Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புஸ்வரூபம்

Featured Replies

ஒரு சிச்சுவேஷன் சாங்குடன் ஆரம்பிப்போம்.

 

கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்…
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்…
தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே…
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத் தங்கமே…
நலம் புரிவாய் எனக்கு… நன்றி உரைப்பேன் உனக்கு…

 

புதிய படம் தொடர்பாக கமலும் ஊடகங்களும் போடும் வழக்கமான ஆட்டம் இந்தமுறை கொஞ்சம் கைமீறிப் போய்விட்டதுபோலவே தோன்றுகிறது. படத்தின் பெயருக்கு பிரச்னை வரும்போது கலைஞனுக்கே உரிய வீராவேசத்துடன் குட்டிகர்ணம் அடிப்பவர் இப்போது தொழில்நுட்பப் புரட்சியை முன்னெடுப்பவராக இன்னொரு அவதாரம் எடுத்திருக்கிறார். தியேட்டருக்கு முன்பாகவே டி.டி.ஹெச்.சில் வெளியிடுவதை ஏதோ தொழில்நுட்பப் புரட்சி போல் பேசிவருகிறார். டி.டி.எச். தொழில்நுட்பம் என்பதும் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியான ஒரு சில நாட்களில் சின்னத்திரையில் வெளியாவதும் பல வருடங்களாகவே நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயமே.

 

திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பாகவே டி.வி.யில் வெளியிடுவது எந்தவகையில் தொழில்நுட்பப் புரட்சியாகும் என்றே தெரியவில்லை. வேண்டுமானால் மார்க்கெட்டிங் புரட்சி என்று சொல்லலாம். அதுகூட முடியாது. ஏனென்றால், அது புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் வழிமுறையே அல்ல.

 

முதலில், தொழில்நுட்பப் புரட்சி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். சில பத்தாண்டுகளுக்கு முன் டி.வி.யின் கண்டுபிடிப்பும் பரவலாக்கமும் திரைப்படங்களுக்கு ஒரு சவாலாக ஆனது. மேற்கத்திய உலகம், குறிப்பாக, ஹாலிவுட் அந்த சவாலை மிகவும் நேர்மையாக நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டது. கதைக்குப் பொருத்தமான பிரமாண்ட கிராபிக்ஸ் (அல்லது பிரமாண்டத்துக்கு ஏற்ற கதைகள்), நுட்பமான ஒலி, அதி துல்லியமான கேமராக்கள் போன்றவற்றின் மூலம் திரைப்படங்களைத் திரையரங்குகளில் மட்டுமே பார்க்கவேண்டும் என்ற அளவுக்குத் தங்களைப் பலப்படுத்திக்கொண்டது.

 

எந்தவொரு ஹாலிவுட் படத்தையும் டி.வி.டியில் பார்ப்பதைவிட திரையரங்கில் பார்க்கும் அனுபவத்தையே பார்வையாளர்கள் அனைவரும் விரும்பும் அளவுக்கு ஆக்கிவிட்டனர். அப்படியாக, டி.வி. மூலம் வந்த நெருக்கடியை மேற்கத்தியர்கள் வெகு எளிதாகத் தாண்டினர்.


தமிழ் சமூகமோ இந்தத் தொழில்நுட்பப் போட்டியை படு நோஞ்சானாக எதிர்கொண்டது. இமயங்களும் சிகரங்களும் வாலை ஒடுக்கிக்கொண்டு டி.வி.யில் தஞ்சம் புகுந்தனர். அதுதான் அவர்களுடைய இயல்பான இடம் என்பது வேறு விஷயம். இதன் இன்னொரு பக்கத்தில் உலக அழகியை எலும்புக்கூடாகக் காட்டுவது, கயிறு கட்டி பறந்து பறந்து அடிப்பது போன்ற கிராபிக்ஸ் கலக்கல்கள் திரையை நிரப்பின.

 

அப்படியாக, தொழில்நுட்ப சவாலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு மேற்குலகம் ஒரு வழியைக் காட்டியிருக்கிறது. எப்படி எதிர்கொள்ளக்கூடாது என்ற வழியை நம் தமிழ் கூரும் நல்லுலகம் காட்டியிருக்கிறது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாகத்தான் ஒலக நாயகனின் இப்போதைய தொழில்நுட்பப் புரட்சி வந்து குதித்திருக்கிறது.

 

இந்தப் புரட்சியை இவர் செய்ய நேர்ந்த கட்டாயத்தை இங்கு நினைத்துப் பார்ப்பது மிகவும் அவசியம். சுமார் 70 கோடி செலவில் விஸ்வரூபம் படத்தை எடுத்திருப்பதாகவும், தனது சம்பளத்தையும் பிற லாபங்களையும் சேர்த்து சுமார் 90-110 கோடியை அவர் எதிர்பார்த்ததாகவும் அவருடைய கடந்தகால சாதனைகளைப் பார்த்த வர்த்தக உலகம் 50 கோடிக்குப் படத்தைக் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இது உண்மையாக இருக்க அதிக சாத்தியங்கள் உண்டு. இந்த இக்கட்டான நிலையில் இருந்து எப்படித் தப்பிக்க என்று கமல் சார் தன் வீட்டில் மல்லாந்து படுத்து யோசித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு மாபெரும் ஐடியா தோன்றியிருக்கிறது. அதாவது, படத்தை நேரடியாக டி.வி.யிலேயே ரிலீஸ் செய்தால் என்ன? இது மிகவும் நியாயமான சிந்தனையே.

 

வர்த்தகரீதியில் வெற்றிபெறாத படங்களை திரைக்கு வந்த ஒரு மாதமே ஆன நிலையில் சின்னத் திரையில் கூவிக் கூவி வெளியிடுவது என்பது நிஜத்தில் நடந்துவரும் விஷயமே. இதில் தெளிவான வர்த்தக நிர்பந்தமே இருக்கிறது. காப்பியடிப்பதை இன்ஸ்பிரேஷனாகச் சொல்லிக் கொள்ளும் கலை உலகில் வர்த்தக நெருக்கடியை சாமர்த்தியமாகச் சொல்லிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லையே. ஆனால், அந்த முயற்சியானது கணிசமான வருவாயை ஈட்ட வழி வகுத்தது. எனவே, அதை தற்செயலாகக் கண்டுபிடித்த சாதனையாகச் சொல்லலாம்.

 

ஆனால், திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பாகவே டி.டி.ஹெச்சில் வெளியிடுவதில் வெறும் வர்த்தக நிர்பந்தம் மட்டுமே இருக்கிறது. எந்தவித சாமர்த்தியமும் இல்லை. ஏனென்றால், இன்றைய நிலையில் மொத்தம் எத்தனை டி.டி.ஹெச். சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் தீவிர ரசிகர்களைப்போல் படத்தை முதல் நாளே பார்த்துவிடவேண்டும் என்று துடிப்பார்கள்? மின்சாரமானது வாழ்க்கையின் நிலையாமையை மணிக்கொரு தடவை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் எப்படி நம்பிக்கையுடன் படத்தைப் பார்க்க முன்வருவார்கள்? என்னதான் தமிழ் படங்களை அரங்கில் பார்த்தாலும் தியேட்டரில் பார்த்தாலும் ஒரே எஃபெக்ட்தான் என்றாலும் ஆயிரம் ரூபாய் கொடுத்து திரையரங்கில் பார்க்கத் தயாராக இருக்கும் ஒருவர் (ஒரு குடும்பம்) டி.வி.யில் வீட்டில் இருந்தே பார்க்க முன்வந்துவிடுவாரா?

 

தான் உருவாக்கி வைத்திருக்கும் பிளே பாய் இமேஜ் குடும்பத்துடன் தன் படத்தைப் பார்க்க இடம் தருமா என்ற கேள்விகளில் ஒன்றைக்கூட கமல் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அவரைப் பொறுத்தவரையில் ஒரு வாரம் கழித்து டி.டி.ஹெச்சில் போட்டால் கிடைப்பதைவிட அதிக பணத்தை செல்ஃபோன் நிறுவனங்களிடம் இருந்து பெற முடியும் என்ற ஒரே எண்ணத்தில் அந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். இது வர்த்தக அடிப்படையே தெரியாத ஒருவர் செய்யும் செயலே.
அதோடு இந்த இடத்தில் அவர் வேறொரு அபாயமான விஷயத்தையும் செய்கிறார். திரையரங்க உரிமையாளர்கள் என்ற ஒரு பிரிவினரை ஒதுக்கிவிட்டு நேரடியாக பார்வையாளரின் பாக்கெட்டில் கைவிட்டுப் பணத்தை எடுக்க முயற்சி செய்கிறார். ஒரு திரைப்படம் வெளியாகும் முதல் மூன்று நாட்களில் அள்ளும் பணமே திரையரங்கத்தினரின் பிரதான வசூலாக இருந்துவருகிறது. ஒரு படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பாகவே டி.டி.ஹெச்சில் வெளியிட்டுவிட்டால் இந்த மூன்று நாள் கலெக்ஷன் அடிபட்டுவிடும் என்று அவர்கள் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. எனவே, அவர்கள் அதை எதிர்க்கிறார்கள். அந்தவகையில் கமலின் ஓட்டை தொழில்நுட்பப் புரட்சியை ஒன்றும் அவர்கள் எதிர்க்கவில்லை. மேலும், இந்த எதிர்ப்பு விஸ்வரூபத்துக்கு மட்டுமேயானதல்ல. இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாது என்ற பயம்தான் எதிர்ப்பின் பின்னணி.

 

அதோடு, முதலில் டி.டி.ஹெச்சில் வெளியிட்டால் திரையரங்கத்தினர் அந்தப் படத்தை முன்புபோல் அதிக விலை கொடுத்து வாங்க வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு குறைந்த தொகைக்குத்தான் தரவேண்டியிருக்கும். அதோடு, செல் போன் நிறுவனத்துக்கும் ஒரு தயாரிப்பாளர் கணிசமான தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த இரண்டு செலவுகளை ஒப்பிடும்போது டி.டி.ஹெச். மூலம் கிடைக்கும் வரவு குறைவாகவே இருக்கும். குறிப்பாக டி.டி.ஹெச். சந்தாதாரர்கள் குறைவாக இருக்கும் இன்றைய நிலையில். வேண்டுமானால், நான்தான் ஆரம்பித்துவைத்தேன்… மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் ஏதேனும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், நிச்சயமாக, டி.டி.ஹெச்சில் படத்தை முதலிலேயே வெளியிட வர்த்தகரீதியில் இது சரியான தருணமே அல்ல.

 

பட வெளியீடு தொடர்பாக நேற்று கமல் கொடுத்த பேட்டியில் வின்னர் கைப்புள்ள ரேஞ்சில் எவ்வளவு அடிச்சாலும் ஓடவே மாட்டோம்… நிண்டு அடி வாங்குவோம் என்பதுபோல் வெலவெலத்தார். அது தன்னுடைய படம்தான் என்றும் அதை என்றைக்கு வெளியிடுவது என்பதைத் தான்தான் சொல்வேன் என்றும் கீறல் விழுந்த கிராம்ஃபோன் போல் பேசினார். படம் யாருடையது என்பது அல்ல பிரச்னை. தியேட்டருக்கு முன்பாக டி.டி.ஹெச்சில் வெளியாகுமா ஆகாதா? இதுதான் கேள்வி. அதற்கான பதிலை அரை மணி நேரம் பேசியும் சொல்லவில்லை. திரையரங்கிலும் டி.டி.ஹெச்சிலும் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக இடையில் லேசாகச் சொன்னார். ஆனால், இது ஒருவகையான நம்பிக்கை மோசடி. அதாவது, திரையரங்குக்கு வருவதற்கு முன்பாகவே டி.டி.ஹெச்சில் வெளியாகும் என்று சொல்லித்தான் இப்போது பணம் வசூலித்திருக்கிறார்கள். எனவே, அந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஒரே நாளில் வெளியிட கமல் தானாகவே முடிவு செய்வது தவறுதான்.

 

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னை தைரியசாலியாகக் காட்டிக்கொள்ள ரொம்பவே சிரமப்பட்டார் கமல். பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரு பிளாட்டில் இருப்பவர்கள் ஒரே கனெக் ஷனில் கூடி அமர்ந்து படத்தைப் பார்த்துவிடக்கூடுமே என்று கேட்டபோது, ஒரு கனெக் ஷனுக்கு ஒரு டி.வி.லதான் பார்க்க முடியும். ஒரு வீட்டு டிஷ்ஷுக்கு வர்ற படம் வழிஞ்சு இன்னொரு டிஷ்ஷுக்குப் போயிடாது என்று திருவாய் மலர்ந்தார்.

 

தனது ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் சொல்லபடுவதுதான் வேதம். எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது… படத்தை எப்போது வெளியிடுவது என்பதை நான்தான் சொல்வேன் என்று கர்ஜித்தவர், அபிராமி ராமநாதனும் சன் டி.வி.யும் முன்பே சொன்னதுபோல் 25-ம் தேதியன்று 500 திரையரங்குகளில் வெளியிடப்போவதாக இன்று மீண்டும் முழங்கியிருக்கிறார். இதிலும் டி.டி.ஹெச்.சில் என்றைக்கு வெளியிடப்படும் என்பதைச் சொல்லவில்லை. 24-ம் தேதி என்று சொன்னால் தியேட்டர்காரர்கள் மறுபடியும் கொடி பிடிப்பார்கள். 25 -ம் தேதி அல்லது பிறகு என்றால் டி.டி.ஹெச். புக்கிங் பாதிக்கப்படும். ஆக முன்னால் போனால் கடிக்கும். பின்னால் போனால் உதைக்கும். ஆனால், இதுவும் வர்த்தக சாமர்த்தியமாக வரலாற்றில் இடம்பெறும் என்றே தோன்றுகிறது.


ஒரு படத்தை வெற்றிகரமானதாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைவிட்டுவிட்டு மற்ற அனைத்தையும் செய்வதில் நிபுணரான கமல் அடுத்து என்ன செய்வாரோ என்றுதான் பயமாக இருக்கிறது. இந்த ‘டி.டி.ஹெச். புரட்சி’ வெற்றி பெற்றாலும் தோற்றாலும் அவர் வீறு கொண்டு எழுந்து, பழகிய தடத்தில் இன்னும் வேகமாக தன் பயணத்தை ஆரம்பித்துவிடுவாரே. பம்மல் சம்பந்தம், கம்மல் கண்ணாயிரம் என யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாத படங்களாக அவர் எடுத்துவந்தால் இகோ சிஸ்டம் இன்னும் நன்றாகவே மெயிண்டெயின் செய்யப்படும் என்ற உண்மையை அவருக்கு எப்படிப் புரியவைப்பது?

B.R. மகாதேவன்

 

http://www.tamilpaper.net/?p=7325

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.