Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய முன்னணி: தேசங்களின் ஜனநாயக உரிமைக்கா….?

Featured Replies

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீண்டும் ஐக்கிய முன்னணி ஒன்றின் அவசியம் குறித்து பரவலாக உரையாடப்படுகின்றது. குறிப்பாக இது மூன்று தளங்களில் நடைபெறுகின்றது. முதலாவது தமிழ் தேசத்தில் செயற்படுகின்ற கட்சிகளுக்கு இடையிலான ஐக்கிய முன்னணி குறித்து முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டாவது முஸ்லிம் தேசத்துடனான முன்னணி குறித்து உரையாடப்படுகின்றன. மூன்றாவது சிங்கள தேசத்துடனனான ஐக்கிய முன்னணி குறித்தது சிந்திக்கப்படுகின்றன. இதைவிட மலையகத்துடனான ஐக்கிய முன்னணி தொடர்பாகவும் அக்கறை செலுத்தப்படுகின்றது. இன்றைய சுழ்நிலையில் மட்டுமல்ல எந்த சுழ்நிலையிலும் ஐக்கிய முன்னணி ஒன்றின் அவசியம் தவிர்க்க முடியாதது. ஆனால் இவ்வாறான ஐக்கிய முன்னணி எந்தடிப்படைகளில் கட்டமைக்கப்படவேண்டும் என சிந்திப்பது முன்நிபந்தனையானது.

 

முதலாவது தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை அது தனது கடந்த கால அரசியல் செயற்பாட்டில் தோற்றுப்போய், பல பாதைகள் பிரிகின்ற சந்தி ஒன்றில் நிற்கின்றது இன்று. எந்தப் பாதையில் செல்வது என்ற தெளிவில்லாமல் முடிவுகள் எடுக்க முடியாது தடுமாறுகின்றது. இதேவேளை சிலர் தாம் நம்புகின்ற பாதைக்கு மக்களை இழுத்துச் செல்லகின்றனர். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைகளில் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.  இந்த நிலையில் தமிழ் தேசத்தின் அடிப்படை அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்றவகையில் தெளிவான நிலைப்பாடுகளுடன் தமிழ் கட்சிகள் தமக்கிடையில் ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது. இதுவே ஈழத் தமிழ் தேசத்தின் விடுதலை நோக்கி மீளவும் உறுதியுடன் செல்வதற்கு வழிவகுக்கும். இதற்கு மாறாக நமது அரசியல் நிலைப்பாடுகளிலிருக்கின்ற உறுதியின்மை, தெளிவின்மை மற்றும் நமக்குள் இருக்கின்ற பிரிவினைகள் சிறிலங்கா அரசுக்கும் மற்றும் நம்மைப் பயன்படுத்த காத்திருக்கும் இந்திய, சர்வதேச அரசுகளுக்குமே பயனுள்ளதாகும்.  ஆகவே இன்று தமிழ் தேச அரசியல் தளங்களில் செயற்படுகின்றவர்கள் இது தொடர்பான அக்கறையை காட்டவேண்டியது அவசியமாகும்.

 

மேற்குறிப்பிட்டவாறான ஒரு ஐக்கியம் தமிழ் தேச சக்திகளுக்குள் ஏற்பட்ட பின்பே முஸ்லிம் தேசத்துடனும் மலையக மக்களுடனுமான ஐக்கிய முன்னணி அமைப்பது தொடர்பாக முயற்சிகளை முன்னெடுக்கலாம். குறிப்பாக முஸ்லிம் தேசத்துடனான ஐக்கிய முன்னணி என்பது மிகவும் உணர்வுசார்ந்த விடயம். ஏனெனில் கடந்த கால உறவுகள் கசப்பானதாகவே இருக்கின்றன. ஆகவே கடந்த காலங்களில் தமிழ் தேசம் எவ்வாறான ஒடுக்குமுறையையும் புறக்கணிப்பையும் முஸ்லிம் தேசம் தொடர்பாக நடாத்தியது என்பதை மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியது அவசியமானது. மேலும் முஸ்லிம் தேசம் தொடர்பான எவ்வாறான சிந்தனைப் போக்கை இன்றும் தன்னுள் தமிழ் தேசம் கொண்டிருக்கின்றது என்பதை அகம் நோக்கிப் பார்ப்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இதேபோல் முஸ்லிம் தேசமும் தனது அரசியல், சிந்தனை மற்றும் கடந்தகால நிகழ்கால செயற்பாடுகள் தொடர்பாக மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறான மீள்பார்வைகளுக்கூடாக ஒவ்வொருவரும் புதிய நிலைப்பாடுளை முன்வைக்கும் போதே இந்த இரு தேசங்களுக்கு இடையிலான ஐக்கிய முன்னணி சாத்தியமானதாகும். இவ்வாறான ஒரு முயற்சியை மலையக அரசியல் சக்திகளுடனும் தமிழ் தேசம் மேற்கொள்ள வேண்டும்.

 

சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசால் இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற இந்த மூன்று தேசங்களும் மேற்குறிப்பிட்டவாறு தமக்குள் ஒரு m-2.jpgஐக்கியத்தை முதலில் உருவாக்க வேண்டும். இதன் பின்பே இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் இனங்களின் மற்றும் மதங்களின் உரிமைகளை ஏற்கின்ற, ஆதரிக்கின்ற சிங்கள தேசத்தில் செயற்படுகின்ற அரசியல் மற்றும் சமூக சக்திகளுடன் ஐக்கிய முன்னணி அமைப்பது தொடர்பாக சிந்திக்கலாம். இதற்கு மாறாக எந்த அரசியல் நிலைப்பாடுகளும் இன்றி ஆட்சியிலிருக்கின்ற அரசாங்கத்தை விழுத்துவதற்காக மட்டும் அமைக்கப்படும் கூட்டணிகளால் எந்தப் பயனுமில்லை. இவை வெறுமன தேர்தல் கூட்டணிகளாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அது கூட தமிழ் தேச, தேசிய அரசியலுக்கும் மக்களின் நலன்களுக்கும் எதிரானவையாகவே இருக்கும். இதுவே கடந்த காலம் கற்பிக்கும் பாடம்.

தமிழ் தேசத்தின் இன்றைய பிரச்சனை வெறுமனே ஜனநாய உரிமைகளுக்கும் அதற்கான வெளிக்கானது மட்டுமல்ல. இதற்கும் அப்பால் இராணுவ ஆக்கிரமிப்பிலிருக்கின்ற தமிழ் தேசத்தின் விடுதலை, அரசியல் கைதிகளின் விடுதலை, மற்றும் தமிழ் தேசத்திற்கான அரசியல் உரிமைகளையும் அதிகாரங்களையும் உறுதி செய்தல், ஆகியனவே இன்று பிரதானமாகவும் முக்கியமானவையாகவும் இருக்கின்றன. இவற்றைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாத சிங்கள தேசத்தின் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைப்பது தமிழ் தேசத்தைப் பொறுத்தைவரை பயனற்றது.

 

சிறிலங்கா அரசில் ஏற்படும்  ஆட்சிமாற்றங்களும் அல்லது அதன் அரசாங்களுக்கு எதிரான ஐனநாயக உரிமைகளை வலியுருத்திய போராட்டங்களும் தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை அர்த்தமற்றவை. ஏனெனில் எந்த அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அவை பின்பற்றப்போவது ஏற்கனவே இருக்கின்ற அரசமைப்பைத்தான். இந்த அரசானது அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக்கொண்டது. இது தமிழ், முஸ்லிம், மலையக தேசங்களுக்கும் அதன்  ஐனநாயக உரிமைகளுக்கும் எதிரானதாகவே இருப்பதுடன் தொடர்ந்தும் அவ்வாறான செயற்பாட்டையே பிரதானமாக மேற்கொண்டு வருகின்றது.

சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை ஒடுக்கப்படுகின்ற தேசங்களுடனான தற்காலிக ஐக்கிய முன்னணிகள் பயனுள்ளவையாக இருக்கலாம். ஏனெனில் இன்று சிங்கள தேசம் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சனை மகிந்த அரசின் ஏதேச்சதிகாரமும் அதனால் மக்களினதும் ஊடகங்களினதும் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதும் ஆகும். ஆகவேதான் ஜனநாயக உரிமைகளுக்கான கோசங்கள் சிங்கள தேசத்தில் வலுப்பெற்று வருகின்றன. இவ்வாறன போராட்டங்கள் இலங்கைக்கு குறிப்பாக சிங்கள தேசத்திற்கு புதியதல்ல. இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றில் இவ்வாறு நிறையவே நடந்திருக்கின்றன.

 

ஜனநாயகத்திற்கான சாவல் என்பது இலங்கையின் வரலாற்றில் எப்பொழுதுமே இருந்து வந்துள்ள ஒன்று. ஒவ்வொருமுறையும் ஆட்சியிலுள்ளவர்களுக்கு எதிராக ஜனநாயக உரிமைகளை வலிறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. குறிப்பாக 50களிலும் 60களிலும் ஐ.தே.க வை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள். 70களில்  சிறிமாவோவின் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியை எதிர்த்து நடைபெற்றவை. பின் 80களில் ஜே.ஆரின் தலைமையிலான ஐ.தேகவைவும் 80களின் இறுதியிலும் 90 களில் ஆரம்பத்தில் பிரேமதாசாவின் அரசாங்கத்தையும் எதிர்த்து நடந்தன.

 

இதில் முரண்நகை என்னவென்றால் 90களின் ஆரம்பத்தில் சிங்கள தேசத்தில் ஜனநாயக உரிமை போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் சந்திரிக்காவும் மகிந்தவும். ஆனால் 90களில் இறுதியில் சந்திரிகாவினதும் அதன் பின் அதாவது இப்பொழுது மகிந்தவின் ஆட்சியையும் எதிர்த்தும் னஜநாயகத்தை வலியுறுத்திய போராட்டங்கள் நடைபெற்று வந்தன. வருகின்றன. இந்தப் போராட்டங்கள் சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை ஐனநாயக உரிமைக்கானதாக இருக்கலாம். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை  ஒவ்வொரு முறையும் ஏற்படுகின்ற ஆட்சி மாற்றமே தாம் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கான தீர்வாக கருதுகினறனர். ஆனால் வெறும் ஆட்சி மாற்றங்கள் எந்தவிதமான பிரச்சனைகளையும் தீர்ப்பதில்லை என்பதை கடந்த கால வரலாற்றிலிருந்து இன்றுவரை அவர்கள் கற்கவில்லை என்பது தூர்ப்பாக்கியமானது.

 

இவ்வாறான எதிர்ப்பு போராட்டங்கள்  இரண்டு விடயங்களை எப்பொழுதும் கொண்டுள்ளது. முதலாவது ஒவ்வொருமுறையும் யாரோ ஒருவரை மாறி மாறி ஜனநாயகத்தின் பெயரால் எதிர்க்கின்றோம். ஆனால் சக தேசங்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கும் மற்றும் பொருளாரதாரப் பிரச்சனைகளுக்கும் இன்றுவரை தீர்வு கிடைத்ததில்லை. இரண்டாவது அரசாங்கங்களுக்கு எதிரான பொது மக்களின் எதிர்ப்பு என்பது அவர்களது உரிமைக்கும் சுந்திரத்திற்குமான உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆகவே அனைவரும் ஐக்கிய முன்னணி அமைத்து செயற்படலாம் என் வாதத்தில் தவறில்லை. ஆனால் இவ்வாறன ஜனநாயக உரிமைகளுக்கான ஐக்கியப்பட்ட போராட்ட செயற்பாடுகளின் போதும் அதன் பின்பும் புரட்சிகர சக்திகளின் கூட்டு உடைக்கப்படுவதையும் அவர்களது பலம் சிதைக்கப்படுவதையும் இலங்கையின் கடந்த கால வரலாறு பூராவும் காணலாம். ஆகவே இவ்வாறான ஐக்கிய முன்னணிகள் மக்களின் நலனைப் பொறுத்தமட்டுமல்ல புரட்சிகர சக்திகளைப் பொறுத்தவரையிலும் எதிர் நிலையிலையே பங்களித்திருக்கின்றது. இதற்கு காரணம் தெளிவான அரசியல் நிலைப்பாடுகளும் அரசு மற்றும் ஆளும் கட்சிகள் தொடர்பான ஆழமான பார்வைகளும் ஜனநாயகவாதிகளுக்கு இல்லாமையே என்றால் மிகையல்ல.

ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் சரியான அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்பட வேண்டும். அல்லது மேற்குறிப்பிட்டவாறு வழமைபோல (வர்க்க, பேரினவாத, மத) ஆளும் சக்திகளால் தமக்கு சாகதமாகவே பயன்படுத்தப்படும். இவ்வாறான பயன்படுத்தலே இதுவரை நடைபெற்று வந்திருக்கின்றது. ஆகவே இம் முறையாவது சிங்கள தேசம் விழிப்பு பெற்று சரியான பாதையில் நடைபோடவேண்டும். ஆனால் அதற்கு அவர்களுக்கு சரியான அரசியல் தலைமை இருக்கவேண்டும். அவ்வாறான ஒரு தலைமை இருக்கின்றதா என்பது மிகப் பெரும் கேள்வியாக முன் நிற்கின்றது.

m-3.jpg

 

சிங்கள தேசத்திற்கு மட்டுமல்ல ஒடுக்கப்படுகின்ற தேசங்களுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் அவசியமானவையே. ஆனால் தமிழ் முஸ்லிம் மற்றும் மலையக மக்களைப் பொறுத்தவரை சிங்கள தேசத்தில் நடைபெறுகின்ற ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது அர்த்தமற்ற ஒன்றாகவே இருக்கின்றது. ஏனெனில் இங்கு நாம் பின்பற்றுகின்ற ஜனநாயக நடைமுறை தொடர்பாக கேள்வி கேட்கவேண்டும். இன்று நாம் பின்பற்றுகின்ற ஜனநாயக நடைமுறை ஜரோப்பிய குறிப்பாக கிரேக்க சமூகத்தில் உருவானது. இந்த சமூகம் எண்ணிக்கையில் சிறிய தொகையினராகவும் ஒரே இனம், மொழி, மற்றும் மதம் என்பவற்றைக் கொண்டிருந்ததனாலும் நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதாக இருந்தது. இருப்பினும் இங்கும் ஒரு கேள்வியை எழுப்பலாம். அதாவது பெரும்பான்மை கருத்தியல் என்பது எப்பொழுதும் சரியான நிலைப்பாடுடைய கருத்தியலா? மேலும் பரந்துபட்ட பெரும்பான்மை மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டதா? இல்லை என்பதே எனது நிலைப்பாடு. இருப்பினும் இது விவாதத்திற்கு உரியது.

இந்தடிப்படைகளில் இலங்கையைப் பொறுத்தவரை பின்பற்றப்படும் ஜனநாயக நடைமுறை என்பது எப்பொழுதும் பெரும்பான்மையினரின் கருத்தியலுக்கு சாதகமானதாகவே இருக்கின்றது. இது எந்தவகையிலும் சிறுபான்மையினரின் நலன்களைப் பிரதிபலிப்பதில்லை. அதேவேளை சிங்கள தேத்தின் பெரும்பான்மையினரின் கருத்தியலானது சிங்கள தேசத்தின் நலன் சார்ந்ததல்ல. மாறாக அங்கிருக்கின்ற ஆளுகின்ற ஆதிக்க மற்றும் அதிகார வர்க்கங்களினதும் பேரினவாதிகளினதும் நலன் சார்ந்ததாகவே இருக்கின்றது. அவர்களுக்கே இது இறுதியாக பயன்படுகின்றது. ஆகவே இவ்வாறான ஜனநாயகப் போராட்டங்கள் சிங்கள தேசத்திற்கு குறிப்பாக சுரண்டப்படுகின்ற மக்களைப் பொறுத்தவரை ஒரு புறம் பயனுள்ளதாகவும் மறுபுறம் பயனற்றதாகவுமே இருக்கின்றது.

இலங்கை இந்தியா போன்ற பல்லின மதங்களைக் கொண்ட நாடுகளில் அடக்கப்படுகின்ற தேசங்களைப் பொறுத்தவரை மேற்கத்தைய ஜனநாயக நடைமுறை என்பது கேள்விற்குட்படுத்தப்படவேண்டிய ஒன்று. ஏனெனில் இவ்வாறான நாடுகளில் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் பொழுது அடக்கப்படுகின்ற தேசங்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆகவே இந்த நாடுகளில் ஜனநாயக உரிமை என்பது முதலில் தேசங்களின் உரிமைகளை சமமாக மதிப்பது என்பதாக இருக்கவேண்டும். அதுவே சரியான ஜனநாயக வழிமுறையாக இருக்கும். இதற்கு வேண்டுமானால் வேறு உரிமை என புதிய பெயரையும் வைக்கலாம். அது சுயநிர்ணைய உரிமையாக கூட இருக்கலாம்.

இதற்கு மாறாக இந்த நாடுகளில் அனைத்து மக்களுக்குகான சம உரிமை என்பது சரியான நிலைப்பாடல்ல. இது பார்ப்பதற்கு சரியாகவும் அழகாகவும் ஜனரஞ்கமாகவும் இருக்கின்றது. இது ஒரு தளத்தில் சரியானதுதான். ஆனால் இன்னுமொரு தளத்தில் கேள்விக்குள்ளாகின்றது. அதாவது சம உரிமை என்பது சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கானதாகவும் இருக்கவேண்டும். அதேவேளை சிங்கள தமிழ் முஸ்லிம் மற்றும் மலைய தேசங்களுக்கானதாகவும் இருக்க வேண்டும். முதல்வாதத்தின்படி அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைக்கும். ஆனால் ஐனநாயகம் என வரும் பொழுது அது பெரும்பான்மை அதாவது சிங்கள பௌத்த மக்களின் பெரும்பான்மைக் கருத்தியலுக்கு சார்பானதாகவே என்றும் இருக்கும். இது இலங்கையைப் பொறுத்தவரையில் அடிப்படையில் பிற இன மதங்களுக்கும் தேசங்களுக்கும் எதிரானதாகும். ஆகவேதான் முதலவாது சம உரிமை மற்றும் ஜனநாயக உரிமை என்பது தேசங்களுக்கானதாகவே இருக்க வேண்டும். இதையே முதலில் வலியுறுத்த வேண்டும். இதன் பின்பே ஒவ்வொரு தேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குறிப்பிட்ட மக்களுக்கான மனிதர்களுக்கான சம உரிமை கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும்.

 

இலங்கையிலிருக்கின்ற சக தேசங்கள் தொடர்பான இவ்வாறான ஒரு நிலைப்பாடு சிங்கள தேசத்தில் செயற்படுகின்ற சாதாரண கட்சிகளுக்கல்ல புரட்சிகர கட்சிகளுக்கே இருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறியானதே. ஆகவேதான் தெளிவான கறாரான அரசியல் நிலைப்பாடுகள் அவசியமாகின்றன. இவ்வாறான உறுதியான நிலைப்பாடுகளிலில்லாத வெறும் ஜனநாயகத்திற்கான ஐக்கிய முன்னணிகள் அர்த்தமில்லாதவையாகும். இந்தப் புரிதலினடிப்படையில் தான் முன்னிலை சோசலிசக் கட்சியுடனும் அதன் வெகுஜன அமைப்பான சமஉரிமை இயக்கத்துடனுமான ஐக்கிய முன்னணி பற்றி சிந்திக்கலாம். அதேவேளை இவ்வாறான ஜக்கிய முன்னணி நேர்மறையான பங்கையாற்றுமா எனப் பார்க்கவும் வேண்டும். அடுத்த இதழில் பார்ப்போம்…..

00000000

06.05.2013

நன்றி :ஏதுவரை இதழ் 11

http://eathuvarai.net/?p=3669

 

 

கட்டுரை தேவையில்லாத சிங்களத்துடன் நம்மை இணைக்கும் கண்மூடி ஐக்கியமாகப் போகிறது.  மகிந்தா போக வேண்டியது எமக்கா அல்லது சிங்களத்திற்கா என்பதை ஆராயத்தெரியாமல் ஆராய்கிறது. மேலும் தேவானந்தா, கக்கீம், பதியுதின், கருணா இருப்பதை அறியாத நிலையில் கட்டுரை போகிறது.

 

இதில் பல நிலை சிக்கல்கள்  இருப்பதை அறியாத கட்டுரை, அரசியலை அரிவரி வகுப்புக்கு சமயபாடமாக்குகிறது. பல இடங்களில் கட்டுரை குருடாக நடந்து கொள்ளகிறது. பல இடங்களில் கட்டுரை தனது மையோபியா நிலையை காட்டினாலும் இங்கே மிக சிக்கலா ஒரு பிரச்சனையை கண்மூடித்தனமாக ஆராய்கிறது. மேலும் தேர்தல் நேரம் என்பதால், பொதுவாக கூறுவது போல், தேர்தலில் கண்வைக்கிறது.

 

மகிந்தாவை போக வைப்பது எதிர்க்கட்சிகளின் தேர்தல் கூட்டாலா?, சர்வதேச குற்றவியல் விசாரணையாலா? சிங்கள புரட்சியாலா என்பதை பற்றி ஆராய முயவில்லை. நாம் ஒத்துப் போக முடியாத சிங்களவர்கள் தேர்தலையும், தமிழர்கள் போர்க்குற்ற விசாரணையும், சில மேற்குநாடுகள் ஆயுதம் தாங்கிய/தாங்காத புரட்சிகளினாலும் போக வேண்டும் என்றுதான் விருப்புவதாக பல தலைமைகளும், தூதுவர்களும் கருத்து  வெளியிட்டிருக்கிறார்கள். இதில் தற்போதைய நிலைமையின் யதார்த்தம் எந்த வழி என்று தெரியாமல் ஒற்றுமையை மட்டும் ஆராய்வது கண்மூடித்தனம்.  கட்டுரை குருட்டுத்தனமாக தேர்தலால் மட்டும் மகிந்தாவை அகற்றுவது பற்றி பேசுகிறது. அது சாத்தியமா?

 

மேலும் சிங்கள பிரதேசங்களில் மகிந்தா ஊடகவியலாரை மட்டும் அடக்குவதுதான் அங்கே பிரச்சனை என்கிறது. அதாவது சிங்களப்பக்கத்தில் மகிந்தாவல் பிரச்சனை ஒன்றும் இல்லை; தனிய ஊடகங்கள் அவரை எதிர்க்கின்றன என்கிறது.

 

தெளிவான சிந்தனை மூலமாக அல்லாமல் ஞானத்தின் மூலம் கண்ட இந்த சின்ன சின்ன மயோப்பியாக்களை விட்டு விட்டு நமது முதலாவது கருதில் இருக்கும் சிக்கலான மகிந்தாவை யார் அகற்ற முயல்கிறார்கள் என்ற கேள்வியை கேட்டால்:

 

1.அழிக்க என்று தெரிந்து எடுத்து அடக்கப்படும் போது பாதிக்கப்படும் சிறுபான்மை இனம்.(தமிழ் முஸ்லீம் சிங்கள கிறீஸ்தவர்கள்).

2.தெரிந்து எடுத்து அடக்கப்படாத சிங்களவர்.

3. இலங்கையுடன் பொருளாதார அரசியல் தொடர்புகள் வைத்திருக்கும் நாடுகள். இதுவே தன்னுள் பல சிக்களை கொண்டிருக்கிறது. அமெரிக்கா பொன்சேக்காவை வைத்து அரசை விழுத முயன்ற போது இந்தியா பொன்சேக்கவை கள்ளத்தனமாக விழுத்தியது. இதில் சீனா இலங்கையில் மகிந்தாதான் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படையாக காட்டாவிட்டாலும் அதை ஊர்யிதம் செய்து வைத்திருக்கிறது..

 

இதில் இரண்டாவது பகுதி, உதாரணத்திற்கு:-

தமிழர் தமக்காக மகிந்தாவை எதிர்க்கவில்லை. ஆனால் தமிழரிடம் மகிந்தாவை சிங்களவருக்கு தேவையா என்றால் சிங்களவருக்கு நல்ல தெரிவில்லை என்று எதிர்ப்பார்கள்.  இந்த சிக்கல் நிலையை மேற்கு நாடுகள் புரிந்து வைத்திருந்தன. இதனால் தான் மேற்கு நாடுகள் தமது கோபத்தை தமிழர் மீது காட்ட ஐ.நாவை வெளியேற்ற உதவி செய்து விட்டு முள்ளிவாய்க்கலை நடத்தி முடித்தன.

 

இது எப்படி என்று கேட்போருக்கு இன்று வடமாகணத்தேர்தல் எப்படி தமிழருக்கு உபயோகமானதாக இருக்கப் போவத்தில்லையோ அதே மாதிரியேதான் 2005 இன் தேர்தலும் தமிழருக்கு எந்த உபயோகத்தையும் கொண்டுவரத்தக்க நிலையில் இருக்க விலை. இதனால்த்தான் தேர்தலை தமிழர் புறக்கணித்தார்கள். இதே கருத்தையே கட்டுரையும் முன்னெடுத்துச் செல்கிறது. கட்டுரை தமிழரை பொறுதளவில் மாறும் அரசுகளால் பலன் எதுவும் வராது என்கிறது. ஆனால் கட்டுரை  மேலே சென்று  அரசுகள் மாறினாலும் அரசியல் அமைப்பும் மாறாது என்ற விதண்ட வாதத்தில் இறங்குகிறது.  அது உண்மையை இல்லை. இலங்கையளவுக்கு அரசியல் அமைப்பை போட்டு ஒவ்வோருவருடமும் கிண்டிக்கொண்டிருக்கும் நாடே உலகத்தில் இல்லை.

 

ஆனால் நாம், பாதை தவறமால், திரும்ப எமது இடத்துக்குப் போனால்,  தமிழர்கள் மகிந்தா அரசு சிங்களவர்களுக்கு கூடாது என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் தமக்கு அதை பறுவாய்படுத்த இல்லை. ஏன் எனில் 65 வருடகாலம் அரசு பலமுறை மாறி, மாறி தமிழரைதான் அடக்கியதென்பதே பதில். இந்த நிலைப்பாட்டால், சிங்களத் தேர்தலில்  வாக்களிக்க மறுக்கும் தமிழரை சிங்கள தேர்தலில் வலோற்காரமாக  வாக்களிக்க வைத்தால் அவர்கள், சிங்களவருக்கு கூடாது என்று நினைக்கும் மகிந்தாவுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். ஆனால் மகிந்தா, சிங்களவரின் பார்வையில் அவர்களுக்குத் தேவையானவர். எனவே அவர்கள் மகிந்தாவை ஆதரித்து வாக்களிப்பார்கள். இதில் வெற்றி தோல்வி எப்போதுமே பெரும்பான்மையான சிங்கள இனத்தின் நடத்தைகளினதே.  அதனால் மகிந்தாவை 2005 இல் தெரிந்தவர்கள் சிங்களவர்களாக இருக்க, அமெரிக்காவின் உதவிகளை தமிழருக்கு எதிராக திருப்பி, பிளேக் போன்றவர்கள் தமிழரை முள்ளிவாய்க்காலில் வைத்துப் பழிவாங்கி அழித்தார்கள்.

 

அதாவது தமிழர் சிங்களவருக்காக சிங்களத்தேர்தலில் வாக்களிப்பதா அல்லது தமிழருக்காக சிங்கள தேர்தலில் வாக்களிப்பதா என்பதை, தமிழர்-சிங்களவர் அல்லாத  இன்னுமொரு பக்கம் தீர்மானிக்க விரும்பியது. அதாவது தமிழர் தமிழருக்காக 2005 ல் தேர்தலை பயன்படுத்த கூடாது, அதை சிங்களவருக்காகத்தான் பயன் பட்த்த வேண்டும் என்ற மேற்கு நாடுகளின் நிலைப்பாடே. எனவே அந்த தேர்தலில்,  மேற்குநாடுகள், தேர்தலை தமிழர்கள் பகிஸ்கரித்து சிங்களத் தேர்தல்களில் நியாயம் இல்லை என்று காட்ட முயன்ற  ஜனநாயக முறையான தமிழர்களின் போராட்டமொன்றை எதிர்த்து, சிங்களவருக்கு வேண்டாதவராக இருந்த ரணிலை் தமிழர்கள் பதவிக்கு கொண்டுவந்திருக்க வேண்டும் என்பதுதான் மேற்குநாடுகளின் நிலைப்பாடு. இதில் தமிழர் தமக்காக ஒரு நிலைப்பாடு எடுக்கமுடியவில்லை என்பதல்ல, சிங்களகத்துக்காகத்தன்னும்  ஒரு நிலைப்பாடு எடுக்கமுடியவில்லை. மூன்றாமவர் ஒருவருக்காக ஒரு நிலைப்பாடு ஒன்றை எடுக்கவில்லை என்பதால்த்தான் முள்ளிவாய்க்காலில் மேற்கு நாடுகளால் தண்டிக்கப்பட்டர்கள்.

 

இந்த சிக்கலை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின்,  மகிந்தாவா இலையா என்பதை தீர்மானிக்க, தனிய தமிழர் ஒரு இனத்தை எடுத்துப் பார்த்தாலே, தமிழருக்கு தமிழருக்காக மகிந்தாவை வேண்டுமா? தமிழருக்கு சிங்களவருக்காக மகிந்தாவை வேண்டுமா? தமிழருக்கு தமிழர், சிங்களவர் இரண்டுமே அல்லாதோருக்குக்காக மகிந்தாவை வேண்டுமா என்றது எல்லாவற்றுக்குமே பதில் அளிக்க வேண்டும். இதில் நாம் ஏற்கனவே சொன்னது மாதிரி தமிழர், தமிழர்-சிங்கள் இரண்டுமே அல்லாத சர்வதேச தரப்பில் மிகவும் சார்ந்துள்ளார்கள்.  இதில் அவர்கள், பிரதானமாக இந்தியாவாலும், அமெரிக்காவாலும் வெளிப்படையாகவும், சீனாவால் வெளிக்காட்டாதவையாலும் பாரிய தாக்கம் பெறுகிறார்கள். இதில் இந்தியாவானது  அமெரிக்கா தெற்காசியாவில் கால் பதிப்பதை எதிர்த்துப் போராடுகிறது. சீனாவைக் கண்டுகொள்ளாமல் விடுகிறது. அமெரிக்கா சீனாவை கடுமையாக எதிர்க்கிறது, இந்தியாவை கண்டு கொள்ளாமல் விடுகிறது. சீனா தனது மகிந்தா மீது இருக்கும் இறுக்கப்பிடியை வைத்து இந்தியா, அமெரிக்கா இரண்டயுமே இலங்கையிலிருந்து இலகுவாக தள்ளி வைத்திருக்கிறது. இந்த சர்வதேச கொள்கைக் குழப்பத்திற்குள், தமிழர், அமெரிக்காவுக்கு வேண்டிய ரணிலிற்க்கு  சிங்களத் தேர்தலில் வாக்களிப்பதா அல்லது இந்தியாவுக்கு வேண்டிய மகிந்தாவுக்கு வாக்களிப்பதா என்பதையும் தீர்மானிக்க வேண்டும். உண்மையில் தமிழர் இதில் எதை தீர்மானித்தாலும், கட்டுரை சொல்வது மாதிரி, யாரோ ஒரு சர்வதேசம் ஆட்சிக்கு வரும் அரசை ஆதரித்து தமிழரை அழித்துத்தான் விடுகிறதும். உதாரணமாக, இன்றைய நாட்களில்,  அமெரிக்கா மகிந்தாவை எதிர்த்தாலும், இந்தியா வீடுகட்டுதல் என்ற போர்வையில் அரசுக்காக வடக்கில் வேண்டுமென்றே சிங்கள் குடியேற்றத்தை செய்கிறது. சீனா கட்டுமான உதவி என்ற பெயரில் சிங்கள ராணுவத்திற்கு பாதைகள் போடுவதும் முகாம்கள் கட்டுவதிலும் ஈடுபடுகின்றன. எனவே அரசு ஒருவர் இல்லாவிட்டால் ஒருவரிடம் உதவி பேரத்தக்க நிலையில் இருக்கிறது.

 

கட்டுரை இந்த தேர்தலை நோக்கியது. இந்த தேர்தல் வெளிநாடுகளால் நடத்தப்படுவது. தேர்தலில் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வாக்களிக்கவிட்டால் அவர்கள் முள்ளி வாய்க்காலில் செய்தது போல இன்னொரு பழிவாங்களை நடத்தியும் முடிக்கலாம்.  நாம் வெளியே காண, தமிழரின் தேர்தல் ஒற்றுமையீனம் காணப்படுவது கூட்டமைப்புக்குளேயே. அது வேறு எங்கு இருந்தாலும் அது கட்டுரை அலச முயலும் இந்த தேர்தலில் மாற்றம் தராது. கூட்டமைப்பின் ஒற்றுமை இன்மைக்கு காரணம் பதியப்படாமையே. பதியப்பாடாமைக்கு காரணம் கூட்டமையில் ஆரம்பம் தொடக்கம் சேர்ந்து இயங்கிய போராளிக் கட்சிகளை வெளிநாடுகள் ஓட்டிக்கலைக்க முயல்வதே.  எனவே வெளிநாடுகள் தமக்காக நடத்தும் தேர்தலில் தமிழர்கள் வெளிநாடுகளுக்காக வாக்களிக்க வேண்டுமாயின் போராளிக்கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தவிர்க்க வேண்டும். இதை கிரகிப்பது என்பது சாதாரண வாக்காளானொருவனுக்கு இடியப்ப சிக்கலை விடுவிப்பதிலும் கடினமானது. அதனால் தமிழர் மீது அக்கறை கொண்டவர்கள், தமிழரசுக்கடிசியை முன்னால் வந்து விட்டுக்கொடுத்து போராளிக்கட்சிகளும் எற்றுகொள்ளத்தக்கதான சுயேட்சைகளை கூட்டமைப்பின் பேரில் தேர்தலில் போடும்படி கேட்கிறார்கள்.  இதை விளங்கிக்கொண்டு விட்ட அரசு இதற்குள் புகுந்து விளையாடத்தக்க, நடுநிலைமை சமய வாதிகள் மாதிரிக்காட்டும்,  சுழியோடிகளை அனுபபி ஒற்றுமை பற்றி பேச வைக்கிறது. அதாவது ஒற்றுமை என்ற பேரால் திரும்ப ஒரு பிரிவினை என்ற ஆப்பை இறுக்க முயல்கிறது அரசு.

 

இதில் ஏவப்பட்ட, உண்மை யதார்த்தத்தின் சிக்கலை விளங்காத,  அரிவரி வகுப்புச் சமயபாட வாத்தியார்கள், சர்வதேச மயப்படுத்தப்பட்ட இ்லங்கை அரசியலை படு மோசமாக ஆராய்கிறார்கள்.  இதே மாதிரியே  இந்த கட்டுரை முழுவதுமே அரசியல் ஆழம் இல்லாத சமயச் சொற்பொழிவு.  முழுக்கட்டுரையையும் இப்போது அலசுவது பிரயோசனமில்லாதது. பொருத்த மில்லாத நேரத்தில், பொருத்தமில்லாத இடத்தில் இத்தகைய கந்த புராணச்சொற்பொழிவு அரசியல் கட்டுரைகள் இங்கே வருவது எப்பொதுமே ஒரு இரகசிய நோகத்துடனே.  எனவே அந்த நோக்கத்தை வெளிக்காட்டிய  பின்னர் பலவற்றையும் ஆழமாக ஆராயலாம்.

 

 

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.