Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையாளன் – ஜெயமோகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நம்பிக்கையாளன் – ஜெயமோகன்
 

திடாரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான்.

‘ ‘ இறைமறுப்பாளர்களின் கருவி ‘ ‘ என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். ‘ ‘ அது இறையடியார்களுக்கு ஒருபோதும் உரிய காலத்தில் உதவியது இல்லை ‘ ‘

‘ ‘சாத்தானின் நாக்கு ! ‘ ‘ என்றார் இன்னொருவர்.

‘ ‘ஆனால் இப்போது நமக்கு வேறுவழியில்லை. வெளியுலகத்தொடர்புக்கு இதுமட்டும்தன் இருக்கிறது. ‘ ‘ இளைஞன் திடம்பெற்று மெல்ல சொன்னான். அதை அவன் மீண்டும் மீட்டினான். வெறும் ஒலி மட்டும்தான் கேட்டது .

‘ ‘இந்த ஒலியைக்கேட்டு சொற்கத்துக்கா போகப்போகிறாய் ? ‘ என்றார் ஒருவர். பிறர் புன்னகை செய்தனர்.

சாலமோன் காலத்தையது என்று நம்பப்பட்ட குகை. பாலைவன நடுவே மணற்பாறையில் குடையப்பட்டது. வெளியே எரிந்த கடுமையான பாலைவனவெப்பம் உள்ளே வருவதில்லை. போர்க்கொத்தளமாக ஆக்கப்பட்ட பிறகு கனத்த வெளிச்சுவர்களும் இரும்பு கான்கிரீட் கதவுகளும் பொருத்தப்பட்டு நன்றாக மூடப்பட்டது. உள்ளே அறைகளில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பல வருடங்களுக்குப்போதுமான பாதுகாக்கப்பட்ட உணவு , குடிநீர். அது மெய்யிறைப் போராளிகளின் முக்கியமான மறைவிடங்களுள் ஒன்று. அங்கிருந்த ஒன்பதுபேரும் , ஒரு முதிய மதகுரு உட்பட தேர்ச்சிபெற்ற போர்வீரர்கள். பத்துவருடங்களுக்கும் மேலாக நடந்துவந்த உலகப்போரில் ஒவ்வொருநாளும் ஈடுபட்டவர்கள்.

ரேடியோ சட்டென்று மசாகி மொழியில் குழற ஆரம்பித்தது. அனைவரும் அதைச்சூழ்ந்தனர். சொற்கள் ஆங்கங்கே சிதைந்து உருவிழந்திருந்தன. உலோகஒலி கொண்ட குரல்.

‘ ‘ எல்லையற்ற கருணை கொண்ட இறைவனின் திருப்பெயரால் வாழ்த்துகிறோம். முழுமுதல் நாயகன் நாமம் வாழ்க!. அவன் அடியார் வெல்

க! ‘ ‘ குரல் உணர்ச்சிப் பெருக்குடன் கூவியது ‘ ‘ நாம் தோற்கவில்லை. நான் இன்னமும் எஞ்சுகிறோம். எவராலும்வெல்லமுடியாத நம் போராளிகள் பல இடங்களில் பதுங்கியிருக்கிறார்கள்.. இறையருள் நம்முடன் இருக்கையில் நாம் எவராலும் வெல்லப்பட முடியாதவர்கள். இறுதிவெற்றிக்குரியவர்கள் நாமே… மெய்யிறை மார்க்கம் தோற்க இயலாது .அவர்களுக்கு வெற்றி இறைவனால் ஆணையிடப்பட்டுள்ளது…. ‘ ‘

குகையறைக்குள் முழங்கிய உரத்த குரல்களில் அவர்கள் தங்கள் வாழ்த்தொலியையும் போர்க்குரலையும் எழுப்பினர்.

‘ ‘நல்ல சேதி! ‘ ‘ என்றார் தலைவர், பெருமூச்சுடன். ‘ ‘ நாம் காத்திருப்போம்… ‘ ‘

‘ ‘ஆம். நாம் வெல்வோம் ‘ ‘ என்றார் இன்னொருவர்.

‘ ‘ஆனால் வெளியே என்ன நடக்கிறதென்று தெரியவில்லையே ‘ ‘ இளைஞன் சொன்னான்.

‘ ‘பொறு கேட்போம் ‘ ‘

வெகுநேரம் போர்க்குரல்களே ஒலித்தன. ‘ ‘நாம் ஆங்கிலத்தில் ஏதேனும் செய்தி உள்ளதா என்று பார்க்கலாம். ‘ ‘ என்றான் இளைஞன்.

‘ ‘வாயைமூடு ‘ ‘ என்றார் தலைவர். ‘ ‘அவர்கள் கக்கும் பொய்களை நாம் ஏன் கேட்க வேண்டும். இறைவன் அங்கீகரித்த ஒரே மொழியான மசாகி அல்லாத அனைத்துமே பொய் மொழிகள்தான்… ‘ ‘

இளைஞன் ஒன்றும் சொல்லவில்லை. ரேடியோவையே பர்த்துக் கொண்டிருந்தான். ஒருவர் ரொட்டி பரிமாறினார். அவர்கள் மெளனமாக உண்டனர்.மெல்லும் ஒலி மட்டும் கேட்டது.

மீண்டும் இயக்கப்பட்டபோது ரேடியோ ஒலிமாறுபட்டது. மெய்யிறைப் போராளிகளின் தலைமை நிலைய அறிவிப்பு என்று குரல் எழுந்தது. பிறகு அவரது மெல்லிய இனிய குரல் ஒலித்தது .

‘ ஒரே இறைவனின் திருப்பெயரை வாழ்த்துவோம். அவனது அளவிலாக்கருணையும் எல்லையற்ற வல்லமையும் நமக்கு துணையிருக்கும். அனைவருக்கும் குதா- அலா-சமீஷ் போராளிகளமைப்பின் வாழ்த்துக்கள். நாம் மிக மிகச் சிக்கலான நிலையில் இருக்கிறோம். நமது போர் முக்கியமான திருப்புமுனையை அடைந்துள்ளது. இறைமறுப்பாளர்களான பொருள்வெறிகொண்ட அற்பர்கள் நம் மீது சாத்தானின் மகத்தான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதுவரை இருபது ஹைட்ரஜன் குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லபப்டுகிறது. இப்பூமியின் மையமான புனித சா-உம்-துல் மீது நடந்த தாக்குதலில் அப்பகுதியே முழுமையாக அழிந்தது என்று தகவல்கள் சொல்கின்றன. இறைநம்பிக்கையாளர்களின் நாடுகள் அனைத்தும் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் ஏறத்தாழ அனைவருமே முழுமையாக அழிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. பெரும்புகைப்படலத்தால் பூமி முழுமையாக மூடப்பட்டுள்ளது. தூசியாலான வானளாவிய நாய்க்குடைக் கோபுரங்கள் மட்டுமே எங்கும் தெரிகின்றன . வானம் இளஞ்சிவப்பு நிறமாகவும் கருமை கொண்டும் காணப்படுகிறது. நாட்கள் இருண்டு விடியவில்லை. பாதுகாப்புஅறைகளுக்குள் எஞ்சிய சிலர் மட்டுமே பிழைத்திருக்கிறோம். நமது கடமை என்ன , பெரும்கருணையாளனாகிய இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதென்ன என்று தெரியவில்லை. நாம் அவன் சொற்களுக்காக காத்திருப்போம்… இந்தப்போருக்கு ஒரேமுடிவுதான். நம் இறைவனின் ஆட்சி உலகில் நிறுவப்படுதல். இப்பூமியை அவன் ஆகத்- சும் -ஆவ் ஆக ஆகமாற்றுதல். இந்த போருக்கு ஒரே ஒரு முடிவுதான் இருக்க இயலும். இறையாட்சி வருமை. இறைநம்பிக்கியாளர்கள் முழுவெற்றி அடைந்து இறைமறுப்பாளர்களை முற்றிலும் அழித்தல். இறைவனுக்கான போரில் சமரசமே பெரும் பாவம் என்று நம் புனித மறை அறைகூவுகிறது. ஆகவே நாம் தோற்கமாட்டோம். நாம் அடங்க மாட்டோம். நாம் இன்னும் இன்னும் இன்னும் போராடுவோம்… ஆம் தோழர்களே, நமக்கு இன்னும் போர் முடியவில்லை. காத்திருப்போம்… ‘ ‘

ஒலி தேய்ந்தது.

பெருமூச்சுகளுடன் அனைவரும் தொய்ந்தனர்.

‘ ‘அப்படியானால் உண்மைதான். புனித சா-உம்-துல் அழிந்தது. சாத்தானின் ஏவலாட்கள் அதைச்சாதித்துவிட்ட்னர்… ‘ ‘

‘ ‘அதை நம் புனிதமறைநூல் தெளிவாகவே முன்கூட்டிச் சொல்லியிருகிறது. ‘ ‘ என்றார் முதிய மதகுரு. அவர் குரல் நிதானமாகவே இருந்தது ‘ ‘ … நாற்பத்தியேட்டாம் அத்தியாயம் முழுக்க பூமியின் அழிவைப்பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கைசாமத் ஃபலவா என்றால் இறுதிநாளின் அடையாளம். பத்து முக்கிய அடையாளங்கள் தென்படும் என்று புனிதமறை சொல்கிறது. முன்னோடிகளான மூன்று தீர்க்கதரிசிகள் விண்ணிலிருந்து மண்ணுக்குத் திரும்புவார்கள். ஒரே மாதத்தில் மூன்று சந்திரக்கிரகணங்கள் தோன்றும்… ஒன்று மேற்கில் ஒன்று கிழக்கில் ஒன்று புனித சா-உம்-துல் மீது… ‘ ‘ கிழவர் சொன்னார் . ‘ ‘ அதை நாம் கண்களால் கண்டோம் நம்பிக்கையாளர்களே. சென்ற மாதம் சந்திரன் இருண்டு மறைவதை நானே இருமுறை கண்டேன். … ‘ ‘

‘ ‘ஆமாம்…ஆமாம் ‘ ‘ குரல்கள் ஒலித்தன ‘இறைவனுக்கு மகிமை !புனிதநூலுக்கு மகிமை! ‘ ‘

இளைஞன் மெல்லிய குரலில் ‘ ‘ அது அவர்களின் பெரும் வேவுகோள்கள் உருவாக்கிய நிழல் மறைப்பு… ‘ ‘ என்றான்

‘ ‘ எப்படியானாலும் நாம் கண்டது கிரகணம்தானே ? ‘ ‘ தலைவர் கேட்டார்.

இளைஞன் பெருமூச்சு விட்டான்.

‘ ‘ இப்படிச் சொல்லப்பட்டுள்ளது… அதன் பிறகு இனிய சொற்கள் பேசும் கொடூரமான மன்னன் ஒருவன் பெரும்படையுடன் கிளம்பி நம் சா-உம்-துல் மீது படையெடுப்பான். அவனுக்குத் துணையாக நரகத்திலிருந்து ஊறிவரும் கருநீலப்புகை ஒன்று பூமிமீது பரவும். அப்புகையை ஆயுதமாகக் கொண்டு அவன் இறை நம்பிக்கையாளர்களை முழுமையாக தோற்கடிப்பான்… அதன் பின் புனித சா-உம்-துல் அழிக்கப்படும்…. ‘ ‘

‘ ‘இப்போது நடந்திருப்பது அதுதான் ‘ ‘ என்றார் தலைவர். ‘ ‘ பெரும் புகை! ‘ ‘

மதகுரு தொடர்ந்தார் ‘ ‘ …. இனி நடப்பதும் சொல்லப்பட்டுள்ளது. புனித சா-உம்-துல் அழிந்ததும் பூமிமீது கற்பூரமணம் ஒன்று பரவும். பட்டுச்சல்லாபோன்ற இனிய குளிருள்ள ஓர் அலையாக அது வீசும். அது கடும் விஷத்தின் அலை. இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர்கூட எஞ்சாமல் அதில் அழிவார்கள். நம் இறைவனின் பெயரைச்சொல்ல ஒருவர் கூட எஞ்சமாட்டார்கள். கடைசி இறைநம்பிக்கையாளன் அழிந்ததும் இப்பூமி முற்றிலுமாக இறைமறுப்பாளர்களால் ஆனதாக ஆகிவிடும். உடனே இறைமன்னிப்பின் வாசல் மூடிவிடும். அதன்பிறகு கொள்ளும் இறைநம்பிக்கையால் எந்தவிதமான பயனும் இருக்காது. மறுநாள் தொடங்கி நூற்றிஇருபதுநாள் சூரியன் உதிக்காது. எங்கும் அரை இருளே சூழ்ந்திருக்கும். இறைமறுப்பாளர் தங்கள் அறிவால் அதை வெல்ல முயல்வார்கள் . அதில் அவர்கள் தோல்வி அடைவார்கள். அவர்கள் செய்வதறியாது விழிப்பார்கள். அப்போது மண்ணுக்குமேல் உள்ள கிசாபத் அம்னா என்ற நரகத்திலிருந்து கொடும் சாபம் ஒன்று பூமிமீது விழும். மண்ணுகு அடியில் உள்ள சமாபத் அம்னா என்ற நரகத்திலிருந்து இன்னொரு பெரும்சாபம் மக்கள் மீது எழும். அப்போது எல்லா உலக நியதிகலும் நிலைமாறும். ஒட்டகங்களுக்கு பைத்தியம் பிடிக்கும். ஆறுகளில் நெருப்பு ஓடும். கடல்கள் எல்லைகளை இழக்கும். ‘ ‘ மதகுரு மெல்லிய குரலில் அவ்வரிகளை பாடினார்

‘ ‘பின்பு கிழக்குத்திசையிலிருந்து கடுமையான சுவாலைகொண்ட நெருப்பு அலையலையாகக் கிளம்பிவந்து உலகை மூடும். அது இப்பூமியின் எஞ்சியுள்ள அனைத்தையும் முற்றாக அழிக்கும். ஒரு உயிர்கூட மிஞ்சாது. அதன் பிறகு சொற்கத்தின் வாசல்கள் திறக்கும். நம் இறுதி இறைதூதர் தன் நீதியின் உருவிய உடைவாளுடன் மீண்டும் கிளம்பிவருவார். அன்று கல்லறைகள் திறக்கும். இறந்த அனைவரும் எழுவார்கள்.அவர் முன் தங்கள் பாவபுண்ணியங்களுடன் அனைத்து மக்களும் நிற்பார்கள். நம் அருமறை இறுதிநிற்றல் என இதை விளக்குகிறது தோழர்களே. நாம் தேடியவை நமக்களிக்கபப்டும். பாவங்களைத்தேடியவன் நகரகநெருப்பை அடைவான். நற்செயல்களை தேடியவன் சொற்கத்தை அடைவான். கூலி இல்லாத செயலென்று இப்பூமியில் ஏதுமில்லை என்கிறது புனித மறை ‘ ‘

அறைக்குள் அனைவரும் கைகளை மேலே தூக்கி இறைவனை நோக்கி அடைக்கலம் கோரிக் கூவினார்கள்.

மதகுரு கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

இளைஞன் மெல்ல ரேடியோவைத் தூண்டினான். அது கரகரவென ஒலித்தபடியே இருந்தது.

‘ ‘ஏன் அப்படி கத்துகிறது சைத்தானின் பெட்டி ? ‘ ‘

‘வானமெங்கும் கதிர்வீச்சு இருக்கிறது ‘ என்றான் இளைஞன்

ரேடியோ மெல்ல உயிர்பெற்றது. ஆங்கிலக்குரல் குழறிகுழறிப்பேசியது ‘ ‘ஆம், உலகம் முழுக்க வாழும் மக்களுக்கு இது கடுமையான துயரத்தை அளிக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. அனால் ஜனநாயகத்துக்காகவும் மனித உரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடும் மனிதாபிமானச் சக்திகளுக்கு வேறு வழியே இருக்கவில்லை. வல்லமைமிகுந்த நூறு அணுகுண்டுகள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு நம் முக்கியநகரங்களை நோக்கி ஏவப்படவுள்ளன என்று ஒருங்கிணைந்த பாதுகாப்பமைப்பின் துணைக்கோள் உளவுகருவிகள் அடையாளம் கண்டன. அந்த ஏவுகணைகள் கிளம்பியதை உணர்ந்த பிறகே நமது தானியங்கிக் கருவிகள் நமது ஏவுகணைகளை கிளம்பச்செய்தன. ஜனநாயகப் பாதுகாப்புக் கூட்டுப்படைகளின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பதினேழு உயரழுத்த, மிதக்கதிர்வீச்சு ஹைட்ரஜன் குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளன. பேரழிவுகளை உருவாக்கியபடி பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த மிகக்கொடுமையான போர் இத்தாக்குதலுடன் முழுமையான முடிவுக்கு வந்தது. எதிரிநிலைகள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் தரப்பில் போரிலீடுபட்ட தேசங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டுவிட்டன. கடந்த பத்தாண்டுகளாக கடுமையான உயிரிழப்பையும் அழிவையும் உருவாக்கிவந்த மாபெரும் உலகப்போர் முடிவுக்குவந்ததன்மூலம் மீண்டும் சமாதான சகவாழ்வுக்கு வழிபிறந்திருப்பதாகவும் இது ஆறுதலுக்குரிய விஷயம் என்றும் கூட்டுநடவடிக்கைத்தலைவர் குறிப்பிட்டார்…. ‘ ‘

‘ ‘ முட்டாள்கள். இறைவனுடன் அவர்கள் போர்செய்கிறார்கள். அழிவுதான் அவர்களுக்கு…. ‘ ‘ தலைவர் சொன்னார்.

‘ ‘இறைவனுக்கு எதிரானவர்களுக்கு ஒருபோதும் வெற்றியும் அமைதியும் இன்பமும் சுவர்க்கமும் இல்லை என்று புனிதநூல் சொல்கிறது ‘ ‘ முதிய மதகுரு சொன்னார்.

ரேடியோவில் எச்சரிக்கைக்கான கருவி மீண்டும் ஒலித்தது ‘ ‘ அறிவிப்பு ! எச்சரிக்கை! உலகம் முழுக்க உள்ள மக்களுக்கு கதிரியக்க எச்சரிக்கை. மரணத்தையும் பிற கடுமையான உடற்சீரழிவுகளையும் உருவாக்கும் கதிரியக்கம் உலகம் முழுக்க பரவியுள்ளது. ஏறத்தாழ பதினைந்து நாட்களுக்குக் இக்கதிரியக்கம் அபாயகரமாக இருக்கக் கூடும். ஆகவே பாதுகாப்பறைகளில்வாழும் அனைவரும் உள்ளேயே வாழும்படிக் கோரப்படுகிறார்கள். நிலத்தடி நீரை மட்டுமே அருந்தவேண்டும். வெளியுலகக் காற்று நேரடியாக சுவாசிக்கப்படலாகாது. வெளியில் உள்ள எப்பொருளும் தீண்டப்படக்கூடாது. வெளியே உள்ள விளைபொருட்கள் முற்றாக தவிர்க்கப்படவேண்டும். உலகின் பல்வேறுநாடுகளில் பாதுகாப்பற்ற வெளிகளில் வாழ்ந்த மக்கள் அழிந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் பூமிமீதுள்ள பாக்டாரியாக்கள் கதிர்வீச்சால் அழிந்துவிட்டமையால் அவர்களின் உடல்கள் அழுக வாய்ப்பில்லை. பலத்த உயிரிழப்பு நிகழ்ந்துவிட்டது என்பது துயரத்துக்குரியதேயாகும். ஆனால் வேறு வழியில்லை. உலகில் முழுமையான சமத்துவ சகவாழ்வும் அமைதியும் நிகழவேண்டுமானால் இந்த சூழ்நிலையை நாம் சந்தித்தே தீரவேண்டும்…. இது தவிர்க்க முடியாத இழப்பு. சமாதானத்துக்காகவும் எதிர்கால நன்மைக்காகவும் நாம் இந்த தியாகத்தைச் செய்தேயாகவேண்டியிருந்தது… ‘ ‘

‘ ‘அந்தக் கதிர்வீச்சுக்கு கற்பூரவாசனை இருக்கிறதா ? ‘ ‘ என்றார் மதகுரு. அனைவரும் திடுக்கிட்டனர்.

‘ ‘அது மென்பட்டுசல்லா போல குளுமையானதாக இருக்கும்….நம் புனித நூல் தவறாகசொல்லாது ‘ ‘ என்றார் கிழவர் மீண்டும். ‘ ‘அதன் பெயர் ஊகாத். இறைவனின் நன்மூச்சு ‘ ‘

இளைஞன் பெருமூச்சுடன் ரேடியோவை திருப்பினான்.

‘ ‘மூடு அதை ‘ ‘ என்றார் தலைவர். ‘ ‘ நாம் இறைவனை பிரார்த்தனைசெய்வோம்… ‘ ‘

அவர்கள் மெளனமாகத் தொழுதனர். பிறகு சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டனர்.

பின்னிரவில் மீண்டும் அவன் ரேடியோவை இயக்கினான். மசாகி மொழியில் ஒரு மதகுருவின் குரல் ஒலித்தது. அவனால் அதை உள்வாங்க முடியவில்லை. பிறகு உலகமொழிகள் அனைத்திலும் அதே அறிவிப்பு மீண்டும் மீண்டும் ஒலித்தது. அதற்குள் அனைவரும் விழித்துக் கொண்டனர். மீண்டும் மசாகி மொழி ‘ ‘ புனித மறை சொல்லிய இறுதிநிற்றல் நாள் வந்துவிட்டது. கைசாமத் ஃபலவா ! கைசாமத் ஃபலவா ! கைசாமத் ஃபலவா! இறைநம்பிக்கையாளர்களே, கற்பூரமணமும் மென்பட்டின் குளுமையும் கொண்ட ஊகாத் வீசுகிறது. கைகளை தூக்கி நம் படைத்தவனை துதித்தபடி நாம் வெளியே இறங்குவோம். வானை நோக்கி அழைத்து அவன் அருளைக்கோருவோம். இனி நம்பிக்கையாளர்கள் எவருமே எஞ்சலாகாது ‘ ‘

‘ ‘ இறைவனுக்கு மகிமை. படைத்தவனே பெரியவன் ‘ ‘ என்று அக்குழு உரக்க வீரிட்டது. ‘ ‘ கிளம்புங்கள்! கிளம்புங்கள்! ‘ ‘ .

இளைஞன் நம்ப முடியாது தவித்தான்.. ‘ ‘ இல்லை! இல்லை! இது…. ‘ ‘ என்று தடுமாரினான் ‘ ‘ இருங்கள் ‘இந்த அறிவிப்பு பொய்யாக இருக்கலாம். சாத்தானின் தூதர்களின் சதியாக இருக்கலாம் ‘ ‘

‘ ‘ அப்படி இருந்தாலும் அது அவர்களுக்கு அழிவே ‘ ‘ மதகுரு சொன்னார் ‘ ‘ இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அழிந்தால் அதன் பின் இப்பூமி ஒருகணம் கூட எஞ்சாது .அது அருமறையில் சொல்லப்பட்ட அழியா வாக்கு… கிளம்புங்கள்… ‘ ‘

‘ ‘நாம் போராடுவோம்…ஆம் . நாம் போராடவேண்டியவர்கள். நாம் தற்கொலைசெய்யக்கூடாது. நாம் போராடுவோம்… ‘ ‘

‘ ‘ இதோபார். திருமறையின் கட்டளைக்குக் கட்டுப்படுவதே நமது போராட்டம் . கிளம்பு ‘ ‘ தலைவர் கிளம்பினார்

‘ ‘ முட்டாள்தனம். இது கதிர்வீச்சு. பதினைந்துநாளில் சரியாகிவிடும்… ‘ ‘

‘ ‘ அப்படியானால் நீ வரவில்லையா ? ‘ ‘ என்றார் மதகுரு

‘ ‘இல்லை. முடியாது. இது முட்டாள்தனம் ‘ ‘

‘ ‘உன்னை நாங்கள் தடுக்கவில்லை. எங்களைப்பொறுத்தவரை மனித ஆயுதங்களால் நாங்கள் இதுவரை நடத்திய புனிதப்போர் முடிந்துவிட்டது. இறைநம்பிக்கையாளனைப்பொறுத்தவரை அவன் வாழ்வின் ஒரே நோக்கம் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரே கடமை இறைமறுப்பாளர்களுடன் போர்புரிவதே… இனி நம்மால் போராட முடியாது. போரிடாமல் நாம் வாழ்வதிலும் பொருள் இல்லை. ஆகவே இனிமேல் செய்வதற்கு ஒன்றுதான். போரை இறைவனே நேரில் நடத்த விட்டுவிட்டு அவன் முன் சரண் அடைவது…. ஆம் வேறு வழி இல்லை. உனக்கும் வேறு வழி இல்லை ‘ ‘

‘ ‘புரியாமல் பேசவேண்டாம்…கதிரியக்கம் சீக்கிரமே முடிந்துவிடும்…சொல்வதைக் கேளுங்கள்… ‘ ‘

‘ ‘இப்போது உலகம் முழுக்க இறைநம்பிக்கையாளர்கள் வெளியே இறங்கி ஊகாத் காற்றை அனுபவித்து சொற்கத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இன்னும் சில மணிநேரத்தில் இறைநம்பிக்கையாளர்கள் முழுமையாக அழிந்துவிடுவார்கள்… நீ மட்டும் எஞ்சி என்ன செய்யப்போகிறாய் ? ஒருவேளை நீமட்டும் எஞ்சினால் உனக்காக இறைவனின் தாக்குதல் தாமதிக்கக் கூடும். நீ உயிர்வாழும் காலம்வரை இறைவன் காத்து நிற்கக் கூடும். ஆறுமாதமோ ஒருவருடமோ ஏன் ஐம்பது வருடமோ…அதைத்தான் நீ விரும்புகிறாயா ? கருணையற்ற லாபவெறியர்கள் அதுவரை தாங்கள் அடைந்தவற்றை சுகித்து வாழ அனுமதிக்கப் போகிறாயா ? ‘ ‘

‘ ‘இதெல்லாமே பைத்தியக்காரத்தனம். இது ஊகாத் அல்ல. கதிரியக்கம்… ‘ ‘

‘ ‘நீ சாத்தானின் மொழியைப் பேசுகிறாய்… ‘ ‘ என்றார் தலைவர். ‘ ‘ இறைவன் உனக்கு நல்வழி காட்டட்டும் . உனக்கு அமைதி உருவாகுக ‘ ‘

அவர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்றனர். அவன் அவர்களை தடுக்க பலவிதமாக கூவி அரற்றினான். பின்பு அழுதபடி முகத்தைப்பொத்திச் சுருண்டுப் படுத்துக் கொண்டான். ஒரு கணம் எழுந்து பின்னால் ஓடினாலென்ன என்று தோன்றியது.ஆனால் அவனால் முடியவில்லை. அவனுக்கு அக்கணமே இனிய ஒளிமிக்க வானமும் பசுமைபரவிய பூமியும் அகக்கண்ணில் எழுந்துஒளள்ளம் விம்மியது. தேம்பித் தேம்பி அழுதான். அப்படியே தூக்கமயக்கத்தில் ஆழ்ந்தான்.

பலவகையான பிரமைகளும் குழம்பிய நினைவுகளும் மனதை நிறைக்க அர்த்தமின்றி அரற்றி அழுதபடி அவன் குகையறைக்குள் விழுந்துக் கிடந்தான். அந்த நெருக்கடியை தவிர்க்க விழைந்த அவன் மனம் இனிய பகற்கனவுகளைக் கற்பனைசெய்துகொண்டது. மென்மையான வெயில்பரவிய பாலைவனக்காடுகளில் அவனும் எட்டு சகோதரர்களும் தந்தையும் மின்னும் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றார்கள். வரையாடுகளை சுமந்துகொண்டு ஊர் திரும்பின்பார்கள். இரவுகளில் ஊரே சேர்ந்தமர்ந்து ஒரே ரொட்டியை நாற்புறமும் பிய்த்து உண்டு ஒரே கோப்பையில் சமாக் குடித்தார்கள். அலாங் பாடலைப் பாடி ஆடினார்கள். அவனுடைய தங்கை தன் இனிய சிறுமுகத்தைவெட்கத்தால் சிவக்கவைத்தபடி அவனிடம் ஏதோ சொன்னாள். அவனது பிரியமான ஒட்டகம் துலீன் தாடையை அசைத்தபடி திரும்பி தன் நிழலை ஆர்வத்துடன் பார்த்து முனகிக் கொண்டது. எங்கோ மயாம்ப் வாத்தியத்தின் இனிய ஓசை. புதிய பாலைக்காற்றின் புழுதிவாசனை… அவனது கிராமம். அங்கு எப்போதுமே வறுமை இருந்தது, ஒருநாளும் ஏற்றதாழ்வு இருந்ததில்லை…

விழித்துக் கொண்டபோது அவன் உடனடியாக நாள்களைக் கணக்கிட ஆரம்பித்தான். பகலிரவுகள் தெரியவில்லை. ரேடியோவை திருப்பியபடியே இருந்தான். திடாரென்று ஒரு நிலையத்தில் அன்றைய தேதி சொன்னார்கள். இன்னும் ஏழு நாட்கள் கதிரியக்கம் இருக்கும்…. ஏழுநாட்கள் ,ஏழுநாட்கள்…. ஏழு பகல்கள், ஏழு இரவுகள்….அதன் பின், அதன் பின், பூமி ! வானம்…! அவ்விரு சொற்களையும் அவன் உடலின் ஒவ்வொரு செல்லும் அறிந்தது . பாலைவனத்தில் மழைபோல அவனது வரண்ட ஆத்மா மீது அச்சொற்கள் பொழிந்தன. பூமி! வானம்…

அவன் அவ்வப்போது சாப்பிட்டான். வெகுநேரம் தூங்கினான். விழிக்கும்போது அறைக்குள் அவர்கள் இருப்பார்கள், எல்லாம் கனவென தெளியும் என்று எண்ணினான். பின் மனமுடைந்து அழுதான்.

ரேடியோ மீண்டும் மீண்டும் அந்த அறிவிப்பை சொல்லிக் கொண்டிருந்தது. அது பதிவுசெய்யப்பட்டு நிரந்தரமாக ஓடவிடப்பட்ட அறிவிப்பு என்று அவன் சிலநாட்கள் கழித்துதான் புரிந்துகொண்டான். ஐந்து நாட்கள். கடவுளே . நெருங்கிவிட்டது. இன்னும் ஐந்து நாட்கள்…

எழுந்து ரேடியோவை திருப்பினான். ஆங்கில உரையாடல் ஒன்றைக் கேட்டான்

‘ ‘…. ஆம். போர் முடிந்துவிட்டது. அவர்கள் எவருமே எஞ்சவில்லை. ஒருவர் கூட . வரிசை வரிசையாக அவர்கள் தங்கள் இறைவனைநோக்கி கைநீட்டிக் கூவியபடி பாதாள அறைகளைவிட்டுவெளியெ வந்து கதிரியக்கத்தை உண்டு அழிந்தார்கள். வெற்றிதான் இல்லையா ? முழுவெற்றி ! கொண்டாடவேண்டியதுதான் இல்லையா ? டாக்டர் சாம், எதற்காக நான் கொண்டாட வேண்டும் ? ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் குடிசைகளில் வாழ்ந்த கோடிக்கணக்கான மக்கள் முற்றாக அழிந்துவிட்டார்கள். புழுக்கூட்டங்கள் போல. கோடிகள். எண்ணிக்கையே அபத்தம். உலக மக்கள்தொகையில் எழுபது சதவீதம் அழிந்துவிட்டது… பூமியின் சுமை குறைந்தது என்று சொல்லும் பொருளியல் நிபுணர்கள் இருக்கக் கூடும்.. . ஆனால் மிருகங்கள் பூச்சிகள் நுண்ணிய உயிர்கள்… அவை இல்லாமல் உயிர்வாழ்வே நடக்க முடியாதே.. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏறத்தாழ எல்லா மக்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். கீழை நாடுகளில் அங்கேவாழ்ந்த உயர்குடிகள் மற்றும் அதிகாரவற்கம் பாதாள அறைகளில் பாதுகாப்பாக இருக்கிறது. அவர்கள் இதுநாள் வரை ஐரோப்பாவுக்கு விசுவாசமாக இருந்தார்கள். பதிலுக்கு பலமான அறைகளைக் கட்டித்தந்து அவர்களுக்கு நாம் கைம்மாறு செய்தோம்… இதுவரை உலகை ஆண்டவர்கள் இப்போது ஆளப்பட எவரும் இல்லாமல் எஞ்சியிருக்கிறார்கள். பாதாள அறைகளில் கதிரியக்கம் விலகும் நாளை எதிர்நோக்கியிருக்கிறார்கள். அந்நாள் ஒரு புதிய கிறிஸ்துமஸாக இருக்கக் கூடும்… ஆனால் டாக்டர் சாம் இனிமேல் என்ன நடக்கும் ? பூமியின் உயிர்ச்சமநிலை என்ன ஆகும் ? இந்த கதிரியக்கக் கொந்தளிப்பின் பின் விளைவுகள் என்ன ?ரசாயனமாறுதல்கள் எப்படிப்பட்டவை ? உண்மையான பேரழிவு இனிமேல்தான்… ஆம், இப்போதுதான் அழிவே தொடங்கியிருக்கிறது… ‘ ‘

‘ ‘ நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் டாக்டர் விஷ்ணு. போர் என்றால் அழிவுகள் இருக்கக் கூடும். அவை நம் நரம்புகளைத்தாக்கக் கூடும்… ‘ ‘

‘ ‘இருக்கமால். இன்றைய உலகம் கோரும் எஃகாலான நரம்புகள் என்னிடம் இல்லை என்றே நானும் எண்ணுகிறேன். என்னைபோன்ற அறிவியலாளர்களுக்கு இன்று குரலே இல்லை. இதேபோல ரேடியோக்களில் புலம்புவதுடன் அவர்கள் நின்றுவிட வேண்டியதுதான். டாக்டர் சாம், ‘நாம் பகிர்ந்த ரொட்டி ரொட்டியை விட மேலானது ‘– கான்ராட் ஐக்கின் எழுதிய கவிதைவரி. எனக்கு மிக மிகப் பிடித்தவரி அது. இந்த பூமி பகிரப்படுகையில் இனிதாகும் ஒரு ரொட்டி . ஆனால் பகிரப்படாதபோது அது கொடும் விஷம். அரை நூற்றாண்டாக நாம் அடக்கிச்சுரண்டி வாழும் விதிகளை உண்டுபண்ணி இதை அழித்தோம்…ஆம் அழித்துவிட்டோம்…முற்றாக ‘ ‘

‘ ‘என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள் ? ‘ ‘

‘ ‘பூமியின் நுண்ணுயிர்கள் பல அழிந்துவிட்டன. ஆனால் பூமிக்கு அடியில் இன்னும் ஏராளமான நுண்ணுயிர்கள் உள்ளன .அவை பூமிக்குமேல் வந்து பல்கிப்பெருகலாம். காற்றுவெளிக்கு மேலே உள்ள நுண்ணியிர்கள் பூமிக்குவந்து பல்கிப்பெருகலாம். அவை உருவாக்கும் நோய்களை இப்போது கற்பனைசெய்வதே சிரமம். வெளிப்புலத்தின் கதிர்வீச்சு சமநிலை மாறுபாட்டால் பலவகையான சக்திகொந்தளிப்புகள் நிகழலாம்… ‘ ‘

அவன் பித்துபிடித்த கண்களுடன் அவ்வறையின் முகட்டுவளையை நோக்கி அமர்ந்திருந்தான். மெல்ல அவனுக்கு காலஇட உணர்வு முற்றாக அழிந்துவிட்டது. அவன் மனம் தன்னை தக்கவைத்துக் கொள்வதற்காக அந்த தற்காலிக மனப்பிரமையை உருவாக்கிக் கொண்டது. அவன் இறந்தகாலத்தில் தன் பாலைவனக்கிராமத்தில் உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டிருந்தான்.

பிறகு அவன் விழித்துக் கொண்டபோது வெகுநேரம் ஏதும் புரியவில்லை. பின்பு பாய்ந்து ரேடியோவை எடுத்தான். அதை வெறிகொண்டவன் போலத் திருப்பினான். இன்னும் எத்தனை நாள் … வானமே பூமியே…

இசையும் உற்சாகக் குரல்களும் எல்லா புள்ளிகளிலிருந்தும் கொப்பளிக்கக் கேட்டான். ஐரோப்பிய மொழிகளெல்லாம் குதூகலித்துக் கொண்டிருந்தன. லட்சக்கணக்கான மக்களின் களியாட்ட ஒலிகள்…

‘ ‘ ….நாடெங்கும் மக்கள் ஒரு கொடும்கனவின் முடிவை கொண்டாடுகிறார்கள். இன்று எவருமே தங்கள் வீடுகளுக்குள் இல்லை. நகரங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று தோன்றுகிறது. தெருக்களில் மதுவெள்ளம் ஓடுகிறது. மக்கள் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக நடனமிட்டபடி எங்கும் சுற்றிவருகிறார்கள். கதிரியக்கம் முற்றகா இல்லை என்பதைக் காட்டும் வண்ணமாக நடிகையர் பலர் தெருக்களின் நிர்வாணமாக வந்து நடனமிட்டனர். அதிபர் இரண்டுமூறை மக்களிடையே உரையாற்றினார். தன் வரலாற்றுச்சிறப்பு மிக்க பேருரையில் இழப்புகளை நாம் மறக்கலாகாது என்றார் அவர். அவை கசப்பானவை ஆனால் தவிர்க்க இயலாதவை. பூமி முழுக்க சமாதானமும் சமத்துவமும் உருவாக இப்போர் தேவையாயிற்று. இதோ போர் முடிந்து நாம் எஞ்சியிருக்கிறோம். நாம் வென்றிருக்கிறோம். வெற்றியைக்காண நாம் இருக்கவேண்டும் என்பது இறைவனின் ஆணை. விண்ணகங்களை ஆளும் பிதாவின் ஆணையை எந்த சக்தியால் வெல்ல முடியும் ? நாம் வென்றோம். இரவு என்றால் விடிவும் உண்டு என்பதை நாம் கண்டோம். இந்த நாளை விடியல்நாள் என்று கொண்டாடுவோம். இது சமாதானத்துக்கான நாள். ஒற்றுமைக்கான நாள். இனி இதுவே உலகின் முதல்பெரும் திருவிழா நாள் என்றார். கதிர்வீச்சில் உலகின் உயிர்ச்சமநிலையே மாறிவிட்டது என்றும் பலவகையான அழிவுகள் காத்திருக்கின்றன என்றும் சில அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். பூமியே அழியக்கூடும் என்றார்கள். அது அறிவியல். நம் கடவுளின் ஆசியை நாடுவோம். தேவனாலே கூடாத்து என்று ஏதுமில்லை என்று நம் புனித நூல் கூறுகிறது. அவரது முன் நாம் மண்டியிடுவோம். அவர் அருளால் சோதனைகளை கடந்துசெல்வோம். ஒருபோதும் தோற்கமாட்டோம்.ஏனெனில் வெற்றிக்காக தேர்வுசெய்யப்பட்டவர்கள் நாம் என்றார் அதிபர்… ‘ ‘

ரேடியோவில் பேரிசை மலையூற்றில் இருந்து நீர் போல பீச்சியடித்தது. ப்ல்லாயிரம் மக்களின் உற்சாகக் கூக்குரல்கள். ஆரவாரங்கள். இசை. அதை திருப்பி திருப்பி கேட்டான். எல்லா புள்ளிகளும் ஒரேபோல உற்சாகத்தில் அதிர்ந்துகொண்டிருந்தன.

அவன் கண்ணீருடன் தலை குனிந்து அமர்ந்திருந்தான். திடாரென்று எழுந்து ‘ ‘நானா ? ‘ ‘ என்றான். ‘ ‘ ஒருவேளை … ‘ ‘

பின்பு ஆவேசத்துடன் ஓடிகதவுகளைத் திறந்து வெளியே வந்தான். வெளியே மெல்லிய இருள் இருந்தது. கிழக்குத்திசை இளஞ்செம்மையுடன் சுடர்விட்டது. அதைப்பார்த்தபடி அவன் உடல்நடுங்க நின்றான். பின்பு ஆவேசத்துடன் தன் கைத்துப்பாக்கியை எடுத்தான். வாய்க்குள் நுழைத்து ‘ ‘ கருணைக்கடலான இறைவா! ‘ ‘ என்று வீரிட்டபடி விசையை இழுத்தான்.

http://thoguppukal.com/2012/01/24/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.