Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு தொலைத்தவனின் பயணக் குறிப்புக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு தொலைத்தவனின் பயணக் குறிப்புக்கள்

அனுபவம் : அகிலன் நடராஜா

 

 

 

உலகத்தின் திசையெங்கும் விரிந்த ஈழத்தவர்களின் அகதிப் பயணங்களில் மலேசியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. கனடா ஆகட்டும், லண்டன் ஆகட்டும், பிரான்ஸ் ஆகட்டும் பயண வழியில் மலேசியா ஒரு சத்திரம். அப்படித்தான் எனக்கும்.

பயணங்கள் பற்றி என்னிடமும் நிறையக் கனவுகள் இருந்தன. ஆனால் காலம்- நிலம், நீர், ஆகாயமென ஆபத்தான பயணமொன்றை என்னில் திணிக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை. நம்பிக்கைகளின் அழிவில் அது தனது வேலையைக் காட்டுகிறது. 2009 மார்ச் மாதத்தில் வலைஞர் மடத்தில் இராணுவம் புகுந்தபோது எல்லாம் முடிந்தது என்று தலையில் கைவைத்து உட்கார்ந்த அண்ணர் ஒருவரிடம், “ஏன், முள்ளிவாய்க்கால் இன்னமும் இருக்குத்தானே..” என்று கேட்டவன், முள்ளிவாய்க்காலும் முடிந்த இரண்டு வருடத்தில், இனி எதுவும் இல்லையென்று சிதைந்த பழைய நம்பிக்கைகளை கைவிட்டு புதிய நம்பிக்கைகளைச் சுமந்தபடி புறப்பட்டிருக்கிறேன்.

மலேசியாவில் இமிக்ரேஷன் விசாரணைகளை முடிக்கும் வரைக்கும் நானொரு ஆசிரியன். முள்ளிவாய்க்கால் வரையான யுத்தத்தில் அகப்பட்டு, உடலும் மனமும் இயல்பிழந்து, முகாம்களில் அலைக்கழிந்து வெளியேறிய தோற்றத்தில் எங்கேனும் ஓரிடத்தில், ஆசிரியக்களை தெரிந்திருக்க வேண்டும். விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பத்தாவது நாள் இந்தோனேசியாவில் இருந்தேன்.

0 0 0

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் போகோர் என்றொரு இடம் உல்லாசப் பயணிகளால் எப்பொழுதும் நிறைந்திருக்கிற குறிஞ்சி நிலம். அங்குதான் சீசருவா கிராமம் இருக்கிறது. மலேசியாவில் இருந்து நீராலும் நிலத்தாலும் சீசருவாவுக்கு வந்து சேர்ந்திருந்தேன்.

சீசரூவா தெருக்களில் இறங்கிய இரண்டு நிமிடத்தில் யாராவது இலங்கைத் தமிழரிடத்தில் நீங்கள் முட்டுப்பட வேண்டும். பயணத்தை எதிர்பார்த்து, ஒரு வருடத்திற்கும் மேலாக சீசருவாவில் தங்கியிருக்கின்ற மனிதர்கள் ஏராளம். அடுத்த வாரம், அடுத்த மாதம் என்று பயணம் இழுபட்டுக் கொண்டு போவதில், சற்று நம்பிக்கைகள் தூர்ந்து போயிருந்தாலும், கார்ட்ஸ் விளையாடுவது, நெட் கபேயிற்கு போவது, பிறந்தநாள் பார்ட்டி செய்வது என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

சீசரூவாவில தமிழ்ப் பிறந்த நாட்கள் அடிக்கடி வந்தன. நான், சசி, மோகன் எல்லோரும் அலங்கார வேலைகளைப் பொறுப்பெடுத்து நடாத்துவோம். பலூன் கட்டுவதில் சசி ஆள் விண்ணன். ஒரு கலை இயக்குனருக்குரிய நேர்த்தியோடு எல்லாப் பார்வைக் கோணங்களிலும் நின்று பார்த்து, பலூன் கட்டுவார். நல்லாயிருக்கு, நல்லாச் செய்திருக்கிறீங்கள் என்ற ஒரு வார்த்தைதான் அவருக்கான கூலி. அது போதும் அவருக்கு.

சிறுவர்களின் பிறந்த நாட்களில், படம் எடுக்கும் போது அவர்கள் தங்கள் கைகளில், உயிரோடு இல்லாத அம்மாவின் படத்தையோ அல்லது அப்பாவின் படத்தையோ ஏந்தியிருப்பார்கள். அப்போது யாருக்கும் அலங்காரங்கள் தெரியாது. பலூன்களின் நிறங்களும் தெரியாது. கண்கள் கலங்கியிருக்கும். கலகலப்பற்ற நிகழ்வுகளாக அவை மாறிவிடும்.

தனியே தமிழர்கள் என்றில்லை. ஈரான் ஈராக் ஆப்கான் வியட்நாம் என்று யுத்தம் தின்ற நாடுகள் அனைத்திலுமிருந்து மனிதர்கள் புதியதும், கனவுகளை விழுங்காததுமான வாழ்வொன்றைத் தேடி அங்கே தங்கியிருந்தார்கள். ஒன்றிரண்டு சிங்களக் குடும்பங்கும் தங்கியிருந்தன.

அர்த்தமில்லாத வாழ்க்கையாகத்தான் சீசருவவில் போய்க்கொண்டிருந்தது. இந்தக் கிழமை புறப்படுகிறோம் என்று கதைகள் வரும். ஒரே பரபரப்பாயிருக்கும். பிறகு சத்தமில்லாமல் அது அமிழ்ந்து விடும். படகு வாங்குவதற்காக இந்தோனேசியன் ஒருவனை ஒழுங்கு படுத்தியிருந்தார்களாம். அவன் காசைச் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிட்டானாம். இப்பிடியே காலம் ஓடியது. பிறகொரு நாள் கிடைத்த தகவலில் அடுத்த கிழமை நிச்சயம் பயணம் என்றிருந்தது.

என்னிடம் இரண்டு பைகள் மட்டுமே இருந்தன. மற்றவர்கள், இந்தோனேசியாவில் வாங்கிய உடுப்பு, உலர் உணவு என்று நிரப்பி நான்கைந்து பைகளை வைத்திருந்தார்கள். மூன்று மணிக்கு வாசலில் வந்து நிற்பதாக வாகனக்காரன் தொலைபேசினான்.

உப்பிப் பெருத்த பைகளை முதுகில் சுமந்து கொண்டு 1770இல் கப்டன் குக் ஆரம்பித்து வைத்த அவுஸ்ரேலியா நாடு காண் பயணத்தை நாங்கள் ஆரம்பித்தோம். தனது இராச்சியங்களை மேலும் விரிபுபடுத்த குக் பயணித்தார். நாங்கள் இருந்த இராச்சியங்களை இழந்து பயணிக்கிறோம்.

‘’ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஏறுங்கோ’’ என்று வாகனத்தில் இருந்தவர் சொன்னார். அவரும் எங்களோடு பயணிக்கிற ஆள்தான். ஆனாலும் நெருக்கடி நேரங்களில் எந்தக் குச்சொழுங்கை கிண்டுவதற்கு வசதி என்ற சூக்குமங்கள் தெரிந்தவர். ஜகார்த்தாவில் இரண்டு வருடங்கள் சுழன்றிருக்கிறார்.

டிரைவர் மஞ்சள் நிறத்தில் தாடி மீசையின்றி மொழு மொழுப்பாக இருந்தான். ஏறும்போது பக்கத்து வீட்டுப் பெண்கள் கண்டுவிட்டார்கள். யாராவது கண்டால் ஜகார்த்தாவிற்கு வீடு மாறுவதாகச் சொல்ல வேண்டுமென்று முதலே திட்டமிட்டிருந்ததால் ‘ஜகர்த்தா ஜலாங்’ ‘கமி ரூமா டி ஜகர்த்தா.’ என்று கோர்த்து கோர்த்து சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

போகோரிலிருந்து ஜகார்த்தா நோக்கி கார்கள் புறப்பட்டன. நான்கு முதல் ஐந்து வரையான குடும்ப ஆட்களுக்கு ஒரு கார் படி சுமார் 20 கார்களில் பயணம். ஜகார்த்தாவில் ஒரு நகரப்பகுதிக்கு வந்தபோது இரவு ஏழு மணியானது. இடையில் வந்தாச்சா வந்தாச்சா என்று இரண்டு தடவைகள் போன் செய்து விட்டார்கள். ட்ரைவரான இந்தோனேசியனுக்கு இறங்க வேண்டிய சரியான இடம் பிடிபடவில்லை. போனில் கதைத்துக் கொண்டு சுற்றி சுற்றி ஓடினான். ஓரிடத்தில் இரண்டு நீள சொகுசு பஸ்கள் நின்றன. காரை அவற்றின் அருகில் நிறுத்திய பத்தாவது வினாடி நாங்கள் பஸ்சுக்குள் இருந்தோம். பொதிகளும் ஏற்றப்பட்டன.

நேரம் இரவு 7.30. இரண்டு பஸ்களும் புறப்பட்டன. பஸ்ஸின் திரைச் சீலைகள் இழுத்து விடப்பட்டு ஜன்னல்கள் மூடப்பட்டன. உள் விளக்குகள் அணைக்கப்பட்டன. வெளிச்சமான இடங்களைக் கடக்கும் போது யார் யார் வருகிறார்கள் எனப் பார்த்துக் கொண்டேன். சந்திரன், லக்சன், தீபன், ஆளவந்தான், அரவிந்தன் என ‘கடைசி வரிசை’ ஒரு களையாகத்தான் இருந்தது. நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.

நகரப் பகுதியிலிருந்து விலகி பஸ் ஓடிக் கொண்டிருந்தது. வாகன நெரிசல் பெரிதாக இல்லை. நள்ளிரவு 12 மணி தாண்டியது. ‘இன்னும் ஒரு மணித்தியாலம் ஓடோணும்’. என்றான் ரதீஸ். முன்னரும் ஒருமுறை புறப்பட்டு இடையில் மாட்டிக் கொண்டவன் அவன். அப்பொழுது பாய்ந்தோடி ஒன்றிரண்டு மதில்கள் பாய்ந்து, ஒரு வீட்டின் பின்னால் சேற்றுக்குள் சத்தம் போடாமல் பதுங்கியிருந்து பொலிஸ் நடமாட்டம் குறைந்த நேரம் பார்த்து ரக்ஸி பிடித்து தப்பி வந்தவன். சுழியன். இவ்வளவிற்கும், பொல்லு ட்ரெயினிங் கூட எடுத்தவனில்லை. கடைசி வரை குடத்தணையில் இருந்தவன். ஆனால் அவனது துணிகர தப்பியோட்டத்திற்குப் பிறகு ஒருவேளை அவன் “அங்கை” இருந்திருப்பானோ என்று சின்னச் சந்தேகம் எனக்கிருக்கிறது.

பஸ் பயணப்பாதையில், தென்னை மரங்களும் வெள்ளை மணலும் தெரிகிறது. கிட்டத்தட்ட வந்துவிட்டோம். முன்னாலிருந்த இந்தோனேசியன் எழுந்து நின்று சின்ன உரை ஆற்றுகிறான். அதன் தமிழ் சுருக்கம் வருமாறு.

“வாகனத்தை நிறுத்திய உடன் வேகமாக இறங்கி பொதிகளோடு இடப்பக்கமாக இருக்கிற பாதையில் நகர வேண்டும். வேகம்தான் வெற்றியைத் தீர்மானிக்கும்.”

நம் ஆட்களைப் பார்க்கிறேன். பொதிகளைச் சுமந்தபடி பென்ட் மூவ் இலும் டக் பொக்கிலும், நகர்ந்து கொண்டிருந்தார்கள். இந்தோனேசியன் எதிர்பார்த்ததை விட வேகம்தான். யாரும் தடக்கி விழவில்லை. அருளக்கா மகளையும் இரண்டு பைகளையும் சுமந்தபடி நடக்கின்றா. அவவுக்கு ஒரு கால் இல்லை. அது போருக்கு காணிக்கையாகப் போய்விட்டிருந்தது.

நீண்டதூரமில்லை. அருகில் தண்ணீர் தெரிகிறது. நான்கு சிறிய படகுகளில் ஏற்றப்படுகிறோம். பயணத்தில் இதுவொரு முக்கியமான புள்ளி. இந்தோனேசியன் நேவிக்கு சிறு அசுமாத்தத்தையும் காட்டக் கூடாது. ஒருவேளை அவன் உசாராகி வந்தானென்றால் அவ்வளவும் தான்.

உலகின் மோசமான சிறைகளில் இந்தோனேசிய சிறைகளுக்கும் முக்கிய இடம் உண்டு. குப்பையான, தொற்று நோய்கள் உடனே பரவக்கூடிய சூழல் என்றும், ஆட்களை மோசமாக நடாத்துகிற சிறை அலுவலர்கள் என்றும் அவை அறியப்பட்டிருந்தன. எனக்கு அதுபற்றிய யோசனைகள் பெரிதாக இல்லாவிட்டாலும், பிடிபட்டால் திரும்பவும் முதலேயிருந்து தொடங்க வேண்டும் என்ற யோசனையும், அதற்கு இரண்டு மூன்று வருடங்களாவது எடுக்கும் என்பதும்தான் அந்தரமாக இருந்தது. எத்தனை தரம்தான் ஒருவன் முதலேயிருந்து தொடங்க முடியும்.

ஆனந்தன் ஒரு காலோடு படகில் ஏறச் சிரமப் படுகிறார். கை கொடுத்து ஏற்றி விடுகிறேன். பொதிகளையும் அவரிடமிருந்து வாங்கி படகில் வைத்தேன். ஒவ்வொரு படகுகளிலும் நாலைந்து இந்தோனேசியர்கள் இருந்தார்கள். படகுகள் மெதுவாக நகரத் தொடங்க ஒரு பையை நீட்டிக் கொண்டு வந்தார்கள். “இந்தோனேசியப் பணம் இனித் தேவையில்லை. இதற்குள் போடுங்கள்.” என்னிடம் முப்பதாயிரம் மட்டும் இருந்தது. கொடுக்காவிட்டால் கடலில் தூக்கிப் போடுவார்களோ என்றொரு நினைப்பு வந்தது.

எனக்கு நீந்த முடியும். சுமார் நூறு மீற்றர்கள் வரை நீந்துவேன். ஆனால் அவுஸ்ரேலியா எத்தனை ஆயிரம் கிலோமீற்றர் என்று தெரியவில்லையே.. பணத்தைக் கொடுத்தேன்.

சிறிய படகுகள் பத்து நிமிடங்கள் நீரில் நகர்ந்து, கப்பலும் இல்லாத படகும் இல்லாத ஒரு கலத்தை அடைந்து நின்றது. எழுபது அடி நீளத்திலும் பன்னிரெண்டு அடி அகலத்திலும் அது இருக்கலாம். கீழ்தட்டும் மேற்தட்டும் இருக்கிறது. பழைய கலம். எங்கேயோ அறா விலைக்கு வாங்கியிருப்பார்கள் போல. கிரான்ட்மா என்று பெயராம். ஆட்கள் அதற்குள் மாற்றப்படுகிறார்கள். பொருட்களை எழுந்த மானத்திற்கு தூக்கித் தூக்கி எறிந்தார்கள்.

அசோக் அண்ணன் கபினுக்குள் போன பிறகு எஞ்சின் இரைகிற சத்தம் கேட்கிறது. நான், ஆளவந்தான், தீபன், லக்சன், சசி எல்லோரும் மேல் தட்டில் ஏறிக் கொள்கிறோம். வானம் நட்சத்திரங்களோடு விரிகிறது. முன்னொரு காலம், இராஜேந்திர சோழன், இந்தோனேசியாவின் தீவுக் கூட்டங்கள் வரை கப்பலில் வந்து தனது கொடியை நாட்டிச் சென்றிருந்தானாம். அவற்றை முன்னர் பாடப்புத்தகங்களில் படிக்கும் போது ஆச்சரியமாயிருக்கும். இன்றைக்கு இந்தோனேசியாவையும் தாண்டி, இராஜேந்திரன் காணாத கடற் பாதைகளின் ஊடாக பயணிக்கப் போகின்றோம்.

கப்பல் எனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. ஆடாமல், ஆடினாலும் கவிழாமல், கவிழ்ந்தாலும் தாழாமல் எங்களைக் கொண்டுபோய் சேர்த்து விட வேண்டும். இப்படி அவுஸ்ரேலியா புறப்படுகின்ற பல படகுகள் போய்ச் சேர்ந்த பிற்பாடோ, வழியில் கடற்படையால் மீட்கப்பட்ட பின்னரோதான் செய்திகள் வருகின்றன. போய்ச் சேராத பல படகுகளின் கதைகளை அலைகளும் ஆழக் கடலும் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றன.

சேகுவராவையும் அவரது குழுவையும் இப்படியொரு கப்பல்தான் கியூபாவிற்குள் கொண்டு போய் சேர்த்தது என ட்ரொஸ்கியின் புத்தகமொன்றில் படித்தது என் நினைவுக்கு வர கூடவே சிரிப்பும் வருகிறது.

எஞ்சின் இரைந்து கொண்டிருக்கிறதே தவிர கிரான்ட்மா நகர்ந்ததாகத் தெரியவில்லை. கபினுக்குள் அசோக் அண்ணன் கத்துகிறார். ‘’கூலிங் பம் வேல செய்யுதில்ல. தண்ணி இழுக்கிறது காணாது.’’

எஞ்சின் சூடேறாமல் பார்த்துக் கொள்வது கூலிங் பம் இயந்திரத்தின் வேலை. அது சரியாக தொழிற்படாவிட்டால் எஞ்சின் இறுகிவிடும். துரையண்ணன் உள்ளே சென்று என்ன ஏதென்று பார்க்கிறார். ஆள் பேசாலைக்காரன். இன்னும் விஷயம் தெரிந்த ஆக்கள் போய்ப் போய் வருகிறார்கள். இந்தோனேசியன்கள் ஒரு முடிவுக்கு வந்து பம்மைக் கழற்றி கரைக்கு கொண்டு சென்று திருத்தி வருவதற்காக யாரோடோ தொலைபேசுகிறார்கள்.

சனங்களுக்குள் புறு புறுப்புத் தொடங்குகிறது.

‘இந்த நேரத்தில எங்கடா மெக்கானிக்கப் பிடிக்கப் போறாங்கள்’ -ஆளவந்தான்.

‘இப்பிடி லேற் ஆகிக் கொண்டு இருந்தா நேவி வந்திடுவான்’. -ரதீஸ்.

‘பிடிச்சானோ 2 வரியம் உள்ளுக்கை.’ – இன்னொருவர்.

இந்தோனேசியன்கள் கழற்றிய இயந்திரத்தை ஒரு படகில் கொண்டு புறப்பட எல்லோருக்கும் ‘உள்ளுக்கை’ ஞாபகம் வருகிறது. இடையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள் ஒன்றிரண்டு பேர் அங்கிருந்த பழைய கூலிங் பம்மைப் பொருத்தி நோண்டிக் கொண்டிருந்தார்கள்.

நேரம், நள்ளிரா 2.30

ஒபரேஷன் என்டர்பேயில சொல்வது போல ‘ஒருவரும் எழும்பி நிக்க வேண்டாம் ‘ என்று அசோக் அண்ணன் சொல்கிறார். “பம் திருத்திக் கொண்டிருக்கினம். விடிய ஆறு மணிக்கு முன்னம் வந்திடுவினம்.”

நாங்கள் நீட்டி நமிர்ந்து படுக்கின்றோம். எங்களது எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்பதை தீர்மானிக்கின்ற தருணங்களாக அவையிருந்தன. எதிர்பாராத திருப்பங்களோடு நகர்கிற வாழ்க்கை நாடகத்தில், இப்பொழுது வெறும் கூலிங் பம் முக்கிய பாத்திரத்தை நடித்துக் கொண்டிருக்கிறது.

அதிகாலை நான்கரை இருக்கலாம். “மேல படுத்திருக்கிற ஆட்களை இறங்கட்டாம்” என்று சசி வந்து சொல்லிவிட்டுப் போகிறான். எல்லோரும் இறங்கினோம். ஒரு படகில் கறுப்பு மனிதர்கள் நிறைய இருப்பதைப் பார்த்து யாரும் நேவிக்கு அறிவித்து விடலாம் என்பதால் புறப்படும் வரை அனைவரையும் ஹச்சிற்குள் வைத்திருக்க அசோக் அண்ணன் முடிவெடுத்தார்.

ஹச், என்பது படகின் கீழ்தளம். கிட்டத்தட்ட ஒரு பாதாள அறை மாதிரி. மேலே மூடி ஒன்றால் மூடப்பட்டிருக்கும். பெரும்பாலும் ஹச்சிற்குள் பொருட்களைத்தான் வைத்தெடுப்பார்கள். அவசரத்திற்கு ஆட்களும் இருக்கலாம். என்ன.. மூடு பதுங்கு குழியை விட பயங்கரமான வெக்கையாக இருக்கும். மூச்சு விட முடியாது.

சுரேன் ஹச்சிற்குள் இறங்கி, கீழ் இறங்குகிற பெண்களைத் தாங்கி இறக்கினான். ஒரு அர்ப்பணிப்போடு அதைச் செய்தான் என்று நினைக்கிறேன். சற்றுத் தள்ளி நின்று சசி உன்னிப்பாக சுரேனைப் பார்த்துக் கொண்டு நின்றான். என்னவோ, இறங்குகிற பெண்களுக்குள் தனது ஆள் இருப்பது போலவும் ஆளை சுரேன் எப்படி கையாளுகிறான் என்பதை நோட்டம் விடுவது போலவும் அந்தப் பார்வை இருந்தது. “ஆண்டவரே, இந்தக் கப்பலுக்கை ஒரு பொம்பிளைப் பிரச்சினை ஏற்படாமல் காத்தருளும்” என்று நான் வேண்டிக்கொண்டேன்.

எல்லோரும் இறங்கிய பிறகு கடல் தெரிந்த சுரேன், ரதீஸ், துரை அண்ணன், சசி, நிசாந்தன் ஆகியோர் அசோக் அண்ணனுடன் மேலேயே நின்றார்கள்.

நேரம் காலை ஐந்து ஆகிக்கொண்டிருந்தது. ஹச்சுக்குள் நிலைமை மல்லாவி பஸ் கணக்கில் இருந்தது. ஒருவரின் காலுக்குள் மற்றவரின் தலையும் ஒருவரின் கையில் இன்னொருவரின் பையுமென ஒரே இறுக்கம். மொத்தம் எண்பது பேர் அடைபட்டிருந்தார்கள். வெளியே போவமென்றால் நாலைந்து பேரின் தலையை மிதிக்க வேண்டிவரும். ஹச் மேல் மூடியும் மூடப்பட்டிருந்தது. ஒரு ஓரமாக உடலைச் சரித்தேன்.

வெளியே ஆட்களின் நடமாட்டம் கேட்கிறது. பவான் மெதுவாக மூடியைத் திறந்து இந்தோனேசியன்கள் திரும்பியதை உறுதிப்படுத்தினார். நேரம் ஆறு மணி ஆக, இனி வானம் வெளிக்கத் தொடங்கும். மேலும் தாமதிக்க முடியாது. ஏற்கனவே “கவனித்து” வைத்திருக்கிற நேவியினரின் ஷிப்ட் முடியலாம். இனி வருபவன் எப்படியென்றும் தெரியாது. அவர்களையும் கவனிக்க வேண்டியேற்படலாம்.

எஞ்சின் திரும்பவும் இரைகிறது. கிரான்ட்மா அசைவதை, அதன் அடிவயிற்றில் இருந்து உணர முடிகிறது. ஹச்சின் மூடியைத் திறந்து பார்த்தேன். வெளியே இன்னமும் பரபரப்பாகவே இருக்கிறது. ஒரே எத்தில் வெளியே வந்தேன். பதுங்கு குழியை விட்டு வந்ததைப்போல இருந்தது. வெளியே ரதீஸ் படுத்திருந்தான். அருகாக படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தேன். தெளிவாயிருந்தது.

கிரான்ட்மா வேகமெடுக்கிறது. ஹச்சிற்குள் இருந்து ஒவ்வொருவராக வெளியே வருகிறார்கள். யாரும் பெண்கள் வெளியே வர விரும்பினால் அவர்களுக்கு உதவுவதற்காகவே பொறுப்புணர்ச்சியோடு சுரேன் வாசலில் படுத்திருக்கிறான்.

பணிஸ் பிஸ்கட் பைக்கற்றுகளை உடைத்து, ரதீஸ் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் விநியோகிக்கத் தொடங்கினான். அவன் வேர்ல்ட் விஷனில் வேலை செய்தவன். இந்தமாதிரியான வேலைகள் நன்றாக ஓடும்.

நான் கபின் பக்கம் போகிறேன். அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகுகின்றன. கிரான்ட்மா அலைகளில் ஏறி இறங்கிப் போய்க்கொண்டிருக்கிறது. சமயங்களில் ஆடுகிறது. கபினுக்குள், நீண்ட முடி வளர்த்திருந்த இந்தோனேசியன் ஒருவன் அசோக் அண்ணனுக்கு ஜி பி எஸ் பற்றி விளக்குகிறான். அசோக் அண்ணன் என்னைப் பார்த்து புருவத்தை அசைத்து சின்ன சிரிப்பு சிரிக்கின்றார்.

இப்பொழுதுதான் பார்க்கிறேன். கிரான்ட்மாவில் தொடுத்து ஒரு சிறிய படகு பின்னாலே இழுபட்டு வந்து கொண்டிருக்கிறது. அதற்குள் ஐந்து பேர் இருந்தார்கள். படகின் கயிறுகளை வெட்டிவிட்டு கிரான்ட்மாவிற்கு அருகில் வருகிறார்கள். அதிலிருந்து அறுபது வயதுகளில் ஒரு இந்தோனேசியக் கிழவனும் இன்னொரு இளைஞனும் எமக்குள் ஏறிக்கொள்ள, இங்கிருந்த இந்தோனேசியர்கள் இறங்கிக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருவன் ஆங்கிலத்தில் சொல்கிறான். “நாங்கள் திரும்பிச் செல்கிறோம். எங்களில் இருவர் உங்களோடு இணைந்து இறுதி வரை வருவார்கள். மகிழ்ச்சியான பயணம் வாய்க்கட்டும்”

அவர்களுக்கு கொடுப்பதற்காக எல்லோரும் காசு சேர்த்தார்கள். ரோஸ் நிறத்தில் தாள்கள் குவிகின்றன. ஒரு ரோஸ் தாள் ஒரு இலட்சம். இந்தோனேசியனை அழைத்து அவனிடம் கொடுக்கிறார்கள்.

ஆளவந்தான் என்னிடம் எவ்வளவு இருக்கின்றது என்று கேட்டான். “நான் முன்னமே போட்டில வைச்சுக் குடுத்திட்டேன். இப்ப ஒன்றும் இல்லை” என்று பொய் சொன்னேன். அப்படிச் சொன்ன பிறகு ஒரு மாதிரி இருந்தது. உண்மையில் என்னிடம் ஒரு சதமும் இல்லைத்தான். ஆனால் கையில் ஒரு மோதிரம் இருந்தது. அரைப்பவுண். முதன் முதலாக வன்னியில் வன வளத்தில் மீள் வனமாக்கல் உதவி அலுவலராக வேலை செய்த போது வாங்கியது. அதனைக் கொடுக்க மனம் வரவில்லை.

சிறு படகுக்கு இறங்கிய இந்தோனேசியன்கள் தங்களது படகைத் திருப்புகிறார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக காணாமற் போனது. கிரான்ட்மாவிலிருந்தவர்கள் அவர்களுக்கு கையைக் காட்டுகிறார்கள். நன்றி உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடியது என்றுதான் சொல்ல வேண்டும்.

கிரான்ட்மா பள்ளத்தில் விழுந்த மாதிரி ஒரு குலுக்கு குலுக்கியது. பெரிய அலையொன்று அதனைக் கடந்தது. பக்கவாட்டில் இருந்து தண்ணீர் உள்ளேறியும் இருந்தது. கையைக் காட்டிக் கொண்டிருந்தவர்களின் சத்தத்தைக் காணவில்லை.

இனி நேவி வரமாட்டான் என்றார் பவான் அண்ணா. அவர் அனுபவசாலி. முன்னரும் இந்தியாவிலிருந்து அவுஸ்ரேலியாவிற்குப் புறப்பட்டு இடையில் வழிகள் மாறி, கடலோடு அள்ளுப்பட்டு இந்தோனேசியாவின் ஆளரவம் இல்லாத் தீவொன்றினுள் கரை சேர்ந்திருந்தார். பத்து நாட்களாக நேவி காணும் வரை ஒழுங்கான சாப்பாடும் தண்ணீரும் இருக்கவில்லை. சுட்ட நத்தைகளும் மீன்களுமே உணவாகின. நேவிக்காரன் அவரைப் பிடித்துக் கொண்டுபோய் சிறையிலடைத்திருந்தான். அதிலிருந்து மீண்டு இந்தப்பயணத்தில் இணைந்திருக்கிறார். முள்ளிவாய்க்காலில் அவரது இரண்டு பெண்பிள்ளைகளும் இறந்து போயிருந்தார்கள். ஒரே மகனின் இரண்டு கைகளையும் ஷெல் கொண்டு போயிருந்தது. நினைத்தும் பார்க்காத அலைச்சல்களுக்குப் பிறகும் நம்பிக்கையோடு இருக்கிற மனிதர்.

புதிதாக இணைந்திருக்கிற இந்தோனேசிய கிழவனும் இளைஞனும் பெரிதாக கதைப்பதில்லை. அசோக் அண்ணன் கபினைக் கவனிக்கும் போது இவர்கள் எதற்கு வருகிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. கிழவன் கராம்பு சுருட்டு ஒன்றை எடுத்து மூட்டுகிறார். பார்ப்பதற்கு கசநோய் வந்தவர் போல இருந்தாலும் இருமி இருமி சுருட்டை இழுக்கிறார். இடது பக்கமாக கையைக் காட்டி சுமாத்திரா தீவுகள் என்று காட்டினார்.

எனக்கு தவிர்க்கவே முடியாமல் ஆச்சே மாநிலம்தான் ஞாபகத்திற்கு வந்தது. எங்கேயோ தன்பாட்டில் கிடந்த முல்லைத்தீவிலேயே சுனாமி என்ன அடி அடித்தது. அப்படியென்றால் சுமாத்திராவில் என்ன ஆட்டம் ஆடியிருக்கும். லட்சம் பேர் செத்துக் கிடக்கிற படங்கள் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. வயிற்றுக்குள் இலேசாக ரிக்டர் அளவுகள்…

என்னை மாதிரி மற்றவர்கள் பயப்படுவதாகத் தெரியவில்லை. சுனாமி ஆழக்கடலில் பாதிப்புக்களை ஏற்படுத்துவதில்லை என்றும் கரையை நெருங்கும்போதுதான் உருக்கொண்டு தாண்டவம் ஆடுகிறது என்றும் கேள்விப்பட்டிருந்தேன்.

என்னிடம் ஒரு சாவுக்கணக்குச் சமன்பாடு உள்ளது. அதை ஞாபகப்படுத்திக் கொண்டேன். ”எத்தனை தரம் உயிர் தப்பி இருக்கிறேன்.. சிறுவயதில் நிமோனியா காய்ச்சல். பிறகு கந்தளையில இருந்து தப்பி ஓடும்போது ஒருதடவை. கிளாலிக் கடலில் இன்னொருதடவை. பின்னர் தேவிபுரத்தில்.. கடைசியாக தப்பவே தப்பாது என்றிருந்த முள்ளிவாய்க்கால். இத்தனை இடத்தில் தப்பி இந்தக் கடலில் வந்து சாவதற்கு என்ன அவசியம் இருக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் மூழ்கிக் கொண்டேன்.

நண்பகல். கடல் காற்றுக்கு வெயில் சூடு தெரியவே இல்லை. அலைகள் பெரிது பெரிதாக வருகின்றன. சுமாத்திரா பின்பக்கமாக மறையத்தொடங்குகிறது. முன்னே கண்ணுக்கு எட்டிய வரை நீலம்.. கருநீலம்..

கிரான்ட்மா சில இடங்களில் பாய்ந்து பாய்ந்து தாண்டுகிறது. அணியப்பக்கம் தூக்குக் காவடிபோல மேலும் கீழும் ஆடுகிறது. கபினுக்குள் அசோக் அண்ணன் சக்கரத்தை சுழற்றியபடி நிற்கிறார். பின்னால் ஆதவன் மாமா. நாங்கள் 6 நொட்ஸ் இல் போய்க்கொண்டிருப்பதாக ஜி பி எஸ் சொல்கிறது. தொடக்கத்தில் அது 8 ஆக இருந்தது. கடல் கிரான்ட்மாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது புரிகிறது. பெரிதாக அடிக்கிற அலைகளின் தண்ணீர் வெளியே போய்விடும் என்றாலும், எஞ்சின் அறைக்குள் செல்லவும் வாய்ப்புண்டு. இன்னமும் அப்படியான அலைகள் வரவில்லை.

”பிளிச் பம் வேலை செய்யேல்லைப் போல கிடக்கு.” வெளியில் எட்டிப்பார்த்து விட்டு ஆதவன் மாமா சொல்கிறார். நானும் எட்டிப்பார்க்கிறேன். ஒரு குழாயிலிருந்து தண்ணீர் வரவில்லை. ப்ரொப்ளர் இடைவெளிகளுக்குள்ளாக எஞ்சின் அறைக்குள் வருகிற தண்ணீரை பிளிச் பம் வெளியேற்றிக் கொண்டிருக்கும். அது வேலை செய்யவில்லை என்றால் கையால்தான் அள்ளி ஊற்ற வேண்டும்.

துரை அண்ணனும் நானும் எஞ்சின் அறைக்குள் இறங்கினோம். அறை முழுக்க ஓரடிக்குத் தண்ணர் நிறைந்திருக்கிறது. பிளிச் பம் வேலை செய்யாத சமயங்களில் முன்னேற்பாடாக இன்னொரு வழியிருந்தது. கிணறுகளில் தண்ணீர் இறைக்கிற பம்மை இயக்கி நீரை வெளியேற்றுவதே அது.

துரை அண்ணன் ஆட்களை அழைக்க, நிசாந்தன் நீர் இறைக்கு இயந்திரக் குழாயை இறக்கி இயந்திரத்தை முடுக்குகிறார்கள். அது வேலை செய்கிறது. ஆனால் நீரை உறிஞ்சி வெளித்தள்ளவில்லை. அறைக்குள் நீர்மட்டம் ஏறுகிறது.

அசோக் அண்ணன் மிகச் சாதாரணமா ஆட்களை பிடித்து தண்ணீரை அள்ளி வெளியே ஊற்றுங்கள் என்கிறார். ரதீசும் சசியும் இருபது லீட்டர் பிளாஸ்டிக் கான் ஒன்றின் வாயை பெரிதாக வெட்டியெடுக்கிறார்கள். நானும் துரையண்ணனும் அறைக்குள்ளேயே நின்றோம். படிகளில் சசி நிற்க ரதீஸ் மேலே நின்றான். நாங்கள் தண்ணீரைக் கோலி சசியிடம் கொடுக்க, அவன் ரதீஸிடம் கொடுக்க அவன் கடலுக்குள் ஊற்றினான்.

இருளாகிறது. இந்தோனேசிய நேவி இனி வருவதற்கில்லை என்பதால் மின் விளக்குகள் போடப்படுகின்றன. எஞ்சின் அறையில் நீர் மட்டம் குறைந்திருந்தது. ஆனாலும் புரொப்ளரிலிருந்து வருகிற தண்ணீர் வந்து கொண்டுதான் இருக்கும். அதனால் அங்கிருந்த இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு ஷிப்ட் என்று நீர் இறைப்பை பிரித்துக் கொடுத்தேன்.

அதுவரை மிதப்பு அங்கி போடாதிருந்தவர்கள், எஞ்சின் அறைக்குள் நீர் வரத்து தெரிந்தவுடன் துடித்துப் பதைத்து அங்கியைக் கொழுவிக்கொண்டிருந்தார்கள். மலேசியாப் பக்கமாக சில கப்பல்கள் மின்னி மின்னிப் போகின்றன. கிரான்ட்மா இந்த வேகத்தில் போனால், இன்னும் இரண்டு நாட்களாவது தாண்டும்.

தேவையான எரிபொருள், உணவு, குடிதண்ணீர், மருந்துப் பொருட்கள் என இருந்தாலும் எஞ்சினில் ஏதாவது தகராறு வந்தால் அல்லது கடலில் ஏதாவது புயல் காற்று என்று வந்தால், படகை நிறுத்தி ஓய்வெடுக்க முடியாது. உயிர் காப்பு அங்கியை அணிந்தபடி சுறாக்கள் திரிகிற கடலில் எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்.

 

அடுத்தநாள் காலை பத்து மணி.

அவுஸ்ரேலிய நேவியின் தொலைபேசி இலக்கம் கிடைக்கிறது. கடலில் இருந்து சட்டர்லைட் தொலைபேசியில் பேசுவதால் வருகிற பிரச்சனையை கிறிஸ்மஸ்தீவில் போனபிறகு எதிர்கொள்ளலாம். இப்பொழுது அதைப்பற்றி யோசிக்க முடியாது. நான்தான் நேவியின் இலக்கத்திற்கு பேசுகிறேன். பேசுவதல்ல. தரப்பாளில் விழுகிற மழைச் சத்தம், ஊளையிடுகிற காற்று, இரைகின்ற எஞ்சின் சத்தங்களுக்கு எதிராக கத்துகிறேன். எதிர்முனையில் பதில் இல்லை. இன்னொரு முறையும் முயற்சி செய்கிறேன். படபடவென்று படகின் நிலையையும் சனங்களின் நிலையையும் எடுத்துச் சொல்லி உதவி கோருகின்றேன். இம்முறை தகவல் பெறப்பட்டது என்றொரு செய்தி கிடைக்கின்றது. எதற்கும் குறுந்தகவல் ஒன்றையும் அனுப்பிவிடுமாறு ரதீஸ் சொல்கிறான். SOS என்பது பொதுவான ஆபத்து நேர குறியீடுதான். ஆனாலும் கடலில் அனுபவமும் முதிர்ச்சியும் உள்ளவர்களுக்கே, அது தெரியும் என்பதால் அப்படியேதும் செய்து பிரச்சனைக்கு உள்ளாகக் கூடாது. படகில் பலர் கை கால்கள் இல்லாமல் உடல் முழுக்க முள்ளிவாய்க்கால் பதிவுகளோடு வருகிறார்கள். அதனால் வீண் சந்தேகங்களும் வரலாம். அதனால் ”நாங்கள் கிறிஸ்மஸ் தீவை நோக்கி வந்துகொண்டிருக்கிறோம். படகிற்குள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை பெய்து கொண்டிருக்கிறது. எங்களை காப்பாற்றுங்கள்’ என்று செய்தி அனுப்பினேன்.

கடும் காற்றும் மழையும் மோசமாக இருந்தது. படகின் எல்லாப் பக்கமிருந்தும் தண்ணீர் விளாசி அடித்தது. போதாக்குறைக்கு மழை. எல்லோரும் நனைந்த கோழிகளாயிருக்கிறோம். நிலைமை பயங்கரமாவதற்குரிய எல்லா வாய்ப்புக்களும் பிரகாசமாகத் தெரிந்தன.

ஈரானைச் சேர்ந்த குடும்பம் ‘ஹோதா’ ‘ஹோதா’ என்று முணு முணுக்கிறார்கள். பிள்ளைகளை அம்மாமார் தமக்குள் அணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேதலித்துப் போயிருக்கிறார்கள்.

காற்றும் மழையும் ஓய்ந்தபிறகும் அலைகள் விட்டபாடில்லை. ஒவ்வொன்றும் மினி சுனாமி. கிரான்ட்மா சமயங்களில் எழுந்து எழுந்து பறக்கிறது. இன்னமும் 6 நொட்ஸில்தான் பயணிக்கிறது.

மாலை ஆறு மணி,

சற்று முன்னர் விமானமொன்று மேலே பறந்து போனது. ஆதலால் ஒருவேளை அவுஸ்ரேலிய கடற்படையினர் வரக்கூடும். இருள முன்னர் வந்தார்களாயின் நன்று. இல்லாவிட்டால் இரவிரவாக தண்ணீரை அள்ளி ஊற்ற வேண்டியிருக்கும்.

மொத்தப் பயணிகளில் சத்தி எடுக்காதவர்கள் பத்துப் பேரளவுதான். அநேகமாக எல்லோருமே, மலேரியா பீடித்தவர்களைப் போல இருக்கிறார்கள். அரைக்கண் மூடியும், அரைவாசி வாய் திறந்துமிருக்க படகினில் அலைகிறார்கள்.

கலாக்கா சுட்டு வந்த பருத்தித்துறை வடைதான் மொறுக் மொறுக்கென்று எல்லோர் வாயிலும் கடிபடுகிறது. அவர் இரண்டு பைகளில் வடையைக் கொண்டு வந்திருந்தார். அதிலொன்றில் எனது சிறிலங்கா கடவுச்சீட்டும் இருக்கிறது. அதனைக் கிழித்து கடலில் வீசுமாறு சந்திரன் அண்ணன் பலதடவைகள் சொல்லிக் களைத்துவிட்டார். கிழிக்காமல் எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் போகலாம் என்று விட்டிருந்தேன்.

தூரத்தில புள்ளியாக வெளிச்சமொன்று தெரிகிறது. இடையிடையே மின்னுவதால் கடற்படையினராக இருக்கலாம். வேறு கப்பல்களாகவும் இருக்கக் கூடும். வர வர பச்சை வெளிச்சம் பெரிதாகிறது. நேவிதான்.

இப்பொழுது கிரான்ட்மாவில் பின்வரும் நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்தோனேசிய கிழவனும் இளைஞனும் கபினுக்குள் வருகின்றனர். ஜி பி எஸ் கழற்றப்படுகிறது. சட்டர்லைட் தொலைபேசி, வரைபடம், ஜி பி எஸ் என்பன கடலுக்குள் வீசப்படுகின்றன. அசோக் அண்ணன் கபினை விட்டு வெளியேறி சனங்களோடு சனங்களானார். இப்பொழுது, இந்தோனேசிய இளைஞனே கப்டன். அந்தக் கிழவரே, இரண்டாவது அதிகாரி. இளைஞன் சக்கரத்தைப் பிடித்தபடி நிற்க கிழவர் அருகாக முழித்துக் கொண்டு நின்றார்.

இந்தப் பயணத்தில் வேறெவருக்கும் தொடர்பில்லை என்றானது. இந்தோனேசிய இளைஞனே இச் சட்டவிரோத நடவடிக்கைக்கு முழுப்பொறுப்பு ஏற்கிறான். அவனை சிறையில் அடைப்பார்களோ என நினைத்தேன். அவன் தனது குடும்பத்தின் வாழ்க்கைச் செலவுகளுக்காக, இந்தப் பழியை மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கலாம். தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பணம் சேர்க்கவும் இப்படி ஆகியிருக்கலாம். எதுவோ அவனில் நான் பரிதாபப்பட்டேன்.

அவுஸ்ரேலிய கடற்படையின் கப்பல் தள்ளி நின்று கிரான்ட்மா மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. அவற்றிலிருந்து இறக்கப்பட்ட ஜெட் எஞ்சின் படகுகள் நுரை தள்ளிக் கொண்டு வருகின்றன. அவற்றுள் கருநீல நிற சீருடை தொப்பிகளோடு அதிகாரிகள் நிற்கின்றார்கள். இரண்டொரு தடவைகள் கிரான்ட்மாவை சுற்றி வந்தார்கள்.

கிரான்ட்மாவில், ஆங்கிலத்தில் பேசவல்ல அதிகாரியாக நான் எழுந்து நிற்க மற்றவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். கடற்படைப் படகொன்று நெருக்கமாக வர, அதிலிருந்த அதிகாரியொருவர் எமது படகுக்குள் நுழைய அனுமதி கேட்கிறார். நான் கிரான்ட்மாவின் கப்டனிடம் கேட்க அவன் தலையாட்டுகிறான். அதிகாரி உள்ளே நுழைந்து இந்துசமுத்திரத்தில் முதன் முறையாக எனக்கு ஹாய் சொல்லுகிறார். என்னுடைய பெயர் கேட்டு எழுதப்படுகிறது. கப்டனின் பெயர், தேசியம், படகில் உள்ளவர்களின் தேசியம், எண்ணிக்கை, பெண்கள் குழந்தைகள் நோயாளர்கள், படகின் நிலைமை, பயணம் புறப்பட்ட இடம் காரணம் எல்லாம் கேட்கப்பட்டு எழுதப்படுகின்றன.

”நீங்கள் இந்தப் படகிலேயே கிறிஸ்மஸ் தீவு வரைக்கும் வரப் போகிறீர்களா அல்லது பெரிய கப்பலில் ஏறி வரப் போகிறீர்களா.”

நான் அதனை சனங்களிடம் மொழிபெயர்க்கிறேன். அவர்கள் கடற்படைக் கப்பலில் ஏற சம்மதிக்கிறார்கள்.

”ஆட்களும் பொதிகளும் ஏற்றப்பட்ட பின்னர் நீங்கள் பயணம் செய்து வந்த இந்த படகை அழித்து விடுவதில் ஆட்சேபனை ஏதும் இருக்கிறதா?”

யாருக்கும் ஆட்சேபனை இருக்கவில்லை. பின்னர் அதிகாரி கப்டனிடம் கேள்விகள் கேட்கத் தொடங்குகிறான்.

முதலில் குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் கடற்படைக் கப்பலுக்கு ஏற்றப்படுகின்றார்கள். நான்கு படகுகள் வேகமாக ஆட்களை ஏற்றி இறக்குகின்றன. இரண்டே நிமிடத்தில் பெரிய கப்பலை அடைகின்றோம். பொதிகள் ஏற்றிவரப்படுகின்றன.எல்லோருடைய கைகளிலும் இலக்கப்பட்டி கட்டப்படுகிறது என்னுடைய இலக்கம், 089. எட்டாம் நம்பர். உயர்த்தினால் ஒரேயடியாக உயர்த்தும், விழுத்தினால் ஒரேயடியாக விழுத்தும் என்று கேள்விப்பட்டிருந்தேன்.

எங்களுக்கு ‘ஓட்ஸ் சாதமும்’ பதனிடப்பட்ட பாலும் தருகிறார்கள். சத்தி எடுத்துக் களைத்துப் போனவர்கள் உட்கார்ந்திருக்க முடியாமல் ஆங்காங்கே சரிந்து கொள்கிறார்கள்.

கடலில் வெடிச்சத்தம் கேட்கிறது. சத்தம் வந்த திசையில் கிரான்ட்மா எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தபோது ஒரு மாதிரி இருந்தது. அப்படி எல்லோருக்கும் இருந்திருக்க வேண்டும். அமைதியாக இருக்கிறார்கள்.

அதிகாரிகள் ஒவ்வொருவராக பதிவு செய்கிறார்கள். வரிசையில் நானும் நின்று கொண்டேன். இடுப்புப் பட்டி, மணிக்கூடு, மோதிரம், ஆபரணங்கள் மற்றும் தொலைபேசி சிம் அட்டைகள் இருந்தால் எடுத்து வைக்கும்படி அதிகாரி கேட்கிறார். ஒவ்வொன்றாக எடுத்து வைக்கிறேன். விரலில் மோதிரத்தைக் காணவில்லை. ஒரு சென்டிமென்ட் உடைந்தது போலயிருந்தது. தண்ணீர் அள்ளி ஊற்றியபோது அது படகினில் விழுந்திருக்க வேண்டும்.

கலாக்காவைக் கண்டேன். அவரது இன்னொரு பையில் எனது சிறிலங்கா பாஸ்போட் இருந்தது. அதனை அழிக்க வேண்டும். அவரிடம் அவரது பையைக் கேட்கிறேன். ”அதுகளை இனி ஏத்த விடமாட்டான் எண்டு நினைச்சு படகுக்கு அடியில போட்டுட்டன்..” என்றார் கலாக்கா.

திரும்பிப் பார்க்கிறேன். தூரத்தே கிரான்ட்மா விளாசி எரிந்து கொண்டிருக்கிறாள்.

http://www.ezhunamedia.com/?p=364

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.