Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடுகளமும் அரசியல் களமும்: சிங்கள வீரர்களுக்கு தமிழகத்தில் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளமும் அரசியல் களமும்: சிங்கள வீரர்களுக்கு தமிழகத்தில் தடை
எஸ். கோபாலகிருஷ்ணன்

2011இல் தமிழக முதல்வர் பதவியை ஏற்ற பின் தீவிர தமிழ் ஈழ ஆதரவு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் ஜெயலலிதா. அது இன்று இந்தியாவில் பல் முளைக்காத குழந்தை முதல் பல் விழுந்த முதியவர் வரை கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் கிரிக்கெட் விளையாட்டை அசைத்துப் பார்த்திருக்கிறது.

இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் ஐ.பி.எல் 20-20 ஓவர் போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தினர். விளைவாக ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்துவிட்டது. லீக் சுற்றில் இலங்கை வீரர்கள் விளையாடாததை பெரிதாகப் பொருட்படுத்தாத சென்னை ரசிகர்களுக்கு அரை இறுதிப் போட்டி சென்னையில் நடக்காது என்பது ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஆனால் தமிழ்த் தேசியவாதிகளும் தமிழ் உணர்வாளர்களும் இதைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறார்கள்.

கடந்த சில மாதங்களாகத் தமிழகமெங்கும் தீப்பிடித்து எரியும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டத்தின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாக இலங்கை வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்பது முன்வைக்கப்பட்டது. இதைச் சென்னையிலேனும் சாதிக்க முடிந்திருப்பது மாணவர் போராட்டத்தின் அடையாள வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய அரசு இலங்கைக்குப் பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பதவி ஏற்ற புதிதில் சட்டசபையில் முழங்கிய ஜெயலலிதா தொடர்ச்சியாக சென்னை தாம்பரம் பகுதியிலும் உதகமண்டலத்தில் உள்ள வெலிங்டன் பகுதியிலும் இலங்கை இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதை எதிர்த்துக் குரலெழுப்பினார். முதலில் இதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு தொடர் வற்புறுத்தல்களுக்குப் பின் இராணுவப் பயிற்சியை வேறு மாநிலத்துக்கு மாற்றியது. இவை இரண்டும் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தவை. ஈழப்போரில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கத் திட்டம் வகுத்த இலங்கை அரசையும் களத்தில் கொலைகளை நிகழ்த்திய இலங்கை இராணுவத்தையும் எதிர்க்கும் நடவடிக்கைகள். எனவே இவை முற்றிலும் நியாயமானவையாகவே அனைவராலும் கருதப்பட்டன.

ஆனால் இந்த எதிர்ப்பை இலங்கையைச் சேர்ந்த அனைவருக்கும் நீட்டிக்கும் போக்கை தமிழக அரசும் தமிழீழ ஆதரவாளர்களும் பின்பற்றிவருகிறார்கள். குறிப்பாக இலங்கைக்கும் தமிழகத்துக்கு விளையாட்டு என்பதே அருகிவிடும் நிலை உருவாகியிருக்கிறது. ஆசியத் தடகளப் போட்டிகள் தமிழகத்தில் நடைபெறாது என்பது உறுதியாகிவிட்டது.

இவை இரண்டும் நடந்தபோது 'பல நூறு கோடிகள் புழங்கும் கிரிக்கெட் விளையாட்டில் தமிழக முதல்வரின் பாச்சா பலிக்காது. முடிந்தால் கிரிக்கெட் வீரர்களுக்கும் தடை விதிக்கட்டும்' என்று சிலர் சவால் விட்டனர். ஆனால் தான் யாருக்கும் பயப்படுபவர் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கிரிக்கெட் விளையாட்டிலும் தன் கட்டுப்பாடுகளை வெற்றிகரமாக விதித்து எதிர்ப்பாளரை வாயடைக்கச் செய்துவிட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் தொடர் ஈழ ஆதரவு நடவடிக்கைகளுக்கு 2014இல் நடக்க இருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் கணக்குகள் காரணமாகச் சொல்லப்பட்டாலும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஈழ ஆதரவாளர்களை ஆறுதலடையச் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை

ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைவரையும் மகிழ்வித்துவிடவில்லை. இந்திய தேசிய ஊடகங்கள் குறிப்பாக 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள் இதைத் தமிழ் இனவெறி நடவடிக்கை என்று முத்திரை குத்தின. போர் உச்சத்தில் இருந்தபோது சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் குறித்த செய்திகள் இந்தியர்களுக்குச் சென்றுவிடாமல் மூடி மறைத்தாகக் குற்றம்சாட்டப்படும் இந்திய தேசிய ஆங்கில நாளிதழான தி ஹிந்து, இலங்கை வீரர்களுக்கு ஐ.பி.எல் போட்டிகளில் தடைவிதித்த தமிழக அரசின் நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்துத் தலையங்கம் எழுதியது.

இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழரும் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளீதரனும் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்துப் பேசினார். 'இலங்கையில் தமிழர்கள் அனைவரும் போரை மறந்துவிட்டு இப்போது அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்' என்று அவர் சொன்னார்.

சுவாமியோ, ரணதுங்காவோ, முரளிதரனோ 2009 போரில் கொத்துக் கொத்தாக ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதையும், இன்று வரை ஈழத் தமிழர்கள் இலங்கை அரசின் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டிருப்பதையும் குறித்து ஒரு வார்த்தைக்கூடப் பேசியதில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். எனவே சமாதானம், வெறுப்பின்மை குறித்த இவர்களது ஒரு தலைப்பட்சமான கருத்துகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருக்க வாய்ப்பில்லை.

**
இலங்கை அரசின் மீதான எதிர்ப்பு ஒட்டுமொத்தமாக இலங்கையின் மீதான எதிர்ப்பாக மாற வேண்டுமா என்ற விவாதத்தை இந்த நடவடிக்கைகள் கிளப்பியுள்ளன. இந்த விவாதத்தில் ஈழப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் உள்ளிட்ட பலரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதற்காக வருந்துபவர்கள். உயிர்பிழைத்த ஈழத் தமிழர்களுக்கு வளமான மறுவாழ்வு, இலங்கை அரசின் மீதான சர்வதேச சட்ட விசாரணை ஆகியவற்றை விரும்பும் அனைவரும் விளையாட்டு வீரர்களுக்கு விதிக்கப்படும் தடையை ஆதரிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை.

குறிப்பாக இலங்கை வீரர் குமார் சங்ககாராவை எதிர்த்து ஏப்ரல் 25 அன்று சென்னையில் தமிழ் மாணவர்கள் சிலரால் நடத்தப்பட்ட ஆர்பாட்டம் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஏப்ரல் 25ஆம் திகதி அன்று சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஐ.பி.எல்லின் ஐதராபாத் அணியின் தலைவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான குமார சங்ககாரா பங்கேற்க வந்தார். அப்போது அங்கு கூடிய கல்லூரி மாணவர்கள் சிலர் தமிழக அரசின் உத்தரவை மீறி இலங்கை வீரர் தமிழ் மண்ணில் கால்வைப்பதை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்ககாரா சிங்களவராக இருந்தாலும் அவரது தந்தையும் வழக்கறிஞருமான சிக்சானந்த சங்ககாரா 1983 இனக்கலவரத்தின்போது 35 தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றியவர் என்ற தகவல் பரவியது.

இதற்காக சங்ககாராவை ஆதரித்துச் சிலர் குரலெழுப்ப சங்காராவின் தந்தையைப் போல் அவரது மகனும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று ஈழ ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றினர். போராடிய மாணவர்களை நோக்கி அவர் விரலை உயர்த்திக் காண்பித்து இழிவுபடுத்தியதாகவும் சிலர் குற்றம்சாட்டினர்.

விளையாட்டு, வர்த்தகம் போன்ற விவகாரங்களில் எந்த நாட்டையும் புறக்கணிக்கக் கூடாது என்று சொல்லிவருபவரான தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஞாநி இந்த விவகாரம் குறித்து தெரிவித்த கருத்தும் அதற்கு வந்த கடுமையான எதிர்வினைகளும் அவரது முகநூல் நண்பர்கள் வட்டத்தை குறைத்துக்கொள்ளும் அளவுக்கு அவரைப் புண்படுத்தியிருக்கின்றன.

'இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 'தமிழர்கள்' என்று சொல்லிக் கொள்வோரின் ஆர்ப்பாட்டம் அறிந்து வருத்தப்படுகிறேன். 1983 இனக்கலவரத்தின்போது சங்ககாரா ஆறு வயதுச் சிறுவன். அவரது தந்தையும் வழக்கறிஞருமான சிக்சானந்த சங்ககாரா தன் வீட்டில் 35 தமிழர்களுக்கு (குறிப்பாகப் பல சிறுவர்களுக்கு) அடைக்கலம் கொடுத்து கலவர காலம் முழுவதும் அவர்களைக் காப்பாற்றியவர். ஈழத் தமிழர்களின் இன்றைய அசல் எதிரிகள், இங்கே சிங்களவர்களுக்கு எதிராக அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்வோர்தான் என்ற என் கருத்து வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது' என்று அவர் முகநூல் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து ஒருவர் கூறிய கருத்துக்கு எதிர்வினையாக, 'தூங்குவோரை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்போரை என்னால் எழுப்ப இயலாது. ஈழத்தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை தொடர்ந்து இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்பதே என் இன்றைய கருத்து.

புலம்பெயர்ந்து வாழ்வோர் இயலுமானால் தாயகம் திரும்பி அங்கே தங்கள் பரப்புரையையும் அரசியலையும் மேற்கொள்ளட்டும். இந்தியத் தமிழர்கள் இங்குள்ள சக தமிழர்கள் தொடர்பாக கவனிக்க வேண்டிய சிக்கல்கள் ஏராளம் உள்ளன. அதற்கு முன்னுரிமை தராமல் ஈழத்துக்கு முன்னுரிமை தருவது இன்று எனக்கு உடன்பாடானதல்ல. குமார் சங்ககாரா பற்றி அர்த்தமற்ற கேள்விகளை இங்கே எழுப்புவோருக்கு பொதுவான ஒரே பதில் இதுதான்: அவரும் அவர் குடும்பத்தினரும் தமிழர்களின் எதிரிகள் அல்ல. கிரிக்கெட் குழுவை எதிர்ப்பது இலங்கை அரசை எதிர்ப்பதாகிவிடாது. இலங்கை மீதான பொருளாதாரத் தடைக்கு இந்தியத் தமிழ் வணிகர்களின் ஆதரவே கிடையாது. உணர்ச்சி அடிப்படையிலான அரசியல் மேலும் உயிர்களைக் கொல்லவே பயன்படும். அதை ஒருபோதும் நான் ஆதரிக்க மாட்டேன்' என்றும் சொல்லியிருந்தார்.

இதைத் தொடர்ந்து முகநூலிலும் மற்ற சமூக வலைதளங்களிலும் ஞாநியின் மீது வசைமழை பொழியத் தொடங்கியது. இதுவே முகநூல் வட்டத்தைக் குறைத்துக்கொள்வது என்னும் அவரது முடிவுக்குக் காரணமாக அமைந்தது.

ஞாநியின் கருத்தில் உடன்பாடு இல்லாத சிலரும் அவரது கருத்துக்கு வந்த வன்மையான எதிர்வினைகளைக் கண்டித்தனர். ஞாநியின் கருத்துக்கு விவாத தர்மத்துக்கு உட்பட்டு, வலுவான வாதங்களுடன் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர், அவர்களில் கவிஞரும் எழுத்தாளருமான பெருந்தேவியும் ஒருவர்.

'இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் சிங்கள டூரிஸ்ட்கள், ஆராய்ச்சியாளர்கள், பிக்குகள் போன்றவர்கள் மேல் வன்முறை செலுத்துதல் மேல் எவ்வகையிலும் உடன்பாடில்லை' என்று தன் முகநூல் குறிப்பில் எடுத்த எடுப்பிலேயே தெளிவுபடுத்திய அவர், அதன் பின் கிரிக்கெட் விவகாரத்தில் தன் கருத்தை விரிவாகப் பதிவு செய்கிறார்.

'ஞாநியின் கூற்றில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஈழத் தமிழர்களுக்கு வேண்டியதை அவர்கள் முடிவுசெய்ய வேண்டும் என்கிற கருத்தின் சரித்தன்மை இந்தியத் தமிழர்கள், சக தமிழர்களுக்கு இருக்க வேண்டிய முன்னுரிமை குறித்து ஞாநி பேசும்போது அடிபட்டுப் போய்விடுகிறது. நடுவர்க்க பொதுப்புத்திப் பேச்சுதான் இது. அண்டை வீட்டில் மனைவியை ஒருத்தன் அடிக்கிறான், அதை பக்கத்து வீட்டுக்காரி தட்டிக் கேட்கிறாள் என்றால், உன் வீட்டுக் கூரை ஒழுகல் பிரச்சினையை முதலில் பார் அப்புறம் பக்கத்து வீட்டுக்கு வரலாம் என்று அவளிடம் சொல்வதுபோல.. அல்லது அடுத்த வீட்டில் அடிக்கிற சத்தம் கேட்கிறதே, பாவம், கேட்கலாம் என்று கிளம்பும் நம் வீட்டு மனிதரிடம், 'இங்கேயே சமாளிக்க வழியில்ல, இதில் பக்கத்து வீட்டுக்குப் பஞ்சாயத்தா' என்று கேலி பேசுவதுபோல. என்னதான் இருந்தாலும் அவர்கள் கணவன் மனைவி நாம் குறுக்கே போக முடியுமா அல்லது அடிபடுபவளுக்குப் பேச வாய் கிடையாதா, அவள் விதியை அவளே பார்த்துக்கொள்ளட்டும்... என்று ஒதுங்கிக்கொள்வதுபோல.

இலங்கையைப் பொறுத்தவரை எவ்வகையிலும் அச்சமற்ற சூழலில், சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை அங்கே வாழும் தமிழர்கள் தீர்மானிக்க முடியுமா? அப்படியான 'ஜனநாயக முறை' வாக்கெடுப்புக்கான சாத்தியமிருக்கிறதா, அப்படியொன்று நடந்தாலும் கிடைக்கும் முடிவை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளுமா? இன்றைய நிலையில் இவையெதுவுமே சாத்தியமில்லை. இங்கே மாணவர் போராட்டம், இலங்கை கிரிக்கெட் குழுவுக்கு எதிர்ப்பு இவையெல்லாமே இந்திய அரசுக்கான சர்வதேச அரங்கில் தமிழர் சார்பில் இந்திய அரசு இயங்க, அல்லது தமிழருக்கு எதிராத அது இயங்கும் போக்கு சிறிதாவது மாற அழுத்தம் தருவதற்கு உதவுமென புரிந்துகொள்கிறேன். வெறும் 'உணர்ச்சி அரசியல்' என்று இவற்றை புறந்தள்ளிப் போக முடியாதென நினைக்கிறேன்.

பாசிசப் போக்கை மாற்றிக்கொள்ளாத வரையில், நடந்த இனப்படுகொலைக்கும் தொடரும் தமிழர் வெறுப்பு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்கும் வரையில் இலங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும், இந்நடவடிக்கையை இந்தியா முன்மொழிய வேண்டும், இந்நடவடிக்கைக்கு இந்தியா முன்னுதாரணமாக இருக்க வேண்டும் (எப்பேர்ப்பட்ட பகல்கனவு எனக்கு!). இதற்கு இந்திய தமிழ் வணிகர்கள் ஆதரவு இல்லை என்று ஞாநி கூறலாம். சரி, 99.99999 சதவிகிதம் தமிழ் மக்களுக்கு தீவிர இலக்கிய எழுத்தில் ஆர்வமில்லை, மாற்று நாடகங்கள் போட்டால், திரைப்படங்களைக் காட்டினால் அரங்குக்கு வருவதில்லை ஆர்வமில்லை, மக்களை விடுங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கே இவற்றில் ஈடுபாடில்லை, அதனால் இவற்றையெல்லாம் உருவாக்காமல், ஆதரிக்காமல் நாம் விட்டுவிடலாமா? விட்டுவிடமுடியுமா? ஆதரிசம் அல்லது இலக்கியலுக்கும் நடைமுறைக்குமான கடக்க முடியாத அரிய இடைவெளியில்தானே வெறும் இருப்புக்கும் மேலான அர்த்தம்கொள்ளும் வாழ்வுக்கான இடமிருக்கிறது?' என்று தன் விரிவான எதிர்வினையைப் பதிவு செய்திருக்கிறார் பெருந்தேவி.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குறித்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவதைப் பார்க்க முடிகிறது. அவர்களில் பலர் இதை வெறும் அரசியலாகவே பார்க்கிறார்கள். 'இலங்கை அரசுக்கு எதிர்ப்புக்காட்ட வேண்டும் என்ற உணர்வை நானும் மதிக்கிறேன். அதற்காக இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வரக்கூடாது என்று சொல்ல வேண்டியதில்லை. அவர்களா நேரடியாக களத்தில் நின்று தமிழர்களைக் கொன்றார்கள்? அப்படியே ஒரு நாட்டின் வீரர்களைத் தடை செய்வதானால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் தடைசெய்ய வேண்டியதுதானே. அது என்ன சென்னையில் மட்டும் தடை செய்வது? என்னைப் பொறுத்தவரை இதை இந்திய அரசும் தமிழக அரசும் 'நீ பெரியவனா நான் பெரியவனா' என்ற போட்டி மனப்பான்மையுடன் அணுகுவதாகவே தெரிகிறது' என்று சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலர் பதமநாபன் நாகராஜ் கூறுகிறார். இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இரட்டை வேடத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

'2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக ஐ.பி.எல் போட்டிகளைத் தள்ளிவைக்கச் சொல்லி இந்திய அரசு கேட்டுக்கொண்டபோது போட்டியை நடத்தும் பிசிசிஐ, போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றியது. இதை வைத்துப் பார்க்கும்போது இப்போது இலங்கை வீரர்கள் விஷயத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு அடிபணிவதுபோல் நடந்துகொள்வதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் காரணம் இருக்குமோ என்று நினைப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. பாகிஸ்தான் வீரர்களுக்கும் ஐ.பி.எல்.இல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பின்வாசல் வழியாக வருவதுபோல் பாகிஸ்தான் வீரர் அசார் மஹ்மூத் இங்கிலாந்து கவுண்டி அணியின் பெயரில் உள்ளே வந்துவிட்டார். என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானாக இருந்தாலும் இலங்கையாக இருந்தாலும் அந்நாட்டு விளையாட்டு வீரர்களிடம் எதிர்ப்பைக் காண்பிப்பது தவறுதான். இது தவிர இதே போன்ற எதிர்ப்பு அவுஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு வந்திருந்தால் பிசிசிஐ அடிபணிந்திருக்காது. ஏனெனில் ஐ.பி.எல் இல் கூட்டத்தைக் கவர்ந்திழுப்பவர்கள் அந்த அணிகளின் வீரர்கள்தான். தவிர அந்த அணி வீரர்களைச் சேர்த்தால்தான் அதிக பணம் புழங்கும்' என்கிறார் பத்மநாபன்.

**

ஒரு நாட்டின் விளையாட்டு வீரர்களைத் தடை செய்வது இது ஒன்றும் முதல் முறையல்ல என்பதும் கவனிக்கத்தக்கது. நிறவெறி உச்சக்கட்டத்தில் இருந்தபோது தென்னாப்பிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிலிருந்து 20 ஆண்டுகளுக்கு மேல் தடை செய்யப்பட்டிருந்தது. 1975இல் முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்தாலும் 1992இல் நடைபெற்ற ஐந்தாவது உலகக் கோப்பைப் போட்டிகளில்தான் தென் ஆப்பிரிக்க அணி முதன் முதலில் பங்கேற்றது. இதே போல் ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலும் பல நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடப் பல சமயங்களில் தடை ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போர் மற்றும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வேறு சில நாடுகள் அந்த நாட்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகியிருக்கின்றன.

விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்க்க முடியாது. இரண்டு நாடுகள் இணைந்து ஒரு சர்வதேசப் போட்டியில் விளையாடினால். அந்த நாடுகளுக்குள் நட்புறவு இருப்பதாகவே எடுத்துக்கொள்ளப்படும். இந்தப் பின்னணியில் இலங்கையும் இந்தியாவும் விளையாடுவதை ஆதரிக்க முடியாது என்று கூறுபவர்களின் குரலையும் அலட்சியப்படுத்த முடியாது.

அதே சமயம் 2009 போரின்போதும் அதன் பிறகும் இந்தியாவும் இலங்கையும் பல போட்டிகளில் ஆடியிருக்கின்றன. சென்னை உட்படப் பல இடங்களில் இந்தப் போட்டிகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் எதிர்க்காதவர்கள் இப்போது ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. ஈழ ஆதரவுக் குரல்களும் சிங்கள அரசுக்கு எதிரான உணர்வுகளும் இப்போதுதான் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதற்குக் காரணம் என்று எழுத்தாளரும் 'சென்னை நம்ம சென்னை' இதழின் ஆசிரியருமான அரவிந்தன் குறிப்பிடுகிறார்.

'இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்னையில் ஆடக் கூடாது என்று சொல்வது விவாதத்துக்குரியதுதான். ஆனால் இதுபோன்ற எதிர்ப்புகள் சில சமயங்களில் எழத்தான் செய்யும். சிலர் நினைப்பதுபோல இது திடீரென்று ஏற்பட்ட எதிர்ப்பு அல்ல. மக்கள் மத்தியில் பல விதமான உணர்வுகள் எப்போதும் இருக்கும். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஏதேனும் ஒரு உணர்வு குவிமையம் கொண்டு வலுப்பெறும். அது வெளிப்படும் வடிவத்தை யாராலும் கணிக்க முடியாது. இது எப்போது, எப்படி நடக்கும் என்பதையும் சொல்ல முடியாது. ஊழலுக்கு எதிரான இந்திய மக்களின் பல்லாண்டுக் கால ஆற்றாமையை அண்ணா ஹஸாரேயின் போராட்டம் குவிமையப்படுத்தியதுபோல, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வுகளை மாணவர் போராட்டம் குவிமையப்படுத்தியிருக்கிறது. பல்வேறு அம்பலங்களும் ஐ.நா. தீர்மானம் தொடர்பான சம்பவங்களும் இந்த ஒருங்கிணைவுக்குக் காரணமாக அமைந்தன. இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளின் ஒட்டுமொத்த விளைவாகத்தான் இந்த எதிர்ப்பைப் பார்க்க வேண்டும்' என்கிறார் அவர்.

இதுபோன்ற எதிர்ப்புகள் எவ்வளவு வலுவாக இருந்தாலும் நீடித்து நிற்பதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும் என்றும் அரவிந்தன் கூறுகிறார். 'பாகிஸ்தானுடனான கிரிக்கெட்டுக்கு எதிராக சிவசேனை கட்சியினர் பேசும்போது அதற்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுவதைப் பார்க்கிறோம். குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கும்போது பாகிஸ்தான் எதிர்ப்புணர்வு கிரிக்கெட் களத்திலும் நீட்சி கொள்கிறது. அதற்கு மக்களின் ஆதரவும் கிடைக்கிறது. சம்பவங்களின் தாக்கம் தணிந்ததும் இந்த எதிர்ப்புணர்வும் வடிகிறது. இதுபோன்ற விஷயங்களில் மக்கள் அனைவரும் சீரான நிலைப்பாடுகளை எடுப்பார்கள் என்றோ சம நிலையோடு நடந்துகொள்வார்கள் என்றோ எதிர்பார்க்கக் கூடாது. ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் உணர்வு தொடர்பான விஷயங்களில் அந்த உணர்வுகளை ஒட்டியே பெரும்பாலும் தங்கள் நிலைப்பாடுகளை அமைத்துக்கொள்வார்கள். அதுதான் அரசியல்' என்று அவர் விளக்குகிறார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தமிழக அரசின் தடை ஞாநி சொல்வதுபோல் வெறும் அடையாள அரசியலாகவும் முடியலாம் அல்லது பெருந்தேவி சொல்வதுபோல் இலங்கை அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளை எதிர்த்து நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் முடியலாம். ஈழத் தமிழர்களுக்காக ஏங்கும் மனம் கொண்டவர்கள் இந்த விஷயத்தில் பிளவுபட்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். விவாதித்து ஒருவரின் தரப்பில் உள்ள நியாயங்களை மற்றவர் புரிந்துகொண்டு கைகோர்த்துப் பயணிப்பதே ஈழத் தமிழர்களின் ஒட்டுமொத்த நலனுக்கு ஏதேனும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வழங்கும். மனித நேயம், தேச ஒற்றுமை, அண்டை நாடுகளுடனான உறவு என்ற போர்வையில் சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் சக்திகள் தமிழர்களைப் பிரித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நேரமிது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=c35deaa9-db89-4dfc-99b1-1bdbaadb3c17

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இத்தகைய அர்த்தமுள்ள கட்டுரைகளை முடிந்தவரை சுருக்கமாகத் தாருங்கள்.  கட்டுரையை வாசித்துக்கொண்டே போனேன் முடிவதாயில்லை. மௌஸை உருட்ட உருட்ட நீண்டு கொண்டே போனது.  நேரமில்லை விட்டுவிட்டேன்.  இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம்.  கட்டுரை தருவோர் அனைவரும் இதைக் கவனத்தில் எடுக்கவும்.  குறையிருந்தால் மன்னிக்கவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையில் தமிழின உணர்வு என்பதைவிட ..சிங்கள உண்ர்வுதான் உள்ளடங்கி இருக்கிறது...இது எழுதப்பட்டதே கருணானிதி கோஸ்டியின் கைவண்ணம்தான்...83 ல் சங்கக்காராவின் தகப்பன் 35 பேரை காப்பாற்றினார் என்று சொல்லப்படுகிற ஒரு தமிழன் முன்னால் வந்து சொல்லட்டும்...அப்போது நம்பலாம்...சும்மா சினிமாக் கதைபோல் ..அப்படி செய்தார் இப்படி செய்தார் என்பதெல்லாம் சிங்களவனுக்கு கொடிபிடிக்கும் சில்லறை கூட்டத்தின் வேலைதான்....இந்தகட்டுரைகளும்...விமர்சனங்களும்...77..83 கலவரங்களை அனுபவித்தவன் என்பதனால் சொல்கிறேன்...எப்பவும் சிங்களவன் சிங்களவன்தான்....அடிவாங்கிற தமிழன்.. தமிழன்தான்...ஆனால் விளையாட்டுக்காக விடுதலை உணர்வை விற்கும் உணர்வு தமிழனிடம்தான் இருக்கிறது....அது சிங்களவனிடம் ..தம் இன உணர்வை விட்டுக் கொடாமல் வளர்க்கும் உணர்வு சிங்களவனிடம்...உதாரணம் சங்கக்காரா....தமிழ் நாட்டு தமிழர்களையே..நீங்கள் யார் எமக்கு எதிர்ப்பு தெரிவிக்க என்ற ரீதியில் அறிக்கை விட்டவன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.