Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கிழிச்சம்" சஞ்சிகையின் முப்பதாவது ஆண்டு விழா

Featured Replies

"கிழிச்சம்" சஞ்சிகையின் முப்பதாவது ஆண்டு விழா

 
"கிழிச்சம்", கலை இலக்கிய, மாத சஞ்சிகை என்றால் சாதாரண வாசகர்கள் தலை தெறிக்க ஓடித்தப்பி விடுவார்கள். என்றாலும் தீவிர வாசகர்கள் விட்டு விட மாட்டார்கள். ஒரு விசித்திரக் கூட்டம் நாடி, நரம்பு, இதயம் கணையம், பித்தப்பை எல்லாவற்றிலும் இலக்கியம் பரவி இனித்தப்ப முடியாது என்ற ஒரு நிலையில் இருப்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இவர்கள்தான் தீவிர இலக்கிய வாசகர்கள். 2013 தை "கிழிச்சம்" இதழில் வந்த ஒரு 'படைப்பு'க் கீழே.

ஏம்பிச் சலித்து எழுந்து, "ஆவ் என்று கொட்டாவி விட்டான். கச கச என்று வியர்வை உடம்பெல்லாம் வழிந்து ஓடியது. பாயைச் சுருட்டிக் கதவுக்குப் பின் வைத்தான். பாயிருந்தவிடத்தில் பத்திருவது சிற்றெறும்புகள் ஓடின. கரப்பான் ஒன்று பாயின் ஓரத்திலிருந்து பாய்ந்தோடியது. (இது இலக்கிய எழுத்து என்பதால் "மோர்ட்டீன்" மாதிரிப் பூச்சி கொல்லிகள் வராது). சில்வண்டொன்று தூரத்தில் கத்திக் கேட்டது. அதற்கு எதிரொலியாக பல்லி ஒன்று "சொச் சொச்" என்று "சொல்லியது".

பூச்சி புழுவெல்லாம் இன்னும் இரண்டு பந்திகள் உலாவித் திரிந்தன. நாலாவது பந்தியில் கதை கொஞ்சம் சூடு பிடிக்கிறது.

ஆடுகள் மே மே என்று கத்தின. அவற்றிற்குப் பசித்திருக்க வேண்டும். ஆட்டுக் கொட்டிலில் இருந்து வந்த மூத்திர, புழுக்கை நெடியும் சாய்வாகக் தெறித்து விழுந்த சூரிய வெளிச்சமும் இவனுக்கு ஒரு சிறிய பரவச உணர்வைக் கொடுத்தது. ஆட்டுக் கொட்டில் எங்கும் பரவிக் கிடந்த புழுக்கைகளை விளக்குமாறினாற் கூட்டினான்.

(அடுத்த பந்தியிற் சாணம் அள்ளுகிறார்)

நீங்கள் பயப்பிடுகிறமாதிரி எனக்கும் "கிழிச்சம்" மாதிரி இதழ்களுக்கும் தொடர்புகள் இல்லை. அந்தக்கால சுஜாதா எழுத்துக்களில் வருகிறமாதிரி நான் ஒரு கொம்பியூட்டர் ஆசாமி. அண்மையில் கிழிச்சம் இதழின் முப்பதாவது ஆண்டு விழா நடந்தது. அதற்குப் போய் நொந்து, வாழை நாராய்க் கிழிந்து வந்த நண்பர் திருவடிவேல் சொன்ன கதைதான் இது. திருவடிவேல் ஒரு பதிவர்.ஒரு மாதத்தில் ஒரு பத்துப்பேர் வாசிக்கும் வலைப்பூ ஒன்று வைத்திருக்கிறார். ஆளுக்கு பேசக் கதைக்கத் தெரியாது, பிறகு எழுதவா வரும்? என்றாலும் தன் முயற்சியிற் சற்றும் தளராத விக்கிரமன் மாதிரித் தொடர்ந்து ஏதோ எழுதுகிறார்.

**************************
download.jpg

"திரு" விற்கு வீட்டில் தொல்லை தாங்க முடியவில்லை. அடிக்கடி தொட்டாண்டி வேலைகள் செய்யவேண்டி இருக்கிறது. செய்யவேண்டிய வேலைகளை மனிசன் செய்யார். ஒரு வேலையைச் செய்யாமல் தட்டிக்கழிக்க இன்னொரு வேலையைக் கண்டுபிடிப்பார் பிறகு இன்னொன்று. இப்படியே போகும். கடந்த ஆறுமாதமாக 'வீட்டுத் 'தோட்டத்தில்' புல் காடாய் மண்டிக்கிடந்தது. வெட்டவேண்டும். புல்வெட்டி "ஸ்டார்ட்" ஆகுதில்லை. இழுகயிற்றை ஊன்றி இழுத்தபின் முதுகுப் பிடிப்பு வந்தது. அது வந்ததால் வயதாகிவிட்டதும் ஞாபகத்திற்கு வந்தது. வயதாகியது புரிந்ததால் உடனே அடுத்த சனி நடக்கவிருந்த இலக்கியச் சந்திப்பும் ஞாபகத்திற்கு வந்தது.

வலு சீரியஸ் ஆக இலக்கியச் சந்திப்புக் ஆயத்தம் செய்யத் தொடங்கினார். ஆயத்தம் என்றால் கட்டுரை எதுவும் எழுதி வாசிக்கும் ஆயத்தம் இல்லை. முதலில் ஒரு நல்ல பெல்ட் வாங்கினார். ஜீன்ஸ்'சில் இறுக்கமாகக் கட்டினார். பிறகு இரகசியமாக உருவிப்பார்த்து 'நல்ல பெல்ட்' தான் என்று ஸ்திரப்படுத்தினார். போனமுறை கிச்சா அண்ணன் இப்படி ஒரு 'புத்தக வெளியீட்டிற்கு' வேட்டியுடன் போய், அங்கே ஒரு மோதல் நடந்து, வேட்டி உருவுப்பட்டு ,பிறகு அந்தப் போட்டோக்கள் 'பேஸ்புக்' இல் ஒரு ரவுண்ட் வந்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள். 366 முறை 'ஷெயர்' பண்ணுப்பட்டது. (குறிப்பு அண்ணர் வேட்டிக்குள்ளே ஒரு கோடுபோட்ட அரைக்காற்சட்டை போட்டிருந்தவர்)

ஆயிற்று. சனிக்கிழமையும் வந்தது. இது ஒரு முழுநாள் நிகழ்வு. மெல்பனில் இருந்தெல்லாம் இலக்கியத் தாதாக்கள் வந்திருந்தார்கள். வடிவேலர் மண்டபத்திற்குள் உள்ளிட்டபோது அந்த நாள்களில் ரேடியோ சிலோனில் கலக்கிய திருமதி பிரமீளா ரவீந்திரன் "சினிமாப் பாடல்களைத் திருப்பித் திருப்பிப் பாடுவதுதான் நம்மவர்கள் இலக்கியம் என்று நினத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சொந்தமாக ஆக்கப்படுவதுதான் தமிழ் வளர்ச்சிக்கு' வழிவகுக்கும்'.." என்று உருப்படியாக ஒரு கருத்தை விபரித்துக் கொண்டிருந்தார். இந்த இடத்தில் உண்மையாக விதி சிரித்துக் கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் அடுத்துப் பேச எழுந்த 'சில்லெடுத்த சி.அம்பலம் (இயற்பெயர் சிற்றம்பலம்)' இதை வன்மையாக எதிர்த்தார். எதிர்ப்பது ஒரு குற்றமா என்ன? இல்லைத்தான். அடுத்து அவர் செய்ததுதான் வட்ட இலக்கியம் சிறுபத்திரிகை , குறும்பத்திகை இயக்கம் இங்கும் கேள்விப்படாதது. திடீரென்று மூச்சை நன்றாக உள்ளிழுத்து விட்டு "காயாத கானகத்தே.... " என்று தன்னைத் தானே டீ.ஆர். மகாலிங்கம் மாதிரிக் கற்பனை பண்ணிக் கொண்டு பாடத் தொடங்கினார். மேடையில் இருந்த நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் தலையைச் சொறிந்து கொண்டார். கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த சிலர் அவசர அவசரமாக 'ரீ' குடிக்க என்று எழுந்து போனார்கள்.

அப்பதான் பின்னுக்கிருந்த ஒரு பெண் சங்கடத்தோடு தன் தோழிக்குச் சொன்னார். 'இந்தாள் இப்படி மானங்கெடுத்துமெண்டா வந்திருக்க மாட்டன்," என்று. அவ்வாளைக் கட்டிய இல்லாள் போல. பாவம்!

ஒருவழியாக திருவாளர் சி.அம்பலம் நாலைந்து சினிமாப் பாடல்களைப் பாடி தன் கருத்துக்களை ஆழமாகப் புரியவைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

அடுத்து வந்தவர் மாக்சிய இலக்கியத்தில் பழம் தின்று கொட்டைபோட்ட கோ.சா.பெரியதம்பி. இவர் எழுதிய எழுதுகிற விடயங்கள் யாருக்கும் புரிந்ததாகச் சரித்திரம் இல்லை. வாசித்த, கேட்ட துர்ப்பாக்கியவான்களெல்லாம் "நமக்கேன் வம்பு" என்ற பாணியில், "அருமை, அற்புதம்" என்று சொல்லவெளிக்கிட இவருக்குக் கிடைத்துவிட்டது ஒரு 'பரந்த அங்கீகாரம்" நம்பவில்லையாயின் அன்றைய பேச்சில் இருந்து ஒரு சின்ன 'சாம்பிள்"

"...காத்திரமான படைப்பு வெளியின் உச்சம் என்பது எமது மேலாண்மை விழுமியங்களின் சங்கிலித்தொடர்களை இணைக்கும் செவ்விய நீரோட்டத்தின் ஆளுமையை எடுத்தியம்புவதாக இருக்கவேண்டும். ஈழத்து இலக்கியத்தின் ஒவ்வொரு படிநிலைகளையும் இந்த யதார்த்த விழுமிய காரணகூறுகளுடன் புணருமிடத்து, போருக்கு பின்னரான நமது படைப்பு கூறுகள் , ரூசியப்புரட்சின் பின்னரான சோவியத் பண்புகளை தொக்கி நிற்கிறது ...."

இவ்வாறு ஒருவழியாக 'தேத்தண்ணி" இடைவேளை வந்தது. இந்தமாதிரி 'இலக்கியச்' சந்திப்புக்களில் உப்புச் சப்போடு இருக்கிற விஷயம் என்றால் தேத்தண்ணி'யோடு வரும் சிற்றுண்டிகளும் இதர சாப்பாட்டு அயிட்டங்களும்தான். பாட்டுப்பாடி இலக்கியம் வளர்த்த திருவாளர் சி.அம்பலத்துடன் ஒரு மெல்பன் கவிஞர் சீரியசாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்.

இடைவேளை முடிந்து இவர் உள்ளே வர மெல்பன் கவிஞர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார். பிறகு மேடையிலேயே அழத் தொடங்கிவிட்டார். என்னவென்று விசாரித்தால் இவர் மேடையில் அழுவது இது பன்னிரண்டாம் தடவையாம். ஏதாவது ஒரு அதிஷ்ட எண் வந்ததும் அழுவதை நிறுத்தலாம். (சந்தேகம்: இவர் மேடையில் அழுவது இவர் குடும்பத்திற்குத் தெரியுமா?)

அழுகுணிக் கவிஞர் போனதும் "கிழிச்சம் 30" வெளியிடப்பட்டது. வெளியிடப் பட்டது என்று சாதரணமாகச் சொல்லமுடியாது. ஒரு பத்து இதழ்களை அழகாகப் பொதி செய்து ரிப்பனால் கட்டி, சிட்னியில் உள்ள ஒரு பத்துப் பிரமுகர்களைத் தனித்தனியாக  மேடைக்குக் கூப்பிட்டு ஒவ்வொன்றைக் கையில் கொடுத்து போட்டோ எடுத்து.. ஒரு வழியாக முடிந்தது.

"கிழிச்சம் 30" இனை விமர்சிக்க சோனா மாவன்னா தமிழ்க்கண்ணன் வந்தார்.மடை திறந்த வெள்ளம் என்பார்கள். இவர் "மடை' அது இது வெள்ளம் என்று கவலைப்படாமல் சூனாமி வேகத்தில் பேசத் தொடங்கினார். சற்று நேரம் போனதும்தான் புரிந்தது, புண்ணியவான் முன் அட்டையில் இருந்து பின்னட்டை வரை ஒரு எழுத்து விடாமல் வாசித்துக் கொண்டிருக்கிறார் என்று. இந்த அழகான விமர்சனத்தின் புண்ணியத்தாலோ அல்லது மக்கள் புத்திசாலிகளாகி விட்டார்களோ தெரியவில்லை, அன்றைக்கு "கிழிச்சம் 30" வெறுமனே நான்கு பிரதிகள்தான் விற்கப்பட்டது.

திரு' விற்குப் பசிக்கத் தொடங்கியது. பக்கத்தில் எங்காவது 'burgher' வாங்கிக் கடிக்கலாமோ அல்லது "தேநீர் இடைவேளை" வந்து காப்பாற்றுமோ என்று ஒரு சின்ன யோசனை ஓடியது. அப்போது

"அடுத்து ஏக்கே எனும் சோக்கான பதிவர்" என்றும் அறிமுகத்துடன் மேடையேறினார் அந்த இளைஞர். பெண்கள் பக்கத்தில் இருந்து பலத்த கரகோஷம். இலக்கியப் பெரிசுகளிற்கு வயிற்றில் இருந்து புகை வந்திருக்கும்.

"வணக்கங்க" என்று கைகூப்பினார் ஏக்கே.

"தம்பி தஞ்சாவூரிலை இருந்து இலக்கிய விழா'விற்கு வந்திருகிறார்" என்று குசுகுசுத்தார் பக்கத்தில் இருந்த பெரியவர்.

"சே இவன் புங்குடுதீவு" என்றான் பக்கத்தில் இருந்த யசோ. (இவன் யசோ என்ற பெயரில் முகநூல் கணக்கொன்று வைத்திருக்கிறான். ஆணா பெண்ணா என்று சரியாகச் 'செக்' பண்ணாமல், நாடறிந்த கவிஞர் பொ.ஐ.க.ஜெயவாணன் இவனிடம் முகநூல்-ஜொள் விட்டது தனிக்கதை.)

"நனைவிடை தோயும் நாதாரிகள்" என்று ஒருதரம் மெதுவாகச் சொன்னார் ஏகே . பிறகு எல்லாக் கவிஞர்களும் செய்வதுமாதிரி தலைப்பை மீண்டும் ஒருமுறை வாசித்தார்.- இம்முறை அழுத்தி உறுத்தி நிதானமாக இழுத்து வாசித்தார்.

"ந னை வி டை ...தோ யு ம்... நா தா ரி க ள்

இரண்டு வரிசை தள்ளி உட்கார்ந்திருந்த எஸ்.பொ சங்கடத்தோடு நெளிந்துகொண்டார்.

"மட்டுவில் கத்தரிக்காய், பூநகரிப் புழுக்கொடியல்

வெட்ட வெட்டத் தழைக்கும் இடைக்காட்டுக் கிழுவங் கொப்புக்கள்..

விஜிதா மில் மொட்டைக்கறுப்பன், ஊர்க் கோழிக்கறி

ஞாயிற்றுக் கிழமை முழுக்கு ......"

"ஐயா தீர்ந்ததா உங்கள் தோய்தல்??"

(இந்த இடத்தில் வலது கையை உயர்த்திச் சபையோரைக் கேள்வி கேட்பதுபோல் சைகை செய்கிறார்)

"அச்சுவேலிச் சந்தையடியில் அண்ணன் சைக்கிள் செயின் நழுவியது..

இவர் பெடல் சறுக்க, களுக் என்று சிரித்தாள் அவள்

வழிந்தார் அண்ணன் அசடாகி, மறக்கிலார் அந்தத் தொங்கட்டானை மூபத்து ஆண்டுகள் கழிந்தும்"

(இப்படிப் பந்தி பந்தியாக நனவிடை தோய்தல்கள் கிழிக்கப்பட்டன)

ரூல் அடித்த சீயார்க் கொப்பிகள், நட்ராஜ் கொம்பாஸ்

வாசம் வீசும் இலவசப் புத்தகங்கள், மரவேலைப் பாடம், ஒளித்துவைத்துப் படித்த இலக்கியங்கள்,

எல்லாம் விட்டு வைக்க மாட்டீர்- எல்லாம் எழுதித் தள்ளுவீர்

ந னை வி டை ...தோ யு ம்... நா தா ரி க ள்"  

என்று முடித்தார்.

 

http://www.ssakthivel.com/2013/06/blog-post.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கிகிகி..சிரிச்சு ரசிச்சு வாசிச்சன்.. நன்றி கறுவல் பகிர்விற்கு.. உண்மையில் இலக்கிய சுவை என்பதும் தீவிர இலக்கிய ரசனை என்பதும் யார் ஒருவன் இயற்கையை அதன் போக்கிலேயே ரசிக்கிறானோ அவனுக்குள்ளே இயல்பாயே வந்துவிடும்..

  • கருத்துக்கள உறவுகள்

என்  கிராமம் என்பது பலருக்கும் சோறு போடுவதாக  மாறி  வருகிறது

அதைத்தொடாமல்

எதுவும்  நிகழ்வதில்லை

ஏதோ எம்மால் முடிந்தது............. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.