Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யேசக்தி! – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம்.

Featured Replies

அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யேசக்தி! –  இது கருணாநிதி போட்ட முதல் நாடகம்.


‘சாந்தா அல்லது பழனியப்பன்’ – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். ‘டெசோ அல்லது புஸ்ஸோ’ – இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.

ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது, தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில் அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி. அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்தி கருணாநிதிக்கு இருந்தது. அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, ‘என்னது… சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது ‘ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்… பச்சைத் துரோகம்!

முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால், இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

”இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார். சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில் ‘முதல்வராக’ இருந்தபோது, ”நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப் பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லது வெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்” என்று சொல்லிச் சமாளித்தவர்.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச் சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை. ‘கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர் ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். ‘இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ”பதவி என் தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி” என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!

”இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்” என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார் கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்பதே உண்மை. ‘போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை, ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம். தவறில்லை. ”அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்” என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன், பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே… அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன? கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் ‘பாதுகாப்பான இடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டு கள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள் உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.

”நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால், அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?” என்று மனசாட்சிஉள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ”மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்” என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள்கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்று நிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்கா வது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. ‘கொன்றுவிட்டார் கள்… கொடுமைப்படுத்தினார் கள்… சித்ரவதை செய்தார்கள்’ என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. அப்போதும் ‘முதல்வர்’ கருணாநிதி, ”இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல” என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ”போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல. இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை” என்றார். அதாவது, இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.

”இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்” என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும். ‘போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக் காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.

”போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல” என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ”அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது” என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும். ”ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்” என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.

போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ”முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து” என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ”அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை… பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்” என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப் பட்டபோது, ”இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்” என்று மிரட்டல் விடுத்து, பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக் கொடுத்து… இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.

சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக் கொடுக்கிறது. உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. ”பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்” என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ”விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்” என்று கிண்டல் அடித்ததும், ”இன்று அனை வரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்” என்பவர், அன்று, ”ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்” என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.

ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால், பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50 ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக் கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது. அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களை விரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு… என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு, கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது. தன்னுடைய கடந்த காலத் தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். பெரியாரைக் காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ”ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை!” என்று தந்தை பெரியார் சொன்னார்.

அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?

- நன்றி – விகடன்..

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13339:karunanithi-parasathi&catid=36:tamilnadu&Itemid=102

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.