Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதம நீதியரசருக்கே அரசிடமிருந்து நீதி கிடைக்காதபோது தமிழருக்கு எப்படி நீதி கிடைக்கும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதம நீதியரசருக்கே அரசிடமிருந்து நீதி கிடைக்காதபோது தமிழருக்கு எப்படி நீதி கிடைக்கும்?

முத்துக்குமார்
 

பிரதம நீதியரசர் விவகாரத்தின் முதலாம் அத்தியாயம் முடிவிற்கு வந்துவிட்டது. புதிய நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஒரு பெயருக்கு இருக்கின்ற பாராளுமன்ற பேரவையும் அதற்கான சம்மதத்தை வழங்கிவிட்டது. பேரவையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களான ரணில் விக்கிரமசிங்காவும், சுவாமிநாதனும் கூட்டத்திற்குச் செல்லாமலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுபோல பெரும்பான்மை ஆதரவுடன் சம்மதம் வழங்கப்பட்டுவிட்டது.

 

18வது திருத்தத்தின்படி பாராளுமன்றப் பேரவைக்கு அதிகாரம் எதுவும் கிடையாது. வெறும் அவதானிப்புக்களைக் கூறுவது மட்டும்தான் அதன் கடமை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் செல்லாத நிலையில் சபாநாயகரும், பிரதமரும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வரும் சேர்ந்து இத்தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர்.

 

பிரதம நீதியரசராக வருபவர் அரசியல் சார்பற்றவராக இருக்கவேண்டும் என்பதே மரபாகும். ஆனால் மொஹான் பீரிஸ் அமைச்சரவையின் ஆலோசகராக இருப்பவர். ஜெனிவாக் கூட்டங்களுக்கெல்லாம் அரசு சார்பில் சென்று கலந்து கொண்டவர். அவரையெல்லாம் எப்படி நியமிக்கமுடியும் என அரசு நினைத்திருப்பதற்கு வாய்ப்புக்களில்லை. முன்னாள் நீதியரசர் சரத்.என்.சில்வா அரசியல் நியமனம் வேண்டாம் என ஆலோசனை கூறியும் அரசு செவிமடுக்கவில்லை. அரசின் நோக்கமே தனக்கு சார்பான நிறுவனமாக நீதித்துறையை மாற்றவேண்டும் என்பதுதான். அந்த நோக்கம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே பாராளுமன்றம் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் நீதித்துறை ஒன்று மட்டும் பாக்கியாக இருந்தது. அதுவும் வந்துவிட்டது. இனிமேல் அதிகாரக்குவிப்பை கேள்விக்குள்ளாக்கும் எந்த நிறுவனமும் உள்நாட்டில் இருக்கப்போவதில்லை. அரசாங்கத்தைப் பொறுத்தவரை உள்நாட்டு மட்டத்தில் எதிர்ப்புவெளி தற்போது இல்லை.

 

தற்போது அனைவரும் எதிர்பார்ப்பது ஷிராணி பண்டாயநாயக்கா தரப்பு என்ன செய்யப்போகின்றது என்பதுதான். சட்டத்தரணிகள் தொடர்ந்து போராடப் போவதாக கூறியுள்ளனர். இந்நியமனத்தை எதிர்த்து அவர்கள் வழக்குத் தாக்கல் செய்யலாம். மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதித்துறை என்ன நீதியை வழங்குமென தற்போது கூறமுடியாது. ஆனால் அரசாங்கம் இவை எவற்றையும் கணக்கெடுக்கப்போவதில்லை. தற்போது ஷிராணி பண்டாயநாயக்கா அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்தும், உயர்நீதிமன்றத்திலிருந்தும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

சட்டத்தரணிகள் இது விடயத்தில் சில எதிர்ப்புகளைக் காட்டக்கூடும். அதிலும்கூட பிரதான அமைப்பான இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் ஒரு நழுவல் போக்கையே கடைப்பிடிக்கின்றது. கடைசியாக நடைபெற்ற போராட்டத்தில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் கலந்துகொள்ளவில்லை. அவர் வெளிநாட்டில் இருந்திருந்தார். செயலாளர் நாட்டிலிருந்த போதும் கலந்துகொள்ளவில்லை. தலைவர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராகவும் இருப்பதனால் சற்று அடக்கி வாசிக்கும்படி ரணில் கட்டளையிட்டிருக்கக்கூடும். ஐக்கிய தேசியக் கட்சி தற்போது அரசாங்கத்தின் இன்னோர் கிளைக் கட்சியாகிவிட்டது. அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கட்சியாக மாறிவிட்டது. ரணில் விக்கிரமசிங்கவிற்கு அரசியலைவிட கதிரை முக்கியம். உள்மட்ட நெருக்கடிகள் அதிகரித்துவரும் வேளையில் மகிந்தரின் அருட்பார்வைதான் அவரை பாதுகாத்து வருகிறது. அவரது போட்டியாளரான சஜித் பிரேமதாஸாவுக்கு உள்ளூர்த் தலைவராக இருக்கும் தகுதி உள்ளதே தவிர தேசிய மட்டத்தில் தலைவராக வரும் தகுதியில்லை. தகுதியுள்ளவர்கள் வர ரணில் ஒருபோதும் விடப்போவதுமில்லை. சுத்துமாத்துக்கள் செய்து கதிரையை எப்படிப் பாதுகாப்பது என்பதில் ஒபாமாகூட ரணிலிடம் தான் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.

 

ஷிராணி பண்டாரநாயக்கா தரப்பு போராட்டங்களை முன்கொண்டு செல்வதாயின் உள்ளூர், சர்வதேச ஆதரவு வலிமையாக இருக்கவேண்டும். உள்ளூர் ஆதரவு என்பது பிரதானமாக ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்துதான் கிடைக்கவேண்டும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி இதுவிடயத்தில் நேர்மையாக இல்லை. முன்னர் கூறியது போல அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் மகிந்தரைவிட ரணிலே மிகுந்த அக்கறையாக இருக்கின்றார். ஷிராணியின் பிரபல்யம் தன்னையும் அடித்துக்கொண்டு போய்விடும் என்ற அச்சம் வேறு அவருக்கு. ஏற்கனவே சரத் பொன்சேகா ரணிலை அழிக்க முற்பட்டார். அதிலிருந்து ஒருவாறு தப்பிவிட்டார். இன்று சரத் பொன்சேகா கூர்மழுங்கப்பட்ட கத்தி. அவரால் தனது கட்சியைகூட காப்பாற்ற முடியவில்லை. அரசியல் என்பது ஒரு பெரிய கடல். அதில் அரசியல்வாதிகளால்தான் நீந்திக் கரையேற முடியுமே தவிர, இராணுவத் தளபதியால் கரையேற முடியாது. இதற்கு சரத் பொன்சேகா நல்லசான்று. மாக்கியவல்லி கூறிய எல்லா இராஜதந்திரக் கலைகளும் தெரிந்தவன்தான் இலங்கை அரசியலில் தப்பிப்பிழைக்க முடியும்.

 

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டால் போராடக்கூடிய கட்சி ஜே.வி.பி தான். அது ஏதாவது ஒரு வகையில் போராட்டங்கள் நடாத்த முற்படும். எனினும் அக்கட்சியும் உள்பிரிவினால் பலவீனப்பட்டிருப்பதால் தாக்கமான போராட்டங்களை நடாத்தமுடியாது. மகிந்தர் அரசின் பிரமாண்டமான பலத்திற்கு முன்னால் இப்போராட்டங்கள் வெறுமனவே நுளம்பு கடித்தது போலவே இருக்கும். இந்த இரு தரப்பினையும் விட்டால் எஞ்சியிருப்பது சட்டதரணிகளின் சிறு சங்கங்களும், அரசசார்பற்ற  அமைப்புக்களும்தான். அவர்களால் அவர்களின் கொள்ளளவிற்கேற்ப உயர்ந்த போராட்டங்களை நடாத்தியாயிற்று. இதற்குமேல் நடாத்தக்கூடிய வலிமை அவர்களுக்கு இருக்கின்றது எனக் கூறமுடியாது. சட்டத்தரணிகளுக்கும் குடும்பங்கள், பிள்ளைகள் உள்ளன. எத்தனை நாளைக்குத்தான் அவர்களால் நீதிமன்றங்களை மூடி வைத்திருக்க முடியும்.

 

இந்தப் போராட்ட சக்திகளுக்கிடையே ஒருங்கிணைப்புகளும் பெரிதளவு இல்லை. ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் ஆதரவு வலிமையாக இருந்தால் சற்று முன்னேறியிருக்க முடியும். வலிமையான சிவில் சமூகம் எல்லாச் சக்திகளையும் இணைத்து முன்னிலைக்கு வந்திருந்தால் ஆரோக்கியமான பாதையில் சென்றிருக்க முடியும். ஆனால் அந்தநிலை இலங்கையில் இல்லை. சமூகத்தின் மேல்மட்டத்தவர்களே இந்தவிடயத்தில் அக்கறை கொண்டிருந்தனர். சாதாரண மக்கள் எந்தவித அக்கறையினையும் காட்டவில்லை. போர் வெற்றி காரணமாக அவர்கள் தற்போதும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களாகவே இருக்கின்றனர். கொழும்பிற்கு வெளியே நடைபெற்ற போராட்டங்களில் சாதாரண மக்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. சட்டத்தரணிகள் மட்டும் நீதிமன்றங்களுக்கு முன்னால் போராட்டங்களை நடாத்தியிருந்தனர்.

 

ஷிராணி பண்டாயநாயக்காவிற்கு ஒரேயொரு வாய்ப்பு மட்டும் இருக்கின்றது. குற்றப் பிரேரணை விவகாரத்தில் தான் குற்றமற்றவர் என்பதை அவர் நிரூபித்துள்ள படியால், அவருக்கென உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் ஒரு பிரபல்யம் உருவாகியிருக்கின்றது. இதனைப் பயன்படுத்தி ஓர் அரசியல் தலைவராக அவர் மேலும் வளரலாம். ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் தனது இடத்தினை அவருக்கு கொடுத்தால் கட்சியும் கோமா நிலையிலிருந்து எழுவதற்கு வாய்ப்பு உண்டு. சந்திரிக்காவின் ஆளுமை இவருக்கும் இருப்பதால் அரசாங்கத்திற்கெதிராக பலமான ஐக்கிய முன்னணியை இவரால் கட்டியெழுப்ப முடியும். ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியமான உயர்வர்க்கமும் இவரை வரவேற்கும். ஆனால் ரணில் விக்கிரமசிங்க எவ்வளவு தூரம் விட்டுக்கொடுப்பார் என எதிர்பார்க்க முடியாது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை கோமா நிலையிலிருந்து எழுப்ப ஒரு சந்திரிக்கா தேவைப்பட்டது போல, ஐக்கிய தேசியக் கட்சியினை கோமா நிலையிலிருந்து எழுப்ப ஒருவர் தேவைப்படுகின்றார். அவர் ஷிராணிதானா என்பதற்கு வரலாறுதான் பதிலளிக்கவேண்டும்.

 

ஆனால் பல அவதானிகளின் கருத்து ஷிராணிக்கு அரசியல்வாதியாகின்ற தகைமை இல்லை என்பதே! அமெரிக்கா தலைமையிலான மேற்குலக சக்திகளும் இலங்கைக்கு ஒரு தேவதையைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் உண்மையில் இன்று பலவீனப்பட்டிருப்பது சர்வதேச மட்டத்தில்தான். சீனாவுடன் அதன் காதல்உறவு அமெரிக்காவையும், இந்தியாவையும் முகம்சுழிக்க வைத்திருக்கின்றது. இந்தக் காதல்உறவினை இந்தியாவுடனும், இலங்கை கணிசமானளவு பேணுவதால் இலங்கையை முறிக்காமல் வளைப்பதற்கு அவை முயல்கின்றன. அரசாங்கத்தினை மட்டும் மாற்றுவதால் வளைக்கமுடியும் என்பதே அவர்களின் நினைப்பு. இதனால் அளவு ரீதியில் அழுத்தங்கள் வருகின்றதேயொழிய பண்புரீதியில் அழுத்தங்கள் வரவில்லை. ஒரு நாள் இலங்கைக்கென ஒரு தேவதை வரும் என்பதே அவர்களின் நினைப்பாக உள்ளது.

 

சரி தென்னிலங்கை அரசியலை விட்டுவிடுவோம். இங்கு எழும் மிகப்பெரிய கேள்வி ஷிராணி விவகாரம் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஏதாவது வெளிகளை திறந்து விட்டுள்ளதா? உண்மையில் திறந்து விட்டுள்ளது என்றே கூறவேண்டும். அதில் முதலாவது இலங்கை என்ற அரச கட்டமைப்புக்குள் தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது என்ற செய்தி வெளிவந்தமையாகும். ஒரு சிங்களவரான பிரதம நீதியரசருக்கே இந்த அரசிடமிருந்து நீதி கிடைக்காதபோது தமிழருக்கு எப்படி நீதி கிடைக்கும் என்பதை சர்வதேச மட்டத்தில் எடுத்துரைக்க இந்த விவகாரம் வழிவகுத்துள்ளது. ஷிராணி பண்டாரநாயக்காவே இதனை தனது நண்பர் ஒருவரிடம் கூறியிருக்கின்றார். 'எனக்கே இந்த நிலமை என்றால் தமிழ்மக்களுக்கு எப்படியிருக்கும்' என அவரிடம் கூறியிருக்கின்றார்.

 

இரண்டாவது இங்கு அரசாங்கம் மட்டுமல்ல பிரச்சனை, அரசே பிரச்சனை என்பது தெளிவாக்கப்பட்டுள்ளமையாகும். மேற்குலக சக்திகளும், இந்தியாவும் தற்போதுள்ள அரசாங்கத்தையே பிரச்சனையாகப் பார்க்கின்றனர். அரசாங்கத்தினை மாற்றினால் இனப்பிரச்சனைக்குத் தீர்வு வந்துவிடும் என்பது அச்சக்திகளின் கருத்தாக உள்ளது. உண்மையில் இங்கு அரசாங்கமல்ல, அரசுதான் பிரச்சினை. அரசுருவாக்கம் பேரினவாத கருத்து நிலைகளினாலேயே உருவாகியுள்ளது. இதனால் எந்த அரசாங்கம் வந்தாலும் பேரினவாத வேலைத்திட்டங்களை முன்னெடுத்தே செல்லும். அளவு ரீதியில் வேண்டுமானால் இம்முன்னெடுப்புக்களில் வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் பண்பு ரீதியில் வேறுபடப் போவதில்லை. பேரினவாத வேலைத்திட்டங்களை முன்னெடுக்காத அரசாங்கம் இங்கு ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது. இப்பேரினவாத வேலைத்திட்டத்திற்கு இசைவாகவே அரசியல் யாப்பும் ஜனாதிபதியிடம் அதிகாரத்தை குவித்திருக்கின்றது. இவ் அதிகாரத்திற்கு 17வது திருத்தம் கொடுத்த சில சமனிலைத் தடைகளையும் 18வது திருத்தம் இல்லாமல் செய்துள்ளது. தற்போது அரசியல் யாப்பு ரீதியான முடியாட்சியே நிலவுகின்றது. ஜனாதிபதி அதனை குடும்ப அதிகாரமாக மாற்றியுள்ளார். இக்குடும்ப அதிகாரத்தின் பாதுகாப்பு பேரினவாத வேலைத்திட்டத்திலும், குடும்பத்தை நோக்கிய அதிகாரக் குவிப்பிலும் தங்கியிருப்பதனால் இவை இரண்டையும் அவை கைவிடப்போவதில்லை.

 

இந்தவகையில் குற்றப் பிரேரணை விவகாரத்தை சமநிலைத் தடைகளை அகற்றிய 18வது திருத்தத்தின் நீட்சியாகவே பார்க்கவேண்டும். 18வது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு தடையாக இருந்த ஜனாதிபதியின் நியமனத் தடைகளையும், சுதந்திர ஆணைக்குழுவின் சுதந்திரச் செயற்பாடுகளையும் இல்லாமற் செய்தது. அத்துடன் ஜனாதிபதியின் இரண்டு தடவைகள் என்கின்ற பதவிக்கால வரையறைகளையும் இல்லாமற் செய்தது. இந்த நிலையில் ஜனாதிபதிக்குத் தடையாக இருந்தது நீதித்துறை சுதந்திரம் மட்டுமேதான். அதனையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும், பொலீஸ் திணைக்களத்தையும் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்ததன் மூலம் ஜனாதிபதி பலவீனப்படுத்தியிருந்தார். உயர்நிலை நீதிமன்றங்களுக்கு கீழ்நிலை நீதிமன்றங்களில் அனுபவம் உள்ளவர்களை நியமிப்பதற்கு பதிலாக தனது செல்வாக்கிற்குட்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து நியமனங்களை மேற்கொண்டார். வழக்குத் தொடுக்கும் விடயங்களை தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவந்தார். இன்று முழு நீதித்துறையினையுமே தனது செல்வாக்கின்கீழ் கொண்டு வருவதற்காக பிரதம நீதியரசரையும் பதவிவிலக்கியுள்ளார். இனிவரும் காலங்களில் முக்கிய நீதிமன்றத் தீர்ப்புக்கள் உயர்நீதிமன்றத்தில் எழுதப்படப்போவதில்லை, மாறாக ஜனாதிபதி மாளிகையிலேயே எழுதப்படும்.

 

மூன்றாவது நீதித்துறை இனிவருங்காலங்களில் தமிழ்மக்களுக்குச் சார்பாக இருக்கப் போவதில்லை என்பது வெளிப்படையானமையாகும். அரச இயந்திரம் முழுமையாக பேரினமயமாக்கப்பட்ட நிலையில் நீதித்துறையும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. வடக்கு – கிழக்கு பிரிப்பு தொடர்பான தீர்ப்பு, சுனாமி பொதுக்கட்டமைப்பிற்கு எதிரான தீர்ப்பு என்பன இதற்கு சிறந்த சான்றுகள். எனினும் நீதிபதிகள் சிலர் தமக்குள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி சில நல்ல தீர்ப்புக்களை வழங்கியதையும் மறுப்பதற்கில்லை. திவிநெகும சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு இதற்கு நல்ல உதாரணம். இதை விட நெல்லியடிப் போராட்டம் தொடர்பான சிறீநிதி நந்தசேகரனின் தீர்ப்பையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். பிரதம நீதியரசர் அரசாங்க சார்பாக இல்லாதபோது இத்தகைய தீர்ப்புக்கள் வருவதற்கு வாய்ப்புக்கள் இருக்கும். இனிமேல் அதற்கான வாய்ப்புக்களே கிடைக்காது இந்நிலை நீதித்துறையும் தமிழ்மக்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்பதை சர்வதேச மட்டத்துக்கு எடுத்துக்கூறக்கூடிய சூழலை உருவாக்கும்.

 

நான்காவது சிங்கள மக்களில் மத்தியதர வர்க்கத்தின் மேற்பிரிவு அரசாங்கம் தொடர்பாக அதிருப்தியை கொண்டுள்ளமையாகும். போர் வெற்றி சிங்கள மக்களின் அனைத்துப் பிரிவினரையும் மகிந்தருக்கு ஆதரவாகத் திரட்டியது. இன்று ஒரு பிரிவு அதிலிருந்து வெளியேறியுள்ளது. அதாவது மகிந்தரின் சிங்கள ஆதரவுத் தளத்தில் ஒரு வெடிப்புத் தேன்றியுள்ளது. இந்த வெடிப்பு ஏனைய பிரிவுகளிலும் எதிர்காலத்தில் வெடிப்புக்களைக் கொண்டுவரப் பார்க்கும். சிங்கள ஆதரவுத்தளத்தில் வலிமையான வெடிப்புக்கள் ஏற்படாதவரை ஜனாதிபதியின் குடும்ப அதிகாரத்தை எவராலும் அசைக்கமுடியாது. மேற்குலக சக்திகள் இந்த வெடிப்பைத்தான் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அவையும் இனிமேல் இதற்குள் புகுந்து விளையாடப் பார்க்கும்.

 

ஐந்தாவது முதலாளித்துவப் பொருளாதாரம் வீழ்ச்சியடையக்கூடிய சூழல் தோன்றியுள்ளமையாகும். முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சிக்கு சட்டத்தின் ஆட்சி மிகவும் இன்றியமையாததாகும். சட்டத்தின் ஆட்சிக்கு நீதித்துறை சுதந்திரம் இன்றியமையாததாகும். இவை இரண்டினதும் வீழ்ச்சி முதலாளித்துவப் பொருளாதாரத்தையும் பலவீனப்படுத்தும். இப்பொருளாதார வீழ்ச்சி அரசாங்கத்தையும் நீண்டகாலத்தில் பலவீனப்படுத்தும். அமெரிக்கா இது தொடர்பாக எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 

இத்தகைய சாதகமான மாற்றங்கள் உருவாகின்றபோது அதனைப் பயன்படுத்துகின்ற ஆற்றல் தமிழ்த்தரப்பிற்கு இருக்கவேண்டும். சம்பந்தன் தலைமைக்கு இந்த ஆற்றல்கள் எதுவும் கிடையாது. கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை கூட தவறவிடுகின்ற ஒன்றாகவே அது உள்ளது. வெறும் வாய்ச்சவடால்கள் ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்திற்கு ஒருபோதும் விடுதலையைப் பெற்றுத்தராது.

 

தெளிவான இலக்கும் திடமான கொள்கையும் அர்ப்பணிப்புள்ள தலைமையும், சிறந்த இராஜதந்திரமுமே இவற்றை சாத்தியமாக்கும்.

 

தமிழ் அரசியலுக்கு இவை கிடைக்குமா?

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=79f1af8d-df54-4fcf-b886-53bef1cc8bad

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.