Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியற் கட்சிகளிடையே பொது உடன்பாடு: சிவில் சமூகத்தின் முயற்சிகளும் தமிழரசுக் கட்சியின் நேரமின்மையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியற் கட்சிகளிடையே பொது உடன்பாடு: சிவில் சமூகத்தின் முயற்சிகளும் தமிழரசுக் கட்சியின் நேரமின்மையும்

முத்துக்குமார்
 

 

அண்மைக்காலமாக தமிழ் அரசியலில் மூன்று முக்கிய விடயங்கள் பேசுபொருளாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம், தமிழ் சிவில் சமூகத்தின் தமிழ் அரசியற் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முயற்சிகள். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அலுவலகத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டமை என்பனவே அம் மூன்றுமாகும்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் தற்போது உறுதியாகிவிட்டது. ஜனவரி 29ம் திகதி அவர்கள் செல்லவிருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசாங்கத்திற்கு ஜெனிவா நெருக்கடிகள் வருகின்ற போதெல்லாம் சம்பந்தன் ஓடிச்சென்று அரசாங்கத்தைப் பாதுகாப்பது வழக்கம். தென்னாபிரிக்க விடயமும் அதன் அடிப்படையிலானதா என்ற சந்தேகம் தற்போது பலரிடையே எழுந்துள்ளது. நீண்டகாலம் இந்த விஜயம் பற்றி பேசப்பட்டபோதும் ஜெனிவா நெருக்கடி ஆரம்பித்த நேரத்தில் இந்த விஜயம் இடம்பெறுவது இயல்பாகவே சந்தேகத்தைக் கிழப்பிவிட்டிருக்கின்றது.

 

இந்தத் தடவை ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு பொறி இருப்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் நடைமுறைப்படுத்துவது பற்றி மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதனால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கின்றது. அதைவிட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவிநீக்கப் பிரச்சினையும் இந்தத் தடவை போனஸாக கூடியுள்ளது. இந்த போனஸ் விடயம் சிலவேளைகளில் நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகள் நடைமுறைப்படுத்துகின்ற விடயத்தின் கனதியையும் குறைக்கப் பார்க்கும். போர்க்குற்றம், நல்லிணக்கம் என்பவற்றின் கனதிகளைக் குறைப்பதற்காகத்தான் அரசாங்கம் புதிது புதிதாக பிரதம நீதியரசர் பிரச்சினை, முஸ்லிம்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகள், சிறீதரன் அலுவலக விவகாரம் என திசைதிருப்பி விடுகின்றதோ என சந்தேகிக்கத் தோன்றுகின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சில் பெரிதாக எதுவுமில்லை என்பது வேறுகதை.

 

ஜெனிவா நெருக்கடியை தணிக்கச் செய்யும் ஆற்றல் இந்தியாவிற்கே உள்ளது. இதனால்தான் வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்திருக்கின்றார். இந்திய நலனைப்பேணும் வகையில் பல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் ஊக்குவிப்பும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஜயத்திற்கு காரணமாக இருக்கலாம். கூட்டமைப்பு சில மாதங்களுக்கு முன்னர் அல்லது ஜெனிவா கூட்டத்திற்கு பின்னர் பயணத்தை மேற்கொண்டிருந்தால் சந்தேகங்கள் பெரிதாக எழுந்திருக்காது. ஜெனிவா கூட்டம் ஆரம்பமாகும் நிலையில் பயணத்தை மேற்கொள்வதுதான் சந்தேகத்தை உருவாக்குகின்றது. ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னர் அரசாங்கப் பிரதிநிதிகள் தென்னாபிரிக்கா சென்று வந்திருந்தனர். அக் காலத்திலிருந்தே கூட்டமைப்பு தென்னாபிரிக்கா செல்லும் என்ற பேச்சு அடிபட்டது. அரசாங்கப் பிரதிநிதிகள் சென்று வந்தவுடன் கூட்டமைப்பினரும் சென்றிருந்தால் இந்த முயற்சியை உண்மையானதாகக் கருதியிருக்கலாம்.

 

கூட்டமைப்பினர் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பயணம் செய்வதாகக் கூறியிருந்தனர். ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் உண்மையை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஒரு "வசதிப்படுத்தினர்" பாத்திரத்தை தென்னாபிக்கா வகிக்க முயல்வதாக அவர் கூறியிருக்கிறார். தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தமிழ்மக்கள் தொடர்பாக சற்று அனுதாபங்களைக் கொண்டுள்ள போதிலும் தென்னாபிரிக்க அரசாங்கம் - அரசுடனான தொடர்பு என்றவகையிலும், இந்தியாவின் தூண்டுதலினாலும் இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாகவே உள்ளது. அது இலங்கைக்குச் சார்பாக ஜெனிவாவில் ஒரு தடவை வாக்களித்தும் இருக்கின்றது.

 

அரசாங்கம் கூட்டமைப்பின் இந்தப் பயணத்தை ஜெனிவா கூட்டத்தொடரில் நிச்சயம் பயன்படுத்தும். இணக்க முயற்சிகள் தொடர்கின்றன என்ற தோற்றத்தை அது கொடுக்கப்பார்க்கும். ஆனால் உண்மைநிலை இதற்கு மாறானது. அரசாங்கத்திற்கு அரசியல்தீர்வை முன்வைக்கும் எண்ணம் அறவே கிடையாது. உண்மையில் அந்த எண்ணம் இருந்திருந்தால் தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியான பச்சை ஆக்கிரமிப்புக்களை அது நிறுத்தியிருக்கும். தமிழ்மக்களின் மத்தியில் இயல்பு நிலையினைக் கொண்டு வருவதில் அதிகம் ஒத்துழைத்திருக்கும்.

 

கூட்டமைப்பு இந்நேரத்தில் பயணம் செய்யவேண்டியது உண்மையில் தென்னாபிரிக்காவுக்கு அல்ல. மாறாக ஜெனிவாவிற்கே! அங்கு வருகின்ற நாடுகளின் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வமற்ற வகையில் தமிழ்மக்களின் இன்றைய நிலையினைத் தெளிவுபடுத்தியிருக்ககூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும். ஆனால் கூட்டமைப்பின் தலைமை இவற்றிற்குத் தயாராக இருக்கவில்லை. அண்மையில் அயர்லாந்து பாராளுமன்றக் குழுவினர் சம்பந்தனைச் சந்தித்தபோது அரசாங்கம் தமிழர் தாயகத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்துவருகின்றது எனக்கூறி பாராட்டியிருக்கின்றார். தமிழ்மக்களுக்கு இப்போதுள்ள பிரச்சினை புனர்வாழ்வுதான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் கொடுத்தால் போதும் என்றும் கூறியிருக்கின்றார். தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பச்சை ஆக்கிரமிப்புகள் பற்றியோ, அரசியல் தீர்வில் அரசாங்கம் அக்கறை இல்லாது இருக்கின்றது என்பது பற்றியோ சம்பந்தன் வாயே திறக்கவில்லை.

 

அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளனர். அங்கு தமிழ்மக்களுக்கு குரல்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, 'நீங்கள் உண்மைநிலை தெரியாமல் பேசக்கூடாது' என்றும் கூறியிருக்கின்றனர். இங்குள்ளவர்களின் கருத்துக்களைக் கேட்பதைவிட இலங்கையில் தமிழ்மக்களின் பிரதிநிதியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம்தான் உண்மையான தகவல்களை நீங்கள் கேட்டறியவேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். புலம்பெயர் இணையத் தளங்கள் சம்பந்தனின் இக்கருத்தை கடுமையாக விமர்சித்திருக்கின்றன. ஆனால் இலங்கைத் தமிழ் ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் எவற்றையும் காணோம்.

 

இந்தச் சீத்துவத்தில் மட்டக்களப்பில் சம்பந்தன் அகிம்சைப் போராட்டங்களை நடாத்தப் போவதாக அறைகூவல் விடுத்திருக்கின்றார். போருக்குப் பின் நடைபெற்ற எத்தனை போராட்டங்களில் சம்பந்தனும், சுமந்திரனும் கலந்துகொண்டிருக்கின்றனர்?  முறிகண்டிப் போராட்டத்தை தவிர வேறு எவற்றிலும் கலந்து கொள்ளவில்லை. சம்பந்தன் நோய்காரர் எனக் காரணம் கூறலாம். சுமந்திரன் ஏன் கலந்து கொள்ளவில்லை. வழக்குகள் அதிகம் இருந்ததா? பகுதிநேரத்தில் பகுதி நேரம்தான் இவர் அரசியல் செய்வதென்றால் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மிதவாத அமைப்பு என பலர் கூறுகின்றனர். உண்மையில் மிதவாத அமைப்புக்கான தகுதிகூட கூட்டமைப்புக்கு இருக்கின்றது என்பது கேள்விக்குறியே!

 

இரண்டாவது விடயம் தமிழ்ச் சிவில் சமூகத்தின் தமிழ் அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முயற்சிகள். இது தோல்வியில் முடிந்திருக்கின்றது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் இதற்கான முயற்சிகளை செய்திருந்தார். முதலில் ஜனவரி 19ம் திகதி சந்திப்பதற்கு கேட்கப்பட்டது. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளும் இதற்கு உடன்பட்டபோது, தமிழரசுக்கட்சி தனக்கு நேரமில்லை எனக் கூறியிருக்கின்றது. சிவில் சமூகம் வேறு மூன்று திகதிகளைக் கொடுத்தபோதும் தமிழரசுக்கட்சி அதற்கு பதிலளிக்கவில்லை. நேரமில்லை என்பது சாட்டுக்குக் கூறப்பட்டதே தவிர தமிழரசுக் கட்சி அந்தப் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்பதே உண்மையாகும். தமது தனித்த ஓட்டத்திற்கு இவை தடையாகிவிடும் என்பதே இதற்கு காரணமாகும். இது விடயத்தில் தமிழரசுக் கட்சியை மட்டும் முதன்மைப்படுத்துவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்கு சமனாகும் என்ற ஆனந்த சங்கரியின் குற்றச்சாட்டு ஒருவகையில் உண்மையானது என்றே கூறவேண்டும்.

 

தமிழ் சிவில் சமூகத்தினர் அனைத்துக்கட்சிகளும் ஏற்கக்கூடிய பொதுக் கொள்கையையும், பொது வேலைத்திட்டத்தையும் உருவாக்குவதனையே இது விடயத்தில் நோக்கமாகக் கொண்டிருந்தனர். தமிழரசுக் கட்சிக்கு இது உவப்பானதல்ல. தமிழரசுக் கட்சி இதுவிடயத்தில் தொடர்ச்சியாக முரண்டுபிடித்ததால் ஏனைய கட்சிகள் பொதுக்கொள்கையையும், பொது வேலைத்திட்டத்தையும் உருவாக்கி செயற்படுதல் தவிர்க்கமுடியாததாக இருக்கும். இதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துவதற்கு தமிழரசுக்கட்சிக்கு எந்த அருகதையும் இல்லாமல் போய்விடும்.

 

புலம்பெயர் சக்திகள் தாயகம், புலம், தமிழகம் என்பவற்றில் செயற்படும் சக்திகளை ஒன்றிணைத்து பொது வேலைத்திட்டத்தை நகர்த்துவதற்கு முயன்று வருகின்றனர். தமிழ்த் தேசிய சபை ஒன்றினை உருவாக்குவதும் அவர்களது நோக்கமாக உள்ளது. இது தொடர்பாக விரைவில் ஒரு மாநாடும் கூட்டப்பட இருக்கின்றது. இந்த முயற்சிகளுக்கெல்லாம் தடையாக இருப்பது தமிழரசுக் கட்சியே.

 

தேசிய இனஒடுக்குமுறை என்பது அத்தேசிய இனத்திற்கு வெளியில் இருந்துவரும் ஒடுக்குமுறையாகும். தேசிய இனத்திலுள்ள அனைத்து சக்திகளையும் கொள்கை ரீதியான ஒரு ஐக்கிய முன்னணியின் கீழ் ஒன்று திரட்டிச்செயற்படும்போதே அதன் விடுதலையைச் சாத்தியமாக்க முடியும். இது ஒரு பொதுவிதி. இப் பொதுவிதிக்கு உடன்படாதவர்கள் தேசிய இனத்தின் விடுதலையை விரும்பாதவர்கள் என்பதே அர்த்தமாகும். இங்கு கொள்கை ரீதியான ஐக்கிய முன்னணியைக் குறிப்பிடுகின்றேனே ஒழிய வெறும் தேர்தல் கூட்டைக் குறிப்பிடவில்லை. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேர்தல் கூட்டாகவே உள்ளது. இதனை ஒரு கொள்கை ரீதியான ஐக்கிய முன்னணியாக வளரவிடாமல் தடுப்பது தமிழரசுக் கட்சியே! இது ஒரு கொள்கை ரீதியான ஐக்கிய முன்னணியாக இருந்தால் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அதில் இணைந்து செயற்படுவதில் எந்த சங்கடங்களும் இருக்கப்போவதில்லை.

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சமஸ்டி ஆட்சி முறைக்கு எதிரானவர்களல்ல. ஆனால் இந்தச் சமஸ்டி ஆட்சிமுறை தமிழ்மக்களை ஒரு தேசமாக அங்கீகரித்து உருவாக்கப்படல் வேண்டும் என்றே அவர்கள் கூறிவருகின்றனர். இக் கொள்கை நிலைப்பாடு தவறானதல்ல. சில ஊடகங்கள் அதனை தவறாக நினைத்து கருத்துக்களைக் கூற முற்படுகின்றன. அவை யதார்த்தமற்றது எனக் கூறப் பார்க்கின்றன. அரசியல் அறிஞர்கள் எனத் தம்மைக் கருதிக் கொள்கின்ற சிலரும் இக்கருத்துக்களை முன்வைக்கின்றனர். அவர்களது ஓரு நாடு இரு தேசங்கள் என்பதை இரு நாடுகள் ஒரு தேசம் என்று கூட பிரச்சாரப்படுத்துகின்றனர். தேசம் என்ற பதம் அண்மைக் காலத்தில் எழுச்சியடைந்தது. 'இறைமை கொண்டவர்கள்', 'தங்களைத் தாங்களே ஆளும் தகுதி பெற்றவர்கள்' என்பதே இதன் அர்த்தமாகும். இந்தச் சக்திகள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் தமிழ்மக்கள் ஒரு தேசமாக இருக்கின்றனர் என்பதே உண்மை நிலையாகும். அதனால்தான் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி வாகை சூடக் கூடியதாக உள்ளது. தேச எதிர்ப்புச் சக்திகளினால் பெரியளவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவ முடியவில்லை.

 

எனது முன்னைய கட்டுரைகளில் கூறியது போல, இன்று தமிழ் மக்களுக்கு தேவையானது தேர்தல்களில் கூத்தாடும் அரசியல் கட்சியல்ல. மாறாக தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் சர்வதேசம் தழுவிய வகையில் முன்னெடுக்கக் கூடிய தேசிய அரசியல் இயக்கமே. அந்த இயக்கம் உருவானால் தமது 'ஜொலி' அரசியலுக்கு இடமில்லாமல் போய்விடும் என்பதனாலேயே தமிழரசுக்கட்சி அதனைத் தவிர்க்க முனைந்தது. அது மேற்குலகத்திற்கும், இந்தியாவிற்கும் குற்றேவல் செய்யும் ஒரு அமைப்பாகவே தன்னை வைத்திருக்க முயல்கின்றது.

 

மூன்றாவது விடயம், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அலுவலக விவகாரமாகும். இந்த விவகாரத்தில் மிகவும் சோகமான விடயம் சிறீதரன் தனித்து விடப்பட்டமையாகும். அவரது அலுவலகத்தில் படையினரின் அத்துமீறலை மனோ கணேசனைத் தவிர கூட்டமைப்பின் தலைமையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ கண்டிக்க முன்வரவில்லை. சுமந்திரன் மட்டும் பாராளுமன்றத்தில் இதுபற்றிப் பேசியிருக்கின்றார். சிறீதரனின் செயற்பாடுகள் அவர்களது 'ஜொலி' அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடும். அதனால் எல்லோரும் சேர்நது சிறீதரனை பழிவாங்க முற்பட்டிருக்கின்றார்கள்.

 

சிறீதரன் கிளிநொச்சியில் அலுவலகம் அமைத்து வன்னியில் நடைபெறுகின்ற இராணுவ அத்துமீறல்களை வெளிப்படுத்த முற்பட்டிருக்கின்றார். போராட்டங்களை நடாத்த முற்பட்டிருக்கின்றார். இது இராணுவத்தினரின் இராணுவ நிர்வாகத்திற்கு இடைஞ்சலான ஒன்றாகும். அதனாலேயே வெடிபொருட்கள் அலுவலகத்தில் வைத்திருந்ததாகக் கூறி இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார்.

 

இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கால்களில் தடக்குப்படுகின்ற வடபிரதேசத்தில் இப்போதைக்கு ஆயுதப் போராட்டம் பற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாது. அதைவிட தமிழ்த் தேசிய அரசியல் சர்வதேச மட்டத்திற்கு சென்ற நிலையில் ஆயுதப்போராட்டம் இன்று முதன்மையானதுமல்ல. இது இராணுத்தினருக்கும் நன்றாகத் தெரியும். இராணுவத்தினருடைய இலக்கு எல்லாம் ஒரு தேசிய அரசியல் இயக்கம் வளரவிடாமல் தடுப்பதே! தேசிய அரசியல் இயக்கம் பற்றி சம்பந்தன் தலைமைக்கும் அக்கறை இல்லாததினால் சிறீதரன் மீதான நடவடிக்கைகளை அவர்களும் மௌனமாக வரவேற்றிருக்கக்கூடும்.

 

இராணுவத்தினரின் இந் நடவடிக்கைகளுக்கு சிறீதரனும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறார். யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை இறுதியில் குழப்பியடித்தவர் இவரே. தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அதற்கு வெள்ளைப்பூச்சு அடிப்பதற்காகவும், தன்னிச்சையாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். யாழ் பல்கலைக்கழக மாணவர் விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பினரும் இணைந்து உருவாக்கப்பட்ட 'மாணவர்களை விடுவிக்கும் குழுவினையும்' புறக்கணிப்புச் செய்தார். அந்தக் குழுவினை வளர்த்திருந்தால் மாணவர்களுக்காக தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்தியிருக்க முடியும். சிறீதரன் முகம் கொடுக்கும் நெருக்கடிக்கு ஒரு கூட்டுக்குரலையும் உரத்து எழுப்பியிருக்கமுடியும். எல்லாவற்றையும் போட்டுடைத்து இன்று சிறீதரன் தனிமரமாகி நிற்கிறார்.

 

சிறீதரன் தமிழ்த்தேசிய அரசியலுக்காக நேர்மையாக உழைப்பதில் அக்கறை கொண்டிருப்பின் அவர்இருக்கவேண்டிய இடம் தமிழரசுக்கட்சியல்ல.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=82349391-a9b2-4821-87b9-cae48776ea35

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.