அரசியல் தூஷணம் - நிலாந்தன்
அண்மையில் சுமந்திரனின் பிறந்த நாள் அன்று ஒரு பெண் அரசியல் செயற்பாட்டாளர், சுமந்திரனுக்கு விசுவாசமானவர், முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதில் அவர ” உன்னுடைய எதிரி யாரைக் கண்டு பயப்படுகிறானோ, அவன்தான் உனக்குத் தலைவர்” என்ற பொருள்பட எழுதி வாழ்த்தியிருந்தார்.
அவர் அவ்வாறு எழுதியதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவ்வாறு வாழ்த்த அவருக்கு உரிமை உண்டு. அதேசமயம் அதற்கு எதிராக எழுத மற்றவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கு ஒரு பண்பாட்டு எல்லைக்கோடு உண்டு. தனது தாய்க்கு எதிராக, சகோதரிக்கு எதிராக, மனைவி அல்லது காதலிக்கு எதிராக மற்றவர்கள் எதை எழுதக்கூடாது என்று ஒருவர் எதிர்பார்க்கிறாரோ, அதை அவரும் இன்னொரு பெண்ணுக்கு எதிராக எழுதக் கூடாது. இதுதான் பண்பாட்டு எல்லைக்கோடு.
ஆனால் அந்தப் பெண் மீது கொட்டப்பட்ட தூஷணத்தை, விஷத்தை தொகுத்து பார்த்தால் அவை தமிழ்த் தேசிய பண்பாட்டு இதயத்தின் செழிப்பைக் காட்டவில்லை. சீரழிவைத்தான் காட்டின. அவர் ஒரு குடும்பப் பெண். பொது வாழ்வுக்கு வந்துவிட்டார் என்பதற்காக அவரைக் கண்டபடி தாக்கினார்கள். ஆனால் தேசியவாத அரசியல் என்பது பாலியல் சமத்துவத்தின் மீதுதான் கட்டி எழுப்பப்படுவது. சகபாலரை மதிக்கத் தெரியாத ஒருவர்; சகபாலரை அந்த தேசிய ஆன்மாவின் பண்பாட்டு எல்லைகளைத் தாண்டி விமர்சிக்கும் ஒருவர், தன்னைத் தேசியவாதி என்று கூறிக்கொள்ள முடியாது.
அப்படியானால் அந்தப் பெண் தனக்கு எதிராக தூஷணத்தைக் கக்கிய நபர்களுக்கு எதிராக நிகழ் நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாமா?அதுபோன்ற அவதூறுகளுக்கு எதிராகத்தான் சாணக்கியன் நிகழ் நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தவரா?
தமிழரசுக் கட்சி நிகழ் நிலைப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சுமந்திரன் அதற்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார். ஏன் சாணக்கியனே நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் இப்பொழுது தன்னை அவதூறு செய்தவர்களுக்கு எதிராக அந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார். இதில் ஓர் அக முரண்பாடு உண்டு. இதுதொடர்பாக தமிழரசுக் கட்சி தன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், சாணக்கியன் நாடாளுமன்றத்தை உட்கட்சி முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் மேடையாகப் பயன்படுத்துகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த வாரம் நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளை ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தி அவர் தெரிவித்த கருத்துக்கள் எந்த வகை அரசியல் கலாச்சாரத்தைச் சேர்ந்தவை?
இடதுசாரிகள் முரண்பாடுகளைக் கையாளும்போது “நேச முரண்பாடு; பகை முரண்பாடு” என்று பிரிப்பார்கள். தாய்ப் பூனை இரையைக் கவ்வுவதற்கும் குட்டியை கவ்வுவதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்று அதை விளங்கப்படுத்துவார்கள். ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் நாடாளுமன்றத்தில் உட்கட்சிச் சண்டைகளைப் பேசுகிறார்கள். உட்கட்சி முரண்பாடுகளை வழக்குகளின் மூலம் கையாளப் பாக்கிறார்கள். சட்ட நடவடிக்கை என்ற விடயத்தை தமது அரசியல் எதிரிகளுக்கும் தம்மை விமர்சிப்பவர்களுக்கும் எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் அரசியல்வாதி ஒருவருக்கு எதிரான அவதூறு எனப்படுவது இப்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் சூழலில், ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல. அதை விட ஆழமான பொருளில் அது ஒர் அரசியல் பண்பாட்டு பிரச்சினை.
தமிழ் தேசிய அரசியல் விமர்சன பாரம்பரியத்தின் சீரழிவை இது காட்டுகின்றது. இதை இன்னும் ஆழமான வார்த்தைகளில் சொன்னால், தமிழ் தேசிய அரசியலின் ஜனநாயக இதயம் நோய்க்கூறானதாக மாறி வருகிறது என்பதனை அது காட்டுகிறது.
பெண்கள் அல்லது தனிப்பட்ட முறையில் அவமானப்படத் தயாராக இல்லாதவர்கள் தமது பொதுவாழ்வுக்காக தமது நிம்மதியைத் தொலைக்கத் தயாராக இல்லாதவர்கள் போன்ற பலரும் அரசியலில் ஈடுபடத் தயங்குவதற்கு இது ஒரு பிரதான காரணம்.
தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டிக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளிலும் இந்தப் போக்கு மேலும் அதிகரித்து வருகிறது.
கடந்த 16 ஆண்டுகால தமிழ்த் தேசியக் கூட்டு உளவியல் என்பது கொந்தளிப்பானது. அவமானகரமான ஒரு கூட்டுத் தோல்விக்கும் கூட்டு இழப்புக்கும் கூட்டுக் காயங்களுக்கும் பின்னரான கூட்டு உளவியலானது கொந்தளிப்பானதாகத்தான் இருக்கும். அது யாரையும் நம்பாது. யாராவது சமூகத்தில் மினுங்கிக் கொண்டு வந்தால் அவரை எச்சரிக்கை உணர்வோடு அல்லது எரிச்சலோடு பார்க்கும். யாரையாவது தாக்க நினைத்தால் அவரை எங்கே தாக்கினால் வலிக்குமோ அங்கே தாக்கும். சமூக வலைத்தளங்களின் சுதந்திரச் சூழல் அதற்கு இடம் கொடுக்கின்றது. சமூக வலைத்தளங்களின் எழுச்சியோடு ஒருபுறம் குரலற்ற மக்களுக்கு குரல் கொடுக்க இடம் கிடைத்திருக்கிறது. அதேசமயம் வெறுப்பவர்களை,விஷம் கக்கிகளை, தூஷணம் கொட்டிகளை, பொது வெளியில் கழியும் வெறுப்பர்களை அது பரவலாகியுள்ளது. குழுக்கள் ஆக்கியுள்ளது.
இந்தப் போக்கு கடந்த 16 ஆண்டுகளாகதான் இருந்து வருகிறது என்பதல்ல. ஆயுதப் போராட்டத்திலும் இருந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் அதிகமாக சூழ்ச்சி கோட்பாடுகள் உற்பத்தி செய்யப்பட்ட காலகட்டம் அதுதான். விமர்சனங்கள் துப்பாக்கி முனையில் அல்லது பச்சை மட்டைகளால் தீர்க்கப்பட்டதுண்டு.
ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான மிதவாத அரசியலிலும் அது இருந்தது. கொள்கை எதிரிகளை துரோகிகள் ஆக்குவது ; அல்லது காசுக் கள்ளர்கள் ஆக்குவது; பாலியல் குற்றவாளிகளாகச் சித்தரிப்பது; அவர்களுடைய அந்தரங்கத்தை மறைமுகமாகப் பேசுவது; அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அருவருப்பான உவமைகளுக்கு ஊடாகக் கூறுவது… போன்றன அங்கேயும் இருந்தன. அதிலும் குறிப்பாக அங்கே மல முட்டிப் பாரம்பரியம் இருந்தது. தனது கட்சி எதிரியின் வீட்டு முற்றத்தில் மலம் நிரம்பிய மண் முட்டியைக் கொண்டு போய் உடைத்து விடுவது. அதே மல முட்டிகளோடு, மொட்டை கடிதங்களோடு, முகமூடிகளோடு ஒரு பகுதியினர் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வெறுப்பை, விஷத்தைக் கக்கியபடி திரிகிறார்கள்.
இவர்கள் மத்தியில் படித்தவர்கள் உண்டு; லோயர்கள் உண்டு;மருத்துவர்கள் உண்டு; ஆசிரியர்கள் உண்டு; அரசியல் செயற்பாட்டாளர்கள் உண்டு; கட்சிகளில் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்கள் உண்டு;தலை முழுக்க நரைத்த வயது போனவர்கள் உண்டு. ஆனால் ஒரு நல்ல விடயம் பெண்கள் இதில் குறைவு.
இது அரசியல்வாதிகள் அல்லது அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் உண்டு. படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள்,அறிவு ஜீவிகள் மத்தியிலும் உண்டு.
இலக்கியவாதிகள் தங்களுக்கு இடையே மோதும்போது எதிர்த் தரப்பின் இடுப்புக்கு கீழே அடிப்பது என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. யாருக்கு எங்கே அடித்தால் அதிகம் வலிக்குமோ அந்த உயிர் நிலையில் அடிப்பது. அதாவது பிறப்பு உறுப்பில் அடிப்பது. அல்லது பிறப்பு உறுப்போடு சம்பந்தப்பட்ட விடையங்களை, உறவுகளைத் தாக்குவது.
தமிழ் மக்கள், அரசாங்கத்தை பொறுப்புக் கூற வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் பொதுவெளியில் துருத்திக் கொண்டு தெரியும் பலரும் எதிர்த் தரப்பை விமர்சிக்கும்போது தமது மூப்பை,படிப்பை,சமூகப் பொறுப்பை, தமது மதத்தின் வழியாக தாங்கள் கற்றுக்கொண்ட அறத்தை ஒழுக்கத்தைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளை ஏன் பயன்படுத்துவதில்லை?
தாங்கள் சமூக வலைத்தளங்களில் எழுதுகின்ற அல்லது தங்களுடைய குருட்டு விசுவாசிகளை ஏவி எழுதுகின்ற விடியங்களை தங்களுடைய பெற்றோர் தங்களுக்கு ஏடு தொடங்கியவர், ஞானஸ்தானம் கொடுத்தவர், தங்களுடைய மனைவி பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் பார்த்தால் தங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பண்பாட்டுக் கூச்சம்,பொறுப்பு இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது?
இது ஒரு கூட்டு உளவியல் நோயாக பெருகி வருகிறது. இதை மருத்துவர்கள் மட்டும் குணப்படுத்த முடியாது. சட்ட நடவடிக்கைகளால் மட்டும் தீர்த்து விட முடியாது. பதிலாக இது ஒரு பண்பாட்டுப் பிரச்சினை.ஒரு கூட்டுப் பிரச்சினையை கூட்டாகத்தான் தீர்க்க வேண்டும்.ஆனால் துயரம் என்னவென்றால் அதைத் தீர்க்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே அதாவது அரசியல்வாதிகளே இந்தப் பண்பாட்டுச் சீரழிவுக்கு முக்கிய பொறுப்பு என்பதுதான்.
ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் மட்டுமல்ல,உலகப்பரப்பில்,உலகப் பேரரசு அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் எப்படித் தோன்றுகிறார்? என்ன பேசுகிறார்? அண்மை ஆண்டுகளில் உலகில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் அவர்தான். உலகம் பூராகவும் அவருக்கு எதிராக மீம்ஸ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக கடந்த இரண்டு கிழமைகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கும் போரில் அவர் ஒரு கொடிய “கொமெடி பீஸ்” ஆக உருவகிக்கப்படுகிறார். மீம்ஸ் உருவாக்கிகள் அவருடைய மகனுக்கும் வட கொரியத் தலைவரின் மகளுக்கும் திருமணம் செய்து வைத்துப் பிள்ளையும் பெற்றுக் கொடுத்து விட்டார்கள். இவ்வாறு உலகப் பரப்பில் தன்னையும் தனது குடும்பத்தையும் அவதூறு செய்யும் சமூக வலைத்தளப் பாவனையாளர்களுக்கு எதிராக அவர் என்ன செய்யலாம் என்று நமது அரசியல்வாதிகளிடம் ஆலோசனை கேட்டால் என்ன?
https://www.nillanthan.com/8193/
By
கிருபன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.