Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தாமணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காந்தாமணி – மதுமிதா

 

 

images5.jpg

 

பிரார்த்தனையிலும் காமத்திலும் தான் ஐம்புலன்களும் ஐக்கியமாகி ஒரு புள்ளியில் குவியும்னு சொல்வாங்க. அதில் படைப்புத் தொழிலான சினிமாவையும் சேர்த்துக்கிறேன். கண்களைச் சுருக்கிச் சிரிக்கிறார் மகேந்திரன். இயக்குநர் மகேந்திரனின் புகைப்படத்துடன் வெளிவந்த அவரின் பேட்டியைப் படித்துக்கொண்டிருந்த பிரபல வாரப்பத்திரிக்கையை மூடினேன்.

காந்தாமணியின் வார்த்தைகள் செவிகளில் எதிரொலித்தன. அம்மா காமங்கறதை தப்பா பாக்கிறீங்க. எல்லா அவயங்களும் மனமும் ஒண்ணு சேருற தருணமுல்ல. தியானமில்லீங்களா அது. நம்ம சமூகத்தில் எல்லாம் தப்பிதங்களா கற்பிக்கப்பட்டிருக்கு. எப்படி வாழணும்னு எல்லோரும் கத்துக்கணும். ஆனா, அதை யாரும் நமக்குச் சொல்லித் தர்றதில்லை. நாமளே தான் கத்துக்கணும்.

காந்தாமணியின் வருகைக்கு காத்திருந்தேன். நிரஞ்சனியின் திருமணம் குறித்த கனவுகளுடனிருந்தாள். முறைப்படி நாள் பார்த்து ஊர் மெச்ச மகளின் திருமணத்தை நடத்திவைக்க வேண்டும் என்பது அவளின் வாழ்நாள் கனவு.

ஜன்னல் வழியாகத் தெரிந்த காட்சி கவனத்தை ஈர்த்தது. கொய்யாமரக் கிளையில் மூன்று இலைகளைச் சேர்த்து இணைத்து தயாரிக்கப்பட்டிருந்த சிறுகூட்டில் முட்டைகள் உடைந்து மூன்று சிறு குஞ்சுகள் கண்களில் பட்டன. மூக்கு நீண்ட சிறிய பறவை ஒன்று எங்கெங்கிருந்தோ நார்களையும் பஞ்சுகளையும் கொணர்ந்து இந்த சிறுகூட்டினை உருவாக்கியிருந்தது. முட்டையை அடைகாத்து குஞ்சு பொரித்து இதோ அவற்றுக்கு உணவையும் எங்கோ பறந்து சென்று கொண்டுவந்து கொடுக்கிறது. குஞ்சுகளின் சிவந்த அலகுகள் விரிய தாய்ப்பறவையின் வாயிலிருந்து உணவு பண்டமாற்றம் நிகழும் காட்சி அதிசயம் போல் நிகழ்ந்தது. பறவைக்கும் தன்னுடைய குஞ்சுகளின் மீதான பாசம் இயற்கையிலேயே யாரும் சொல்லித்தராமலேயே ஏற்படுகிறது.

இதுபோலத்தான் நிரஞ்சனியை கண்ணுக்குள் வைத்து வளர்த்தாள் காந்தாமணி. அவள் வளர வளர அவளின் அழகும் மெருகேறியது. சினிமாவில் அவளை நடிக்க வைக்க சம்மதம் கேட்டு வந்தவனை காந்தாமணி விரட்டியடித்தது தலைப்புச் செய்தியாக வீதி முழுக்க பலகாலம் சொல்லப்பட்டது.

மறுவாழ்வு மையத்தில் இருக்கும் பெண்களுக்கு உரை நிகழ்த்தப்போகும்போதுதான் முதன் முதலில் காந்தாமணியைச் சந்தித்தேன். காந்தாமணி அந்த இருபத்தி எட்டு பெண்களுக்குத் தலைவியாக இருந்தாள். முதல் பார்வையிலேயே அவளை எனக்குப் பிடித்துப் போயிற்று. சாந்த சொரூபினியாக இருந்தாள். அவர்களின் வாழ்க்கையை நேர் செய்வதற்கு அவள் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பார்த்த யாருமே அவள் சிவப்பு விளக்குப்பகுதியில் வாழ்ந்தவள் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அத்தனை பெண்களையும் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் விட்டு விட்டு பதினைந்து நாட்கள் இந்த முகாமில் வந்து கலந்து கொள்ள அழைத்து வந்திருந்தாள். அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தான் இருந்தார்கள். வெளியே தெரியாமலேயே மறைமுகமாக இந்தத் தொழில் எல்லா இடங்களிலும் பரவலாக நடக்கிறது.

இதனால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி. நம் சந்ததிகளுக்கு இந்த நோய் பரவாமல் எப்படித் தடுக்க வேண்டும். இந்த சேற்றிலிருந்து எப்படி வெளியே வரவேண்டும். சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ என்னென்ன வேலைகளெல்லாம் அரசு அளிக்கிறது. அதில் எப்படி முன்னேற வேண்டும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் இடைப்பட்ட நேரத்தில் பேசி தொடரும் கலந்துரையாடலுக்கு அவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இதில் காந்தாமணி தான் மீடியேட்டராக இருந்து சூழலை கலகலப்பாக்கினாள்.

முதல் மூன்று நாட்கள் வீட்டில் கணவனை குழந்தைகளை மற்ற உறவுகளைப் பிரிந்த நினைவு வாட்ட வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்னும் உணர்வு அவர்களை ஆட்டிப்படைத்தது. வேளைக்கு உணவும் உறக்கமும் இடையிடையில் பேச்சும் புனர்வாழ்வுக்கான வழிமுறைகளும் எடுத்துச் சொல்லப்பட்ட விதமும் எப்படியும் சரியான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்னும் உணர்வு எழுந்தாலும்

அவர்களால் உடல் இச்சையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. ஒருகட்டத்தில் அது இல்லாமல் இருக்கவே முடியாது என்னும் நிலைக்கு வாதவுடன், உதவியாளர்கள், வாட்ச்மேன் அல்லது எந்த ஆண் வந்தாலும் தயங்காமல் உறவுக்கு சைகையில் அழைத்தனர். அவர்களுக்குள் ஒரு மௌனமொழி அவர்களுக்கான உறவின் நிலையை நிர்ணயித்தது. பல வருடங்களாகத் தொடர்ந்த பணத்தேவைக்கான பணியாக இருந்தது, இப்போது பணமே இல்லையென்றாலும் இலவசமான உறவை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்தித்தது. காந்தாமணி எவ்வளவோ எடுத்துச் சொல்லிடும் விழுந்த சேறிலிருந்து அவர்களை மீட்க முடியவில்லை. மண்ணுக்குப் போறது மனுஷனுக்குக் கொடுத்தா பணம் கிடைக்கும் என்பது மந்திரமாகிறது.

எப்படி எந்த சூழலில் இப்படி இந்த நிலைக்குத் தள்ளப்படறாங்க என்று சொல்லவே முடியாது. நதிசென்று சேரும் இடம் கடல் என்கிறது போல எதோ ஒரு காரணத்தால் கடைசியாக இந்தச் சூழலுக்கு வந்து சேருகிறார்கள்.

காந்தாமணி சொல்லிய சில கதைகள் அதிர வைக்கும் உண்மைகள். கனிவான குரல். கடுமையாகவோ பதற்றமாகவோ எப்போதும் பேசமாட்டாள். சொல்லத்தெரியாத ஒரு நிதானம் அவளுடைய உடல்மொழியில் இருக்கும். குழந்தைகளுக்கு வீட்டுக் கஷ்டம் தெரியவேண்டுமென்று இது வெளிப்படையாக தெரியுமாறு நடப்பார்களாம். அவன் அவளை கடுமையாகப் பேசுவதை சிறுமி கேட்கும்படியே செய்வார்கள். அந்தப் பெண்குழந்தை தன்னுடைய தாய் படும் கஷ்டத்தைப் பார்த்து தானே பணம் சம்பாதிக்கத் தயாராகிவிடுவாள். பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் பெரிய மனிதர்களுடன் போய் வரும் பழக்கத்தை ஏற்படுத்தறாங்க. இதுக்கு இன்னும் அதிக பணம் கிடைக்கும். கையோ ஓரலான உறவோ தவறென்று தெரியாத அளவிலேயே இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தறாங்க. அவளும் தாயைக் காப்பாற்றுகிறோம், வீட்டுச் செலவுக்கும் ஆகிறதென்று எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள் என்னும் அளவில் வளர்க்கப்பட்டு விடுகிறாள். அவள் பெரிய மனுஷி ஆகும்போதோ இன்னும் அதிகமான வருவாய். கன்னிப்பெண்ணின் முதல் உறவு என்று அதிக பேரம் பேசப்படும். இன்னொரு விஷயம் இதுதான் முதல் முறையென்று ஐந்து ஆறு பேரிடம் ஏமாற்றி அனுப்பி பணம் பறிப்பதும் உண்டு. ஆண்களின் தேவையை இவங்க பயன்படுத்திக்கறாங்க. ஆண்கள் இவங்களுடைய பணத்தேவையை எளிதாக தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளறாங்க.

ஒருகட்டத்தில் பெண்களால் இதிலிருந்து மீளவியலாமல் போய்விடுகிறது. இவை நடக்காமல் இருக்க என்னவெல்லாம் வழிமுறைகள் புதிதுபுதிதாக கண்டுபிடிக்கப்படுகின்றனவோ, அவற்றையெல்லாம் கடந்து இவற்றில் மூழ்கிக்கிடக்க புதிது புதிதான வழிமுறைகள் தானாகவே ஏற்படுகின்றன.

இது குறித்து காந்தாமணி எடுத்துச் சொல்லிய கதைகள் – அவை கதைகள் அல்ல உண்மை நிகழ்வுகள் – நம் அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தம் இல்லாதவை. ஆண்களின் மீதான என்னுடைய பார்வையை மாற்றி அமைத்தவை. இத்தகைய பெண்களின் மாற்று உலகில் அவர்களின் அவலநிலையையும் எடுத்துக்கூறியவை. அவளுடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், ‘அம்மா நீங்க பார்க்கிற வாழற உலகம் வேற. நாங்க வாழற உலகம் வேற. உங்களுடைய ஒழுக்க விதிகளெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. வயிறுன்னு ஒண்ணு இருக்கே. அதுல பத்தி எரியும் தீயை அணைக்க ஒங்க ஒழுக்க விதிகளால முடியாது. அதையாவது பச்சைத்தண்ணி ஊத்தி அணைச்சுடலாம். ஒடம்புன்னு ஒண்ணு இருக்கே. அதுக்குப் போடவேண்டிய தீனின்னு ஒண்ணு இருக்கே. அதுக்கு விதவிதமான ருசிகள்னு இருக்கே. அது பலவிதமாதான் கேட்கும்.’

நான் இதை விட்டு அஞ்சு வருஷங்கள் ஆகுதும்மா. நிரஞ்சனிக்காகதான், அவள ஆளாக்கணுமுன்னு தான் இந்த நிலைக்கு வந்தேன். ஆனா, அவ வயசுக்கு வந்த பிறகு இந்த வாழ்க்கையின் நிழல் கூட அவள் மேல பட்டுடக்கூடாதுன்னு இத விட்டுட்டேன்.

இப்போ ஒருத்தன் பதிவா வடக்கே இருந்து வரான். அவன் வர்றப்ப எல்லாம் பணமும், மருந்து மாத்திரைகளும் கொண்டு வந்து தருவான். மத்தவங்களுக்கும் அவனுக்கும் இருக்கிற வித்தியாசம் மத்தவங்க பொண்ணுங்க மாசத்தில் வீட்டுக்கு விலக்காகாத நாட்களா தேடி வருவாங்க. பணம் மட்டுமில்லாமல் உடல்வலியும் மிச்சமாகும். அவனுக்கோ பொண்ணுங்க வீட்டு விலக்காகும் சமயம்தான் தேவை. அவனுக்குன்னு அஞ்சாறு பொண்ணுங்கள முதலிலேயே பேசி வைத்திருப்பேன். அவங்கள கூட்டிவரும் பொறுப்பை செவ்வந்தியும், பார்கவியும் பாத்துக்கிடுவாங்க. சரியா ஒருவாரம் அந்த மருந்து மாத்திரைகளை அவங்க சாப்பிடணும். உடல்வலியே கிடையாது. தனியாக சுத்தமாக அமர்ந்து இரத்தப்போக்கையும், கழிவையும் சேகரித்து மட்டும் கொடுத்தால் போதும். என்னம்மா முழிக்கிறீங்க. அதை வச்சு என்ன பண்ணுவான்னா. அதையேன் கேக்கிறீங்க. கட்டிங்கள கூட எடுத்து ரொட்டிக்கு நடுவுல ஜாம் மாதிரி வெச்சு சாப்பிடறான். கொஞ்சம் கூட அசூயையே இல்ல. பார்க்க எத்தனை வயசு இருக்கும்னு நெனைக்கிறீங்க. அவனுக்கு அறுபது வயசிருக்கும். ஆனா அவனைப் பாத்தா நாப்பது நாப்பத்தைந்துக்கு மேல சொல்லவே முடியாது. சின்னப்பையனாட்டம் இருப்பான். அவ்வளவு இளமையா இருக்கிறான். இப்போல்லாம் எல்லாத்தையும் விட்டுட்டு வெளியே தெரியாமல் இதை மட்டும் செய்யறேன்’ என்றாள்.

பெண்கள் சுத்தம் செய்யவே அருவருக்கும் இதை உணவாக எடுத்துக்கொள்வதா. அதிர்ந்து போன நான் என்னுடைய மருத்துவ தோழியிடம் இது குறித்து ஒரு முறை கேட்டேன். இதெப்படி உனக்குத்தெரியும் என்று கேட்ட அவள் இன்னும் விளக்கினாள். ஆமாம் உண்மை தான். ஸ்டெம் செல்லுக்கு இந்த சக்தி உண்டு. இப்பவும் இது குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மொரார்ஜி தேசாய் சிறுநீரை மருந்தாக பயன்படுத்தலையா. அதுபோலத்தான் இதுவும் என்றாள்.

காந்தாமணி என்னை உற்றுப் பார்த்தாள். என்னம்மா இவ்வளவு பேசறேன் நான் எப்பிடி இங்க வந்தேன்னு பாக்கிறீங்களா. என்னுடைய விதி இந்த நரகத்தில் போட்டது. அந்தக் கதை எதுக்கு இப்போ. அதை மறக்கணும்னுதான் நினைக்கிறேன். பன்னெண்டு வயசில் கடத்திட்டு போயிட்டாங்க. மயங்கிட்டேன். அஞ்சு பேரு சேர்ந்து என்னை பாழாக்கிட்டாங்க. தப்பிக்க வழியில்ல. ஊருல ஒதுக்கி வெச்சுட்டாங்க. பசித்தீ. வயிறுன்னு ஒண்ணு இருக்கு. சாப்பிடணும் அது முக்கியம். வேறு வழியில்லாமல் இதுவே தொழிலாயிடுச்சு. கலங்காமல் ஏதோ தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கதையைச் சொல்வது போல பேசினாள் காந்தாமணி.

ஆனா என்னுடைய நல்விதி உங்க வடிவில் என்னைக் காப்பாத்திடுச்சேம்மா. நீங்க என் தெய்வம் என்றாள். அவளுடைய கண்களில் கருணை ததும்பியது. ஆரஞ்சு வண்ண சேலையில் வெள்ளை நிற பூக்கள் சாந்தமான உருவத்தை எடுத்துக்காட்டியது. முடி கலைந்து நீண்ட நெற்றியில் விழும்போது அவளுடைய ஐம்பத்திஐந்து வயது அவளின் ஒற்றை வெள்ளை முடிக்கற்றையில் அவளுடைய வாழ்க்கையின் அனுபத்தை அவளின் முகத்தில் எழுதுவது போலிருந்தது. கண்கள் நிர்மலமாயிருந்தன. நிரஞ்சனி நல்லா இருந்தால் போதும் என்றாள். நன்றாக படிக்க வைத்தாள். உடை உணவு நாகரீகம் என்று நிரஞ்சனி தாயுடைய கரிசனத்தில் அற்புதமாக வளர்ந்தாள்.

போனமுறை வந்திருந்தபோது நிரஞ்சனியின் திருமண அழைப்பிதழை எடுத்து வருவதாக மகிழ்ச்சி நிரம்ப கூறியிருந்தாள். நிரஞ்சனி கூடப் படிக்கும் பையனை விரும்புகிறாள், படிப்பு முடிந்து வேலை கிடைத்ததும் கல்யாணம் என பூரித்தாள். நிரந்தர வேலை கிடைத்துவிட்டால் நிரஞ்சனி வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கணும் என்று விரும்புகிறாளாம். காந்தாமணி மகளின் கல்யாணத்துக்கென என்னிடம் சிறுகச் சிறுக ஐந்து லட்சங்கள் சேர்த்து வைத்திருந்தாள். அழைப்பு கொடுக்க அவள் மட்டும்தான் வருவாள் கண்டிப்பாக நிரஞ்சனியை அழைத்து வரமாட்டாள். அதை கொடுக்க வேண்டும். அப்போது தனியே இருபதாயிரம் என்னுடைய பரிசாக கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது. நிரஞ்சனி வந்தாள் என்றால், இந்த மறுவாழ்வு மையத்துக்கு ஏன் வருகிறோம் எனக்கு ஏன் அழைப்பு வைக்கவேண்டும் என்கிற கேள்விக்கு காந்தாமணி மகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே. அதனால் தனியாகத்தான் வருவாள் என்று நிச்சயமாகத் தெரியும்.

ஒரு ஞானியைப் போல நடந்துகொள்ளும் காந்தாமணி ஒருமுறை சொன்னாள் அம்மா நாங்க தாசிகள் இல்லைம்மா. பணத்துக்காக ஆண்களோட சேருகிறோம். அவங்க இச்சைக்காக இங்க எங்களைத்தேடி வருவாங்க. ஆனா, எல்லா ஆம்பளையும் இதுக்காக வர்றதில்லைங்கம்மா. நாங்க அவங்களுக்கு ஆறுதலா மனசுக்கும் வைத்தியம் பாத்து அனுப்பறோம். எங்களோடு இருக்கிற நேரத்துல அவங்க மனசு காயத்தை ஆற வெச்சு சந்தோஷம் கொடுக்கணும். எல்லாம் ஒடுங்கி மனதும் அமைதியாகி தியானம் செஞ்சது போல சாந்தாமாகப் போவாங்க. அதனால, நாங்க விபச்சாரிகள் இல்லைங்கம்மா, மத்தவங்களுக்கு மனசின் ஆக்ரோஷம் போக்கி அமைதியின் வழியைக் காட்டும் சந்நியாசினிகள், ஞானிகள்.

வீடு சுத்தமா இருக்கணும்னா கழிவுகள் உள்ளே இருந்து வெளியே போகணும்னு குப்பைத்தொட்டியையும் கழிப்பறையையும் தனியா வைக்கிறோம். அது இல்லைன்னா பாக்கிற இடமெல்லாம கழிவுகள் தான் நிறைஞ்சிருக்கும். நாறிப்போயிடும். நாங்கள்ளாம் இல்லைன்னா நீங்க ரோடில் நடமாட முடியாதும்மா. இப்பவே இங்கும் அங்குமா மீடியால காட்டறாங்க பாலியல் குற்றம் நடக்குதுன்னு. எத்தனை நூற்றாண்டு கடந்தாலும், எத்தனை நாகரீகம் வந்தாலும், இது மனுஷ இயற்கைம்மா. இயற்கையை மாத்த முடியாது. இப்படித்தான் அவன் இருப்பான். பொண்ணாலயும் அவன் இல்லாமல் இருக்க முடியாது. அவனாலயும் பொண்ணு இல்லாம இருக்க முடியாது. பொய்யாதான் நாம வாழறோம்மா. பொய்யான கற்பிதங்கள், பொய்யான வாழ்க்கை. எப்படியோ இதிலிருந்து நான் தப்பிச்சிட்டேன். இன்னும் எத்தனை பேரு எப்போ எப்படி தப்பிப்பாங்க. உலகம் ஒருத்தருக்கு ஒரு விதமாயும் ஒன்னொருத்தருக்கு இன்னொருவிதமாயும் தான் இருக்கும்மா. இதுக்கு யாரை குத்தம் சொல்லறது. இப்படித்தான் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டா அதுக்குத்தகுந்தாற்போல நாம மாறிக்கணும்.

அவளின் குரல் ஆக்ரோஷமில்லாது அமைதியாக இதுதான் யதார்த்தம் என்பது போல ஒலித்தது. இது வரை மையத்திலிருந்து நாங்கள் செய்த பணிகள் எதுவும் பலனில்லாதது போல இன்னும் செய்ய வேண்டிய பணிகள் மலை போல் முன்னே நிறுத்தி வைத்தாற் போலிருந்தது.

காலிங்பெல் ஒலித்தது. காந்தாமணியாகத்தான் இருக்கும். ஆம் காந்தாமணி தான். ஆனால், என்னதிது அவளின் முகம் கவலைக்கோடுகள் நிறைந்து தெளிவில்லாமல் துயரால் கருத்திருந்தது. கண்கள் பெரும்மழையைக் கொட்டிவிடத் தயாராய் இருந்தாற் போலிருந்தன.

காந்தாமணி என்னம்மா அழைப்பிதழ் எல்லோருக்கும் கொடுத்தாச்சா என்றேன். அழைப்பிதழை என் கையில் கொடுத்தாள். பையனின் பெயருக்குக்கீழே அவன் பணிபுரியும் பிரபலமான கம்பெனியின் பெயர் இருந்தது. நல்ல இடத்தில்தான் நிரஞ்சனியைக் கொடுக்கிறாள். இனி அவளுடைய வாழ்வு சிறப்பாக இருக்கும். காந்தாமணிக்கும் நிம்மதி என்று மனநிறைவாக இருந்தது. ஆனால் கண்ணின் கீழே கருவளையங்களோடு இப்படி இருக்கிறாளே கல்யாண வேலை அதிகமோ என்று அவளைப் பார்த்தேன். வாழ்க்கையைப் பறிகொடுத்தாற்போல் இருந்தாள்.

காந்தாமணி என்றதும், மரம் ஒன்று சரிந்து விழுந்தாற்போல மடாரென கீழே சாய்ந்தாள். பதைத்துப்போய் தண்ணீர் எடுத்துத் தெளித்து அவளைத் தூக்கி சாய்வாக உட்கார வைத்தேன். வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் என் கண்களைத் தவிர்த்தாள். மூச்சுத்திணறி மூச்சுக் காற்றுக்கு அலைபாய்வது போல் தவித்தாள். தண்ணீர் புகட்டியதும் ஒரு வாய் குடித்து வேண்டாமென்றாள். காபியாவது டீ யாவது சாப்பிடுகிறாயா என்றேன். கையெடுத்து தலைக்கு மேல் தூக்கி வணங்கினாள்.

அம்மா

அம்மா

அம்மா

பெருமூச்சு விட்டாள். மாப்பிள்ளைக்கு இரண்டு லட்சம் கையில் கொடுக்கணும். இரண்டு லட்ச ரூபாய் மாப்பிள்ளை வேலைக்கு லஞ்சம் கொடுக்கணும். கல்யாண செலவுக்கு ஒரு லட்சம். நிரஞ்சனி என்னிடம் சொல்லாமல் எனக்குத் தெரியாமல் செவ்வந்தியிடமும், பார்கவியிடமும் தனித்தனியா ஆளுங்களைப் பார்க்கச் சொல்லி ரெண்டு ஆளுங்களோட … கன்னிப்பொண்ணுன்னு சொல்லி ……. தலையில் மடேர் மடேர் என்று அடித்துக்கொண்டாள்.

http://malaigal.com/?p=2495

  • கருத்துக்கள உறவுகள்

மனித உணர்வுகள் மிகவும் வித்தியாசமானவை என்பதை மதுமிதா மிகவும் அழகாக இந்தக்கதையில் எழுதியிருக்கிறார்.

 

வரையறுத்த இடைவெளிகளுக்குள் உணர்வுகளையும், தேவைகளையும் கட்டிவைக்க முடியாது ! அவ்வாறு இருந்தால் வாழ்க்கை, ஒரு விஞ்ஞானக் 'கருதுகோள்' மாதிரி ஆகிவிடும். அதில் 'மாற்றம்'  என்பது இருக்காது என்றே நினைக்கின்றேன்!

 

நிரஞ்சனியில் இருந்து இன்னுமொரு கதையொன்று பிறக்கின்றது! அதை நியாயப் படுத்தும் காரணங்களையும் அவள் தேடுவாள்! முக்கியமாகக் 'காந்தாமணியைக்' கஷ்டப்படுத்தக் கூடாது என்பதும் அதில் ஒன்றாக இருக்கும்!

 

நன்றிகள், கிருபன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.