Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பராசக்தி - திரைவிமர்சனம்

Featured Replies

விமர்சனத்துக்கு முன்பான என் குறிப்பு : இந்த விமர்சனத்தை எழுதியவர் சைவப்பெரியார் சூரன்... இவர் என் நண்பர் மயூரியின் பாட்டனார்.... ஈழத்திலே ஜாதி வேறுபாடுகள் களைய போராடியவர்.... ஆலயங்களில் பலிகளைத் தடுக்க தன் தலையையே பலி பீடத்தில் வைத்தவர்.... தனது இலங்கை விஜயத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி இவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்....

பதிகங்கள் பாடுவதிலும் கவியாற்றுவதிலும் வல்லவரான சூரன் பராசக்திக்கு எழுதிய விமர்சனமே இலங்கையின் முதல் படவிமர்சன நூலாகும்.... ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் அடிப்படைக் கல்வி கற்ற திரு. சூரன் பராசக்தியின் திறனாய்வுக்காக சைவ சித்தாந்த கருத்துக்களை ஆதாரமாக காட்டியிருப்பதே இந்த விமர்சனத்தின் சிறப்பு....

நாத்திகப் படம் என்று பலரால் தூற்றப்பட்ட அல்லது போற்றப்பட்ட பராசக்திக்கு ஒரு பழுத்த ஆத்திகர் அவரது பார்வையில் விமர்சனம் எழுதி இருப்பது கொஞ்சம் வித்தியாசமாவே இருக்கிறது.... சரி விமர்சனத்துக்கு போவோமா? கொஞ்சம் நீண்ட விமர்சனம்.... பொறுமை இருந்தால் மட்டுமே படிக்கவும்.... 1952ஆம் ஆண்டு ஈழத்து எழுத்துத் தமிழை விமர்சனகர்த்தா பயன்படுத்தி இருக்கிறார்....

விதவை கல்யாணிக்கு அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி!

பராசக்தி என்ற பேசும்படம் இந்து சமயத்தை ஏளனஞ் செய்கிறதென்று சிலர் சொல்லக்கேட்டு, நான் அப்படத்தைப் பார்க்க விரும்பவில்லை. தற்செயலாக மேற்படி படக்கதைப் புத்தகமொன்று எனக்குக் கிடைத்தது. அதை வாசித்தேன், அக்கதையிலே சமய தூசணையின்றி எமது சமயச்சார்பான பல இரகசியங்களைக் கண்டேன். அதன்பின் அப்படத்தை இரண்டு முறை பார்த்தேன். படம் பார்ப்பதற்காக நான் கொடுத்த சிறுதொகைப் பணத்தால் சிலைமதிப்பற்ற எமது சமய தத்துவ இரகசியங்கள் பலவற்றை நேரிற் கண்டறிந்தேன்.

அதாவது எமது சமயநூல்கள் உலகியல் அநுபவங்களைப்பற்றி எந்தெந்த விதமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றனவோ அந்தந்த விதமாகவே உலகம் இன்றும் நடைபெற்ற வருதலை நாம் நேருக்கு நேர் காண்கின்றோம். ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்எனையாளும் ஈசன் செயல்இஃது ஒளவைத்திருமகள் வாக்கு. இதன் பொருள் வெளிப்படை, இதன்கண் எடுத்தோதப்பட்ட உண்மைகள், எக்காலத்திலாதல் எவர் அநுபவத்திலாதல் பொய்யாதல் இல்லை. அவ்வுண்மைகளைக் கூறுகூறாக மேற்படி பராசக்திக் கதையோடு சார்த்தி ஆராய்வோம்.

“ஒன்றை நினைக்க வேறொன்று ஆனது"

மாணிக்கம்பிள்ளையின் புதல்வர்களாகிய சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் என்னும் மூவரும் பர்மாதேசத்தில் இருக்கிறார்கள். அவரின் புதல்வி கல்யாணிக்குத் திருமணம் நிச்சயமாகிறது.. தன் விவாகத்திற்குத் தமையன்மார்கள் வரவேண்டுமென்பதைக் கல்யாணி தந்தைக்கு அறிவிக்கிறாள். தங்கையின் கல்யாணத்திற்குப் போக நினைத்த சகோதரர்கள் மூவருக்கும் கப்பல் சீட்டுக் கிடைக்காமையால் இளையோன் குணசேகரனை மட்டும் அனுப்புகிறார்கள். இந்தியா வந்து சேர்ந்த குணசேகரனின் பணப்பெட்டியை ஒரு தாசி அபகரிக்கிறாள். இங்கு கல்யாணி நினைத்தது. முதல் குணசேகரன் பணம் பறிகொடுத்தது ஈறாக அவர்கள் நினைத்தபடி நடவாமல் எல்லாம் வேறாக மாறியே நடந்தன.

“நினையாதது முன்வந்து நின்றது"

அதன்பின் கல்யாணி பிரசவிக்கிறாள். அதே சமயத்தில் அவளுடைய கணவனும் தந்தையும் அகாலமரணமடைகிறார்கள் பர்மாவிலே யத்தவிமானங்கள் குண்டுமாரி பொழிகின்றன. சந்திரசேகரனும் அவன் மனைவியும், ஞானசேகரனும் பாதசாரிகளாக இந்தியா வருகிறார்கள். குண்டுசீச்சில் அகப்பட்ட அவர்களும் பிரியநேருகிறது. சந்திரசேகரன் ஆஸ்பத்திரியில் ஞானசேகரனைக் காணாமையால் துன்புற்ற அழுகிறான் பணத்தைப் பறி கொடுத்த குணசேகரனோ ஊணுறக்கமின்றி நடைப்பிணமாக அலைந்துலைகிறான். இங்கு அவர்கள் நினையாத காரியங்கள் அவர்கள் முன்வந்து அவர்களை அலைத்து நிற்கின்றன.

“அநுபவிக்கவேண்டிய பிராப்த கன்மவினை"

அப்பால் மாணிக்கம்பிள்ளையின் வீடுவளவு முதலியனவெல்லாம் அவர்பட்ட கடனுக்காக விலைப்படுகின்றன. கல்யாணி திக்கற்றவளாய் வேறிடத்தில் இட்டலி வியாபாரம் செய்து காலம் கழிக்கிறாள். இந்தவிதமாக மாணிக்கம்பிள்ளையின் குடும்பத்துக்கு நேர்ந்த அவகதிக்குக் காரணம் பழைய ஊழ்வினை என்றார் ஒளவைப்பிராட்டியார். “ஆழ அமுக்கி முகக்கினும் அழ்கடல்நீர்நாழி முகவாது நால்நாழி - தோழிநிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்விதியின் பயனே பயன்"என்றபடி அவரவர்கள் செய்த வினையின் பயனை அவரவர்களே அநுபவித்துத் தீர்க்கவேண்டும்.

இதுவே விதியின் முடிபு, “விரவுமிப் பிறப்பிற் பொருந்து வல்வினை உடலுடன் அகலும்"என்ற ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளுக்குச் சிவபெருமான் பரமாசாரிய வடிவத்தில் திருப்பெருந்துறையில் உபதேசித்தருளினார். அதாவது ஒருவர் ப+மியிற் பிறந்தபின் அவருக்கு நியமனமாயிருந்த ப+ர்வகன்ம வினையை அவர் உடல் உள்ளவும் அநுபவித்தே தீரவேண்டும். இங்கு வல்வினை என்றது பிராப்த கன்மவினையை. இந்தவினை குபேரசம்பத்துடன் இன்பத்தையும், அல்லது கொடிய வறுமையுடன் துன்பத்தையும் அநுபவிக்கச் செய்யும். இவை பூர்வத்தில் அவரவர் செய்த நல்வினை தீவினைகளைப் பற்றி நிற்பனவாம்.

“நாழிமுகவாது என்றது, அவரவருக்கு அளந்த அளவை மிஞ்சாது என்றபடி இவற்றைஎண்ணி மனந் தளராது அநுபவிக்கவேண்டிய பல கஸ்டங்களையும் அநுபவித்துச் சன்மார்க்க நெறியாகிய சத்தியம், நீதி, நிலைதிறம்பாமை ஆகியவற்றைக் கடைப்பிடித்து, உய்ரையும் பொருட்படுத்தாது ஒரே பிடிவாத வைராக்கிய பக்தியுடன் நிலைநிற்பவரே திருவருட் சக்தியைப் பெறுவர். ஆரம்பமுதற் பல கஸ்டங்களை அநுபவித்தும், மகளிர் குணங்களாகிய மடம், நாணம்,அச்சம், பயிர்ப்புடையளாய்க் கற்பென்னும் திண்மையுடன் விளங்கி, அன்னை பராசக்தியின் திருவருட்சக்தியைப் பெற்றவள் இக் கதாநாயகியாகிய கல்யாணியே. இவள் தன் கணவனையும், தாய் தந்தையரையும், வீடுவளவு முதலிய பொருட்களையும் தன் வாலைவயதில் இழந்து, சகோதரர்களையும் பிரிந்து, தன் குழந்தையின் பொருட்டு உயிர் தாங்கி நின்று தெருக்கோடியிலே ஓட்டைக் குடிசை ஒன்றில் இட்டலி அவித்து விற்கிறாள். வேணு என்ற காடையன், அவள் இதயத்தில் கற்பென்னும் அக்கினி இருப்பதை அறியாது, தன்பாவ அழுக்குக் கையால் அவளின் புனிதக் கையைப்பற்றி இழுக்கிறான். உடனே அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி, குணசேகரனை அதிட்டித்து நின்ற வேணு என்ற அம்மனிதக் குரங்குக்குப் போதிய அடி, உதை கொடுத்து ஒடச்செய்கிறது.

அந்த அர்த்தசாம வேளையில் அக்காடையன் கையிலிருந்து கல்யாணி விலகியமை அன்னை பராசக்தியின் திருவருட்சக்தியே, அதனையன்றி யாம் சொல்லத்தக்கது வேறுயாது? கல்யாணி குணசேகரனைத் தன் தமையனென்றறியாமல் பைத்தியக்காரனாகவே எண்ணிக் கிறுக்கண்ணா என்றே அழைக்கிறாள். இட்டலி வியாபாரம் தெருக்கோடிச் சோம்பேறிகளைத் தன்பால் வரவழைப்பதாக உணர்ந்த கல்யாணி, தொழிலையும் இடத்தையும் கைவிட்டு அகலுகிறாள். குணசேகரன் அவளைத்தேடி அலைகிறான்.

“குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்நடைமெலிந் தோரும் நண்ணிணும் நண்ணுவர்" என்ற பிரகாரம், முன்னொரு போது செல்வச் சிறப்புடன் வாழ்ந்த கல்யாணி இப்போது தெருநீளம் நடந்து ஊரூராகத் திரிகிறாள்.

“சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்"

கல்யாணி தான் பட்டினி கிடந்தமை காரணமாகக் குழந்தைக்குக் கொடுக்கப் பால் இல்லாமற்போகவே, பிச்சையெடுக்க ஆரம்பிக்கிறாள். இவ்வாறு பசியின் கொடுமையாற் பல இடற்களிலும் பிச்சை கேட்டுச்சென்ற கல்யாணி கள்ளமார்க்கட் வியாபாரி ஒருவனிடம் வீட்டுவேலையாளாக அமருகிறாள். வியாபாரி தன் மனைவியைப் படம் பார்க்க அனுப்புகிறான். அவள் திரும்பி வருவதற்குள் தனது துர்த்தத்தனத்தைக் கல்யாணியிடங்காட்ட நினைத்த வியாபாரி கள்ளமார்க்கட்டில் தான் பதுக்கிவைத்திருக்கும் புளி மூட்டை முதலியவற்றை இழுப்பதுபோல அவள் கையைப்பிடித்து இழுக்கிறான்.

இந்தச் சமயத்திலே கல்யாணியின் இதயக்குரல் கேட்ட அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி வியாபாரியின் மனைவியால் வேகமாகப் பாய்ந்து, படம் பார்த்துக்கொண்டிருந்த குறையில் அவளைக் கறகறவென்று இழுத்துவந்து கல்யாணியின் முன்விட்டு அவள் கற்பைக் காப்பாற்றியது.

அதன்பின் அவ்விடத்திலும் இருக்க விருப்பமற்று வெளியேறிய கல்யாணி சேகரன் என்ற நீதவானைப் பிச்சைகேட்டு அவன் காலில் விழுகிறாள். அவன் தனது சப்பாத்துக்காலால் கல்யாணியையுங் குழந்தையையும் உதைத்து வெருட்டுகிறான். அங்கு நின்ற கல்யாணி குழந்தையுடன் ஒரு காளிகோயிலை அடைகிறாள். அக்கோயிலிலே சமய அறிவும் சன்மார்க்கமும் இல்லாத மூடப்பூசாரி அவளைப் பார்த்து உனைப்போன்ற ஏழைகளுக்கே அம்பாள் நல்லருள் தருவாள் என்றுகூறி அவளை மரியாதையுடன் உள்ளே அனுப்புகிறான். பொய்,களவு, வஞ்சனை, காமம் முதலிய பாதகங்களையெல்லாம் தன்நெஞ்சத்திருத்தி அவைகளைப் பிறர் காணாதவாற விப+தி சந்தணம் உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களைப் புறத்தே அணிந்துநின்ற அப்போலிப் பூசாரியின் சிந்தனை அலைகள் மூன்றாகப் பிரிகின்றன.

உலகம் மாயையின் தோற்றம், மாயை மூன்றுவகைப்படும். பிரகிருதிமாயை, அசுத்தமாயை, சுத்தமாயை என்பனவே அவை. பிரகிருதியாய்நின்ற பூசாரியை மயக்கத்தைச் செய்யும் அசுத்தமாயை கல்யாணியின் மையலில் தூண்டிவிடுகிறது. அறிவுக்க வித்தாகிய சுத்தமாயை தன்வலுவிழந்து பின்செல்லுகிறது. இறைவனுடைய திருவருட்சக்தி பதியப்பெறாத எவரும் இந்த அசுத்தமாயையின் சேட்டையினின்றும் மீள்வதில்லை. ஆகவே சகல அண்டசராசரங்களுடன் கலந்தும் அவற்றைக் கடந்தும் நிற்கும் மெய்ப்பொருளாகிய இறைவசந்நிதானத்தில் தான் செய்யத் துணிந்த துர்க்கிருத்தியத்திற்கப் பெட்டிப் பாம்பு தன்னை ஆட்டுங்குறவன்வழி ஆடுவதுபோல அன்னைபராசக்தியும் தன்வழி நின்று துணைபுரிவாளென மயங்கிய பூசாரி கல்யாணியின் கரத்தைப் பற்றுகிறான்.

அக்கணமே அன்னை பராசக்தியின் திருவருட்சக்திக் கண்ணினின்றும் சிறுபொறிகள் சிதறிச்சென்று அப்பூசாரியின் பண்ப்யாளாகிய குப்பன்பாற் புகுந்து அவனை நித்திரை விட்டெழச்செய்து மணியை அடிப்பிக்கிறது. மணியோசை கேட்டுத் திடுக்கிட்ட பூசாரி கல்யாணியின் கையை மெல்லவிட்டு விடுகிறான. கல்யாணி வெளியேறுகிறாள்.

இறுதியில் தானுந் தன்குழந்தையும் உயிர்விடுத்தே விமோசனத்துக்கு வழியெனக் கருதிய கல்யாணி ஓர் ஆற்றின் பாலத்தின்மேல் நின்றுகொண்டு குழந்தையை ஆற்றிலே எறிந்துவிட்டுத் தானும் விழுந்துமடிய எத்தனிக்கையில் அன்னை பராசக்தியின் திருவருட்சக்தியானது அந்த ஆற்றிலே படகோட்டிக்கொண்டு நின்ற விமலா என்னும் ஒரு யுவதியின் மடியிலே குழந்தை விழுமாறும் கல்யாணியைப் பொலீசார் கண்டு தடுத்து நிறுத்துமாறும் செய்தது. இந்த இடத்தில் நாம் அறியவேண்டியது கடவுள் தோன்றாத் துணையிருந்து அருள்புரியும் திறனாகும்.

திருநாவுக்கரசு சுவாமிகளைச் சமணர்கள் கல்லோடு சேர்த்துக்கட்டிக் கடலிலே விட்டபோது அக்கல்லே, தெப்பமாக மிதந்து சென்று திருப்பாதிரிப்புலிய+ரில் சுவாமிகளைக் கரையேற்றியது. அப்பொழுது சுவாமிகள் “ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் உடன் தோன்றினாய் என்னும் தேவாரத்தைத் திருவாய்மலர்ந்தருளினார். அது தேவாரத்தின் இறுதியடி. “தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி யேங்களுக்கே என்பது.

இறைவிபக்தியிற் சிறந்த கல்யாணி பல கஸ்டங்களுக்குட்பட்டும் வைராக்கிய திடசித்தத்துடன் கற்புநெறிநின்று ஒழுக்கங்காத்தமையால் அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி அவளை நிழல்போலத் தொடர்ந்துசென்று வேண்டிய சமயங்களிலே தோன்றாத்துணை புரிந்து வந்தது. திருவருள் தோன்றாத்துணை அளிப்பதுபோலவே தோன்றாத் தண்டனையும் அளிப்பதுண்டு. கள்ளமார்க்கட் வியாபாரி கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பி வீட்டுக்கு வருகிறான். அவனுடைய வேலைக்காரன் கொடுத்த பாதித் தேங்காயைப் பிச்சைக்காரனிடமிருந்து பறித்துவிடுகிறான். இதுகண்ட குணசேகரன் அன்னை பராசக்தியின் அதிட்டிப்பால் வியாபாரியிடமிருந்த பிரசாதம் முழுவதையும் தட்டுடன் பறித்துப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்துவிட்டு வியாபாரியை நையப்புடைத்து உதைத்து ஓடச்செய்கிறான். வியாபாரிக்க இங்கு கிடைத்த தண்டனை கல்யாணியைத் தொட்ட பாவத்தின் வினையென்பதை யாருமறியார். இதுவே தோன்றாத் தண்டனையாம்.

கல்யாணி கொலைக் குற்றவாளியாகக் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறாள். விசாரணை நடத்திய சேகர் என்னும் நீதிபதி அவளுடைய பூர்வீக வாழ்க்கை வரலாற்றை அவள் கூறக்கேட்டு அவளே தன்னிடம் பிச்சைகேட்க வந்து, தன் சப்பாத்துக் காலால் இடறுண்டு போனவள் என்றும், அவளே தன்தங்கை கல்யாணி என்றும் அறிந்து தலை சுழன்று கீழே விழுகிறார். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பைத்தியக்காரன்போற் கிடந்து “கல்யாணி! என் கல்யாணி! என்று பிதற்றுகிறார்.

பூசாரியின் அடாத செயலுக்குத் தோன்றாத்தண்டனை புரியச் சங்கற்பஞ்செய்த அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி, பூசாரியின் பணியாளாகிய குப்பன் வாயிலாக கோயிலில் நடந்த சம்பவத்தைக் குணசேகரன் கோயிலுக்குச் சென்று ப+சாரிக்குக் கத்தியால் வெட்டுகிறான். பொலீசார் கைதுசெய்து கோட்டிலே நிறுத்துகிறார்கள். சேகருக்குப் பதிலாக வேறொரு நீதிபதி கல்யாணியின் விசாரணையைத் தொடர்ந்து நடத்துகிறார். அங்க குணசேகரன் தன்னை வஞ்சித்துப் பணத்தை அபகரித்த தாசி, கல்யாணியின் கற்பைச் சூறையாடச் சூழ்ச்சிசெய்த வேணு, கள்ளமார்க்கட் வியாபாரி, பூசாரி என்பவர்களைக் குறிப்பிட்டுக் காட்டி முன்நடந்த சம்பவங்களையெல்லாம் பிரஸ்தாபித்து வாதாடுகிறான்.

கல்யாணி தன் தங்கை என்றும், அவள் நிரபராதி என்றும் எடுத்துக்காட்டி அவளை விடுதலை செய்யுமாறும் தனக்குத் தண்டனை விதிக்குமாறும் கோட்டாரை வேண்டுகிறான். நீதிபதியோ கல்யாணி கொலைக்குற்றவாளியென்றே சாதிக்கிறார். அப்பொழுது அன்னை பராசக்தியின் திருவருட்சக்தியால் உந்தப்பட்டு “கல்யாணி குற்றவாளி இல்லை இதோ கல்யாணியின் குழந்தை என்ற கூறிக்கொண்டு குழந்தையுடன் விமலா கோட்டிலே பிரசன்னமாகிறாள்.

அரவு தீண்டி இறந்த தேவதாசன் உயிர்பெற்றெழுந்தபோது சந்திரமதி அடைந்த பெருமகிழ்ச்சிபோல கல்யாணியம் ஆற்றில் எறியப்பட்டு மாண்டுபோன தன் குழந்தை மீண்டுவந்தமைகண்டு குதுஸகலித்து விமலாவிடமிருந்து குழந்தையை வாரியெடுத்தணைத்து முத்தமிடுகிறாள். நீதிபதி விமலாவைப் பார்த்து, அக்குழந்தை உயிருடன் அவள் கையில் எவ்வாறு எறியப்பட்டதென வினாவ, அவளும் தான் நிலாக்காலங்களில் வழக்கமாக வள்ளத்திலே உலாவப் போவதென்றும், அன்றும் அப்படியே போய்க்கொண்டிருக்கையிற் தன்படகிலே அக்குழந்தை விழுந்ததென்றம் சொல்லி மேலும் நடந்தவற்றைப் பிரஸ்தாபிக்கிறாள். அவ்வளவிற் கல்யாணி நிரபராதியென விடுதலையாகிறாள்.

குணசேகரன் பூசாரியை வெட்டியது தற்பாதுகாப்பின் பொருட்டென உணர்ந்த நீதிபதி அவனுக்கும் விடுதலையளிக்கிறார். எல்லோரும் சந்திரசேகரன் வீட்டிற்குப் போகிறார்கள். பிச்சைக்காரர் மாகாநாடு கூட்டுவதில் பணிசெய்துகொண்டு திரிந்த ஞானசேகரனும் அங்கு வந்து சேருகிறான்.

“ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம்"

இதுவரை மாணிக்கம்பிள்ளையின் குடும்பத்தை அல்லோலகல்லோலப்படுத்திய பிராப்த கன்மவினை முற்றாக அநுபவித்துத் தீர்ந்துபோகவே அவர்களின் நல்லூழ் ஒன்று கூட்டியது. இதற்கு முன்பும் அவர்கள் எல்லோரும் ஓரூரில் இருந்தும் ஒருவரையொருவர் சந்தித்தும் “ ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம்" என்றபடி ஒருவரையொருவர் அறிந்து சேர்ந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சந்திப்பிற்குப் பின், ஆடம்பர வாழ்க்கைச் சிகரத்தில் நின்ற சந்திரசேகரனும், ஒருவேளைக் கஞ்சிக்காகப் படாதபாடெல்லாம்பட்ட கல்யாணி - குணசேகரன் என்பவர்களும் பிச்சைக்காரர் முன்னேற்றத்துக்காக இரவுபகல் பணியாற்றி வந்த ஞானசேகரனும் அவனை அடுத்திருந்த பிச்சைக்காரர்களும் “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேஅல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே"என்ற தாயுமானார் வாக்கின்படி எல்லோரும் வாழவேண்டும் என்பதற்காகச் சாந்தநாயகி அனாதைவிடுதி அமைத்து அமைதியாகத் தொண்டாற்றுகிறார்கள்.இவ்வளவோ

அரஹரநமப் பார்வதே பதி...

அரஹர மகா தேவா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.