Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதம்: சுருக்கக் குறிப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம்: சுருக்கக் குறிப்புகள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

பயங்கரவாதம் ஒரு பண்புப் பெயர் அல்ல. நம் வாழ்வில் நாளாந்தம் அனுபவிக்கும் கொசுக் கடி, மின்சார வெட்டுபோல் உயிர்த்தோற்றமுள்ள ஒரு மெய்மை என்றுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு நகரின் தெருவிலோ அல்லது சந்தையிலோ அரசியல், மத, கருத்தியல் காரணங்களுக்காகக் குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கும்.

terror.jpg

 

ஐந்து வார இடைவெளியில் இரண்டு பயங்கரவாத தாக்குதல்கள். ஒன்று அமெரிக்காவின் பொஸ்டன் நகரம். மற்றது ஐக்கிய ராச்சியத்தின் லண்டன். ஐக்கிய ராச்சியத் தெருக்களுக்குப் பயங்கரவாதம் 9/11க்குப் பிறகு வந்ததல்ல. இஸ்லாமிய குண்டுதாரிகளுக்கு முன்பு 70களிலும் 80களிலும் ஐரிஷ் விடுதலை இயக்கமான ஐ ஆர் ஏ கட்சி எண்ண மிகுதியாக வன்முறைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. ஏன் சரித்திரத்தைக் கொஞ்சம் பின்னுக்கு நகர்த்தினால் சமய தீவிரவாதத்தின் தடயங்களை இங்கிலாந்திலும் காணலாம். கத்தோலிக்க சமய அனுதாபி நிuஹ் திணீஷ்ளீமீs ஜனநாயகத்தின் அன்னை என்று அழைக்கப்படும் ஆங்கிலப் பாராளுமன்றக் கட்டடத்திற்கே வெடிமருந்து வைத்திருந்தார். இது நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி 1605இல் நடந்தது. எனவே பயங்கரவாதம் ஆங்கில வாழ்க்கைக்குப் புதிதல்ல.

நான் இங்கே சொல்லப்போகும் விஷயம் தீவிரவாதத்தின் சரித்திரம், தோற்றம், வளர்ச்சி பற்றி அல்ல. இந்த பொஸ்டன், லண்டன் பயங்கரவாத தாக்குதல் பற்றி ஆங்கில ஊடகங்களில் நடந்த கலந்தாய்வுகள் மற்றும் அவை எழுப்பிய கேள்விகள் பற்றித்தான்.

இந்த பொஸ்டன், லண்டன் தாக்குதல்கள் நடந்தபோது ஊடகத்தில் மிகவும் பம்பலாகப் பேசப்பட்ட விஷயம் மேற்குக் கலாச்சாரத்தில் வளர்ந்து அத்துடன் அன்னியோன்னியமான இவர்களால் எப்படி இந்த மாதிரியான தீவினையான காரியத்தைச் சாதிக்க முடிந்தது? பாஸ்டனில் குண்டு வைத்த Tsarnaev
சகோதரர்களுடைய பெற்றோர். சேச்சினிய நாட்டி லிருந்து அமெரிக்க வந்த குடியேறிகள். தற்போது அமெரிக்கக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள். அதுபோல் லண்டனில் ஒரு ராணுவத்தினரை வெட்டி கொலை செய்த Michael Adebowale -வும் Michael Adebolajo-வும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் உள்ளூர் ஆங்கில உச்சரிப்புடன் தாங்கள் சாதித்த செய்கைகள் சரியானவை என்று நியாயப்படுத்தியதை அவர்கள் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குக் கொடுத்த தகவல் அளிப்பில் பார்த்திருக்கலாம். நவீனஉலகுடன் தொடர்புடையவர்கள், ஜனநாயகப் பண்புகள் தெரிந்தவர்கள் எப்படி இந்தச் செயலில் ஈடுபட்டார்கள் என்ற வாதத்தில் வெள்ளையர்களின் இன இறுமாப்புத் தெரிகிறது. சேக்ஸ்பியரின் நாடகங்களில் மெய்மறந்தவர்களும் மொசாட்டின் இசையில் நெகிழ்ந்து போகிறவர்களும் செய்யும் காரியமல்ல இது என்பது வெள்ளைப் பேரினவாதிகளின் கருத்து. இந்தக் கூறுதலுக்குப் பின்னால் புதைந்திருக்கும் மறைபொருள் உள்நோக்கம் அமெரிக்க, அய்ரோப்பிய கலாச்சாரம் பண்புள்ளது, தூய்மைகேடற்றது, தாராளமானது. ஆகையால் இந்த மாதிரியான நச்சுத்தன்மையுடைய தீய செயல்கள் இங்கு உருவாக வாய்ப்பில்லை. இவை பிறர்களுக்கு உரியவை. அய்ரோப்பியக் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டவை. புத்தொளி இயக்கத்தின் பிறப்பிடம் மேற்கு. ஆகையால் காட்டுமிராண்டிச் செய்கைகள் இங்கே உற்பத்தியாகச் சாத்தியங்கள் இல்லை. ஆனால் ஊடகவியலாளர்களாலும் வலதுசாரி அறிவுஜீவிகளாலும் மறைக்கப்பட்ட, மறந்துபோன சம்பவம் இதே மேற்குக் கலாச்சாரந்தான் ஹிட்லரின் நாசிசத்தையும், முசோலினியின் பாசிசத்தையும் உருவாக்கியது. வெள்ளையர் முன்னேற்றத்திற்கான ரிu ரிறீuஜ் ரிறீணீஸீ அமைப்பு அமெரிக்காவில்தான் நிறுவப்பட்டது. 1995இல் ஒக்லகோமா குண்டு வெடிப்பை நடத்திய தீமத்தி மக்வேயைத் தாராளவாத அமெரிக்காதான் உருவாக்கியது. இப்படியே இந்தப் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

தீவிரவாதிகள் என்றால் கையில் தடல்புடலான தளவாடங்களும் ஆவேசமான ஆயுதங்களும் இருக்கும் என்ற எண்ணத்தை பொஸ்டன், லண்டன் சம்பவங்கள் மாற்றியிருக்கின்றன. ஒரு நாட்டையும் அந்த நாட்டு மக்களையும் அச்சங்கொள்ளச் செய்ய, அவர்களின் அமைதியைக் குலைக்க பீரங்கிகளும், கவசப் பாதுகாப்புடைய வாகனங்களும் இப்போது தேவையில்லை. சமையல் அறைச் சாதனங்களே போதும்போல் தெரிகிறது. பொஸ்டன், லண்டன் குண்டுதாரிகள் தாக்குதலுக்கு உபயோகித்தது உயர் தொழில் நுட்பச் சாதனங்களை அல்ல. சாதாரணமாக நாள்தோறும் நம்முடைய வீடுகளில் புழக்கத்திலிருக்கும் சாப்பாட்டுப் பாத்திரங்களைத்தாம். பொஸ்டனில் தினமும் சமையலுக்குப் பாவிக்கும் அழுத்த சூட்டடுப்பு (ஜீக்ஷீமீssuக்ஷீமீ நீஷீஷீளீமீக்ஷீ). லண்டன் தீவிரவாதிகள் உபயோகித்தது ஒவ்வொரு நாளும் அடுக்களையில் மாமிசமும் மரக்கறியும் வெட்டும் கத்தி. பழையமாதிரியான போர்த்திறச் செயல்பாடுகளிலிருந்து மாறி புதுவகைத் தாக்குதல்களை நடத்த வெகுஜன அழிப்பு ஆயுதங்களுமாக இப்போது சமையல் பாத்திரமும் குசினிக் கத்தியும் மறு உருவாக்கம் பெற்றிருக்கின்றன. நமது அடுப்படிப் பாத்திரங்கள் அழிக்க மட்டுமல்ல, அபாயத்திலிருந்து மீட்கும் ஆக்கப்பூர்வமான கருவிகளாகவும் இருக்கின்றன. விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து அமெரிக்காவைக் காப்பாற்றியது உன்னதத் தொழில் நுட்பக் கருவிகள் அல்ல. நாம் தினமும் தக்காளிச் சாதத்தை உஷ்ணப்படுத்தப் பாவிக்கும் நுண்ணலை அடுப்புதான் (microwave). பயங்கரவாதிகளின் ஆயுதங்களும் நடைமுறைக் காரியங்களுக்குச் சாதாரணமாக உபயோகிக்கும் கருவிகளாக உருமாறி இருக்கின்றன.

n2209.jpg

 

தகவல் தொடர்பு சாதனங்களில் பேசப்பட்ட இன்னுமொரு விஷயம் மக்கள் புழங்கும் பொதுவெளியில் தாறுமாறான தாக்குதல்களை நடத்தும் இந்தத் தீவிரவாதிகள் பயந்தாங்கொள்ளிகள், இவர்களுக்குத் தைரியமில்லை, பிரச்சினைக்குச் சம்பந்தமில்லாத அப்பாவி மக்களுக்குக் கடும் துயர் விளைவிக்கிறார்கள் என்பது. நல்லவேளையாக லண்டன் வன்முறை ஒரு மரணத்தில் முடிந்தது. ஆனால் பொஸ்டன் தாக்குதலில் மூன்று பேர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டிருக்கிறார்கள். மக்கள் பொதுவெளியிடங்களான சந்தைகள், இருப்புப்பாதை நிலையங்களில் தாக்கப்படுவது தைரியமில்லாதவர்களின் செயலாகக் கருதப்படுகிறது. ஆனால் ஓட்டுநர் இல்லாத அமெரிக்க வான்கல குண்டுவீச்சால் (drone attacks) அப்பாவி பாகிஸ்தானிகள், ஆவ்கான்கள் உயிர் இழப்புகள் பற்றியோ அவர்களின் அங்கங்கள் ஊனமடைவது பற்றியோ கரிசினைப்படுவதில்லை. இந்த விவாதத்தைக் கேட்டபோது The Battle of Algiers என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. 1966இல் வெளிவந்த அல்ஜிரீய விடுதலையை ஆவணப்படுத்தும் படம் இது. அல்ஜிரீயர்கள் தங்கள் நாட்டில் வந்து குடியேறி ஆட்சி நடத்தும் பிரான்சு நாட்டவர்களிடமிருந்து விடுதலை பெற போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் பிரான்சின் நவீன, அசுரத்தனமான படைபலத்திற்கு முன்னால் அல்ஜிரீயர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆகையால் மரபுசாராப் போர்முறையில் நேர்ச் சண்டையைத் தவிர்த்துப் ª பாதுமக்கள் கூடும் இடங்களைக் குறிவைக்கிறார்கள். கடைத்தெருவுகளில் கூடைகளில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்புகளால் சாதாரண மக்கள் மரணமடைகிறார்கள். அதைவிடப் பொது மனநிலையில் கடுந்தளர்வும் அச்சமும் ஏற்படுகிறது. ஊடகவியலர் ஒருவர் அல்ஜிரீய விடுதலைப் போராளியிடம் ஒரு கேள்வி கேட்பார்: “பெண்கள் தூக்கித் திரியும் கைப் பைகளில் வெடிகுண்டு வைக்கிறீர்கள். எத்தனையோ குற்றமற்ற மக்கள் இறந்து போகிறார்கள். இது கோழைத்தனம் இல்லையா?” அதற்கு M. Ben M’Hidi என்ற அல்ஜிரீயப் போராளி சொல்லுவான்: “ஒன்றுமே அறிந்திராத எங்கள் கிராமத்து மக்கள்மீது நச்சுக்குண்டுகள் வீசப்பட்டபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? உங்களுடைய ஆகாச விமானம் எங்களிடம் இருந்தால் எங்களுடைய வேலை மிக இலகுவாயிருக்கும். உங்களுடைய குண்டு வீச்சு விமானங்களை எங்களுக்குத் தாருங்கள். எங்களுடைய கூடைகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.” ஆக்கிரமிப்பாளர்களுக்கும் போராளிகளுக்கும் யுத்தத் தளபாடங்களில் சமமின்மை இருக்கும்போது வலுவற்றவர்கள் வலுகுறைந்த ஆயுதங்களால் தங்கள் குறிக்கோள்களைச் சாதிக்க முயல்வர்.

சூடாக்கு (Sudoku) போல் பயங்கரவாதத்தை எப்போதுமே எளிதாக விளங்கிக் கொள்ளமுடிவதில்லை. பயங்கரவாதம் ஒரு செயல்பாட்டு முறை என்பதைவிட ஒரு கருத்துக் கோணம், மனநிலை நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்வதுதான் சரியெனப்படுகிறது. ஆனால் பயங்கரவாதம் பற்றிய விவாதங்களில் வலதுசாரி விமர்சகர்கள் இச்செய்கைகளைக் குற்றவியல் நடவடிக்கையாகப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு இது சட்டம் - ஒழுக்கம் பற்றிய பிரச்சினையாகப்படுகிறது. ஆனால் பயங்கரவாதத்தை மிக நுணுக்கமாக ஆராய்ந்த ராபர்ட் பேப் எழுதிய Dying to Win: The Strategic Logic of Suicide Terrorism இந்த வலதுசாரி கதைக்கூற்றுக்குச் சற்று வேறானது. பேப்பின் இந்த நூலைப் பற்றி ஏற்கனவே காலச்சுவடில் எழுதியிருக்கிறேன். ஹிஸ்சபூல்லா, ஹாமாஸ் முதல் மதச்சார்பற்ற தீவிரவாதிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த பேப்பின் முடிவு பயங்கரவாதத்திற்கு மூல காரணம் மதமோ வேறு சமூக, பொருளாதார விளைவுகளோ அல்ல. அன்னிய நாட்டின் மீதான ஆக்கிரமிப்பே. பிற நாடுகளுடன் சண்டைக்குப் போவதும், அந்த நாடுகளை வலிமையால் கீழ்ப்படுத்த முயற்சிக்கும் மேற்கு நாடுகளின் அயல்நாட்டுக் கொள்கைதான் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிடுகிறது என்பது பேப்பின் கண்டுபிடிப்பு. வலதுசாரி அரசியல் விமர்சகர்களும் அரசியல்வாதிகளும் பேப்பின் தெரியப்படுத்துதலை ஏற்றுக்கொள்வதில்லை. லண்டன் பயங்கரவாதிகளின் விவர அறிக்கைகளைச் சும்மா மெலிதாக வாசித்தால்கூட பேப்பின் ஆராய்ச்சியுடன் ஒத்துப்போவது தெரியவரும். இரு லண்டன் குண்டுதாரிகளும் சொன்னது: ‘எங்கள் நாட்டை நீங்கள் ஆக்கிரமித்திருக்கிறீர்கள். எங்கள் நாடுகளைவிட்டு நீங்கள் வெளியேறும் வரை உங்களுக்கு ஆக்கினை தந்து கொண்டே இருப்போம்...’

பயங்கரவாதத்தைப் பற்றிய இலக்கியங்களில் தீர்க்கதரிசனமான நாவல் யோசப் கொன்ராடின் The Secret Agent. கொன்ராடின் இலக்கியத் தரம் பற்றி பின் கலானிய வாசகர்களிடையே இரட்டுறான அபிப்பிராயம் உண்டு. ஆனால் இந்த நாவல் பயங்கரவாதம் விளைவிக்கும் தாத்பரியங்கள் பற்றி முன்னுணர்வுடன் எழுதப்பட்டுள்ளது. அராசகம், வேவுபார்த்தல், பயங்கரவாதம் பற்றிப் பரிசீலிக்கும் இந்நாவல் 1907இல் வெளிவந்தது. இது தீவிரவாதத்தின் பிரதி மட்டுமல்ல தீவிரவாதத்தைப் பற்றிய பிரதி என்று ஒரு விமர்சகர் கூறியிருக்கிறார். கதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி நாட்களில் லண்டனில் நடக்கிறது. உயர் மாடிக் கட்டடங்களைத் தூளாக்குவது அல் கைதாவின் பிரத்தியோகக் கண்டுபிடிப்பல்ல. கொன்ராடின் நாவலில் கிரீன்விச் வானிலை ஆய்வுக்கூடம் குறிவைக்கப்படுகிறது. தீவிரவாதத்தைப் பற்றி இந்த நாவல் பேசுவதால் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்க ஊடகத்தில் அதிகம் சுட்டுரைக்கப்பட்ட மூன்று இலக்கியங்களில் இந்த நாவலும் ஒன்று. நாவலின் கதைச் சுருக்கத்தைத் தருவதைவிட கொன்ராட் தரும் மூன்று முன்கணிப்பான செய்திகள் எனக்கு முக்கியமாகப்படுகிறது. ஒன்று பயங்கரவாதிகளின் நோக்கம் கொலை செய்வதைவிட மக்களைப் பயமூட்டுவதே. அவர்களை நிலைகுலைய வைப்பதே. இரண்டாவது, பயங்கரவாதம் ஏற்படுத்தும் அச்சுறுத்தலால் காவல் துறையினர் கட்டாயப்படுத்தப்பட்டு பொதுமக்களின் ஆதரவுடன் பகல் வெளிச்சத்தில் பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொல்வார்கள். இதுதான் பயங்கரவாதத்திற்குக் கிடைக்கும் பெரும் வெற்றி. கொன்ராடின் இரகசிய ஒற்றனின் கூற்றுப்படி காவல் துறையினரும் பயங்கர வாதிகளும் ஒரே கூடையிலிருந்து வந்தவர்கள் - ‘both come from the same basket’. மூன்றாவது பழைய அறநெறிகள் சிதைவுறும். பழைய அறநெறிகள் என்று கொன்ராட் சொன்னது தனிமனித உரிமைகள் பற்றிய உத்தரவாதங்கள், தாராள மனப்பான்மை, சகிப்புத்தன்மை. இதை இன்னும் விரிவுபடுத்தினால் பயங்கரவாதம் ஏற்படுத்தும் விளைவு ஒரு ஜனநாயகச் சமூகம் தேசியப் பாதுகாப்பு என்ற சாக்கில் தனது ஒழுங்கமைவுக்கு மையமான ஒழுங்குநெறி விழுமியங்களைப் பணயம் வைக்கவேண்டி வரும்.

நான் நினைவுபடுத்தத் தேவையில்லை. கொன்ராட் நாவலில் கற்பனையில் எழுந்த செய்தி நம் கண்முன்னாலேயே நடந்திருக்கிறது. பொஸ்டன் நகரமும் அந்த மக்களும் குண்டுதாரிகள் கண்டுபிடிக்கும்வரை நிலைகுலைந்ததைத் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். இரகசிய ஒற்றன் கூறியபடி மக்களின் ஆதரவோடு குண்டுதாரிகள் பொதுவெளியில் சுடப்பட்டார்கள். இப்போது பாதுகாப்பைக் காரணமாகக் கொண்டு தனிமனித உரிமைகள்கூட படிப்படியாக அரிக்கப் படுகின்றன. இக்கட்டுரையைக் கணினியில் ஏற்றிக் கொண்டிருக்கும்போது அமெரிக்க தேசியப் பாதுகாப்பு செயற்பாட்டு நிலையம் லட்சக்கணக்கான மக்களின் தொலைபேசி உரையாடல்கள், இணையவலை தரவுகளைத் திரட்டியிருக்கிறது என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. சமூக வலைத் தளங்களான முகநூல், கூகுள், யாகூ, அமெரிக்க உளவுத் துறைக்குத் தகவல்களைக் கொடுத்ததாகத் தெரிகிறது. பயங்கரவாதத்தின் நோக்கமே ஒரு நாட்டின் அரசையும் அதன் மக்களையும் குழப்ப மடையச் செய்வதும் பயமுறுத்துவதும் ஆகும். முக்கிய மாகத் தனி மனித சுதந்திரங்கள் சீர்குலைய வேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் விமான நிலையத்தில் உங்கள் காலணிகளை அல்லது இடுப்பு வாரைக் கழட்டும்போது பயங்கரவாதம் வென்றுவிட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

கடைசியாகப் பயங்கர வாதத்திற்கும் அரசுகள் நடத்தும் எதிர்பயங்கரவாதத்திற்கும் சரியான எல்லை இல்லை. தன்னுடைய படைபலத்தைக்கொண்டு படு கொலைகள், பழிவாங்குதல் போன்ற பயங்கரவாகச் செயல்களில் அரசும் ஈடுபடுகிறது. தேசியப் பாதுகாப்பு, நாட்டின் கௌரவம் என்ற பெயரால் அரசு நடத்தும் எதிர்தாக்குதல், பழிச்செயல்கள், அரசுக்கும் பயங்கரவாதிகளுக்குமான வித்தியாசங்களை அழித்து விடுகின்றன. கொன்ராட் சொன்னதுபோல் இருவருமே ஒரு கூடையில் இருந்து வந்தவர்கள்போல் தெரிகிறது. எனக்கு ஜார்ஜ் ஒர்வெலின் விலங்குப் பண்ணையில் வரும் கடைசிவரிகள் நினைவுக்கு வருகின்றன. இந்த வரிகளை ஏற்கனவே பழைய பத்தி ஒன்றில் எழுதியிருக்கிறேன். இங்கே சொல்ல வந்த விஷயத்திற்குப் பொருத்தமாக இருப்பதால் மறுபடியும் மேற்கோள் காட்டி இந்தக் கட்டுரையை முடிவுக்குக் கொண்டுவருகிறேன். ‘வெளியில் இருந்த விலங்குகள் பன்றியின் முகத்தைப் பார்த்துவிட்டு மனிதனின் முகத்தைப் பார்த்தன. மறுபடியும் மனிதனின் முகத்திலிருந்தது பன்றியின் முகத்தைப் பார்த்தன. திரும்பவும் பன்றியின் முகத்திலிருந்து மனிதனின் முகம். உண்மையில், எது எதனுடைய முகம் என்று சொல்லமுடியவில்லை.’

 

 

 


http://www.kalachuvadu.com/issue-163/page73.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.