Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும்பான்மை அதிகாரம் சர்வாதிகாரமாகி விடும்: சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SA%20(2).JPG

எங்கள் நாளாந்த வேலைகளை நாங்களே பார்த்துக்கொள்ளும் உரிமை தரப்பட வேண்டும். அப்படியில்லை என்றால் தமிழரும் முஸ்லிம்களும் இந்த சம உரிமை பெற்ற குடி மக்களாக இருக்க முடியாது. பெரும்பான்மை அதிகாரம் சர்வாதிகாரமாகி விடும். நாங்கள் நாட்டை பிரித்து கேட்கவில்லை. எங்களது நிலைமையை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தெளிவாக சொல்லியுள்ளோம். பொருத்தமான நிலைத்து நிற்கும் நியாயமான தீர்வையே பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் கேட்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 
டெய்லிமிரர் பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இரா.சம்பந்தன், டெய்லிமிரருக்கு வழங்கிய செவ்வியின் முழு தமிழாக்கம் வருமாறு...
 
கே: நீங்கள் தமிழ்த் தேசிய வாதத்தின் சமகால தலைவராக பார்க்கப்படுகின்றீர்கள். உங்கள் மீது மீண்டும் மீண்டும் வைக்கப்படும் குற்றச்சாட்டு, நீங்கள் இன்னும் புலிகள் ஆயுதத்தினால் கேட்டு போராடிய தனிநாடு கோரிக்கையை முன்னெடுக்கிறீர்கள் என்பதே. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
 
ப: எங்களின் உண்மையான நிலைப்பாட்டை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தமிழரசுக் கட்சி 1950ஆம் ஆண்டுகளிலே ஆரம்பித்த பழமை வாய்ந்த அரசியல் பாரம்பரியத்தை சார்ந்தவன் நான்.
எங்களுடைய அரசியல் போராட்டம் வன்முறையற்ற அகிம்சை வழி போராட்டமாகும். சத்தியாகிரகங்கள், ஒத்துழையாமை இயக்கங்கள் என்றுதான் ஈடுபட்டோமே தவிர வன்முறைகளில் ஈடுபட்டதில்லை.
 
இலங்கை அரசாங்கம் மிதவாத தமிழ் தலைவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை மீறியதாலும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளாலும் தோற்றுவிக்கப்பட்டதே விடுதலை புலிகள் இயக்கம். 50, 60, 70 களில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுமே அவர்கள் தோன்ற காரணமாயிற்று.
 
ஒன்றை உணர வேண்டும், தமிழ் மக்கள் மீது இவ்வளவு வன்முறைகள் ஏவப்பட்டபோதும் அவர்கள் ஒருநாளும் திருப்பி தாக்கவில்லை. இந்த நிலைமைதான் விடுதலை புலிகள் தோன்ற காரணம். அதனால்தான் ஆயுதங்களை கையில் எடுக்க வைத்தது. ஆனால் அவ்வப்போது அவர்களுடன் ஆட்சிக்கு வந்து ஒவ்வொரு அரசாங்கங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தியது. 
 
அந்த நேரத்தில் பேச்சுவார்த்தைகளின்போது துணையாக இருந்தோம். இது எங்களை புலிகளுடன் அடையாளப்படுத்தினாலும் நாங்கள் ஒருபோதும் அவர்களின் ஓர் அங்கமாக இருந்ததில்லை. யாராலும் அப்படி சொல்ல முடியாது. 
 
இப்போது யுத்தம் முடிவடைந்து விட்டது. புலிகளும் அழிக்கப்பட்டு விட்டார்கள். யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வையே நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு அரசுக்கு உண்மையான இதய சுத்தியான ஈடுபாடு இல்லாததனால் அது கைகூடவில்லை.

கே: நீங்கள் இப்படி சொன்னாலும், உங்களது உள்நோக்கம் எப்போதும் தனி நாடாகவே இருந்து வந்திருக்கின்றதாகவும் ஒன்றுபட்ட நாடு என்ற தீர்வுக்கு நீங்கள் விருப்பமற்றவர்கள் என்றும் கருதப்படுகின்றதே?

 
ப: நேர்மையான தீர்வொன்றை தர மறுப்பவர்கள் எப்போதும் சொல்லுகின்ற காரணம் தான் இது. இந்த நாடு பல மொழிகள் பேசும், பல இனங்களையும் பல கலாசாரங்களையும் கொண்டது. ஜனநாயகமே அதன் அடித்தளம். அரசியலமைப்பின் மூலம் சிறுபான்மையினரான தமிழரும் முஸ்லிம்களும் அவர்கள் தந்த ஜனநாயக ஆணைப்படி அரசாட்சியில் பங்குபற்ற செய்ய நீங்கள் தயாரா என்பது தான் எங்களின் கேள்வி.
 
கே: ஜனநாயக ஆணை என்று நீங்கள் சொல்லும்போது, இந்த நாடு சிங்கள பௌத்த மக்களை பெரும்பான்மையாக கொண்டது என்பதை மறந்து அல்லது அலட்சியப்படுத்துகிறீர்கள் எனலாமா?
 
ப: இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் பெரும்பான்மை ஆதிக்கத்தை சிறுபான்மையினர் மீது திணிக்கும்போது அவர்கள் கணக்கில் எடுக்கப்பட வேண்டியவர்கள் இல்லை என்று அலட்சியப்படுத்துவதை தான் ஏற்றுக்கொள்ள முடியாது. 
 
நாங்கள் தனித்துவமுடைய மக்கள். நீண்ட, நெடுங்காலமாக இங்கு வாழும் குடிகள். முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்கின்றனர். அவர்களுடைய கலாசாரம் தனி. அவர்களும் எங்களைப் போல் தனித்துவமானவர்கள். 
 
அதற்காக நாங்கள் சிங்கள பெரும்பான்மையை ஒதுக்குகின்றோம் என்றோ, அவர்களது கருத்துக்களை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றோ அர்த்தமில்லை. எந்த இடத்தில் நாங்கள் பெரும்பான்மையாக அல்லது அதிக அளவில் இருக்கின்றோமோ அங்கு அரசாட்சியில் கணிசமான பங்கு தரப்பட வேண்டும். அதேநேரத்தில் பெரும்பான்மையினரோடு இணைந்து முழு நாட்டையும் கொண்டு செல்ல ஒத்துழைப்பு வழங்குவோம். முழு நாடும் பெரும்பான்மை ஜனநாயக ஆணைப்படி ஆட்சி செய்யலாம். அதேபோன்று நாங்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் குறிப்பிட்டத்தக்க அளவில் நாங்கள் ஆட்சி அதிகாரம் பெற அரசியல் யாப்பு மூலம் அனுமதிக்கப்பட வேண்டும். 
 
எங்கள் நாளாந்த வேலைகளை நாங்களே பார்த்துக்கொள்ளும் உரிமை தரப்பட வேண்டும். அப்படியில்லை என்றால் தமிழரும் முஸ்லிம்களும் இந்த சம உரிமை பெற்ற குடி மக்களாக இருக்க முடியாது. பெரும்பான்மை அதிகாரம் சர்வாதிகாரமாகி விடும். நாங்கள் நாட்டை பிரித்து கேட்கவில்லை. எங்களது நிலைமையை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தெளிவாக சொல்லியுள்ளோம். பொருத்தமான நிலைத்து நிற்கும் நியாயமான தீர்வையே பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் கேட்கின்றோம்.
 
கே: நீங்கள் 'ஒன்றுபட்ட' என்று கூறுவது விசமமான ஒன்றாக நோக்கப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றுபட்ட அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்கின்றதா?
 
ப: ஐக்கியம், சமஷ்டி என்பதெல்லாம் தற்போது வழக்கொழிந்து போயுள்ளது. உலகத்தின் பல நாடுகளில் அதிகார பகிர்வு என்பதே வேறேந்த பெயரிலும் இல்லாமல் இருக்கின்றது.
 
இது அரசியல்யாப்பின் மூலம் சகல மக்களும் இணைந்து சம அந்தஸ்தோடு வாழ்வது என்பதே. ஐக்கியம் என்பது பல அர்த்தங்களை தரக்கூடியது. நாங்கள் கேட்பதெல்லாம் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இறையாண்மையுடன் வாழ வேண்டும்.
 
வெளிநாட்டு கொள்கைகளிலோ பாதுகாப்பு விவகாரங்களிலோ நிதி நிலைமைகளிலோ நாங்கள் தலையிடும் அதிகாரம் வேண்டாம். நாங்கள் கேட்பதெல்லாம் நாங்கள் பெரும்பான்மையாக நெடுங்காலமாக வசித்து வரும் பிரதேசங்களில் எங்கள் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார விடயங்களில் அதிகாரம் எங்களோடு பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்பதே. குறிப்பிட்ட அளவு அதிகார பகிர்வுதான் எங்களுக்கு தேவை. 

SA%20(4)(1).JPG

கே: 13ஆவது திருத்த சட்டத்தின் படி பொலிஸ், காணி அதிகாரங்கள் தருவது என்பது இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதை அரசியல் யாப்பு மூலம் பெற முயல்வது என்ற கருத்து உலவுகிறதே?

 
ப: இது மிக முட்டாள் தனமானது. பொலிஸ், காணி அதிகாரங்கள் என்பது அதிகார பகிர்வை செய்துகொண்ட எல்லா நாடுகளிலும் இருக்கின்றது.
 
உலகில் எந்த நாட்டையும் எடுத்துகொள்ளுங்கள். எங்கு அதிகார பகிர்வு உள்ளதோ, அங்கெல்லாம் பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கோ, மாநிலங்களுக்கோ பிரதேசங்களுக்கோ கொடுக்கப்பட்டுதான் இருக்கின்றன.
 
இது புதிதல்ல. இது ஜனாதிபதிகளாக இருந்த ஜெயவர்தன, பிரேமதாச ஏற்றுகொண்டதோடு ஜனாதிபதி தேர்தலில் பங்குகொண்ட திருமதி பண்டாரநாயக்கவினாலும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒன்று. காமினி திஸாநாயக்கவும் இதற்கு சம்மதித்திருந்தார். 13ஆவது திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்படும் முன்னர் அரசுக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் இடையே பாரிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அரசு அந்த உடன்படிக்கையில் கையெழுத்திடும்போது ஜனாதிபதி ஜெயவர்தன, அத்துலத்முதலி, ரொனி டி மெல், காமினி திஸநாயக்க, ஏ.சி.எஸ். ஜமீட், கே.டபிள்யூ.தேவநாயகம் ஆகியோர் இருந்தனர்.
 
அவர்களில் சிலர் புத்திஜீவிகள். மிகுந்த ஆளுமை கொண்டவர்கள். இப்போதைய சில அரசியல்வாதிகள் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்க போன்றவர்கள் தாங்கள் செய்வதை பற்றி அறிந்திருக்கவில்லை என்று குறை கூறுகின்றார்கள். 
 
திருமதி பண்டாரநாயக்க கூட ஜனாதிபதி தேர்தலில் இதற்கு சம்மதித்து கலந்துகொண்டார். இப்போது இவர்கள் இதைப்பற்றி பேச காரணம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகவே. அவர்களது எண்ணம் இந்த சிங்கள பௌத்த நாட்டில் அவர்களின் ஆட்சிதான் இடம்பெற வேண்டும் என்பதுதான். இதற்கு நாங்கள் சம்மதிக்க முடியாது.
 
கே: இப்போது இந்த விவகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கு அவர்கள் தீர்மானித்தால் உங்களது நிலைப்பாடு, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
 
ப: யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபின், இலங்கை அரசு இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் பல உறுதிமொழிகள் வழங்கியது. 13ஆம் திருத்த சட்டத்தை இன்னும் பலமிக்கதாக செய்வதாகவும் கூறியது. இந்த சட்டம் அமுலுக்கு வந்த பின் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி பிரேமதாச, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அனைவருமே மேலதிக அதிகாரங்களை வழங்கவே நடவடிக்கை எடுத்தனர்.
 
மகிந்த ராஜபக்ஷ அனைத்து கட்சி வட்டமேசை மாநாட்டை தோற்றுவித்ததோடு, புத்திஜீவிகள் நிபுணர் குழு ஒன்றையும் நியமித்து, ஆகக்கூடிய அதிகார பரவலாக்களை பற்றி பேசினார். ஒருபடி மேலே போய் அந்தந்த பிராந்தியங்களில் வாழும் மக்கள் தம்மை தாமே ஆளவேண்டும் என்றும் கூறினார்.
 
மற்ற நாடுகளில் உள்ள அரசியல் யாப்புகளையும் நன்கு மேலும் ஆராய்ந்து நமக்கு அமைவான தீர்மானத்தை கொண்டு வரச்சொன்னார்.
 
மேலும், அனைத்து கட்சி மாநாடு, பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தையும் அதன்பின்னர் வந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் தேவையான தீர்வு ஒன்றை காண கூறினார். சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கும் மக்களின் தனித்துவத்தை பாதுகாக்கும் தீர்வே தேவை. இது அவரே கூறிய வார்த்தைகள். நான் கூறுவதல்ல.
 
அனைத்து கட்சி மாநாடு, புத்திஜீவிகள் நிபுணர் குழு இரண்டுமே அறிக்கைகளை சமர்பித்தன. அவை நம் திருத்தச் சட்டத்திற்கும் மேலதிகமாகவே இருந்தன. சந்திரிகா அம்மையாருடைய தீர்மானத்தையும் மங்கள முனசிங்கவின் அறிக்கையையும் அதேமாதிரித்தான் இருந்தன.
 
தேசிய விடுதலை முன்னணியும் ஜாதிக ஹெல உறுமயவும் எதிர்க்கின்ற காரணத்தினால் இவற்றை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. ஜனாதிபதியும் இவை எல்லாம் மறக்கப்பட்ட விடயங்கள் என்று புறந்தள்ளி இந்த இரு கட்சிகளின் கூச்சலுக்கு அடிபணியக் கூடாது.

கே: அதிகார பரவலாக்கல்தான் உங்களுடைய தேவை என்றால் ஏன் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பற்றி பேசுகின்றீர்கள்?

 
ப: அவை அடிப்படையானவை. பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம், டட்லி- செல்வநாயகம் ஒப்பந்தம் இரண்டையும் பாருங்கள். அவர்கள் இருவரும் இந்த நாட்டின் பெரும் தலைவர்கள். ஆனாலும் செல்வநாயகத்துடன் ஒப்பந்தம் செய்தனர். பிராந்தியங்களோ, பிரதேசங்களோ அவற்றிற்கு காணி அதிகாரம் அவசியமானது, அடிப்படையானது என கருதினார்கள். மத்தியில் மட்டும் பொலிஸ் அதிகாரம் இருந்தென்ன? லசந்த விக்கிரமசிங்கவின் கொலை மர்மம் துலக்கப்பட்டதா? ஜோஸப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோரின் கொலையாளிகளை கண்டு பிடித்தார்களா? எத்தனை கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. மத்தியில் பொலிஸ் அதிகாரம் இருந்தும் ஒன்றும் பயனில்லை.
 
சட்ட ஒழுங்கு முழுதாகவே சீர்குலைந்தது. நாங்கள் நன்றாகவே அறிவோம். மத்தியில் பொலிஸ் அதிகாரத்தினால் நாங்கள் எவ்வளவு துன்பப்பட்டோம்? எத்தனை ஆபத்துக்களை எதிர்கொண்டோம். நாங்கள் பொலிஸ் அதிகாரம் கேட்பது மத்திய அரசுக்கோ பொரும்பான்மை சமூகத்திற்கோ கேடு விளைவிப்பதற்கு அல்ல. அப்படி ஒருபோதும் நடக்காது. பொலிஸ் அதிகாரம் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அதன்மூலம் சட்டம், ஒழுங்கு நிலை நிறுத்த முடியும். எங்களது சுயாட்சி மாகாணத்தில்.
 
கே: பதிவு செய்துகொள்வதற்காக நேரடியாக கேட்கிறேன். கூட்டமைப்பு வட மாகாண தேர்தலில் வெற்றிபெற்றால், தனிநாடு கோரிக்கை மீண்டும் எழுமா? சரித்திரம் திரும்புமா?
 
ப: நாங்கள் மிக தெளிவாக கூறி இருக்கிறோம். ஒரு ஐக்கியப்பட்ட, பிளவுபடாத நாட்டிலேயே நாங்கள் அரசியல் தீர்வை காண விழைகிறோம். இதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது? இதைத்தான் நாங்கள் உலகத்திற்கே, வெளிநாட்டு உறவுகளுக்கும் கூறி வருகிறோம். வெளிநாட்டில் வதியும் உறவுகளுக்கு நாங்கள் கூறுவது 'கள நிலைமையை நாங்கள் அறிவோம். நம்மக்களுக்கு என்ன தேவை என்று அறிவோம். அவர்கள்தான் எங்களை தெரிவு செய்திருக்கிறார்கள். நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் தயவு செய்து எங்களை முடிவெடுக்க விடுங்கள். உங்களுடன் உரையாடி உங்கள் ஆலோசனைகளையும் கேட்போம். ஆனால் இறுதி முடிவு எடுப்பது என்பது எங்களுடைய பாரிய பொறுப்பு. உங்களுடையதல்ல' என்கிறோம். அரசுக்கு இது நன்கு தெரியும்.

கே: முற்போக்கான தலைவர்கள் இருந்திருந்தால் இந்த இழுபறி நிலை ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறீர்களா?

 
ப: ஏற்றுக்கொண்டவற்றை நடைமுறைப்படுத்தி இருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது. பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தத்தை அமுல்படுத்த திருமதி பண்டாரநாயக்கவை விட்டிருந்தாலோ, டட்லி சேனாநாயக்கவை அவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற விட்டிருந்தாலோ இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருக்காது. இன்று ஜனாதிபதி ராஜபக்ஷ 13ஆவது திருத்த சட்டத்தை ஒழிக்க நினைக்கிறார். இந்திய - இலங்கையின் உடன்படிக்கையை அப்படி அவரால் மீற முடியாது.
 
SA%20(1).JPG

கே:

 ஆனால் இந்திய - இலங்கை ஒப்பந்தம் நம் நாட்டின் மீது திணிக்கப்பட்ட ஒன்றல்லவா?
 
ப: இல்லை, அது திணிக்கப்படவில்லை. 
 
கே: எப்படி அதை சொல்கிறீர்கள்?
 
ப: திணிக்கப்பட்டது என்று எப்படி கூறலாம். ஏனென்றால் 1985இல் தமிழர்களுக்கு எதிராக இன ஒழிப்பு முன்னெடுக்கப்பட்டதே. 
 
கே: எப்படி இன ஒழிப்பு நடவடிக்கை என்று கூறமுடியும்? அப்படிச் சொல்வதற்கு எத்தனை உயிர்கள் பலியாகின?
 
ப: இன ஒழிப்பு என்றுதான் நான் நம்புகிறேன். வடக்கில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு எத்தனை உயிர்கள் பலியாகின. ஆனால் ஒன்று சொல்வேன், பெருமளவான சிங்கள மக்கள் தமிழர்களை பாதுகாத்தார்கள். இருக்க இடமும் உண்ண உணவும் கொடுத்தார்கள். நான் சிங்கள மக்களை குறை சொல்ல மாட்டேன். இரக்க மனம் கொண்ட நல்லவர்கள். 
 
ஆனால் பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பெரும் எண்ணிக்கையாக நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இன்னும் மிகுந்த எண்ணிக்கையானோர் அரசு வாகனங்களில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். ஏனென்றால் அரசு அவர்களுக்கு பாதுகாப்புத் தர தோல்வியுற்றது. அதனால்தான் இந்தியா உதவ முன்வந்தது. அதை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டது. அதன் விளைவே இந்திய - இலங்கை ஒப்பந்தம். அதன் முதலாவது அதிகாரம் என்ன சொல்கிறது. இலங்கையின் இறையாண்மையும் பிரதேச உரிமையும் ஒற்றுமையும் பாதுகாக்கப்பட வேண்டியது என்கிறது. 
 
கே: ஆனால் அதில் முக்கிய நிபந்தனை எல்லா ஆயுதக் குழுக்களையும் நிராயுதபாணிகளாக குறிப்பிட்ட தினத்திற்குள் ஆக்கவேண்டும் என்பதே. அதை செய்ய இந்தியா தவறிவிட்டதே?
 
ப: உங்களுக்கு சரியான பதில் தருகிறேன். புலிகள் ஒப்பந்தத்திற்கு எதிராக செயல்பட்டார்கள். இந்திய இராணுவத்தோடு போர் புரிய தொடங்கினார்கள். அந்தவேளையில் இலங்கை இராணுவம் முகாம்களில் இருந்தது. இந்திய இராணுவம் புலிகளுக்கு எதிராக செயல்பட்டு அவர்களில் பலரை கொன்றது. வடக்கு, கிழக்கின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பல இந்திய இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் இந்திய இராணுவம் மிக திறமையாகவே அவர்களை எதிர்த்து நின்றது. 
 
அந்த நேரத்தில் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது யார்? பணமும் வாகனங்களும் கொடுத்தது யார்?  இந்திய அரசா அல்லது இலங்கை அரசா? இந்திய இராணுவம் புலிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இருந்த நேரத்தில் யார் புலிகளுக்கு ஆயுதங்களும் பணமும் பொருட்களும் கொடுத்து துணை போனது? நடந்தது உலகம் அறிந்த உண்மை. எப்படி ஒப்பந்தம் திணிக்கப்பட்டது என்று சொல்ல முடியும்?  
 
இந்திய இராணுவத்தை அழைத்தீர்கள், அது வந்தது. பின் போக சொன்னீர்கள், போய்விட்டது. இந்திய இராணுவம் திரும்பிப் போக வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவர்களது நோக்கம் திணிப்பதாக இருந்தால் ஜனாதிபதி போகும்படி சொன்னபோது போயிருப்பார்களா? ஆனால் அவர்கள் உடனே போய் விட்டார்கள். 
 
ஆனால் அவர்கள் உங்களுக்கு ஆலோசனை சொன்னார்கள். பல்லின மொழி சமயம் உள்ள சமூகம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று அறிவுரை தந்தார்கள். பஞ்சாபிலும் அசாமிலும் ஏற்பட்ட கலவரங்கள் எப்படி தீர்த்து வைக்கப்பட்டன. அதிகாரப்பகிர்வு, பரவலாக்கம் மூலமே. அசாம் மக்கள் ஒன்றுபட்ட பிளவுபடாத இந்தியாவில் தங்களுக்கு தேவையானதை நிறைவேற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அதனால்தான் ஒப்பந்தம் திணிக்கப்பட்டது என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் சொல்வதை நியாயப்படுத்த இந்த பொய்யான கதைகள் சொல்லப்படுகின்றன. அவ்வளவுதான். 
 
கே: உங்களுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் ஒன்றுதான் புலிகளின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் செயல்பட்டீர்கள் என்று. அது உண்மையா?
 
ப: நான் என்றுமே புலிகளின் பிரதிநிதியாக இருந்ததில்லை. என் மக்களுக்கு தைரியமாக குரல் கொடுத்தேன். புலிகள் உருவாக நான் காரணமில்லை. இலங்கை அரசே அதற்கு காரணம். 
 
தமிழ் மக்களும் புலிகள் உருவாக காரணமல்ல. அவர்கள் கட்டுப்பாடான ஒழுக்கமான தீவிர உழைப்பாளிகள். புலிகள் உருவானதற்கு இலங்கையை ஆண்ட ஒவ்வொரு அரசாங்கமுமே காரணம். அவர்கள் பொறுப்பை ஏற்க வேண்டும். புலிகளுக்காக நான் நாடாளுமன்றத்தில் பேசியதே இல்லை. நாடாளுமன்ற பதிவுகளில் நான் பேசியதை பாருங்கள். 

கே: ஆனால் நீங்கள் புலிகளின் அனுதாபிகள்தானே? 

 
ப: அவர்களுக்கு அனுதாபப்பட்டேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் ஒரு தீர்வை அடைவதற்காக செயல்பட்டார்கள். பகிரங்கமாகவே அவர்களுடன் செயல்பட தயாராக இருந்தேனே தவிர, இரகசியமாக அல்ல. அரசாங்கத்திற்கும் இது தெரியும். ஆனால் அவர்களுக்காக நான் பேசியதில்லை. பிரதிநிதியாக அல்ல, நண்பனாகவோ இருந்ததில்லை. அப்படி யாரும் சொன்னால் அது பெரும் கட்டுக்கதை. அதை நான் நிராகரிக்கின்றேன். ஆனால் நான் எனது மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வந்தேன். 
 
அதேவேளை புலிகளும் அவர்களுக்காக தங்களது ஆயுத போராட்டதை முன்னெடுத்து சென்றார்கள். ஆனால் எல்லா அரசாங்கங்களும் ஐக்கிய தேசியக் கட்சியோ சுதந்திரக் கட்சியோ சர்வதேச சமூகமோ அனைவரும் புலிகளுடனேயே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். 
 
கே: அவர்களது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தை அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல விடுதலைப் போராளிகள் என்றா நியாயப்படுத்துகிறீர்கள்? 
 
ப: இல்லை, அப்படி நான் நியாயப்படுத்தவில்லை. அப்படி செய்யவும் முடியாது. அந்த நேரத்தில் நான் அதை கண்டிக்கவில்லை என்று சொல்லாதீர்கள். அந்த நேரத்தில் என்னுடைய பெயரும் அவர்களுடைய கொலைப்பட்டியலில் இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெடுங்காலம் முன்னதாக என்னுடைய பெயர்தான் அவர்களின் கொலைப் பட்டியலில் இருந்தது. நாங்கள் அவர்களுடைய (பயங்கரவாத) செயல்களை அங்கீகரித்ததோ ஏற்றுக்கொண்டதோ இல்லை. 
 
கே: அவர்களுடைய தீவிரவாதத்தோடு ஒத்துப்போகிறீர்களா? 
 
ப: நிச்சயமாக இல்லை. அப்படி வந்திருக்கவே கூடாது. ஆனால் தொடர்ந்து அரசாங்கங்களின் நடவடிக்கைகளினாலேயே அது உண்டாயிற்று. 
 
கே: மாகாண அதிகார பரவலாக்கலுக்கு எதிராக இன்னொரு கருத்து நிலவுகிறது. தற்போது வடக்கிலும் கிழக்கிலும் முன்னெடுக்கப்படும் பாரிய வேலைத்திட்டங்கள் மத்திய அரசால்தானே கொண்டுசெல்லப்படுகின்றன. அப்படியிருக்க அதிகாரப் பரவலாக்கல் ஏன்? இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
 
ப: மக்கள் மதிக்கப்பட வேண்டும். இந்த இடத்துக்கு உரிமையுடையவன் என்ற எண்ணம் ஏற்படுத்தப்பட வேண்டும். சுயமரியாதை, கௌரவத்துடன் வாழ ஒரு மனிதனுக்கு இந்த நாட்டின், என் குடும்பத்தின் எதிர்காலத்தை வளமாக்குவதில் என் பங்கும் இருக்க வேண்டும். ஒருவன் மதிக்கப்படும்போது மற்றவர்களோடு சமமானவன் என எண்ணம் உண்டாகும். அதை விட்டுவிட்டு நான் தமிழன், நான் முஸ்லிம், மற்றவர்களுடன் சமமானவன் அல்ல, எனது நிலங்கள் அதனால்தான் பாதிக்கப்படுகின்றன, எனக்கு பாதுகாப்பு இல்லை, நான் இரண்டாம் தர குடிமகனாக இருக்கின்றேன் என்ற எண்ணம் வருமேயானால் அவனைச் சுற்றி என்ன நடந்தாலும் அது முக்கியமானதாகாது. 
 
கே: அப்படி அவர்கள் உணர்கிறார்களா? 
 
ப: நிச்சயமாக... நானே அப்படி உணர்கிறேன். 
 
SA%20(3)(1).JPG

கே:

 இது வெறும் அரசியல் ஜம்பப் பேச்சுதானே?
 
ப: எப்படி நீங்கள் இதை துணிந்து சொல்லலாம்? நானே உணர்கிறேன். இன்றும்கூட எனக்கு சிங்களத்தில் தானே கடிதங்கள் வருகின்றன. அரசியல் யாப்பு சிங்களமும் தமிழும் அரச மொழிகள் என்று தெளிவாக கூறுகிறது. ஆனால், நான் சமமானவன் என்று நினைக்க முடியவில்லை. நான் ஒரு முதிர்ந்த அரசியல்வாதி. ஆனால் எனக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை கிடைப்பதில்லை. 
கடந்த தேர்தல்களில் அதிக அளவில் விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் இயங்குகின்றன. மூத்த நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது பெரிய அளவில் விருப்பு வாக்குகளை பெற்றவரோ அவற்றில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அப்படித்தான் நாமல் ராஜபக்ஷவை ஹம்பாந்தோட்டை அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமித்தார்கள். ஏன் அப்படி எனக்கு இன்னமும் நடக்கவில்லை. 
 
கே: உங்கள் மீதுள்ள பயத்தினால் இருக்கலாம் இல்லையா? 
 
ப: மாவட்ட அபிவிருத்தி குழு என்னைக் கண்டு பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்னை தூசியாக கருதுகிறார்கள். இரண்டாம்தர குடிமகனாகப் பார்க்கப்படுகிறேன். ஏனென்றால் நான் தமிழன். இதைத்தான் என்னாலும் என் மக்களாலும் பொறுத்துக்கொள்ள முடியாது இருக்கிறது. 
 
கே: எனது முந்திய கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. பாரிய அபிவிருத்தித் திட்டங்கள்... அவற்றைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? 
 
ப: வீதிகளும் பாலங்களும் அமைக்கப்படுகின்றன. ஆனால், இலங்கை அரசின் நிதியுதவியோடு அல்ல. வெளிநாடுகள் தரும் பணத்தின் மூலமே அவை நிர்மாணிக்கப்படுகின்றன. யுத்தத்தின் பின் ஜனாதிபதியை சந்தித்தேன். எல்லா வீடுகளும் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே வீட்டுத் திட்டமொன்றை ஆரம்பியுங்கள் என்றேன். எங்கே என்னிடம் அதற்கு பணம் இருக்கிறது என்று பதிலளித்தார். அந்தவகையில் ஒரு வீடேனும் இலங்கை அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்படவில்லை. 
 
மக்கள் இன்னும் குடிசைகளிலும் கொட்டில்களிலும் தான் வாழ்கின்றனர். இங்குள்ள குடும்பங்கள் முன்னர் துவிச்சக்கர வண்டி வைத்திருந்தார்கள். வீட்டுக்கொரு துவிச்சக்கரவண்டி கொடுத்தால் குடும்பத் தலைவன் வெளியே சென்று உழைத்து குடும்பத்தை காப்பாற்ற உதவியாக இருக்கும் என்றும் ஜனாதிபதியிடம் கூறினேன். 
 
அவர் இதுவரையில் ஒரு துவிச்சக்கரவண்டியேனும் தரவில்லை. அதைத் தொடர்ந்து வந்த இந்தியா, வீடுகளையும் வண்டிகளையும் உழவு இயந்திரங்களையும் வழங்க முன்வந்தது. அந்த உழவு இயந்திரங்கள் நாட்டின் வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன. இதை நான் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியதன் பின் அவை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
 
எங்கள் மக்களின் உணர்ச்சிகளுக்கு அவர்கள் மதிப்பளிப்பதே இல்லை. நாங்கள் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற வகையிலேயே அவர்கள் செயற்படுகின்றனர். நாட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்ற வகையிலே இருக்கிறது. இந்த நாட்டில் எமக்கு இடமில்லை. அதுதான் நடக்கிறது. ஏன் தமிழர்கள் நாட்டை விட்டு ஓடுகிறார்கள். படகுகளில் சென்று மரணத்தை தழுவுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை என்ற உணர்வே ஏற்பட்டுள்ளது என்பதே காரணம். 
 
கே: அது தமிழர்களுக்கு மட்டும் உள்ள உணர்வில்லை. தெற்கில் உள்ள சிங்களவர்கள் கூட அடிக்கடி இப்படித்தான் செய்கிறார்கள் இல்லையா? 
 
ப: இருக்கலாம். சிங்களவர்கள் கூட சலிப்புற்றிருக்கலாம். எனக்கு தெரியாது. ஆனால், அப்படி சலிப்படைந்திருந்தால் அதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியும். 

கே: நீங்கள் முன்னர் சொன்னபடி, மஹிந்த ராஜபக்ஷ ஒரு முன்னேற்றமான மனிதர். அவருக்கு என்ன நடந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

 
ப: இன்றுவரை தன்னை ஓர் இனவாதியாக அவர் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், தற்போதைய அவரது நடவடிக்கைகள் பீதியை உண்டாக்குகின்றன. அது தமிழருக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்குமேநல்லதல்ல. இந்த நாடு உண்மையான நல்லிணக்கத்தை காண வேண்டுமாயின் இதய சுத்தியுடன் உறவும் நல்லெண்ணமும் வேண்டும். அப்போது தான் மாற்றத்தைக் காணலாம். 
 
கே: இந்திய உயர்மட்டத்தில் உள்ளவர்களை நீங்கள் சமீபத்தில் சந்தித்தீர்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள நிலைமை பற்றி அவர்களது கருத்து எவ்வாறு இருந்தது? 
 
ப: வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மேலாக நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவர்கள் இலங்கை அரசு இந்தியாவுக்கு, சர்வதேச சமூகத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபைக்கு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றாதது பற்றி மிகவும் கவலையடைந்துள்ளனர். 
 
அவர்களுக்கு பாரிய சந்தேகங்கள் இருந்தன, இலங்கை அரசு அவற்றை நிறைவேற்றுமா என்பதில். அரசின் நடவடிக்கைகள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இல்லை என்றே கருதினார்கள்.

கே: உங்களுடைய கலந்துரையாடல் மூலம் நீங்கள் தெரிந்துகொண்டபடி ராஜதந்திர ரீதியான அழுத்தங்கள் 13ஆம் திருத்தச்சட்டத்தை முழு அளவில் அமுல்படுத்தும்படி கொடுக்கப்படுமா? 

 
ப: இந்தியா எதை செய்யும், எதை செய்யாது என்பதைப்பற்றி இப்போது நான் பேச விரும்பவில்லை. ஆனால், இந்தியா இதனைப்பற்றி கவலைப்படுவதாக தெரிகிறது. இந்திய - இலங்கை உடன்படிக்கை சர்வதேச அளவில் நியமங்களுக்கு உட்பட்டது. அதை ஒருதலைப்பட்சமாக ஒழிக்க முற்பட்டால் அதன் பலாபலன்களை அனுபவிக்க நேரிடும். 
 
அரசுக்கும் தமிழ்த் தலைமைகளுக்கு நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தையும் மீறி நடந்தால் அதுவும் சர்வதேச உடன்படிக்கை நலன்களை பாதிக்கும் என்றே நினைக்கின்றேன். 
 
கே: நீங்களும் தமிழ்க்கூட்டமைப்பும் வடக்கில் உள்ள தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்களா அல்லது நாடு முழுக்க உள்ள தமிழர்களை பிரதிநித்துவப்படுத்துகிறீர்களா?
 
ப: வடக்கிலும் கிழக்கிலும் நாங்கள் தேர்தல்களில் கலந்து கொண்டிருக்கின்றோம். எந்தவித தயக்கமும் அன்றி நான் கூறுகின்றேன், நாங்கள் வடக்கு, கிழக்கு தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள். மற்ற பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மை தமிழர்கள் எங்கள் செயற்பாடுகளை முழுதாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் அரசியல் கொள்கைகளை ஆதரிக்கிறார்கள். 
 
ஆனாலும் நாங்கள் இன்னும் வடக்கு, கிழக்கு தவிர்த்த பகுதிகளில் போட்டியிட்டதில்லை. அவர்கள் சுதந்திரமாக அவர்களது வாக்குரிமையை விரும்பியவாறு அந்தந்த பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளுக்காக பயன்படுத்தலாம் என்பதே எங்கள் எண்ணம்.
 
கே: அரசுடன் இணைந்து கொண்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் பற்றியும் வடக்கு தேர்தலில் போட்டியிட முன் வந்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
 
ப: நான் அவர்களைப்பற்றி சொல்லி அவர்களுக்கு கஷ்டம் உண்டாக்க விரும்பவில்லை. அவர்கள் இப்போது அரசுடன் இணைந்து பலவழிகளில் உதவி செய்கிறார்கள். ஆனால் அரசுக்கு நான் சொல்ல விரும்புவது இப்படி அவர்களை அரவணைத்து உங்களுக்காக பணியாற்ற செய்யும் போது ஏன், என்னை புலிகளுக்கு ஆதரவாளன் என்று முத்திரை குத்துகின்றீர்கள் என்பதேயாகும்.
 
அநேக முன்னாள் போராளிகள், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஓரம் கட்டப்பட்டார்கள். ஒருவராவது எங்கள் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படவில்லை. எல்லோரும் ஒதுக்கப்பட்டார்கள். ஆனால் அரசுக்கு அவர்கள் தேவைப்படுகின்றார்கள். அவர்கள் மூலமாகவாவது சிறியளவு ஆதரவையேனும் தமிழர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசு முனைகிறது. அதனால் அரசு பெருமையடித்துக்கொள்ளகூடாது.
 
நேர்காணல்: ஹபீல் பாரிஸ்
படங்கள்: வருண வன்னியாராச்சி

SA%20(5).JPG

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/74597-2013-07-11-07-12-37.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.