Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊமைகளாய் - உணர்வுகளின் வெளிப்பாடாய் !

Featured Replies

 
ஊமைகளாய் - உணர்வுகளின் வெளிப்பாடாய் !

 

 

யாழ் பல்கலை மருத்துவ பீடத்தின் 32 ம் அணியினரின் 'ஊமைகளாய்' என்ற நாடகம் கைலாசபதி மண்டபத்தில் இன்று அரங்கேறியிருந்தது. 
 
உண்மையில் மருத்துவ பீட மாணவர்களிடமிருந்து நான் இத்தகையதொரு நாடகத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தளவிற்கு சிறப்பாக 32 ம் அணியினர் தமது நாடகத்தை அரங்கேற்றியிருந்தார்கள். 
 
நான் பார்த்த நாடகங்களிலேயே மிகச் சிறந்த நாடகம் இது என்று தான் கூறுவேன். அந்தளவிற்கு 30 நிமிடங்களும் அரங்கு முழுவதையும் தங்களுக்குள் ஈர்த்துக் கொண்டார்கள். 'ஊமைகளாய்' குழுவினர்.

970651_584363034942179_495511948_n.jpg

அரங்கத்தினுள் நாடகக் குழுவினர்

 

 
சிறந்த இலக்கியம் என்பது மக்களுக்கு யதார்த்தத்தைப் புரிய வைப்பதாகவும், மக்களின் உணர்வு வெளிப்பாடாயும் இருக்க வேண்டும். இந்த விடயத்தை ஊமைகளாய் குழுவினர் 100 வீதம் செய்து காட்டியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு காட்சியும் யதார்த்தத்தின் வெளிப்பாடு. ஒவ்வொரு வசனமும் எமது மக்களின் உள்ளத்திலிருந்து எழுகின்ற வசனங்கள். 

 
சில திரைப்படங்களின் இறுதிக் காட்சிகளில் நாம் எம்மையறியாமலே உணர்ச்சிவசப்பட்டு விடுவோம். ஆனால் இந்த நாடகம் முழுவதும் நான் உணர்ச்சிவசப்பட வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு உணர்ச்சிப் பிரவாகத்தை நான் எந்த நாடகத்திலும் உணர்ந்ததில்லை. 30 நிமிடங்கள் அரங்கு முழுவதையும் தங்களுடன் ஊமைகளாய் ஒன்றிக்க வைப்பதில் நாடகக் குழுவினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

'ஊமைகளாய்' வெறும் நாடகம் மட்டுமல்ல இது தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு.

 
நாடகத்திற்கே உரித்தான சில உயர்ந்த, நுணுக்கமான நுட்பங்கள் நாடகத்தில் பின்பற்றப்பட்டிருந்தன. 
 
1. அரங்க வடிவமைப்பு 
நாடகத்திற்கான அரங்க வடிவமைப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. முதல் காட்சியில் எமது மக்களின் இன்றைய நிலையை விளக்கும் விதமாக அரங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்காக சில குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. 
 
அடுத்தடுத்த காட்சிகளில் திரையை மூடி அரங்க வடிவமைப்பு செய்யாமல் நாடகத்துடன் சேர்ந்தாற்போல் கச்சிதமாக நடிகர்களாளேயே அரங்க வடிவமைப்புச் செய்யப்பட்டிருந்தமை பாராட்டத்தக்கது.

drama_01.jpg நேர்த்தியாக  குறியீடுகள் கொண்டு அமைக்கப்பட்ட அரங்கம்

2. பின்னணி இசை
நாடகத்துடன் பார்வையாளர்களை ஒன்றிக்கச் செய்ததில் பின்னணி இசைக்கு பாரிய பங்குண்டு. பின்னணி இசை வழங்கிய 'நிரூபனா' விற்கு பாராட்டுக்கள். அத்துடன் 'விக்னன்' இன் இடையிடையே ஒலித்த குரலும் நாடகத்திற்குப் பொருத்தமாக அமைந்திருந்தது. பிள்ளை இறந்ததை எண்ணி தாய் அழுது கொண்டிருக்கும் போது ஆறுதல் சொல்லும் விதமாக ஒலிக்கும் ஆராரோ ஒலி முதற்தரம். 
 
3. ஒப்பனைகள்
நாடகத்தின் ஒப்பனைகள் சிறப்பானதாக அமைந்திருந்தது. ஒப்பனை எந்தளவிற்கு சிறப்பானதாக இருந்தது என்பதற்கு ஒரு சிறிய சம்பவத்தை சொல்கிறேன்.

நாடகம் முடிந்து பெறுபேறுகள் அறிவித்துக்கொண்டிருந்த போது ,

 
சிறந்த நடிகருக்கான விருது – சீனச்சார்பாக நடித்தவரைச் சேர்கிறது எனச் சொல்லப்பட்டது.

'கஜலக்சன்' ஐயே முடிவுகளை அறிவித்தவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். எனக்கு அருகில் முடிவுகளை அறிவிக்கும் போது 32 ம் அணியை சோந்த இருவர் இருந்தனர். அவர்களுக்கு அது 'கஜலக்சன்' தானா? அல்லது வேறு ஒருவரா என்பதில் குழப்பநிலை இருந்தது. இந்தளவிற்கு ஒப்பனை சிறப்பாக இருந்தது. குறிப்பாக கிழவி வேடத்தில் நடித்தவரைப் பார்க்க உண்மையிலேயே கிழவியைப் பார்ப்பது போலவே இருந்தது.

10501_4733776394387_1477910872_n.jpg பாட்டி வேடத்தில் சிவகஜனி

ஆடைத் தெரிவுகள் சிறப்பானதாக இருந்தது. சுற்றுலாவிகள், மற்றும் மேற்குலகதினர் என்பவர்களை குறிகாட்டும் நடிகர்களின் ஆடைத் தெரிவுகள் நோத்தியாக இருந்தன. 
 
4. நடிகர்கள்
நடிகர் தேர்வும் சிறப்பாக இருந்தது. அனைவரும் தங்களுக்கேற்ற பாத்திரங்களை தேர்வு செய்து நடித்திருந்தார்கள். குறிப்பாக 'தணிகை' அழுத சத்தத்தில் அரங்கமே ஒரு கணம் அதிர்ந்து விட்டது. அருமையான நடிப்பு. பாராட்டுக்கள். ஏனையோரும் சிறப்பான நடிப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். கோமாளி வேடத்தில் விபுசுதனின் நடனம் சிரிக்க வைத்தது. (திருகோணமலையில் பரதம் பழகத்தானே கண்டிருக்கின்றேன்!) ஏனைய சிவகஜனி, சிவமைந்தன், மடோனா, துவாரகா, கஜலக்ஸ்சன் இன்னும் பெயர் தெரியாத பலரும் தமது பங்கிற்கு சிறப்பாகவே நடித்திருந்தார்கள். அனைவருக்கும் பராட்டுக்கள்.

kajn.jpg பெரும்பான்மை இனத்தவரின் குறியீடாக கஜலக்சன்

நாடகத்தில் யாருமே மறந்து விடக்கூடாத ஒருவர் இருக்கிறார். விக்னன். கமலுக்கு சகலகலா வல்லவன் என்ற பட்டம் பொருந்துமோ இல்லையோ, இவருக்கு கச்சிதமாகப் பொருந்தும். எனினும் துரதிர்ஸ்ட வசமாக இவர் நாடகத்தில் நடிக்க முடியாமல் போனமை கவலையே. இவருக்கு எனது விசேட விதமான பாரட்டுக்கள்.
 
 
ஊமைகளின் பின்னால் உள்ள உணர்வுகள்
 
போரின் பின்னர் தமிழ் மக்கள் அவல நிலையை இன்றைய நாடகத்தில் படம் போட்டுக் காட்டியிருந்தார்கள். முதல் காட்சியில் யுத்தத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை மேலே சொன்னது போல் குறியீடுகளை கொண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 
 
யுத்தத்தினால் அழிவடைந்த வீடு - அழிவடைந்த எங்களின் சொத்துக்களையும், 
தலையிழந்த பனை மரம் - அழிவடைந்த எங்களின் இயற்கை வளங்களையும், 
சிதைவடைந்த கோவில் - சிதைக்கப்பட்ட எங்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வழக்காறுகளையும்
பமுதடைந்த மணிக்கூடு - 30 வருடங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டு காலத்திடம் தோற்றுப்போன எமது மக்களின் உண்மை நிலையையும் குறிப்பீடு செய்ய பயன்படுத்தப்பட்டிருந்தன.

935911_584389784939504_1562770634_n.jpg
9056_4733777074404_1892998808_n.jpg
யுத்தத்தின் சேதங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது குழந்தையை இழந்த தாய் கதறி அழும் காட்சி. இதில் உண்மையில் உணர்வுகளை அடக்க முடியவில்லை. அந்தக் கணத்தில் முள்ளிவாய்க்காலும் வன்னித் தாய்மாரும் தான் நினைவுக்கு வந்ததார்கள்.

946823_4733784194582_1410788146_n.jpg குழந்தையை இழந்த தாய் (தணிகை) கதறி அழுகிறார்.

 

இவ்வாறு மக்கள் சோகத்தில் மூழ்கிக் கிடக்கையிலே பின்னணியில் அசீரிரி ஒன்று கேட்கிறது. தொடர்ந்து சில கோமாளி வேடமணிந்த சிலர் அரங்கத்தினுள் நுழைகிறார்கள். துன்பக் கடலில் மூழ்கியிருக்கும் மக்களை கோமாளிச் சேட்டைகளினாலும், கேளிக்கைக் கூத்துக்களினாலும் தம் பக்கம் இழுக்க நினைக்கிறார்கள். ஆடல் பாடல்களுக்குள் மக்களையும் இழுக்க நினைக்கிறார்கள். மக்கள் அவற்றை நிராகரிக்கிறார்கள். சிறுவன் ஒருவன் அவர்கள் பக்கம் போய்விட நினைத்து செல்கையில் தயார் அவனை இழுத்து பிடிக்கின்றார்.

komalio.jpg கவனக் கலைப்பான்களான கோமாளிகளின் நடனம்

யுத்தத்தின் பின்னர் வடக்கில் பெருமெடுப்பில் நடத்தப்படுகின்ற இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகளை கடுமையாக சாடியிருப்பதோடு அதன்பால் இழுபடும் எம் இளைஞர் சமுதாயத்தையும், இளைஞர் சமுதாயத்தை மீட்கப் போராடும் எம் அன்னையர்களையும் அப்படியே எம் மனக்கண் முன் கொண்டு வருகின்றார்கள். 
 
கோமாளிகளால் விரிக்கப்பட்ட வலையிலே மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அது தமிழ் மக்கள் மீது விரிக்கப்பட்ட மாய வலையைப் போன்றது. அந்த மாய வலையில் இருந்து விடுபட மக்கள் அங்கும் இங்கும் அசைவது ஒரு நடனம் போல இருக்கிறது. அதனை ஒருவர் புகைப்படும் எடுக்கிறார். இன்று அரச ஊடகங்கள் செய்கின்ற வேலை போன்றதே இது. மக்களின் ஒவ்வொரு அசைவையும் அரசாங்கம் எவ்வாறு தமக்கு சாதகமான நகர்வாக பயன்படுத்துகின்றமையை துள்ளியமாக காட்டியது. இந்த சந்தர்ப்பத்தில் கோமாளிகள் மாய வலைக்குள் இருக்கும் மக்கள் கையில் விளையாட்டு விநோதப் பொருட்களைக் கொடுத்து அதனையும் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். மக்கள் விரும்பியோ விரும்பாமலோ வலைக்குள் இருந்தபடி அந்தப் பொருட்களை பெறவேண்டியதாகின்றது. வடக்கில் அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் எவ்வாறு பலவந்தப்படுத்தப்படுகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் போல.

969812_4733800714995_81237232_n+%281%29. மாய வலைக்குள் மக்கள்

தொடர்ந்து காட்சியிலே மாற்றம் வருகின்றது. புதிதாகச் சிலர் வருகிறார்கள். அவர்களால் அரங்கின் பின்னணியும் மாறிப்போகின்றது. சேதமடைந்த வீட்டை இப்போது பார்க்க அது புதிய செங்கல் வீடாக காட்சி தருகின்றது. பனை மரத்திற்கு தலையிழந்த பனை இப்போது வர்ணமயமாகவும், பட்டுப்போயிருந்த மரம் அப்படியே பட்டபடியே இருக்க அதன் வண்ணம் மட்டும் மாறிப்போகின்றது. சிதைவடைந்து காணப்பட்ட கோவில் மீது ஒரு வெள்ளைத் துணி போர்த்தப்படுகின்றது. ஈற்றில் அவர்கள் நின்று போயிருக்கும் கடிகாரத்தையும் அகற்ற முற்பட பெரியவர் ஒருவர் தடுத்து விடுகின்றார்.

603073_4733790834748_1489674087_n.jpg  

இன்று அபிவிருத்தி என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் மாயத் தோற்றத்தை மிகவும் நுணுக்கமாக இதில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையான அபிவிருத்தியும், மீள் கட்டுமானங்களும் தமிழர் தாயகங்களில் இல்லை. அடிப்படைக் கட்டுமானங்களில் மாற்றம் இல்லை. வெறுமனே இடிந்து போன கட்டிடங்களுக்கு வர்ணம் அடித்து, அதனை தங்கள் கைகளால் திறந்து தம்பட்டம் அடித்து கொள்கின்ற நிலையை சாடியிருக்கிறார்கள். 
 
இதனைத் தொடர்ந்து சுற்றுலாவிகள் வருகின்றார்கள். அரங்கில் அதியதித்து பார்க்க அவர்களுக்கு ஒன்றுமே இருக்கவில்லை. ஆனாலும் அதிசயிக்கிறார்கள். பட்டு வர்ணம் தீட்டபபட்ட மரத்தை வேடிக்கையாகப் பார்க்கிறார்கள். இடிந்த வீடுகளையும், நின்றுபோன கடிகாரத்தையும் பார்த்து தங்களுக்குள் பெருமை பராட்டிக்கொள்கிறார்கள். அப்போது ஒருவர் கொண்டு வந்து பாழடைந்த இடங்களுக்குச் செல்லும் பாதையை காட்டும் குறிகாட்டிப் பலகையை கொண்டுவந்து வைத்துவிட்டுப் போகின்றார். 
 
நேரில் நாளாந்தம் நாம் காணும் சம்பவங்களை அப்படியே அரங்கினுள் காண்பது போல் இருந்தது. எவ்வளவு தூரத்திற்கு ஒவ்வொரு விடயங்களையும் அவதானித்து இதனை நாடகத்தினுள் சேர்த்திருக்கிறார்கள் என்று உணரமுடிகின்றது. 
 
காட்சிகள் இவ்வாறு நகர்ந்து கொண்டிருக்க தொடர்ந்து பின்னணியில் அசீரிரி கேட்கிறது. இரு தரப்பு அரசியல் வாதிகள் அரங்கினுள் நுழைகிறார்கள். அவர்களில் ஒரு தரப்பினர் பெரும்பான்மை இனத்தவர்களாகவும், மற்றவர்கள் சிறுபான்மையினப் பிரதிநிதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறார்கள். அது செய்வோம், இது செய்வோம் என்று பரஸ்பரம் புளுகுகிறார்கள். ஆனால் மக்கள் அவர்களை நம்பத்தயாராக இல்லை.

 

இறுதியில் மணிக்கூட்டைத் திருத்துவது யார் என்ற சர்ச்சை இரு தரப்பு அரசியல் வாதிகளுக்கிடையேயும் எழுகின்றது. தழிழர் இந்தியாவிலிருந்து மணிக்கூட்டை கொண்டுவரப்போகிறோம் என்கிறார். சிங்களவர் தான் சீனாவிலிருந்து மணிக்கூட்டை கொண்டு வரப்போகிறோம் என்கிறார். மாறி மாறி இருவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் போதே மேலைத்தேய ஆடை அணிந்த இருவர் புதிய மணிக்கூடு ஒன்றை கொண்டுவந்து வைத்துவிட்டு போகிறார்கள்.

970405_4733803235058_126251745_n.jpg தீர்வுப் பொதியுடன் மேற்குலகத்தினர்

  அதனை கைப்பெற்றுகின்ற இரு அரசியல் தலைவர்களும் அது தமக்கே சொந்தம் என்று மீண்டும் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்.

944649_4733803715070_1963238091_n.jpg தங்களுக்கள் சண்டையிட்டுக்கொள்ளும் அரசியல் வாதிகள்.

இந்த நேரத்தில் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கிறது. 
 
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி... நாலாறு மாதமாய் குயவனை வேண்டி... கொண்டுவந்தான் ஒரு தோண்டி... அதை கூத்தாடி, கூத்தாடி, கூத்தாடி...' 
 
என்று ஒலித்துக்கொண்டிருக்கும் போதே மக்கள் உஸாராகிவிடுகின்றனர். பெரியவர் ஒருவர் துணிந்து எழுகிறார். ஒடுக்கப்பட்டு ஊமைகளாய் இருக்கும் மக்களின் உரிமைக்கரலாய் அவரது குரல் ஒலிக்கிறது. 'எங்களது கால ஓட்டத்தை இனி நாங்கள் தான் தீர்மானிப்போம்' என்கிறார் பெரியவர்.

382179_4733805955126_17774261_n+%281%29. மாய வலையினை அறுத்தெறிந்து காலத்தை தமது கையிலெடுத்த மக்கள்

எந்தவொரு அரசியல் வாதிகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்ற யதார்த்த நிலையை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். இந்த காட்சி முழுவதும் எள்ளல் சுவை இழையோடியிருக்கிறது. சிங்கள அரசியல் வாதியின் உரையை மீண்டும் மொழிபெயர்ப்பு செய்து 'எக்கோ' செய்தவர் சிரிப்பை ஏற்படுத்தினார். இடையில் தமிழ் அரசியல் வாதியிடம் ஒருவர் கேட்கிறார் 'என்னய்யா சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் கதைக்கிறீர்கள்?' என்று. இவ்வாறு ஒவ்வொரு வசனங்களும் எங்கள் இன்றைய யதார்த்த அரசியல் நிலைமையை தோலுரித்துக் காட்டக்கூடியன. 
 
மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் கூட்டங்களை ஊமைகளாய் இருந்து  சத்தமில்லாமலே தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள் யாழ் பல்கலை மருத்துவ பீடத்தின் 32ம் அணியினர். 
 
மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு எனது மனந்திறந்த பாராட்டுக்கள். 
 
ஒரே ஒரு குறை. நாடகம் இன்னும் அதிகமானோரை சென்றடைய வேண்டியது. ஆனால் அரங்கு நிறையாத பார்வையாளர்களே இருந்தார்கள். இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் அரங்கேற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் முயற்சி செய்யுங்கள். 

படங்கள் : - 

படங்கள் Praneev Ganeshamoorthy  ஆல் எடுக்கப்பட்டவை

 
நன்றி  -  Praneev Ganeshamoorthy

 

http://thaganans.blogspot.com.au/2013/06/blog-post.html

 

  • கருத்துக்கள உறவுகள்
மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் கூட்டங்களை ஊமைகளாய் இருந்து  சத்தமில்லாமலே தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள் யாழ் பல்கலை மருத்துவ பீடத்தின் 32ம் அணியினர். 
 
 அவர்களுக்கு எனது மனந்திறந்த பாராட்டுக்கள். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.