அறிவிப்பைத் தொடர்ந்து, இலங்கை முற்றிலும் புதியதொரு சூழலுக்குள் பிரவேசித்திருந்தது. இத்தகையதொரு பின்புலத்தில், 2009 டிசம்பர் 7இல் அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழு (COMMITTEE ON FOREIGN RELATIONS  UNITED STATES SENATE) இலங்கை: யுத்தத்திற்கு பின்னரான அமெரிக்க மூலோபாயத்தை மீள்சட்டகப்படுத்தல் (SRI LANKA: RECHARTING U.S. STRATEGY AFTER THE WAR) என்னும் தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. மேற்படி அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கும் முக்கியமான விடயம் - அமெரிக்கா இலங்கையை இழந்துவிட முடியாது (The United States cannot afford to "lose" Sri Lanka) என்பதாகும். இவ்வாறு குறிப்பிடும் மேற்படி அறிக்கையானது - இதன் அர்த்தம், விடயங்களை ஓர் இரவில் மாற்றிவிட முடியும் என்பதோ அல்லது இலங்கையின் அரசியல் மற்றும் மனிதாபிமான விடயங்களை நிராகரித்துவிடுவது என்பதோ அல்ல என்றும் சுட்டிக் காட்டியிருக்கின்றது. மேற்படி விபரிப்பின் அடிப்படையில் இவ்வறிக்கையானது அமெரிக்காவின் சில மூலோபாய நலன்களை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது. மேற்படி அறிக்கையின் சில பகுதிகளை மேலதிக தகவல்களுக்காக இங்கு தருகிறேன்.

 

இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவமானது, கருத்தில் கொள்ளத்தக்க வகையில் வளர்ச்சியடைந்து செல்கிறது. இந்த நிலைமையில் மேற்குலக நாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்தம் தொடர்பான விடயங்கள் மீதான விமர்சனங்களை அதிகரித்துச் சென்றால், ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சீனா, பர்மா ஈரான் மற்றும் லிபியா போன்ற நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும். இது இலங்கை விடயங்கள் மேற்குலகு அல்லாத நாடுகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டுவிடக்கூடிய நிலைமையை தோற்றுவிக்கலாம். இந்த நிலைமையானது இறுதியில், இப்பிராந்தியத்தின் மீது அமெரிக்கா கொண்டுள்ள ஈடுபாட்டை விழுங்கிவிடக் கூடும். எனவே இலங்கையின் புவிசார் மூலோபாய முக்கியத்துவத்தை அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது. இவ்வாறு எச்சரித்திருக்கும் மேற்படி வெளிவிவகார குழுவின் அறிக்கையானது அதற்கான காரணமாக பின்வருவனவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறது.

 

மூலோபாய முக்கியத்துவத்தை பொறுத்தவரையில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இப்பிராந்தியத்தில் ஒரு பெரிய விளையாட்டில் (Great Game) களமிறங்கியிருக்கின்றன. மேற்படி மூன்று நாடுகளும் கடல்வழி வர்த்தகத்திலும் ஆர்வங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையில் அமெரிக்கா இலங்கையின் மீதும் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் என்பது இறுதியில் அமெரிக்க ஆர்வங்கள் நிராகரிக்கப்படுவதாக அமைந்துவிடக் கூடாது. இவற்றை கருத்தில் கொண்டு புதிய பொருளாதார அரசியல் யதார்த்தங்களுக்கு ஏற்ப இலங்கையுடனான உறவுகளை அமெரிக்கா ஒரு மீள் மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும். மனிதநேய விடயங்கள் முக்கியமாக இருக்கின்ற அதேவேளை, இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கை முன்னெடுப்பு, ஒரு தனி விடயத்தை (single agenda) முக்கியப்படுத்துவதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம்பெறுமிடத்து, அது உண்மையான மறுசீரமைப்பில் (real reform) தாக்கத்தை ஏற்படுத்தாது. அத்துடன் அது இப்பிராந்தியத்தின் மீது அமெரிக்காவிற்குள்ள புவிசார் மூலோபாய ஈடுபாடுகளில் குறுகியகால தாக்கங்களையே (short changes) விளைவிக்கும்.

 

இந்த அறிக்கையின் சாராம்சத்தை உற்று நோக்கினால், யுத்தத்திற்கு பின்னரான இலங்கை நிலைமைகளில் அமெரிக்கா ஒரு நிதானமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதைக் காணலாம். இலங்கையை தனிமைப்படுத்தாமல் அமெரிக்காவின் புவிசார் அரசியல் மூலோபாய ஆர்வங்களை கருத்தில் கொண்டு இலங்கையை கையாளுவது சவால் நிறைந்த ஒன்று. எனவே அதனை மிகவும் நிதானத்துடனேயே அமெரிக்கா அணுகவேண்டும் என்பதையே இவ்வறிக்கை சுட்டிக்காட்ட முற்பட்டிருக்கிறது. இவ்வறிக்கையின் ஊடாக மேற்படி வெளிவிவகார குழு மறைமுக எச்சரிக்கை ஒன்றையும் வெளிப்படுத்தியிருக்கின்றது. அதாவது இலங்கை தொடர்பான விடயங்களில் மேற்குலகு இறுக்கமாக விலகிச் செல்லுமாயின், அந்த இடைவெளியை பாரம்பரியமற்ற கொடையாளர்கள் (non-traditional donors) பயன்படுத்திக் கொள்வர். இங்கு பாரம்பரியமற்ற கொடையாளர் என்று சீனாவையே மேற்படி வெளிவிவகார குழு சுட்டிக்காட்டியிருக்கிறது. இலங்கை, சீனாவுடன் நெருக்கிச் செல்வது நீண்டகால நோக்கில் மேற்குலக, குறிப்பாக அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு உகந்ததல்ல என்னும் கருத்து மேற்படி அறிக்கையில் மேலோங்கியிருக்கிறது.

 

இந்த அறிக்கைக்கும் ஜோன் ஹெரி இலங்கை விடயத்தில் இறுக்கம் காட்ட மாட்டார் என்னும் கருத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இந்த அறிக்கையை அடிப்படையாக் கொண்டே கொழும்பின் சில கருத்துருவாக்க பிரிவினர் நான் மேலே குறிப்பிட்டவாறான அபிப்பிராயத்திற்கு வந்தடைந்திருக்கின்றனர். ஏனெனில் இந்த அறிக்கையை வெளியிட்ட மேற்படி அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழுவின் தலைவராக இருந்தவரே தற்போது, வெளிவகார செயலர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் ஜோன் ஹெரி. மேற்படி அறிக்கையை ஜோன் ஹெரி மற்றும் வெளிவிவகாரக் குழுவில் குடியரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான ரிச்சர்ட் லுகர் (Ranking Member (Republican) Richard Lugar) ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டிருந்தனர். எனவே இலங்கை விடயங்களில் அமெரிக்கா இலங்கையை தனிமைப்படுத்தாதவாறான அணுகுமுறையை கைக்கொள்ள வேண்டும் என்னும் நிலைப்பாட்டைக் கொண்ட ஹெரி, தற்போது வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டிருப்பதை கொழும்பின் ஆளும் பிரிவினர் தங்களுக்கு சாதகமான ஒன்றாக பார்ப்பது இயல்பான ஒன்றே.

 

ஆனால் ஒபாமாவின் முதல் தவணையில் மேற்கொள்ளப்பட்ட கொள்கைசார் தீர்மானங்களிலிருந்து, ஜோன் ஹெரியின் முடிவுகள் பெரியளவில் மாற்றங்களை வெளிப்படுத்தப் போவதில்லை என்றே அமெரிக்க அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இது பற்றி இரஷ்யாநெட் இணைத்தள கட்டுரையொன்று, ஜோன் ஹெரி மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விடயங்களில் உறுதியான நிலைப்பாடுடையவர் என்று பதிவிட்டிருக்கின்றது. ஜோன் ஹெரி மத்திய ஆசியாவில் மனித உரிமை மற்றும் ஜனநாயக விடயங்களில் தடம்பதித்த ஒருவர் என்று குறிப்பிட்டிருக்கும் கட்டுரையாளர், அதற்கு உதாரணமாக மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் ஜனநாயக முன்னேற்றத்தில் அவர் எடுத்துக்கொண்ட ஈடுபாட்டையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 2010இல் கிரிகிஸ்தான் நிலைமைகள் தொடர்பாக ஒபாமா நிர்வாகத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். - ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான விவாதம் என்பது பூச்சியங்களை கூட்டும் ஒரு விளையாட்டல்ல (the security-democratization debate is not a zero-sum game). எனவே இத்தகைய சிந்தனைப் போக்குள்ள ஒருவர், இலங்கையின் மனித உரிமைகள்சார் விடயங்களை எவ்வாறு நோக்குவார் என்பதை பொறுத்திருந்தே நோக்க வேண்டியிருக்கிறது.

 

அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையை தீர்மானிப்பதில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ஆயினும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் மட்டுமே அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையை தீர்மானிப்பதில்லை. அது மிகவும் பரந்த அடிப்படையைக் கொண்டிருக்கிறது. வெளிவிவகாரச் செயலர், பாதுகாப்பு செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு பணியகத்தின் பணிப்பாளர் (Director of the CIA) ஆகியோரால் வழங்கப்படும் அறிவுரைகளுக்கு ஏற்பவே அமெரிக்க அதிபர் வெளிவிவகார முடிவுகளை எடுப்பார். ஏலவே இலங்கை தொடர்பான அமெரிக்க அணுகுமுறை இத்தகையதொரு கூட்டு அறிவுரையின் கீழ்தான் எடுக்கப்பட்டிருக்கும்.

 

எனவே இலங்கையின் மனித உரிமைசார் முன்னேற்றங்கள் தொடர்பில் அமெரிக்க கரிசனையில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவே. ஆனால் அது கூட்டமைப்பினர் மாகாணசபை தேர்தல் மேடைகளில், வாக்கு சேகரிக்கும் நோக்கில் பிரச்சாரம் செய்தது போன்று பாரதூரமானதல்ல. பாரியளவு சிங்கள மக்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கும் தற்போதைய ஆட்சியை புறம்தள்ளிவிட்டு தமிழரின் பிரச்சனையை அமெரிக்கா கையில் எடுக்கும் என்பது ஒரு கற்பனாவாதமாகும்.

 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=b0194630-080f-43f5-9e29-61e6a8a352bd

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.