Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரின் பிள்ளைகள்! - குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக பார்த்தீபன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
போரின் பிள்ளைகள்! - குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக பார்த்தீபன்
23 ஜனவரி 2013
 

 

Childern%20story%20Parthi%201_CI.jpg

 

ஈழத்துப் போரை குழந்தைகளுக்கு எதிரான போர் என்றே குறிப்பிடுவேன். ஏனெனில் இந்தப் போர் குழந்தைகளைத்தான் முடிவற்ற துயரத்திற்குள் தள்ளியிருக்கிறது. போரும் அதன் அவலங்களும் போருக்குப் பிந்தைய அரசியலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் குழந்தைகளின் உலகத்தைதான் அழிக்கின்றது. இந்த உலகில் எந்த அரசியலுக்கும் தொடர்பில்லாதவர்கள் குழந்தைகள்தான். அவர்களிடம் எந்தப் பகைமையும் இல்லை. அவர்களிடம் எந்த குரோதமும் இல்லை. ஆனால் அவர்கள்மீதுதான் படையெடுக்கப்படுகின்றன. அவர்களது வாழ்வுதான் அழிக்கப்படுகின்றன. ஈழம் மீது நிகழ்த்தப்பட்ட போரினால் குழந்தைகள்தான் துயரங்களை சுமக்கிறார்கள். அதனால் நம்முடைய குழந்தைகளைப் போரின் பிள்ளைகள் என்றே சொல்ல நேரிடுகிறது. 

 

பள்ளிக்குச் செல்லாத சிறுவர்கள்

 

வடக்கு மாகாணத்தில் 2011ஆம் ஆண்டில் மாத்திரம் 38 ஆயிரம் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளார்கள். யுத்தமும் அது ஏற்படுத்திய சோகமும் நிறைந்த நம்முடைய மண்ணின் தலைமுறைகள் தமது கல்வியை இழப்பதையே இந்தத் தகவல் தெளிவாகக் காட்டுகிறது. அத்துடன் அவர்களின் எதிர்காலம் - வாழ்க்கை பாழாகும் ஆபத்தை இந்த தகவல்கள் உணர்த்துகின்றன. இது கல்விக்கு ஏற்பட்ட வீழச்சி என்பதை விட வாழ்க்கைக்கு ஏற்பட்ட வீழச்சி என்றே கருதப்படவேண்டும். எப்பொழுதும் இல்லாத  வகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பது நம்முடைய சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

 

Childern%20Story%202.jpg

 

பள்ளி வாழ்க்கையை இடையில் இழப்பது என்பது மிகவும் துயரமானது. பெரும்பாலான மாணவர்கள் தரம் ஒன்றிலிருந்து பத்து அல்லது பதினோறாம் வகுப்புகளில்தான் பாடசாலையை விட்டு இடைவிலகுகிறார்கள். இந்தக் காலம்தான் பள்ளிக்கூடத்திற்குரிய மிகவும் முக்கியமான, மகிழ்ச்சியான காலம். போரினாலும் பல்வேறு சமூகக் காரணிகளாலும் அதிகமாக பாடசாலையை விட்டு இடைவிலகுவது இந்தக் காலத்தில்தான். இடைவிலகல் என்பது பள்ளி வாழ்க்கையை இழத்தலாகும். இந்த இழத்தல் வாழ்நாள் முழுவதும் மனதை வலிக்கப்ப பண்ணுகிற வடுவாகவும் தங்குகிறது. 

 

இலங்கை முழுவதிலிருந்தும் ஒரு லட்சத்தி 26ஆயிரம் மாணவர்கள் இடைவிலகியுள்ளனர். இந்த எண்ணிக்கையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் அதிக எண்ணிக்கை வகிக்கின்றனர். இந்த மகாணத்தில் 26ஆயிரத்திற்கு 321பேர் இடைவிலக்கியுள்ளார்கள். வடக்கு மாகாணத்திற்கு அடுத்தபடியாக கிழக்கு மகாணம் முன்னிலையில் இருக்கிறது. கிழக்கு மகாணத்தில் 24ஆயிரத்து 614பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளார்கள். இந்த தகவல்களை இலங்கை கல்வி அமைச்சே வெளியிட்டிருக்கிறது. இலங்கையில் வடக்கு கிழக்கு மகாணத்தின் இடைவிலகல் என்பது யுத்தம் தந்த பெறுபேறாக அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. 

 

இடைவிலகலுக்கு என்ன காரணங்கள்? என்றும் அதற்கான பரிகாரங்களை செய்யவும் ஏற்பாடுகள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் வடக்கு கிழக்கு மகாணங்களைப் பொறுத்தவரையில் பள்ளி மாணவர்களின் இடைவிலகலுக்கான காரணங்கள் கண்ணுக்குத் தெரியும் வகையிலும் மிகவும் மலிவாகவும் இருக்கிறது. முப்பதாண்டுப் போரும், நான்காம் ஈழப்போரும், முள்ளிவாய்க்கால் போரும் நடந்த மண்ணில் வசிக்கும் மாணவர்களின் பிரச்சினைகளைத் தேடி மாபெரும் ஆய்வுகளை நிகழ்த்த வேண்டுமென்றில்லை. அந்தக் காரணங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றன. 

 

Childern%20story%20Parthi%201.jpg

 

 

 பள்ளிக்கு அனுப்ப யாருமில்லை

 

முள்ளிவாய்க்கால் போரினால் தாய் தந்தையர்களை இழந்த பிள்ளைகள் பெருமளவில் பாடசாலையை விட்டு இடைவிலகிக் கொண்டிருக்கிறார்கள். வன்னியில் ரிப்போட்டுக்காக பாடசாலைக்குச் செல்லும் பொழுதெல்லாம் அந்தப் பாடசாலையில் தாய் தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகளின் பட்டியல்களைப் பார்த்திருக்கிறேன். பள்ளிகள் தோறும் 150 முதல் 170 வரையான பிள்ளைகள் தாய் தந்தையர்களை இழந்திருக்கிறார்கள். அல்லது தாயையோ தந்தையையோ இழந்திருக்கிறார்கள். ஒரு பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பி வைக்கும் அக்கறையை காட்டக் கூடியவர்கள் பெற்றோர்களே. அவர்களை இழக்கும் பொழுது பள்ளிக்கு அனுப்ப யாருமில்லை என்ற துயரம் ஏற்படுகிறது. படிக்க வேண்டிய வயதில் பாடசாலைக்கு அனுப்பி வைக்க யாருமில்லை என்ற துயரம் சிறுவர்களின் வாழ்வில் ஏற்படுகின்றது. 

 

கிளிநொச்சியில் கனகபுரம் மகா வித்தியாலாத்தில் சில மாணவர்கள் இடை விலகினார்கள். நன்றாக படிக்கக் கூடிய மாணவன் ஒருவன் இடை விலகினான். அவனை மீண்டும் பாடசாலையில் இணைக்க அந்தப் பாடசாலை ஆசிரியர் சேதுபதி கடுமையாக முயற்சித்தார். சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு சில மாதங்களின் முன்பு அந்த மாணவன் பாடசாலை வருவதை நிறுத்திக் கொண்டான். ஒருமுறை அவனைக் கண்ட பொழுது அவனின் கோலம் துயரமான ஒரு சிறுவர் தொழிலாளி ஆக்கியிருந்தது. அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை என்ற பொழுது சகோதரர்களைப் பார்ப்பதற்காக என்னால் வேறு என்ன செய்ய முடியும் என்று கேட்டான். இப்படியான காரணங்களுக்காகவே மாணவர்கள் புத்தகங்களை கைவிடுகிறார்கள், சீருடைகளை கழற்றுகிறார்கள். 

 

 Childern%20Story%207.jpg

 

 

பெற்றோரை இழந்த பிள்ளைகள்

 

முள்ளிவாய்க்கால் போர் காரணமாக வடக்கில் மாத்திரம் சுமார் 414 சிறுவர்கள் தமது பெற்றோர்களை இழந்து சிறுவர் இல்லங்களில் தஞ்சமடைந்திருப்பதாக வடமாகாணத்தின் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு தெரிவித்திருந்தது. இது போரால் பெற்றோர்களை இழந்து அரச இல்லங்களில் தங்கியுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை மட்டுமே. ஆனால் இன்னும் பல எண்ணிக்கையான சிறுவர்கள் பெற்றோர்களை இழந்து அனாதைகளாக அந்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் புள்ளி விபரங்கள் மட்டுமல்ல அவர்களின் கதைகளும் வெளியில் வராமல் இருக்கின்றன. 

 

1159 சிறுவர்கள் தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்திருக்கின்றார்கள். 1349 சிறுவர்கள் பிற காரணங்களால் பெற்றோர்களை பிரிந்து அல்லது இழந்து அரச இல்லங்களில் தங்கியுள்ளார்கள். போர் காரணமாகவே அதிகளவான சிறுவர்கள் தமது பொற்றோர்களை இழந்திருக்கிறார்கள். தாய் மற்றும் தந்தையை இழந்த மாணவர்களின் எண்ணிக்கை வவுனியா மற்றும் யாழப்பாணத்திலேயே மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது என்றும் நன்னடத்தைப் பிவு கூறுகிறது. 

 

யாழ்ப்பாணத்தில் 127 பேரும் வவுனியாவில் 120 பேரும் மன்னாரில் 97 பேரும் கிளிநொச்சியில் 39 பேரும் முல்லைத்தீவில் 31 பேரும் தாய் மற்றும் தந்தையை இழந்துள்ளனர். யாழ் மாவட்டத்திலேயே தாய் அல்லது தந்தையை அதிகமான சிறுவர்கள் இழந்துள்ளார்கள். 563 பேர் இவ்வாறு இழப்புக்கு முகம் கொடுத்தள்ளனர். கிளிநொச்சியில் 232 பேரும் வவுனியாவில் 233 பேரும் மன்னாரில் 120 பேரும் முல்லைத்தீவில் 57 பேரும் இப்படி இனங்காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாடசாலைக்குப் பாடசாலை நூற்றுக்கணக்கான பிள்ளைகள் தாய் தந்தையை இழந்துள்ளார்கள். உண்மையான புள்ளி விபரங்கள் வெளியாகப்படவில்லை. இவை அரச இல்லங்களில் தங்கியுள்ள பிள்ளைகளின் விபரங்கள் மட்டுமே என்று நன்னடத்தைப் பிரிவு குறிப்பிடுகின்றது. 

 

Childern%20Story%203.jpg

 

 

போருக்குப் பின்  பெற்றோரை இழந்த பிள்ளைகள்

 

 

2012ஆம் ஆண்டு வரையில் கணக்கெடுக்கப்பட்டதன்படி 4,679 சிறுவர்கள் தந்தையையும் 1,053 சிறுவர்கள் தாயையும் இழந்திருக்கிறார்கள் என்று யாழ் மாவட்ட அரச அதிபர் இப்பொழுது குறிப்பிட்டுள்ளார். இது போருக்குப் பின்னர் ஏற்பட்ட துயரம். தந்தையை இழந்த நிலையில் நெடுந்தீவில் 101 சிறுவர்களும் வேலணையில் 226 சிறுவர்களும் ஊர்காவற்றுறையில் 179 சிறுவர்களும்  காரைநகரில் 123 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தில் 381 சிறுவர்களும் நல்லூரில் 301 சிறுவர்களும்  சண்டிலிப்பாயில் 530 சிறுவர்களும் சங்கானையில் 346 சிறுவர்களும் உடுவிலில் 503 சிறுவர்களும்  தெல்லிப்பழையில் 364 சிறுவர்களும்  கோப்பாயில் 186 சிறுவர்களும்  சாவகச்சேரியில்  551 சிறுவர்களும்  கரவெட்டியில்  354 சிறுவர்களும் பருத்தித்துறையில்  461 சிறுவர்களும் மருதங்கேணியில்  73 சிறுவர்களும் உள்ளனர். 

 

தாயை இழந்த நிலையில் நெடுந்தீவில் 27 சிறுவர்களும்  வேலணையில் 56 சிறுவர்களும்  ஊர்காவற்றுறையில் 20 சிறுவர்களும்  யாழ்ப்பாணத்தில் 56 சிறுவர்களும்  காரைநகரில் 38 சிறுவர்களும்  நல்லூரில் 50 சிறுவர்களும்  சண்டிலிப்பாயில் 145 சிறுவர்களும்  சங்கானையில் 73 சிறுவர்களும்  உடுவிலில் 13 சிறுவர்களும் தெல்லிப்பழையில்  67 சிறுவர்களும்  கோப்பாயில் 121 சிறுவர்களும்  கரவெட்டியில் 120 சிறுவர்களும் சாவகச்சேரியில் 109 சிறுவர்களும்  கரவெட்டியில்  120 சிறுவர்களும்  பருத்தித்துறையில் 113 சிறுவர்களும் மருதங்கேணியில் 45 சிறுவர்களும் உள்ளனர். 

 

childern%20story%2010.jpg

 

தொழிலாளியாக மாறும் சிறுவர்கள்

எங்கள் அம்மாவும் அப்பாவும் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்படுமா? என்றுதான் இந்தப் பிள்ளைகளின் பிஞ்சு நெஞ்சு துடிக்கிறது. தாய் தந்தையரை இழந்த  வீடுகளில் சிறுவர்களே குடும்பத் தலைவர்களாகிறார்கள். அவர்களே உழைப்பாளிகள் ஆகின்றார்கள். இன்றைக்கு வடக்கில் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் சிறுவர் தொழிலாளர்களைப் பார்க்க முடிகின்றது. வவுனியாவில் ஒரு சிறுமி பேரூந்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். அவள் ஒரு கடித்தை எல்லோரிடமும் நீட்டினாள். வன்னியில் போரில் தன்னுடைய குடும்பம் பாதிக்கப்பட்டதாகவும் அதில் தாய் தந்தயை இழந்து சகோதரர்களை கவனிப்பதற்காக தான் பிச்சை எடுப்பதாகவும் எழுதியிருக்கிறாள். ஒரு துயரக் காவியத்தை எல்லோரிடமும் நீட்டிக் கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. 

 

childern%20story%208.jpg

 

போருக்குப் பின்னர் பெரியவர்களுக்கே வேலை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. புலிகள் முன்பு தம்முடைய நிர்வாகத்தில் ஓரளவு படித்தவர்கள் முதல் பட்டம் படித்தவர்கள் வரை வேலை வழங்கினார்கள். யாழ்ப்பாணம் வவுனியாவிலிருந்து வேலைக்காக வன்னிக்கு பலர் அப்பொழுது படையெடுத்தார்கள். புலிகளின் நிர்வாகம் இல்லாத இன்றைய சூழலில் பலர் வேலைக்கு அல்லாடும் பொழுது தம்மை தொழிலாளிகளாக்கியிருக்கிறார்கள் சிறுவர்கள். தொழிலில் ஈடுபடும் ஒவ்வொரு குழந்தையைப் பார்க்கும் பொழுதும் அந்தச் சிறுவரின் கிழிந்து போன எதிர்காலம் தொங்கிக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. ஒரு சமூகத்தில் சிறுவர்கள் அதிகமாக தொழிலாளிகள் ஆகிறார்கள் என்றால் அந்தச் சமூகம் பொருளாதாரத்திலும் அரசியலும் எந்தளவு பலவீனப்பட்டு போயிருக்கிறது என்பதை கண்டுகொள்ள முடியும்.  

 

போர் ஏற்படுத்திய மனவடுக்கள்

 

 

போர் சிறுவர்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருக்கிறது. போர்க்கதைகளைப் பேசும் குழந்தைகள் பலரை வன்னியில் பார்த்திருக்கிறேன். அவர்கள் போரின் கொடுமையான காட்சிகளை இன்னும் மறக்க முடியாமல் சித்திரித்துக் கொண்டிருக்கிறார்கள். போரில் குழந்தைகளும் சிறுவர்களும் அங்கங்களை இழந்திருக்கிறார்கள். குழந்தைகள் எதுவுமறியாத வயதில் தமது கைகைளயும் கால்களையும் பறிகொடுத்திருக்கிறார்கள். வளர்ந்த பின்னர் அவர்கள் இழந்த தங்கள் கைகளையும் கால்களையும் கேட்கும்பொழுது நாம் என்ன பதில் சொல்வது? காயங்கள் நிறைந்த தங்கள் உடலின் கதைகளை அவர்கள் கேட்பார்கள். 

 

childern%20story%2011.jpg

 

போரின் குழந்தைகள் என்றே நம்முடைய புதிய தலைமுறையை நாம் அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. கொடும் போரில் பிறந்ததவர்களாகவும் கொடும்போரில் காயங்களுக்கு உள்ளானவர்களாகவும்தான் இன்றைய புதிய தலைமுறை இருக்கிறது. பதுங்குகுழிகளில் பிறந்தவர்களாகவும்தான் யுத்தத்தின் எச்சங்களை வைத்து விளையாடுபவர்களாகவும் தான் நம்முடைய மண்ணில் பிள்ளைகள் இருக்கிறார்கள். வன்னியில் யுத்தத்தின் பின்னர் மீளக்குடியேறிய பல இடங்களில் வெடித்த வெடிபொருட்களின் பாகங்களையும் வெடிக்காத பொருட்களின் பாகங்களையும்தான் சிறுவர்கள் தமது விளையாட்டுப் பொருட்களாக பாவிக்கிறார்கள். ஏன் எதற்கு என்று தெரியாமலே நிகழ்த்தப்பட்ட கொடும் போரின் காட்சிகளையும் அதன் உக்கிரங்களையும் மறக்க முடியாத மனதை சுமந்து கொண்டுதான் ஈழச்சிறுவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

 

Childern%20Story%204.jpg

 

 

ஆபத்திற்குள் இரும்பு சுமக்கும் பிஞ்சுத்தலைகள்

 

போர், சிறுவர்கள்மீதுதான் அதன் துயரச்சுமையை ஏற்றி விட்டிருக்கிறது. கிளிநொச்சிக்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டு சென்ற சில நாட்களிலேயே இரும்பு சுமக்கும் சிறுவர்களை கண்டேன். அவர்கள் கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் யுத்தத்தில் அழிந்த வாகனங்களின் பாகங்களை பொறுக்கிக் கொண்டு சென்றார்கள். அதை வன்னியிலிருந்து ஏற்றுமதி செய்ய தெற்கிலிருந்து பலர் வந்தார்கள். வன்னியில் என்றால் குறைந்த விலையில் இரும்புகள் வாங்கலாம் என்று வரும் வியாபாரிகள் சிறுவர்கள் என்றால் குறைந்த விலையில் இரும்பை பொறுக்க வைக்கலாம் என்று வருகின்றனர். மிதிவெடிகளும் வெடிக்காத வெடிபொருட்களும் நிறைந்திருக்கிற ஆபத்தான இடங்களுக்குத்தான் இந்தச் சிறுவர்கள் இரும்பத்தை தேடிச் செல்லுகின்றனர். அத்துடன் வெடித்த வெடிபொருட்களின் உலோகங்களையும் சிறுவர்கள் பொறுக்கி உலோக முதலாளிகளுக்கு விற்கின்றனர்.    

மிதிவெடி அபாயம் என்று எலும்புக்கூடு வரையப்பட்ட மஞ்சள் பட்டிகள் இழுத்துக் கட்டப்பட்டிருக்க அதையும் தாண்டி இரும்புகளை பொறுக்க குழந்தைகளின் பிஞ்சுக் கால்கள் நகர்கின்றன. எவ்வளவு பெரிய ஆபத்து. இரும்பு பொறுக்கி சுமந்து வருதலின் கொடூரம் இறுதி யுத்தம் நடந்த பகுதியில்தான் அதிகமாக நடக்கிறது. இறுதி யுத்தம் நடந்த சுகந்திரபுரம், உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம், புதுக்கடியிருப்பு முதலிய பகுதிகளில் இரும்பு கடத்தும் முதலாளிகளுக்குப் பிடித்த தொழிலாளிகளாக சிறுவர்கள்தான் அதிகமாக வேலை செய்கிறார்கள். இராணுவக்காவல் நிலையத்தைத்தாண்டி இராணுவம் மிகவும் செறிவாக நிலை கொண்டிருக்கும் பகுதியில் இப்படி சிறுவர்கள் இரும்பு பொறுக்கும் தொழிலாளியாக வேலை செய்கிறார்கள்.

 

 

குப்பை பொறுக்கும் யாழ்ப்பாணக் குழந்தைகள் 

 

இந்த இரும்புகள் ஒருநாள் குப்பைகளாக மாறும் என்பதை உணர்த்தியது யாழ்பாணச் சிறுவர்கள்தான். யாழ்பபாணத்தில் குப்பை பொறுக்கும் சிறுவர்களை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். பொம்மைவெளியில் யாழ் நகரத்தின் குப்பைகள் முழுவதும் கொட்டப்படுகின்றன. அங்கு பாடசாலை செல்லாமல் பல சிறுவர்கள் குப்பை பொறுக்குகின்றார்கள். பொம்மைகளை வைத்திருக்க வேண்டிய வயதில் பொம்மைகளுடன் விளையாட வேண்டிய வயதில் எங்கள் குழந்தைகள் பொம்மைவெளியில் குப்பைகளைப் பொறுக்குகிறார்கள். குப்பைகளுக்குள் எதாவது கிடக்கும் என்ற நம்பிக்கையுடன் குப்பைகளை வேகமாக கிளறும் சிறுவர்களை பார்க்கக் காலத்துயரமே மேலிட்டது. 

 

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்லைக்கழத்திற்கு அருகில் வசிக்கும் நிலமற்ற குழந்தைகளும் குப்பையை பொறுக்குவதை தங்கள் பொழுது போக்குத் தொழிலாகச் செய்கின்றனர். இவர்களில் பலர் பள்ளி செல்லுகிறார்கள். ஆனால் பாடசாலை விட்டு வரும் பொழுதோ அல்லது பாடசாலை விட்டு வந்த பின்னரோ குப்பையை பொறுக்குகிறார்கள். அதை தங்கள் புத்தகப் பையிற்குள்ளேயே நிரப்புகிறார்கள். அந்தக் குப்பைகளில் உள்ள கழிவுத் தகரங்களையும் கம்பிகளையும் வயர்களையும் உடைந்த இறப்பர் பொருட்களையும் எடுத்து சேகரிக்கிறார்கள். அவர்களின் கைகயில் பாவித்த பேனாக்களும் படித்துக் கிழித்த புத்தகங்களும் கூட சிக்குகின்றன. 

 

சிறுவர் இல்லங்களை வெறுப்பது ஏன்?

 

வன்னியில் சிறுவர் இல்லங்களில் தாய் தந்தையர்களை இழந்த பிள்ளைகளும் மிகவும் கல்வி கற்க வசயில்லாத வறுமைப்பட்ட பிள்ளைகளும் படிக்கின்றார்கள். சிறுவர் இல்லங்களின் ஒழுங்கு முறைகள் சிறுவர்களின் இயல்பான மனங்களை கட்டுப்படுத்துகின்றன. பலதரப்பட்ட நிலையிலிருந்து வரும் சிறுவர்களை சிறுவர் இல்லங்கள் ஒரு ஒழுங்கு முறையில்தான் அமைத்துக்கொள்ளுவதுதான் இலகுவானது எனப்படுகிறது. ஆனால் இந்தச் சிறுவர் இல்லங்களின் அமைப்புமுறைகளுக்குள்ளும் அதன் சூழலுக்குள்ளும் தம்மை பொருத்த முடியாத பல சிறுவர்களின் மனங்கள் நெரிபடுகின்றன. அவர்கள் வீடுகளில் வசிக்கும் பொழுது இருக்கும் மகிழச்சி இல்லங்களில் தங்கியிருக்கும் பொழுது இருப்பதில்லை. இல்லங்களுக்குள் நுழைந்த பின்னர் அவர்களின் முகம் ஒளியிழந்து இருண்டு போகிறது. 

 

சிறுவர் இல்லங்களில் பல குறைபாடுகள் இருக்கின்றன. அங்கு சிறுவர்களை கையாளும் முறையிலும் குறைபாடுகள் உள்ளன. ஆனால் சிறுவர் இல்லங்களுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையை சிறுவர்களுக்கு உருவாக்கும் காலம்தான் கொடியது. நாம் அந்தக் காலத்தைத்தான் நோக வேண்டியிருக்கிறது. வன்னியில் உள்ள சிறுவர் இல்லங்களுக்குச் சென்று வரும் பொழுதெல்லாம் மூலைகளுக்குள் ஒடுங்கியிருக்கும் சிறுவர்களின் கதைகளை கேட்கும் பொழுது காலத்தைத்தான் நோக வேண்டியிருந்தது. சாப்பாடு நிறைந்த தட்டுக்களின் முன்னால் இருண்ட முகங்களுடன் இருக்கும் அவர்களைப் பார்க்கும் பொழுது போரால் இருண்ட தேசமே தெரியும் பொழுது காலத்தைத்தான் நோக வேண்டியிருந்தது. 

 

அதிகரிக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள்

 

வரலாறு காணாத வகையில் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிமா அதிபர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். கடந்த வாரத்தில் மாத்திரம் 5 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். அதில் இரண்டு சிறுமிகள் தந்தையர்களாலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். அண்மையில் மண்டை தீவில் நான்கு வயதுச் சிறுமி ஒருத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு நெடுந்தீவில் 12 வயதான சிறுமி ஒருத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தாள். 

 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் இவ்வாறான விடயங்கள் மிகவும் அதிகமாக இடம்பெறுகின்றன. தந்தையர்களாலேயே சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் நிலையில் வன்னியில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் பாதுகப்பு எப்படியிருக்கும் என்ற கேள்வி எழுகின்றது. அவர்கள் பெற்றோர்களை இழக்கும் பொழுது எந்த விதமான பாதுகாப்புமற்றவர்களாகி விடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினால் மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் 1998 தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளனதாக ஒரு மாணவன் எட்டு ஆண்டுகள் கடந்து வள்ர்ந்த பின்னர் தன் தந்தைக்குச் சொல்லியிருந்தான்.  

 

மாணவிகளை மணம் முடிக்கும் இராணுவத்தினர்

 

பள்ளிக்கூடம் செல்லாதவர்களை வீடு தேடிச் சென்று பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியவர்கள் விடுதலைப் புலிப் போராளிகள் என்று குறிப்பிட்டேன். ஆனால் இன்று தமிழர் தாயகத்தில் நிலைகொண்டு சிங்கள இராணுவத்தினரோ வன்னியில் பள்ளிக்குச் செல்லும் தமிழ் மாணவிகளை திருமணம் முடித்துக் கொள்வதில் மிகவும் அக்கறை காட்டுகிறார்கள். தற்போழுது இனக்கலப்புத் திருமணங்களைச் செய்ய படையினர் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர். அதில் பள்ளி மாணவிகளையும் தமது முக்கிய இலக்காக் கொண்டுள்ளனர். 

 

கிளிநொச்சி நகரத்தின் இரண்டு முன்னணிப் பாடசாலைகளைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை இராணுவத்தினர் அண்மையில் திருமணம் செய்து கொண்டார்கள். பாடசாலை செல்லும் பொழுது வழியில் காவல் கடமையில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய மறுத்தால் தற்கொலை செய்வேன் என்று சொன்னதாலும் திருமணத்திற்குச் சம்மதித்தாக அந்தப் 15 வயதுச் சிறுமி சொல்லுகிறாள்;. புத்தகங்களை சுமந்தபடி பள்ளிக்குச் சென்ற அந்தச் சிறுமி இப்பொழுது குழந்தையை சுமந்திருக்கிறாள். 

 

இன்னொரு உயதர்தர வகுப்பு மாணவியை படைச்சிப்பாய் திருமணம் செய்த பொழுது அரசாங்க ஊடகங்கள் அவருக்கு கடும் பிரல்பல்யத்தை ஏற்படுத்தின. திருமணத்தின் பின்னர் ஊடகங்களில் பேசிய தம்பதிகள் இவ்வாறான திருமணங்களை செய்து தமிழ் சிங்கள உறவை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள். தமிழ் இனத்தை அழிப்பதை நோக்கமாகக் இனக்கலப்புத் திருமணங்களை தமிழ் சிங்கள உறவை வலுப்படுத்துவதாக படையினர் அடையாளப்படுத்தினர். 

 

எல்லாவற்றையும் விட துயரமானது என்ன தெரியுமா? இந்த தம்பதிகளுக்கு கிளிநொச்சிப் பாடசாலையில் திருமணவரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்கள் மத்தியில் பேசிய இராணுவச் சிப்பாயும் சிப்பாயை மணம் முடிந்த மாணவியும் எல்லோரும் இப்படியான இனக்கலப்புத் திருமணங்களுக்கு முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்கள். தமிழ் இனத்தை அழிக்கும் ஒரு நடவடிக்கையை ஒரு பள்ளிக்கூடத்திலேயே பிராசாரம் செய்யும் அளவில் நிலமை ஆகிவிட்டது. இப்படியிருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வராமல்தானே விடுவார்கள். எனவே இன்று பாடசாலை இடைவிலகல்களுக்கு இவைகளைப் போன்ற செயற்பாடுகளும் முக்கியமான காரணிகளாக உள்ளன என்பதை அவசயமாக கவனத்தில் எடுக்க வேண்டும். 

 

Childern%20Story%205.jpg

 

 

படிக்க விரும்பும் சிறுவர்கள்

 

போரில் இழப்புகளுக்கு முகம் கொடுத்த பின்னரும் நம்பிக்கையோடு படிக்க விரும்பும் இரண்டு சிறுவர்களை அண்மையில் சந்தித்தேன். ஒருவன் கிளிநொச்சிச் சிறுவன். மற்றையவன் புதுக்குடியிருப்பு கேப்பாபுலவுச் சிறுவன். கிளிநொச்சியைச் சேர்ந்த கயூட்சன் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுது தன்னுடைய ஒற்றைக் காலையும் ஒற்றைக் கையையும் இழந்தவன். உடல் முழுதும் காயங்களுக்கு உள்ளானவன். அவனது தந்தயை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றுவிட்டனர். காயங்களால் சோர்ந்து போகாமல் படிப்பில் தீவிரமாக இருக்கிறான். கிளிநொச்சியில் அவனின் படிப்புத் திறமை அவனை பலரையும் அறியச் செய்திருந்தது. 

 

புதுக்குடியிருப்பு கேப்பாபுலவில் சந்தித்த விஷ்ணுவதன் யுத்தத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்து போயிருந்தான். 'நான் நன்றாகப் படிப்பேன்'  என்று அவன் சொன்னான். படிப்பில் மிகவும் அக்கறையானவன் என்று அவனது ஆசிரியர் சொன்னார். துடிதுடிப்பும் நம்பிக்கையும் தரும் சிறுவன் அவன். தன் பெற்றோரை இழந்து இப்பொழுது தன்னுடைய அம்மம்மாவிடம்தான் வளருகிறான். தாய் தந்தையரை இழந்த பின்னரும் போரில் அவயங்களை இழந்த பின்னரும் படிக்ககூடிய ஆர்வம் மிகுந்த பிள்ளைகள் சிலர் உள்ளனர். ஆர்வம் இருந்தும் படிக்க முடியாத பிள்ளைகள் பலர் உள்ளனர். 

 

Childern%20Story%206.jpg

 

குழந்தைகளும் சிறுவர்களும் வாழ்வின் தொடர்ச்சியாக இந்த பூமியில் நாம் உருவாக்கும் இன்னொரு தலைமுறை. பட்டுப்போகும் மரங்களின் மத்தியில் துளிர் விடும் செடிகளைப் போல இந்த பூமிக்கு அவசியமானவர்கள். எனவே குழந்தைகள் சிறுவர்கள்மீது அவர்களின் கல்விமீது அவர்களின் நலன்மீது அக்கறை எடுப்பது என்பது நம்முடைய எதிர்காலத் தலைமுறைமீது அக்கறை எடுப்பதாகும். போரால் மிகவும் நலிவடைந்த ஒரு சமூகத்தின் செடிகளை செழித்து வளரச் செய்வதற்கு நாம் செய்யவேண்டியது ஏராளம்.  

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87803/language/ta-IN/article.aspx

 

புலம்பெயர் தமிழர் குடும்பம் ஒவ்வொன்றும் ஒரு சிறுவரை கவனிக்க திட்டம் நமபக்கூடியவர்களால் பரந்துபட்டளவில் முன்னெடுக்கப்பட்டால் இந்த வடுக்களுக்கு சிறு மருந்து போடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.