Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான  ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன? என்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவனிடம் பேசினோம். அவர் தந்த கருத்தினை இங்கு தருகிறோம்.

 

தமிழ்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் பெற்றது. உலகில் பிறமொழிகளுக்கு இல்லாத தனித் தன்மை இதுவாகும். தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாறு உடையது. அரசியல், தன்னலம் காரணமாகத் தமிழ்மொழியின் சிறப்பு சில பொழுது குறைத்துக் கூறப்பட்டுள்ளதே தவிர உண்மையில் தமிழ் என்று தோன்றியது என்று வரையறை செய்ய முடியாதபடி காலப் பழைமை உடையது. தமிழ் உலகில் தோன்றிய முதன்மொழி என்ற பாவாணர் கூற்று சற்று மிகைப்படத் தோன்றுவதுபோல் இருந்தாலும் அண்மைக் காலமாகக் கிடைத்துவரும் சான்றுகள் (செம்பியன் கண்டீயூர் கல்வெட்டு, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சான்றுகள், அரிக்கமேட்டு ஆய்வுகள், கேரள புதைபொருள் அகழ்வாய்வுகள்) இந்த உண்மையை நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துகின்றன.

 

தமிழர்களின் ஆழமான அறிவாராய்ச்சிகள் உலகப் போக்குக்கு ஈடுகொடுக்கும்படி இல்லாததால் தமிழின்  தமிழர்களின் சிறப்பு இன்னும் உலக அரங்கில் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. தமிழார்வம் இல்லாத தலைமைகளும், தமிழின் சிறப்புணராத மக்கள் திரளும் இந்த மொழி பேசுபவர்களாக அமைந்தமை தமிழின் சிறப்பு அறிய முடியாமல் போனமைக்குக் காரணங்களாகும்.   குமரிக்கண்ட அகழ்வாய்விலும், பூம்புகார், அரிக்கமேடு கடலாய்விலும் நாம் முழுமையாக ஈடுபடாமல் மாநாடுகள் கூட்டுவதிலும், சிலைகள் எடுப்பதிலும், தோரண வாயில்கள் அமைப்பதிலும், கோட்டங்கள் கட்டுவதிலும், வானவேடிக்கைகள் நடத்துவதிலும் நம் அறிவாராய்ச்சியை இழந்தோம். தமிழறிவற்றவர்களைத் தமக்கு அணுக்கமாக அந்த அந்தக் காலங்களில் ஆட்சியாளர்கள் அமர்த்திக்கொள்வதும் நம் ஆராய்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றது. மொழியியல் அறிஞர்களின் கூற்றுகள் புறக்கணிக்கப்பட்டு, வெற்று ஆரவாரப் பேர்வழிகள் அரசுக்கு அறிவுரைஞர்களாக அமைந்தமையும் நம் பின்னடைவுக்குக் காரணங்களாகச் சுட்டலாம்.   தமிழுக்குக் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட பொழுதெல்லாம் தமிழ் தன்னைத்தானே காத்துக் கொண்டுள்ளது. சிலபொழுது அறிஞர்கள் கூடித் தமிழ்க் காப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் நாம் தமிழ்க்காப்புப் பணிகளில் ஈடுபடவேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது.   தமிழ் மொழியின் 247 எழுத்துக்கள் தவிர்த்து கிரந்த எழுத்துக்களும் (ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ) தமிழோடு பழகி விட்டன.

 

கிரந்தம் என்பது ஒரு தனிப்பட்ட மொழியன்று. இது வடமொழியை (சமஸ்கிருதம்) எழுதத் தமிழர்கள் கண்ட எழுத்து வடிவம். கி.பி. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை பெருமளவில் பயன்பாட்டில் இருந்து வந்த எழுத்துமுறை இதுவாகும். தேவநாகரி எழுத்து பயன்பாட்டுக்கு வரத்தொடங்கிய பின்னர் கிரந்தத்தில் எழுதுவது மறைந்து போயிருக்கிறது.   கிரந்த எழுத்துகள் என்றால் என்ன?   கிரந்தம் என்பது தமிழகத்தில் வடமொழியை எழுத வழங்கிய எழுத்து ஆகும்.  வடமொழிக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ்நாட்டில் தான். அது தமிழ் ஏட்டெழுத்தினின்று திரிந்த கிரந்தவெழுத்து. அதன் காலம் தோராயமாக கி.மு 10ஆம் நூற்றாண்டு எனலாம்.  “கிரந்தம் என்பது நூல். வடமொழியாளர்க்குச் சொந்த வழக்கு மொழியின்மையால், நூலிற்கு மட்டும் பயன்படுத்தப் பெற்ற எழுத்தைக் கிரந்தாட்சரம் என்றனர்’ என்பர் மொழிஞாயிறு பாவாணர்.   தமிழகத்தில் வடமொழியை எழுத, வழங்கிய எழுத்தும் தெலுங்கு, கன்னடப் பகுதியில் வழங்கிய எழுத்தும் ஒன்றுபோல இருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து கிரந்த எழுத்துகளும் தெலுங்கு, கன்னட எழுத்துகளும் தனித்தனியே பிரிந்து வளரலாயின. பல்லவர் காலத்தில் வழங்கிய கிரந்த எழுத்துகளைப் பல்லவ கிரந்தம் என்றனர்.

 

இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் கிரந்த எழுத்துகள் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. தென்பகுதியை ஆண்ட பாண்டியர் கல்வெட்டுகளில் வடமொழி வருமிடங்களில் கிரந்த எழுத்துகளே பயன்பாட்டில் இருந்துள்ளது.   ஆனைமலை, அழகர்மலை, திருமயம், குடுமியான் மலை கல்வெட்டுகளிலும் வேள்விக்குடி, சின்னமனூர் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. சோழர்காலக் கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் உள்ளன. விஜய நகரப் பேரரசர்களும், நாயக்கர் மன்னர்களும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகு அரசாட்சியில் வட மொழியாளர்கள் அரசர்களுக்கு அறிவுரை சொல்லும் குருநாதர்களாகவும், அரசவையில் அமைச்சர் பதவி வகிக்கும் உயர்பொறுப்புகளிலும் இருந்து வடமொழி வளர்ச்சிக்கு மன்னர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். எனவே அரச ஆவணங்களில் கிரந்தம் செல்வாக்கு பெற்றது.

கிரந்த வளர்ச்சியை அறிவதற்கு நாம் சங்க நூல்களையும் அதற்கு முன் இலக்கண நூலாக இருந்த தொல்காப்பியத்தையும் அறிந்தால் தமிழ்மொழியின் சிறப்பில் எப்படி பிறமொழி ஆதிக்கம் கலந்து அதன் சிறப்பபைக் குலைத்தது என்பது புலனாகும்.

தொல்காப்பியம் தமிழ் எழுத்துகள் பிறப்பதைப் பற்றி எடுத்துரைக்கும் பகுதிகள் இன்றைய மொழியியல் அறிஞர்களையும் வியப்படையச் செய்கின்றது. அதுபோல் தொல்காப்பியர் காலத்தில் பிற மொழிச்சொற்களையும், எழுத்துகளையும் எவ்வாறு எடுத்து ஆள்வது என்ற வரையறை அமைக்கப்பட்டுள்ளது.

“வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே”   என்னும் நூற்பா மிகச்சிறந்த வரையறை செய்து தமிழில் பிறமொழிச்சொற்களை ஆளும்பொழுது வடவெழுத்து நீக்கி (ஒரீஇ=நீக்கி) தமிழ் எழுத்துகளில் எழுதவேண்டும் என்கின்றது. பின்னாளில் கம்பர் காலம் வரை இந்த மரபை நாம் கண்டு உவக்கின்றோம். விபீஷணன் என்பதைக் வீடணன் என்றும் ஜானகி என்பதைச் சானகி (சானகி நகுவள் என்று) என்றும் எழுதும் கம்பனின் மொழியாளுமையை நினைக்கும்பொழுது அவரின் தமிழ்மரபு காக்கும் சிறப்புத்தெற்றென விளங்கும்.

கி.பி.12, அல்லது கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் என்னும் இலக்கண நூல் தமிழ் எழுத்துகளுக்கு இலக்கணம் கூறுமிடத்து வட எழுத்துகள் பற்றியும் ஒப்பிட்டுப் பேசுகின்றது (நன்னூல் நூற்பாக்கள்: 146,147148,149). வடமொழியாக்கம் என்று அறிஞர்கள் இதனைக் குறிப்பர். அந்த அளவு நன்னூலார் காலத்தில் வடமொழிச் செல்வாக்குத் தமிழகத்தில் இருந்துள்ளது. அதனால்தான் பிற்காலக் கல்வெட்டுகளில் வடமொழியை எழுதும் கிரந்த எழுத்துகளைப் பார்க்கிறோம்.   இந்தக் காலங்களில் எல்லாம் பிற நாட்டுப் படையெடுப்பும், ஆட்சியும், பிறமொழியினரின் ஆதிக்கமும் தமிழகத்தில் இருந்து வந்ததை நினைவில் கொள்ளவேண்டும். பிற்காலப் புலவர் ஒருவர் தமிழுக்கு ஐந்தெழுத்து (எ, ஒ, ழ, ற,ன) மட்டும் உண்டு என்று எள்ளி நகையாடிய கதையும் இலக்கிய வரலாற்றில் பதிவாகியுள்ளது. (இந்த ஐந்தெழுத்து மட்டும்தான் தமிழுக்கு உரியது என்று புலவர் இகழ்ந்தார். அது புலவர் காலம்.

 

இந்த எழுத்து இல்லாமல் கிரந்தத்தை எழுது முடியாது என்று இமணசர்மா குறிப்பிடுகின்றார். இது இந்தக் காலம். இது வடமொழியாதிக்கத்தின் உச்சநிலை என்று கருதவேண்டும்.)   இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை வடமொழிக்குத் தமிழ்நாட்டுத் திருமடங்கள் ஆதரவளித்தன. தமிழ்ப்புலவர்கள் என்றால்            கட்டாயம் அவர்களுக்கு வடமொழிப்புலமை இருக்கும் (மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வடமொழி நூல்களை மொழிபெயர்க்கும் அளவுக்குப் புலமை பெற்றவர்கள்.   கிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?   தமிழில் பிறமொழி (சமற்கிருதம்) கலந்து முன்பு எழுதப்பட்டதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட கிளை மொழிகள் இதிலிருந்து பிரிந்து, அம்மொழி பேசும் மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நினைவில்லாமல் ஆற்று நீருக்கும், எல்லைக்குமாகப் பிரிந்து போரிட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் நிற்கவேண்டிய நிலைக்கு ஆளானோம். தமிழ் தவிர்ந்த பிறமொழிகள் பிறமொழி கலப்பில்லாமல் வழங்க முடியாது. ஆனால் தமிழ்மட்டும்தான் பிறமொழிகளின் கலப்பில்லாமல் பயன்படுத்தமுடியும் என்று மொழியியல் அறிஞர் கால்டுவெல் போன்றவர்களால் கூறப்பட்டது.   அக்கொள்கையை வழிமொழிவதுபோல் தனித் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டு பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் செய்தார். பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர்களின் எழுத்தாக்கமும், பாடல்களும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைச் செப்பமாகவும், பிழையின்றியும் எழுதவும் பேசவுமான நிலையை ஆழமாகச் செய்தன.

 

தனித்தமிழ் இயக்கம் வரலாற்றுத் தேவையாக இருந்தது. திராவிட இயக்கம் நல்ல தமிழுக்குரிய நாற்றங்காலாக இருந்தது.

 

முற்காலத்தில் வடமொழியும் தமிழும் கலந்து எழுதும் பெரும்பணியை வைணவ உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்கள் செய்தனர். அதன் நீட்சி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஏன் இடைப்பகுதி வரையிலும் தென்படுவதைப் பழைய தமிழக நாளேடுகளைப் புரட்டிப் பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும்.   தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தாலும், பிறமொழிகளின் எழுத்துகள் கலந்தாலும், பிறமொழி ஒலி கலந்தாலும் தமிழின் தனித்தன்மை கெடும். அவ்வாறு கெடாமல் செவ்வியல் மொழியைப் பாதுகாப்பது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரின் கடமையாகும்.

 

பாலமுருகன் – சென்னை

 

http://www.ampalam.com/2013/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.