Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

A9 வீதி ஊடாக பயணிக்க நாம் போராடவில்லை "நாங்கள் எங்களுடைய தேசத்தில் விடுதலையுடன் பயணிக்கவே போராடினோம்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

A9 வீதி ஊடாக பயணிக்க நாம் போராடவில்லை "நாங்கள் எங்களுடைய தேசத்தில் விடுதலையுடன் பயணிக்கவே போராடினோம்"
25 ஜூன் 2013

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பிரியதர்சன்




அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் தலைநகரம் எனப்படும் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஏ-9 வீதியையும் விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தையும் திறந்து வைத்தார். இந்தப் வீதியில் நடப்பதற்காக, இந்தப் வீதியில் பயணிப்பதற்காக மக்கள் கனவுகள் வளர்;த்த காலங்களும் உண்டு. உண்மையில் இவ்வீதி ஒரு கனவு வீதி. மறுவளத்தில் இந்த வீதி இலங்கை அரசியலின் இனப்பிரச்சினையை சிக்கலையும் நீளத்தையும் பிளவுகளையும் துண்டிப்புக்களையும் விபரிக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினையில் இரத்தம் படிந்த வீதியொன்றையே மகிந்த ராஜபக்ச திறந்து வைத்திருக்கிறார்.

ஈழப் போராட்டத்தில் இரத்தத்துடன் துயரம் படிந்த வழியாகவும் ஏ-9 வீதி நீண்டு கிடக்கின்றது. ஏ-9 வீதி இலங்கைத்தீவில் நீண்ட பாதை மட்டுமல்ல இந்த வீதியின் வரலாறும் மிக நீண்டது. உலகில் அதிக காலம் மூடப்பட்ட வீதியாகவும் மறுக்கப்பட்ட வீதியாகவும் இந்த வீதி இருந்திருக்கின்றது. இந்த வீதிக்காக பெரும் யுத்தமே வெடித்திருக்கிறது. இந்த வீதிக்காக போராடி இரத்தம் சிந்தி உயிரைத் துறந்தவர்கள் பலர். இந்த வீதியில் செத்துக்கிடந்தவர்கள் பலர். இந்த வீதியால் செல்ல முடியாது செத்தவர்கள் பலர். இந்த வீதியை தாண்ட முடியாத காலமொன்றிருந்தது.

ஏ- 9 பாதையின் வரலாறு

ஏ-9, இலங்கையின் மத்திய மாகாணத் தலைநகரமான கண்டியையும் வட கிழக்கு தேசத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் 325 கிலோமீற்றர் தூரம் கொண்ட நெடிய வீதியாகும். கண்டிவீதி எனவும் யாழ் சாலை எனவும் அழைக்கப்படும் இந்த வீதி இலங்கைத்தீவில் மிகவும் நீளமான வீதியாகவும் வடக்கிற்கான பிரதான வீதியாகவும் இருக்கின்றது.

இலங்கையில் இனப்பிரச்சினை ஏற்பட்டதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டதும் 1984இல் இந்த வீதி மூடுண்டது. அன்றைய நாட்கள் முதல் இந்த வீதியின் சில பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் இருந்தன. 2001 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அப்பொழுது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு சமாதன ஒப்பந்தம் கைசாத்திட்ட பின்னர் இந்த வீதி அந்த ஆண்டு பெப்ருவரி 15ஆம் நாள் மீண்டும் திறக்கப்பட்டது.

பின்னர் 2006இல் மீண்டும் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான யுத்தம் வெடித்த நிலையில் மூடப்பட்டது. 2009 ஜனவரி 9ஆம் நாள் ஆனையிறவுப் பகுதியை கைப்பற்றியதுடன் 23வருடங்களுக்குப் பின்னர் ஏ-9 வீதி முழுவதும் இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 2009 மார்ச் 2ஆம் நாள் படையினரின் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட இந்த வீதி யூன் மாதம் 17ஆம் நாள் தனியார் லொறிகள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டு யூலை 22ஆம் நாள் படையினரின் அனுமதியுடன் அவர்களின் கண்காணிப்புடன் பொது மக்களுக்கான பேரூந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்டன. மார்கழி மாதம் 19ஆம் நாள் அன்றே அனுமதியின்றி பேரூந்துகள் செல்லத் தொடங்கின. இவ்வழியின் இடையில் ஆனையிறவிலும் ஓமந்தையிலும் சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஏ-9 வீதியில் இந்திய இராணுவம்

இந்திய இராணுவ வருகைக்காலத்தில் இந்த வீதியில் பாடசாலை விட்டு வரும் பொழுது டாங்கிகளில் செல்லும் இந்திய இராணுவத்தினரைப் பார்ப்பேன். இந்திய இராணுவத்தின் யுத்த டாங்கிகளைக் கண்டு அஞ்சியபடி வீதியின் கரையோராமாக மரங்களுக்கு கீழ் ஒளிந்திருப்போம். அந்த டாங்கிகள் பயங்கரமான காட்சியாகவும் பயங்கர சத்தத்துடனும் செல்லும். இந்த இராணுவத்தினர் யார்? எதற்காக வந்திருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாமலே அவ் வீதியில் அவர்களை காண்டேன். பயங்கரம் மிகுந்த அந்தப் பயணத்தில் செல்லும் இந்திய இராணுவத்தினர் அஞ்சி ஒளித்திருக்கும் என்னைப் போன்ற பள்ளி மாணவர்களைப் பார்த்து கைகளை அசைத்துக் கொண்டு செல்லுவார்கள்.

வவுனியாவுக்குச் செல்லுவதென்பது பெரும் போராட்டமாக அமைந்த காலம் வந்தது. 1984இல் இந்த வீதி மூடப்பட்ட பொழுதும் இராணுவப் பிரதேசங்களும் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களுமாக இண்டு பிரதேசங்கள் உருவாகின. ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு கட்டுப்பாட்டிற்குச் செல்லுவது மிகவும் கஷ்டமானது. எப்பொழுதும் போர் மூளும் வீதி. எப்பொழுதும் வெடிக்கும் வீதி. இதனால் வவுனியா அன்றைய நாட்களில் வேறு ஒரு பிரதேசமாக கட்டுப்பாடாக இருந்தது. அங்கு சென்று வருவதற்கு அடிக்கடி வீதிகள் பிரச்சினையாகின. வந்தால் போக முடியாது. போனால் திரும்ப முடியாது. பயணங்கள் பல மாதங்களாக இழுபட்டன.

சைக்கிளை ஓட்ட ஆசைப்பட்ட வீதி

இந்த வீதியில் சைக்கிளை ஓட்டிச்செல்வது என்பது பெரிய கனவாக இருந்தது. அடிக்கடி நடந்த யுத்தத்தில் இந்த வீதி முழுவதும் குண்டும் குழியுமாக அழிந்திருந்தது. 1996இல் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்ந்தோம். சந்திரிகா அரசு ஏ-9 வீதியைக் கைப்பற்ற யுத்தத்தை நடத்தியது. சுமார் 3 ஆண்டுகள் இந்தப் வீதிக்காக அவரது படைகள் சண்டையி;ட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரை சந்திரிகா அரசின் படைகள் கைப்பற்றிவிட்டன. அதைப்போலவே ஓமந்தையிலிருந்து பனிக்கன்குளம் வரையும் கைப்பற்றிவிட்டன. இடையில் ஒரு சின்னத் துண்டு வீதியை கைப்பற்ற வேண்டியிருந்தது. அப்பொழுது வன்னியில் கிழக்குப் பகுதிக்கும் மேற்குப் பகுதிக்குமான தொடர்பு அபாய நிலையிலிருந்தது. சில காலம் துண்டிக்கப்பட்டுமிருந்தது. அக்கராயனிலிருந்து செல்லும் பேரூந்துகள் முல்லைத்தீவுக்குச் செல்ல இரணைமடு அணைக்கட்டு வழி மட்டுமேயிருந்தது. இதோ வீதியைக் கைப்பற்றுகிறோம். இதோ வீதியைத் திறக்கப் போகிறோம் என்று அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இராணுவத்தளபதியுமான அனுரத்த ரத்வத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்த வீதியை விட்டு நெடுந்தூரம் சென்ற பின்னரும் இந்த வீதியால் சைக்கிளை ஓட்டிச்செல்லும் கனவு ஒருநாள் நனவானது. மூன்று ஆண்டுகள் யுத்தம் நடத்திய கைப்பற்றிய தெருக்களை விடுதலைப் புலிகள் மீண்டும் சில நாட்களில் கைப்பற்றிய பொழுது மீண்டும் இந்த வீதியில் நடக்கும் ஆசை நனவானது. அப்பொழுது உயர்தரம் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் இரவு வகுப்பிற்குச் சென்றுவிட்டு இந்த வழியால் திரும்பிக்கொண்டிருந்த பொழுது கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக ஒரு பெரிய கிடங்கில் சைக்கிள் விழுந்து நானும் விழுந்துவிட்டேன். அது ஒரு பதுங்குகுழி. அந்த இடம் குறிப்பிட்ட காலம் வரை யுத்த எல்லைப் பிரதேசமாக இருந்தது. அங்கு நிறையப் பதுங்கு குழிகள் இருந்தன. வீதியின் குறுக்காக பெரிய மண்மேடு ஒன்றே இருந்தது. வீதிக்கரையாக பதுங்குகுழிகளும் வீதியில் நிறையக் குழிகளும் இருந்த அவ் வீதியிலும் மகிழ்வாக பயணித்தோம்.

சமாதான வழி

இந்த வீதி ரணில் - பிரபாகரன் ஒபந்த காலத்தில் ஏ-9 மீண்டும் திறக்கப்பட்டது. ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் மீண்டும் திருத்தப்பட்டது. அப்பொழுது அந்தப் பதுங்குகுழிகளுடன் வீதியின் குழிகளும் மூடப்பட்டன. வீதி அழகானது. ஆனால் அந்த வீதி ஒரு பெரும் யுத்தத்திற்கான வீதி என்று தெரியவில்லை. அந்த வீதியின் பளபளப்பு கண்களை மயக்கிவிட்டிருந்தது. அந்த வீதியில் ஏறி முதன்முதலில் வவுனியாவுக்குச் சென்றேன். அப்பொழுது எங்கள் பாடசாலையின் சுற்றுலா வண்டி முதல் முதல் வடக்கைவிட்டு வெளியில் தெற்கிற்குச் சென்றது. அந்த வீதியால்தான் மிக நீண்ட காலமாக தடைசெய்யப்பட்டிருந்த பொருட்கள் எல்லாம் வன்னிக்கு வந்தது. சுமார் இருபது வருடங்களாக மக்கள் காணாதிருந்த பல பொருட்களைக் கண்டனர். தொலைக்காட்சி, குளிரூட்டி என்று எல்லாமே வந்தது.

அக்காலத்தில் கிளிநொச்சியை சமாதான நகரம் என்றே அழைத்தார்கள். உலகிலிருந்து பல்வேறு முக்கிய பிரதிநிதிகளும் கிளிநொச்சிக்கு வந்தார்கள். எரிக்சொல்ஹெய்ம், பிரான்சிஸ் ஹரிசன், யசூசி அக்காசி எனப் பலரும் வந்து சென்றார்கள். அடிக்கடி கிளிநொச்சிக்கு ஹெலிகப்டர்கள் வந்தன. வந்த பிரதிநிதிகள் கிளிநொச்சியில் புனரமைக்கப்ட்ட வீதியையும் பார்த்துச் சென்றனர். அவர்கள் கிளிநொச்சி மைதானத்திற்கு வந்த பின்னர் கிளிநொச்சி ஏ-9 வீதியூடாக தமிழீழ காவல்துறையின் உச்ச பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் வெள்ளை நிறக்காட்சி மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டியது. இனியொரு யுத்தம் வராது என்றும் எல்லாம் சமாதான வழியில் கிடைக்கும் என்றும் நம்பினார்கள். அப்படி சமாதானத்தை நம்பிய சாமாதான வீதியாக ஏ-9 வீதி தெற்கு வரை நீண்டது.

மீண்டும் வீதியில் குழிகள்

பிரபாகரன் - ரணில் விக்கிமசிங்க சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த பொழுதே இந்த வீதியில் குழிகள் மீண்டும் விழத் தொடங்கிவிட்டன. இலங்கை அரசின் விமானங்கள் வன்னிப் பகுதியில் வந்து குண்டுகளைப் போடத்தொடங்கின. வீதியில் குழிகள் விழ நாங்கள் பதுங்கு குழிகளை அமைக்க நேரிட்டது. யுத்தம் மூண்டதும் மீண்டும் பாதை அடிக்கடி மூடப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லுபவர்கள் வன்னியை கடக்க முதல் வீதி மூடப்பட்டது. எப்பொழுது வீதி மூடப்படும் என்று தெரியாமலே இந்த வீதியின் ஊடாக மக்கள் பயணித்தார்கள். ஓமந்தை புளியங்கும் சோதனைச் சாவடியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. வீதி மூடப்படும்போதெல்லாம் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு வந்து பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் திறக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் மீண்டும் பசியுடன் இருக்கும் ஒரு காலத்தை இந்த வீதியின் மூடுதலுடன் எதிர்கொண்டோம். 2006இல் முகமாலைப் பகுதியில் யுத்தம் வெடித்த பொழுது இந்த வீதியை முற்றாக இலங்கை அரசு மூடியது. ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இந்தப் வீதி மூடப்பட்டது. அப்பொழுது யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பலர் மாட்டிக்கொண்டனர். 2006ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த நிலையில் என்னைப்போல யாழ்ப்பாணத்தில் சிக்குண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து கிளிநொச்சி வந்து சேர்வதற்கு நான்கு நாட்கள் பிடித்தன. இராணுவத்தினர் கப்பலுக்காக மாத்திரம் இரண்டு பகல்களும் ஒரு இரவும் காத்திருந்தோம். ஒரு இரவு முழுவதும் யெட் லைனர் கப்பலில் பயணித்தோம். யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வந்து வவுனியா வந்து பின்னர் கிளிநொச்சிக்கு வரும் பொழுது நான்குநாட்கள். ஓமந்தை சோதனைச்சாவடி வருகையில் இரவாகிவிட்டது.

பிரபாகரன் உங்களுக்கு சோறு தரமாட்டார் அங்கு போகாதீர்கள் என்று இலங்கை இராணுவத்தினர் எங்களை மறித்தார்கள். இலங்கையின் மீக நீளமான வீதியொன்றில் நாங்கள் சிறு பொட்டில்களுக்குள்ளால் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டோம். ஏ- 9 வீதி எனப்படும் இந்த நெடு வீதியில் நிமிர முடியாத தென்னை ஓலைகளாலான சிறு ஓட்டை ஒன்றினால் போங்கள் என்று இராணுவத்தினர் தள்ளிவிட்டனர். மாபெரும் நெடுஞ்சாலை ஒன்றின் வழி அதுதான். 2006இலிருந்து தொடர்ந்து இந்தப் வீதி மூடப்பட்டிருந்தது. விமானத்தாக்குதல்கள் மற்றும் கிளைமோர் தாக்குதல்களரினால் காயமடைந்த நோயாளர்களைக்கூட கொண்டு செல்ல முடியாத நிலையுமிருந்தது. பலர் காயங்களுடன் இரத்தம் சிந்த சிந்த புளியங்குளத்தில் காத்திருந்தனர். வீதியை அடிக்கடி முடிவிட்டு திறக்க முடியாது என்று இலங்கை அரசு திமிராகச் சொல்லிக் கொண்டிருந்தது

2007ஆம் ஆண்டில் ஜெனிவாவில் இலங்கை அரச பிரதிநிதிகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்பொழுது ஏ-9 வீதியை திறக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை வைத்தனர். இது முக்கியமானதொரு மனிதாபிமான தேவை என்று அவர்கள் அங்கு குறிப்பிட்டார்கள். ஏ-9 வீதி மூடியதால் யாழ்ப்பாணத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதுமட்டுமன்றி எல்லாப் பொருட்களும் பஞ்சம் ஏற்பட்டது. பத்திரிகைகள் ஒரு தனித்தாளில் இரண்டு பக்கங்களுடன் வெளி வந்தன. மருந்துத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தப் வீதியை மூடியதால் உயிரிழந்தவர்கள் பலர். செத்த வீடுகளுக்குக்கூட செல்ல முடியாமல் மக்கள் துண்டிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

சாம்பல் வழியும் தெரு

2009 ஜனவரி மாதம் ஏ-9 வீதி கைப்பற்றப்பட்ட பொழுதும் யூலை மாதமே மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். வன்னிப் பெருநிலத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றிய பின்னர் ஏ- 9 வீதியினூடாக பயணித்த பொழுது சாம்பல் நிலமொன்றின் நடுவே உள்ள சாம்பல் வழியும் வீதியால் சென்றோம். பார்க்கும் இடமெல்லாம் அழிவுகள். கிளிநொச்சி நகரம் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. எல்லாம் நிர்மூலமாக சாம்பலாகிக்கிடந்தது. வீதியின் கரையோரமாக இருந்த கடைகள், கட்டிடங்கள், வீடுகள் எல்லாமே அழிக்கப்பட்டன. கிளிநொச்சி நகரத்தில் அதிகமாக சண்டை ஏதும் நடக்வில்லை. புறநகரிலேயே சண்டைகள் நடந்தன. எனினும் கிளிநொச்சி அழிக்கப்பட்டது? அந்த அழிவு வீதி நகர்வீதியை சாம்பலாக்கியது.

2009 முன்னரான கிளிநொச்சியையும் ஏ-9 வீதியையும் அழித்து வேறு ஒரு வடிவில் உருவாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கிளிநொச்சி நகரம் தரைமட்டமானது. ரணில் - பிரபாரகன் ஒப்பந்தத்தில் செப்பனிடப்பட்ட வீதி மீண்டும் குழிகளுடன் இருந்தது. சாம்பல் வழியும் இந்த வீதியில் கால் வைக்க மக்கள் ஏங்கிய நாட்களுண்டு. முதலில் இந்த வீதியூடாக செல்ல அனுமதித் இராணுவத்தினர் பேரூந்தை கொடிகாமத்திற்குப் பின்னர் தாண்டிக்குளம்வரை எந்த இடத்திலும் நிறுத்துவதில்லை. பல மாதங்களாக இந்த முறையில்தான் பயணம் நடந்தது. பேரூந்தில் மக்கள் ஏறும் வாசலிலும் இறங்கும் வாசலிலும் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் நின்று கொண்டிருந்தார்கள். முழுக்க முழுக்க இராணுவத்தினரின் வசமாகிய வன்னியில் அவர்கள் எதற்காக அப்படித் துப்பாக்கியை ஏந்தியபடி கூடவே வரவேண்டும்.

தீர்வுக்கான வழியே தேவை

இப்பொழுது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புனரமைக்கப்பட்ட ஏ-9 பாதையை திறந்து வைத்திருக்கிறார். இந்த வீதியை திறக்கும் நிகழ்வை ஒரு பிரமாண்டமான அபிவிருத்தியாகவும் வடக்கு மக்களுக்கு வழங்கும் வசந்தமாகவும் அவர் காட்டுகிறார். வீதியை திறந்து வைப்பதன் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் பிர்சினைகள் முடிந்துபோவதில்லை. மூடப்பட்ட வீதியை திறப்பதை மட்டுமே தமிழர்களுக்கான தீர்வாக காட்ட சிங்கள இனவாத சக்திகள் முனைகின்றன.

இந்த வீதி திறந்தாலும் இன்னமும் பல கிராமங்களும் பல வீதிகளும் மூடுண்டே இருக்கின்றன. இந்த நாட்டில் தமிழர்கள் தமது உரிமைக்காக போராடத் தொடங்கிய பொழுது இந்த வீதிகள் திறந்தேயிருந்தன. தமிழர்கள் போராடியதற்காக தண்டனையாக மூடப்பட்ட வீதிகள்தான் இப்பொழுது திறக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏ-9 வீதியை திறந்து வைத்த அதேநாளில் வலிகாமம் இடப்பெயர்ந்த மக்கள் அன்றைய நாள் தாம் இடம்பெயர்ந்த நாட்களில் ஒன்று என்றும் எம்முடைய வீடுகளுக்குச் செல்லும் வீதிகளை திறந்து வைக்குமாறும் கேட்டிருந்தார்கள்.

அரசியல் வீதி

இந்த வீதியை திறந்து வைப்பது என்பது ஒரு அரசியலுக்கான நிகழ்வாகவே நடந்தது. அதைப்போலவே இந்த வீதி அரசியலுக்காக அன்று மூடியிருந்தது. அதைப்போலவே இந்த வீதியை கைபற்ற யுத்தம் நடந்ததும் அரசியலுக்காகவே. ஏ-9 வீதியை திறந்தால் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் பெறும் என்று அஞ்சியே இதை அவ்வவப்போது இலங்கை அரசு முடியது. ஆனால் இந்த வீதியைத் தவிரவும் புலிகளுக்கு பல வீதிகள் இருந்தன. மக்கள் பயணிக்க இந்த வீதி மட்டுமேயிருந்தது. இந்த வீதியை மூடுவதன் மூலம் புலிகளை பணிய வைக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டிருந்தது. காலங்களின் அரசியலுக்கு ஏற்ப இவ்வீதி முடியும் திறந்துமிருந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏ-9 வீதியை திறந்து வைக்கும் பொழுது அமைச்சர் சம்பிக்க ரணவக்க சம்பந்தனுக்கு கூறுவவதாகச் சொல்லி தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகளைத் தருகிறார். ஒன்று முள்ளிவாயக்கால் வழி. மற்றையது ஏ-9 வழி. காணி மற்றும் காவல்துறை அதிகாரம் தேவை என்றாலோ இந்தியாவுடன் பேசினாலோ முள்ளிவாய்க்கால்தான் வழி எனச் சொல்லும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க எந்த தீர்வுகளும் தேவையில்லை என்றும் தமிழர் தேசத்தை ஒடுக்கும் சிங்கள இனவாத நடவடிக்கைகளுக்கு இணங்கினால் ஏ-9 வீதி கிடைக்கும் என்றும் சொல்கிறார்.

வடக்கில் வசிக்கும் தமிழர்களைவிடவும் வேறு பலருக்கும் அவர்களின் பல நோக்கங்களுக்காகவும் ஏ-9 வீதி தேவைப்படுகிறது. ஒரு காலத்தில் திறந்த பொழுது கொக்ககோலாவும் குளிரூட்டியும் வந்த இத் தெருவால் இன்று சிங்களக் குடியேற்றங்களும் வருகின்றன. வடக்கிலிருந்து மாடுகளையும் இரும்புகளையும் உலோகங்களையும் கொண்டு செல்ல இந்த வீதி உதவுகிறது. இந்த வீதியை மூடிய பொழுது ஏற்பட்ட பிரச்சினைகள் போல திறக்கும் பொழுதும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தமிழர்கள் ஏ-9 வீதி ஊடாக பயணிப்பதற்காக போராடவில்லை என்பதையே இலங்கை ஆட்சியாளர்களும் சிங்கள இனவாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். ஏ-9 வீதி திறக்கப்படுவதுடன் எல்லாப் பிரச்சினைகளும் முடிவதில்லை. உண்மையில் இனப் பிரச்சினைக்கான வழியை, தமிழர்களின் போராட்டதிற்கான தீர்வுவை வழங்கும் வழியை உலகம் திறப்பதே இன்றெமது அவசிய தேவையாகும். நாங்கள் எங்களுடைய தேசத்தில் விடுதலையுடன் பயணிக்கவே விரும்புகின்றோம்.

பிரியதர்சன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93299/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.