Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரியான் திரைப்படமும் சங்க இலக்கியத்தின் காட்சிகளும்..

Featured Replies

mari11.jpg

இந்த நூற்றாண்டின் முதல் 13 ஆண்டுகளில் வந்த மிகச்சிறந்த திரைப்படம்..

இலக்கியத்தை திரைப்படமாக எடுக்கப் புறப்பட்ட பலர் அதை சரியாக தயாரிக்கத் தெரியாமல் மசாலாவாக்கியது எண்ணற்ற தமிழ்ப்படங்களில் நடந்து முடிந்த சோகங்கள்..

ஆனால் ஒரு மசாலாவை படமாக்கப் புறப்பட்டு, தமக்குத் தெரியாமலே அதி உன்னதமான தமிழ் இலக்கிய உணர்வுகளை படமாகத் தந்துவிட வாய்ப்புண்டு என்பதற்கு உதாரணம் மரியான்.

அது திரைப்படமல்ல…. திரைப்படமாக வந்துள்ள பழம் பெரும் காவியம்…

சங்க இலக்கியத்தின் சுவைகளை சுவைத்தறியாமல் மரியானை சுவைப்போருக்கு அது பலாப்பழத்தின் சுளை இருக்குமிடம் தெரியாமல் முள்ளைக் கடித்தவன் கதைபோல ஆகிவிடும்.. பாவம் தமிழ் நாட்டில் பலர் மரியானை அப்படித்தான் கடித்து காயப்பட்டிருக்கிறார்கள்.

கடலும் கடல் சார்ந்த இடங்களையும் பிரதிபலிக்கும் நெய்தல் நில வாழ்க்கையை சித்தரிக்கிறது மரியான்.

நெய்தல் நிலப்பாடல்களின் பிரதான உயிர்நாடி எது.. இரங்கல்.. அதாவது பிரிவுத்துயர்..

கடலுக்கு போன காதலன் திரும்புவானா..? இல்லையா..? என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் காதலியின் பிரிவுத்துயரே நெய்தல் பாடல்களின் உயிர் நாடி..

திரைப்படத்தில் கடலுக்கு ராஜாபோல இருந்த நாயகன் மரியான் பணப்பிரச்சனையில் கடல் வாழ்வை விட்டு, சூடான் நாட்டுக்கு கூலித் தொழிலாளியாகப் போய் அங்குள்ள ஆயுதக்கும்பல் ஒன்றினால் பணத்திற்காக கடத்தப்படுகிறான், அவன் வருவானா.. இல்லையா.. என்று கரையில் காத்திருக்கும் காதலி பனிமலரின் பிரிவுத்துயரே திரைப்படம் முழுவதும்..

mari2.jpg

சூடானின் வரண்டு வெடித்த நிலங்களில் திசை தெரியாது ஒன்பது தினங்கள் உயிர் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறான் மரியான்.

அவன் மரணிப்பதற்காக ஒவ்வொரு முறை கீழே விழவும்.. அவளுடைய காதல் வந்து அவனுக்கு ஜீவன் கொடுக்கிறது… காதலுக்காக ஓடுகிறான்.. அன்னமில்லை.. தண்ணீர் இல்லை எதுவுமே இல்லை.. காதல் நினைவு ஒன்றுமட்டும் அவன் உயிரை காத்து ஓட வைக்கிறது..

கொலைஞர்களையும், ஆபிரிக்கக்காட்டு புலிகளையும் தாண்டி ஒரு ஜீவனை வாழ வைக்க வேண்டுமென்றால் அது காதல்தான்..

மறுபுறம்.. காதலன் மரியான்.. மரிக்கமாட்டான் என்ற நம்பிக்கையுடன் காத்துக்கிடக்கிறாள் பனிமலர்.. ஒரு கட்டத்தில் சூடானில் கடத்தியவர்களிடமிருந்து அவன் தப்பித்து ஓட இங்கே அவன் தப்பிவிட்டான் என்ற செய்தி அவளுக்கு கனவில்.. உணர்வில்.. தெரிகிறது..

ஆடுகிறாள்.. பாடுகிறாள்.. பார்ப்பவருக்கு பைத்தியம் போல தெரிகிறது.. உள்ளுணர்வின் உன்னதம் மண்ணாசையும், பெண்ணாசையும் பிடித்து அலையும் இந்த உலகத்திற்கு தெரியுமா..

தெரியவே தெரியாது.. ஆம்.. அங்கே வருகிறான் வில்லன்..

மரியான் வருவானா.. பைத்தியம் என்றபடி அவளைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயல்கிறான்.. முட்டாளே மரியான் வருவான் என்றபடி வில்லனுடன் மோதுகிறாள்..

காதலுக்கும் நம்பிக்கைக்கும்தான் எத்தனை பெரிய உறவு.. நமது இலக்கியமே இதுதானே..

பிரிவும், காதுலும் மோதிப் பொறிகக்கும்போது பிறப்பிக்கும் சக்தி எத்தனை மகத்தானது, சங்கப்புலவர்கள் உருகி உருகிப் பாடிய பாடல்களை பார்வதியும், தனுஷ்சும் அற்புதமாக வெளிக் கொண்டு வருகிறார்கள்.

பனிமலராக நடிக்கும் பார்வதி அந்த உணர்வுகளை தரும் ஜீவன் இருக்கிறதே.. தமிழில் இன்றுள்ள மற்றெந்த நடிகையாலும் அது முடியவே முடியாது.. தனுஷ் கூட பார்வதியுடன் நடிக்கும் போது தோற்றுவிடுகிறார் பல இடங்களில்.. அதற்காக தனுஷ்சின் நடிப்பை குறைத்துக் கூறுவதாக பொருள் கொண்டுவிடக் கூடாது.

பார்வதியின் உணர்ச்சிகளை கச்சிதமாகப் படமாக்கிய ஆங்கிலக் கமேராமேன் மார்க் மொழி தெரியாத காரணத்தால் உணர்ச்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவம் ஒரு காவியத்தை அவரை அறியாமலே ஓவியமாகத் தீட்டிவிட்டது…

mari53.jpg

பிரிவுத்துயரை சங்ககாலத்து, நெய்தல் பாடல்கள் தந்தாலும், அதை சங்கமருவிய காலத்தில் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள்தான்..

கணவனைப் பிரிந்த சோகத்தில் கண்ணகி சேர நாடு வந்து முலையை அறுத்தெறிந்துவிட்டு, 14 நாட்கள் மலை உச்சியில் உண்ணாமல் இருந்து உயிர் துறந்து, கணவனுடன் சேர்ந்தாள் என்பது சிலப்பதிகாரத்தை எழுதக் காரணமாக இருந்த மூலக்கதை..

அதேபோல மலை உச்சியில் இருவரையும் பிரிய வைத்து.. கடைசியில் அதே மலை உச்சியில் கண்ணகி – கோவலன் போல மரியான் – பனிமலரை இணைய வைத்து, திரை ஓவியத்தைத் தீட்டியது.. அற்புதத்திலும் அற்புதமாக சுடர்கிறது..

அண்டங்கடந்த பெரு வெளியில் அங்கு நீயும் நானுமாக நிற்றல்.. என்ற மணிவாசகரின் திருக்கோவையார் காதல் உன்னதத்தை அந்தக் காட்சி பளிச்செனத் தருகிறது..

அந்த உணர்வுகளை தர நடிப்பு மட்டும் போதாது, இசை, பாடல் என்பனவும் வேண்டும்.. என்ன பாடல், என்ன இசை வேண்டும்.. இதயம் கேட்டு அழுகிறதோ.. அதையே அப்படியே தந்து ஆத்மத்தை குளிர வைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான், இதற்காக அவருக்கு ஆஸ்கார் பரிசை ஒரு தடவையல்ல பல தடவைகள் கொடுக்கலாம்..

இதைவிட பெரிய ஆச்சரியம்… திருக்குறள் தரும் மகத்தான செய்தி ஒன்று வில்லனுடனான மோதலில் தரிசனமாகிறது..

மரியான் கடலில் மூழ்கி மீன்பிடிக்கும் கடலுக்கு அரசன்.. கடலில் முதலை போன்ற பலம் கொண்டவன், அவனுடன் மோதும் சூடானிய வில்லனோ தரையில் யானை போல நடமாடும் கொடியவன்..

திருவள்ளுவர் கூறுவார்.. யானையுடன் முதலை தரையில் மோதினால்.. முதலையை யானை மிதித்தே கொன்றுவிடும்.. ஆனால் முதலை தந்திரமாக யானையை கடலுக்குள் இறக்கினால் முதலை அதைக் கடித்தே வென்றுவிடும் என்பார்.

யார் பலசாலி என்பது மோதல் நடைபெறும் இடத்திலேயே தீர்மானமாகிறது..

mari62.jpg

தரையில் சூடான் வில்லனை வெல்ல முடியாத மரியானிடம் அவன் விஷம் தெரியாமல் கடலில் வந்து யானை போல மாட்டிக் கொள்கிறான்.. இது கடலடா.. என்றுவிட்டு அவனை நீரில் அமிழ்த்தியே கொன்றுவிடுவான் மரியான்..

அந்தக் கிளைமாக்ஸ் மோதல் திருவள்ளுவரை கண் முன்னால் நிறுத்தி மெய்சிலிர்க்க வைக்கிறது..

சங்க இலக்கிய நெய்தல் பாடல்களின் பிரிவுத்துயர்..

முத்தமிழ் காவியமான சிலப்பதிகார கிளைமாக்ஸ்..

திருக்குறளில் வரும் போர் வியூகம்..

இந்த மூன்றையும் இணைத்த ஜீவனுள்ள காதல்கதை தமிழில் இதுவரை மரியான் போல வெளியாகவில்லை.

இந்த மூன்றையும் கொஞ்சமாவது அறிந்து கொண்டு இந்தப்படத்தைப் பார்த்தால், அல்லது இந்த விமர்சனத்தைப் படித்துவிட்டுப் பார்த்தால் ஒரு காவியத்தை சுவைத்த மகிழ்வை மரியான் தரும்..

மரியான் தொடர்பாக தயாரிப்புக் குழுவினரோ.. நடிகர்களோ.. தாம் வழங்கிய எந்தவொரு பேட்டியிலும் இந்த இலக்கியங்களே இக்கதைக்குள் அடிநாதமாக வாழ்கின்றன என்பதைச் சொல்லவே இல்லை..

maria4.jpg

ஆகவேதான் ஒன்றை நினைக்கில் அது வரினும் வரும், நினையாத ஒன்று முன்வந்து நிற்கினும் நிற்கும் எல்லாம் எனையாளும் ஈசன் செயல் என்ற பாடல் போல அவர்கள் நினையாத அற்புதம் மரியானாக வந்து நின்றிருக்கிறது.. இதுதான் நிஜம்..

இதுவரை விமர்சனம் சொன்னவர்கள் எவருக்குமே இது தெரியவில்லை.. யானையைப் பார்த்த குருடன் போல மசாலா உருண்டையை தடவியிருக்கிறார்கள், அவ்வளவுதான்.

இனி மரியானை பார்த்தால் பலாப்பழத்தின் சுளை இருக்குமிடத்தை கண்டு பிடிப்பீர்கள்..

மரியான் 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் முத்திரை..

அலைகளுக்காக கி.செ.துரை 15.08.2013 வியாழன் மதியம்

 

Written by Thurai · Filed Under Flash News

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.