Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அம்மம்மா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அம்மம்மா

 

ராமன் ராஜா
 

‘நேச்சர்’ இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ஆரெகான் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மூன்று பெற்றோர் கொண்ட குழந்தைக் கரு ஒன்றை உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.


ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்களா ? ஆம், ஒரு அப்பா, இரண்டு அம்மா !


இது எப்படி சாத்தியம் என்று பார்ப்பதற்கு முன், நாம் மைடோகாண்ட்ரியாவை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. புழுப் பூச்சி முதல் ஆண்ட்ரியா வரை அனைவரையும் இயக்குவது மைடோகாண்ட்ரியாதான்.


ivf_2516828b.jpg


ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கலாம்: நம்முடைய உடல், செல்களால் ஆனது. முகம், முடி, நகம் எல்லாவற்றுக்கும் வெவ்வேறு வித செல்கள்.


ஒரு செல்லுக்குள் புகுந்து பார்த்தால், அங்கே ஒரு மாபெரும் கெமிக்கல் தொழிற்சாலையே இயங்குகிறது. ஏகப்பட்ட மாலிக்யூல்கள் (மூலக் கூறுகள்) இணைந்தும் பிரிந்தும் சங்கிலி நடனம் ஆடுகின்றன. ஆக்டின் இழைகள் தமக்குத் தாமே பிணைந்து வயர் கூடை பின்னுகின்றன. இரண்டு சின்னஞ் சிறிய கால்களால் அடி மேல் அடி வைத்து பலூன் வியாபாரி மாலிக்யூல் ஒன்று நடந்து போகிறது. கொழுப்புக் கடலில் ஒரு லிபிட் தெப்பம் மிதந்து வருகிறது. அதன் மீது ஒரு தொண்டர் கோஷ்டியே அலப்பறை செய்துகொண்டு ஏதோ கட்சி மாநாட்டுக்குப் போகிறது.


செல்லின் நடுவில் வட்டமாக மெத்தை போட்டு, திண்டு வைத்துக்கொண்டு முகலாயச் சக்ரவர்த்தி போல உட்கார்ந்திருப்பதுதான் மையக் கரு. அதற்குள் சுருட்டிய இரட்டை வடச் சங்கிலி போன்ற டி.என்.ஏ. இதில்தான் நம் பாட்டன், முப்பாட்டன் கொடுத்த மரபு வழிச் செய்திகள் அனைத்தும் பதிவாகி இருக்கின்றன. நம் சைடு வழுக்கை, சப்பை மூக்கு எல்லாவற்றுக்கும் ஆதி காரணம் டி.என்.ஏ.


இப்போது முதன் முறையாக நாம் மைடோகாண்ட்ரியாவை சந்திக்கிறோம். பெரு மூச்சு விடும் அட்டைப் பூச்சி போல் ஆயிரக் கணக்கில் நீந்திக்கொண்டு இருக்கிறதே, அதுதான் மைடோகாண்ட்ரியா. இந்தக் கதையின் நாயகன்.


நம் செல்கள் இயங்க, வளர, தேய, சாக அவற்றுக்கு சக்தி தேவை. அதைத் தருவது ஏ.டி.பி எனப்படும் நுணுக்கமான பாஸ்ஃபேட் பாட்டரிகள். மைடோகாண்ட்ரியாவின் முக்கிய வேலை இந்த ஏ.டி.பியைத் தயாரிப்பது. நாம் சுவாசித்த காற்று, சாப்பிட்ட பிரியாணி இரண்டையும் திறமையாகக் கலந்து ஏ.டி.பியைத் தயாரித்துத் தள்ளுகிறது. ஒரு விஷயம்: நாம் ஏரோபிக் உடற்பயிற்சிகள் செய்யும்போது செல்களில் படு வேகமாக ஏ.டி.பி உருவாகிறது. (எனவே, எழுந்திருங்கள் !)


ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தார், செல்லுக்குள் நடக்கும் மைக்ரோ நாடகங்களை ஆச்சரியமான அனிமேஷன் படங்களாகத் தயாரித்து யூ-ட்யூபில் வெளியிட்டிருக்கிறார்கள். இப்போது யூ-ட்யூப் பார்க்கும் வசதியுடன் ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சிப் பெட்டி கூட வந்துவிட்டது. வில்லிப் பெண் சீரியல்களுக்கு நடுவே ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி இதையும் பார்த்துவிடலாம் என்று வலுவாக சிபாரிசு செய்கிறேன்.


சிவம் இல்லையேல், சக்தி இல்லை. விஞ்ஞானத்தைப் பொறுத்த வரை மைடோகாண்ட்ரியாதான் பரம சிவம் !


இவ்வளவு உபயோகமான மைடோகாண்ட்ரியாவிடம், ஒரு கெட்ட குணம். அது சில சமயம் முறைத்துக்கொண்டு ‘நீ போடுகிற மத்தியான சோற்றுக்கு இது போதும் போ’ என்று சுணங்கிப் போய்விடும். அதிகம் சக்தி தேவைப்படுகிற உறுப்புக்களான மூளை, இதயம், ஈரல் போன்றவை பாதிக்கப்படும். தசைகள் மெல்லச் சிதையும். கை காலை அசைக்க முடியாமல் படுக்கையில் கொண்டு தள்ளிவிடும். கடைசிக் கட்டத்தில் இதயம் சுருங்கி விரிவதற்குக் கூட சக்தி இல்லாமல் போகும்போது, நோயாளிக்கு நிரந்தர விடுதலை. ஒரு வகையில், உயிர் என்பதே செல்லுக்குள் ஓயாமல் நடக்கும் இந்த சக்திக் கூத்துதான்.


சுமாராக நம்மில் 200 பேரில் ஒருவருக்கு மைடோகாண்ட்ரியா பிரச்சினை உள்ளது என்கிறார்கள். நல்ல வேளையாக, எல்லோருக்கும் தசைச் சிதைவு போன்ற வியாதிகளாக வெளிப்படுவதில்லை. ஆனால் இது மரபு வழியாகத் தாயிடம் இருந்து குழந்தைக்குக் கடத்தப்படும் வியாதி.


இதற்கு என்னதான் தீர்வு ? இது நாள் வரை, நல்லபடியாகக் குழந்தை பிறந்தால் திருப்பதிக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டு திருமண வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். இப்போது விஞ்ஞானம் வேறொரு வழி கண்டுபிடித்திருக்கிறது : கரு உருவாகும் போதே மைடோகோண்ட்ரியாவை மாற்றிவிடு !


ivf_1671864c.jpg


ஒரு கற்பனைக் கதை சொல்கிறேன். அத்தினி, சித்தினி என்று இரண்டு பெண்கள். அத்தினிக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை. ஆனால் அவளுடைய மைடோகாண்ட்ரியாவில் குறைபாடு இருக்கிறது.


சித்தினியின் மைடோகாண்ட்ரியா ஆரோக்கியமாக இருக்கிறது. அவளும் அத்தினிக்கு உதவ முன்வருகிறாள். இரண்டு பேரும் ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுடைய சினை முட்டைகள் ஊசி மூலம் எடுக்கப்படுகின்றன. சித்தினியின் முட்டையில் இருந்து மையக் கருவை மட்டும் எடுத்து எறிந்துவிட்டு (ஊப்ஸ் ! ‘அது மட்டும் உயிர் இல்லையா ?’ என்பது தனிப் பெரும் கேள்வி) அந்த இடத்தில் அத்தினியின் கருவை வைத்துப் பொதித்து விடுவார்கள்.


ஆக, சித்தினியின் மைடோகாண்ட்ரியா, அத்தினியின் டி.என்.ஏ.


பிறகு, அத்தினி கணவரின் விந்து முத்துக்களைக் கேட்டு வாங்குவார்கள். சிறிய கண்ணாடித் தட்டில் சினை முட்டைக்கும் விந்தணுவுக்கும் அறிமுகம் செய்து வைக்கப்படும். எல்லாம் சரியாக நடந்தால், கரு உருவாகும். குழந்தை சில நாட்கள் மைக்ரோஸ்கோப் மேற்பார்வையில் வளரும். பிறகு அதை வலிக்காமல் மெல்லப் பிடித்து அத்தினியின் கர்பப் பையில் வைத்துக் கதவைச் சாத்திவிடுவார்கள். ஒன்பது மாதம் கழித்து குவா குவா, பிறகு எல்.கே.ஜி அட்மிஷன் என்று ஆரம்பித்து, கடைசியில் ‘அத்தினியும் அவள் கணவரும் முதியோர் இல்லத்தில் சுகமாக வாழ்ந்தார்கள்’ என்பது வரை பின் கதைச் சுருக்கம் பூராவும்தான் உங்களுக்குத் தெரியுமே ?


இந்தத் தொழில் நுட்பம், ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. இன்னும் குழந்தை பிறக்கும் வரை செல்லவில்லை. முற்றும் துறந்த அமெரிக்காவில் கூட சட்டப்படி இந்த மாதிரிக் குழந்தையை உருவாக்க அனுமதி இல்லை. ஆனால் இரண்டு மூன்று வருடத்தில் வந்துவிடும் போலத்தான் தெரிகிறது. பிரிட்டனில் பொது விவாதம் ஆரம்பித்திருக்கிறார்கள்; அதில் ஒரே அடிதடி ! சீனாக்காரர்கள் வேறு, பரம ரகசியமாக ஏதோ செய்து வருகிறார்கள்.


இது வரை நாம் பேசியது பயோ டெக்னாலஜி. ஆனால் விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட பல உப கேள்விகளுக்குத்தான் இன்னமும் பதில் இல்லை. உதாரணமாக, சித்தினியின் மைடோகாண்ட்ரியாவுக்கு உள்ளேயும் வட்ட வளையமாக டி.என்.ஏ உண்டு. குழந்தையின் வம்சாவழி அடையாளத்தில் அந்த மரபீனிகளுக்கும் பங்கு உண்டு. அதற்கும் கல் தோன்றி மண் தோன்றாத காலத்திலிருந்து கத்தியும் கையுமாக அலைந்த பரம்பரைப் பெருமிதங்கள் உண்டு.


இதில் வேறொரு திருகலும் சாத்தியம்: இரண்டு ஜெனடிக் அம்மாக்களும் இல்லாத மூன்றாம் மனுஷி கூட அந்தக் கருவை ஒன்பது மாதம் சுமந்து பெற்றுக் கொடுக்க முடியும். இன்றைய அவசர உலகில் மாதர் பலருக்குத் தாயாக நேரமில்லை. அதனால் கர்ப்பப் பையை வாடகைக்கு விடுவது என்பது, ஒரு குடிசைத் தொழிலாகவே வளரப்போகிறது. எனவே, சங்கினி என்று ஒரு புதிய காரெக்டர் கதையில் நுழைகிறது.


மூன்று தாய்மாருக்கும் - போனால் போகிறது என்று தந்தையாருக்கும் - குழந்தையின் மீது உரிமைகள் என்ன, கடமைகள் என்ன ? அந்தக் குழந்தை வளர்ந்து விவரம் தெரியும் வயதாகிற போது இந்தக் குழப்பமெல்லாம் தெரிய வந்தால், அதன் மன நிலை எப்படியெல்லாம் பாதிக்கப்படும் ? விக்கிரமாதித்தன் கதையில்தான் இந்த மாதிரி தார்மீகச் சிக்கல்கள் வரும் !


பள்ளிக்கூடம் சேர்க்கும்போது யாரை அப்பா, அம்மா என்று ரெஜிஸ்டரில் பதிய வைப்பது ? நான்கு பெற்றோர்களும் வெவ்வேறு ஜாதியாக இருந்தால், தாசில்தார் சர்டிபிகேட் தருவார்களா ? இப்படி ஒரு பிரச்சினை.


ஒரு வேளை, அத்தினியின் விவாகம், ரத்து கித்து ஆகித் தொலைந்துவிட்டால் ? நான்கு பேரும் ‘பேபி என்னுடையதுதான்’ என்று மல்லுக் கட்டினால் ? நம்முடைய வயதான நீதிபதிகளும் வாய்தா வக்கீல்களும் இந்தப் பிரச்சினையின் பரிணாம, தொழில் நுட்ப, உளவியல் முடிச்சுக்களைப் புரிந்து கொள்வார்களா ? அதற்கு அவர்களுக்கு என்ன பயிற்சி தேவைப்படும் ? 1950-ல் மானிட வாழ்க்கை சிக்கலின்றி எளிமையாகக் கழிந்து வந்ததால், அப்போது செய்த சட்டங்கள் போதாது. புதிய சட்டம் இயற்ற, நம் பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டா எம்.பி.க்கள் அத்தனை பேருக்கும் யார் வகுப்பு எடுப்பது ?


தற்போதைக்கு இதை ‘மரபு வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கிறோம்’ என்ற சாக்கில் மெல்ல ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இத்தெல்லாம் அத்தோடு நிற்காது என்பதுதான் உலக அனுபவம். காசு வாசனையை முகர்ந்துவிட்டால், வணிகச் சந்தை மூர்க்கமாக உள்ளே நுழையும். ‘டிசைனர் பாப்பா பெற்றுத் தருகிறோம் - உங்கள் குழந்தைக்கு என்ன மாதிரி மூக்கு வாய் காது வேண்டும் என்று மெனு கார்டில் தேர்ந்தெடுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். முழுத் திருப்தி இல்லையேல், முப்பது நாளைக்குள் திருப்பிக் கொடுத்து முழுப் பணமும் வாபஸ்” என்று ஒரு நாள் விளம்பரமும் வரத்தான் போகிறது.


பய டெக்னாலஜி !

 

http://solvanam.com/?p=24484

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.