Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பிக்களை தாக்க முயற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பிக்களை

நாடாளுமன்றுக்குள் தாக்க முயற்சி!

ஆளுந்தரப்பினர் ஆவேசம்

சபையில் நேற்று அமளிதுமளி

அரச படைகள் மற்றும் துணை ஆயுதக் குழுக்களினால் வடக்கு கிழக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை ஆட்சேபித்து நேற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பமுற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆளுங்கட்சியி னரால் தாக்கப்படும் நிலைமை ஏற்பட்டது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை அறிந்து சபை நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தமையால், ஏற்படவிருந்த பெரும் விபரீதமொன்று தவிர்க்கப்பட்டது.

நாடாளுமன்றம் சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்குபண்டார தலைமையில் நேற்றுக்காலை கூடியது. கெப்பிட்டிக்கொல் லாவவில் கிளைமோர் தாக்குதலில் பலியான மக்கள் தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை சபையில் விடுத்துப் பேசினார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பி னருமான விமல் வீரவன்ஸ.

கெப்பிட்டிக்கொல்லாவவில் பலியான மக்களுக்கு சபையில் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்படவேண்டும் என்றும் விமல் வீரவன்ஸ தனது உரையில் கேட்டுக்கொண்டார். இதற்கமைய சபையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்வின் பின்னர் எழுந்து நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கெப்பிட்டிக்கொல்லாவவில் இடம்பெற்றதை விட குரூர மான கொலைகள் மன்னாரிலும், ஏனைய இடங்களிலும் இடம்பெற்றன எனவும், இவற் றில் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் நாடாளு மன்றத்தில் அஞ்சலி செலுத்தப்படவேண்டும் என்றும் ஒருசேர குரல் எழுப்பினர்.

இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபை நடுவில் நடந்து வந்து சபாநாயகரிடம் நீதி கேட்டுக் கோஷமிட்டனர். அப்போது ஆளுங்கட்சியிலிருந்து வந்த பிரதி யமைச்சர்களான ரோஹித்த அபேகுணவர்த் தன, மஹிந்த அமரவீர உட்பட்ட பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வாய்த்தர்க் கத்தில் ஈடுபட்டனர். வாய்த்தர்க்கம் முற்றிய தால் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. தமிழ் எம். பிக்களுக்கு ஆதரவு தெரிவித்து சபையின் நடுவில் வந்த ஐ.தே.கட்சி எம்.பி.யான மகேஸ் வரன் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு ஜே.வி.பி. உறுப்பினர்கள் சிலர் முயன்றனர்.

இதனால், சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. புத்தகங்களும், காகிதாதிகளும் சபையில் பறந்தன. ஆத்திர மிகுதியில் மகேஸ் வரன் எம்.பி. கையிலிருந்த புத்தகம் ஒன்றை வீசியதில் எதிர்க்கட்சியின் முன்வரிசை ஆசனத்திலிருந்த சில கண்ணாடிக் குவளை கள் சிதறின. நிலைமை மோசமடைவதைத் தடுப்பதற்காக சபாநாயகர் காலை 10.30 மணிக்கு சபையை 5 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார்.

இதன் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதன்போதும் நீண்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதால் சபை அலுவல்கள் 15 நிமிடங்களின் பின்னரே ஆரம்பமாகின.

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் தமிழ்மக்களுக்கெதிரான சம்பவங்கள் குறித்து விவாதிக்க சபையில் இடமளிப்பதெனக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டதால், சபை மீண்டும் கூடிய பின்னர் அமைதி நிலவியது.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் எம்.பியை கடுமையாகத் தாக்கினர்

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தின்போது தாம் கடுமை யாகத் தாக்கப்பட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியான செ. கஜேந்திரன் "உதயன்'இற்குத் தெரிவித்தார்.

நேற்றைய சம்பவம் குறித்து கஜேந்திரன் எம்.பி. கூறியதாவது:

""கெப்பிட்டிக்கொல்லாவையில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டமைக்கு ஜே.வி.பியி னர், சபையில் மென அஞ்சலி செலுத்தினர். நாம் அதைக் குழப்பவில்லை. சிங்களவர் கள் கொல்லப்படுகின்றபோது மட்டும் இவ்வாறு செய்கிறீர்கள். தமிழ் மக்கள் பேசாலை, வங்காலை ஆகிய இடங்களில் அரச படையினரால் கொல்லப்பட்டனர். இதனை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் எனக் கூறி சபையில் நாம் ஆர்ப்பாட்டம் செய்தோம்.

அப்போது அரச தரப்பினரும், ஜே.வி.பியினரும் பாய்ந்து வந்து என்னைத் தாக்கினர். என்னோடு சேர்த்து எமது ஏனைய எம்.பிக்களை யும் தாக்கினர்.

ஜே.வி.பியினர் மிகவும் ஆக்ரோசமாகக் காணப்பட்டனர். என்றுமில்லாத ஒரு வெறி அவர்கள் முகத் தில் காணப்பட்டது.

நாட்டை வழிநடத்த வேண்டிய எம்.பிக்களும், அமைச்சர்களும் இவ்வாறு வெறித்தனமாகச் செயற்பட்டால் அரச படையினர் வெறிகொண்டு செயற்பட மாட்டார்கள் என்று சொல்ல முடியாது.''

இப்படி அவர் கூறினார்.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.- த.தே.கூ.. மோதல்

சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழ் மக்களுக்கு சிறிலங்கா நாடாளுமன்றில் இரங்கல் தெரிவிக்காதமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது.

சபாநாயகர் லொக்கு பண்டார அனுமதியுடன் பேசிய ஜே.வி.பி. பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச, கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் குறித்து சிறப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம் என்றும் சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதன் பின்னர் கெப்பிட்டிக்கொல்லாவவில் உயிரிழந்தோருக்கு ஒரு நிமிட நேர இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அனைவரும் எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர்.

அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ந.ரவிராஜ், செ.கஜேந்திரன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் வடக்கு-கிழக்கில் படுகொலை செய்யப்படும் தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்காமைக்கு கடும் எதிர்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து அவை நடுவிற்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

நடராஜா ரவிராஜ், கஜேந்திரன், ஈழவேந்தன் ஆகிய உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவை நடுவிற்கு வந்த பிரதியமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, ஜயதிஸ்ஸ ரணவீர, ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கேட்டனர்.

இதன்போது இருசாராருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜே.வி.பி. யின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த விஜேசேகர, ஜயந்த சமரவீர, திமுது அபேகோன் மற்றும் அனுருத்த பொல்கம்பொல ஆகியோர் அந்த இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபடவே வாக்கு வாதம் முற்றியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தி.மகேஸ்வரனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீசிய புத்தகம் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் மீது படவே இருதரப்பிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் சில உறுப்பினர்கள் இந்த அடிதடியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மேசையில் இருந்த மின்குமிழ் ஒன்றும் வெடித்துச் சிதறியது.

இந்த குழப்பங்களையடுத்து சபாநாயகர் டபிள்யு. ஜே.எம்.லொக்கு பண்டார நாடாளுமன்றத்தை 30 நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைத்தார்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி மல்யுத்த களமாகியது சபா மண்டபம்

தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. எம்.பி.க்கள் முட்டிமோதிச் சண்டை

கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்கள பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட அதேசமயம் வட, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவில்லையென்ற விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் ஜே.வி.பி. எம்.பி.க்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் முட்டி மோதிக் கொண்டதால் சபை சிறிது நேரம் மல்யுத்தக் களம் போன்று காட்சியளித்ததுடன் அலுவல்களை முன்னெடுக்க முடியாமல் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார பகல் 10.30 மணி வரை சபை அமர்வை இடைநிறுத்தி வைத்தார்.

கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தில் கொல்லப்பட்டோருக்கு சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜ் கிளப்பிய ஒழுங்குப் பிரச்சினையையடுத்து தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் ஐ.தே.க. எம்.பி.யான மகேஸ்வரனையும் அரச தரப்பினரும் ஜே.வி.பி.யினரும் இணைந்து தாக்கியதையடுத்து சபை பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.

தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களான கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், ரவிராஜ், ஈழவேந்தன் மற்றும் ஐ.தே.க. எம்.பி.யான மகேஸ்வரன் ஆகியோர் ஜே.வி.பி. உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, நிகால் கலப்பதி, ஜயந்த விஜேசேகர, அநுரகுமார திசாநாயக்க ஆகியோரும் அரச தரப்பில் பிரதியமைச்சர்கள் ரோஹித அபேவர்தன, சரத் குணரட்ண ஆகியோரும் தாக்க, ஐம்பதுக்கு மேற்பட்ட அரச மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் தமிழ்க் கூட்டமைப்பினரை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டதால் சபை அல்லோலகல்லோலப்பட்டது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. இதன்பின் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களையடுத்து விமல் வீரவன்ஸ கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றினார்.

ஒரு நிமிட மௌன அஞ்சலி

கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலைகளை கடுமையாகக் கண்டித்து உரையாற்றிய விமல் வீரவன்ஸ அதில் கொல்லப்பட்ட மக்களுக்கு சபையில் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டுமென சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு சபாநாயகர் சபையின் அனுமதியைக் கோரவே அரச, எதிர்த்தரப்பு பிரதம கொரடாக்கள் சபையில் மௌன அஞ்சலி செலுத்த இணக்கம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அரசதரப்பு, ஐ.தே.க., ஜே.வி.பி., ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, இ.தொ.கா., தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் கலரியில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். ஆனால், தமிழ்க் கூட்டமைப்பில் செல்வராஜா கஜேந்திரனும் ஈழவேந்தனும் எழுந்திருக்கவில்லை.

ரவிராஜ் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்சினை

ஒரு நிமிட மௌன அஞ்சலி முடிவுற்றதும் சபாநாயகர் கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக விசேட கூற்றை வெளியிட ஹெல உறுமயவின் பாராளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரருக்கு அனுமதி வழங்கினார்.

அத்துரலிய ரத்தினதேரர் உரையாற்றுவதற்காக எழுந்து நின்றபோது குறுக்கிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உறுப்பினர் என்.ரவிராஜ் ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பினார். இதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கினார்.

கொல்லப்படும் தமிழர் மனிதர்களில்லையா?

ரவிராஜ் தனது ஒழுங்குப் பிரச்சினையில் "கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலை தொடர்பாக நாம் வேதனைப்படுகிறோம். அச்சம்பவத்தை கண்டிக்கிறோம். மௌன அஞ்சலியிலும் பங்கேற்றோம். ஆனால், தமிழர்கள் இராணுவத்தாலும் துணைப் படைகளாலும் கொல்லப்படும் போதெல்லாம் நாம் அதனை இச்சபையின் கவனத்துக்கு கொண்டு வந்த போதெல்லாம் அதனை ஒரு பொருட்டாகவே நீங்கள் எடுப்பதில்லை. இன்றுவரைக்கும் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

இன்று கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்களவர் கொல்லப்பட்டதற்காக சபையில் மௌன அஞ்சலி செலுத்துகிறீர்கள். தமிழர்கள் கொல்லப்படும்போது அசட்டை செய்கிறீர்கள். சிங்களவர் கொல்லப்படும்போது அஞ்சலி செலுத்துகிறீர்கள். அப்படியானால் தமிழர்கள் மனிதரில்லையா?

விவாதம் கோரிய கரு ஜயசூரிய

இவ்வேளை, ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கெப்பிட்டிக்கொல்லாவை படுகொலை தொடர்பாக விவாதமொன்று அவசியமெனவும் இதற்கு சபாநாயகர் நேரம் ஒதுக்கித்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், கூச்சல் குழப்பங்கள் மத்தியில் கரு ஜயசூரியவின் விவாதக் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை.

சபாநாயகர் முன்பாக கஜேந்திரன் மீது தாக்குதல்

இதையடுத்து, தமிழ்க் கூட்டமைப்பினர் சபைக்கு நடுவே இறங்கி சபாநாயகருக்கு முன்பாக வந்து தமிழர்கள் மனிதர்களில்லையாவென சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினர். இவ்வேளை, திடீரென பாய்ந்து வந்த அரச தரப்பினரும் அரச தரப்பின் பக்கமிருந்த ஜே.வி.பி.யினரும் தமிழ்க் கூட்டமைப்பினரை சூழ்ந்து கொண்டனர்.

இதற்கிடையில் ஓடிவந்த படைக் கல சேவிதர்களும் உதவியாளர்களும் விலக்குப் பிடிக்க முயன்றனர். ஆயினும், கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல் இடம்பெற்றது.

அரியநேத்திரன் எம்.பி.க்கும் அண்மையில் நியமனம்பெற்ற அரச தரப்பு எம்.பி.யான சரத் குணதிலகாவுக்குமிடையே இழுபறி ஏற்பட்டதுடன் கெட்டவார்த்தைகள் உரத்த குரலில் பிரயோகிக்கப்பட்டன.

ஐ.தே.க.வும் கூட்டமைப்புடன் கடுமையான தர்க்கம்

இதேவேளை, ஐ.தே.க. எம்.பி.க்களான நவீன் திசாநாயக்கவும், தயாசிறி ஜயசேகரவும் கூட்டமைப்புடன் கடுமையாக தர்க்கம் புரிந்ததுடன் நவீன் திசாநாயக்க தாக்கவும் முற்பட்டார். இதற்கிடையில் ஐ.தே.க. எம்.பி.க்களான ஹேம குமார திசாநாயக்க, மனோ விஜயரத்ன ஆகியோர் கூட்டமைப்பினர்மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க முனைந்ததுடன் கூட்டமைப்பினரை சமாதானப்படுத்தவும் முயன்றனர். ஆனால், கூட்டமைப்பு உறுப்பினர்களும் பதில் தாக்குதல் நடத்த முயன்றனர்.

தன்னை தாக்கியோரை திருப்பித் தாக்கிய மகேஸ்வரன்

தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களை அரச தரப்பினரும் ஜே.வி.பியினரும் இணைந்து தாக்குவதனை தடுப்பதற்காக ஐ.தே.க. எம்.பி. மகேஸ்வரன் முயன்றபோது அவரை ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட உறுப்பினரான ஜயந்த விஜேசேகர சட்டையில் பிடித்து இழுத்து தடுக்க முற்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த மகேஸ்வரன், ஜயந்த விஜேசேகரவை தாக்கினார். இதையடுத்து, ஜே.வி.பி.யின் ஏனைய உறுப்பினர்களான நிகால் கலப்பதி, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மகேஸ்வரனை தாக்க முயன்ற போது அவர்களையும் உதைத்துத் தள்ளினார் மகேஸ்வரன். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருந்த மகேஸ்வரன் அரச மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலரையும் தாக்க முற்பட்டார். இவரைக் கட்டுப்படுத்துவதற்கு பலரும் பெரும் பிரயத்தனப்பட்டனர்.

ஹெல உறுமயவுடன் கடும் வாக்குவாதம்

அரசதரப்பு, ஜே.வி.பி.யுடன் இணைந்து ஹெல உறுமயவினரும் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது வசைமாரி பொழிந்தனர். கொலையாளிகள், புலிகளின் அடிவருடிகள் எனத் திட்டினர். பச்சை இனவாதிகள், தமிழனின் இரத்தம் குடிப்போரென தமிழ்க் கூட்டமைப்பின் ரவிராஜ் எம்.பி. ஹெல உறுமயவினரை பதிலுக்குச் சாடினார்.

களத்தில் குதித்த விமல் வீரவன்ஸ

இதேவேளை, நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கையில் திடீரென விமல் வீரவன்ஸ தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களான கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் ஆகியோரைத் தாக்கினார். இதற்கிடையில் நிலைமையை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கிஷோர், ஹேமகுமார நாணயக்கார, மனோ விஜயரத்ன ஆகியோர் தமிழ்க் கூட்டமைப்பினரை அவர்களின் இடத்திற்குள் அழைத்துச் சென்றனர். ஆனால், எதிர்த்தரப்பு ஆசனங்களுக்குள் நுழைந்து தாக்குவதற்கு அரச தரப்பும் ஜே.வி.பி.யினரும் முயன்றனர்.

பறந்த செருப்புகள் உடைந்த விளக்குள்

எதிர்த்தரப்பிற்குள் அரச தரப்பும் ஜே.வி.பி.யும் நுழைய முயன்றதையடுத்து நிலைமை இன்னும் சிக்கலானது. தமிழ்க் கூட்டமைப்பினரை நோக்கி செருப்புகள் வீசப்பட்டன. எதிர்த் தரப்பு வரிசையின் முன் மேசையில் இருந்த சில மின் விளக்குகள் உடைந்து நொருங்கின. பேப்பர், புத்தகக் கட்டுகள் இருதரப்புக்கும் பறந்தன. கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களும், வெட்டுவேன் கொல்லுவேன் போன்ற எச்சரிக்கைக் குரல்களும் சபையை அதிரவைத்தன.

கஜேந்திரனின் கழுத்தை வெட்டுவதாகக் கூறிய ஜே.வி.பி. எம்.பி.

மோதல்களை படைக்கல சேவிதர்களாலும் உதவியாளர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் இருதரப்பும் ஆளுக்கு ஆள் தாக்க முற்பட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட எம்.பி.யான ஜயந்த விஜேசேகர, கஜேந்திரனுக்கு கழுத்து வெட்டுவேன் என முழக்கமிட்டார். அதுவரைக்கும் நான் என்ன புளியம்பழம் பறிப்பேனாவென கஜேந்திரன் எம்.பி. திரும்பிக் கேட்டார்.

சபையில் அமைதியாக அமர்ந்திருந்த பிரதமர்

சபையில் இரு தரப்பும் ஆளாளுக்கு மோதிக் கொண்டிருந்தபோது பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் அமைதியாக அமர்ந்திருந்தார். சபை முதல்வரான நிமால் சிறிபால டி சில்வாவும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் அமைதியாகவே காணப்பட்டனர்.

ஆனால், ஏனைய பலரும் அரச தரப்புக்கும் ஜே.வி.பி. க்கும் உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். தமிழ்க் கூட்டமைப்பினரை பலர் சூழ்ந்து தாக்கியபோது அவர்கள் தடுக்க முனையவில்லை.

சபாநாயகரால் சபை ஒத்திவைக்கப்பட்டது

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தது. உறுப்பினர்கள் கை, கால்களை நீட்ட வேண்டாமென சபாநாயகர் பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதும் அதனை எவரும் கருத்தில் எடுக்கவில்லை. இதனால் 10.25 மணியளவில் சபையை 5 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் தாக்குதல்கள், இழுபறிகள் தொடர்ந்தன. பலர் சபை நடுவே விழுந்தெழும்பினர்.

சமரச முயற்சியில் சம்பந்தன், ரோஹித

இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், சிவநாதன் கிஷோர் ஆகியோரும் அரச தரப்பில் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இரு தரப்பினரையும் பலத்த பிரயத்தனப்பட்டு அமைதிப்படுத்தினர்.

அரச தரப்பும், ஜே.வி.பி. யும் சற்று அமைதியடைந்தபோதும், ஐ.தே.க. எம்.பி.யான நவீன் திசாநாயக்க தமிழ்க் கூட்டமைப்பினரைத் திட்டித் தீர்த்ததுடன் கடும் வார்த்தைகளையும் பிரயோகித்தார். இவருடன் ரவிராஜும் வாதாடினார்.

மீண்டும் சபை கூடியது

நிலைமை ஓரளவு சுமுகமடையவே 10.55 மணியளவில் சபை மீண்டும் கூடியது. அதனைத் தொடர்ந்து நீரியல் வளங்கள் தொடர்பான திருத்த சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரனின் கழுத்தை வெட்டுவதாகக் கூறிய ஜே.வி.பி. எம்.பி.

மோதல்களை படைக்கல சேவிதர்களாலும் உதவியாளர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் இருதரப்பும் ஆளுக்கு ஆள் தாக்க முற்பட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட எம்.பி.யான ஜயந்த விஜேசேகர, கஜேந்திரனுக்கு கழுத்து வெட்டுவேன் என முழக்கமிட்டார். -தினக்குரல்

இது ஒரு கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். ஏற்கனவே திருமலைக்கலவரங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் ஜயந்த விஜேயசேகரா என்று கூறப்படுவதுண்டு. இவரின் பின்ணனியில் தான் சிங்களக் காடையர்கள் கொட்டமிடுவார்கள்.

இப்படியிருக்க கஜேந்திரன் எம்பிக்கு கொலை மிரட்டல் விடுவது குறுத்து அவதானமாக இருக்க வேண்டும். யாழ்பல்கலைக்கழத்தில் கல்வி கற்றதோடு, மாணவர் தலைவராக இருந்த கஜேந்திரன் மீது எதிரிகள் வெறுப்பாகவே இருக்கின்றனர்.

ஏற்கனவே டக்ளசும் மிரட்டிக் கொண்டு திரிந்தவர். எனவே கஜேந்திரன் எம்பி பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.