Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலுவையில் அறையப்படும் நீதி தேவதை

Featured Replies

நீதி தேவதை சிலுவையில் அறையப்படலாம். அவள் அந்த நேரத்தில் பரம பிதாவே இவர்கள் தாம் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள்.

இவர்களை மன்னித்தருளும் எனக் கூறமாட்டாள். அவள் உயிர்த் தெழும் போது பெரு நெருப்பாகக் கொழுந்து விட்டெரிந்து தீமைகளை அழிப்பாள் என்பது மட்டும் நிச்சயம்.

 

1966 1967 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து தீப்பொறி என்ற ஒரு பத்திரிகை வெளிவந்தது. இந்தப் பத்திரிகை சமூகத்தையும் சமூகத்தில் இடம்பெறும் அநியாயங்களையும் துணிச்சலுடன் அழகு தமிழில் அடுக்கு மொழியில் காரசாரமாக விமர்சித்த காரணத்தால் இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

 

இது அதிகமாக விற்பனையாகும் வார இதழாக இருந்தது மட்டுமன்றி இது எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்குமளவுக்கு செல்வாக்குப் பெற்றிருந்தது.

 

இதன் ஆசிரியராக இந்தியாவில் பெரியார் இயக்கத்தில் இணைந்து பல போராட்டங்களில் கலந்து கொண்டவரும் இலங்கையில் சண்முகதாசன் தலைமையிலான சீன சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும் விளங்கிய சொல்லேகுழவர் எம்.கே.அந்தனிசில் அவர்களாகும்.

 

இவர் ஒருமுறை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் அரஸ்வோல்டன் என்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பை விமர்சித்து தீப்பொறி பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார். இதன் காரணமாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடக்கப்பட்டது.

 

அதை விமர்சித்த நீதிமன்றம் அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அதாவது ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் கூட நீதிமன்றத்தையோ அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பையோ விமர்சிக்கும் உரிமை இல்லை என்பது அந்தத் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.

 

ஒரு ஜனநாயக நாட்டின் அதிகார பீடங்களாக இரு அம்சங்கள் உண்டு. ஒன்று அரசு. மற்றது அரசு மாத்திரம். நாடாளுமன்றம், அமைச்சரவை, ஜனாதிபதி என்ற கூறுகளைக் கொண்டது அரசு.

இவை தேர்தல்கள் மூலமோ அல்லது வேறு விதமாக மாற்றத்துக்கு உட்படக் கூடியவை. அரசு யந்திரம் என்பது நீதித்துறை, சிறைச்சாலை, பாதுகாப்புப் படை என்பனவாகும். இவை நிரந்தரமானவை. தேர்தல்களால் அரசுகள் மாறிய போது இவையும் மாற்றமடைகின்றன.

 

இவற்றில் உயர் நீதிமன்றமே நீதித்துறையின் அதி உச்ச அதிகாரபீடமாகவும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் வியாக்கியானம் செய்யும் உரிமையையும் கொண்டதாகும். அரசியலமைப்பு விதிகளுக்கு உட்படாத வகையில் நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் இயற்றப்படுமானால் அதை ரத்து செய்யும் அதிகாரமும் உயர் நீதிமன்றத்துக்கு உண்டு.

 

இந்த வகையில் ஒரு ஜனநாயக நாட்டில் நீதிமன்றமோ, நீதிமன்றத் தீர்ப்புகளோ விமர்சிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அதுமட்டுமன்றி அரசியல் தலையீடுகளும் அனுமதிக்கப்படுவதில்லை.

 

ஆனால் இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் இந்த ஜனநாயக மரபைக் கேள்விக்குள்ளாக்கி வருகின்றன. உயர் நீதிமன்றம், அதன் தீர்ப்புக்கு வழுங்கப்படும் கௌரவம் என்பன இன்று கவலையளிக்கும் வகையிலேயே தொடர்கின்றன.

 

நாடாளுமன்ற அதிகாரத்துக்கும் நீதித்துறைக்குமிடையே இடம்பெற்று வரும் பனிப்போர் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு ஜனநாயகத்துக்கே சாவுமணி அடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மாகாண சபைகளின் சில அதிகாரங்களை மத்திய அரசின் கீழ்க் கொண்டு வரும் வகையிலான திவிநெகும சட்டவரைபு முன்வைக்கப்பட்ட போது அரசியலமைப்பின் படி எல்லா மாகாண சபைகளினதும் சம்மதமின்றி அதை சட்டமாக்க முடியாது என உயர்நீதிமன்றம் அங்கீகரிக்க மறுத்துவிட்டது.

 

இது அரச தரப்பினரால், நிறைவேற்று அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலாகவே கருதப்பட்டதாகத் தோன்றுகிறது. இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்தின மீது நட்ட நடு வீதியில் பட்டப்பகலில் இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.

 

இன்றுவரை சம்பந்தப்பட்டவர்கள் கண்டு பிடிக்கப்படவுமில்லை; தண்டிக்கப்படவுமில்லை.
மேலும் பிரதம நீதியரசர் மீது குற்றவியல் பிரேரணை முன்வைக்கப்பட்டு அவரை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு வும் நியமிக்கப்பட்டது.

 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கா அவர்கள் குற்றப்பத்திரிகையைப் படித்து அதற்கான விளக்கமளிக்கப் போதிய கால அவகாசம் தரப்படவில்லை எனக் கூறி விசாரணையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். எதிர்க்கட்சியினரும் அதிலிருந்து வெளியேறினர்.

 

இந்த நிலையில் தன்னை விசாரிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு இல்லையெனப் பிரதம நீதியரசர் மேன்முறையீடு செய்ததை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை செல்லுபடியாகாது எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

அந்தத் தீர்ப்பில் நாடாளுமன்ற நிலையியல் சட்டம் நாடாளுமன்றத்தை மட்டுமே நெறிப்படுத்தும் எனவும் பிரதம நீதியரசரை விசாரிப்பதானால் பிறிதொரு சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் அமைச்சர்களும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் சிலரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனச் சவால் விட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றிப் பிரதம நீதியரசர் இந்தப் பிரச்சினையை அரசியல்மயப்படுத்தி வருகிறார் எனவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை செல்லுபடியாகாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பு மேற்படி குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனச் சவால் விடுவது  அடிப்படையில் உயர்நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் அவமதிக்கும் செயல் என்றே பலராலும் கருதப்படுகிறது.

 

இது நீதியின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையிழக்கும் நிலைமையையே ஏற்படுத்தும். பிரதம நீதியரசர் இந்தப் பிரச்சினையை அரசியல் மயப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

 

பிரதம நீதியரசர் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை எனக் கூறி  நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலிருந்து வெளிநடப்புச் செய்துவிட்டு தனது பிரச்சினையை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முன் வைத்தார். ஒருவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் போது வெளிநடப்புச் செய்வதோ அல்லது நீதிமன்றில் முறைப்பாடு செய்வதோ அரசியலாகுமா?

 

ஆனால் இந்தப்பிரச்சினை தொடங்கிய நாளிலிருந்து முக்கிய அமைச்சர்கள் பலரும் ஊடக மாநாடுகளைக் கூட்டி பிரதம நீதியரசர் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பொதுக்கூட்டங்களிலும் அவை பற்றி உரையாற்றி வருகின்றனர்.

 

இதிலிருந்து யார் இந்தப் பிரச்சினையை அரசியல் மயப்படுத்துகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆரம்பத்தில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்தின மீது இனம்புரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.

 

பின்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜயதாச ராஜபக்ஷவின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. இதில் முக்கிய விடயம் என்னவெனில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர் சுசில் பிரேமஜயந்த தொலைபேசி மிரட்டல் விடுத்தவர் 24 மணி நேரத்தில் இனங்காணப்பட்டு விட்டார். இதிலிருந்து இந்த நாட்டில் நீதித்துறைக்கும் நீதித்துறை சார்ந்தவர்களுக்கும் உள்ள பாதுகாப்பைப் பற்றி நாடு புரிந்துகொள்ள முடியும்.

 

அதேவேளையில் அரச ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சுசில் பிரேம ஜெயந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 170 ஆவது பிரிவின் கீழ் அமைக்கப்பட்டதாகவும் அதன் விசாரணைகளும் பரிந்துரைகளும் சட்டபூர்வமானவை எனவும் தெரிவித்துள்ளார்.

 

மேன்முறையீட்டு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பிரதம நீதியசரர் மீதான குற்றப் பிரேரணையை விசாரிக்க அதிகாரம் இல்லையெனத் தீர்ப்பு வழங்கிய பின்பும் கூட ஓர் அமைச்சர் இப்படியான கருத்தை வெளியிடுவது உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனச் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அப்படியான நிலையில் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சரால் இப்படியான ஒரு கருத்து வெளியிடப்படுவது உயர் நீதித்துறையை அகௌரவப்படுத்தும் நடவடிக்கை என்றே கருதப்பட வேண்டியுள்ளது.

 

அதேவேளையில் பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணைகளுக்கு எதிராக நீதிபதிகள் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட போது அரச ஊடகங்கள் மூலம் அரசாங்க தரப்பினர் அவர்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வசை பாடியதை நாம் மறந்து விட முடியாது.

இப்படியான நிலையில் விடை காணப்பட வேண்டிய சில கேள்விகள் எழுகின்றன. பிரதம நீதியரசர் இழைத்ததாகக் கூறப்படும் குற்றங்களை அவர் உண்மையிலேயே புரிந்திருந்தால் அந்தக் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படாமல் திவுனுகம சட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய பின்பு மேற்கொள்ளப்பட்டது ஏன்?

 

அதாவது ஒரு விடயம் விசாரணையில் இருக்கும் போது அமைச்சர்களும், சம்பந்தப்பட்டவர்களும் அது பற்றிக் கருத்து வெளியிடுவது  ஏற்றுக் கொள்ளக் கூடியதா? குற்றப் பிரேரணையை முன் வைத்த நாடாளுமன்றம் உறுப்பினர்கள் மூலம் விசாரணை நடத்தினால் நீதி கிடைக்குமா?

 

பிரதம நீதியரசருக்கு தனது தரப்பில் நியாயங்களை முன்வைக்கப் போதிய கால அவகாசம் தரப்படாதது ஏன்? மேன்முறையீட்டு ஒரு தீர்ப்பை முன் வைத்த பின்பு அது தொடர்பாக எதிர்கருத்துக்களை முன்வைப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலல்லவா?

 

நீதித்துறை ஆணைக்குழுச் செயலர் மஞ்சுள திலகரத்ன மீது தாக்குதல் நடத்தியவர்களும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியவர்களும் ஏன் இன்னும் இனம் காணப்படவில்லை?

 

நிறைவேற்று அதிகாரத்தாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையாலும் நீதி தேவதை சிலுவையில் அறையப்படலாம். அவள் அந்த நேரத்தில் பரம பிதாவே இவர்கள் தாம் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள்.

 

இவர்களை மன்னித்தருளும் எனக் கூற மாட்டாள். அவள் உயிர்த் தெழும் போது பெரு நெருப்பாகக் கொழுந்து விட்டெரிந்து தீமைகளை அழிப்பாள் என்பது மட்டும் நிச்சயம்.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=8512044910714768

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.