Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவ சக்தியின் முதல் பணி பரந்துபட்ட மக்களை ஒரு சக்தியாய் உருத்திரட்டுவதே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாணவ சக்தியின் முதல் பணி பரந்துபட்ட மக்களை ஒரு சக்தியாய் உருத்திரட்டுவதே

 

தத்தர்
 

 

இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் மாணவர்கள் நடத்திவரும் தொடர் எழுச்சிப் போராட்டங்கள் நம்மனைவருக்கும் ஒரு ஒளிக்கீற்றாய் அமைந்துள்ளது.

 

மக்களின் மனங்களில் மாணவர்கள் அன்புக்கும், மதிப்புக்கும், எதிர்பார்க்கைக்கும் உரியவர்கள். மாணவர்கள் கையசைத்தால் பெற்றோரும், மற்றோரும் அவர்களுக்கு தலைசாய்ப்பது இயல்பு.

 

மாணவர்கள் எப்போதும் மக்களின் மனங்களில் களங்கம் கற்பிக்க முடியாதவர்கள். அவர்களின் குரல்கள் மக்களின் செவிகளை துளைக்கும் என்று சொல்வதை விடவும், அவர்களின் இதயங்களுக்குள் நுழையும் என்பதே யதார்த்தமானது. இதனால் தான் உலகெங்கும் மாணவப் போராட்டங்களுக்கென்று ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. மாணவர்கள் ஒரு கட்சியல்ல. அவர்கள் ஒரு நிறுவனம். அவர்கள் மனச்சாட்சியின் குரல்கள். வெகுஜன அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் கருத்துருவாக்கிகள். ஆதலால் சமூக இயக்கப் போக்கில் அவர்கள் ஒரு சக்தியாகிவிடுகிறார்கள். அவர்கள் தீரமானங்களை செயலாக்குபவர்கள் அல்ல. மாறாக தீர்மானங்களை உருவாக்குபவர்கள். தீர்மானங்களை செயலாக்குவது ஆட்சியாளர்களின் பொறுப்பு. ஆனால் ஆட்சியாளர்கள் தடம்புரளும்போதோ, அந்நிய ஆதிக்க சக்திகள் தலையெடுக்கும்போதோ மாணவர்கள் ஒரு கருத்துருவாக்கியாய் மேலெழுகிறார்கள்.

 

மாணவர்கள் கட்சியல்ல. ஆயினும் அவர்கள் நிறுவனத்தன்மை கொண்டிருப்பார்கள். கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் போதானாசிரியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என எத்தகைய பெரியோர்கள் இருப்பினும், கல்லூரி என்றால் அதன் குறியீடு மாணவர்களே தவிர வேறுயாருமல்ல. ஆதலால் கல்லூரிகள் நிறுவனங்களாக இருக்கும்போது அந்த நிறுவனத்தின் பெருந்தூண்களாக மாணவர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாது, மாணவர்களை கருப்பொருளாகவும், உட்பொருளாகவும் கொண்டே அந்த நிறுவனங்கள் உருவாகின்றன. இயக்கம் பெறுகின்றன. ஆதலால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என்பனவற்றின் நிறுவனத்தன்மை மாணவர் என்பதால், மாணவர்கள் தெருவிலும், திண்ணையிலும் கூட ஒரு நிறுவனமாகவே காட்சியளிப்பர். அந்த நிறுவனத்தன்மைதான் அவர்களின் பிரதான பலம். கல்வியே சமூக வளர்ச்சியில் எதிர்காலத்துக்கான வித்து என்றவகையில், இந்தக் கல்வி நிறுவனத்தை, மாணவ சக்தியை ஒருபோதும் எந்த சமூகத்தாலும் அல்லது ஆட்சியாளர்களாலும் நிராகரிக்க முடியாது.

 

இவ்வாறு நிறுவனமயப்பட்ட மாணவர்களின் முதற்பணி அநீதிக்கு எதிரான குரலாய் விளங்குவது. நீதியின் பெயரால் அபிப்பிராயத்தை உருவாக்குவது. அந்த கருத்துருவாக்கம்தான் தேசத்தை உருவாக்கும் உயிர்மூச்சாகும்.

 

பரந்துபட்ட மக்களின் இதயங்கள் மாணவ வாழ்வை போசிக்கும் தன்மை கொண்டது. மக்கள் பரந்து விரிந்து உதிரிகளாக இருக்கலாம். அவர்கள் தனித்தனி அபிப்பிராயங்கள் உள்ளவர்களாகவும் இருக்கலாம். ஆனால் மாணவர்கள் ஒன்றுதிரளும் சக்தியாக இருப்பதன் நிமித்தம், அவர்களின் இதயத்தில் நீதி எதிரொலித்து மக்களை சென்றடையும்போது, உதிரியான மக்கள் ஒரு அபிப்பிராயம் கொண்டவர்களாக திரட்சி பெறுவர். இதைத்தான் நாம் மாணவ சக்தி என்கிறோம். இதனால்தான் மாணவ சக்தியை மாபெரும் சக்தியென்கின்றோம். மாணவர்கள் ஒரு நிறுவனம் என்றவகையில் முதலில் அபிப்பிராயம் அவர்கள் மீது பட்டுத்தெறிக்கும். அப்போது மாணவர்களிடமிருந்து தெறித்தெழும் அந்தக் குரல்கள் மக்களை ஒரு சக்தியாய் பின்னிப்பிணைக்கும். மாணவ சக்தி, மக்களை ஒரு சக்தியின் திரட்சியாக வடிவம் பெறவைப்பதில்தான் அதன் பணியே அடங்கியிருக்கின்றது. எனவே மாணவர்களின் பணி என்பது உணர்வற்று கிடக்கும் மக்களை உணர்வுள்ளவர்களாக்குவதும், உதிரிகளாக கிடக்கும் மக்களை ஒரு கருத்துருவாக்கத்தின் மூலம் சக்தியாக்குவதும்தான். மக்களை உணர்வுள்ளவர்களாக்குவதோடும், அபிப்பிராயத்தை நோக்கி அவர்களை ஒரு சக்தியாக திரட்டுவதோடும் அவர்களின் முதலாவது பணி நிறைவடைந்து விடுகின்றது. மக்களை வரலாற்று நாயகர்களாக்கும் பணியை மாணவர்களே ஈட்டி முனையாக நின்று முன்தள்ளிவிடுகிறார்கள். இதன்மூலம் மக்கள் வரலாற்று நாயகர்கள் பாத்திரத்தை வகிக்கிறார்கள்.

 

தமிழக மக்களை அறிஞர் அண்ணா சாமானியர்களின் யுகமாக உருத்திரட்ட உதவியது இந்த மாணவ சக்திதான். மாணவர்கள் எழுச்சி பெறும்போது இயல்பாகவே மக்களின் மனங்கள் குலைந்து விடுகின்றன. இது ஒரு வரலாற்று இயல்பு.

 

ஈழத்தமிழ் மாணவர்களுக்கென்று ஒரு சிறப்பான வரலாற்றுத் தொடக்கமும், ஒரு செழிமையான வரலாற்று வளர்ச்சியும் உண்டு. பிரித்தானிய காலனிய ஆதிக்க காலத்தின்போது மகாத்மா காந்தி தலைமையில் தேசிய விடுதலைப் போராட்டம் இந்தியாவில் எழுச்சிபெறத் தொடங்கியது. அதனைக் கண்ட ஈழத்தமிழ் மாணவர்கள் இலங்கைத் தீவில் உள்ள பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கத் தொடங்கினர்.

 

1920களின் மத்தியில் யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் எனும் ஒரு அமைப்பை தமிழீழ மாணவர்கள் உருவாக்கினர். இதுவே ஆசியாவில் மாணவர்களின் பெயரால் தொடங்கிய முதலாவது இயக்கமாகும். 1927ஆம் ஆண்டு மகாத்மா காந்தியை இலங்கைக்கு இவர்கள் வரவழைத்தபோது, யாழ்ப்பாண மாணவ காங்கிரஸ் என்ற தம் பெயரை யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் என்று பெயர் மாற்றிக் கொண்டனர். இந்த மாணவ காங்கிரஸ் தொடங்கும்போது, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை, ஜனநாயகம், சாதியொழிப்பு, பெண்ணுரிமை என்ற நான்கு உன்னத இலட்சியங்களையும் யாழ்ப்பாணத்தின் கல்லூரி மாணவர்கள் மனதில் கொண்டு உதயமாக்கினர். இதற்கு கல்லூரி மாணவர்கள்தான் மையமாக விளங்கினர். அத்துடன் ஏனைய கல்லூரி மாணவர்களையும்; அவர்கள் அரவணைத்துக் கொண்டனர். இது ஒரு நல்ல தொடக்கம் என்று சொல்வதைவிடவும், இது ஒரு உன்னதமான தொடக்கம் என்று சொல்வதே முற்றிலும் பொருந்தும். அதாவது காலனியாதிக்கதிற்கு எதிரான இலங்கை தழுவிய விடுதலைப் போராட்டத்தை வெறும் சட்டக் கோர்வைகளாக இருந்தவற்றுக்குப் பதிலாக முதல்முதலாக நேரடி நடவடிக்கை தழுவியதாக மாற்றியது இவர்கள்தான். இந்த வகையில் இலங்கைத்தீவில் ஒரு பெருமைக்குரிய வரலாற்றுத் தொடக்கத்தை அதாவது சிங்கள மக்களுக்கு கூட ஒரு முன்னோடியான வரலாற்றுத் தொடக்கத்தை இவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.

 

இலங்கைத் தீவில் முதன்முறையாக 1926ஆம் ஆண்டு இந்த மாணவர் அமைப்பு சாதி பாகுபாட்டுக்கு எதிரான சமபந்திப் போசனத்தை நடைமுறையில் தொடக்கி வைத்தது. அன்றைய காலகட்ட நிலையில் வைத்துப் பார்க்கும்போது இது ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான விடயம்தான்.

 

பிற்காலத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் இன ஆதிக்க தன்மை கொண்ட படுகொலை கலாச்சாரத்தை தெளிவாக ஆரம்பித்ததும், ஈழத்தமிழ் மாணவர்கள் சிங்கள அரசுக்கு எதிராக ஒரு சக்தியாக வடிவெடுக்கத் தொடங்கினர். அதன் வேர் யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸில் இருந்துதான் உதயமாகியது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை எதிர்ப்பதை தமிழ் மாணவர்கள் முனைப்புக் காட்டத் தொடங்கினர். குறிப்பாக 1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிங்கள அரசின் தரப்படுத்தலுக்கு எதிராக மிகப்பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை, எந்தவொரு அரசியல் கட்சியின் தொடர்புமின்றி கல்லூரி மாணவர்களே முற்றும் முழுவதுமாக நடத்தினர். இலங்கைத்தீவில் தெற்கிலோ, வடக்கிலோ எப்புறத்திலாயினும் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் என்றால், அது இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம்தான். இலங்கைத்தீவில் தமிழ், சிங்கள பகுதிகளில் பல்வேறு கட்சிகள் இருந்திருக்கலாம். ஆனால் இப்படியொரு மாணவ ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை இதற்கு முன் ஒருபோதும் வரலாற்றில் கண்டதில்லை. இந்த ஊர்வலத்தின்போது தெருவுக்கு தெரு, சந்திக்கு சந்தி, வீட்டுக்கு வீடு ஊர்வலத்துக்கு சென்ற மாணவர்களுக்கு பொதுமக்கள் அன்போடும், மதிப்போடும், ஆர்வத்தோடும் நீராகாரம் வழங்கி ஆதரவளித்தனர். இந்த ஊர்வலம் மக்களின் மனங்களை அதிகம் பாதித்து, அவர்களின் இதயத்தின் அடிநாதம்வரை பதிந்துவிட்டது.

 

இதற்கு முன்பு 1960களின் மத்தியில் பாரிஸில் மாணவப் போராட்டம் வெடித்து ஐரோப்பாவையே உருக்கத் தொடங்கியது. அக்காலகட்டத்தில் தமிழகத்திலும் தமிழக மாணவர்கள் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இதனால் 1960களின் மத்தியிலான உலகவரலாறு, மாணவர்களின் எழுச்சிக் காலம் என தன்னை பதிவுசெய்து கொண்டது. உலகின் நாலாபுறங்களிலும் மாணவப் போராட்டங்கள் நிகழந்தன. ஆனால் இலங்கைத் தீவில் அது ஐந்து ஆண்டுகளின் பின்புதான் வெடிக்கத் தொடங்கியது. அது ஈழத்தமிழ் மாணவர்களை மையமாகக் கொண்டே வெடித்தது.

 

இலங்கை வரலாற்றில் பண்பு ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மாணவர்கள்தான். தெற்கில் சிங்கள மாணவர்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழத்தொடங்கினர். அந்த எழுச்சியை ஜனதா விமுக்தி பெரமுன என்கின்ற கிளர்ச்சி அமைப்பு தனக்கான அறுவடையாக்கிக் கொண்டது. ஜே.வி.பி என்ற கிளர்ச்சி அமைப்பில் இந்த மாணவர்கள் பங்கெடுத்து 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது அது ஒரு கட்சி வடிவத்தைப் பெற்றிருந்தது. இதே காலத்தில் ஈழத் தமிழ் மண்ணில் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராக ஈழத்தமிழ் மாணவர்கள் உருத்திரள தொடங்கினர். குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு ஈழத்தமிழ் மாணவர்கள் தமிழ் சமூகத்தின் மனச்சாட்சியாய் விளங்கினர். உலக வரலாற்றிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு தனிச் சிறப்பான இடமுண்டு. இம்மாணவர்கள் சமூக சேவைகளில் தம்மை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டனர். வெள்ள நிவாரணம், புயல்நிவாரணம், அரச - ராணுவ அனர்த்தங்களுக்கு எதிரான நிவாரணம் போன்ற நிவாரணப் பணிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பெரிதும் ஈடுபட்டனர். உதாரணமாக 1978ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வீசிய பெரும்புயலின்போது யாழ்ப்பாண மாணவர்கள் தம் வகுப்புகள் அனைத்தையும் கைவிட்டு மக்களுக்கான உணவு, உடை, நிவாரணப் பொருள் சேகரிப்பதிலும் மக்களுக்கு தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுப்பதிலும் பெரிதும் ஈடுபட்டனர். இதேபோல யாழ்ப்பாணத்தில் அவ்வப்போது ஏற்பட்ட அனர்த்தங்களில் மக்களுக்கான நிவாரணப்பணிகளில் இவர்கள் நேரடியாக ஈடுபட்டனர். 1980ஆம் ஆண்டு மலையகத்தில் சிங்கள காடையர்களால் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் எரிக்கப்பட்டபோது இம்மாணவர்கள் களத்தில் இருந்து உதவி புரிந்தனர்.

 

1983ஆம் ஆண்டு எல்லாவற்றுக்கும் மேலாக கறுப்பு யூலைக் கலவரத்தின்போது அகதிகாளய் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி குவிந்த தமிழ் மக்களை பராமரிப்பதிலும், அவர்களை பாதுகாப்பதிலும் இரவுபகலாய் பல்கலைக்கழகத்தின் முழு மாணவர்களும் ஈடுபட்டனர். இத்தகைய மக்களின் ஆத்மாவோடு எழுச்சி பெற்ற மாணவர் அமைப்பு எல்லாவகையிலும் முன்னுதாரணங்களைக் கொண்டு விளங்கியது. இப்பின்னணியில் யாழ். பல்கலைக்கழக மாணவ அமைப்பு பின்வரும் மகுட வாக்கியத்தை தன் தலையில் சூடிக்கொண்டது. 'போராடுவதற்காக கற்றுக்கொள். கற்றுக்கொள்வதற்காக போராடு'. இவ்வாக்கியம் லெனினுடையது. அக்காலத்தில் மாணவர்களுக்கு இதுவொரு மந்திர வாக்கியமாகவே தோற்றமளித்தது. இவ்வாக்கியத்தை இடையறாத ராணுவ படுகொலையின் பின்னணியில் 'வாழ்வதற்காக போராடு, போராடுவதற்காக வாழ்' என்று மாணவர்கள் சில மாற்றத்துடன் பிரயோகித்ததும் உண்டு.

 

அக்காலத்திலேயே மாணவர் போராட்டங்களும், தீர்மானங்களும் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி சோர்வடைந்தபோது, தமது கொள்கையிலிருந்து விலகிச் செல்ல முற்பட்டபோது தமிழர் விடுதலைக் கூட்டணியை அரசியல் அநாதைகளாக்கியது இந்த மாணவர்கள்தான். வேறுவகையில் சொன்னால் தமிழீழ போராட்டத்தை ஒரு புதுவடிவத்தில் பண்பு மாற்றத்துக்கு உள்ளாக்கியதே இந்த மாணவ சக்திதான்.

 

இனப்படுகொலையை தமது அரசியல் கலாச்சாரமாகவும், வாழ்வுமுறையாகவும் கொண்ட சிங்கள நாகரிகமானது முள்ளிவாய்க்காலில் பாரிய இனப்படுகொலையை அரங்கேற்றியதன் மூலம் தன் தலையில் வெற்றி வாகையை சூடிக் கொண்டதாக காட்சியளித்தாலும், அது தன் முகத்தில் என்றும் மாறாத வடுவையும், அவமானத்தையும் பூசிகொள்ளத் தவறவில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலை சிங்கள பௌத்த நாகரீகத்துக்கு என்றும் மாறாத ஒரு வரலாற்று இழுக்கு ஆகும்.

 

ஈழத்தமிழர்களைவிட அளவால் பெரிய இனமென்பதாலும், அது அரச நிறுவனத்தைக் கொண்ட நிறுவனம் என்பதனாலும், தனது அளவுப் பருமனின் காரணத்தாலும், உலகளாவிய அரச நிறுவன உறவுகளின் காரணத்தாலும் தமிழினத்தை இனப்படுகொலை செய்வது அதற்கு சாத்தியமாய் அமைந்தது. அந்த இனப்படுகொலையை வரலாற்றின் முடிவாக அவர்கள் கருதி செய்திருந்தாலும், அது தமிழ் மக்களுக்கான இன்னொரு வரலாற்றுத் தொடக்கம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. அந்த இனப்படுகொலை நடந்தேறி சுமாராக நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இன்றைய சூழலில், அந்த இனப்படுகொலையின் ஆவிகள் சிங்கள அரசை புவியெங்கும் துரத்தத் தொடங்கியிருக்கின்றது. இதில் ஒரு முக்கிய பாத்திரத்தை தற்போது தமிழக மாணவர்கள் கையிலெடுத்துள்ளார்கள்.

 

ராஜபக்சாக்களின் இனப்படுகொலை தமிழக மாணவர்களின் இதயங்களில் ஆயிரக்கணக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர்களின் இதயங்களில் இப்படுகொலை தீக்குச்சியாய் உரசி எங்கும் தீயைப் பற்றவைக்கும் இயல்புள்ளதாய் மாறியுள்ளது. இது தான் அவர்களின் மனதில் எழுந்திருக்கும் பிரதான வினா. நாங்கள் யார்? எங்களின் தொப்புள்கொடி உறவுகளில் சுமாராக ஒன்றரை இலட்சம் மக்கள் தமது அண்டையில் இனப்படுகொலைக்குள்ளானபோது ஏன் எம்மால் தடுக்க முடியாமல்போனது? இப்போதாவது எமக்குரிய பணி என்ன? கையாலாகாதவர்களாய் நாம் தூங்கிக் கிடக்க முடியுமா? என்ற இயல்பான வினாக்கள் அவர்களை உசுப்பிவிட்டுள்ளன. அவர்கள் நீதியின் பெயராலும், ஜனநாயகத்தின் பெயராலும், தமக்குரிய பொறுப்புணர்வின் பெயராலும் மனித இனத்துக்கு எதிரான இந்தப் படுகொலையை தட்டிக் கேட்கத் தலைப்பட்டுள்ளனர்.

 

நீதியான சர்வதேச விசாரணை வேண்டும். அதுவும் ஆசிய நாடுகள் சம்பந்தப்படாத ஒரு சர்வதேச விசாரணை வேண்டும். படுகொலை புரிந்தோர் தண்டிக்கப்பட்ட வேண்டும் என்று ஒருபுறம் அவர்களின் கோரிக்கைகள் அமையும்போது, இவ்வாறான படுகொலைகள் புரிந்தவர்களுடன் இனியும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாழமுடியாது. எனவே அவர்கள் பிரிந்து சென்று தமிழரசு அமைப்பதுதான் ஒரே ஒரு வழியென்று தமது கோரிக்கைகளை முன்நிறுத்தியுள்ளனர். இதற்கு அப்பாலான கோரிக்கைகளை எந்த அரசு கொண்டு வந்தாலும் அதனை ஏற்கும் நிலையில் அவர்கள் இல்லை. இன்று ஐ.நா சபையில் அமெரிக்கா பிரேரிக்கும் தீர்மானத்தின் பெயரால் ஒரு புறம் அவர்கள் தீர்மானத்தை கேள்விக்குள்ளாக்கிருப்பதுடன், மறுபுறும் போராட்டத்தை முதன்மைப்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்திய அரசை பொறுப்புக் கேட்கின்றனர். இந்த இனப்படுகொலைக்குரிய குற்றவாளிகளை தண்டிக்க கோரும் அவர்களின் போராட்டத்தில் ஒரு தர்ம ஆவேசம் பொங்கியெழுகின்றது.

 

தமிழக மாணவர்கள் பொங்கி எழுந்துள்ள இந்த நிகழ்வை வெறுமனே ஈழத்தமிழர்களுக்கான ஒரு குரலாக மட்டும் நாம் பார்க்கக் கூடாது. அதன் பெயரால் அவர்கள் அரசியல் உணர்வு பெற்றுள்ளார்கள் என்பதையும் பார்க்க நாம் தவறக் கூடாது. இவர்களின் எழுச்சி மாணவர்கள் சார்ந்த, இந்திய மக்கள் சார்ந்த, உலகளாவிய ஜனநாயக உரிமைகள் சார்ந்த பல அடிப்படை இயல்புகளைக் கொண்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் முன்னுதாரணமான வரலாற்றைத் தொடக்கிவைப்பதற்கான புள்ளியில் நிற்கின்றனர். அவர்கள் ஜனநாயகத்தின் புள்ளியில் நிற்கின்றார்கள்.

 

வரப்போகும் இந்தியாவின் தேர்தலில் இவர்களின் குரல் பெரிதும் தாக்கத்துக்குள்ளாகும். இவர்கள் பதவி மோகக்காரர்களோ, பதவிகளுக்காக போராடுபவர்களோ அல்ல. உரிமைக்கான ஈட்டிமுனை கொண்டவர்கள். ஒருவகையில் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையில் ஒரு தனிப்பெரும் சக்தியாய் விளங்குவதற்கான தொடக்கத்தை இவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஈழ மண்ணில் மாணவ சக்தி, பொலிஸ், இராணுவ, புலனாய்வு பிரிவுகளின் இரும்புப் பிடிக்குள் நகர முடியாமல் இருக்கின்றது. ஐந்து தமிழனுக்கு ஒன்று என இராணுவத்தின் பிரசன்னம் இருக்கின்றது. பொலிசார், புலனாய்வுத்துறை, கடற்படையினரையும் கூட்டிப்பார்த்தால் இத்தொகை இன்னும் குறையும். இந்நிலையில் ஈழ மண்ணில் தமிழ் மாணவர்கள் நகர முடியாத இரும்புக் கரங்களுக்குள் இருக்கும் வேளையில் தமிழக மாணவர்கள்தான் அதனையும் இடைநிரப்பவேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

 

ஆதலால் தமிழக மாணவர்களின் பங்கும் பாத்திரமும் வரலாற்றில் மிகப் பெரியதாய் அமைய முடியும். ஈழத்தமிழர்களுக்கு குரல்கொடுக்க கூடிய சக்தியாய் புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழகமும் விளங்குகின்றது. இதில் தமிழக மாணவர்கள் கட்சி வரம்புகளைக் கடந்தவர்கள் என்பதனாலும், நீதி, நியாயத்தின் பெயரிலான தர்மாவேசத்தை கொண்டவர்கள் என்பதனாலும் அவர்களது பங்கும், பாத்திரமும் மகுடமென திகழவல்லது. தமிழக மாணவர்களின் முதற்பணி இதுதான். அவர்கள் ஒரு கருத்துருவாக்க சக்தி. அவர்கள் மக்களை ஒருவரோடு ஒருவராக ஒட்டி இணைக்கவல்ல சக்தி. அவர்கள் மக்களை திரட்சியாக்குவதன் மூலம் மக்களை வரலாற்றின் சக்தியாக்கும் படைப்புத் தொழிலை புரிபவர்கள்.

 

ஈழத்தமிழர்களை சிங்கள அரசு இந்தியாவின் பெயரால்தான் ஒடுக்குகின்றது. இந்திய ஆதிக்கத்தின் மீது சிங்கள அரசுக்கு இருக்ககூடிய பயத்தின் பெயரால் அது ஈழத்தமிழர்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஒடுக்கி வருகின்றது. உண்மையாக சொல்வதென்றால் சிங்கள அரசானது இந்திய ஆதிக்கம் பற்றிய பயத்தின் விளைவால் இந்தியாவுக்கு எதிரான தனது யுத்தத்தை ஈழத்தமிழர்கள் மீது புரிகின்றது. இன்னொருவகையில் சொன்னால் இந்தியாவுக்கு எதிரான சிங்கள யுத்தத்துக்கு ஈழத்தமிழர்களே பலியாகின்றனர். இந்நிலையில் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியா தனது நலனுக்காகவேனும் ஈழத்தமிழர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் அதற்குண்டு.

 

தமிழக மாணவர்களின் எழுச்சி இப்பிராந்திய அரசியலை மேற்கூறிய முழுமையான பரிமாணத்திற்கு இட்டுச்செல்ல உதவும் என்பதில் சந்தேகமில்லை. தேவைகளே நடைமுறைகளை நிர்ணயிக்கின்றன. தமிழக மாணவர்கள் நடைமுறையில் இதற்கான பாத்திரமாக மாறுவது வரலாற்று இயல்பு. ஆதலால் தமிழக மாணவர்களின் பொறுப்பு மிகப் பெரியது. ஈழத்தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழக மக்களும், தமிழக மாணவர்களும் முதற்கண்ணாய் அமைய, இதன் தளத்தில் அது முழு இந்தியா தழுவிய ஜனநாயக அலையை தோற்றுவித்து மனித குலத்துக்கான நீதியின் அச்சாணியாய் திகழ முடியும்.

 

பிரான்ஸ் மாணவர் புரட்சி ஐரோப்பா முழுவதும் எப்படிப் பரவி பெரும் நெருப்பாக எழுச்சி கண்டதோ, அப்பிடி தமிழக மாணவர் போராட்டங்களும் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. இதனை சரியான முறையில உணர்ந்து எமது இலக்கை நோக்கி யதார்த்தபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்போமானால் தற்போதுள்ள சர்வதேச சூழுலை எமக்கு சாதகமாக மாற்றி எமது வெற்றியை நோக்கி நகரமுடியும்.

 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=7&contentid=5657adae-f193-43ce-9bab-4ed735ba79f1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.